பின் நவீனத்துவம் -சில குறிப்புகள்
பின் நவீனத்துவம் என்பதை இலக்கியத்தின் ஒருபகுதியாகவோ, இலக்கிய இயக்கமாகவோ நினைக்கும் மனநிலைதான் இங்கே நிலவுகிறது. அதனைச் சொல்லாடல்களாக உச்சரித்தவர்கள் பெரும்பாலும் புனைவு எழுத்தாளர்களாகவும் அதன் எல்லைக்குள் நின்று பேசுபவர்களாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நான் அப்படி நினைத்ததில்லை. 1997 மார்ச்சில் ‘பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும்’ என்ற கருத்தரங்கைத் திட்டமிட்டபோதே அதனை ஒரு காலகட்டத்தின் மனநிலை என்ற புரிதலோடுதான் அணுகினேன். கட்டுரை வாசிக்க அழைத்தவர்களும் அந்தப் புரிதலோடுதான் கட்டுரைகள் எழுதினார்கள். அப்போது தொடங்கி, நமது காலம் நவீனத்துவத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்ற புரிதலோடு இலக்கியத்திற்கு வெளியே நிகழும் நிகழ்வுகளைக் குறித்துப் பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.
2024 மார்ச்,1
நவீனத்துவம் கடக்கும் தமிழ் இலக்கியம் அல்லது பின் நவீனத்துவக்குழப்பம்
நவீனத்துவம் கடந்த நிலை ஒன்றை ஐரோப்பிய வாழ்க்கையை முன்வைத்து அதன் சிந்தனாவாதிகள் அரைநூற்றாண்டுக்கு முன்னால் பேசத் தொடங்கினார்கள். எல்லா அடையாளங்களும் அழிக்கப்படுவதாக அந்தப் பேச்சுகள் முன்வைத்தன. தனி அடையாளங்கள் நீக்கப்பட்டுப்பொது அடையாளங்களுக்குள் காணாமல் போவது தவிர்க்க முடியாதது என்று நினைத்தார்கள். அமைப்பியல் கட்டமைப்புகளாகப் பேசப்பட்ட அடையாளங்கள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருந்த காலகட்டம்.
அந்தக் காலகட்ட த்தில் கீழைத்தேயங்கள் அடையாளங்களைத் தேடும் பயணத்தில் இருந்தன. காலனியத்திற்குப் பின்னான நகர்வுகளுள் முதன்மையானது அடையாளங்களைத் தேடுதல் தான். அதன் வெளிப்பாடுகளே பொதுப்புத்திக்கு எதிராகத் தீவிர மனநிலை எனவும், வணிக எழுத்துக்கு மாற்றாக இலக்கிய எழுத்து என்பதாகவும் நவீனக்கலைப் பார்வைகள் என்பதாகவும் உருவாக்கப்பட்ட சொல்லாடல்கள். இதனையே தமிழில் நவீனத்துவ எழுத்துகளும் எழுத்தாளர்களும் வெளிப்படுத்தினார்கள்.
இப்போது அப்படிப்பேசியதை கைவிட்டுவிட்டு எல்லாமும் இருக்கும்; ஒன்றோடொன்று விலகியும் கலந்தும் ஊடாடும்; பரவும் என்ற சொல்லாடல்களுக்குள் தமிழ் அறிவுலகம் சந்தித்துக் கடக்க முயல்கிறது. தனியர்களாக – தனித்துவம் கொண்டவர்களாகத் தங்களை முன்வைத்த நவீன எழுத்தாளர்கள் பொது நீரோட்டத்தில் கலந்து விடுவதில் இருந்த தயக்கங்களைக் கைவிட்டுவிட்டு நகர்கிறார்கள்.
சிறுகதையாடல்களும் பெருங்கதையாடல்களும் கலப்பதைக் காட்சிப்படுத்தும் வெளியாகவே இந்த நகர்வுகள் இருக்கின்றன. இலக்கியவாதிகளின் சினிமா நகர்வுகளும், பெரும்பத்திரிகைகளில் இடம் பிடிப்பதையும் முன்பு பேசிய அறங்களிலிருந்து – நம்பிக்கைகளிலிருந்து விலகிச் சமரசம் செய்கிறார்கள் எனக் குற்றம் சாட்டலாம்; ஆனால் ஆகப்போகும் விளைவுகள் குறித்து தீர்மானம் எதுவும் இல்லாதபோது நகர்வதே உத்தமம் என்றாகிறது. இது ஒருவித பரமபத விளையாட்டுதான். தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் தள்ளித்தள்ளிப் போகும்போது இன்னொரு இலக்கை – எதிர்த்திசைப்பயணமாகத் தோன்றினாலும் தேர்வு செய்யவே தோன்றும். ஆனால் அதையும் நியாயப்படுத்தும் வாதங்களை வைக்கும்போதுதான் அவர்களின் மீது கோபமும் எரிச்சலும் உண்டாகிறது.
எப்போதும்போலவே அறங்களைப் பேசிக்கொண்டு பின் தொடர்பவர்களை மடைமாற்றக்கூடாது என்று விமரிசனம் எழும். ஆனால் அத்தகைய விமரிசனத்தை வெளிப்படுத்தும் மேடைகள்/ பத்திரிகைகளிலும் இப்போது குறைந்துவிட்டன. ஏனென்றால் ஒவ்வொரு துறையிலும் இப்படி நடக்கிறதே.
தீவிர இலக்கியத்திலிருந்து திரைப்பட த்திற்குள் நகர்வது -சிற்றிதழ் எழுத்தாளர்கள் பெரும்பத்திரிகைகளில் பங்கேற்பது மட்டுமல்ல இன்னும் சில நகர்வுகளையும் காண்கிறேன். திராவிட அரசியல் கட்சிகள், இட துசாரிக் கட்சிகளிலிருந்தும் அவற்றின் கலை, இலக்கிய அமைப்புகளிலிருந்தும் வெளியேறித் தங்களின் தனி அடையாளத்தைப் பேணப்போவதாக வெளியேறியவர்கள் எல்லாம் இப்போது அந்தக் கட்சிகளின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த போட்டி போடுகிறார்கள்.
வாய்ப்புக் கிடைத்தால் பாரதிய ஜனதாவின் – ஆர் எஸ் எஸ் அமைப்பின் கலை இலக்கியங்களையும் பயன்படுத்தவே செய்கிறார்கள். அந்த அமைப்புகளும் விருதுகள் வழங்கி மரியாதை செய்கின்றன. ஆலோசனைக் குழுக்களில் இடம் தருகின்றன. ஊடும் பாவுமான பயணக்கோடுகள் உருவாவதும் அழிவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.தமிழ்நாட்டுக் கலை இலக்கியவாதிகளின் இந்த நகர்வுகளில் ஈழநாட்டுக்கோரிக்கைக்கான யுத்தமும் போராட்டங்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. ஈழப்போராட்டம் தமிழ்நாட்டு அறிவுஜீவிகளை – எழுத்தாளர்களைப் பொதுப்புத்தியாளர்களாகவே மாற்றிக்கட்டமைத்து விட்டது என்றே சொல்வேன்.
ஒரு காந்தியவாதியும், பெருந்தேசிய ஆதரவு பேசும் இடதுசாரி எழுத்தாளனும் கூட விடுதலைப்புலிகள் மீது விமரிசனம் செய்யமுடியாமல் தவித்ததைப் பார்த்திருக்கிறோம். அதே மனநிலையையே இப்போது உலகமயமான பொருளாதார நகர்வுகளும் நுகர்வியமும் உருவாக்கி வருகின்றன. நுகர்வியம் உருவாக்கித்தரும் சமூக ஊடகப்பரப்பிற்குள் ஒவ்வொருவரின் இருப்பும் அவர்களின் தன்னிலையை மறக்கச் செய்கின்றன.
கண்ணிமைக்கும் நேரத்தில் வரிசைகட்டும் காட்சிக்கோர்வைகளும் தன்படங்களும் இயக்கத்தைத் திசைதிருப்புகின்றன. அங்கீகாரங்களைத் தேடியலையும் மனிதர்களாகவே எல்லாரும் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். தப்புதல் யார்க்கும் எளிதன்று என்றாகிவிட்ட து. சிந்திப்பவர்களும் எழுத்தாளர்களும் அவர்களை அறியாமலேயே பகுதிநேர எழுத்தாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் இருக்க நேரிடுகிறது.
நூறு சதவீதத் தன்னிலை இருப்பு தொலைந்துவிட்ட து. விதம் விதமான நகர்வுகளைச் செய்து பார்க்கிறார்கள். எண்ணிக்கையில் அதிக பக்கங்களைக் கொண்ட நூல்கள் விற்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில் பாரதக் கதையினைப் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட தொடர் தொகுப்புகளாக வெளியிட்டு விற்றுக்காட்டுகிறது விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். மூத்த எழுத்தாளர்களின் பெருந்தொகைக் கவிதை நூல்களும் சிறுகதை நூல்களும் வந்து விற்கவே செய்கின்றன. புதுபுதுப்பதிப்பகங்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
யார் வாங்குகிறார்கள்? எப்படிப் படிக்கப்படுகிறது என்பதற்கான அடையாளங்கள் வெளிப்படுவதில்லை. சாகித்திய அகாதெமி விருதுக்காகப் போட்ட சண்டைகள் குறைந்து விட்டன. அவ்விருதுத் தொகைக்கும் அதிகமான தொகையைத் தரும் விருதுகள் இருபதுக்கும் மேல் இருக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இலக்கியச் சந்திப்புகளும் விருதுவிழாக்களும் நடந்துகொண்டிருப்பதாக சமூக ஊடகத் தகவல்கள் காட்டுகின்றன. அவரவருக்கான இடங்களை -விருதுகளை -நகர்வுகளை அவர்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். அவர்களை உள்ளடக்கிய அமைப்புகள், குழுக்கள் உருவாக்கித் தக்க வைக்கின்றன. இந்தக் குழப்பம் தான் பின் நவீனத்துவக்குழப்பம் அல்லது தெளிவு.
கறுப்புமில்லை-வெளுப்புமில்லை: வண்ணங்கள்
2022 அக்டோபர்
நயன்தாரா - விக்னேஷ் திருமணம் சமூக ஊடகங்களின் பெரும்போக்காக -ட்ரெண்டாக உருட்டப்பட்டன. இரண்டு நாளைக்கு முன் கமல்ஹாசன் நடித்த விக்ரம்- 2 என்ற சினிமாவின் உருவாக்கமும் அது உண்டாக்கிய உணர்வுகளும் உருட்டல்கள். அதற்கு முன் கலைஞர் பிறந்தநாள். எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குதல். இப்படியான உருட்டல்களால் சமூக ஊடகங்களின் இருப்பு தவிர்க்க முடியாதனவாக மாற்றப்படுகின்றன. மாற்றப்படும் நிகழ்வுகளைக் கவனித்தால் அவற்றிற்குப் பேருருத்தன்மைகள் இருப்பதைக் கவனிக்கலாம்.பேருருத்தன்மை(MACRO)களால் உருவாக்கப்படும் வெகுமக்கள் பண்பாடே (POPULAR) நம்காலத்தின் அரசியலாகவும் பண்பாடாகவும் வெகுமக்கள் பண்பாட்டை உருவாக்கும் கூறுகளுக்குள் சிற்றலகுகள் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், நிகழ்வுகள், பண்பாட்டு நடவடிக்கைகள் கவனம் பெறாமல் போய்விடும்.
பேரடையாளங்களை முன்னிறுத்துச் சிற்றடையாளங்களைக் காணாமல் ஆக்கும் இந்தப் போக்கு பின் நவீனத்துவ காலகட்டத்தின் அடையாளங்களில் ஒன்று. இந்தப் போக்கின் பருண்மையான அடையாளங்களாக நான்குவழிச் சாலைகளும் எட்டுவழிச்சாலைகளும் இருக்கின்றன. ஸ்மாட் சிட்டிகள் என அழைக்கப்படும் சீர்மலி நகரங்கள் இருக்கின்றன. எல்லாச் சிறுநகரங்களிலும் பட்டறைகளையும் சிறுகுறு தொழில்களை வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திய ஆரம்பக் கட்ட முதலாளியம், பெருமுதலாளியமாக மாறியதின் வெளிப்பாடுகள் இவை. பேரங்காடிகள், பெருநகரங்கள், பெருந்திருவிழாக்கள் என நகரும் போக்கோடு நாடுதழுவிய - பான் இண்டியன்(PAN INDIAN ) - சினிமாக்கள் எனப் பெருமுதலாளியம் இந்தியாவைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. இப்போதைய இந்தியா பின் நவீனத்துவ காலகட்டத்து நகர்வுகளுக்குள் அலைந்துகொண்டிருக்கிறது. பின் நவீனத்துவ காலகட்டத்தில் பேரடையாளங்களும் பேருருக்களும் மட்டுமே வலம் வரும் என்பதில்லை. சிற்றடையாளங்கள், சிறுகதையாடல்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை உருட்டிஉருட்டி விவாதிக்கும் மாற்றுச் சமூக ஊடகங்கள் தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
********
கொரோனா காலத்தில் தொலைக்காட்சிகளில் வாரக்கடைசி நாட்களில் தயாரிக்கப்பட்ட நீயா? நானா? , தமிழா! தமிழா!! போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் போய்விட்டன. அவை எதிர்வுகளால் கட்டியெழுப்பப்படும் நிகழ்ச்சிகள். இவைகளின் நேர்மறை அம்சமாக இருப்பன, எதிரணியின் கருத்துகளும் முன்வைக்கப்படும் வாய்ப்புகளை வழங்குகின்றன என்பதுதான். ஆனால் தீர்ப்பு சொல்லும் நடுவர்களும் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் எல்லாவற்றையும்- இருபக்க நியாயங்களையும் மறக்கடிப்பதைப்போல நீண்ட சொற்பொழிவொன்றை நிகழ்த்தி அவர்களது முடிவை – ஒற்றை முடிவை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள் என்பதும் நடைமுறை உண்மை.
சிறப்பு நிகழ்ச்சிகளின் இரட்டைநிலையை நிகழ்காலத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் விவாதங்களும் உள்வாங்கியுள்ளன. பெரும்பாலும் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மேல் உருவாக்கப்படும் அந்நிகழ்ச்சிகள் இவர்கள் X அவர்கள் என்ற மனநிலையில் விவாதங்கள் நடக்கின்றன; நடத்தப்படுகின்றன. அந்த விவாதங்கள் பெரும்பாலும் மாநில அரசு X மைய அரசு அல்லது தேசிய அரசியல் X மாநில அரசியல் அல்லது ஆளுங்கட்சி X எதிர்க்கட்சி அல்லது வலதுசாரிகள் X இடதுசாரிகள் என்பதான எதிர்வுகளில் அமைகின்றன. அத்தகைய விவாதங்கள் நடக்கும்விதமாகவே பேசுவதற்கான தலைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதிக்கத்தக்க விதமாகவே பங்கேற்பாளர்களும் அழைக்கப்படுகின்றனர்.
“வெட்டு ஒன்று; துண்டு ரெண்டு” – இப்படிப் பேசுபவர்களைப் பெரும்பாலோருக்குப் பிடித்துப்போகிறது. இந்தச் சொற்றொடரைக் கிராமத்துப் பஞ்சாயத்துகளில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும் . பஞ்சாயத்துகளில் தீர்ப்புச் சொல்லும் நாட்டாண்மைகள் தங்களை – தங்களது தீர்ப்பை – முடிவை இப்படியான ஒன்றாகக் காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள். அப்படிச் சொல்லும் தீர்ப்புகளைப் பஞ்சாயத்தில் உட்கார்ந்திருக்கும் பலரும் ஏற்றுக் கொண்டு மறுப்பு சொல்லாமல் வீடு திரும்புவதையும் பார்த்திருக்கலாம். கணவன் – மனைவி உறவுச்சிக்கல், தந்தை -மகன் குடும்பச்சிக்கல், அண்ணன் – தம்பி சொத்துத் தகராறு, பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்புத் தகராறு, அடுத்த தெருக்காரருடன் கோயில் தகராறு போன்றவற்றில் தீர்ப்பு சொல்பவர்கள் கறாரான ஒரு முடிவை – வெட்டு ஒன்னு; துண்டு ரெண்டு என்பதுபோலச் சொல்லிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். வழக்கென்று வந்துவிட்டால் வாய்தா வாங்கி இழுத்தடிக்கும் வேலையெல்லாம் நீதிமன்றங்களின் – வழக்குரைஞர்களின் வேலை. கிராமத்து பஞ்சாயத்து என்றால் ‘கையிலெ காசு; வாயிலெ தோசை’ என்பதுபோல முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கிராமப் பஞ்சாயத்து நாட்டாமைகளைப் போலவே நகரத்தெருக்களிலும் அரங்குகளிலும் திரளான மக்கள் முன்னால் சில நிகழ்வுகள் நடப்பதுண்டு. அங்கும் நிகழ்ச்சிகள் முடியும்போது தெள்ளத் தெளிவான முடிவு இதுதான் எனச்சொல்லி மக்கள் அனுப்பப்படுவார்கள். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரியா? தவறா? மக்கள் வாழ்வதற்கேற்ற இடங்கள் நகரங்களா? கிராமங்களா? போன்ற எதிரிணைகள் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படும் வழக்காடு மன்றங்களும் பட்டி மன்றங்களும் முன்வைக்கப்படும் முடிவுகளும் கிராமத்து நாட்டாண்மைகளின் தீர்ப்புகளையே நினைவூட்டவல்லன. இந்தப் பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் இப்போது நமது தொலைக்காட்சி நிலையங்களின் சிறப்புநாள் நிகழ்ச்சிகளாக மாறிவிட்டன. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, விசயதசமி என முதன்மையான பண்டிகைநாட்களின் முதன்மை நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.
அண்மைக்காலங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் இருக்கும் சமூக ஊடகங்களுக்கும் இந்தக் கட்டமைப்பு நீண்டு வருகின்றது. அனைவரும் பங்கேற்கும் வாய்ப்புகொண்ட சமூக ஊடகங்களான முகநூல், சிட்டுரை போன்றவற்றில்கூட இதுபோன்ற இரட்டைநிலைப் பதிவுகளே அதிகம் விரும்பப்படுகின்றன. அதிகமான விருப்பங்கள் பெறவிரும்பும் நோக்கத்தில் அன்றாட நிகழ்வுகளில் சிலவற்றைத் தேர்வுசெய்து அன்றைய பெரும்போக்காக (Trend) பெரும்பாலோர் ஏற்கும் விதமாகவே பலரும் பதிவுகள் எழுதுகின்றனர். தங்களின் பதிவுகளின் கீழ் வளரும் விருப்பக்குறிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்காக எழுதும் மனநிலையும் ஒருவிதத்தில் நாட்டாண்மையின் தீர்ப்பு மனநிலைதான்.
கிராமத்து நாட்டாண்மையின் தீர்ப்பு தொடங்கி சமூக ஊடகங்களின் பெரும்போக்குப் பதிவுகள் வரை வெளிப்படும் இரட்டை எதிர்மனநிலைகள் (Bi-nary oppositions) பெரும்பாலும் எல்லாவற்றையும் கறுப்பு – வெள்ளையாகப் பார்க்கும் தன்மைகொண்டன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிகழ்வு அல்லது ஒரு நபர் அல்லது ஒரு செய்தி போன்றவற்றை இரட்டை எதிர்மனநிலைகளில் நின்று பார்ப்பது எப்போதும் நல்ல முடிவுகளைத் தராது. அதுவும் மக்களாட்சி நடக்கும் இந்தக் காலத்தில் ஒவ்வொன்றையும் இதுவா? அதுவா? எனப் பார்க்கும் மனநிலையினால் தான் நமது மாநிலத்தில் / நாட்டில் ஆட்சி மாற்றங்கள் நடக்காமல் போகின்றன. அப்படி நடந்தாலும் ஏற்கெனவே இருக்கும் இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் மனப்போக்கில் வாக்களிக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும்; மாற்றப்படவேண்டும்.
நல்லது அல்லது கெட்டது எனப்பார்க்கும் பார்வையை மனித உயிர்களுக்கு உருவாக்குவதில் சமயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் சமயங்களின் இன்னொரு பரிமாணமான ஆன்மீக நிலைப்பாடுகளும் ஞானமரபுகளும் இப்படி இரட்டை நிலையை முன்வைப்பதில்லை. அவை மனித மனங்களின் அலைவுகளையும் படிநிலைகளையும் ஏற்கின்றன. கலை இலக்கியங்களின் இயங்குநிலையும் இதனைச் செய்வனவே. இதே நிலையைத்தான் மக்களாட்சி அமைப்பின் சட்டங்களும் மரபுகளும் உருவாக்குகின்றன. ஆனால் வெகுமக்கள் ஊடகங்கள் அவ்வாறு முன்வைப்பதில்லை. ஆனால் ஞானமரபை முன்னெடுக்க வேண்டிய சமயவாதிகளும், இருப்பின்மீதான பல அடுக்குகளையும் சாயல்களையும் எழுதிக் காட்ட வேண்டிய எழுத்தாளர்களும், மனிதக்கூட்டத்தின் நலன்களை முன்னெடுக்க வேண்டிய அரசியல்வாதிகளும் இரட்டையின் ஒன்று என்றே அலைகின்றனர். ஒத்தையா? ரெட்டையா? இரண்டில் ஒன்று; போட்டுப்பாரு இதுதான் நடப்பாக இருக்கின்றன.
