திசை திருப்பும் நாயகர்கள்

தமிழ் ஊடக வெளிகள் சினிமாப் பிம்பங்களால் நிரப்பப்படுவது நீண்ட காலச் செயல்பாடுகள். திருவிழாக்களும் பண்டிகைகளும் நட்சத்திர நடிகர்களின் புதியபுதிய சினிமாக்களால் நிரப்பப்படுவது போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக அவர்களின் நேர்காணல்களால் நிரப்பப்படுகின்றன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நபர்களாக - அரசியல் தலைவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். வாக்கு அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இருப்பதாகக் காட்டுவது ஒரு பாவனை தான்.
அதற்கான களப்பணியோ, பரப்புரைகளோ இவர்களிடம் இல்லை. ஒரு படத்தின் இயக்குநரின் வழிகாட்டுதல்படி இயங்கும் நடிகர்களான இவர்கள் அரசியலையும் அதே தன்மையோடு தான் அணுகுகிறார்கள். வெளியிலிருந்து இயக்கப்படும் கட்சிகளை நடத்துவது என்பதை வெளிப்படையாகத் தெரியும் ஒன்று. ஆனாலும் ஆட்சியைப் பிடிப்போம்; மாற்றங்களைத் தருவோமெனச் சூளுரைக்கிறார்கள். எல்லாமும் திசைதிருப்பல்கள் என்பதைக் காலம் உணர்த்தக்கூடும். தமிழ்ச்சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களாக இருந்த அரசியலில் இறங்கும் - இறக்கப்பட்ட பின்பு இன்னொரு நடிகர் தலைவர் ஆகிறார்; முதல்வர் ஆவேன் என்கிறார்.  அண்மைக்காலச் சொல்லாடல்களின் பின்னணியை மட்டும் இங்கே சுட்டிக்காட்டலாம். அந்தச் சொல்லாடல்களின் அபத்தமும் கேளிக்கைத்தனமும் இங்கே உணரப்படவேண்டியன.
 
நடிகர் விஜயின் வெற்(றி)று அரசியல்

குடியுரிமை வழங்குதல் தொடர்பான சட்டத்தைக் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு செய்துள்ளது ஒன்றிய அரசு. அதற்குப் பொறுப்பான ஆளுங்கட்சியைக் குறித்து ஒற்றைச் சொல்லும் இல்லை அந்த அறிக்கையில். ஆனால் தடுத்து நிறுத்தும் அதிகாரம் மாநில அரசின் எல்லைக்குள் இருப்பதுபோலக் காட்டிக்கொள்கிறது நடிகர் விஜய் கையொப்பத்துடன் வந்துள்ள அந்த அறிக்கை. அதைச் சமூக ஊடகங்களில் பரப்பி ஏன் விளம்பரம் தரவேண்டும் எனத்தெரியவில்லை. ரஜினியும் கமலும் திசைதிருப்பல் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் விஜய் இறக்கப்பட்டிருக்கிறார் என்பது புரியாமலா இருக்கிறது?
 
ஒரு இயக்குநரின் வழிகாட்டுதல்படி இயங்கும் நடிகர்களான இவர்கள் அரசியலையும் அதே தன்மையோடு தான் அணுகுகிறார்கள். வெளியிலிருந்து இயக்கப்படும் கட்சிகளை நடத்துகிறார் என்பது வெளிப்படையாகவே தெரியும் ஒன்று. நடிகர்களை அப்படி இயக்குபவர்களே, "தமிழர்கள் நடிகர்களின் பின்னால் செல்லும் மந்தைகள்" என்றும் பேசுவார்கள் என்பதும் வரலாறு.   இவர்கள் ‘சினிமாவில்  இந்தியாவைக் காப்பேன்; எல்லையில் எதிரிகள் நுழைந்துவிடாமல் தடுப்பேன்; தலைநகரின் அமைதிக்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்வேன் என ராணுவ அதிகாரியாக, உள்நாட்டுப் பாதுகாப்புக்குப்   பொறுப்பான புலனாய்வுத் துறையினனாக,  மாநிலங்களுக்கிடையேயும் சட்டம் ஒழுங்கை - பெருங்குற்றங்களைத் தடுக்கும் காவலர்களாக நடிக்கும் நடிகர்கள், தேசியம் காப்போம்; தேசத்தின் தலைமையைப் பிடிப்பிடிப்போம் என அரசியலில் இறங்குவதில்லை. தமிழ்நாட்டுக்குத் தலைவன் ஆவேன்; முதல்வர் ஆவேன் என்றுதான் இறங்குகிறார்கள்; இறக்கிவிடப்படுகிறார்கள். தமிழ்நாட்டை உணர்ச்சிகரமான வெகுமக்கள் உணர்வுகளால் தளும்பி நிற்குமாறு பார்த்துக் கொள்வது என நினைப்பது திசை திருப்பும் அரசியலின் நோக்கம்
.
கட்டியங்கூறும் கோமாளித்தனம்

