அஷ்வகோஷ்: தொடரும் நினைவுகள்

 காலையில் அஷ்வகோஷின் மரணச்செய்திக்குப் பின் அவர் குறித்த நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. கடைசியாக அவரைச் சந்தித்தது அவருக்கு ’விளக்கு விருது’ வழங்கும் விழாவின்போது. பார்த்துக் கையைப்பிடித்து மகிழ்ச்சியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். முழுவதும் இருக்கவில்லை.

மதுரையில் ஒரு நாடக இயக்கம் என்றொரு கட்டுரை மூலம் ‘நிஜநாடக இயக்கம்’ பற்றிக் கணையாழியில் வாசித்தபோது பட்டப்படிப்பு மாணவன். அடுத்த சில மாதங்களில் வட்டங்கள் என்ற பெயரோடு அஷ்வகோஷ் என்ற பெயரையும் கணையாழிதான் அறிமுகம் செய்தது. முதுகலைக்காக மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நிஜநாடக இயக்க உறுப்பினராகத் தெருநாடகங்களில் நடிக்கத் தொடங்கியபோது அஷ்வகோஷின் நாடகச் செயல்பாடுகளும் காந்திகிராமத்தில் நடந்த தேசிய நாடகப்பள்ளியின் பயிற்சி முகாம் பற்றியும் மு.ராமசாமியும் கே.ஏ.குணசேகரனும் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.
அஷ்வகோஷின் நட்பு, தோழமை குறித்துக் கேஏஜி அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பார். இடதுசாரிக் கலை இலக்கிய அமைப்பிலிருந்து- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து எழுத்தாளர்கள் வெளியேறியதையும்/ வெளியேற்றப்பட்டதையும் கூட அவர்தான் ஒரு பயணத்தின் போது சொன்னார். அப்படி வெளியேறியவர்களில் அஷ்வகோஷும் அ.மார்க்ஸும் முக்கியமானவர்கள் என்பது அவரது கருத்து. அவர் வழியாகவே அவர்கள் இருவரும் எனக்கு அறிமுகம். அவர்களது நூல்களும் அறிமுகம்.
1989 -இல் நானும் நண்பர் கே.ஏ.குணசேகரனும் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியில் விரிவுரையாளராகவும் இணைப்பேராசிரியராகவும் சேர்ந்தபோது முதல் வாரத்திலேயே வந்து சந்தித்தவர் அஷ்வகோஷ். அதற்கு முன்பு அவரை நேரில் சந்தித்ததில்லை. நெடிதுயர்ந்த உயரமும் முழங்கால் வரை நீளும் ஜிப்பாவுமென எப்போதும் இருக்கும் அஷ்வகோஷிற்கு ராசேந்திர சோழன் என்றொரு பெயர் உண்டு என்பதை அவரது எட்டுக்கதைகள் என்ற தொகுப்பு அழுத்தமாகப் பதித்தது. 1992 இல் க்ரியா வெளியீடாக வந்த அந்தத் தொகுதியை வாசித்தபோது அதிருப்திதான். சிறுகதை வடிவத்தில் முழுமையைக் கொண்டிருக்காத அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஆண் -பெண் உறவின் பிறழ்வுகளை மட்டுமே எழுதும் நோக்கம் கொண்டனவாக இருந்ததும் ஒரு காரணம்.
1997 வரையிலான புதுச்சேரி காலத்தில் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. மயிலத்திலிருந்து புதுச்சேரிக்கு நேரடியான பேருந்துகள் உண்டு. ஒன்றரை மணி நேரத்தில் வந்துவிட முடியும். கே.ஏ.குணசேகரனைப் பார்க்கவும் நிறப்பிரிகை நடத்தும் கூட்டுவிவாதம், அரங்கக்கூட்டம், நாடக நிகழ்வுகள் என ஒவ்வொன்றுக்கும் வருவார். வரும்போது பெரும்பாலும் எதிர்நிலை விமரிசனங்களும் உரையாடல்களுமாகவே அமையும். காந்திகிராம அரங்கியல் பட்டறை தந்த தூண்டுதலில் அரங்க ஆட்டம் 1.2 என இரண்டு தொகுதியாக அரங்க வரலாற்றை எழுதி வெளியிட்டார். மேற்கத்திய அரங்கியல் ஆளுமைகள், இயக்கங்களின் பொதுத்தன்மை என விரிவான தகவல்களைக் கொண்ட அந்நூல் அரங்கியல் கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் நூல்கள். அந்தப் பாடத்தை நான் தான் கற்பித்துக் கொண்டிருந்தேன்.
ஆங்கில நூல்களிலிருந்து எடுத்த குறிப்புகளோடு சில முரண்பாடுகள் கொண்டதாக இருப்பதையும் தகவல் பிழைகள் உள்ளன என்பதையும் சொன்னேன். அந்த இடங்களைக் குறித்துக் கொடுங்கள்; அடுத்த பதிப்பில் மாற்றி விடலாம் என்றார். ஆனால் அதுபோன்ற நூல்களைத் தமிழ் அறிவுலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்பதால் மறுபதிப்பெதுவும் வரவில்லை. அவரோடு எதிர்நிலை விவாதங்கள் நடத்துவதற்கு அவரது தமிழ்தேசிய அரசியலும், தமிழர் கண்ணோட்ட இதழ்க் கட்டுரைகளும் கூட காரணங்களாக இருந்தன. அதில் வெளிப்பட்ட அரசியல் பார்வையோடு எந்தவிதத்திலும் உடன்பட முடியாத நிலையிலும் அஷ்வகோஷோடு நட்பு என்பது பாதிக்கப்பட்டதில்லை.