ஏற்கத்தக்கனXநிராகரிக்கவேண்டியன என்ற எதிர்நிலையில் எழுதப்படும் சட்டங்களை மட்டுமே பின்பற்றாமல் மரபுகளையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களாட்சி அமைப்பில் செயல்படும் மிக உயர்ந்த அமைப்புகளான பாராளுமன்ற, சட்டமன்ற சபைகளும், நீதிமன்றங்களும் எழுதப்படாத மரபுகளையும் எழுதப்பட்ட சட்டங்களையும் பின்பற்றுவது விரும்பப்படுகின்றன.
இந்தப் புரிதலின் பின்னணியில் மனித உயிர்கள் இந்த உலகத்தின் இயற்கை வண்ணங்களை ரசிக்கும் மனோபாவமும் ஏற்கும் மனநிலையில் இருக்கின்றன. கறுப்பு – வெளுப்பு என்பதாக இந்த உலகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கருமை, வெண்மை என்பன இயற்கை வண்ணங்களே அல்ல. இயற்கையின் அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும் வானவில்லைப் பார்த்திருப்போம். நிறப்பிரிகையை -நிறங்களின் சேர்க்கையான அனைத்து வண்ணங்களையும் தனித்தனியாக க்காட்டாமல் ஒன்றின்மேல் ஒன்றாகப் பிணைந்து வானத்தில் தோன்றி வர்ணஜாலம் காட்டும் வானவில்லைப் போல ஒவ்வொன்றையும் ஏற்கும் மனநிலையை மனிதர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
பின் நவீனத்துவ நகர்வுகள்
2022,செப்டம்பர்
நவீனத்துவக்கருத்தியல் கடவுளின் இடத்தை அறிவுக்குத் தருவதின் வெளிப்பாடு. தமிழ் நவீன இலக்கியம் அதிலிருந்து விலகி மொழிப் பயன்பாட்டை மட்டும் முதன்மையாக்கிக் கொண்டு புதுக்கவிதை, புதுவகைப் புனைகதைகள், புதுவகை நாடகங்கள் என நகர்ந்து நிலை நிறுத்திக்கொண்டது.
நவீனக் கலை இலக்கியத்தின் அடையாளங்களாகக் கருதப்பெற்ற ஆளுமைகளின் வாரிசுகள், தந்தையர்களின் நிலைபாட்டைக் கூடப் பின்பற்ற விரும்பாமல் திரும்பவும் சமய நம்பிக்கை, சனாதன ஏற்பு எனத் திரும்பியிருக்கிறார்கள். சில எழுத்தாளர்களே அப்படித் திரும்பியிருப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொன்றுக்கும் பெயர் சொல்லிக் காட்ட முடியும்.
கடந்த தலைமுறையின் முன்னோக்கிய கருத்தியல் நகர்வைக் கைவிட்டுவிட்டுப் பின்னோக்கித் திரும்பியதின் பின்னணியில் பா.ஜ.க.வின் எழுச்சியும் அது ஆட்சியதிகாரத்தில் வலுவான சக்தியாக மாறியதும் காரணம் என்பதை மறுக்க நினைக்கலாம். ஆனால் அப்படியான தேவை இப்போது இல்லை. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் எழுதி மறைபொருளாகப் பேசிய பலவற்றை நேரடியாகக் கவிதைகளிலும் புனைகதைகளிலும் பேசுகிறார்கள். அதன் வழியாகத் தங்களின் இருப்பும் நலனும் காக்கப்படும் என்ற நம்பிக்கை மிகுந்திருப்பதின் வெளிப்பாடு அது.
கலை இலக்கியத்துறையைக் கையில் வைத்திருப்பவர்களின் மறுதிரும்பல், அரசியல் தளத்தில் வேறுவிதமாக நடக்கிறது. தங்களின் தந்தையர்கள் நம்பிய முற்போக்கான அரசியல் எடுபடாது எனத் தோன்றும் நிலையில் ’ எவ்வகையான அரசியலுக்கு எதிர்காலம்’ என்பதைக் கணித்துக் கொண்டு அடுத்த தலைமுறை நகரத்தொடங்குகிறது. திருச்சி சிவாவின் வாரிசு , கருத்தியல் அரசியலைக் கைவிட்டுவிட்டுச் சாத்தியமான அரசியலை நோக்கி நகர்கிறார். கருத்தியல் நம்பிக்கை இல்லாமல், அதிகாரம் மட்டுமே இலக்கு என நினைப்பவர்களின் நகர்வு இப்படித்தான் இருக்கும். அவரது நகர்வு அதிர்ச்சி அடையவேண்டிய ஒன்றல்ல. ஏற்கெனவே பலரும் இப்படி நகர்ந்து கடந்துவிட்டார்கள்.
தேனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அ இ அதிமுகவின் உறுப்பினர் என்றாலும் அவரது அரசியல் செயல்பாடுகள் அதன் அடிப்படை அரசியல் நோக்கங்களுக்கு மாறானது. மரபான காதல், கல்யாணம் போன்றவற்றில் பெரிய வெடிப்புகளை முன்வைத்த நடிகை குஷ்புவின் அரசியல் நகர்வுகள் காட்டியனவற்றை எப்படி மதிப்பிடுவது? காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பர்த்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்திக் சிதம்பரத்தின் பல கூற்றுகள் சலசலப்பை உண்டாக்கும்போது அதன் வெளிப்பாட்டை எப்படிக் கடந்து கொண்டிருக்கிறது நமது அரசியல் அறிவு ? தலித் அரசியல் பேசிய - அடையாள அரசியல் பேசிய- சிறுசிறு அமைப்புகள் பலவும் அப்படி நகர்ந்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் கோயில் திருவிழாக்களில் பங்கேற்கும் முடிவைத் தீர்மானமாக்குகின்றன.
கருத்தியல் அரசியல் நிரந்தரத்தில் நம்பிக்கை கொண்டதின் வெளிப்பாடு. சாத்தியமான அரசியல் தற்காலிகத்தின் வெளிப்பாடு. தற்காலிகத்தின் மீதான விருப்பம் பின் - நவீனத்துவகாலகட்டத்தின் அடையாளம்
******
ஒரு கவிதை
----------------
பெரும் பொய்களின் சூறாவளிக்கு நடுவே
ஓர் எளிய உண்மையை
அணைந்திடாமல் எப்படி ஏந்திச் செல்வது?
குழம்பி நிற்கும் ஒரு சிவப்பு எறும்பைப்பார்த்தேன்
அது நசுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், நகர்ந்தது.
தன் வேதியீரக் கோடுகளைச் சிந்தியபடி
மெல்லமெல்ல ஊர்ந்தது.
பின்னொரு எறும்பு
அக்கோட்டை அடையாளம் கண்டு கொதித்தது-அது
பார்ப்பதற்கு உங்களைப் போலவோ
என்னைப் போலவோ இருந்தது
‘யாவும் பொது?’
என அது முஷ்டியை உயர்த்தியபோது
உலகம் சிரித்தது.
ஆனாலும்
கவிதை நம்புகிறது.
சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்
அது
அறத்தின் மாபெரும் செங்கோல்.
----------------- வெயில்/ கவிதை நம்புகிறது
தேர்வுகளும் தேர்தல்களும் - முடிவுகளற்ற விளையாட்டு.
பிப்ரவரி 13, 2022
முரணின் பின்னணியைப் பற்றிய விவாதம் பின் -நவீனத்துவ விமரிசனத்தில் முக்கியமானது.நவீனத்துவவாதிகள் கடந்த காலத்தை அழித்து விட முயல்கின்றனர். ஆனால் பின் -நவீனத்துவமோ கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதுகிறது.
ஒருவருக்கு அவரது வேலை சார்ந்து பதவி உயர்வு அளிக்கும் போது அவரது பணிகளைத் துறைசார்ந்த மதிப்பீட்டுக் குழுக்கள் மதிப்பீடு செய்கின்றன. அக்குழுக்களின் பரிந்துரைக்குப் பின் அவருடைய பதவி உயர்வு உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக நான் பணியாற்றிய கல்வித்துறையில் இந்த மதிப்பீட்டிற்கு விதி விலக்குகளே கிடையாது. ஒவ்வொரு பதவி உயர்வும் மதிப்பீட்டறிக்கைக்குப் பின்னரே கிடைக்கின்றன. அம்மதிப்பீட்டு நடைமுறை சரியாக நடக்கிறதா.? என்று கேட்டால் அதற்கான பதில் உறுதியாகச் சொல்ல முடியாது.
மாணவர்களுக்குப் பாடம் நடத்தித் தேர்ச்சி அடையச் செய்யும் ஆசிரியர்களுக்கு எதற்குத் தேர்வும் மதிப்பீடும் என முதலில் கேட்கப்பட்டதுண்டு. “மாதா பிதா குரு தெய்வம்” என்ற மதிப்பீடுகள் இன்னும் இருப்பதாக நம்பியதின் விளைவாகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பணியாக ஆசிரியப் பணி கருதப்பட்ட காலம் இப்போது இல்லை. கல்விப் பணியைச் சேவையாகக் கருதிச் செய்து வந்த நிலைமைகள் மாறி விட்டன. ஆசிரியப் பணியும் இன்று சம்பளத்திற்காகச் செய்யப்படும் வேலை அவ்வளவு தான். எனவே ஆசிரியத் தொழிலுக்கெனப் புனிதங்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்ள பெரும்பாலும் யாரும் முன் வருவதில்லை. வேலை நேரம், நேரத்திற்கேற்ற சம்பளம், பணிப்பாதுகாப்பு, வாரிசுக்கு உரிமை என எல்லாத் துறைகளிலும் இருக்கும் பணி சார்ந்த உரிமைகளை ஆசிரியர்களது சங்கங்களும் கோரிப் பெற்றபின் ஆசிரியப் பணியின் புனிதங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் எங்கே இருக்கிறது. அத்துடன் மதிப்பீட்டுக்குப் பின் பதவி உயர்வு சாத்தியம் என்ற நிலையில் மதிப்பீட்டு அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருத்தல் தானே நடக்கும். தங்களது பணிகளை மதிப்பீடு செய்வதை ஆசிரியர்களும் அவர்களுடைய சங்கங்களும் இப்படித்தான் ஒத்துக் கொண்டார்கள்.
ஆசிரியர்களை அவர்களுடைய துறை சார்ந்த மதிப்பீடுகளோடு வேறு விதமான மதிப்பீட்டு முறை ஒன்றையும் உயர்கல்விக்குப் பொறுப்பான நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆசிரியர்களை மாணவர்களும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை உயர்கல்வித் துறைக்குப் பொருப்புடைய பல்கலைக்கழக மானியக்குழு ஒவ்வொரு சம்பள விகித அறிமுகத்தின் போதும் வலியுறுத்தி வருகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்கும் பல்கலைக்கழக மானியக்குழு மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களை மதிப்பிடும் வழிமுறைகளைக் கூட உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் அவ்வழி முறைகள் நடைமுறைப் படுத்தப்படுவதுதான் இல்லை.
பொதுவாக ஒவ்வொருவரையும் மதிப்பீடு செய்தல் என்பது எதற்காக? இந்தக் கேள்வியைக் கேட்டால், மதிப்பீடு செய்தலின் நோக்கம் முன்னேற்றுவது என ஒரு பதில் உடனடியாகக் கிடைக்கலாம். தனது உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொண்ட எந்த ஒரு நிறுவனமும் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு செல்லவே விரும்புகிறது. அப்படியான விருப்பத்தினைச் செய்யும் போது எந்த அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய கேள்வியின் விளைவே மதிப்பீட்டின் தோற்றம். கல்விச்சாலைகளில் ஒவ்வோர் ஆண்டும் மாணாக்கரை அடுத்த வகுப்பிற்கு உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட போது உண்டாக்கப் பட்ட முறை தான் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கித் தேர்ச்சி அளிக்கும் முறை. இந்த நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் நாம் மதிப்பீட்டின் பலன் முன்னேற்றம் என்பதாகவே புரிந்து வைத்திருக்கிறோம்.
உண்மையில் மதிப்பீட்டின் நோக்கம் அது மட்டும் அல்ல.எல்லாச் செயல்பாடுகளுக்கும் பல விதமான நோக்கங்களும் காரணங்களும் இருப்பது போல மதிப்பீட்டிற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில காரணங்கள் நேர்மறையானவை; பல எதிர்மறையானவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முன்னேற்றம் என்பதற்குப் பதிலாகக் கண்காணித்தலே மதிப்பீட்டின் நோக்கம் என நவீனச் சிந்தனையான அமைப்பியல் சொல்கிறது. ஒவ்வொரு அமைப்பும் தனது துணை அமைப்பு களையும், அதன் உறுப்பினர்களையும் கண்காணிக்க வைத்திருக்கும் நடைமுறைத் தந்திரம் தான் மதிப்பிடல் என்று சொல்கிறார்கள் அமைப்பியல் வாதிகள். கல்விச்சாலைகளைக் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், மனநோய் மருத்துவமனைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பேசும் மிசைல் ஃபூக்கோ போன்ற பின்னை அமைப்பியலாளர்கள், தேர்வுகளைக் கண்காணிப்பின் வடிவங்களாகவே வருணிக்கின்றனர். முன்பெல்லாம் ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்திய நிலையை மாற்றிக் கொண்டு கல்வி நிலையங்கள் ஓராண்டில் பல தடவை தேர்வுகளை நடத்துவது என்பது கண்காணிப்பின் இறுக்கத்தை அதிகப் படுத்தும் நோக்கத்தில் தான் என்கிறார்கள்.
நமது குழந்தைகளையும் பிள்ளைகளையும் இளையோர்களையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவது அறிவையும் சிந்தனையையும் சுதந்திரமாகத் தேடிக் கொள்ளவா? நடைமுறைச் சமூகத்திற்கேற்றபடி தகவமைக்கவா? என்ற கேள்விகளுக்கு அமைப்பியலாளர்கள் தகவமைக்கும் நோக்கம் தான் எனப் பதில் அளிக்கிறார்கள். மழலையர் பள்ளி தொடங்கிப் பல்கலைக்கழகக் கல்வி வரை விதம்விதமான தேர்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு என்ற நிலையை மாற்றி அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, மாதத்தேர்வு என நகர்ந்து வாரத்தேர்வுகள், தினசரித் தேர்வுகள் என்பது வரை வந்து விட்டன .
தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் நமது குழந்தைகள் எனக் கருதும் பெற்றோர்கள், குடும்ப எல்லைக்குள் அதைச் செய்யும் வழி தெரியாததால், அந்தப் பொறுப்பைக் கல்வி நிறுவனங்களுக்குக் கையளித்து விடுகிறார்கள். அதிகமான தேர்வுகளை நடத்தும் பள்ளிகள், அதிகமாகக் கண்காணிக்கின்றன என்பதால் , அதிகமானக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு நிம்மதியாகத் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அடுத்த வகுப்பிற்கு அனுப்புவது என்ற நடைமுறை, கல்விச் சாலைகளில் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நேரடியாக இல்லையென்றாலும் பொது வெளியில் பல்வேறு விதமான மதிப்பீட்டு முறைகள் மறைமுகமாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பேருந்து நிறுத்தத்தில் நின்று எதிர் பால் நபர்களுக்கு மதிப்பெண் வழங்கும் யுவதியும் இளைஞனும் தேர்வு செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டவர்கள். திரை அரங்கிற்கு வரும் திரைப்படத்திற்கு பத்திரிகை வழங்கும் மதிப்பெண் பார்வையாளனுக்கு உதவும் நோக்கம் கொண்ட ஒன்று. திரைப்படத் துறை என்பதாக மட்டும் அல்லாமல், நமது ஊடகங்கள் தாங்கள் வழங்கும் மதிப்பீடுகள் என்னும் மதிப்பெண்கள் மூலம் அனைத்துத் தரப்பினரையும் கண்காணிக்கும் அதிகாரம் இருப்பதாகக் கருதிக் கொள்கின்றன. இந்தியாவில் ஒரு பத்திரிகை ஒவ்வோராண்டும் நமது மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்களை வழங்கித் தரப் பட்டியலும் வழங்குவதை பருண்மையான வெளிப்பாடாகச் சொல்லலாம். மாநிலத்தின் முதல் அமைச்சர் தனது அமைச்சரவைச் சகாக்களுக்கு அளிக்கும் மதிப்பெண்கள் ஒற்றை நோக்கம் கொண்டவை அல்ல. பாராட்டுதல், கண்காணித்தல், மிரட்டுதல் எனப் பல நோக்கங்கள் கொண்டவை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது இல்லை.
ஆசிரியர்கள் கல்விச் சாலைகளில் தங்கள் மாணாக்கர்களை மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சி அளித்தல், கண்காணித்தல் என இருவிதமாகச் செயல் படுவது போல மாணவர்கள் அளிக்கும் மதிப்பெண் மூலமே ஆசிரியர்களின் பணி உயர்வும், பாதுகாப்பும் இருக்கும் என்றால் என்ன நடக்கும்? கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளும் மாணவர்கள் வகுப்பறையில் அமைதியாக அமர்ந்திருக்கலாம். தேர்ச்சிக்குத் தேவையான மதிப்பெண்ணை இந்த மாணவன் வழங்க மாட்டான் எனத் தெரிந்தால், அவனை வகுப்பறையை விட்டு ஆசிரியர் வெளியேற்றவும் செய்யலாம்.
இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளூர் மன்றங்கள் எனப் பலவிதமான தேர்தல் நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றில் பொதுத்தேர்தல்களும் இடைத் தேர்தல்களும் நடைபெறுவதுண்டு. ஒவ்வொரு அமைப்புக்கும் ஐந்தாண்டுக்கு முறை நமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை மதிப்பீடு செய்யும் முறைதானா? அதன் வழியே தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் கண்காணிப்புச் செய்கின்றனரா? மதிப்பிடுதலும் கண்காணிப்பதும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது என்றால் முன்னேற்றம் அளிக்கும் அதிகாரமும் அவர்கள் கையில் தானே இருக்க வேண்டும். வாக்காளர்களின் ஒப்புதலுடன் பணியாற்றும் பொறுப்பை ஏற்கும் பிரதிநிதிகள், வாக்காளர்களை முன்னேற்றும் திட்டங்களைத் தீட்டும் அதிகாரம் கொண்டவர்களாக மாறுவது எப்படி? அளிக்கும் வாக்கு அங்கீகாரமா? அதிகாரத்தைக் கைமாற்றும் ஒப்புதலா? அந்த ஒப்புதலை ஐந்தாண்டுக் காலம் என வரையறை செய்ததில் தான் ஜனநாயகத்தின் உயிர் ஒளிந்து கொண்டு இருக்கிறது எனச் சொல்லலாமா? இப்படிப் பல கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டே போகலாம்.
பொதுவாக ஆளுங்கட்சிகள் தாங்கள் செய்த பணிகளுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கித் திரும்பவும் பணியாற்றிட வாய்ப்பளியுங்கள் எனக் கேட்பதன் மூலம் அவை எழுதிய தேர்வுகளுக்கான மதிப்பெண் களைக் கோருகின்றன என்றே சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளோ தாங்களும் தேர்வு எழுதத் தயாராக இருப்பதாகவும் அதற்கொரு வாய்ப்பைக் கொடுங்கள் எனக் கேட்கின்றன. அளிப்பதும் அளிக்காததும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் யாராவது ஒருவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கத்தான் வேண்டும் என்ற கட்டாயம் தான் இந்தத் தேர்தல் என்னும் மதிப்பீட்டில் இருக்கும் பெரிய சிக்கல் என்று தோன்றுகிறது.
நெருக்கடி மிகுந்த தேர்தல்களில் ஓட்டளிக்கும் நாள் அதிரடிக் குழப்பத்தை உண்டாக்கி விடுகிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்குள் தேர்தல் முடிவுகள் வெளி வந்து விடுகின்றன. வெளியாகும் தேர்தல் முடிவுகள் பலநேரங்களில் குழப்பமாகவே இருந்தாலும் பின் நவீனத்துவ மனநிலைப்படிக் குழப்பத்திலிருந்து தெளிவும் கிடைத்து விடுவதும் சாத்தியமாக இருக்கிறது.
