எனது வாசிப்பு- நினைவுகள்-1

பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பியபோது எனது வயது 38. அங்கே எனது வேலை வாசிப்பாளர்(Reader ) . பாண்டிச்சேரியில் எனது பணியின் பெயர் விரிவுரையாளர் (Lecturer)

வாசிப்புக்கு வயது 25 க்கும் மேல். வாசிக்கிறேன் என்ற உணர்வோடு வாசித்தபோது வயது 14.
1960 களின் பிற்பாதியில் வயசான கிழவனுக்காக ஒரு பேரன் திண்ணையில் உட்கார்ந்து விராட பர்வம் படித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் வாசிப்பு என்னவென்று தெரியாதபோது அதனை ஒரு கடமையாக -நிகழ்வாகச் செய்துகொண்டிருந்தான். அவனைப்போல அல்லாமல் அவனது தாய்மாமா பாரதக் கதை வாசிப்பாளராக எங்கள் ஊரான தச்சபட்டியிலும் வெளியூர்களிலும் அறியப்பட்டவர். பக்கத்து ஊரான உத்தப்புரம் சாவடியில் உட்கார்ந்து பாரதம் படிப்பதைப் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

******
நான் படித்த புத்தகங்களில் மிகப் பெரியதும் இன்றும் நினைவில் இருப்பதும் மகாபாரதத்து விராட பர்வம் தான். விராட பர்வத்தையும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகனையும் தான் அடுத்தடுத்து வாசித்தேன். அதை எழுதியதால் தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்று அழைக்கப்பட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது. என்னுடைய சின்ன தாத்தன் படுத்த படுக்கையாகக் கிடந்தார். சின்னத்தாத்தன் என்றால், அம்மாவுக்குச் சித்தப்பா. அவருக்கு ஆண் வாரிசு கிடையாது; ஒரேயொரு பெண் வாரிசுதான். அவர்தான் எனக்கு தீர்க்கவாசகன் என்று பெயர் வைத்தவர். அந்தப் பெயரில் உள்ள வாசகன் என்ற பின்னொட்டை மாற்றி அம்மா தீர்க்கமணி என்று சொல்வார். அதையும் சுருக்கித் தீர்க்கம் என்றும் மணி என்றும் வாசகமென்றும் அவரவர் விருப்பம்போல ஊரில் அழைப்பார்கள்.

படுத்துவிட்ட தாத்தனுக்குப் பேச்செல்லாம் இல்லை. காது கேக்குமா என்பது சந்தேகம் தான். என்றாலும் விராடபர்வத்தைக் கேட்டால் சாவு நல்ல சாவாக அமையும் என்றும், சொர்க்கம் போகும் வாய்ப்புக் கூடுதலாகும் என்றும் நம்பியதால் ஒவ்வொரு நாளும் யாராவது அவர் அருகில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள். நான் ஒரு காலாண்டுத் தேர்வு விடுமுறையின் போது விராட பர்வம் முழுவதையும் வாசித்தேன். கேட்டு விட்டு தனது ஆயுளை நீட்டித்துக் கொண்ட தாத்தா அரையாண்டுத் தேர்வில் சக்கரவர்த்தித் திருமகன் கேட்டார். முழுப் பரீட்சை லீவில் பாரதக் கதையின் ஆதிபர்வத்தைத் தொடங்கினேன். அதை முடிக்கும் முன்பே அவரது கதை முடிந்து விட்டது.

ஒருவேளை ஒன்றிரண்டு வருடம் அவர் படுத்தபடுக்கையாக இருந்திருந்தால் இந்தியாவின் கதைக்களஞ்சியமான மகாபாரதக் கதை முழுவதையும் அப்போதே வாசித்து முடித்திருப்பேன். பாரதக்கதையின் ஒவ்வொரு பருவமும் கெட்டி அட்டையில் எங்கள் வீட்டு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இப்போதும் நினைவாக இருக்கிறது. அவற்றையெல்லாம் வாசித்த போது ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் படித்ததாக ஞாபகம். அப்புறம் அம்மாவின் சின்னம்மாக்கள் ரெண்டு பேர் நீண்ட காலம் விதவைகளாக இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்தது எனது தந்தையின் ஊரான அதிகாரிபட்டி. அது தச்சபட்டியிலிருந்து ஐந்து கல் தொலைவில் இருந்தது.

