திலீபன்: தொன்மமாக்கும் புனைவுகள்


சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).
கதையின் தொடக்கம், கர்ப்பமாக இருக்கும் பெண்ணொருத்தியைப் பரிசோதனை செய்து முடிக்கும் மருத்துவர் ஒருவரின் கூற்றோடு தொடங்குகிறது.

“மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!”
மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவ‌ர் சொன்னாள்.

என்று தொடங்கும் உரையாடல் அவளை இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனரின் மனைவி என்பதாகக் காட்டுகிறது. இந்தக் காட்சியின் அடுத்த நிகழ்வு, மிஷ்ராவுக்கும் அவர் மனைவி அஹிம்சாவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்:

“உங்களுக்கு லீவ் கிடைக்குமா?”
“இப்போதைக்குக் கஷ்டம்.”
“ம்.”
“புதுத் தலை வலி வேற ஆரம்பிச்சிருக்கு.”
“என்னது?”
“ஒரு சின்னப் பையன் தொந்தரவு கொடுக்கறான்.”
“போராளியா?”
“ஆமா. இருபத்து மூணு வயசுதான்.”
“போர் நிறுத்தம் அமலில் இருக்கே?”
“அவன் ஆரம்பித்திருப்பது பட்டினிப் போர்!”
“ஓ! முப்பது வருச அறவழிப் போராட்டம் வேலைக்காகலனுதானே ஆயுதம் ஏந்தினாங்க!”
“இப்ப மறுபடி ஏதோ ஞானோதயம்!”
“ஒருவேளை, இனி இப்படித்தானோ?”
“இல்ல‌ இல்ல‌. போரும் அமைதியும் மாறி மாறித்தான் வரும். அமைதி நிலவுகையில் போராட வேறு வழியில்லை, அஹிம்சை மார்க்கத்தைத்தான் தேர்ந்தெடுத்தாகனும்.”
“ம்ம்ம். அப்படியா சொல்றீங்க?”
“ஆமா. ஒரு முறை துப்பாக்கி பிடிச்ச கை, கடைசி வரை அதை விடாது, விட முடியாது.”
“விடக்கூடாதுன்னும் சொல்லிடுவீங்க‌ போல!”
மிஷ்ரா அடிபட்டவன் போல் அஹிம்ஸாவைப் பார்த்தான். அவள் கவனிக்கவில்லை.


தனக்கு வழங்கப்பட்ட உயர் பொறுப்புப்பணிகளை முதன்மையாக நினைக்கும் கணவன் மிஷ்ரா தனது பிள்ளைப்பேற்றின் போது உடனிருப்பானா? என்ற ஐயத்தோடு கேட்கும் மனைவி அஹிம்சாவுக்கு உறுதியான பதிலைத் தராமல், மாற்றுப் பதிலாக நீள்கிறது.

இந்த உரையாடலில், ஒரு மனிதனும், அவன் உருவாக்கிய நிகழ்வும், அந்நிகழ்வு நடந்த காலமும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்புகள் வழியாகப் புனைகதை, வரலாற்றுப் புனைகதையாக ஆக்கப்படுகிறது. வரலாறும் புனைவும் மாறிமாறி நிகழும் ஒன்றாக மாறும் கதையில் ஒவ்வொரு நாள் முடிவிலும் குழந்தைப் பேற்றுக்கான ஒரு நாள் குறைந்துவிட்டது என நாட்கள் எண்ணப்படுகின்றன. எண்ணிக்கொண்டே குழந்தை பெற்றுக் கொள்ளும் நாளை எதிர்நோக்கியிருக்கும் மிஸஸ் ஷர்மா. நாட்களை எண்ணிக்கொள்வதற்கு முன்னால், உண்ணாவிரதம் தொடங்கியவனைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இருக்கிறாள். அதன் மூலமாகப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் அந்தப் போராளிக்குமிடையே ஒரு தொடர்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தத் தொடர்பைக் கதையின் முடிவாக எழுதப்பெற்றுள்ள சங்கப் பெண்கவி ஒருத்தியின் படிமக்காட்சியை எழுதிக்காட்டுவதின் மூலம் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட திலீபனின் மறுபிறப்பே அந்தக் குழந்தை என்பதான தொன்ம நிலைக்கு நகர்த்தியுள்ளார் சரவண கார்த்திகேயன்.