அவர் மீது அதிகமும் பிரியமான நண்பர் ஒருவர் புதுச்சேரியில் உண்டு. தொலைபேசித்துறையில் பணியாற்றிய மதியழகன் என்ற அந்த நண்பரோடு தொலைபேசியில் பேசும்போதெல்லாம் அஷ்வகோஷ் பற்றி ஒரு தகவலாவது சொல்லாமல் இருக்கமாட்டார். கடைசியாக அவரது கதையொன்றைக் குறித்து நான் எழுதிய விமரிசனம் அஷ்வகோஷிற்கு வருத்தம் தந்தது என்ற தகவலையும் அவர்தான் சொன்னார். நேரில் சந்திக்கும்போது அதைப் பற்றிப் பேசிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். அது நடக்காமலேயே போய்விட்டது. முன்னோடிகளும் நண்பர்களும் இன்மைக்குள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். நினைவுகள் மட்டும் நீள்கின்றன.
[ அவரது இரண்டு கதைகள் குறித்த கட்டுரைகள்
ஒன்று நேர்மறையான பார்வையோடு அணுகிய கட்டுரை; இன்னொன்று எதிர்மறைப்பார்வை கொண்டது.]

ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி

ஆண் - பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை - பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் மீறலை -பிறழ்வு உறவை நியாயப்படுத்தும் உரையாடல்களையும் காரணங்களையும் முன்வைத்து விவாதித்துக் கதையை நகர்த்துவதுண்டு. அப்படி இல்லாமல் பிறழ்வு உறவுகளில் ஈடுபடுகின்றவர்கள் அதனைப் பிறழ்வாகக் கருதாமல் இயல்பான உறவாகவே நினைக்கின்றனர்; ஏற்று நகர்கின்றனர் என்ற பார்வையைப் புனைவுக்குள் வைத்து எழுதியவர்கள் பட்டியல் ஒன்று உள்ளது. தமிழில் அப்பட்டியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே.

சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தனது “ எட்டுக் கதைகள்” என்ற தொகுப்பின் வழியாக அந்தப் பட்டியலில் இடம் பிடித்த ராசேந்திரசோழன் காமம் சார்ந்த புதிய கதையொன்றை எழுதியுள்ளார். சில நாட்களுக்கு முன்னால் பதிவேற்றம் பெற்றுள்ள ‘தமிழினி’யில் இடம்பெற்றுள்ள அக்கதைக்கு அவரிட்டுள்ள தலைப்பு “இசைவு”. உடல்சார்ந்த கவர்ச்சி மற்றும் ஈர்ப்பு காரணமாகப்பிறழ்வு உறவில் ஈடுபடும் இருவருக்கும் தங்களுக்கிடையே இருக்கும் சமூக உறவான “மருமகன்- மாமியார்” என்ற தடை சிறிதும் உறுத்தவே இல்லை என்பதாகக் கதையின் விவரிப்பும் மொழிநடையும் அமைக்கப்பட்டுள்ளது. தனது தாய்க்கும் கணவனுக்கும் இடையே இருக்கும் காமம் சார்ந்த விருப்பமும் ஈர்ப்பும் தெரிந்தபோதிலும் மகள் பெரிய அளவில் எதிர்ப்புக்க் காட்டாமல் இசைவு காட்டுவது போல நடந்து கொள்வதும் ஏற்கத்தக்கதாக இல்லை.

மாமியின் உடல் மேல் ஏற்படும் ஈர்ப்பைக் குற்றவுணர்வுடன் விவரிக்காமல் இயல்பான ஒன்றாக நகர்த்திப் போகிறார். குற்றவுணர்வும் அச்சமும் எழும்பித் தவிக்கும் மனநிலை எதுவுமில்லாமல் இந்த உறவுக்கு தொடர்புடைய ஒவ்வொருவரும் இசைவு தருவார்களா? என்ற கேள்விகள் வாசிப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்படவே செய்யும். ஆனால் கதையை எழுதிய ராசேந்திரசோழன் அதற்குள் நுழையவே இல்லை. தன் மகளைப் பொருட்படுத்தாமல் “அவ கெடக்கறா.. ஒக்காருங்க” என்ற சொல்லும் மாமியின் மனக்குரலாகவே கதையை நகர்த்திச் செல்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கர்ப்பமுற்றுப் பிறக்கும் பிள்ளைக்குத் தனது மருமகனே அப்பா என்று அவள் மனம் இசைவு தெரிவிப்பதாகவும் கதையை முடிக்கிறார்.

இந்தத் தன்மை அவரது எட்டுக்கதைகள் எதிலும் இல்லாத ஒன்று. அக்கதைகளும் பிறழ்வு உறவுகளைப் பேசிய கதைகளே என்றாலும் தடையை உணரும் மனங்களை விசாரிக்கும் உரையாடல்கள் கொண்ட கதைகள். இந்தக் கதை அப்படியான விசாரணைக்குள் நுழையாமல் - விசாரணைகளை எழுப்ப வேண்டும் என்ற நோக்கமின்றி, விடலைப்பருவத்து வாசிப்புக்கான பாலியல் தூண்டல் கதையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே வெளிப்பட்டுள்ளது.
செப்டம்பர் 04, 2022
******************
கோளாறான வயசு: ராசேந்திரச் சோழனின் எதிர்பார்ப்புகள்

மனிதர்களின் பயன்பாட்டிற்காகவும், மேன்மையான வாழ்வுக்காகவும் கண்டு பிடிக்கப்படும் கருவிகளின் பயன்பாடு பல நேரங்களில் நேர்மறையாகவே அமைகின்றன. மனிதர்களுக் கிடையே இருந்த தொலைதூரங்களை மறக்கச் செய்துள்ள கைபேசியின் பயன்பாடே சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே போல அக்கருவியைப் பல்நோக்குப் பரிமாணங்களில் பயன்படுத்தலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்ன அறிவியலாளர்களையே குற்றவுணர்வுக்குள் தள்ளி விடும் அளவுக்குக் கைபேசிகளில் இருக்கும் ஒளிப்படச் சாதனம் பாலியல் சார் குற்றங்களுக்குக் காரணமாகி விட்டன எனத் தொடர்ந்து ஊடகங்களில் கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சொந்தமான அந்தரங்கம் என்பது காணாமல் போய்விடும் நிலையில் மென்மையான உணர்வுகள் இல்லாமல் போய்விடும் ஆபத்துக்கள் நேர்ந்து விடும். மென் உணர்வுகள் மழுங்கடிக்கும் நிலையில் வன்முறையும், அதிர்ச்சிகளும் நெருக்கடிகளை ஏற்படுத்தி அவற்றை இயல்பானவைகளாக ஆக்கி விடக்கூடும்.