இப்படி எழுதும் நான் ரொம்பவும் குழப்பத்தில் இருப்பதாகப் பலருக்கும் தோன்றலாம். ஆனால் வெற்றி அதன் தொடர்ச்சியான அதிகாரத்தைக் கைப்பற்றுதல், அதிகாரத்தில் கிடைக்கும் பங்கிற்காக முன் வைத்த எல்லா நெறிகளையும், கொள்கைகளையும், நோக்கங்களையும் உடனடியாகக் கைவிடத் தயாராகும் அரசியல் வாதிகளை வெற்றிக்குப் பின்னால் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு முன்னால் அரசியல்வாதிகள் செய்த வினைகள் மறந்துபோகும். ஒருவர் இன்னொருவர் மீது வீசிய செருப்புகளுக்குப் பின்னால் என்ன நோக்கம் இருந்தது என்ற கேள்வியை ஒருவரும் கேட்பதில்லை. அதனால் வெற்றிக்குப் பின்னால் கையை வெட்டலாம்; நாக்கை அறுக்கலாம்; ரோலரை ஏற்றிக் கொள்ளலாம் என்ற ஆவேசமான/ வெறுப்பை உமிழும் நெருப்புப் பேச்சுக்களும் அர்த்தம் இழந்து வெற்று வார்த்தைகளாக ஆகி விடக் கூடும்.
எல்லாவகையான பொதுத்தேர்தல்களும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசமைப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கான தேர்தல்கள் அல்ல. அதே நேரத்தில் அதிகாரத்தில் பங்கை உறுதி செய்யும் தேர்தல்கள் என்பதும் உண்மை. கட்சிகள் பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமோ அதைவிடக் கூடுதல் முக்கியம் அக்கட்சிகள் பெறும் வாக்கு சதவீதமும். இந்தத் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் அடுத்துவரும் வரப்போகும் தேர்தல்களின் அதிகாரப்போட்டிக்கு அச்சாரம் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஒருவரும் வெற்றி பெறப்போவதில்லை என்று தெரிந்த பிறகும் பெறப்போகும் வாக்கு சதவீதத்திற்காகத் தனித்து நிற்கும் கட்சிகளின் கவனம் எல்லாம் எத்தனை சதவீதம் என்பதில் இருக்கப்போகிறது. பா.ம.க., தே. மு .தி.க, அமமுக, மக்கள் நீதிமய்யம் போன்றன எப்போதும் இந்த நோக்கத்தோடுதான் தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டியில் தேசியக் கட்சியான பா.ஜ.க. ஆர்வத்தோடு இறங்கியிருக்கிறது. அது பெறப்போகும் வாக்கு சதவீதம் அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் அதன் கூட்டணிக்குள் அதன் இடத்தை உறுதி செய்யும் நோக்கம் கொண்ட து. அந்தக் கூட்டணித் தலைமையைக் கைப்பற்றும் ஆசை கொண்டது என்றும் சொல்லலாம்.
தேர்வுக்குத் தயாராகும் வேட்பாளர்கள் வெற்றிக்குப் பின்னால் மதிப்பீட்டாளர்களாக மாறுவதை நவீனத்துவம் தெளிவு என வரையறை செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் பின் நவீனத்துவம் குழப்பம் என்று வரையறை செய்து தெளிவுக்கான போட்டிக்களனைக் குறித்துப் புதிய சொல்லாடல்களை உருவாக்கும். ஒருவகையில் முடிவுகளற்ற விளையாட்டை விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
தற்காலிக விளையாட்டுகள்
‘தரமான பொருட்கள்; நுகர்வோரைக் கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் ‘எனப் போட்டி வியாபாரம் தனது இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படும் காலத்தில் இந்திய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரத்தில் போட்டிகளை அனுமதித்தால், நுகர்வோருக்கு நன்மை கிடைக்கும் என்பது தாராளமயப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. இந்த அடிப்படை விதி நடைமுறையிலுள்ள சந்தையில் சரியாகப் பொருந்தி வருகிறதா..? என்று கேட்டால் ஆதரவான பதிலும் சொல்ல முடியாது ; எதிரான பதிலையும் சொல்லி விட முடியாது.
எந்தப் பதிலைச் சொன்னாலும் புள்ளி விவரங்கள் வேண்டும். ஒரு வேளை பொருளாதாரத் துறை ஆய்வாளரோ, புள்ளியியல் துறை அறிஞரோ, அதற்கான பதிலைத் தர முடியும். புள்ளி விவரங்களைத் திரட்டும் வழிமுறைகளும், கைவசம் உள்ள புள்ளிவிவரங்களை, கைவசம் உள்ள முடிவுகளுக்கேற்ப விளக்கும் சாமர்த்தியங்களும் நிபுணத்துவமும் அவர்களுக்குத் தான் உண்டு.
நிபுணர்களின் சாமர்த்தியங்கள் எல்லா நேரத்திலும், எல்லா தளங்களிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.திரட்டப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு நுகர்வோருக்கு இத்தனை சதவீதம் லாபம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ; இதுவரை மானிய விலையில் உணவுப்பொருட்களைப் பெற்று வந்த அடித்தட்டுப் பொருளாதாரத்தைச் சேர்ந்த பிரிவினரில் இத்தனை சதவீதம் பேர் தாராளமயச் சந்தையில் பொருட்களை வாங்கும் சக்தியுடையவர்களாக மாறியிருக்கிறார்கள் என்ற கணக்கைச் சொல்வதில்லை. அதே போல் தரமான பொருட்கள் மட்டுமே சந்தையில் உள்ளன; மற்றவை உற்பத்தியை நிறுத்திக் கொண்டு போட்டிச் சந்தையிலிருந்து விலகிக் கொண்டன என்பதையெல்லாம் உறுதியாகச் சொல்லும் வல்லுநர்களும் இல்லை.
ஊடக வெளியில் அலையும் காட்சித் தொகுப்புக்களையும் அதன் தொடர்ச்சியான கருத்துருவாக்க விளையாட்டுக்களையும் பற்றிப் பேசுபவர்களுக்குப் புள்ளிவிவரங்கள் அவ்வளவாக உதவும் எனச் சொல்ல முடியாது. இந்திய வாடிக்கையாளர்களை மனிதர்கள் என்ற நிலையில் இருந்து வேறொன்றாக மாற்றிக் காட்டும் விளம்பரங்கள் உண்டாக்கும் பாவனைகள் விதம்விதமானவை. குறிப்பாகக் குளிர் பானங்களின் விளம்பரங்களும் , வாகனங்களின் விளம்பரங்களும், வீடு கட்டும் பொருட்களின் விளம்பரங்களும் மனிதர்களைப் பிம்பங்களாக மாற்றிக் கனவுலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. நடப்பு வாழ்க்கையிலிருக்கும் வெளிகளைக் கடந்து பயணிக்கும் அனுபவம் கிடைப்பதாகக் காட்டும் இத்தகைய விளம்பரங்கள் ’இயல்பிலிருந்து மாற்றம்‘ என்பதின் மேல் மனிதர்களுக்குள்ள ஈர்ப்பை வளைத்துப் போடுகின்றன.
குளிர்பான விளம்பரங்களில் ஒன்றில் நடிகை பறக்கும் பொம்மைப் பெண்ணாக மாறி வீடு , சாலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் என எல்லாவற்றையும் மறந்து இளைஞனொருவனுடன் காடு , மலை, கடல் எனப் பயணம் செய்துவிட்டுத் திரும்பவும் பழைய நிலைக்கு வருகின்றாள். நான்கு சக்கர வாகனம் ஒன்றின் விளம்பரத்தில் தாத்தாவும் பாட்டியும் தங்கள் வயதை மறந்து இளம் பருவத்துக் காதல் நினைவுக்குள் பயணம் செய்வதாகக் காட்டப்படுகின்றனர். மற்றொரு விளம்பரத்தில் இளம்பெண்கள் இரு சக்கர வாகனப் பயணத்தை கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு பறக்கும் அச்சமற்ற பயணமாக உணர்கின்றனர். வீட்டுச்சுவர்களின் வண்ணங்கள் கனவுக்காட்சிகளாக ஆக்கிவிடுகின்றன.
பின் நவீனத்துவ சிந்தனையாளர் ழான் போத்ரியா புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுவதை விட ஊடக வெளியில் உண்டாக்கப்படும் பாவனைகள் பற்றியே அதிகம் விவாதித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளலாம்.பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் சொன்னார்: தரமான பொருட்களுக்கு மட்டுமே சந்தையில் அனுமதி என்ற கட்டுப்பாடோ, அவை மட்டுமே நுகரப்படும்; மற்றவை ஒதுக்கப்படும் என்ற நிலையோ இந்தியச் சந்தையில் இல்லை. இந்த அம்சம் தான் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியச் சந்தையைக் குறிவைக்க முக்கியக் காரணங்களாக இருக்கின்றது.
ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கும் முதல்தரமான தொலைக்காட்சிப் பெட்டியையோ, சலவை இயந்திரத்தையோ வாங்கும் சக்தி கொண்ட உயர் வருவாய்ப் பிரிவினரும் இங்கு உண்டு; அதே நிறுவனங்கள் வேறு பெயரில் தயாரிக்கும் நாலாம் தர, ஐந்தாம் தரத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சலவை இயந்திரங்களையும் வாங்கும் இயல்பு கொண்ட கீழ்மத்திய வருவாய்ப் பிரிவினரும் உண்டு என்பதுதான் அவர் சொன்னதின் சாரம். அவரே இன்னொன்றும் சொன்னார்: தாராளமயப் பொருளாதாரச் சந்தையும் போட்டிப் பொருளாதார நிலைமைகளும் பன்னாட்டு மூலதனமும் இந்தியாவைத் தங்கள் விளையாட்டுக் களமாக ஆக்கிய பின்பும் கூடத் தமிழக முதலாளிகள் இன்னும் முதலாளியவாதிகளாக ஆகவில்லை என்று சிரிப்போடு சொன்னார்.
அந்தச் சிரிப்புக்கான அர்த்தத்தையும் அவரே விளக்கியபின்புதான் எனக்குப் புரிந்தது. ஒரு முதலாளியின் குணாம்சத்தை அளக்கும் கருவியாக மூலதனத்தை மட்டும் சொல்வோமானால் இங்கு முதலாளிகள் பலர் உண்டு தான். தரகு முதலாளிகளாகவும், பன்னாட்டு முதலாளிகளாகவும் கூட அவர்கள் வகைப்படுத்தப்படலாம். ஆனால் , மூலதனம் மட்டுமே முதலாளிய அடையாளம் அல்ல. தாராளவாத மனோபாவம் என்ற அடிப்படையான குணம் ஒன்றும் அதற்கு உண்டு. உழைக்கும் உடலையும், செயல்படும் புத்திசாலித்தனத்தையும் ஒத்துக் கொள்ளக் கூடிய குணம் முதலாளியத்தின் முக்கியமான பண்பு. அந்தப் பண்புதான் எதனையும் பேசித்தீர்க்கலாம் என்ற நம்பிக்கையை உறுதி செய்கிறது. சட்டத்திற்குக் கட்டுப்படுகிறது; அல்லது கட்டுப்படுவதான பாவனையாவது செய்கிறது.
தமிழக முதலாளிகள் இதற்கு மாறானவர்கள். சுரண்டுவதில் கூட சொந்த சாதிப் பாசத்தைக்காட்டுபவர்கள். சொந்த சாதி ஏழைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வேலையில் அமர்த்திக் கொள்பவர்கள். சொந்த சாதி ஒதுக்கீடு முடிந்த பின்புதான் மற்றவர்களை அனுமதிப்பனவாக தேசிய முதலாளிகளின் நிறுவனங்கள் உள்ளன என்பதை நண்பரின் சிரிப்பு சொன்னது. அவர் சொன்னது ஏறத்தாழ உண்மைதான். முதலாளியும் தொழிலாளியும் சாதிச் சங்கத்தில் ஒன்றாக இருப்பதால் , தொழிற்சங்கம் தேவையில்லாமல் போய்விடும். கோயில் கொடையிலும், கல்யாணம், பூப்புனித நீராட்டு என வீட்டு விசேஷங்களுக்கு முதலாளியோ, முதலாளி வீட்டு நாய்க்குட்டியோ வந்து மொய் எழுதிவிட்டுப் போய்விடுவதால், போனஸ், இழப்பீடு எனத் தனியாகக் கேட்க வேண்டியதில்லை.
தமிழக முதலாளிகள் என்றில்லை, இந்திய முதலாளிகளே இப்படித்தான் இருக்கிறார்கள். தரகு வணிகத்தில் ஈடுபடுவதற்கு மட்டும் அல்ல; சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதற்குக் கூடக் குறிப்பிட்ட சாதிகளுக்குத் தான் இங்கு தைரியமும் விருப்பமும் இருக்கிறது. குறிப்பாகத் தலித்துகளுக்கு வியாபார வெளி எப்பொழுதும் மறுக்கப்பட்ட வெளிதான். ஆனால் ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களின் சில்லறை வர்த்தக நுழைவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்த முனையும் போது மட்டும் சாதி வெளிகள் கடந்த ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்திய வாழ்க்கை எந்த விதத்தில் பார்த்தாலும் வெளிகளைக் கடக்கும் கணங்களில் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அந்தக் கணத்திற்குள் பருண்மையான வேறுபாடுகளும் இருக்கின்றன. நுகர்வுத் தளத்தில் இருப்பது நிர்ப்பந்தமற்ற - பிரக்ஞையற்ற வெளி கடத்தல். அதனை எதிர்க்கும் போராட்டத்தளத்தில் இருப்பதோ நிர்ப்பந்தத்தின் விளைவு. நிர்ப்பந்தங்கள் விலகும் போது பிரக்ஞையற்று நிர்ப்பந்தமற்ற ஈர்ப்பில் மனித மனம் நுழைந்து விடுகிறது என்பது தான் ஆச்சரியமான உண்மையாக இருக்கிறது.
******************
நவீனத்துவக்கருத்தியல் கடவுளின் இடத்தை அறிவுக்குத் தருவதின் வெளிப்பாடு. தமிழ் நவீன இலக்கியம் அதிலிருந்து விலகி மொழிப் பயன்பாட்டை மட்டும் முதன்மையாக்கிக் கொண்டு புதுக்கவிதை, புதுவகைப் புனைகதைகள், புதுவகை நாடகங்கள் என நகர்ந்து நிலை நிறுத்திக்கொண்டது.
நவீனக் கலை இலக்கியத்தின் அடையாளங்களாகக் கருதப்பெற்ற ஆளுமைகளின் வாரிசுகள், தந்தையர்களின் நிலைபாட்டைக் கூடப் பின்பற்ற விரும்பாமல் திரும்பவும் சமய நம்பிக்கை, சனாதன ஏற்பு எனத் திரும்பியிருக்கிறார்கள். சில எழுத்தாளர்களே அப்படித் திரும்பியிருப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொன்றுக்கும் பெயர் சொல்லிக் காட்ட முடியும்.
கடந்த தலைமுறையின் முன்னோக்கிய கருத்தியல் நகர்வைக் கைவிட்டுவிட்டுப் பின்னோக்கித் திரும்பியதின் பின்னணியில் பா.ஜ.க.வின் எழுச்சியும் அது ஆட்சியதிகாரத்தில் வலுவான சக்தியாக மாறியதும் காரணம் என்பதை மறுக்க நினைக்கலாம். ஆனால் அப்படியான தேவை இப்போது இல்லை. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் எழுதி மறைபொருளாகப் பேசிய பலவற்றை நேரடியாகக் கவிதைகளிலும் புனைகதைகளிலும் பேசுகிறார்கள். அதன் வழியாகத் தங்களின் இருப்பும் நலனும் காக்கப்படும் என்ற நம்பிக்கை மிகுந்திருப்பதின் வெளிப்பாடு அது.
கலை இலக்கியத்துறையைக் கையில் வைத்திருப்பவர்களின் மறுதிரும்பல், அரசியல் தளத்தில் வேறுவிதமாக நடக்கிறது. தங்களின் தந்தையர்கள் நம்பிய முற்போக்கான அரசியல் எடுபடாது எனத் தோன்றும் நிலையில் ’ எவ்வகையான அரசியலுக்கு எதிர்காலம்’ என்பதைக் கணித்துக் கொண்டு அடுத்த தலைமுறை நகரத்தொடங்குகிறது. திருச்சி சிவாவின் வாரிசு , கருத்தியல் அரசியலைக் கைவிட்டுவிட்டுச் சாத்தியமான அரசியலை நோக்கி நகர்கிறார். கருத்தியல் நம்பிக்கை இல்லாமல், அதிகாரம் மட்டுமே இலக்கு என நினைப்பவர்களின் நகர்வு இப்படித்தான் இருக்கும். அவரது நகர்வு அதிர்ச்சி அடையவேண்டிய ஒன்றல்ல. ஏற்கெனவே பலரும் இப்படி நகர்ந்து கடந்துவிட்டார்கள்.
தேனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அ இ அதிமுகவின் உறுப்பினர் என்றாலும் அவரது அரசியல் செயல்பாடுகள் அதன் அடிப்படை அரசியல் நோக்கங்களுக்கு மாறானது. மரபான காதல், கல்யாணம் போன்றவற்றில் பெரிய வெடிப்புகளை முன்வைத்த நடிகை குஷ்புவின் அரசியல் நகர்வுகள் காட்டியனவற்றை எப்படி மதிப்பிடுவது? காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பர்த்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்திக் சிதம்பரத்தின் பல கூற்றுகள் சலசலப்பை உண்டாக்கும்போது அதன் வெளிப்பாட்டை எப்படிக் கடந்து கொண்டிருக்கிறது நமது அரசியல் அறிவு ? தலித் அரசியல் பேசிய - அடையாள அரசியல் பேசிய- சிறுசிறு அமைப்புகள் பலவும் அப்படி நகர்ந்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் கோயில் திருவிழாக்களில் பங்கேற்கும் முடிவைத் தீர்மானமாக்குகின்றன.
கருத்தியல் அரசியல் நிரந்தரத்தில் நம்பிக்கை கொண்டதின் வெளிப்பாடு. சாத்தியமான அரசியல் தற்காலிகத்தின் வெளிப்பாடு. தற்காலிகத்தின் மீதான விருப்பம் பின் - நவீனத்துவகாலகட்டத்தின் அடையாளம்
******
ஒரு கவிதை
----------------
பெரும் பொய்களின் சூறாவளிக்கு நடுவே
ஓர் எளிய உண்மையை
அணைந்திடாமல் எப்படி ஏந்திச் செல்வது?
குழம்பி நிற்கும் ஒரு சிவப்பு எறும்பைப்பார்த்தேன்
அது நசுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், நகர்ந்தது.
தன் வேதியீரக் கோடுகளைச் சிந்தியபடி
மெல்லமெல்ல ஊர்ந்தது.
பின்னொரு எறும்பு
அக்கோட்டை அடையாளம் கண்டு கொதித்தது-அது
பார்ப்பதற்கு உங்களைப் போலவோ
என்னைப் போலவோ இருந்தது
‘யாவும் பொது?’
என அது முஷ்டியை உயர்த்தியபோது
உலகம் சிரித்தது.
ஆனாலும்
கவிதை நம்புகிறது.
சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்
அது
அறத்தின் மாபெரும் செங்கோல்.
----------------- வெயில்/ கவிதை நம்புகிறது
தொலையும் நம்பிக்கைகள்
2020 ஆகஸ்டு
நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த காங்கிரஸின் ஆட்சி முடிந்து திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 இல் பலருக்குப் பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன. மேற்குலகின் பிடியிலிருந்து நகர்ந்து இந்தியத்தன்மை கொண்ட தற்சார்புப் பொருளாதாரம், பல்சமய, பல்மொழிச் சமூகங்களின் வளர்ச்சி, நவீன வாழ்க்கை கற்றுத்தந்துள்ள உள்வாங்கும் அரசியல் போன்றவற்றை நோக்கி நாடு நகரும் என்று நம்பினார்கள். தொழில் தொடங்கவும், நிறுவனங்களைக் கட்டியெழுப்பவும் அரசின் கட்டுப்பாடுகள் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் சமத்துவமான பங்களிப்பைக் கொண்ட தேசியப்பார்வை உருவாகும்; அவை வளரும்; இலக்கியங்கள் உருவாகும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு. இவையெல்லாவற்றையும் ஒரு ஐந்தாண்டுக்குள் நிறைவேற்ற இயலாது என்பதாலேயே திரும்பவும் அந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதிக எண்ணிக்கையுடன் அதிக சக்தியுடன். ஆனால் இப்போது நடக்கின்ற ஒவ்வொன்றும் எதிர்த்திசையில் பயணிக்கின்றன. மக்களாட்சி முறைமையின் தர்க்கங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையற்ற அரசமைப்பைக் கொண்டிருக்கிறது இந்தியா. இதனைத் தேர்தல் காலங்கள் மட்டுமே புலப்படுத்தி வந்ததைத் தாண்டி தேர்தலுக்குப் பின்னான நிகழ்வுகளும் புலப்படுத்துகின்றன.அரசியல் சொல்லாடல்களில் இந்தியர்களாகிய நாம் அல்லது வாக்களிக்கும் பெரும்பான்மையர்களாகிய இந்தியர்கள் எங்கே இருக்கிறோம் ?. மரபுக்குள்ளா? நவீனத்திலா...?, பின் நவீனத்துவ விளையாட்டிலா..? அரசர்களின் காலத்திலா..? சமத்துவத்தையும் உரிமைகளையும் பெறமுடியும்: பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை முன்வைக்கும் மக்களாட்சி முறைக்குள்ளா? எந்தப் பொறுப்பும் எமக்கில்லை என்று கைகழுவிவிட்டுக் களியாட்டங்களிலும் கடும் துயரங்களிலும் மாட்டிக்கொள்ளும் வாழ்க்கை நடப்பிலா? பதில்கள் நம்மிடம் இல்லை.