அந்த ஊருக்குப் போக இரண்டு மூன்று பாதைகள் உண்டு. இரண்டு கண்மாய்களின் வழியாகப் போகும் பாதையில் இடையில் ஆள் நடமாட்டமே இருக்காது. அந்தப் பாதையைத் தனியாகப் போகும்போது தேர்வு செய்ததில்லை. அப்படிப் போனால் திருடர்களிடம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்ற அச்சம் இருந்தது. பள்ளிக்காலத்து விடுமுறைக்கெல்லாம் அதிகாரிபட்டிக்குத்தான் போவேன். அவர்களது விதவை வாழ்க்கைக்குப் புராணங்கள் படிப்பதைப் பரிந்துரைத்தது யாரென்று தெரியாது. ஆனால் யாரையாவது படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். கேட்ட கதையையே திரும்பத்திரும்பக் கேட்பதில் சலிப்பெல்லாம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நானே பெரிய எழுத்துக் கதைகள் பலவற்றைத் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். நான் போகும்போது உள்ளூரிலிருக்கும் சிலர் வந்து வாசிப்பார்கள். வாசித்தவர்களுக்கு ஒருநேர உணவு உத்தரவாதம். அவர்கள் இருவரும்தான் எங்கள் உறவினரில் கடைசியாக வெள்ளைச்சேலை கட்டிய விதவைகள். அவர்களுக்குப் பின் யாரும் வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டு விதவைக் கோலத்தில் வாழ்ந்ததில்லை. மூத்தவருக்குத் திருமணம் ஆனபோது வயது 11. அவரது முதுகு முழுமையாகக் கூன்முதுகு. அதனால் நான்கடி உயரமே இருப்பார். அவரைக் கட்டிக்கொண்டதற்காக அவரது தங்கையையும் அதே மேடையில் கட்டிவைத்தார்களாம். அவருக்கு அப்போது 7 வயது முடிந்திருந்ததாம். இவர் நல்ல உயரமாக இருப்பார். இருவரும் இறந்த பின்னும் அவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று நீண்ட நாள் இருந்தது. அந்தப்படத்தில் இருந்தவர்கள் மூன்றுபேர். நடுவில் கருமயிலை நிறத்தில் ஒரு தாட்டியமான ஜல்லிக்கட்டுக்காளை. சாய்ந்த திமிலுடன் நிற்கும். இவர்கள் இருவரும் இடதுபுறமும் வலதுபுறமு நின்று படம் எடுத்திருந்தார்கள். அந்தக் காளை அடக்கமுடியாத பொலிகாளையாக இருந்தபோதும் இவர்கள் இருவரிடமும் அடங்கிவிடுமாம். ஜல்லிக்கட்டு நடக்கும் ஊருக்கு அவர்களிருவரும் கயிறு பிடித்துக் கொடுத்தால் தான் வெளியேறும் என்பது நடைமுறை; நம்பிக்கை.


விதவை வாழ்க்கையின் கடைசி அடையாளங்கள் அவர்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவர்களது விதவை வாழ்க்கையின் பதிலீடாக இந்தக் கதை கேட்டல் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அம்மாவின் சின்னம்மாக்கள் என்ற உறவுக்கும் மேலாக அப்பாவுக்கும் சித்தப்பா வழி அக்காமார்களும் கூட. இருவருமே ஒரே புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரே நாளில் விதவைகளானவர்கள். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு வாசிக்கத் தெரியும். அவரது தந்தைக்கு இரண்டு பேர் மட்டும் தான் பிள்ளைகள். ஆண் வாரிசு எதுவும் இல்லை என்பதால் அவரது நிலபுலன்களுக்கும் அவர் சேர்த்து வைத்திருந்த புராண இதிகாசப் புத்தகங்களுக்கும் அவர்கள் தான் வாரிசுகள். அவர்களுக்கும் நான் பல நாட்கள் கர்ணன் சண்டை, அசுவமேத யாகம், கிருஷ்ணன் தூது, அல்லியரசாணி மாலை ,சுமந்திரன் களவு மாலை போன்ற பெரிய எழுத்துக் கதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறேன். எங்கள் வீடுகளில் இருந்த புத்தகங்களில் ஒன்று கூட சிவனை மையப் படுத்திய புத்தகங்கள் இருந்ததில்லை. வைணவக் குடும்பங்கள் என்பதற்கான அடையாளங்களாக இவை பெரிய டிரங்க் பெட்டிகளில் அடுக்கப் பட்டிருந்தன. மிகச் சின்ன கிராமம் என்றாலும் பாரதக்கதையின் தொகுப்புக்கள் எங்களூர்ச் சாவடியில் ஒன்றும் சில வீடுகளிலும் இருந்தன என்பது முக்கியம்.எனது தாய்மாமாவுக்கு முக்கியமான வேலையே பாரதம் படிப்பதுதான். நல்ல குரல்வளத்தோடு ஜனமே ஜய மகராசனே எனத் தொடங்கி அவர் பாரதம் படிப்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

