ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்


நாயகப்பாத்திரம், அதனோடு முரண்படப்போகும் எதிர்நிலைப்பாத்திரம் என அறிமுகப்படுத்தி, சின்னச் சின்ன முரண்பாடுகளால் வளர்வது நல்திறக் கட்டமைப்பு நாடக வடிவம். அதனை உள்வாங்கி உருவாக்கப்படும் திரைக்கதை அமைப்பும் பார்வையாளர்களைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. 
நல்லதொரு நாடகத்தன்மை கொண்ட பின்னலோடு கூடிய திரைப்படத்தின் சொல்முறை பெரும்பாலும் எளிமையான சொல்முறையாக அமையும். எளிமையான சொல்முறை என்பது நேர்கோட்டில் நிகழ்வுகளை அடுக்கிக் காட்டுவதும், ஒவ்வொரு நிகழ்விலும் உண்டாக்கும் உணர்வுகளின் - மெய்ப்பாடுகளின் திரட்சியைப் பாத்திரங்களுக்குரியதாக மாற்றி உச்சநிலை மோதலைக்கட்டமைப்பதுமாகும். இன்று வெற்றிகரமான சினிமா இயக்குநர்களாக இருக்கும் பலரும் அவர்களின் முதல் சினிமாவிற்கான திரைக்கதை அமைப்பில் இந்த வடிவத்தைப் பின்பற்றியே தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். பாரதிராஜாவின் 16 வயதினிலே, ஷங்கரின் ஜெண்டில்மேன், பாலாவின் சேது, தங்கர் பச்சானின் அழகி, வசந்தபாலனின் அங்காடித்தெரு போன்றன சில எடுத்துக்காட்டுகள்.

ப்ளு ஸ்டார் சினிமா, வட தமிழ்நாட்டின் அரக்கோணம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டு செல்வாக்கோடு இருந்த காலகட்டத்தைப் பின்னணியாக கொண்டுள்ளது. அந்தக் கிராமத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் அரசியல் திரளாக இருப்பதைக் காட்டுகிறது. குறிப்பாகப் பூவை மூர்த்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட பட்டியல் சாதியினர் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர் கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் என்பதாகவும் சித்திரத்தைத் தீட்டுகிறது. அம்பேத்கர் அரசியல் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் அந்த ஊரில் இருக்கும் பிற்பட்ட சாதிகளின் உதவி தேவைப்படும் பொருளாதார உறவு நிலவுகிறது என்பதையும் காட்டுகிறது. இப்படி உருவாக்கப்படும் கால, இடப்பின்னணிகளோடு அரசியல் பொருளாதாரப் பின்னணியும் படத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை.

பின்னணியை உருவாக்கிக் காட்டும் படம், மொத்தக்கிராமத்தின் பரப்பிலும் கிரிக்கெட் விளையாட்டு முக்கியமான பேச்சாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. முதன்மை அல்லது நாயகப்பாத்திரம் (அசோக் செல்வன்) ஒரு கிரிக்கெட் அணியின் தலைவர் என்றால், எதிர்நிலைப்பாத்திரம் போலச் சித்திரிக்கப்படும் (சாந்தனு பாக்கியராஜ்) இன்னொரு அணியின் தலைவர். இவர்களின் அணிகள் ஒன்றாக விளையாட முடியாத தடையாக இருப்பது அவர்கள் சாதியப் பின்னணி. படத்தின் நாயகப்பாத்திரத்தை விரும்பும் பெண்ணுக்குக் கூடக் கிரிக்கெட்டின் மீதுள்ள ஆர்வமே காரணமாக இருக்கிறது.

*******

தமிழ்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் கிரிக்கெட் பரவியதின் பின்னணிக்காரணங்கள் ஒன்று போல் இல்லை.அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையும் மாறிப் போய்விட்டது.

கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும் பலிஞ்சடுகுடுவும் ஆடிய தெருக்களில் பிளாஸ்டிக் மட்டையை வைத்துக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெற்றி தோல்வியைத் தெரிந்து கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் வசதி கொண்ட சடுகுடு விளையாட்டைக் கைவிட்ட கிராமத்து வாலிபர்கள், உள்ளூர் முதலாளிகளின் தயவில் உருவாக்கப்பட்ட டிராபிகளுக்காக ஒருநாள் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி படம் போட்ட உள்பனியன்களுக்குப் பதிலாக மட்டை சுழற்றும் விராட்கோலியும், கிளவுஸ் மாட்டிய தோனியின் சிரிப்பும், முகம்மது ஷமியின் வேகப்பந்து வீச்சும், ஜடேஜாவின் சுழற்சியும் காட்சிகளாகி விட்டன.

எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்கிறார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்க்கிறார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்கவில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகிவிட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம். அப்பெருங்கும்பல் மனோபாவத்திற்குப் பின்னணியில் இந்துப்பெரும்பான்மை மனோபாவமும் இப்போது சேர்ந்திருக்கிறது. நகரங்களில் உருவாக்கப்பட்ட இப்படியான கும்பல் மனோபாவம் போன்றதல்ல கிராமப்புற மனோபாவம். அங்கு எல்லாமும் சாதியப்பிளவாகவே உள்வாங்கப்படும். அப்படியான தொடக்கத்தைத் தான் ப்ளூ ஸ்டார் சினிமா காட்சிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுக் கிராமங்களின் விளையாட்டாக இருந்த கபடி விளையாட்டைப் பின்னுக்குத் தள்ளிக் ‘கிரிக்கெட்’ அந்த இடத்தைப் பிடித்த ஆண்டுகளின் தொடக்கம் 1980 - களின் பிற்பகுதி. எனது முதுகலைப் படிப்புக்காலத்தில் (1980-1982) ‘ஏழு ரோஜாக்கள்’ என்றொரு கபடிக் குழுவை எங்கள் கிராமத்தில் உருவாக்கினோம். பக்கத்து ஊர்களின் போட்டிகளில் பங்கேற்றதோடு, 60 கிமீ. தூரத்தில் இருந்த தேனி நகரின் பொங்கல் விழாப் போட்டியில் 1983 இல் பங்கெடுத்தோம். நான்கு ஆண்டுகள் முனைவர் பட்டத்தைப் பல்கலைக் கழகத்தில் தங்கி முடித்துத் திரும்பியபோது கபடி விளையாட்டுக்குப் பதிலாகக் கிரிக்கெட் நுழைந்திருந்தது. அப்படி நுழைந்த கிரிக்கெட்டிற்கு அரசியல் கட்சிகள் காரணங்களாக இருந்தன. கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் கிரிக்கெட் ஸ்டம்புகளை நட்டு, மட்டைகளோடு விளையாடத் தொடங்கியதில் அவர்களின் பங்களிப்பு இருந்தது. எங்கள் கிராமத்திற்கு ஆளுங்கட்சியான அஇஅதிமுகவின் செயல்பாட்டாளர்கள் உதவி செய்தார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அதேபோல் திமுக ஆதரவுக் கிராமங்களில் அவர்களும் கிரிக்கெட்டைக் கொண்டு வந்தார்கள். படத்தின் பின்னணிக்கிராமத்தில் தலித் அரசியல் நுழைவோடு சேர்ந்து கிரிக்கெட் பரவியதை முன்வைக்கிறது.
********
தலித் அரசியல் நுழைவுக்குப் பின்னான சாதிய முரண்களைப்பேசிய சினிமாக்களிலிருந்து ப்ளூ ஸ்டார் பெரிய வேறுபாட்டோடு வந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. அந்த வேறுபாடு, எப்போதும் சாதிய முரண்களைப் பேசும் படங்களில் வெளிப்பட்ட எதிர்நிலை மனோபாவத்தைக் கைவிட்டுவிட்டு, நேர்மறைப் பார்வையோடு அல்லது மனோபாவத்தோடு திரைக்கதை அமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனித்தனியான அணியாக விளையாடும்படி தூண்டும் சாதியப்பிளவும், பொருளாதார அடுக்கும் களையப்பட்டு, ஒரு ஊர், ஒற்றைக் கிரிக்கெட் அணி எனச் செயல்பட்டால், அந்த ஊரில் இருக்கும் இளைஞர்களின் திறன் வெளிப்படும் எனப்பேசுகிறது. அப்படியான சூழலில் தான் அந்த ஊர்க்காரர்களுக்கு வெளி உலகத்தில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் காட்சிகளாக்கியிருக்கிறது. கிரிக்கெட் மைதானப் பணியாளராக இருந்து, தாக்கப்பட்டு, பின்னர் வேலை நீக்கம் செய்யப்படும் இம்மானுவேல் பாத்திரத்திற்குள் நடக்கும் மனமாற்றமும், இளைஞர்களை வழிநடத்தும் விதமாக அவரது செயல்பாடுகள் அமைந்ததாகக் காட்டும் காட்சிகளும் வழக்கமான சாதிய முரண் சினிமாக்களிலிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்தியுள்ளது.   இந்த மாற்றம், விரோத அரசியலுக்குப் பதிலாக, ஒற்றுமை அல்லது இணைவுநிலை அரசியலை முன் வைக்கும் நிலைபாட்டோடு ஒத்துப்போகும் தன்மை கொண்டது. இந்த மாற்றத்தைச் செய்ததின் வழியாக மோதல் அரசியலைக் கைவிட்டுவிட்டு பங்கேற்பு அரசியலை நோக்கித் தலித் அரசியல் செல்லும் நிலையை குறியீடாக்கியுள்ளது என்று சொல்லத்தோன்றுகிறது.