பொறுப்பிலிருக்கும் அரசுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் அகண்ட பாரதத்தை முன்மொழிந்த மரபின் பிடிமானத்தை ஆதரித்தார்களா? பெருந்தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட நவீனத்துவ நகர்வை விரும்புகிறார்களா? இவ்விரண்டின் கலவையான பின் - நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா? இதையெல்லாம் தெரியாமலேயே எனது வாக்கின் விலை இவ்வளவுதான் எனக் கையளிப்பு செய்துவிட்ட இந்தியனின் அடுத்த நான்காண்டுக்காலம் என்னவாக இருக்கப் போகிறது?.
300 ஆண்டுகளுக்கு முந்திய மரபான வாழ்க்கையின் எச்சங்களை நடைமுறைப்படுத்தும் அரசை அமைப்பதையே இந்திய மக்கள் விரும்பினார்கள் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது. வேகமாக நாம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். 1950 -க்குப் பின் ஒவ்வொரு அடியாக முன்வைத்து நடந்து நடந்து அடைந்த இலக்குகள் ஒவ்வொன்றும் சிதறடிக்கப்படுகின்றன. அதைக்கண்டு ஒவ்வொருவரும் விடும் பெருமூச்சின் அனலும் வெக்கையின் சூடும் தகிக்கிறது. மரபை விரும்பினாலும் நவீன வாழ்க்கையை நேசித்தாலும் பின் நவீன வாழ்முறையிலிருந்து எவரொருவரும் தப்பிவிட முடியாது. ஏனென்றால், நமது காலம் பின் நவீனத்துவக் காலம்.
தேசம், மொழி, மதம், போன்ற பேரலகுகளின் அடையாளங்கள் கற்பனைகளாக ஆக்கப்பட்டுள்ள காலம். பருண்மையான எல்லைகளைச் சொல்லி இவற்றை அடையாளப்படுத்திவிட முடியாது.பொருளியல் நிலைபாட்டிலும் கூட தேசிய முதலாளிகள் என்ற வரையறைகளும் முடிந்துவிட்டன. திருநெல்வேலி நகரத்தின் சுற்றுச் சாலைக்குப் பக்கத்தில் காற்றுப்புகாத -குளிரூட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் தான்சானியாவிற்கான புள்ளியியல் தரவுகளை அடுக்கி, கொண்டாட்ட நிகழ்வுகளின் காட்சிப் பதுமைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கும் குழுவில் தான்சானியக் காட்சி ஊடக வல்லுநனரோடு சீனப் பெண்ணும் தமிழ்ச் சைவ இளைஞனும் கொரியாவின் நடுத்தர வயதுக்காரும் சேர்ந்து வேலை செய்கிறார்கள்.
பெருமுதலாளிகளும் பெரும் வணிகளும் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும் மாவடுவை இரண்டாண்டு தாக்குப் பிடிக்கும் டப்பாக்களில் அடைத்துக் காப்பது எப்படி என்று ஆய்வுக்கு உதவுகிறார்கள். பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் பன்னாட்டு நிதியங்களின் உதவியோடு ஆய்வுத்திட்டங்களை மேற்கொள் கின்றன. அதற்குத் தேவையில்லாத - தயாரில்லாத - ஒத்துப் போகாத சமூகவியல் புலங்களும் மொழிசார் துறைகளும் மூடப்படுவதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை.
பின் - நவீனத்துவம் கருத்தியல் ரீதியாகச் சிற்றலகுகளை உருவாக்கும்; கொண்டாடும். ஆனால் இந்தியாவில் முற்றிலும் எதிர்நிலையில் இருக்கிறது.
மரபைக் கைவிடாமல் நவீனத்துவத்திற்குள் நுழைந்த இந்தியப் பரப்பு அதே கோலத்தோடு பின் நவீனத்துவக் கட்டமைப்பையும் உள்வாங்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான சிற்றலகுகள் நவீனத்துவத்தை மறுக்கும் மரபு அமைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உருவாகும் சிற்றலகுகளை- சிற்றலைக் கதையாடல்களாகக் (LITTLE NARRATION ) கருதமுடியவில்லை. இந்தியச் சூழலில் தோன்றும் அல்லது தோற்றுவிக்கப்படும் சிற்றலைக் கதையாடல்கள் ஒருவிதமான தொங்குதசைகளாக மாறி, தாங்கும் உடலுக்கு நோய்மைகளையே உண்டாக்குகின்றன.
தமிழ்நாட்டுத் தேர்தலில் நடந்த அணிச் சேர்க்கைகளைத் திருப்பிப் பாருங்கள். இருபெரும் அணிகளிலும் வட்டார, சாதி, மத அடையாளங்களோடு கூடிய அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அமைப்புகளே இல்லையென்றாலும் தனிநபர்களான கல்வித் தந்தைகள், ஊடக முதலாளிகள் இடம்பெற்றுவிட முடிகிறது. இது தான் பின் நவீனத்துவ நெருக்கடி. ஒவ்வொரு அமைப்பும் நபர்களும் தங்களின் இருப்பைத் தக்கவைக்கப் பேரமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு நிகழ்வைக்கூடப் பெருநிகழ்வாக மாற்றி, அதன் காரணிகளை அல்லது காரணமான நபர்களைக் கொண்டாடும் நிலைபாட்டை எடுக்கிறார்கள்.
எல்லா நிலைபாடுகளும் செயல்பாடுகளும் தங்களுக் கீழ் உள்ள கூட்டத்தை வழிநடத்த மட்டுமே என்பதில் தொடங்கி, தமிழ்/இந்திய நிலப்பரப்பின் வெகுமக்களுக்கான கருத்தியலாக மாறிவிடுகிறது. அப்படி மாற்றிவிடுவதில் பெருகிவழியும் செய்தி அலைவரிசைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மரபிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தை நகர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டிய ஊடகங்கள் எதிர்நவீனத்துவத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் குற்றச்செயல்கள் விரிவான கதைகளாகச் சொல்லப்படுகின்றன. கண்காணிப்புக் காமிராக்களின் பங்களிப்பும் விரிக்கப்படுகின்றன. நித்தியானந்தாக்களின் - மௌல்விகளின் - பாதிரிமார்களின் பாலியல் விருப்பங்களும் விவாதிக்கப்படுகின்றன. ஈஷா யோகா தொடங்கி அத்திவரதர் வரை காட்சி இன்பத்தை அளிக்கின்றன. அரசியல் அமைப்பு உருவாக்கிக் கொடுத்த நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றன பேச்சுக்கச்சேரிகளின் இடத்தைப் பிடிக்கின்றன. அங்கே விவாதிக்கப்படுபவை வெறும் விவாதங்களுக்கானவை மட்டுமே. மாற்றுக் கருத்துகள் சொல்லப்படலாம்; ஏற்கப்படப் போவதில்லை. நடந்துமுடிந்த முதல் கூட்டம் இதனை உறுதிசெய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தொடங்கிக் கீழமைநீதிமன்றம் வரையிலும் நீதிக்கான குரல்கள் இல்லை. அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை தொடங்கிக் காவல்நிலையம் வரை காவல்பணிகளுக்காக இல்லை. உச்சநிலைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளூர் தேர்தல் அதிகாரிவரை அச்சத்தின் பிடியில் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒவ்வொருவர் முன்னாலும் கண்ணுக்குப் புலப்படாத குரூர அரங்கின் காட்சிகள் நடிக்கப்படுகின்றன. வாக்காளர்கள் இப்போது பார்வையாளர்களாக மாறிப்போனார்கள். பார்த்துவிட்டுப் போய்க் கோயில் திருவிழாவிலோ குடிப்பதிலோ திளைப்பார்கள்
அடிப்படைவாதச் சிற்றலகுகளோடு ஒத்துப்போகும் கருத்தியலை விமரிசனமின்றி ஏற்று நகரும் ஊடகங்களின் இந்தப் போக்கு, அவற்றின் பொருளாதார அடித்தளமான பன்னாட்டு முதலீட்டியத்தையே காவுவாங்கும். இதைப் புரிந்துகொள்ள ஊடகங்களும் ஊடகப் பேரமைப்புகளும் இன்னும்சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். நிகழுகின்றன காலம் நம்பிக்கைகள் தொலையும் காலமாகிக் கொண்டிருக்கிறது
மொழியும் சமயமும்
பொருளாதார அடித்தளத்தின் மேல் பல்வேறு மேல்கட்டுமானங்கள் இருக்கின்றன. அடித்தளமான பொருளாதார உற்பத்தியும் பங்கீட்டு முறைகளும் மாறும்போது மேல்கட்டுமானங்களும் மாற்றம் அடையும் என்பது மார்க்சிய இயங்கியலின் அடிப்படைப்பாடம். மேல்கட்டுமானங்களில் பேரடையாளமாக இருப்பன சமயம், மொழி, இனம், குடும்ப அமைப்பு போன்றன. சிற்றடையாளமாக இருப்பன பேரடையாளங்களின் சினைக்கூறுகள்.
குடும்பம் என்பதைப் பேரடையாளமாகக் கொண்டால் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சிற்றடையாளங்களை உருவாக்குபவர்கள். அவர்களின் இலக்குகளும் அன்றாட நடவடிக்கைகளும் விருப்பங்களும் சிற்றடையாளமாகவே வெளிப்படும். வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் பேரடையாளம் என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது அதற்குள் ஒரு சிற்றடையாளம். கோயிலுக்குப் போகாமலே கடவுளை நினைத்துக் கொள்வதும் சடங்குகளைக் கைவிட்டவராக இருப்பதும் சிற்றடையாளம். பதினாறு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்த வாழ்க்கை, பொருளாதார உறவு மாறியபோது இரண்டாகவும் இப்போது ஒன்றாகவும் மாறியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு பேரடையாளத்திற்குள்ளும் சிற்றடையாளங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும்.
சமயமும் மொழியும் தனித்தனிப் பேரடையாளம். இரண்டுமே பண்பாட்டு வெளிகளின் பாவனைகள்தான். தமிழ்நாட்டு மக்களை வென்றெடுக்கப் பண்பாட்டு நடவடிக்கைகள் உதவும் என்பது கடந்தகால வரலாறுதான். திராவிட முன்னேற்றக்கழகம் தனது பரப்புரைகளில் மொழியரசியலை முதன்மையாக்கித் தமிழர்களைத் திரட்டியதுபோலவே சமய அரசியலை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்களைத் தன்பக்கம் திரட்டிவிட முடியும் என இந்துத்துவப் பெரும்பான்மையை முன்வைக்கும் அமைப்புகள் நினைக்கின்றன. ஆனால் அந்த நினைப்பு அவர்களுக்குக் கைகொடுக்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறது.
இந்து சமயம் என்பது எப்போதும் ஒற்றைப் பேரடையாளமாக இல்லை. அதற்குள் அகச்சமயங்கள் ஆறும் பேரடையாளங்களாக இருக்கின்றன. புறச்சமயங்களும் தனிப் பேரடையாளங்களாக இருந்துள்ளன. இப்போது புறப்புறச்சமயங்களும் இந்து அடையாளத்தைக் கொண்டு தமிழ் பேசும் திரளை வசப்படுத்தியுள்ளன. அதனால் அதன் உட்கூறுகளான சடங்குகளும் விழாக்களும் பலியிடல்களும் குறியீடுகளும் ஒற்றைப் பேரடையாளத்தை ஏற்க மறுத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த குறியீடுகளை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கடந்தும் செல்கின்றன.
மொழி என்னும் பேரடையாளம் அப்படிப்பட்டதல்ல. தமிழ்நாட்டின் வட்டாரமொழி வேறுபாடுகூடப் பண்பாட்டுத் தனி அடையாளங்களைக் கொண்டதாக இல்லை. அதனை முன்வைத்துப்பேசாமல் அதற்கு எதிரான சம்ஸ்க்ருத முதன்மையை முன்மொழியும் இந்துசமயப் பெரும்பான்மையைத் தமிழர்கள் ஏற்காமல் மறுப்பதின் பின்னணியை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்துசமய வழிபாடுகளும் பூசைகளும் பலியிடல்களும் சம்ஸ்க்ருத அடையாளத்தோடு நெருங்கியன. அத்தோடு நிர்வாக மொழியாக இந்தியை வலியுறுத்தும் - திணிக்கும் போக்கின் உச்சமாக மத்திய அரசின் ஓர் அமைப்பு - ஆயுஷ் என்னும் உள்நாட்டு மருத்துவத்துறையை மேம்பாடடையச் செய்யும் முயற்சியில் இருக்கும் ஓர் அமைப்பு, ஒற்றை மொழியில் மட்டுமே பேசும் என்று சொல்கிறது. நாட்டின் நிர்வாக மொழியாக இந்தியை வலியுறுத்துவதால் - திணிப்பதால் நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டின் மொழி அரசியல், வெறும் பண்பாட்டு அரசியலாக மட்டுமே இருந்ததில்லை. அடித்தளமான பொருளாதார உற்பத்தியோடு தொடர்பு கொண்டு தமிழ் முதலாளிகளை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. நீதிக்கட்சி தொடங்கி இன்று ஆட்சியிலிருக்கும் அ இ அதிமுக வரை சில ஆயிரம் கோடீஸ்வரர்களையும் சிலநூறு தொழில் அதிபர்களையும் பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு முதலாளிகளையும் உருவாக்கி யிருக்கின்றன. ஆனால் இந்துசமயம் பண்பாட்டு வெளியில் கவனம் செலுத்துவதோடு தமிழரல்லாத தேசிய முதலாளிகளையும் பன்னாட்டு முதலாளிகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பொருளாதார அடித்தளத்தில் தமிழர்களின் மூலதனத்தையும் வேலை வாய்ப்பைகளையும் குறைக்கும் சமய அரசியல் தமிழ் நிலப்பரப்பிற்குள் எதிர்மறைத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்படும். சுப்பிரமணிய வழிபாடு.
விநாயக சதுர்த்தி என்ற சொல்லாடல்களைத் தமிழ் மனம் முருகனுக்குக் காவடி எடுத்தல், ஆலடிப்பிள்ளையார் என்ற சொல்லாடலால் கடந்துபோகும்.
அடித்தளம் - மேல்கட்டுமானம் என்ற மார்க்சியக் கலைச்சொற்களைக் கொண்டு விளக்கியதின் தொடர்ச்சியாகத் தமிழர்களை வென்றெடுக்கச் சமய அரசியல் உதவாது என்பதைச் சொல்வதோடு . குறியீடுகளால் வென்றெடுக்க நினைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதாகவே முடியும் என்பதையும் சொல்ல நினைக்கிறது.
சாரதியிடம் மண்டியிடும் பார்த்தன்கள்
2021 . ஆகஸ்டு
திருமதி. சசிகலா நடராசன் தமிழ்நாடு வருகிறார் என்பது செய்தியாக மட்டுமல்ல; அறிவிப்பாகவும் விளம்பரங்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அவரது வருகை வரப்போகும் சட்டமன்றத்தேர்தலையொட்டி அரசியல் நிகழ்வாக மாறும் வாய்ப்பு உண்டு. இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அ இ அதிமுகவின் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பங்காற்றியவர் என்று ஊடகவியலாளர்களும் உதிரிக்கட்சித் தலைவர்களும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பது திரு ம.நடராசன் செய்த புலப்படா அரசியல் நகர்வுகளை. அவர் இருந்தால் எடுக்கும் முடிவுகள் திராவிட இயக்கப்பார்வை கொண்டதாகவே இருக்கும் என்பது வரலாறு. அந்த வரலாற்றைக் கைவிட்டுவிட்டுத் திசைமாறுவாரா திருமதி சசிகலா என்பதை இரண்டொரு வாரங்களில் அறிய முடியும்
மாற்று என்ற சொல் சினிமா என்ற சொல்லோடு இணைந்துதான் -மாற்றுச் சினிமா- என்ற ஒற்றைச் சொல்லாக முதல் அறிமுகம். அங்கிருந்து மாற்று நாடகம், மாற்றுச் சிந்தனை, மாற்றுப்பண்பாடு, மாற்று வகைமைகள், மாற்றுக்கல்வி, மாற்றுப்பொருளியல், மாற்றுவாழ்க்கைமுறை என நகர்ந்து மாற்றரசியல் வரை நகரமுடிந்தது. அந்த நகர்தலில் ஒவ்வொருவரும் பதின்பருவம் தொடங்கி ஐம்பதுகளைத் தாண்டி விடக்கூடும்.
இந்தியாவின் எழுபதுகள் எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை முன்மொழிந்த ஆண்டுகள். ஒன்றாகக் கட்டப்பட்ட தேசம் தந்த புழுக்கமும் தேசிய அரசு என்ற பெயரில் நீட்டிக்கப்பட்ட அதிகாரமும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியன என்ற நினைப்பும் அறுபதுகளில் வெளிப்பட்டு எழுபதுகளில் வடிவம் கொண்டன. இந்திராவின் அவசரநிலை அதிகாரங்கள் அதனை வேகப்படுத்தின. அவரது அதிகாரத்திற்கு மாற்றாகக் கட்டப்பட்ட புதிய அரசியல் சில ஆண்டுகளிலேயே சிதைந்து போனது. சிதைவிலிருந்து உருவான இன்னொரு மாற்று இறுக்கமும் வன்மமும் கொண்ட இன்னொரு தேசியக் கட்சியின் முழு அதிகாரமாக மாறிவிட்டது. காங்கிரஸின் அதிகாரம் புலப்படும் அரசியலாக இருக்க, இப்போது உருவாகியிருக்கும் தேசியக் கட்சியின் அதிகாரமும் இலக்குகளும் தீர்மானித்துக் கொள்ள முடியாத நகர்வுகளைக் கொண்டனவாக இருக்கின்றன. அதிகாரத்தை அடைவதற்கான வழிமுறையைப் பற்றிய கேள்வியே இல்லாமல் பாய்ந்து பற்றிக் கொள்ளத்துடிக்கிறது.
இந்தியாவின் எழுபதுகள் எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை முன்மொழிந்த ஆண்டுகள். ஒன்றாகக் கட்டப்பட்ட தேசம் தந்த புழுக்கமும் தேசிய அரசு என்ற பெயரில் நீட்டிக்கப்பட்ட அதிகாரமும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியன என்ற நினைப்பும் அறுபதுகளில் வெளிப்பட்டு எழுபதுகளில் வடிவம் கொண்டன. இந்திராவின் அவசரநிலை அதிகாரங்கள் அதனை வேகப்படுத்தின. அவரது அதிகாரத்திற்கு மாற்றாகக் கட்டப்பட்ட புதிய அரசியல் சில ஆண்டுகளிலேயே சிதைந்து போனது. சிதைவிலிருந்து உருவான இன்னொரு மாற்று இறுக்கமும் வன்மமும் கொண்ட இன்னொரு தேசியக் கட்சியின் முழு அதிகாரமாக மாறிவிட்டது. காங்கிரஸின் அதிகாரம் புலப்படும் அரசியலாக இருக்க, இப்போது உருவாகியிருக்கும் தேசியக் கட்சியின் அதிகாரமும் இலக்குகளும் தீர்மானித்துக் கொள்ள முடியாத நகர்வுகளைக் கொண்டனவாக இருக்கின்றன. அதிகாரத்தை அடைவதற்கான வழிமுறையைப் பற்றிய கேள்வியே இல்லாமல் பாய்ந்து பற்றிக் கொள்ளத்துடிக்கிறது.
இந்த நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகள் உருவாக்கிய நம்பிக்கைகள் முற்றாகச் சிதைந்து விட்டது. இப்போது இந்திய மனிதர்கள், ’மாற்று’ களைப் பற்றிச் சிந்திப்பதில்லை; சொல்வதில்லை; பாராட்டுவதில்லை. முன்மொழிவதில்லை. மாற்றுகளுக்குப் பதிலாக இன்னொன்றை முன்வைக்கின்றது காலம். தெளிவற்ற இலக்குகள் இருப்பதால் எல்லாப் பாதைகளிலும் சென்று திரும்புகின்றன பயணங்கள்.
அந்த நேரத்தில் மாற்று அல்லது இரட்டைபற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்களை மிரட்டிய சொல்லாக மையமென்னும் ஒற்றை இருந்தது. தேசியம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட முந்திய ஒற்றையே மாற்றுப் பொருளாதாரம், கட்டுப்பாடுகளற்ற பொருளாதார உறவுகள் என்ற ஒன்றாகக் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஆகக்கூடிய சக்திகொண்டதாக நிறுவிக் கொண்டுள்ளது. அதனோடு பண்பாட்டு இறுக்கமும் சேர்ந்து மதவாத அடையாளமும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் அரசு எந்திரமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. மாறிக்கொண்ட ஒற்றை அதிகாரம், எதிர்ப்புகளைப் பன்மையதாகச் சிதறடித்துக் கொண்டே இருக்கும் பின் நவீனத்துவப் பயணங்களை பரிந்துரை செய்துகொண்டே இருக்கிறது.