எங்கள் ஊருக்குக் கொண்டுகொடுத்த ஊர்களிலிருந்தெல்லாம் அவருக்கு அழைப்பு வரும். எங்கள் ஊரோடு தொடர்புடையவர்களின் ஊர்களுக்கும் சென்று பாரதக்கதை வாசித்துவிட்டு வருவார். எங்கள் ஊருக்கு வடக்கிலும் மேற்கிலுமாகச் சுற்றிச் செல்லும் மலையைத் தாண்டி இருக்கும் வருசநாட்டுக்கும் ஆண்டிபட்டியைச் சுற்றியிருக்கும் தெப்பம்பட்டி, சுப்புலாபுரம், திம்மரச நாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி எனச் சில ஊர்களுக்கும் போவார். அந்த ஊர்களில் எங்களூர்ப் பெண்கள் வாழ்க்கைப்பட்டுப் போயிருக்கிறார்கள். அந்த ஊர்களிலிருந்து பெண்கள் இங்கே வாழ்க்கைப்பட்டு வந்திருக்கிறார்கள். இப்படிக் கொண்டு கொடுத்து உறவு வளர்க்கும் ஊர்களுக்கெல்லாம் அவர் பாரதம் படிக்கப்போவதுண்டு.

****************

அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கச் சேராமல் இருந்திருந்தால் இலக்கியத்தின் பக்கம் வராமல் போயிருப்பேன் . அந்தக் கல்லூரியில் இருந்த பேரா. சாமுவேல் சுதானந்தா நவீன இலக்கியத்தின் பக்கம் மாணவர்களின் கவனத்தைத் திருப்பிக் கொண்டே இருப்பார். ஒரு புதுமைப்பித்தன் கதையைப் பாடமாக நடத்திவிட்டு பத்துச் சிறுகதை ஆசிரியர்களைப் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டுப் போவார். ஜெயகாந்தனின் நாவல் ஒன்றைப் பாடம் சொல்லிவிட்டு மொத்தமாக ஜெயகாந்தனின் நாவல்களை வாசிக்க வேண்டிய நெருக்கடியை உண்டாக்குவார். அப்படித்தான் நவீன இலக்கியத்தின் பரப்புக்குள் அறியப்பட வேண்டிய அத்தனை பெயர்களையும் மூளைக்குள் ஏற்றி வைத்தார். அப்போது கணையாழியில் இரண்டு கவிதைகள் அச்சானது. அதைக் கையில் வைத்துக்கொண்டு அவர் போகும் வகுப்புகளுக்கெல்லாம் கொண்டுபோய் வாசித்துக் காட்டி, இந்தக் கவிதைகளை எழுதிய கவிஞன் நம் கல்லூரியில் இப்போது மாணவன் எனச் சொல்லி ஒரு சிறிய ரசிகர் கூட்டத்தை உண்டாக்கி விட்டார். அதற்கு முன்பு விடுதியில் யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்து மாணவனாக இருந்தவனைத் தேடிப் பலதுறை மாணாக்கர்களும் வந்து சென்றார்கள். அதன் பிறகு ஆனந்த விகடனின் மாணவர் பக்கத்திலும் கவிதையும் ஒரு காட்சிக்குறிப்பும் வந்தபோது எழுத்தாளன் என்ற மனநிலை உருவாகத் தொடங்கியது. இது நடந்தது இரண்டாம் ஆண்டு படிக்கும்போது. அடுத்த ஆண்டு கல்லூரியின் குரல் இதழின் தமிழ்ப்பிரிவு ஆசிரியர் பதவிக்கு உயர்வு. ஆனால் அந்தப் பொறுப்புக்கு வணிகத்துறை மாணவர் - இப்போதைய ‘யுவன் சந்திரசேகர்’ கடும்போட்டியாக இருந்தான் என்பது மறக்காத நினைவுகள்.

அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு எம்.ஏ படிக்கப் போன போது தமிழின் நவீனத் திறனாய்வுக்குப் பங்களிப்பு செய்த சி.கனகசபாபதி , தி.சு.நடராசன் போன்றவர்கள் இருந்தார்கள். எனக்கு இலக்கியக் கல்வியை வகுப்பிலும் வெளியிலும் பாடம் நடத்தினார்கள். வகுப்பில் கற்றுக் கொண்டதைவிடவும், அவர்களது அறையில் உரையாடிப் பெற்ற இலக்கிய அறிவு தான் அதிகம். இருவரது வாசிப்பில் இருந்த நூல்கள் கொண்ட புத்தக அடுக்குகளிலிருந்து எடுத்துக்கொண்டு ”இரண்டு புத்தகங்கள் எடுத்திருக்கிறேன்” என்று மட்டுமே சொல்லிவிட்டு எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். சி. சு. செல்லப்பாவின் நண்பரான சி.க. விடம் இருந்தனவெல்லாம் செல்லப்பாவின் சிந்தனைப்பள்ளியின் நூல்கள். தி.சு.நடராசன் நா.வா.வின் மாணவர். ஆராய்ச்சி ஆசிரியர் குழுவில் ஒருவர். அவரிடமிருந்து மார்க்சிய அடிப்படைகளும் ருஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களும் கிடைக்கும்.