பா.ரஞ்சித்தின் ’நீலம்’ தயாரிப்பு நிறுவனத்திற்காக, இயக்கியிருக்கும் படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.ஜெயக்குமார். அவரோடு சேர்ந்து திரைக்கதை உருவாக்கத்தில் தமிழ்ப் பிரபாவின் எழுத்துப்பங்களிப்பு உள்ளது. முன்வைத்துள்ள அரசியல் விவாதத்தில் காணப்படும் மாற்றம் காரணமாக, சினிமா என்னும் கலையின் மீதான பார்வையையும் மாற்றத்தோடு நோக்கியிருக்கிறது. எப்போதும் நட்சத்திர நடிகர்களைத் தேடி, அவர்களுக்காகத் திரைக்கதையை உருவாக்கிப் பாடல்கள், சண்டைகள், நாயக பிம்ப உருவாக்கம், தமிழ் நிலத்திற்குப் பொருந்தாத நாயகிகள் என நகர்ந்த நிலையைக் கைவிட்டுள்ளது இந்தப் படம். நடப்பியலுக்கு நெருக்கமாக இருக்கும் திரைக்கதையின் பாத்திரங்களில் ரஞ்சித்தாக அசோக் செல்வனும், ராஜேஷாகச் சாந்தனுவும் சரியாகவே பொருந்தியிருக்கிறார்கள். அவர்களோடு நீலம் தயாரிப்பில் பங்கெடுக்கும் நடிப்புக்கலைஞர்களும் பின்னணிக்கலைஞர்களும் பங்கெடுத்து உருவாக்கியிருக்கிறார்கள். இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள் போன்ற பொருத்தமான நடிகர்கள் அவர்களின் பாத்திரங்களைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். படத்தில் அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கும் அரக்கோணம் – சென்னை ரயில்கள் இடப்பின்னணியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. திரையரங்கில் பார்த்திருக்கவேண்டிய படம். இப்போது அமேசான் பிரைமில் பார்க்கக் கிடைக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்