கலாப்ரியாவின் நகர்வு

கலாப்ரியா, தனது கவி அடையாளத்தை மாற்றிப் ’புனைகதையாளர்’ அடையாளத்தை உருவாக்கத்தைத் தொடர்ச்சியாக முயன்று வருகிறார். அந்த முயற்சியில் ஓர் எல்லையைத் தொட்ட சிறுகதையாக இந்த மாத உயிர்மையில் வந்துள்ள ”கொடிமரம்” கதையைக் குறிப்பிடத் தோன்றுகிறது. இந்தக் கதையை வாசித்ததற்குச் சில நாட்கள் முன்பு தான் பிப்ரவரி மாத அந்திமழையில் வந்த ‘ பிள்ளைப்பூச்சி’ கதையை வாசித்தேன். அதற்கு ஒரு வாரம் முன்பு பிப்ரவரி மாத உயிர்மையில் வந்த ‘ஆர்மோனியம்’ கதையையும் வாசித்திருந்தேன்.
இந்த மூன்று கதைகள் மட்டுமல்லாமல் எனது பார்வையில் படும் அவரது சிறுகதைகளை வாசித்துவாசித்துக் கடந்துள்ளேன். அதேபோல அவரது நாவல்களையும் வாசிப்பதைத் தவிர்த்ததில்லை. ஆனால் இப்புனைவுகள் எதுவுமே, கலாப்ரியா என்னும் நவீனத்துவக் கவி என்ற அடையாளம் போல ‘ நவீனத்துவப் புனைகதையாளர்’ என்ற அடையாளத்தைத் தரவில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது. ஆனால் இந்தக் கதை - கொடிமரம்- அதிலிருந்து விலகியிருக்கிறது.
நான் வாசித்த அவரது சிறுகதைகள் எல்லாமே பெரும்பாலும் பெண்பாத்திர மையக்கதைகள் தான். கொடிமரம் கதையிலும் பானுமதி என்ற பானுதான் மையம். ஆனால் பானுவை மையமிட்டு உருவாக்கப்பட்டுள்ள மூன்று ஆண் பாத்திரங்களையும் -பானுவின் கணவர், நண்பர்களான சிவா, செல்வம்- சம அளவு முக்கியத்துவத்தோடு எழுதியுள்ளார். இதைப்போல இதற்கு முந்திய கதைகளில் எழுதியதில்லை. மையப்பாத்திரத்தை மட்டும் விரிவாக - மாறும் மனநிலை கொண்ட பாத்திரங்களாக எழுதிவிட்டு, மற்ற பாத்திரங்களுக்கு ஒற்றைப் பரிமாணத்தை வழங்குபவராகவே வெளிப்பட்டுள்ளார். அதனாலேயே அவரது கவிதைக்குள் பெயரற்ற பாத்திரங்களாக இருக்கும் பெண்களைச் சிறுகதைகளில் காலம், இடம் என்ற விரிவோடு பாத்திர உருவம் கொடுத்துச் சிறுகதைகளாக்குகிறார் என்றே தோன்றும். அத்தோடு எல்லாச் சிறுகதைகளிலும் கவிதைகளின் உரிப்பொருளான பெண்களின் உள்ளார்ந்த அகவிருப்பத்தையே - ஆண் உடல் மீதான விருப்பத்தில் கட்டற்ற மனத்தைச் சொல்லும் உரிப்பொருளையே கதைகளிலும் எழுதினார். இப்போது அந்திமழையில் வந்துள்ள ‘பிள்ளைப்பூச்சி’ அப்படியான ஒரு கதைதான்.
******
இலக்கணத்தை உதறிப் புதுக்கவிதை ஆனது வடிவமாற்றம். ஆனால் புதுக்கவிதை, நவீன கவிதையானது வெறும் வடிவமாற்றமல்ல. மரபான தன்னிலை ஒன்று நவீன வாழ்க்கையை -எதிர்கொள்ளும்போது ஏற்படும் தவிப்பைச் சொல்வது நவீனத்துவ மனநிலை. தவிப்பின் போது தீர்மானத்துடன் கூடிய முடிவுகளும் இருக்கலாம்; குழப்பமான சிந்தனைகளும் பரிதவிப்புகளும் இருக்கலாம். ஆனால் இரண்டு நிலைகளின் சந்திப்புப்புள்ளியை அடையாளப்படுத்துவதை எழுத்தாக்கியிருக்கும். அப்படியான பல கவிதைகளை எழுதியவர் கலாப்ரியா. ஆனால் அவரது சிறுகதைகளில் அப்படியான நிகழ்வுகளும் இருந்ததில்லை; மனிதர்களும் எழுதிக்காட்டப்படவில்லை. நாவல்களோ, கடந்த காலத்தின் நினைவுகளைத் தொகுத்துச் சொல்லும் வடிவத்தில் தான் இருந்தன. கடந்த காலத்தின் மீதான விசாரணைகளைச் செய்யும் பாத்திரங்களை அவற்றில் எழுதிக்காட்டவில்லை.
***********
கொடிமரம் சிறுகதையில் வரும் பானு, ஆண்களின் பொதுமனநிலையை அசைத்துப் பார்க்கும் பாத்திரமாக எழுதப்பெற்றிருக்கிறாள். அதற்கேற்ப அவளை மட்டுமல்லாமல் மூன்று ஆண்களையும் வளர்நிலைப்பாத்திரங்களாக உருவாக்கித் தந்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்