மார்க்சிய இயங்கியலை அறிமுகப்படுத்தும் நூல்களை வாசிக்கும்படி செய்தவர் அவர்தான். கார்ல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என்று மார்க்சிய மூலவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களை விடவும் அவர் எனக்குப் படிக்கும்படி தந்த நூல்கள் பெரும்பாலும் இந்திய இடதுசாரிகளின் நூல்கள் தான். ராகுல சாங்கிருத்தியாயன், எஸ்.ஏ. டாங்கே, ரஜினி பாமிதத், சட்டோபாத்யாயா, டி.டி. கோசாம்பி, ரொமிலா தாப்பர் என அவர் அறிமுகம் செய்தவர்கள் எனக்கு இந்தியாவின் சமூகவரலாற்றையும் மெய்யியல் சிந்தனைகளையும் கற்றுத் தந்தார்கள். நான் செய்த டாக்டர் பட்ட ஆய்வும் கூட அப்படியான ஓர் ஆய்வு தான். இவர்களது புத்தக அடுக்குகளைத் தாண்டி மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்தின் அடுக்குகள் வாசிப்புக்கான கடல். காலை 8 மணிக்குத் திறந்து முன்னிரவு 8 மணிக்கு மூடுவார்கள். முதுகலை, ஆய்வுப் படிப்புக்காலம் தான் வாசிப்பின் வேகம் கூடிய காலகட்டம் . ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ நாவல், நூலகம் மூடும் நேரத்தில் எடுத்து, இரண்டு இரவுகளுக்குப் பின் நூலகம் திறந்தபோது திருப்பி அளிக்கப்பட்டது. 36 மணி நேரத்தில் 300 -க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலைப் படித்து முடித்த வேகம் கொண்ட காலம்.

***********
பாண்டிச்சேரியில் இருந்த எட்டாண்டுக் கால வாசிப்பும் செயல்பாடுகளும் நாடக அடையாளத்தோடு என்னைப் பிணைத்து விட்டது. தமிழில் எழுதப்பெற்ற நாடகங்களையும் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்களையும் தொகுத்து வாசிப்பது முதல் வேலையாக இருந்தது. அதன் பிறகு அங்கு படிக்க வந்த மாணவர்களுக்காக வாசித்த அரங்கியல் கோட்பாடுகள் தான் பின்னர் திரைப்படங்களைப் பற்றி எழுதும் போதும் உதவியாக இருந்தன. நாடகக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தேறும் ஒருவர் எல்லாக் கலைகளையும் அறிந்தவராவார் என்பது நிச்சயம். நாடகத்துறையின் இயங்குதல் மீது விலகலான மனநிலை உருவான காலகட்டத்தில் தலித் இயக்கங்களின் பக்கம் நகர்வு நிகழ்ந்தது. தலித் இயக்கங்களின் செயல்பாடுகளையும், தலித் இலக்கியத்தின் தீவிரத்தையும் தேவைகளையும் புரிய வைத்தது.
புத்தகக்காதலன் கண்ணன். எம். எல்லாவகைப் புத்தகங்களையும் வாங்கி வாசித்துவிட்டு அவர் பணியாற்றிய பிரெஞ்சிந்திய நிறுவனத்தின் நூலகத்திற்குக் கொடுத்துவிடுவார். எல்லாவகை இதழ்களையும் நூல்களையும் தேடித்தேடி வாங்குவார்.

கண்ணன்.எம். , ரவிக்குமார். அருணன். பிரதிபா ஜெயச்சந்திரன் என ஒவ்வொருவரும் இதழ்களையும் நூல்களையும் பரிமாறிக் கொண்டு வாசித்த காலம் அது. நிறப்பிரிகை தொடங்கப்பட்டு ரவிக்குமாரின் முகவரியிலிருந்து வந்துகொண்டிருந்ததால், புதுவையில் கலகக்காரர்களும் வாசிப்புக் கூட்டங்களும் அலைந்து கொண்டே இருக்கும். சிண்டிகேட் வங்கியிலிருந்து ஐந்து மணிக்குக் கிளம்பும் ரவிக்குமாரோடு சேர்ந்து மிதிவண்டிப் பறவைகள் பிரெஞ்சிந்திய நிறுவனம் பறந்து, இரண்டு தேநீர்க்கடை, இரண்டு புத்தகக்கடை என நகர்ந்து லாஸ்பேட்டை போய்ச் சேரும்போது மணி எட்டரையாக இருக்கும். அப்படிப்பறந்துகொண்டிருந்த பாண்டிச்சேரி வாழ்க்கையைப் பிரிந்து கிளம்பலாம் என நினைத்த காரணம், பணியாற்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப்பள்ளியில் செய்வதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலைதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்