இதையெல்லாம் உணர்த்துவது யாருடைய கடமை. இதிலிருந்து தப்பிப்பதற்கான வழியாகச் சொல்லப்படும் பரிந்துரைகளில் ஒன்று; இயல்பானவற்றைத் தடைகள் போட்டு நிறுத்தக் கூடாது என்பது. குறிப்பாக ஆண்- பெண் ஈர்ப்பு என்பதும், இரு உடல்களின் வேட்கை என்பதும் உயிரியல் சார்ந்த இயற்கை என வாதிடும் அவர்கள், சமூக நியதிக்காக நாம் உண்டாக்கிக் கொண்ட கட்டுப்பாடுகள், பிரிவுகள், தராதரங்கள் போன்றவற்றில் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்கின்றனர். ஆண்- பெண் நட்பு என்பதில் தொடங்கி,காதல், காமம் என்பது வரை கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரம் வழங்கப்படும் போது வரம்பு மீறிய உறவுகள் நிகழ வாய்ப்பில்லை என்கின்றனர்.

தொடர்ந்து இந்த வாதம் விவாதத்திற்குரியதாக இருந்த போதிலும், மைய நீரோட்ட இந்திய சமூகம் அதனைச் சரியென ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் படைப்பாளிகள் இதனைச் சுலபமாகப் புரிந்து கொண்டு படைப்பாக்கிக் காட்டுவதன் மூலம் பரப்புரை செய்யத் தயங்குவதில்லை. சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றங்கள் வேண்டும் என வலியுறுத்தும் ஒரு படைப்பாளி, ஆண்-பெண் உறவுசார்ந்தும் இந்திய சமூகம் பழைமையான போக்கைக் கைவிட வேண்டும் என்றே வலியுறுத்துவான். அத்தகைய வலியுறுத்தலைச் செய்துள்ள பல கதாசிரியர்களைப் பட்டியல் இடலாம் என்றாலும், உடனே நினைவுக்கு வரும் பெயர் ராசேந்திரச் சோழன் தான்.
எழுபதுகளின் இறுதியில் காந்திகிராமத்தில் நடந்த நவீன நாடக முயற்சிகளுக்கான பட்டறையில் கலந்து கொண்டதன் மூலமும், அதன் தொடர்ச்சியாக நாடகங்களை எழுதியும் இயக்கியும் ஒரு நாடகக்காரராக அறியப்பட்டவர் அஷ்வகோஷ். தனது அரசியல் நடவடிக்கைகளின் போதும், விவாதங்களின் போதும், கட்டுரை எழுத்துக்களின் போதும் கறாரான இடதுசாரி முகம் காட்டும் அஷ்வகோஷ் சிறுகதை எழுத்தில் அதற்கெதிரான முகத்தைக் காட்டுபவர் என விமரிசகர்களால் சுட்டிக் காட்டப்படுகிறார்.