ஒரு புனைகதைக்குள் அறியப்பட்ட நிகழ்வொன்று புனைவாக மாறும் விதத்தைக் காணலாம்:

பெற்றோர் பார்த்து உருவாக்கிய திருமணவாழ்வில் இணைந்து கொண்ட கணவன் –மனைவிக்கிடையே தங்களின் புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் காட்டிக்கொள்வதற்காக இப்படியொரு ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.மிஷ்ராவும் அஹிம்சாவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, ஆண் குழந்தை பிறந்து, பெயர் வைக்கும் வாய்ப்பை அஹிம்சா பெறுகிறாள். வாய்ப்பைப் பெற்றவள், மிஷ்ராவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் புதிய தலைவலியாக மாறிய அந்தப் போராளியின் பெயரை வைப்பேன் எனப் பிடிவாதம் செய்கிறாள். அந்தப் பெயரை வைப்பதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டும் கணவனோடு ஏற்படும் முரணோடு கதை முடிவடைகிறது.

பெற்றெடுத்த மகனுக்குப் பெயரிடுவதை முரணாகக் கொண்ட கதையில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது (மஹாத்மாவையும் அவரது கொள்கைகளையும் பிடித்துப் போனதால் தனது இரட்டைக்குழந்தைகளுக்கு – அஹிம்ஷா என மூத்தவளுக்கும், இளையவளுக்கு சத்யா எனவும் பெயர் வைக்கிறார்) உண்ணாவிரதம் தொடங்கிய போராளியின் பெயரைச் சொல்லாமல், நிகழ்வுகளின் வழியாகவே அப்பாத்திரத்தையும் அதன் தீவிரத்தையும் உணரச்செய்வதோடு, வாசிப்பவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது கதை. கதையின் நிகழ்வெளிகளாகக் கொழும்புவில் - இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனரின் இல்லம், அலுவலகம்,மருத்துவமனை என உருவாக்கிக் கொண்டு, அதன் எதிர்வெளியாக யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவில் வளாகத்தையும் உண்ணாவிரத மேடையையும் யாழ்ப்பாணப்பகுதிக் கிராமங்களையும் நிறுத்துவது, உண்ணாவிரத காலத்தையும் குழந்தைப் பிறப்புக்கான தேதி குறித்தலையும் இணைநிலைப்படுத்திக் கணக்கிட்டுக் கச்சிதமாகக் கதையை வடிவமைப்பதின் மூலம் அதனைச் செய்கிறார் சரவண கார்த்திகேயன்.

இந்தக் கச்சிதமான கணக்கீடுகளோடு கதைக்குள் வேறுசில தகவல்களையும் உரையாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. அந்த உரையாடல்கள், இலங்கையின் உள்நாட்டுப்போரில் இந்தியாவின் நிலைபாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் விமரிசனப்பார்வைகளோடு ஒத்துப்போகக் கூடியன. மொழி மற்றும் சமய வேறுபாடு காரணமாகத் தங்களைத் தனி இனமாக நினைத்த ஈழத்தமிழர்கள், பெரும்பான்மை இனமான சிங்களர்களால் ஒதுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த நிலையில் தோன்றிய பிளவுகளே, இலங்கையின் உள்நாட்டுப் போராக மாறுவதற்கான காரணங்களாக இருந்தன. தேசிய இனப்பிரச்சினைகள் தோன்றும்போது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கும் அரசாக இந்திய அரசு இருந்தது (வங்கதேசப் பிரிவினை) என்பதால், ஈழத்தமிழர்களுக்கும் தனி ஈழம் அமைக்க உதவும் வாய்ப்புண்டு என நம்பினார்கள் போராளிகள். அத்தோடு தங்களின் தாய்மொழியான தமிழ்ப்பேசும் இனத்தவர்கள் அதிகம் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்குத் தங்களின் உரிமையை நிலைநாட்டவேண்டிய தார்மீகக் கடமையும் இருப்பதாகவும் நினைத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் நிலைப்பாடுகளும், பெருந்திரளான தமிழர்களின் எழுச்சியான ஈழ ஆதரவுப் போராட்டங்களும் அதனை உறுதி செய்திருந்தன. அந்த அடிப்படையில் தான் தனி ஈழத்துக்கான ஆயுதப் போரை நடத்திய போராளிகள், இந்தியாவின் தலையீட்டைக் கோரினார்கள். உணவுப் பொட்டலங்களை வழங்கி மனிதாபிமான முகம் காட்டிய இந்திய அமைதி காக்கும் ராணுவத்தை வரவேற்றார்கள். ஆனால் ராணுவம் ஈழநாட்டிற்குள் நிலைகொண்ட பின் நடந்தவைகளோ வேறானவைகளாக இருந்தன. இந்திய அரசாங்கம், இந்துப் பெருங்கடல் சார்ந்த நிலவியல் அரசியலோடு இணைத்துத் தனது வல்லாதிக்க நலனோடு இலங்கையின் உள்நாட்டுப் போரை அணுகியது என்பது ஈழத்தமிழர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் விமரிசனம்.