அதிகாரம் ஒற்றையாகவும் எதிரரசியல்கள் பன்மைத் தனமாகவும் இந்தியப்பரப்பில் அலைகின்றன.
பன்மைச் சிந்தனை, பன்மைத்துவப் பண்பாடு, பண்மைத்துவ வாழ்க்கைமுறை எனப்பேசும் தமிழகத்தில் மாற்று அரசியலை முன்மொழியச் சிலநபர்கள் - பிம்பங்கள் -முன் நிறுத்தப்படு
பன்மைச் சிந்தனை, பன்மைத்துவப் பண்பாடு, பண்மைத்துவ வாழ்க்கைமுறை எனப்பேசும் தமிழகத்தில் மாற்று அரசியலை முன்மொழியச் சிலநபர்கள் - பிம்பங்கள் -முன் நிறுத்தப்படு
கின்றனர். காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக்கழகம் என்ற எதிரிணைக்குப் பின்னால் தேசியம் - தேசிய இனம் இருந்தது. ஆனால் தி.மு.க. - அ இ அதிமுக என்ற இணையில் அப்படியொரு அரசியல் எதிரிணை இருந்ததில்லை. அரசியலுக்கும் அரசியல் இன்மைக்குமான முரண் அது. அதன் நீட்சியாக அ இ அதிமுக - ரஜினி என்ற எதிரிணை உருவாக்கப்பட்டது. அரசியலற்ற அந்த முன்னெடுப்பைச் சாத்தியமாக்க முடியாத பா.ஜ.க. உட்கட்சி முரண்களைக் கூர்தீட்டுவதன் மூலம் தனது சாரதிவேலையைக் கச்சிதமாகச் செய்கிறது. எதுவுமில்லாத சூனியத்திலிருந்தே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அரசியலில் எடப்பாடி - ஓபிஎஸ் - சசிகலா என எல்லா முகங்களுக்கும் வண்ணம் தீட்டித் தெருவில் இறக்குகிறது. அனுப்பப்படும் ஒவ்வொருவரும் தங்களை நாயக நடிகர்களாக நினைக்கிறார்கள். ஆனால் காமெடிப் பாத்திரங்களையே நடிக்கிறார்கள். காமெடி நடிகரின் வெற்றியும் திறமையும் முடிவில் ஏற்படும் துன்பியலில் தான் உறுதியாகும். நாயகத் தனத்திற்காகத் துணைநடிகர் -காமெடி நடிகரின் தியாகம் போற்றப்படும் திரைப்படங்களை நினைவில் கொள்ளலாம்.
அரசியல் அதிகாரத்தை உருவாக்கிக் கொண்ட மையம், புனிதத் தீர்த்தங்களைக் கமண்டலத்தில் கட்டி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே எல்லாச் சாக்கடைகளின் கலவையையும் அரசியல் நீரோட்டமாகச் சித்திரிக்கின்றது. அரசியல் இன்மைக்கெதிரான இன்னொரு அரசியல் என்பதில் தொடங்கி, எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் எனக்காட்டும் எத்தணிப்பு இது. இந்தக் கலவையான நீரோட்டங்கள் சென்று சேரும் இலக்கு எதுவும் இருக்கப்போவதில்லை. வெற்றிபெறும் சாத்தியங்கள் இப்போது குறைவு. ஏனென்றால் நிலவும் காலம் என்பது பின் நவீனத்துவ காலம்.
அரசியல் அதிகாரத்தை உருவாக்கிக் கொண்ட மையம், புனிதத் தீர்த்தங்களைக் கமண்டலத்தில் கட்டி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே எல்லாச் சாக்கடைகளின் கலவையையும் அரசியல் நீரோட்டமாகச் சித்திரிக்கின்றது. அரசியல் இன்மைக்கெதிரான இன்னொரு அரசியல் என்பதில் தொடங்கி, எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் எனக்காட்டும் எத்தணிப்பு இது. இந்தக் கலவையான நீரோட்டங்கள் சென்று சேரும் இலக்கு எதுவும் இருக்கப்போவதில்லை. வெற்றிபெறும் சாத்தியங்கள் இப்போது குறைவு. ஏனென்றால் நிலவும் காலம் என்பது பின் நவீனத்துவ காலம்.
பின் நவீனத்துவம் மாற்று அரசியலுக்குப் பதிலாகப் பன்மை அரசியலை முன்வைக்கும் சிந்தனைமுறை அல்லது வாழ்முறை. இங்கே பா.ம.க. தொடங்கி விசிக, கருணாஸின் புலிப்படை, கொங்குவேளாளரின் இரண்டு மூன்று அமைப்புகள், இசுலாமிய அடிப்படைவாதம் பேசும் நாலைந்து அமைப்புகள், இந்துத்துவ வன்முறையைக் கொண்டாடும் ஏழெட்டு அமைப்புகள், வெற்றிப்படம் தந்தவுடன் முதல்வர் கனவுகாணும் நடிகப் பிம்பங்கள் என அனைத்துப் பன்மைக்கும் இடமிருக்கிறது. ஆனால் எல்லாமும் இயக்கப்படுவது அதிகாரம் கொண்ட கட்சிகளால் என்பது வெளிப்படா முரண்நகை.
நமது காலம் மாற்றுகளின் காலம் அல்ல. நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பன்மைத்துவங்களின் காலம். சசிகலாவின் வருகையும் மௌனத்தின் மொழியும் இன்னொரு குமிழி. ஆற்றின் போக்கில் நகரும் குமிழியல்ல. தேங்கிய குட்டையில் மிதக்கும் குமிழி. குமிழிகளின் வண்ணங்களும் நகர்வுகளும் கட்டுப்படுத்தப்பட்டவை. கண்ணன் ஓட்டிய தேரில் இருக்கும் அர்ச்சுனன்கள் இவர்கள் . பார்த்தன்களின் சாரதி தன்னை எப்போதும் புத்திசாலி என நினைத்துக்கொள்கிறார்.
புலப்படா அரசியலும் அரங்கியலும்
வரப்போகும் தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் இன்மையைப் பெரிய வெற்றிடமாக ஊடகங்களும், ஊடகங்களில் விவாதிப்பவர்களும் சொல்கின்றனர். இன்னொருவரின் இன்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அவரது இன்மையும் இந்தத் தேர்தலில் பெரும் வெற்றிடம் என நான் நினைப்பதுண்டு. அவர் தமிழகத்தின் புலப்படா அரசியலின் மையமாக இருந்த திரு ம.நடராசன். புலப்படா அரசியலை விளக்குவதற்கு முன்னால் புலப்படா அரங்கியலை விளக்க நினைக்கிறேன்
கண்ணுக்குப் புலப்படா மனிதன் (INVISIBLE MAN) ) என்ற புகழ்பெற்ற சினிமாவைப் பலர் பார்த்திருக்கக் கூடும். ஒரு பழைய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அறிவியல் புனைவுப்படம். இந்தச் சினிமாவுக்கு முன்பே நவீன அரங்கியல் வரலாற்றில் புலப்படா அரங்கு (INVISIBLE THEATRE) என்ற கருத்தியல் அரங்கு - அரசியல் நடவடிக்கை அரங்க வடிவம் ஒன்று சோதனை செய்யப்பட்டது. அவ்வரங்க வடிவின் கருத்தியல் முதன்மையாளர் அகஸ்டோ போவல் என்ற அர்ஜெண்டைனாக்காரர்.
நிகழ்காலத்தில் ஒவ்வொருவர் கையிலும் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்பதிவுகளாக்கும் திறன் தொலைபேசி இருக்கிறது. அதனால் கண் முன்னே நடக்கும் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்திப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். காட்சிப் படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு பெருந்திரளான மக்களுக்குச் சொல்லப்பட வேண்டிய ஒன்று என நினைத்தால் உடனடியாக இணையம் வழியாகவே நண்பர்களுக்கு அனுப்புகிறோம். தொடர் பகிர்வுகள் வழியாக உலக அளவில் கிருமி (Viral)யைப் போலப் பரவிவிடுகிறது. இந்தப் பரவல் வழியாக இருவகை விளைவுகளும் ஏற்படுகின்றன. அண்மையில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக நல்ல பலனைத் தந்துள்ளது. சிதம்பரம் அருகில் தரையில் உட்காரவைக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவிக்கு ஆதரவாகப் பெருகிய குரல்களும் ஆதரவும் சட்ட நடவடிக்கைக்குக் கொண்டு போயிருக்கிறது. அதே போலத் தங்கள் சாதி ஆணவத்தைப் பறைசாற்றிக் கொள்ளும்விதமாகப் பயன்படும் என அவர்களே எடுத்த காணொளிக்காட்சி அவர்களையே சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது.
இப்போதிருக்கும் திறன்பேசியும் அதற்குள் இருக்கும் காமிராவும் இல்லாத 1970 களில் கண் முன்னே நடக்கும் தவறுகளைப் பலருக்கும் புலப்படச் செய்யவும் அதன் தொடர்ச்சியாகத் தவறுகளைத் தட்டிக்கேட்கச் செய்யவும் தூண்டும் ஒரு அரங்கநிகழ்வு வடிவமாக அகஸ்டோ போவல் அந்தப் புலப்படா அரங்கைச் சோதனை செய்தார். மக்கள் கூடும் இடங்களில் குறிப்பாக பேரங்காடிகள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றில் முன் திட்டமில்லாமல், ஒத்திகைகள் எதுவுமின்றி அங்கு நடக்கும் நிகழ்வை மையமிட்டே ஒரு காட்சியை உருவாக்கிச் சுற்றி நிற்பவர்களைப் பார்வையாளர்களாக மாற்றி விடும் வடிவம் அது. அந்த வடிவத்தில் பார்வையாளர்களும் அவர்களை அறியாமல் பங்கேற்பாளர்களாக மாறிவிடுவார்கள். மக்கள் அரங்கின் (People's theatre )தொடர்ச்சியாகப் பல சோதனை அரங்க வடிவங்களை முயற்சி செய்தவர் அகஸ்டோபோவல். அவரது விவாத அரங்கின் (Forum theatre) முன்வடிவமே இந்தப் புலப்படா அரங்கு.
அமெரிக்காவிலிருந்து அச்சாகி வெளிவந்த - தி டிராமா ரெவ்யூ - The Drama Review (TDR ) என்ற இதழ் 1990 களின் தொடக்கத்தில் அகஸ்டோ போவல் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அவ்விதழுக்குப் புதுச்சேரி பல்கலைக் கழக நிகழ்கலைப்பள்ளி சந்தா கட்டி வாங்கிக் கொண்டிருந்தது. அகஸ்டோ போவல் சிறப்பிதழைக் கைப்பற்றி வாசித்த சாரு நிவேதிதாவும் அவரது அப்போதைய நண்பர்களும் தமிழில் சோதனை செய்து பார்த்தார்கள். அப்படிச் சோதனை செய்த நாடகமே மதுரை நிஜநாடக இயக்க நாடகவிழாவில் மேடையேற்றப்பட்ட இரண்டாம் ஆட்டம். அந்நாடகம் முழுமையும் புலப்படா அரங்காகவும் நிகழ்த்தப்படவில்லை; விவாத அரங்காகவும் உருவாக்கப்படவில்லை. அதிர்ச்சி மதிப்பீடுகளின் வழி பேசப்படும் வாய்ப்புகளைக் கொண்டதாக அதன் பிரதி உருவாக்கப்பட்டிருந்தது. சாருநிவேதிதாவின் முன்னெடுப்பில் நிகழ்த்தப்பட்டு பாதியில் நின்றுபோன இரண்டாம் ஆட்டம் நாடகத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி இங்கே பேசவேண்டியதில்லை.
பேசவேண்டியது அவ்வப்போது தோன்றி மறையும் புலப்படா அரசியலின் சூத்திரதாரிகள் பற்றித்தான். குறிப்பிட்ட ஒரு தொகுதியில் வலுவான கட்சி வேட்பாளரின் பெயரிலேயே இன்னும் சிலபேர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டுக் குழப்பத்தை உருவாக்குவார்கள். அவரது ஏஜெண்டுகளாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆட்கள் இருந்து ஏதாவது ஒரு கட்சிக்கு உதவி செய்வார்கள். சில ஆயிரம் வாக்குகளைப் பிரித்துத் தோல்விக்கு வழிவகுப்பார்கள். அவர்களின் வரவு -செலவுகளை அந்தக் கட்சியின் வேட்பாளரே கவனித்துக்கொள்வார். இதன் பெரிய அளவுச் செயல்பாடாகத் தமிழ்நாட்டின் தேர்தல் காலங்களில் உயிர்த்துக் கிளம்பும் திடீர் அரசியல்வாதிகளைச் சொல்லலாம். அந்த அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும் புலப்படா அரசியலின் பீனிக்ஸ் பறவைகள். அப்படியான பீனிக்ஸ் பறவைகள் தமிழ்ச் சினிமாவிலிருந்து தமிழ்நாட்டரசியலுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
சினிமாக்களில் கவர்ச்சிகரமான பிம்பங்களாக வலம்வரும் நடிகர்களைக் காணக் கூட்டம் கூடும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் மையநீரோட்ட அரசியலைத் தீர்மானிக்கும் இருபெரும் கட்சிகளும் நடிகர்களை அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தியதைப் புலப்படா அரசியல் எனச் சொல்ல முடியாது. அவை வெளிப்படையான அரசியல். ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட சிறுவனாக இருந்தால் எனக்கு அந்தத் தேர்தல் பற்றி நினைவுகள் இருக்கின்றன. என் வீட்டில் எனது அண்ணன் ஒருவர் எம் ஜி ஆர் ரசிகராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கான ஓடியாடி வேலை செய்தார். ஆனால் அதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் ஆளுமையாகவும் ஊராட்சி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்த மாமா சிவாஜி கட்சியின் ஆளாக இருந்த அமைதி காத்தார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியும் மோதிக்கொண்டன. தேசியத்தோடு கூடிய மாநில வளர்ச்சி, கல்விக்கண் திறந்த காமராசர் போன்ற சொல்லாடல்கள் ஒருபுறம் பேசப்பட்டன. எதிர்ப்புறத்தில் இந்தி எதிர்ப்பு, படியரிசித்திட்டம் என முன்மொழியப்பட்டன என்றாலும் கிராமப்புறங்களில் இவ்விரு கட்சியையும் நடிகர்களின் கட்சியாகவே மக்கள் அடையாளப்படுத்தினார்கள். சிவாஜி கட்சியாகக் காங்கிரசும், எம்ஜிஆர் கட்சியாகத் திமுகவும் அடையாளப்படுத்தப்பட்டு எம்ஜிஆர் கட்சி வென்றது என்றே பேசப்பட்டது.
அதே நேரத்தில் எம் ஜி ராமச்சந்திரன் அதிமுகவைத் தொடங்கியபிறகு அவ்வப்போது டி. ராஜேந்தர் போன்றவர்கள் பேசிய தி.மு.க. எதிர்ப்பரசியல் என்பது தர்க்கங்களுக்குள் அடைபடாத புலப்படா அரசியல். தேர்தலுக்கு முந்திய மாதம்வரை கலைஞர் தமிழுக்கு நான் அடிமை எனச் சொல்லிக்கொண்டிருக்கும் டி.ஆர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவரை எதிர்த்துக் களம் இறங்குவார். இப்படித்தான் ஒரு கட்டத்தில் - எம் ஜிஆர் மறைவுக்குப் பின் பாக்கியராஜ் ஒரு கட்சி ஆரம்பித்து வாக்குக்கேட்டு வலம் வந்தார். சரத்குமாரும் தி.மு.கவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டுத் திடீரென்று ராஜினாமா செய்து திமுக எதிர்ப்பரசியலில் இறங்கினார். எல்லாத் தேர்தல்களிலும் நடிகர் கார்த்திக் களம் இறங்கிக் கட்சி தொடங்கி, கட்சி மாறித் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திவிட்டுத் தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார். அவரது நாடாளும் மக்கள் கட்சி, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியாக இப்ப்போதும் இருக்கிறது. இந்த த்தேர்தலில் போட்டியிடுமா என்று சொல்லி இன்னும் சில மாதங்கள் போகவேண்டும். இவர்களின் அரசியலின் நோக்கங்கள் எப்போதும் வெளிப்படையானவை அல்ல. வாக்குகளைப் பிரிப்பது என்னும் நோக்கம் மட்டுமே. இந்த நடிக அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் கட்சி நடத்தவும் பரப்புரைப் பயணம் செய்யவும் பண உதவி செய்யும் அந்தப் புலப்படா அரசியல் சக்தி யாராக இருக்கும்? அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துக் கூலிதரும் முகவாண்மையின் மேலாண்மை இயக்குநர் எவ்வளவு புத்திசாலியாக இருப்பார். அப்படியான புத்திசாலியாகப் பெரும்பத்திரிகளின் புலனாய்வுக் கட்டுரைகள் - டீக்கடை பெஞ்சு, மரத்தடி மாமா, கூகை, ஆந்தை, லென்ஸ், நாடோடி, வாக்கி டாக்கி - எனப் பெயரிட்டு எழுதிய அரசியல் வதந்திக் கட்டுரைகளை ஒருவரைச் சுற்றிச்சுற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அந்தப் பெயரையும் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகச் சங்கேதக்குறிகளால் தான் குறித்தன.
எப்போதும் தேசியத்தையும் தேசியவாதக் கட்சிகளையும் ஆதரிப்பவர்களாகவும், அதன் வழியாக மைய அரசின் சலுகைகளைப் பெறுகிறவர்களாகவும் இருந்தவர்கள் தமிழக அரசியலில் அ இ அதிமுகவின் போக்குகளை விமரிசனத்தோடு ஆதரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்வது வரலாறு மட்டுமல்ல; நிகழ்காலமும்தான். திராவிட இயக்கத்தை எதிர்த்துக் கொண்டே அ இ அதிமுகவை ஆதரித்துக் கருத்துக்கூறும் நடுநிலையாளர்கள், ஜெ.ஜெயலலிதா அவர்களின் அரசு எடுக்கும் முடிவுகள் தமிழ்நாட்டு மக்களின் வெகுமக்கள் உளவியலை உள்வாங்கி வெளிப்பட்டதாக இருந்தது எனப் பாராட்டவும் செய்வர். அதற்காகவே அவரை ஆதரிப்பதாகத் தமிழ்த்தேசியம் பேசுகிறவகளும், அவரது ஆட்சியைப் பாராட்டும் பத்திரிகையாளர்களும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படியான தமிழ்நாட்டு வெகுமக்களின் நலனை மையமிட்ட அந்த முடிவுகளை ஜெ.ஜெயலலிதா எடுத்தாரா? என்று கேட்டால் , இல்லை அந்த முடிவுகளை எடுக்கும்படியான யோசனைகளைச் சொன்னவர் அவரது அன்புத்தோழி - அரசியல் ஆலோசகர் திருமதி சசிகலா என்று கூட்டணிக்குச் சென்று திரும்பிய வட்டார/ சாதித்தலைமைக் கட்சித்தலைவர்கள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சொன்னார்கள்.
வெளியே தெரியும் அரசியல் நகர்வுகளைத் தாண்டி உள்ளறை அரசியல் நகர்வுகளை அறிந்தவர்கள் - ஊகிப்பவர்கள் - குறிப்பாகப் பத்திரிகைத்துறை நண்பர்கள் அத்தகைய முடிவுகளின் பின்னணியில் திரு ம.நடராசன் அவர்கள் இருப்பதாகவும் சொல்வார்கள். தன்னையொரு புலப்படா அரசியல்வாதியாக வைத்திருந்த ம. நடராசனின் சாதனைகளையும் திரைமறைவு வேலைகளையும் அவரது ஆதரவாளர்களைப் போலவே எதிர்ப்பாளர்களும் அறிந்தே வைத்திருந்தனர். அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒற்றைத் தன்மையானவர்கள் அல்ல; பலதளமானவர்கள்; தமிழின் அனைத்துத்தளங்களிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள்; எதிரிகள் இருந்தார்கள். அரசியல் வேலைகளைப் போலவே கலை, இலக்கியத்தளங்களிலும் அவரது கைகள் இருந்தன. தமிழரசி, புதிய பார்வை போன்றன அவர் நடத்திய பத்திரிகைகள். அவற்றில் எல்லாம் வெளிப்பட்ட கலை, இலக்கியப்பார்வை தமிழில் நவீனத்துவக் கலை இலக்கியப் பார்வையாக முன்வைக்கப்பட்ட பார்வையை நிராகரித்த பார்வை என்பதை அவற்றின் வாசகர்கள் அறிவார்கள்.