பொதுச் சமூகம் எழுத்துகளிலும் மேடைகளிலும் பேசுவதற்குரியன அல்ல என ஒதுக்கி வைக்கும் ஆண்- பெண் உறவின் சிடுக்குகளைக் கதைகளாக ஆக்கியதன் மூலம் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர். ஒழுக்கம் சார்ந்த பார்வைகளை மிகத்துச்சமாக மதிக்கும் மனித மனம், தனது உடலின் தேவைக்காகச் செய்யத்தயாராகும் கணங்களை அவரது கதைகள் அளவுக்கு வேறு ஒருவருடைய கதையிலும் பதிவுகளாகப் பார்க்க முடியாது. அதே நேரத்தில் வாசிப்புச் சுவைக்காக மலினமான உடல் வர்ணனைகளையோ, உடல்களின் சேர்க்கைகளையோ எழுதிக் காட்டும் எழுத்தும் அல்ல.

ஆண்- பெண் என்ற பேதமின்றி இயல்பான காமம் எல்லா உடல்களுக்குள்ளும் இருக்கிறது; வெளிப்படும் வாய்ப்பைத் தவற விடும் தருணங்களில் – அதன் கொதிகலன்கள் வெளிப் படுத்தும் ஆவியின் நிழலை எழுத்தில் கொண்டு வர வேண்டும் எனச் செயல்பட்டவர் ராசேந்திரச் சோழன் என்பதை அவரது கதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

குமரப் பருவத்து இளைஞன் ஒருவனின் செயல்பாடுகள், வெளிப்படையாக ஒரு நோக்கத்தையும் , மறைமுகமாக இன்னொரு நோக்கத்தையும் கொண்டிருக்கும் நிலையினை அவரது எதிர்பார்ப்புகள் கதை மிகச் சாதாரணமான காட்சிகளின் வழியேயும், உரையாடல்கள் வழியேயும் காட்டுவதைக் காணலாம். கதை இப்படித் தொடங்குகிறது:

பசுபதி கிளார்க் வீட்டுக் குழந்தை ரொம்ப அழகு என்று சொல்லிக் கொண்டான். அவர் வீட்டிலேயே எப்போதும் ஒட்டிக் கொண்டு கிடந்தான். காலையில் பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும், சட்டை மாட்டிக் கொண்டு டீக்கடையில், பங்க் கடையில், பார்பர் ஷாப்பில், லைப்ரரியில் அவனை மாதிரி வேலையற்ற நண்பர்கள் வழியில் கிடைத்தால் அவர்களோடு அங்கங்கே கொஞ்ச நேரம். உடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
செருப்பை மாட்டிக் கொண்டு அவர் ஆபீஸ் புறப்படுகிற சமயம், ‘ என்னா சார் பொறப்டாச்சா’ என்று கேட்பான். ‘ஆமா சார்’ என்று அவர் புறப்பட்ட பிறகு அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொஞ்சத் தொடங்குவான். அவர் வீட்டிலேயே வைத்துக் கொஞ்சுவான்.
“ அதுக்கு சோறு ஊட்டலியா.” “வேணா இப்பதான் பால் போட்டது. அப்புறமா ஊட்டிக்கலாம்”
“தட்டுல கொஞ்சம் போட்டு எடுத்துக்னு வாங்களேன். நான் பெசஞ்சி ஊட்டிடறேன். என் கையால ஊட்டனா சாப்பிடும்”
அம்மா மறுபடியும் கூப்பிட்டாள். “ கூப்பிடறாங்களே போவலியா? ” “ போவணம்”
அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவள் கேட்டான். “ ஏன் இங்கேயேதான் சாப்பிட்ருங்களேன்”
அம்மா வந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தாள். “ என்னா பையனாயிருப்பானோ. தெரியலியே இவன் இப்பிடியா கொழுந்த மேல உசிர வச்சிக்னு இருப்பான். சாப்டக்கூட வராம”
**** *****
அவனது வெளிப்படையான ஈடுபாடு கைக்குழந்தை மீதான ஈர்ப்பு என்பதாகத் தொடங்கும் கதை, அடுத்ததொரு நிகழ்வின் மூலம், அவனது ஈர்ப்பு குழந்தை மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது. அவன் தங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் – அந்தக் குழந்தையின் தாயிடம் நடத்தும் உரையாடல் இது.
“ தூக்கம் வர்ர மாதிரியிருக்குது. கொஞ்சம் தூங்கலாம்னு பாக்கறேன்” “ ஏன் தூங்குங்களேன்” அவன் அப்படியே நின்றான்.
“நீங்க தூங்கலியா..?’’ “ எனக்கு பகல்ல தூக்கம் வராது”
கொஞ்சம் பொறுத்துப் பார்த்தபிறகு அவள் “இன்னைக்கி என்னமோ ஒரே அசதியா இருக்கிறாப் போலருக்குது ” தனக்குத்தானே முனகிக் கொள்பவள் போல அவன் காதுபடச் சொல்லி விட்டு சுவர் பக்கம் முகத்தை வைத்து குழந்தையைப் பக்கத்தில் கிடத்திப் படுத்துக் கொண்டாள்.
முந்தானையை இழுத்து இடுப்பில் செறுகி வளையல்களை கைகளில் இறுக்கமாக ஏற்றிவிட்டு, ஒரு காலைத் தூக்கி கல்லில் வைத்து கிணற்றடியில் அவள் புடவை துவைத்துக் கொண்டிருந்தாள். கை ஏறி இறங்கும் போது அக்குளில் ஈரம் தெரிந்தது.
அவள் அடிப்பதை நிறுத்தி வியர்வையில் ஒட்டியிருந்த தலைமுடியை ஒதுக்கிக் கொண்டாள். “ சோப்பு தண்ணி மேல படப்போவுது. அப்பால போங்க” “ பரவாயில்லிங்க இருக்கட்டும்”
“ வெய்யில்ல எதுக்கு நிக்கணம்ன்றேன்” பசுபதி பதில் சொல்லாமல் நின்றான்.
“ கொழந்த வேற வெய்யில்ல” அவள் அலுத்துக் கொண்டாள். “ தோ இப்படி நெழலா வச்சிக்னு உக்காந்துக்கறேன்” பசுபதி சற்றுத் தள்ளியிருந்த பூவரச மரத்தடியில் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு குந்தினான்.
****** ****** *******
குழந்தை மீது காட்டும் ஈடுபாடு அதனைத் தாண்டி அந்தப் பெண்ணின் மீது படிகிறது என்பதை அறியும் பசுபதியின் அம்மாவின் எச்சரிக்கை உணர்வு இப்படி யோசிக்கிறது.
அம்மா சொன்னாள். “ ஏண்டா ஒனக்கு கொஞ்சமானா எதுன்னா இருக்கா. என்னாதான். பழக்க மானாலும் ஒரு வயசுப் பொண்ணுக்கு ஒரு ஆம்பளயக் கண்டா ஒரு கூச்சநாச்சம் இருக்காது? இன்னும் என்ன சின்னப்புள்ளையா நீ. எந்நேரம் பாத்தாலும் அங்கியே பூந்துக்னு.