ஈழத்தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்கு முன்பே இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் முரண்நிலைகள் உண்டு. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினர் (மலையகத் தமிழர்கள்) மறுவாழ்வு தொடர்பான முரண்நிலையொடு, கடல் எல்லைக்குள் மீன் பிடித்தல், தீவுகளுக்கு உரிமை கோருதல் எனத் தொடர்ந்த முரண்நிலையோடு சேர்ந்த ஒன்றாகவே ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையையும் இந்தியாவின் அயல் உறவு அதிகாரிகள் கையாண்டார்கள் எனப்பலவாறான விமரிசனங்கள் உண்டு. தனி ஈழநாட்டுக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தில் இந்திய அரசின் ஈடுபாடும் ராணுவ நடவடிக்கைகளும் எடுத்த தீர்மானங்களும் எடுக்காமல் தள்ளிப்போட்ட முடிவுகளுமான தகவல்களையும் தனது கதைக்குள் பாத்திரங்களின் உரையாடல் வழியாகத் தருவதன் மூலம் சரவண கார்த்திகேயனும் இந்திய அரசின் நிலைபாட்டை விமரிசிக்கும் பார்வையோடு இணைந்துகொள்கிறார். ஆனால், சரவண கார்த்திகேயனின் கதையின் முதன்மை நோக்கம் அதுவல்ல என்பது சுவையான நகைமுரண். 

அவரது கதையின் நோக்கம் இன்னொன்றாக இருக்கிறது. காலனியாதிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்த விடுதலைப்போராட்டத்தை ஆயுதம் ஏந்தாமல் நடத்திக்காட்ட முடியும் என உலகிற்கு உணர்த்தியது காந்தியின் இந்தியா. ஆனால் அதே இந்தியாவின்- இந்திய அரசின் - கொள்கைகள் அல்லது திட்டமிடல்கள், ஆயுதங்களைக் கைவிடத்தயாரான விடுதலைப் புலிகளைத் திரும்பவும் ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றியது என்பது சரவண கார்த்திகேயனின் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டைத் தனது கதை வழியாக உணர்த்துவதின் மூலம், கொல்லப்பட்ட இந்திய மனச்சாட்சியின் குரலாக - குற்றவுணர்வற்ற போக்கின் மீது கவனத்தைத் திருப்புகிறது கதை. இந்தக் கவனக்குவிப்பை நிறைவேற்றும் வகையில் அவரது கதையின் சொல்முறையும், கதை நிகழும் வெளிகளின் தேர்வும், கால அளவும் இருக்கின்றன. குறிப்பாக கதை நிகழும் கால அளவுக் கணக்கீடுதான் கதையைத் தீவிரமான அரசியல் விமரிசனக் கதையாக மாற்றியிருக்கிறது. திலீபனின் 265 மணி நேர உண்ணாநிலையை – நீரையும் மறுத்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தெரிவு செய்து கதையின் மைய விவாதமாக்கியதின் மூலம் அதனைச் செய்திருக்கிறார்.

பிறந்த குழந்தைக்கு முந்திய ஒப்பந்தப்படி மனைவி விரும்பும் திலீபன் என்ற பெயரைச் சூட்டுவதை மறுப்பதாக மாறும்போது மிஸ்டர் மிஷ்ரா, மிஸஸ் மிஸ்ராவின் கணவனாக இல்லாமல் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்ற தன்னிலைக்கு மாறுகிறார். மிஷ்ராவின் தன்னிலை மாறும்போது மிஸஸ் மிஸ்ரா, தானும் அந்நிலையைக் கைவிட்டுக் காந்தியவாதி அப்பாவால் அஹிம்சா எனப்பெயரிடப்பட்ட தன்னிலைக்குள் நகர்கிறாள். இந்த நகர்வுகள் இரு பாத்திரங்களையும் எதிரெதிர் கருத்துநிலைகளின் குறியீடுகளாக மாற்றுகின்றன. திலீபன் என்ற பெயரிட முடியாது என்றால், அந்தப் பெயரிடும் வாய்ப்பைப் பெறும் இடத்திற்குக் குழந்தையை அனுப்பிவிடும் தியாகம் செறிந்த அன்னையின் இடத்திற்குரியவளாக மாற அவள் தயாராகிறாள். அந்த மாற்றம், காவற்பெண்டுவின் கவிதையின் வரும் தாயின் பிம்பம். அந்தத் தாயின் பிம்பம்,

