உளவியல்களை எழுதுதல்
தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன. உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக்காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்கவேண்டியுள்ளது. இவ்விரண்டு கதைகளும் தனிமனித உளவியலைப் பொதுமன உளவியலாக - அதன் காரணங்களோடு எழுதியுள்ளன. கட்டுரையை வாசித்துவிட்டுக் கதைகளையும் தேடி வாசிக்கலாம்.
அவரவர் நியாயங்கள் : அரவிந்தனின் முகங்கள்
ஒவ்வொரு அமைப்பின் கண்ணிகளும் நடைமுறைகளையும் விதிகளையும் கொண்டனவாக இருக்கின்றன. சுமுகமான நடைமுறைகள் பிசகிவிடும்போது விதிகள் முன்வந்து நிற்கும். விதிகளைக் கூறி விவாதிக்கத் தொடங்கும்போது அதிகாரப்படி நிலைகள் முகங்களாகிவிடுகின்றன.
அதிகாரப்படிநிலைகள் இல்லாத அமைப்புகள் ஏதாவது இருக்கின்றனவா? என்று தேடலில் தோல்விகளே கிடைக்கின்றன. தனிமனிதர்களின் அந்தரங்க வெளிகளென நினைக்கும் குடும்பத்திற்குள் செயல்படும் அதிகாரப்படிநிலை, 'இட்லிக்குப் பதில் சப்பாத்தி' வேண்டுமெனப் பிடிவாதம் காட்டுவதாக வெளிப்படுகின்றது. பணியிட அதிகார முகங்களை வெளிக்காட்ட, திட்டமிட்ட பதவி அடுக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் சுரண்டும் அமைப்பின் மீது பணியாளர்கள் காட்டும் எரிச்சலும் வன்மமும் தவறுகளை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளுகின்றன. மேலிருந்து வரும் அழுத்தங்கள், தனக்குக் கீழிருக்கும் பணியாளரைக் குதறிப்பார்ப்பதைச் சரியானது எனச் சொல்லும்.
அதிகாரத்தை விதிகளாக மாற்றி வாழிடங்களில் உருவாகும் நெருக்கடிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத அதிகாரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. செயல்படும் அதிகாரம் ஒரு போதை என்றால், அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் தப்பிப்பதற்கான போதைகளை நாடுகிறார்கள். அந்தப் போதைகள் குற்றச்செயல்களாகக் கருதப்படும் வாய்ப்புகள் இருந்தபோதும் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஈடுபடவே செய்கிறார்கள். பாலியல் மீறல்கள் நியாயமாகும்.
மது, அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் ஒருவரது உடலின் இருப்பை இல்லாமலாக்கித் தற்காலிகமான தளர்வுகளை உருவாக்குகின்றன. அத்தகைய போதைப்பொருட்களின் பட்டியலில் சமூகம் அனுமதிக்காத பாலியல் உறவுகளும் இருக்கின்றன. ஆனால் அதனைக் குற்றச்செயலாகவோ, போதைப்பொருளாகவோ நினைக்காமல் வேறு வகையான பெயர்களில் அழைத்துக் கொண்டிருந்தது பழைய சமூகம். அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதனை மாற்றுவதில் நவீனத் தொழில் நுட்பம் பங்காற்றுகிறது; விரைவு படுத்துகிறது. குற்றம் பற்றிய விதிகளும் நடைமுறைகளும் அதற்கேற்ப மாற்றம் அடைகின்றன.
இப்படியான எண்ணவோட்டங்களை முன்வைக்கும் கதையொன்றை -பதற்றமான முகங்களுக்குப் பின்னால் அலையும் மனங்களைத் திறந்து காட்டும் கதையொன்றை இம்மாத அம்ருதாவில் (அக்டோபர், 2023) எழுதியுள்ளார் அரவிந்தன். பாத்திரங்களின் வழியான இணைப்பைத் தவிர்த்துவிட்டு, மனித மன வெளிப்பாடுகளைக் கொண்ட வெவ்வேறு நிகழ்வுகளின் வழியாகத் தொடர்ச்சியை உண்டாக்கும் கதை சொல்லும் முறையில் அக்கதை எழுதப்பட்டுள்ளது. தொடர்பற்ற கதை சொல்லலைப் பின்பற்றுவதில் விருப்பம் கொண்ட அரவிந்தனின் இந்தக் கதை , நமது காலத்தின் வெளிப்பாடு. - பின் நவீனத்துவ மனிதர்களின் அலையும் மனநிலைகளின் தொகுப்பைக் கதையாக்கித் தருவதில் அரவிந்தனுக்கு விருப்பம் உண்டு. அந்த விருப்பம் இந்தக் கதையில் வெளிப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: முகங்கள். ஆனால் கதைக்குள் வெளிப்படுவன மனங்கள்.