கமல்ஹாசனின் கட்டியங்கூறும் திறன் பலநேரங்களில் வெளிப் பட்டுள்ளது. தான் செயல்படுவது திரைபடம் அல்லது ஊடகம் என்ற உணர்வுடன் வெளிப்படும்போது அதிகம் ஏமாற்றம் தருவதில்லை. கட்டியம் கூறுதல் என்பது தொகுத்து வழங்குவது மட்டுமல்ல; முன்னுரைப்பதும்கூட. தெற்காசிய நாடுகளின் மரபு அரங்குகளின் மையமான கூறு அது. சம்ஸ்க்ருதச் செவ்வியல் நாடகத்தில் விதூஷகன் என அழைக்கப்படும் அந்தப் பாத்திரத்தின் பரிமாணங்களிலும் கட்டியம் கூறும் தன்மை உண்டு. கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் குழுவினரின்(Chorus) செயல்பாட்டில் கட்டியம் கூறும் வினைகள் வெளிப்படும்.
இதன் கலவையான குணத்தைச் சேக்ஸ்பியரின் நாடகங்களிலும் பார்க்க முடியும். குறிப்பாக அவரது லியர் அரசனில் (King Lear ) உள்ள முட்டாள்(Fool) பாத்திரம் ஆகச் சிறந்த பாத்திரம். முட்டாள் என்பவன் வெறும் முட்டாளல்ல. லியர் அரசனின் இன்னொரு பிரதி. அவரது தவறை - வீழ்ச்சியைப் புரிந்து கொண்ட பிம்பம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் முதல் இரண்டு பருவத்தில் கமல்ஹாசன் காட்டிய தீவிரத்தை மூன்றாவது பருவத்தில் தவறவிட்டார். இப்பொழுது நடக்கும் நான்காவது பருவத்தில் ஏனோதானோவென்று வந்து போகிறார். தேர்ந்த நடிகராக அறியப்பெற்ற கமல்ஹாசன் அரசியல் பரப்பில் ஆகக்கூடிய கோமாளியாக மாறிக் கொண்டிருக்கிறார்.
 
அவரது மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நடைபெறும் மக்களைப் பாதிக்கும் பல்வேறு நிகழ்வுகளின் போதும் கருத்துக்கூறியும் போராட்டங்கள் நடத்தியும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான அரசியலைச் செய்யாமல் தேர்வுசெய்து கொள்ளும் நிகழ்வுகளின் போது மட்டும் கருத்துரைப்பதைச் செய்து வருகிறது. அதற்குக் காரணம் மக்கள் நீதி மய்யம் என்பது ஒற்றை நபரை மையமாகக் கொண்ட கட்சி. சினிமா நடிகராக இருந்தபோது அவரது நண்பர்களாக இருந்தவர்களே கட்சியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள். அவருக்கு அடுத்து இரண்டாமிடம், மூன்றாமிடம் என்று ஒருவரும் அடையாளம் காட்டப்படாத கட்சி.
 