“ சும்மா இருமா நீ வேற. இப்ப இன்னா பண்ணிடறம் இப்ப சும்மா கொழந்த கிட்ட கொஞ்ச நேரம் பெராக்கா வெளையாடனா என்னாவாம்.?”
அதுக்கு இங்க தூக்கியாந்து வெச்சி வெளையாடறது. உன்ன ஆரு வேண்டான்னா. அத வுட்டுப் புட்டு அவ சமையக் கட்டுக்குப் போனா சமையக்கட்டு. கூடத்துக்குப் போனா கூடத்துக்கு. தோட்டத்துக்குப் போனா தோட்டத்துக்கு. சீ..”
பசுபதி அம்மாவை முகச் சுளிப்போடு பார்த்தான்.
******* ******* *******
பசுபதி உள்ளே நுழைந்து “ அம்மா” என்றான். “கிளார்க் ஊட்ல எல்லாம் சினிமாவுக்குப் போறாங்களாம்மா; பாண்டிக்கி. என்னியும் கூப்புட்றாங்க.. காசு இருந்தா போவலாம்.” “ உன்னை நான் எந்நேர வேளையில பெத்தனோ..” அம்மா தலையிலடித்துக் கொண்டாள்.
“ எல்லாம் பொறப்டுட்டாங்கமா ரெடியா” “ சும்மா கெடறா வவுத்தெரிச்சல கெளப்பாத” பசுபதி அம்மா முகத்தைப் பார்த்து நின்றான். “ எல்லாம் இன்னோர் நாளைக்கி போய்க்கிலாம் தனியா.. அவங்களோட வேணாம்”. அம்மா கறாராய்ச் சொன்னாள்.
அவன் எதிர்பார்ப்பு அவளுக்குப் புரிந்த போது கிடைத்த பதில் அவனைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. உடல் சார் ஈர்ப்பில் ஒருவரின் எதிர்பார்ப்பு ஒருவழிப் பட்டதல்ல; இருவழிப் பட்டது என்பதை உணரும் போது அந்தச் சாதாரண - இயல்பு நிலைக்கு அவனே வந்து விடுகிறான் என்பதாகக் கதையை முடித்து விடுகிறார் ராசேந்திரச் சோழன்.
வெய்யில் நேரத்து அமைதியில் மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாடு தூங்கியது. மண்ணை சீச்சிவிட்டுப் படுத்த நாய் தூங்கியது. ஈ மொய்க்கும் சப்தம் கேட்டது. அம்மா தூங்கினாள். தூக்கம் வராமல் உழன்றான் பசுபதி. காலையிலிருந்து மத்தியானம் வரை அவன் குழந்தையைத் தூக்கிக் குலுக்கியதைக் கண்டு பொறுக்க மாட்டாமல் அவள் சொல்லியதை நினைத்துக் கொண்டான். “கொஞ்ச நேரமாவுது கீழ உடுங்க கொழந்தைய. தூக்கித் தூக்கியே அதுக்கு உடம்பு வலி கண்டுடும் போலருக்குது..”
பக்கத்தில் கோரைப் பாயில் கிடந்தாள் அவள். சிகப்புத் தோல் மூடிய இமைகளுக்கு நடுவே கறுத்த இமை முடிகள் மை பிசுபிசுப்போடிருந்தன.. ... புரண்டவாக்கில் அரைக்கண் விழித்தவள் திகைத்துப் போய் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். எல்லாவற்றையும் சரி செய்து கொண்டு அவனை எரிக்கும் கண்களுடன் பார்த்தாள்.
திணறலுக்குள்ளாயிருந்தவன் “ கொழந்த மட்டும் தனியா வெளையாடிக்னு கெடந்ததுங்க. அதான்” என்றான். அவள் பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். அவன் கொஞ்சம் யோசித்து, “ நான் இப்பத் தாங்க வந்தேன். கொஞ்ச நேரம்தான். நான் வந்தேன். நீங்க எழுந்திட்டீங்க” என்றான்.
“ இந்தாங்க கொழந்த” “ அப்படித்தான் உட்டுட்டுப் போங்க. அதுபாட்டுனு வெளையாடிக்னு கெடக்கும்.”
*********
“ என்னாடா ரெண்டு நாளா கொழந்தைய கையால கூட தொட மாட்டன்ற. ஓடியார்து பார்ரா அது. தூக்கித் தூக்கியே பழக்கப் படுத்திட்டியாங்காட்டியும் உடுதா பார் பாசம் அதுக்கு.”
அவன் மேஜைமேல் தாறுமாறாகக் கிடைக்கும் புஸ்தகங்களில் ஃபிசிக்சைத் தேடினான். “ ஆமா தூக்கி வச்சிருந்தவரிக்கும் போதாதாங்காட்டியும். எங்களுக்கு என்னா வேற வேல கீல இல்லியா என்னா..?
ஜனவரி 24, 2010
************* ********************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

புதிய உரையாசிரியர்கள்