திராவிட இயக்க அரசியலோடு, திராவிட இயக்கக் கலை இலக்கியப் பார்வையையும் உள்வாங்கிய திரு ம.நடராசன் தனது மாணவப்பருவக்காலம் தொடங்கித் திராவிட இயக்க அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவர். முதன்மையான போராட்டமான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் திரு மு.கருணாநிதி எப்படியான நகர்வுகளையும் முடிவுகளையும் எடுப்பார் எனச் சிந்தித்து அதற்கேற்ப அ இ அதிமுகவும் முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை அறிந்தவர். அவரது ஆலோசனைகளே தமிழ்நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் பலம் பொருந்திய சாதிகளின் எண்ணிக்கை பலம், பொருளியல் முதலீடுகள், பண்பாட்டு நடவடிக்கைகளை ஆதரித்த நிலைக்கு அ இ அதிமுகவின் தலைமையை நகர்த்தியது. அந்த நகர்வுகள் எப்போதும் தேர்தல் வெற்றிக்கு உதவும் நகர்வுகளாக இருந்தன. அதேபோல தேர்தல் காலங்களில் எதிர் அரசியல் மட்டுமல்லாமல் உள் எதிர்வுகளை உருவாக்கி வாக்குப் பிரிப்பு அரசியலுக்கும் அவரிடம் யோசனைகள் இருந்தன. இந்த உத்திகள் பலவற்றிற்கு அவருக்கு வழிகாட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.கருணாநிதி என்பது சுவாரசியமான நகைமுரண். வெளிப்படையாக மு.கருணாநிதி செய்த அரசியலை ம.நடராசன் மறைமுகச் செய்துவந்தார். அவரது யோசனைகள், வழிகாட்டல்கள் அ இ அதிமுகவிற்கு எப்போதும் பயன்பட்டது.
அவரது அரசியல் ஈடுபாட்டையும் திராவிடப் பற்றையும் முழுமையாக அறிந்தவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணியக் கருத்துருவாக்கிகள். அ இ அதிமுகவின் பின்னணிச் செயல்பாடுகளிலிருந்து ம.நடராசனை விலக்கிவைப்பதே அந்தக் கட்சியைத் தங்களின் விருப்பம்போல இயக்குவதற்கு வசதியானது என உணர்ந்தவர்கள். அவர் இல்லாத அ இ அதிமுகவை உருவாக்குவதே முதன்மையான நோக்கமாகக் கருதி செயல்பட்டார்கள். அதற்குத் துணைபோன நிகழ்வே தர்மயுத்தம் என்பது எனது அனுமானம். தர்மயுத்தம் என்னும் பாவனை நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்வதே சுவாரசியமான நாடகக் காட்சிகள்.
புலப்படா அரசியலின் மையம் இப்போது இடம் மாறியிருக்கிறது. திரு. ம. நடராசனின் இடத்தைக் கைப்பற்றியிருக்கும் அந்த நபர் மறைந்து திரியும் மாயாவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மாயாவை நம்பும் அந்த மாயாவி ஒருவராக இருக்கலாம்; ஒன்றிரண்டு பேராகக் கூட இருக்கலாம். பெரிய அரசியல் ஆசை இல்லாத சின்னச் சின்ன நடிகர்களைத் தூண்டிவிட்டுக் கட்சிகள் ஆரம்பித்துத் தேர்தல் காலத்துப் பரப்புரைகள் நடத்துவதற்குப் பதிலாகப் மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது மாய அரசியல். அவர்களின் பொருளியல் தேவைகளை நிறைவேற்றும் உறுதிகளை வழங்கிக் கட்சியில் இணைந்து பணியாற்றும் ஆளுமைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். நடிக, நடிகைகள் வரிசையாகக் கட்சியில் இணைகிறார்கள். தமிழ்ச் சினிமாவில் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்கூட வெளிப்படையான அரசியல் என்பதற்குப் பதிலாகப் புலப்படா அரசியலில் மிதக்கும் வண்ணக்குமிழிகளாகவே வலம் வருகின்றனர். ஓடாத ஆற்று நீராக இல்லாமல் குளத்துநீரில் அசையும் இந்த வண்ணக்குமிழிகள் தற்காலிகப் பளபளப்புகள் கொண்டவை. வானவில்லின் வண்ணக்கோலங்களைக் காட்டி ஜாலம் செய்யும். ஆனால் ஒரு தேர்தல் காலம் முடிந்தபின் உடைந்து காணாமல் போய்விடும் என்பதுதான் அதன் வாழுங்காலம்
கருத்தியல் அரசியலும் அரசியல் கருத்துகளும்
ஜூன் 18, 2019
இரட்டை எதிர்வு
எல்லாவற்றையும் இரட்டையாகப் பார்ப்பது சிக்கலானது என்றாலும் அப்படிப் பார்க்கும்படி உண்டாகும் நெருக்கடியிலிருந்து தமிழகம் விலகி விடாமல் தவிக்கிறது. அந்தத் தவிப்பு சரியா? தவறா? என்பதை நிகழ்வுகளின் முடிவுகள் தான் சொல்கின்றன. முன்கூட்டிய கணிப்புகள் எப்போதும் தவறாகி விடுகின்றன. இதனைத் தமிழ்நாட்டின் தனித்துவம் என்று தான் சொல்லவேண்டும். இங்கே இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என வாதம் செய்பவர்கள் தங்களின் கண்களுக்குப் பக்கப்பட்டை போட்டுக்கொண்டு பயணிப்பவர்களாக இருக்கலாம். இரட்டை எதிர்வு உருவாக்கப்படுகிறது என்பதைவிட இரட்டை எதிர்வாகவே தமிழ்மனம் இயங்குகிறது
அண்மைக்கால நிகழ்வுகளான மாடுபிடிப் போட்டி தொடங்கி மாவுப் பொட்டலம் வரை எதிரெதிர் முனைகளாகப் பிரிந்துவிடும் லாவகம் இங்கே தன்னெழுச்சியாக உருவாகி விடுகிறது. ஆண்டாள் பாடல், ராஜராஜசோழன் எனப் பண்பாட்டுக் குறியீடுகள் மட்டுமல்லாமல் காவிரியில் தண்ணீர், முல்லைப் பெரியாரில் அணை, மருத்துவக் கல்விக்கான மையப்படுத்தப் பெற்ற பொதுத்தேர்வு, நாடு தழுவிய வரிவிதிப்புக் கொள்கை, சென்னையில் தொழிற்பெருக்கம், மதுரையில் ஆய்வுக் கூட மருத்துவமனை, திருப்பூரில் சாக்கடைப் பெருக்கம், வரப்போகும் கல்விக் கொள்கை, வேளாண்மையைக் கைவிட்டுவிட்டுத் தொழிற்சாலைகளைச் சார்ந்த வாழ்க்கை எனப் பொருளியல், கல்வி, உடல்நலம், சூழல் நடவடிக்கைகள் பற்றிய பேச்சு என்றாலும் இந்த இரட்டை எதிர்வு தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. உருவாக்கப்படும் இரட்டை எதிர்வில் எப்போதும் ஒரு தரப்பாகப் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் அவர்கள் பலம் வாய்ந்த தரப்பாக - கருத்தியல் பலம் வாய்ந்த தரப்பாக இருக்கிறார்கள். அந்தத் தரப்பின் முன்மொழிவுகளை விவாதிக்கும் தரப்புகளாகவே மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்க வேண்டிய சார்பைத் தீர்மானித்த இடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நிலைபாடு முன்னிற்கிறது. பிராமணர்கள் எதனை ஆதரிக்கிறார்களோ, அதற்கெதிரான நிலைபாட்டை மற்றவர்கள் எடுக்கவேண்டும் என்று கற்றுத் தந்து விட்டுப் போயிருக்கிறார்.
அதுவே பெரியாரின் மண் என்ற சொல்லாடலின் பின்னிருக்கும் எடுகோள். இதனை உள்வாங்கிய நிலைபாட்டோடு பேசும் பேச்சுகள்தான் ‘பெரியார் மண்’ என்ற சொல்லாடலின் தளவிரிவு. அதல்லாமல் கடவுளை மறுத்ததையும் சமய நடவடிக்கைகளுக்கெதிராகப் பேசியனவற்றையும் பெரியாராகக் கணித்தால் திசைமாற்றமே ஏற்படும். பெரியாரைக் கடவுள் மறுப்பாளராக மட்டும் முன்வைப்பதில் இருக்கும் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 60 ஆண்டுகாலத் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் கோயில்களும் சடங்குகளும் நம்பிக்கைகளும் கூடியுள்ளன. அதுவே பெரியாரின் தோல்வியைக் காட்டுகின்றன என்று பேசி இது பெரியாரின் மண் அல்ல என்ற கருத்தை உருவாக்கும் முயற்சிகளின் பரப்புரைகள் அவை.
மாநிலக் கட்சியா? தேசிய கட்சியா? என்ற பார்வையை விடவும் இதன்வழி உண்டாகும் பலனை அடையப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வியை முன்வைத்தே சொல்லாடல்கள் தமிழ்நாட்டில் உருவாகிறது. நிகழ்வொன்றைக் கணிக்கும்போது எந்த வர்க்கத்தின் சார்பாக இருக்கப் போகிறது என்று கணிக்கவேண்டும். அதில் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் பக்கம் நிற்பது முக்கியம் என்று பாடம்படித்த பொதுவுடைமை இயக்கங்கள் சார்புநிலை எடுக்கமுடியாமல் தவிக்கக் காரணம் அவை பொருளியல் நடவடிக்கைகளை மட்டுமே கணக்கில் எடுக்கின்றன. பிராமணியம் ஒரு வர்க்கம்; அது பொருளியல் நடவடிக்கைகளை வெளிக்காட்டாமல் பண்பாடு, கலை, அழகியல், தத்துவம் என மேற்கட்டுமானங்களில் மட்டுமே இயங்குவதாகப் பாவனை செய்யும் வர்க்கம். பிராமணியம் என்பது ஆளும் வர்க்கத்தின் அதிகாரக்கண்ணி எனப் புரியத்தொடங்கினால் குழப்பங்களின் மீது வெளிச்சம் பரவலாம்.
நாடெங்கும் தவளைக்கூச்சல்
இன்னும் ஒருவாரத்தில் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்தத் தேர்தல் எதற்காக நடந்தது; எதனை இந்திய மக்கள் ஆதரித்தார்கள் என்பதும் தெரிந்துவிடும். மக்களாட்சி முறைமையின் தர்க்கங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையற்ற அரசமைப்பைக் கொண்டது இந்தியா. இதனைத் தேர்தல் காலங்கள் மட்டுமே புலப்படுத்தி வருகின்றன. அரசியல் சொல்லாடல்களில் இந்தியர்களாகிய நாம் அல்லது வாக்களிக்கும் பெரும்பான்மையர்களாகிய இந்தியர்கள் எங்கே இருக்கிறோம் . மரபுக்குள்ளா? நவீனத்திலா...?, பின் நவீனத்துவ விளையாட்டிலா..?
கற்பிதமான அகண்ட பாரதத்தை முன்மொழிந்த மரபின் பிடிமானத்தை ஆதரித்தார்களா? பெருந்தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட நவீனத்துவ நகர்வை விரும்புகிறார்களா? இவ்விரண்டின் கலவையான பின் - நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப்போகிறார்களா? இதையெல்லாம் தெரியாமலேயே எனது வாக்கின் விலை இவ்வளவுதான் எனக் கையளிப்புசெய்துவிட்ட இந்தியனின் அடுத்த ஐந்தாண்டுக்காலம் என்னவாக இருக்கப் போகிறது.
300 ஆண்டுகளுக்கு முந்திய மரபான வாழ்க்கையின் எச்சங்களை நடைமுறைப் படுத்தும் அரசை அமைப்பதற்காக இந்திய மக்கள் விரும்பினார்கள் என்பது உறுதிப்பட்டால் வேகமாக நாம் பின்னோக்கி நகர்ந்தாக வேண்டும். இப்போது மைய அரசில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அதைத்தான் செய்யப்போகிறது. கடந்த தேர்தலில் ஸ்ரீமான் நரேந்திர தாமோதரர் மோதியைக் காட்டி வாக்குகள் வாங்கிய அந்தக் கட்சி இந்தமுறை காட்டியுள்ள முகங்கள் அதைவிடப் பின்னோக்கி இழுக்கும் முகங்கள். யோகிகள் என்றும் சாமியாரினிகள் என்றும் சாதுக்கள் என்றும் குருமார்கள் என்றும் அழைக்கப்படும் பெயர்களுக்குப் பின்னால் புனித வட்டங்கள் இருப்பதாக நம்பி வாக்களித்திருந்தால் மத்தியகால வன்முறை வாழ்க்கையை இந்தியர்கள் நேசிக்கிறார்கள் என்பது வெளிப்படை.
இதற்குப் பதிலாக 1950 -க்குப் பின் ஒவ்வொரு அடியாக முன்வைத்து நடந்து நடந்து அடைந்த இலக்குகளைக் காக்கும்படி வாக்களித்து விட்டார்கள் என்றால் நிதானமான பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ளலாம்.ஆனால் அந்தப் பெருமூச்சும் வெக்கையோடு கூடிய பெருமூச்சுதான், மரபை விரும்பினாலும் நவீன வாழ்க்கையை நேசித்தாலும் பின் நவீன வாழ்முறையிலிருந்து எவரொருவரும் தப்பிவிட முடியாது. ஏனென்றால், நமது காலம் பின் நவீனத்துவக் காலம். தேசம், மொழி, மதம், போன்ற பேரலகுகளின் அடையாளங்கள் கற்பனைகளாக ஆக்கப்பட்டுள்ள காலம். பருண்மையான எல்லைகளைச் சொல்லி இவற்றை அடையாளப்படுத்திவிட முடியாது.
பொருளியல் நிலைபாட்டிலும் கூட தேசிய முதலாளிகள் என்ற வரையறைகளும் முடிந்துவிட்டன. திருநெல்வேலி நகரத்தின் சுற்றுச் சாலைக்குப் பக்கத்தில் காற்றுப்புகாத -குளிரூட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் தான்சானியாவிற்கான புள்ளியியல் தரவுகளை அடுக்கி, கொண்டாட்ட நிகழ்வுகளின் காட்சிப் பதுமைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கும் குழுவில் தான்சானியக் காட்சி ஊடக வல்லுநனரோடு சீனப்பெண்ணும் தமிழ்ச் சைவ இளைஞனும் கொரியாவின் நடுத்தர வயதுக்காரும் சேர்ந்து வேலைசெய்கிறார்கள்.
பெருமுதலாளிகளும் பெரும் வணிகளும் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும் மாவடுவை இரண்டாண்டு தாக்குப்பிடிக்கும் டப்பாக்களில் அடைத்துக் காப்பது எப்படி என்று ஆய்வுக்கு உதவுகிறார்கள். பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் பன்னாட்டு நிதியங்களின் உதவியோடு ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்கின்றன. அதற்குத் தேவையில்லாத - தயாரில்லாத - ஒத்துப் போகாத சமூகவியல் புலங்களும் மொழிசார் துறைகளும் மூடப்படுவதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை.
பின் - நவீனத்துவம் கருத்தியல் ரீதியாகச் சிற்றலகுகளை உருவாக்கும்; கொண்டாடும். ஆனால் இந்தியாவில் முற்றிலும் எதிர்நிலையில் இருக்கிறது. மரபைக் கைவிடாமல் நவீனத்துவத்திற்குள் நுழைந்த இந்தியப் பரப்பு அதே கோலத்தோடு பின் நவீனத்துவக் கட்டமைப்பையும் உள்வாங்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான சிற்றலகுகள் நவீனத்துவத்தை மறுக்கும் மரபு அமைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உருவாகும் சிற்றலகுகளை- சிற்றலைக் கதையாடல்களாகக் (LITTLE NARRATION ) கருத முடியவில்லை. இந்தியச் சூழலில் தோன்றும் அல்லது தோற்றுவிக்கப்படும் சிற்றலைக் கதையாடல்கள் ஒருவிதமான தொங்குதசைகளாக மாறி, தாங்கும் உடலுக்கு நோய்மைகளையே உண்டாக்குகின்றன. தமிழ்நாட்டுத் தேர்தல் அணிச்சேர்க்கைகளைத் திருப்பிப் பாருங்கள். இருபெரும் அணிகளிலும் வட்டார, சாதி, மத அடையாளங்களோடு கூடிய அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அமைப்புகளே இல்லையென்றாலும் தனிநபர்களான கல்வித் தந்தைகள், ஊடக முதலாளிகள் இடம்பெற்றுவிட முடிகிறது.
இது தான் பின் நவீனத்துவ நெருக்கடி. ஒவ்வொரு அமைப்பும் நபர்களும் தங்களின் இருப்பைத் தக்கவைக்கப் பேரமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு நிகழ்வைக்கூடப் பெருநிகழ்வாக மாற்றி, அதன் காரணிகளை அல்லது காரணமான நபர்களைக் கொண்டாடும் நிலைபாட்டை எடுக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடாமலேயே பால் தாக்கரே குடும்பத்தின் ஆள் மகாராஷ்டிராவில் தேர்தல் அரசியலின் காய்களை நகர்த்த முடிகிறது. ஒருவார இடைவெளியில் குற்றப்பட்டியல்களைச் சாதனைப் பட்டியல்களாக மாற்றிவாசிக்க முடிகிறது பாமகவின் குடும்ப அரசியலில். தினகரனைச் சந்தித்துக் கைகுலுக்கி விட்டு வரும் வழியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை வழிமொழிய வேண்டியிருக்கிறது தொல்.திருமாவளவனுக்கு. சீமானின் அங்கதக் கதையாடல்களின் எகத்தாளமும் உச்சத்தொனிக் கொக்கரிப்பும் கவனிகப்படும் ஒன்ஐறாக எழுதப்படுகிறது. சிறுநகரான எடப்பாடியைத் தன் அடையாளமாகக் காட்டிக்கொண்ட பழனிச்சாமியையும், சொன்னதைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாகக் காட்டிக்கொண்ட ஓ.பி.எஸ்ஸையும் ஓரங்கட்டிப் பின்னுக்குத்தள்ளி முன்னுக்கு வருகிறார் ராஜேந்திர பாலாஜி. கமல்ஹாசனின் ‘இந்துதான் முதல் தீவிரவாதி’ என்ற சொல்லாடல் கொண்டாடப்பட்டது கடைசிக் கொண்டாட்டம் என்றால், குகைக்குள் யோக நிலையைக் காட்டித் தானே முதன்மைப் பாவனையாளர் என்கிறார் பிரதமர் மோதி.
எல்லா நிலைபாடுகளும் செயல்பாடுகளும் தங்களுக்கீழ் உள்ள கூட்டத்தை வழிநடத்த மட்டுமே என்பதில் தொடங்கி, தமிழ்/இந்திய நிலப்பரப்பின் வெகுமக்களுக்கான கருத்தியலாக மாறிவிடுகிறது. அப்படி மாற்றிவிடுவதில் பெருகிவழியும் செய்தி அலைவரிசைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மரபிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தை நகர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டிய ஊடகங்கள் எதிர்நவீனத்துவத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
அடிப்படைவாதச் சிற்றலகுகளோடு ஒத்துப்போகும் கருத்தியலை விமரிசனமின்றி ஏற்று நகரும் ஊடகங்களின் இந்தப் போக்கு, அவற்றின் பொருளாதார அடித்தளமான பன்னாட்டு முதலீட்டியத்தையே காவுவாங்கும். இதைப் புரிந்துகொள்ள ஊடகங்களும் ஊடகப் பேரமைப்புகளும் இன்னும்சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.
சிதைவுகளின் முழுமை - பின் நவீனத்துவச் சொல்லாடல்கள்
2016 நவம்பர்
நடிக அரசியல்
தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள், நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.இத்தகைய விவாதங்களை இந்தியாவின் தேசியக்கட்சிகள் தங்களின் பொது அமைப்பில் விவாதிக்கின்றனவா என்று தெரியவில்லை. விவாதித்திருந்தால் எப்படியாவது தங்களின் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் நிலைநாட்டிவிட வேண்டுமென கருதியிருக்காது. வெவ்வேறு மாநிலங்களில்/ அமைப்புகளில் பின்வாசல் நுழைப்புகளை முன்னெடுத்திருக்காது. ஆனால் இந்தியாவில் தேசியத்தைக் கட்டமைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகள் தொடர்ந்து பின்வாசல் நுழைப்புகளைச் செய்துகொண்டே இருக்கின்றன.
ரஜினிகாந்தைத் தமிழக அரசியலில் இறக்கும் முயற்சி அப்பட்டமான பின்வாசல் நுழைவு. அதனைத் தேசியவாதம் வெளிப்படையாகச் செய்யாமல் மறைமுகமாகச் செய்கிறது. அறியாமல் செய்யும் பிழைகளுக்கு மன்னிப்பு உண்டு; அறிந்தே செய்தால் தண்டனைதான் கிடைக்கும். தண்டனை “ ஓரடி முன்னால், ஈரடி பின்னால்” என்ற அறியப்பட்ட சொற்றொடரின் அர்த்தமாக வெளிப்படும்; முடியும் என்ற சொல்ல விரும்புகிறேன். அப்படி முடிந்ததிற்கான முன்னுதாரணத்தைத் தேடி வேறெங்கும் செல்லவேண்டியதில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வரலாறே அதுதான்.