நேற்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சூரப்பாவை ஆதரித்து ஒரு கட்டியத்தைக் கூறியிருக்கிறார் கமல்ஹாசன். தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் சிக்கலில் இருக்கிறது. ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை நிர்வாகம் செய்யும் அமைப்புகளால் கேடுகளைச் சந்தித்து வருகின்றன என்பது உண்மைதான். எல்லா நிலையிலும் ஊழல் படிந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த உண்மையைப் போலவே தமிழகக்கல்வியையும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் சிதைக்கும் பணியில் மத்திய அரசின் கல்விக்கொள்கைகளும் புதுவகைத் தேர்வுகளும் வினையாற்றுகின்றன என்பதும் உண்மை. ஒரே துறையின் இரண்டு உண்மைகளில் ஒன்றை மட்டும் கவனிப்பது தேர்வு செய்து கவனிப்பதல்லாமல் வேறென்ன?

மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்கள் முழுமையாக மைய அரசின் தலையீட்டில் நடக்கிறது. அப்படி வந்த ஒரு துணைவேந்தர் மாநில அரசுக்கு எதனையும் தெரிவிக்காமல் தன் விருப்பம்போலப் பல்கலைக் கழகக் கல்வியின் போக்கை மாற்றுகிறார். தன்னாட்சியைக் காப்பாற்றத் தவறுகிறார். அதையெல்லாம் கேள்வி கேட்காமல் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டும் கேள்வி கேட்டு ஆவேசப்படுகிறார் திரு. கமல்ஹாசன். அவரைப்போலவே தமிழ்நாட்டில் பல்வேறு நபர்கள் தேர்வுசெய்து கொண்ட வெளிப்பாடுகளைச் ( Selective expression ) செய்கிறார்கள். அவர்கள் திரைப்பட ஆளுமைகளாக இருப்பதால் ஊடகக்கவனங்களைப் பெற்று விடுகிறார்கள். ஆனால் அந்த வெளிப்பாடுகள் சேக்ஸ்பியரின் லியர் அரசனின் முட்டாளையும் விஞ்சி நிற்கிறது

ரஜினிகாந்த்: தொடர்ச்சியின்மையின் அடையாளம்

வணிக சினிமா நடிகருக்கோ, இயக்குநருக்கோ ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே தொடர்ச்சியிருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆனால் தன்னைக் கலைஞர் என்று நினைக்கும் ஒரு இயக்குநர் தனது படங்களில் கருத்தியல்ரீதியான தொடர்ச்சியைக் கொண்டுவரவும் தக்கவைக்கவும் நினைப்பார். அதுதான் தனது அடையாளத்தை உருவாக்கும் என அவருக்குத் தெரியும். ஆனால் நடிகர்கள் அப்படி நினைப்பதில்லை. நான் நல்ல நடிகன் என்பது தரப்படும் பாத்திரத்தை ஏற்று நடிப்பதில் இருக்கிறது. எனவே கருத்தியல் ரீதியான ஓர்மைகளைப் பற்றி நடிகனாகக் கவலைப்பட ஒன்றுமில்லை என்று வாதிடுவார்கள். ஆனால் சில நடிகர்கள் சிலவகையான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி காட்டுவார்கள். அது அவர்களின் பிம்பத்தையும் கருத்தியல் பார்வையையும் சிதைத்துவிடும் எனக் கருதுவார்கள். திரு எம்.ஜி.ராமச்சந்திரன் மது அருந்தும் காட்சியிலோ, புகைக்கும் காட்சியிலோ நடிப்பதைத் தவிர்த்ததின் மூலம் தனது சமூகப் பார்வையைத் தொடந்து தக்க வைக்கவைத்தார்.
 
அதே நேரத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் தொடர்ச்சி -CONTINUITY யைத் தவறவிடக்கூடாது என்பது முக்கியமான ஒன்று. ஒரு காட்சியில் இடம்பெறும் பின்புலக்காட்சி, அதில் இருக்கும் இயற்கைப் பொருட்கள், செயற்கைப் பொருட்கள், பாத்திரங்கள் அணியும் ஆடை, நடிக உடல் தாங்கும் ஒப்பனை என எல்லாவற்றிலும் தொடர்ச்சியைக் கொண்டு வரவேண்டும். அதைத் தவறு விட்டால் சினிமாவின் ஓர்மை கெட்டுவிடும். அரசியலில் இதிலெல்லாம் தொடர்ச்சி தேவையில்லை. ஆனால் பேசும் உரையில் - வசனத்தில் தொடர்ச்சி வேண்டும். தொடர்ச்சி இல்லாமல் பேசும் உளறல்களாகிவிடும்.
 