வேல் வீற்றிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தான‌க் கருவறை வாசலில் கிடத்தப்பட்டிருந்த ஆண் குழந்தையை வேங்கை ஒன்று கண்டெடுத்தது. அதை வாயில் கவ்வியபடி மெல்ல நடந்தது. அஹிம்ஸாவின் மார்பில் ஒரு துளி பூத்து உடை ஈரமானது.

என எழுதிக்காட்டப்படும் படிமக்காட்சி மூலம் குழந்தையையும் தன்னையும் தொன்மப்பாத்திரங்களாக ஆக்கிக்கொள்கிறது.

****

கலை, இலக்கியப்பிரதிகளில் தொன்ம ஆக்கம் செய்யப்படும் பாத்திரங்களே பின்னர் சாமிகளாக ஆக்கப்பட்டு, தெய்வங்கள் ஆகியிருக்கிறார்கள். வரலாற்றில் இருந்த ஒரு மனித உயிரியைப் புனைவுக்குள் பாத்திரமாக்கும் போது தொன்ம ஆக்கம் செய்யும் எழுத்தாளர்களுக்கு, மனித உயிரியைத் தெய்வமாக்குவது நோக்கமாக இருப்பதில்லை. ஆனால் எழுத்தாளர்களின் புனைவுக்குள் மனித வாழ்வின் சாராம்சத்தை மீறிய குறியீடாக -மிகைப்பட்ட ஒரு பண்பின் அடையாளமாக மாறிவிடும் அந்த மனித உயிரி, ஒரு கருத்தியலின் வெளிப்பாடாக மாறி மக்கள் திரளின் மனதிற்குள் இடம் பிடித்துக் கொள்ளும் மாயம் நடக்கும். அந்த மாற்றமே மனிதர்களை – அதிமனிதர்களாக்கித் தெய்வமாக்குகிறது.

1987, செப்டம்பர், 26 இல் தன் மரணத்தை உறுதி செய்த திலீபனின் நினைவேந்தல்கள், ஒவ்வொரு ஆண்டும் திரள் மக்களிடம் அதிகரித்துக் கொண்டே இருப்பதையே ஒவ்வோராண்டு நிகழ்வுகளும் காட்டுகின்றன. அதே நேரம், விடுதலைப்புலிகளின் போராட்ட உத்திகளையும் ஆள்சேர்ப்பு முறைகளையும் தனியதிகார நிலைப்பாட்டையும் விமரிசனம் செய்யும் மாற்றுப் பார்வையாளர்கள், திலீபனையும் ஆயுதப் போராளியாகவே முன்வைத்து எழுதுகின்றனர். இந்த விமரிசனங்களையும் பார்வைகளையும் பொருட்படுத்தாத அளவுக்கு திலீபனின் மரணம் நினைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் கோவில் வளாகத்தில் நடந்த நினைவேந்தல்களும் கொண்டாட்டங்களும் நேர்த்திக் கடன்களும் காணொளிக்காட்சிகளாகக் கிடைக்கின்றன. அந்தக் காட்சிகள் சொல்வது திலீபன் மறக்க முடியாத தொன்மப்பாத்திரமாக – தனது கொள்கையில் –போராட்டத்தில் பின்வாங்காத அதிமனிதனாக ஆகிவிட்டார் என்பதையே. திரள் மக்கள் மனதில் தொன்மமான பாத்திரங்களே, எழுத்துப்பனுவல்களுக்குள் மறு ஆக்கம் பெறுகின்றனர். ஒரு இந்தியத் தமிழ் எழுத்தாளராகச் சரவணன் கார்த்திகேயன் அதைச் செய்திருக்கிறார். இதே நிகழ்வை வேறு ஒருவிதத்தில் எழுதிய கதையொன்றை எழுத்தாளர் சோபாஷக்தி உயிர்மையில் எழுதியிருந்தார். அந்தக் கதையின் தலைப்பு: மெய்யெழுத்து. அதனைக் குறித்துப் பின்னர் எழுதலாம்.

***************

காவற்பெண்டுவின் புறநானூற்றுக்கவிதை

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!

(http://www.writercsk.com/2023/10/652.html) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்