தேசியக் காங்கிரசும் தேசியவாதத்தில் நம்பிக்கைகொண்ட இடதுசாரிகளும் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களைப் பின்வாசல் வழியாகவே அரசியலில் நுழைத்தார்கள். நுழைந்த பின்னால், தமிழகச் சூழலில் தேசியவாதம் எடுபடாது என்பதைப் புரிந்துகொண்டார். தேசிய நலனின் பக்கம் திரும்புவதற்குப் பதிலாக இரண்டடி தாவி வட்டாரவாதத்தை வளர்த்தெடுத்தார். மாநிலவாதம் அல்லது தேசிய இனத்தின் நலன் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைபாடு தேசியத்திலிருந்து ஓரடி விலகல் என்றால், அதிமுகவின் தொடக்க கால நடவடிக்கைகள் வட்டார வாதத்தை நோக்கிய பயணமாகவே இருந்தது. அவர் காலத்தில் வட்டாரவாதமாக இருந்ததை அவருக்குப் பின்னால் தலைமையேற்ற அவரது வாரிசான ஜெ.ஜெயலலிதா சாதியவாதமாக மாற்றிக்கட்டமைத்துத் தன் தலைமையைத் தக்கவைத்தார்.
தேசிய இனங்களின் அடையாளங்கள், அவற்றின் விருப்பங்கள், அதனை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் திட்டங்கள் பற்றிய மறுபரிசீலனை செய்யாமல் செயல்பட்ட காங்கிரசின் மைய அரசும், கட்சியும் 1960 -களில் வீழ்ச்சியைச் சந்தித்தன. அந்த வீழ்ச்சி, பல்வேறு தளங்களில் பல்வேறு பாணிகளில் இன்று முழுமையாக வெளிப்படுகின்றது. இந்தியாவை ஆண்ட தேசிய காங்கிரஸ் அதன் பிடிமானத்தை எல்லா மாநிலங்களிலும் இழந்துநிற்கிறது. எல்லா மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென விரும்பும் பா.ஜ.க., சகலவிதமான குறுக்குச் சால்களையும் ஓட்டுகிறது. கட்சியின் பெயர் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு மாநில பா.ஜ.க.வின் செயல்பாடுகளும் தேர்தல் உத்திகளும் வெவ்வேறானவை. தேர்தல் வெற்றிக்காக மாநிலவாதம், மதவாதம், சாதியவாதம், தனிநபர்களை முன்னிறுத்தும் வெகுமக்கள் வாதம் என அனைத்தையும் பயன்படுத்துகிறது. இவையெல்லாம் உடனடிப்பலன்களைத் தரலாம். ஆனால் நீண்ட காலத்திற்குத் தேசத்தை - தேசத்தின் அடிப்படை அரசியல் வாழ்வை- பொருளாதாரக் கட்டுமானத்தை உறுதியாக்கித் தராது.
ஒருவிதத்தில் பின் நவீனத்துவ காலத்தின் முழுமை என்பது சிதைவுகளின் வழியாக உருவாக்கப்படும் முழுமைதான் என்றாலும், திரும்பவொரு சிதைவை விரும்பாமல் ஆக்குவதில் முழுமை வெற்றிபெற்றாக வேண்டும் சிதைவுகளின் அடையாளங்கள் தொடர்ந்து வாழும் என்றால் எப்போதும் சிதையவும் செய்யும் என்பதும் உணரப்படவேண்டும். சிதைவுகளின் தேவைகளை நிறைவுசெய்யும் ஒரு முழுமைக்குள் இருப்பதில் லாபமுண்டு என்பதைச் சிதைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்திலும் நினைக்கும் விதமாக முழுமை நடந்துகொள்ளவேண்டும்
வந்தேறி எனும் விசைச் சொல்
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணம் அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களிடம்கூட இருந்திருக்கிறது. அவர் மட்டுமாவது வெற்றிபெற்று விடுவார் என்று நினைத்திருந்த ஒருவரை அமெரிக்காவில் சந்தித்தேன். திருச்சியிலிருந்து வந்தவர்.
“இந்தியாவிற்கு எப்போது வந்தீர்கள்” என்று கேட்டேன்
. “ மூன்று வருடமாச்சு?” என்றார்.
உங்கள் பார்வையில் படும் தகவல்கள் எல்லாம் இணையம் சார்ந்தவைகள்; அதனால் அப்படித்தான் யோசிக்க முடியும்” என்று சொன்னேன். அரைமனதோடு ஒத்துக்கொண்டார்.
கனடாவில் இருந்தபோது தேர்தல் முடிவுகள் வரவில்லை. வந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர்களில் பெரும்பாலோர் இந்தப் பதிலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய பதிலை என்னால் தர இயலாமல் தவித்திருப்பேன்.
புலம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் கனடாவிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுத் தேர்தலைத் தீர்மானிக்கும் முதன்மைக்காரணியாக மொழிப்பற்றும் அதன் உடன்பிறப்பான இனப்பற்றுமே இருக்கிறது என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் தீவிரமாக இருந்தது. அப்போது அவர்களின் நம்பிக்கையைச் சுமந்தவர் வைகோ. 2011 தேர்தல் முடிவுக்குப் பின் நார்வேயில் நடந்த பொங்கல் விழாவொன்றிற்கு நண்பர் சுகுமாரோடு போயிருந்தேன். இரவில் படுப்பதற்கும் காலை உணவுக்கும் தூரமாக இருந்த ஒருவரின் வீட்டில் ஏற்பாடு.
அவரது வீட்டில் கிடந்த இதழ்களில் வைகோவின் முழுப்பக்கப் படங்கள் இருந்தன. இரவு முழுவதும் என்னிடம் வைகோவின் அரசியலையும் அவரிடம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையுமே பேசிக்கொண்டிருந்தார். தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கருத்துகளை முழுமையாக நான் மறுத்துப் பேசுவேன் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார். தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்நாட்டரசியல் செய்யாமல் ஈழத் தமிழ் அரசியல் செய்வதற்கு என்ன காரணம்? என்று கேட்டேன். இனப்பற்று, மொழிப்பற்று என்று மட்டும் பதில் சொன்னார். இப்போது அதே வைகோ அந்நியமொழிக்காரராகவும் தமிழினத்தை அடிமைப்படுத்தவந்த ஆதிக்க வந்தேறியாகவும் ஆகிவிட்டார்.
வந்துமோதும் விசைக்கேற்ப நிலைத்துவிட்ட பொருள் நகர்ந்து இடத்தைக் காலிசெய்யும். இது அறிவியல் விதி. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழர்களின் மனதில் அசையாப் பெருங்கல்லாய் இருந்த வைகோவை கவனிலிருந்து புறப்பட்ட விசையுடன் இடம்பெயர்த்துவிட்டார் சீமான். அவரது கவனின் விசைத்திறன் ‘வந்தேறி’ என்ற சொல்லாக இருக்கிறது. இந்தச் சொல் புலம்பெயர்ந்து அலையும் ஈழத்தமிழர்களைக் கடும் உளைச்சலுக்குள்ளாக்கும் சொல் என்பது உணரப்பட இன்னும் சில காலம் ஆகலாம்.
ஆடப்படும் பந்துகள்
எல்லா நிகழ்வுகளுக்கும் இரண்டு கோணங்கள் உண்டு. எந்த முடிவுகளுக்கும் இரண்டுக்கு மேற்பட்ட பார்வைகளும் இருக்கும். அதிலும் வெகுமக்களின் முடிவால் தீர்மானிக்கப்படும் பொதுத்தேர்தல்களில் இதுதான் முற்றமுழுதான முடிவு என்று சொல்லிவிடமுடியாது. வேட்பாளர் தேர்வுகளையும் அறிவிப்பையும் கவனித்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். ஒருபுறம் சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் அறிவித்த கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களும் மாறுகின்றன.
இதுதான் எனது தொகுதியெனப் பிடிவாதம் பிடித்த வேட்பாளர்களுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் செய்திகளாகின்றன. கட்சிகள் எடுக்கும் முடிவை நடுநிலையாளர்கள் எனச் சொல்பவர்கள் சமூக ஊடகங்கள் வழி மாற்றிவிட முயல்கிறார்கள். திடீரென்று அரசியல் களத்தில் இறக்கப்படும் நபர் திசைதெரியாமல் குழம்புவதும் நடக்கிறது.
இதனை மக்களாட்சியின் பக்குவநிலையென்றும் நீங்கள் சொல்லலாம்; இல்லையென்றால், தனிநபர்களின் செல்வாக்கு கட்சியின் அடையாளத்தைக் கடந்து நிற்கிறது என்றும் வாதிடலாம். பரப்புரையைத் தொடங்கிய பின்னும் வேட்பாளர்கள் மாற்றம் என்பது இந்தத் தடவை அதிகம். அறிவித்த கட்சியே மாற்றுவது ஒருபக்கம் என்றால், அறிவிக்கப்பட்டவர்கள், ‘ நான் போட்டியிட விரும்பவில்லை’ எனச் சொல்லிப் பின்வாங்குவதும் நடக்கிறது. ‘அறிவிக்கப்பட்டவர் சரியான வேட்பாளர் அல்ல’ எனக் கட்சிக்காரர்களே எதிர்ப்புக் காட்டிப் போராட்டம் நடத்தும் நிலையும் முந்திய தேர்தல்களில் இல்லாத அளவுக்குக் கூடியிருக்கிறது. வேட்புமனுதாக்கலுக்குப் பிறகும்கூட மாற்றங்கள் இருக்கலாம். திரும்பப் பெறும் நாளில்கூட அதிகாரப் பூர்வ வேட்பாளரின் மனுவை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டுப் பதிலிவேட்பாளரையே அதிகாரப் பூர்வ வேட்பாளராக்கலாம். இன்றிலிருந்து இன்னும் 10 நாட்கள் இந்தத் தடுப்பாட்டங்களும் அடித்தாடுமாட்டங்களும் தொடரப்போகின்றன.
மாறுதல்களும் மாற்றங்களும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். வாக்காளர்களை நோக்கிவரப் போகும் வேட்பாளர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அதை மட்டுமே கவனிக்க வேண்டுமா? என்றால், அதையும் தாண்டி வாக்காளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டியன சில உள்ளன. இவை இலட்சிய நோக்கம் கொண்ட எதிர்பார்ப்புகள் அல்ல: எளிய எதிர்பார்ப்புகள் தான்.
• நமது வேட்பாளர்கள், தமிழகத்தின் அரசியல் சூழல் மூலம், சமூக நல்லிணக்கம் உருவாக வேண்டுமென நினைப்பவர்களாக இருக்கவேண்டும்.
• கடந்த கால் நூற்றாண்டுகளாகப் புதிய பொருளாதார நடைமுறைகள் அமுலில் உள்ளன. அவற்றில் நேர்மறைக் கூறுகளும், எதிர்மறைக் கூறுகளும் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு விவாதித்துக் கொள்ளுவன கொள்ளவும், தள்ளுவன தள்ளவும் தெரியவேண்டும்.
• மனிதவளத்தை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள், மொழிக்கொள்கைகள், கற்கைமுறைகள் போன்றவற்றிற்கு முதன்மை கொடுத்துச் செயல்படுகிறவராக இருக்கவேண்டும்.
• சமூகத்தில் நிலவும் ஆண் - பெண் பால் வேறுபாட்டையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் களைவதற்கான கருத்துருக்களையும் திட்டங்களையும் முன்மொழிபவராக இருக்கவேண்டும்.
இவையெல்லாம் பரந்தபட்ட எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகள் தமிழகம் தழுவியன. இந்த எதிர்பார்ப்புகளைவிடவும் முக்கியமான எதிர்பார்ப்புகள் சில உள்ளன. அவை நமது ஒவ்வொருவரின் அடிப்படைத்தேவைகளோடு தொடர்புடைய எதிர்பார்ப்புகள்.
• முதன்மையான எதிர்பார்ப்பாக இருப்பது நல்ல குடிநீர். விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என்பது நமது அரசுகளின் ஆகப்பெரும் தோல்வி. நமது வீடுகளுக்குத் தேவையான குடிநீரையும் புழங்கும் நீரையும் தந்து உடல்நலம் காக்கும் உறுதியை நமது வேட்பாளர்கள் தரவேண்டும்.
• முதன்மையான எதிர்பார்ப்பாக இருப்பது நல்ல குடிநீர். விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என்பது நமது அரசுகளின் ஆகப்பெரும் தோல்வி. நமது வீடுகளுக்குத் தேவையான குடிநீரையும் புழங்கும் நீரையும் தந்து உடல்நலம் காக்கும் உறுதியை நமது வேட்பாளர்கள் தரவேண்டும்.
• அதற்கிணையான இன்னொரு எதிர்பார்ப்பு நல்ல சாலைகள். நமது வீட்டிலிருந்து வெளியேறிப் பணியிடத்திற்குச் சென்றுவரத்தேவையான நல்ல சாலைகள் வேண்டும்.
• நமது உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாகக் கவனிக்கத்தக்க மருத்துவமனைகளின் அருகிருப்பு அடுத்த தேவை.
• நமது உடல் உழைப்பையும் அறிவுழைப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் தொழிற்கூடங்களை நாம் இருக்குமிடங்களில் தொடங்கும் மனநிலையை நமது வேட்பாளர்கள் உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
இத்தகைய புரிதல்களைக் கொண்ட வேட்பாளர்களை நமது அரசியல் கட்சிகள் நிறுத்தியிருக்கின்றனவா? இல்லை; நிறுத்தவில்லை. நிறுத்தப்பெற்ற வேட்பாளர்களில் இவற்றைப் புரிந்துகொண்டவர்களை அடையாளம் காணவேண்டும். அதற்காக வாக்காளர்கள் சின்னச்சின்ன முயற்சிகளை எடுக்கலாம். நம்மை நோக்கி வரும் வேட்பாளர்களை அழைத்து அவரது தாகத்துக்குத் தண்ணீரோ, ஒரு சொம்பில் மோரோ கொடுத்து உபசரிக்கலாம். நமது குடியிருப்பு எதுவாயினும் -அது குடிசையாயினும் மாளிகையாயினும் உள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசலாம். இப்போதே பேசாதவர் அதிகாரமிக்க சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் நம்மோடு பேசவா போகிறார்? ஒவ்வொருவரும் பேசவில்லையென்றாலும் ஒரு குழுவாக- தெருவாக - கிராமமாக நின்று நாம் பேசவேண்டும். அவர் கேட்கவேண்டும். தேர்தல் பரப்புரையும் மக்களாட்சி நடைமுறையும் ஒருவழிப்பாதையெல்ல என்று உணர்த்தவேண்டும்.
அந்த உரையாடல்களில் இவையெல்லாம் எங்கள் தேவைகள்; இவைகளை நீங்கள் நிறைவேற்றித் தரமுடியுமா? என்று கேட்கக் கூட வேண்டாம். இந்தத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியவை என்பதை உணர்ந்துள்ளாரா என்றாவது சோதிக்கவேண்டும். இதுதான் வாக்காளர்களின் கடமை. வாக்காளர்களின் அதிகாரம் வாக்களிக்கும்வரைதான் வாக்கை அளித்து மையப்பூசிக்கொள்ளும்போது நமது அதிகாரம் கைமாறிவிடும். நமது கடமையைச் சரியாகச் செய்வதிலிருந்து வேட்பாளர்களின் கடமைகளை உணரச்செய்யலாம்.
ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி
நவம்பர் 12, 2014
வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தப் போகிறது. இந்நிகழ்வின்மூலம் திரு மு. கருணாநிதி, இரா. வைரமுத்து ஆகியோர் வரிசையில் இணைக்கப்படுகிறார் ஜெயமோகன். தங்களின் எழுத்துகளைச் சந்தைப்படுத்தும் உத்தியில் இதுவரை அவ்விருவரும் பின்பற்றிய அதே உத்திதான் இதுவென்றாலும் நிலைப்பாட்டில் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.
அவர்கள் இருவரும் பின்பற்றிய உத்தியைப் பின்பற்றக் கூடாது என்று சொல்வது யாருடைய வேலையும் அல்ல என்று நினைப்பவன் நான். ஆனால் அத்தகைய நிகழ்வுகள் எத்தகைய நிலைபாட்டிலிருந்து உருவாகின்றன என்று சொல்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு என்றும் நினைக்கிறேன். அதன் வழியாக அவர்களின் நிலைபாட்டையும் சந்தைப்படுத்துதலில் வெகுமக்களை நோக்கி நீளும் புனைவுக்கரங்களின் நீளத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்கிறேன்.
நினைத்த நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பொருளாக - கையாளத்தக்க ஒன்று எனக் காட்சிப்படுத்தப்படும் பிம்பமாக இருப்பதின் வழியாகவே நம் வாழ்க்கையும் இருப்பும் உறுதிப்படுகிறது என நம்புகிறவர்கள் அதைச் செய்வதே சரியானது. அப்படிச் செய்யாமல் ஒதுங்குவதுதான் சிக்கலானது. மனச்சிக்கலுக்கு ஆளாகாது காலத்தின் ஓட்டத்தில் பயணம் செய்வதே காலத்தோடு ஒட்ட ஒழுகல். காலம் நிர்ப்பந்திக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆம். நாம் வாழுகிற காலம் பின் நவீனத்துவ காலம். அது தரும் நெருக்கடியிலிருந்து தப்பித்தல் சாத்தியமில்லை.
நம்பிக்கைகள் தான் வாழ்தலை வழிநடத்துகிறது. மரபான வாழ்க்கையில் அது சமய நம்பிக்கையாக இருக்கிறது என்றால், நவீனத்துவ வாழ்க்கையில் அது அரசியலாக அல்லது அறிவாக இருக்கிறது. பின் நவீனத்துவ நிலைபாட்டில் அது ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒருகால் என்பதாக இருக்கிறது. வைரமுத்துவின் நம்பிக்கைகள் சமயஞ்சார்ந்தவையென்றால் கருணாநிதியின் நம்பிக்கைகள் அரசியலறிவு சார்ந்தவை. ஜெயமோகனின் நம்பிக்கைகள் இவ்விரண்டையும் தவிர்த்த ஒன்று. அதனை இங்குமங்குமாக ஊடாடித்திரியும் குழப்பம் கொண்ட அலைவு கொண்ட நம்பிக்கை எனச் சொல்லலாம். அல்லது நம்பிக்கையின்மை கட்டியெழுப்பும் நம்பிக்கை என்றுகூடச் சொல்லலாம்.
நாம் இயங்கும் சமூகம் பல்வேறு வட்டங்களாக அல்லது சதுரங்களாக அல்லது கணித வரையறைக்கு அடங்காத - சின்னதும் பெரியதுமான குமிழிகளால் அலையும் இயல்பு கொண்டது எனச் சொல்லிக் கொண்டே சிறுகுமிழியிலிருந்து பெருங்குமிழிக்கும், பெரும்பரப்பிலிருந்து இன்னொரு பெரும்பரப்பிற்கும் பயணம் செய்வது. திடீரென்று பெரும்பரப்பைத் தானே உடைத்துவிட்டுச் சின்னஞ்சிறு வட்டத்திற்குள் ஓடிப்பதுங்கிக் கொள்ளவும் விரும்பக்கூடியது. சிறுவட்டக்கோட்டைப் பெருவட்டக்கோடு தொட்டுவிட வேண்டும்; சிறுவட்டமே பெருவட்டமாக ஆகிவிட வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே சிறுவட்டமே சரியானது என நினைக்கும் விநோதங்களும் கொண்டது. இன்னும் கொஞ்சம் விளக்கமாக அல்லது எளிமையாகச் சொல்வதென்றால் வீட்டுச் சாப்பாடு தான் ஆகச் சிறந்தது என்று சொல்லிக் கொண்டே கண்ட கண்ட உணவகங்களிலும் பரோட்டா, பாவ்பாஜி, பீட்சா, பீர்க்கங்காய், தயிர்ச்சாதத்தோடு கூடிய மாங்காய்வடு எனச் சாப்பிட்டுத் திரியும் நெருக்கடி கொண்டது. மேற்கை மறுதலித்துக் கொண்டே அது தரும் சுதந்திரத்தைச் சுவாசிக்க ஆசைப்படுவது. கிழக்கின் இருட்டில் நெளியும் குரூரத்தை விளக்கி வியாக்யானங்கள் செய்து கொண்டே அதைவிட்டு விலகிவிடத்துடிப்பது.. இப்படியிப்படியாகப் பின்நவீனத்துவ மனநிலைக்குள் இந்தியர்கள் நுழைந்து காலம்பல ஆகிவிட்டது.