1996 முதல் திரு ரஜினிகாந்த் ஏற்பாடு செய்யப்பட்ட காமிராக்கள் முன்னால் பேசிய அரசியல் சொல்லாடல்கள் ஒவ்வொன்றும் தொடர்ச்சியற்ற பேச்சுகள் என்பதைத் தொகுத்துச் சொல்ல வேண்டியதில்லை. கோவிட் 19 -க்குப் பின் அவர் பேசிய பேச்சுகளைத் தொகுத்துப் பார்த்தாலே எவ்வளவு உளறல்கள் என்பது தெரியவரும்.
 
வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது; நேர்மையான அரசியல் மூலம் அதனை நிரப்பவேண்டும்; அதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் பலமான கட்சிகள் என்ற உண்மையை ஒத்துக்கொண்டார். இதனை மாற்ற மக்களிடம் புரட்சி வரவேண்டும். அப்படியொரு கிளர்ச்சியான மக்கள் புரட்சி வரும்போது நான் வருவேன் என்பதுபோலத் தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.

எனது உடல்நிலை குறித்துச் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவியுள்ளது. அது நான் சொன்னதில்லை. ஆனால் அந்தச் செய்தியில் சொல்லப்படும் தகவல்கள் - நோய்கள் பற்றியனவெல்லாம் உண்மைதான் என்று ஒத்துக்கொண்டு தனது அரசியல் விருப்பமின்மையைச் சொன்னார்.

திரும்பவும் மிக அண்மையில் மன்றப்பிரதிநிதிகளை அழைத்து உடல்நலப்பிரச்சினையை மட்டுமல்லாமல், தன்னால் ஒரு பெரும் அமைப்பை ஏற்படுத்திவிட முடியாது என்பதை ஒத்துக்கொண்டதோடு ‘ தலித், இசுலாமிய எதிர்ப்பு’ அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளோடு கூட்டணி வைப்பதில் இருக்கும் சிக்கல்களையும் உணர்த்தினார். ஏறத்தாழ அரசியலில் இறங்கப் போவதில்லை என்பதைச் சொல்லிவிட்டு ஒதுங்கினார். ஆனால் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பின்னர் கடந்த 3 ஆம் தேதி,

ஜனவரியில் கட்சி தொடக்கம். டிசம்பர் 31இல் தேதி அறிவிப்பு
மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்.
இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல.

எனது வெற்றி மக்களின் வெற்றி. நான் தோற்றாலும் அது மக்களின் தோல்விதான் என்று சொல்லிவிட்டு தமிழகத்தில் நேர்மையான , நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் சாதி சமயச் சார்பற்ற ஆன்மீக வழியிலான அரசியல் செய்து ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்.

இப்படிச் சொல்லும் ரஜினிகாந்தின் பேச்சுகள் தமிழக மக்களின் வெகுமக்கள் சார்ந்த பிரச்சினைகள் முன்வைத்ததில்லை. முன்வைத்த ஒன்றான தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், அரசதிகாரத்தின் பக்கம் நின்று போராடியவர்களுக்கு எதிரான மனநிலையைத்தான் அவர் வெளிப்படுத்தினார். இப்படி உளறுபவர் தான் மாற்று அரசியலை -எல்லாவற்றையும் புத்தாக்கம் செய்யும் அரசியலைத் தரப்போகிறார் எனச் செய்திகள் சொல்கின்றன. இந்தப் பேச்சுகள் எல்லாம் ஊடகங்களின் காமிராக்களுக்கான பேச்சுகள். திண்ணைப்பேச்சாகவும், தெருக்களின் வழியே நடந்து வாசலில் நின்று வாக்குக்கேட்கும் மனிதர்களைப் பார்த்து வாக்களிக்கும் தமிழ்நாட்டில் தனது திரைப்பிம்பங்களை அனுப்பி வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என நம்பும் இதெல்லாம் நடக்கக் கூடியன அல்ல. ஆனால் இவை வாக்களிக்கும் மக்களின் குறிப்பிட்ட சதவீதத்தினரை திசைமாற்றம் செய்யும் நோக்கம் கொண்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்