பின் நவீனத்துவக் கட்டமைப்புகள் ஆகப் பெரும் திட்டமிடலின் வழியாக - சந்தை உத்திகள் மூலமாக- முன்னிறுத்தப்படுகின்றன. அதனால் சின்னஞ்சிறு கட்டமைப்புகளை அழித்துவிடும் நோக்கம் அதற்கு இருக்கிறது என்பது உண்மையல்ல. பேரங்காடிகளுக்குள் பெட்டிக்கடைப் பொருட்களைக் கிடைக்கச் செய்யும் ஆசைகளும் அழகியலும் அதற்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது. குடிசைப் பலகாரமான குழிப்பணியாரங்களைக் கொண்டாட்டப் பொருளாக மாற்றிக் கூடுதல் விலைக்கு அளிக்கும் அழகியலும் ஆசையும் அதன் நிலைப்பாடு. வேற்றுமைகளை அழைப்பதல்ல அதன் நோக்கம். வேற்றுமைகளைத் தக்க வைத்துக் கொண்டே வேறுபாடுகளை இல்லாமல் ஆக்கும் வித்தை அது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடுகள் உண்டு; ஆனால் நுகர்வதிலும் ஒதுக்குவதிலும் வேறுபாடுகள் இல்லை. நிகழ்காலத்தில் கச்சாப்பொருட்களை மட்டுமே பின்நவீனத்துவக் குமிழிகள் என்று கருதிவிட வேண்டியதில்லை. ஆளுமைகள், நபர்கள், பிம்பங்கள், கருத்துகள், தகவல்கள் என்பனவும் பின் நவீனத்துவக்குமிழிகள். இவை ஒவ்வொன்றும் ஆபத்தானது எனச் சொல்லிக் கொண்டே நிலைபெற்று விடும் நோக்கங்களோடு மிதக்கின்றன. கத்தி ஆபத்தானது; குற்றவாளிகளால் உருவாக்கப்பெற்றது எனச் சொல்லப்படும் அதே நேரத்தில் தேவையானது எனக் கொண்டாடப்படுவதைக் கவனத்தால் போதும். பெருநிகழ்வுகளின் வழியாகப் பலவற்றைப் பற்றியும் தவறான கூற்றுகள் நிலை நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன; நம்ப வைக்கப்படும் நோக்கங்கள் நிறைவேற்றப்படும். எனவே அதுசார்ந்த எச்சரிக்கையொன்றைச் சொல்வது இங்கே அவசியமாகிறது.
பெரும் நிகழ்வுகளின் மூலம் முன்னிறுத்தப்பட்ட திரு.மு.கருணாநிதி, திரு இரா.வைரமுத்து ஆகியோரின் எழுத்துகள் தான் தமிழ் இலக்கியத்திற்கென வழங்கப்படும் ஞானபீடம் போன்ற மிக உயர்ந்த விருதுகளுக்குத் தகுதியானவை என நம்ப வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் உயராய்வுப் பொருட்களாக ஆக்கப்பட்டுள்ளன. பேராசிரியர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் மட்டுமல்ல; சாகித்திய அகாடெமி, ஞானபீட விருதுகளின் தேர்வுக்குழுவில் இடம்பெறக்கூடிய வல்லுநர்கள் கூட அதை உண்மையென நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசும் அந்த வரிசையில் வந்து நிற்கும் வாய்ப்பை நோக்கி நகர்த்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. அதற்கான நிகழ்வாக இந்த வெளியீட்டுவிழா கட்டமைக்கப்பட்டுள்ளதை அழைப்பிதழ் காட்டுகிறது.
இந்நிகழ்வை நடத்துவது ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தான். திரு வைரமுத்துவிற்கானப் பெருநிகழ்வுகளையும், திரு மு. கருணாநிதிக்கானப் பெருநிகழ்வுகளையும் கூட அவர்களே நடத்தியதில்லை என்பதே என் நினைவு. இப்படியொரு முயற்சியை ஜெயமோகனோடு தன்னை நிகராகவும் முன்னோடியாகவும் நினைக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்குக் கனடாவின் இலக்கியத் தோட்டம் அளித்த விருதுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முயற்சி செய்து பார்த்தார். திரு வைரமுத்துவும், திரு. ரஜினிகாந்தும் கலந்து கொண்ட அந்த விழாவை அவரது நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் நடத்தியது. அதன் கலவையில் நவீனத்துவக் குடுவை இடம் பெறாமல் போனது. முற்ற முழுதானது வெற்றுப்பரபரப்பு நிகழ்வாக முடிந்து போனது. இவர்களிருவரோடும் தொடர்ந்து போட்டிக்களத்தில் இருக்க நினைக்கும் இன்னொருவர் சாரு நிவேதிதா. தன்னைப் பின் நவீனத்துவ எழுத்தாளர் என அறிவித்துக் கொண்டவர். தனது புத்தக நிகழ்வுகளுக்குக் கனிமொழி, நல்லிகுப்புசாமி, பார்த்திபன், மிஷ்கின், குஷ்பு,வாலி, மதன் எனப் பலரைப் பங்கேற்கச் செய்திருக்கிறார். அப்படிச் செய்யும்போதெல்லாம் அவர்களை நவீனத்துவச் சாயல் கொண்டவர்கள் அல்லது நவீனத்துவ வாசிப்பு நிரம்பியவர்கள் எனச் சொல்லிக் காட்டி நிறுவியபடியே பரபரப்பை உருவாக்கிவிட முடியுமென்று நம்புவார். நவீனத்துவத்திலிருந்து விலகிப் போகிறார் என்ற குற்றச்சாட்டு வரும் என்ற மனதின் பதைபதைப்பு அது.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அமைப்பினர் அப்படியெல்லாம் எந்தக் குற்றவுணர்வையும் வெளிப்படுத்தவில்லை. திரு.வைரமுத்து அல்லது திரு. மு. கருணாநிதியின் நூல் வெளியீட்டு விழாவில் நடக்கும் அத்தனை அம்சங்களோடும் அமையப்போகிறது அந்த நிகழ்வு; ஒரு பெரும் வேறுபாட்டுடன். வெண்முரசின் நான்கு தொகுதிகளில் முதற்கனலையும் மழைப்பாடலையும் பெருவெளி மனிதர்களான கமல்ஹாஸனும் இளையராஜாவும் வெளியிடப் போகிறார்கள். வண்ணக்கடலையும் நீலத்தையும் சிறுவட்டத்து ஆளுமைகளான அசோகமித்திரனும் பி.ஏ. கிருஷ்ணனும் வெளியிட இருக்கிறார்கள். இவர்களோடு இடைநிலைப்பரப்பில் அலையும் நாஞ்சில்நாடனும் பிரபஞ்சனும் வாழ்த்துரை வழங்கிட இருக்கிறார்கள்.
பெருவெளி மனிதர்களும் குறுவெளி மனிதர்களும் இடைவெளி மனிதர்களும் இணையும் அப்பெருநிகழ்வில் விளிம்பில் அலையும் பாரதக் கதைசொல்லிகளும் மேடையேற்றப்பட உள்ளார்கள். பாரதக் கதைசொல்லலும், பதினெட்டுநாள் கூத்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செய்யாறு வட்டாரங்களிலிருந்து முனைவர் இரா.வ. கமலக்கண்ணன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு ஏ.கே. செல்வதுரை, திரு தேவன், திரு இராமலிங்கம் ஆகிய ஐந்துபேரும் கௌரவிக்கப்பட உள்ளார்கள். இவர்கள் இப்பெருநிகழ்வில் கவனிக்கப்படவும் கௌரவிக்கப்படவும் உள்ள காரணங்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தர்க்கம் அறிவின் பாற்பட்டது. அறிவு நவீனத்துவத்தோடு தொடர்புகொண்டது.
சமகால இந்திய எழுத்துகளுக்கு அளிக்கப்படும் சாகித்திய அகாடெமி, ஞானபீடம் போன்ற விருதுகளுக்குத் தமிழில் எழுதும் ஜெயமோகன் ஆகத்தகுதியானவர் என்பது எனது நிலை. ஆனால் அவரது வெண்முரசை முன்வைத்து இந்த விருதுகள் வழங்கப்படும் வாய்ப்பு உருவாகிவிடும் என்றால் அதனைக் காலத்தின் கோலம் என்று கருத வேண்டும். மகாபாரதம் தமிழில் நாவல் வடிவில் என்றும், அதன் தொகுதிகளை உலகின் மிகப்பெரிய நாவல் வரிசை என்றும் அழைப்பிதழின் முதல் வாசகங்கள் சொல்கின்றன. அதனைப் படிக்கும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொருவரும் வெண்முரசை நம் காலத்து மொழியில் -உரைநடையில்- எழுதப்படும் பாரதக் கதையாகவே வாசிக்க வேண்டும் என்பதே அதன் கட்டமைப்பும் கூற்று முறையும் கோரும் ஒன்று ; நான் அப்படித்தான் அவ்வப்போது வாசிக்கிறேன்;ரசிக்கிறேன். ஒவ்வொராண்டும் பாரதக்கூத்தை வெவ்வேறு குழுக்கள் வழி நிகழ்த்திப் பார்த்து ரசிக்கும் வட தமிழ்நாட்டுப் பார்வையாளனின் ரசிப்பு மனோபாவம் போன்றது அது. ஆனால் பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரதக் கூத்து அல்ல. தரம்வீர் பாரதியின் இருள்யுகம் (Andha Yug ) பாரதக் கதை அல்ல. சமகால இந்தியர்களுக்கான பாரத வாசிப்பு. வெண்முரசு சமகாலத் தமிழ் நடையில் எழுதப்பெற்ற மகாபாரதம். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் போல. இந்த வேறுபாட்டை இல்லாமல் ஆக்கிவிடும் பின் நவீனத்துவ நிகழ்வாக அடுத்தவாரம் நடக்கும் பெருநிகழ்வு அமைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
தற்காலிக விளையாட்டுகள்
ஜூன் 25, 2007
இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மதிப்பிற்குரிய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அந்தப் போட்டியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை வைத்து மூன்றாம் அணியினர் அரங்கேற்றிய நகைச்சுவைக் காட்சிகள் அவ்வளவு தூரம் மறந்து போகக் கூடியன அல்ல. ‘‘என்னையெ வச்சு எதாவது காமெடி கீமடி பண்ணலயே ..’’ என்ற வடிவேலுவின் மிகப்பிரபலமான உரையாடல் ஞாபகம் வந்தால் கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். நாம் பேசப்போவது ஆழமான சங்கதி. ஆம். இந்திய தேசத்தின் இப்போதைய அரசியல் நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றி. இதுவும் காமெடியான விசயம் தான் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவில் நடப்பது அதிகாரப் பங்கீட்டு அரசியல். பெரும்பாலான மாநிலங்களிலும் கூட இந்த அதிகாரப்பங்கீட்டு அரசியலே நடக்கிறது என்றாலும் தூக்கலாகத் தெரிவது மைய அரசாங்கத்தின் கட்டமைப்பில் மட்டும் தான். மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது சாதியில் செல்வாக்குப் பெற்றுள்ள தலைவர் ஒருவர் நான்கு அல்லது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தேசிய அரசாங்கத்தில் காபினெட் அமைச்சராகவும், துணை அமைச்சராகவும் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக ஆக்கிப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.. அதன் வழியாக அவரது கட்சியைப் பொருளாதார ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலமான கட்சியாகக் காட்ட முடிகிறது. தனியொரு கட்சியாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளின் அதிகாரப் பசிக்குத் தீனி போட்டுத் தங்கள் பசியையும் தீர்த்துக் கொள்ளும் இந்த விளையாட்டு தேசிய நலனுக்கு உகந்ததா? என்று கேள்வி எழுப்பினால் பலர் சொல்லும் பதில் ‘‘இல்லை’’ என்பது தான். மாநிலக் கட்சிகளின் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கம் நடந்து கொண்டால் பெரும் ஆபத்துக்களும் மோசமான விளைவுகளுமே உண்டாகும் எனப்பலர் எச்சரிக்கை செய்யவும் செய்கின்றனர். அப்படிச் சொல்கிறவர்கள் எண்ணிக்கை பெரும்பான்மையானது என்ற போதிலும், மாறுபட்ட பதிலைச் சொல்லக்கூடிய சிறுபான்மையினர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்திய தேசம் என்பது அடிப்படையில் ஒற்றை தேசம் அல்ல. மொழி, இனம், மதம், பண்பாடு போன்றவற்றால் வேறுபட்ட அடையாளங்களைக் கொண்ட தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒரு துணைக்கண்டம் எனவும், அதற்கேற்ற அரசியல் வடிவம் கொண்ட மைய அரசு இப்பொழுதுதான் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் அதனதன் இருப்பிற்கேற்ப மைய அரசில் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ள இந்த அமைப்புத்தான் இப்பொழுது சாத்தியம் என்பது அவர்களின் வாதம்.
இந்த வாதங்களை அரசியல் தத்துவம் சார்ந்த அறிஞர்கள் நவீனத்துவ அரசியல் (Modern politics ), பின் நவீனத்துவ அரசியல்(Post Modern politics) என்ற இரண்டு சொற்களால் குறிக்கின்றனர். நவீனத்துவ அரசியல் , பின்-நவீனத்துவ அரசியல் என்று வரிசைப்படுத்தியவுடன் ஒன்று முந்தியது; அடுத்தது அதிலிருந்து சில மாற்றங்களையுடையது என நினைத்து விட வேண்டிய தில்லை. பின் நவீனத்துவ அரசியல் நவீனத்துவ அரசியலிலிருந்து ஏறத்தாழ எதிரானது என்றே சொல்லலாம்.நவீனத்துவ அரசியல் தேச நலன், மக்கள் நலன், பொது அறம், தனிமனித ஒழுக்கம், அரசியல் சட்டத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டது. நீதிமன்றங் களில் வழங்கப்படும் நீதி நடுநிலை தவறாத நீதியாக இருக்கிறது; இருக்க வேண்டும் என்பதான நம்பிக்கைகளும் இலட்சியங்களும் கொண்டதாக இருக்கும். நீண்டகாலத் திட்டத்தை முன் வைத்தல் , அதைச் செயல் படுத்தும் வழி முறைகளைக் கண்டறிதல் ,முன் எடுக்கும் திட்டம் சாத்திய மானதுதானா ? என்ற கேள்விகளை எழுப்புதல், இல்லை யென்றால் கைவிட்டு விட வேண்டும் என்ற விருப்பம் போன்றனவெல்லாம் நவீனத்துவ அரசியலுக்கு உண்டு.பின் நவீனத்துவ அரசியலுக்கு இவையெல்லாம் இருக்கும் என்று சொல்ல முடியாது.இவையெல்லாம் இருக்கவே கூடாது என்றும் அது சொல்வதில்லை; பின் நவீனத்துவ அரசியல் அடிப்படையில் தற்காலிகத் தன்மையில் அதிகம் பிடிப்புக் கொண்டது. நிரந்தரம் என்ற ஒன்றில் அதிகம் நம்பிக்கை கொள்ளாமல்,இப்போதைக்கு இதைச் செய்வோம்; அதன் விளைவுகள் என்னவாக இருக்கிறதோ அதற்கேற்ப அடுத்த கட்டத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என நம்புவதும் பாவனை செய்வதும் தான் பின் நவீனத்துவத்தின் வெளிப்பாடு. உண்மை என்ற ஒன்றே நிரந்தரமானதல்ல என்ற கண்டுபிடிப்புக்குப் பின்னால் , அறம், அன்பு , காதல், தியாகம் என்ற எல்லாமுமே பாவனைகள் தான் என்று பின் நவீனத்துவம் விளக்கிக் காட்டியிருக்கிறது. தனிமனித வாழ்க்கை சார்ந்த இவையெல்லாம் பாவனைகள் என்று ஆன பின்பு நடுநிலைமை, மக்கள் நலன், தேசப்பற்று, தார்மீக நெறி போன்ற அரசியல் சொல்லாடல்களும் பாவனைகள் தான் என்று ஆகி விட்டன.
ஒருவித இரண்டுங்கெட்டான் நிலையில் எல்லாவற்றையும் கணிப்பதும் இயங்குவதும் தான் பின் நவீனத்துவ அரசியலின் தன்மை என்பதால் தான் இந்தியா போன்ற வளர வேண்டிய நாடுகளில் பின் நவீனத்துவ அரசியல் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும் என்கின்றனர்.இன்று அதிகாரத்தில் உள்ள மைய அரசு முன் வைக்கும் பொருளாதார திட்டங்களும் வளர்ச்சித்திட்டங்களும் முழு மனத்தோடும் நம்பிக்கையோடும் முன் வைக்கப்படும் திட்டங்கள் அல்ல என்பதை நமது பிரதம மந்திரியும் அவரது சகாக்களான நிதி அமைச்சர், திட்டக்குழுத் தலைவர், பொருளாதார ஆலோசகர் போன்றவர்களின் அமைதியான உரைகளே காட்டுகின்றன. திட்டமான விளைவு களைச் சொல்ல முடியாமல் நழுவும் அந்த உரைகள் அவ்வாறு அமையக் காரணம் முழுமையான நம்பிக்கையுடன் அவை முன் வைக்கப் படவில்லை என்பது தான். பின் நவீனத்துவ அரசியலின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலேயே மாநில அரசுகள் தற்காலிகச் சலுகைகளை வழங்கும் திட்டங்களை முன் வைத்துத் தங்களைத் தற்காலிகமாகத் தற்காத்துக் கொள்கின்றன.
நவீனத்துவ அரசியலிலிருந்து பின் நவீனத்துவ அரசியலுக்கு இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் மதிப்பிற்குரிய அப்துல் கலாமின் பெயரை வைத்து உண்டாக்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நவீனத்துவ அரசியல் மறைந்து முழுமையாக மறைந்து பின் நவீனத்துவ அரசியல் - ஒட்டுமொத்த இந்தியா விலும் தற்காலிகத்தனத்தை முழுமையாக நம்பும் - எல்லாவற்றையும் சந்தேகத்தோடும் நம்பிக்கையோடும் கவனிக்கும் பாவனை சார்ந்த வெளிப் பாடுகள் பரவிக் கிடக்கின்றன என்பதற்கு அந்த நிகழ்வுகள் சரியான எடுத்துக் காட்டாக ஆகி விட்டது என்பதனால் அதை எடுத்துக் காட்ட வேண்டியதாகி விட்டது.
அப்துல்கலாமின் பெயர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தப் பெயரை முன் மொழிந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது நம்பிக்கையையும் அறம் சார்ந்த மதிப்புகள் மீதும், இலட்சியங்கள் மீதும் , தேசத்தின் மீதும் , தேசநலன் மீதும் நம்பிக்கை கொண்டவர்களின் அரசியல் நடக்கிறது என்ற நம்பிக்கையை உண்டாக்க அந்தப் பெயர் பயன்பட்டது. ஆம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நேர்மறை விளைவை உண்டாக்கிய அப்துல்கலாம் என்ற பெயர் ஐந்தாண்டுக்குப் பின்னும் அந்த மாயத்தைச் செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பது ஏன்? பின் நவீனத்துவ நிலை முழுமையாக ஏற்பட்டு விட்ட நிலையில் அந்தப் பெயரும் தற்காலிக உச்சரிப்பாக ஆகி விட்டது. அவரது பெயரை முன் மொழிந்த மூன்றாவது அணியினரும் அந்த முன் மொழிதலைத் தற்காலிகத் தன்மை யுடன் தான் முன் மொழிந்தனர் என்பதும் கூட தெரிந்ததுதான். இடதுசாரி களும் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியும் அப்துல் கலாமின் பெயரை நிராகரித்து விட்டு பிரதிபா பாட்டீல் என்ற பெயரை முன் மொழிந்த பின்பு திரும்பவும் அந்தப் பெயரை முன் மொழிதல் ஒருவித பின் நவீனத்துவ விளையாட்டல்லாமல் வேறல்ல. அதிக பட்சமாக ஒருவாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காத அந்த விளையாட்டை ஊடகங்களும் உற்சாகமாக விளையாண்டன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஊடகங்களுக்கு இந்த மாதிரி பின் நவீனத்துவ விளையாட்டு புதியது அல்ல. ஏற்கெனவே மாணவர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் அறிவாளிகளும் அப்துல்கலாம் திரும்பவும் குடியரசுத்தலைவர் ஆவதை விரும்புகிறார்கள் என்று அவை விளையாடத்தொடங்கிப் பல மாதங்கள் ஆகி விட்டன. குடியரசுத்தலைவர் தேர்தல் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துத் தேர்வு செய்யும் ஒன்று என்பதை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் அறியாதவை அல்ல. பொது மக்களின் குரல்களுக்கும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கைக்கும் அங்கு வேலையே இல்லை என்று தெரிந்த பின்பும் அந்தத் தற்காலிக விளையாட்டை விளையாடுவதில் அரசியல்வாதிகளோடு ஊடகங்களும் சேர்ந்து விளையாண்டன என்பதை விட மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமும் சேர்ந்து விளையாண்டதுதான் ஆச்சரியம்.
கருத்துகள்