போர்ச்சத்த உளவியல் -ப.தெய்வீகனின் ரம்போ
தனிமனிதர்களின் உளவியல் சிக்கல்கள் எழுதத் தூண்டும் காரணிகளாக இருக்கின்றன. ஆனால் எவ்வகையான உளவியல் சிக்கல்கள் எழுதத் தூண்டுகின்றன என்ற கேள்விக்கு ஒவ்வொரு எழுத்தாளர்களும் வெவ்வேறு விடைகளையே சொல்வார்கள். ஆண் –பெண் உறவில் இருந்த மீறல்கள் தொடர்ந்து விமரிசனத்திற்கும் விவாதத்திற்கும் உரியனவாக இருந்ததை மரபுத்தமிழ் இலக்கியங்கள் முன்வைத்துள்ளன. பிறன்மனை நோக்குதல் என்ற வாசகம், ஒருவன் ஒருத்தி என்ற நிலையை விசாரிக்கும் ஒரு சொல்லாடல். அந்நிலையை மறுதலித்துப் பேசியதின் வெளிப்பாடே பிறனில் விழையாமையைக் கொண்டாடும் போக்கு. மரபு இலக்கியத்திலிருந்து வடிவரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் விலகிய நவீனத் தமிழ்ப் புனைகதை ஆசிரியர்கள், காமத்தையும் நிறைவேறாத பாலியல் விருப்பங்களையும் எழுதுவதற்குரிய கச்சாப்பொருளாக நினைக்கின்றனர். சமூக நடைமுறைகள் ஏற்படுத்தியுள்ள பாலியல் உறவுகளை மீறுவதாக நினைக்கும் மனம் அதனைக் குற்றமாகக் கருதிக் குமைவதும் எழுதப்பட்டுள்ளது. குற்றமாகக் கருதாமல் இயல்பான உடலின் வேட்கை என்பதாகவும் எழுதிக் கடப்பதும் நடந்துள்ளது.
பாலியல் மீறல்களையும் பிறழ்வுகளையும் தாண்டிய உளவியல் சிக்கல்களைச் சிந்திக்காத போக்கு தமிழ்நாட்டுத் தமிழ்ப் புனைகதைகள் வெளிப்பட்டாலும், புலம்பெயர் தமிழ் எழுத்துகளில் அந்நிலையே தொடர்கின்றன என்று சொல்வதற்கில்லை. தொடர்ச்சியாக அச்சமூட்டிய போர்க்காலமும் போர்க் களங்களும் இடப்பெயர்வுகளும் உருவாக்கிய அச்சவுணர்வு உருவாக்கிய மனச்சிதைவைச் சித்திரிப்பாகக் கொண்ட கதைகள் ஈழத்தமிழ்ப் பகுதியில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களிடம் கதைகளாக மாறியிருக்கின்றன. அவர்களை விடவும் அதிகமாகப் புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகள் அகதி வாழ்வு உருவாக்கும் மனச்சிக்கல்களை அதிகம் எழுதத்தொடங்கியுள்ளனர்.
மனித உயிர்களின் ஐம்புலன்களும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்து கொண்டிருக்கும்போது மூளை இயல்பாக இயங்குவதாக வெளிப்படும். அவ்வைம்புலன்களில் ஒன்று செயல்படாத நிலையை உடல் குறையாகக் கருதுகிறது மருத்துவ அறிவு. அதே மருத்துவ அறிவு உடல் குறைகளின் தொடர்ச்சியில் மூளையின் இயக்கத்தில் பிறழ்வு ஏற்படும் நிலையில் அதனை உடல் குறையாகக் கணிக்காமல் உளச்சிக்கலாக வகைப்படுத்துகிறது. குறிப்பாக ஐம்புலன்களின் நுண்ணுணர்வுப் பாதிப்புகளால் அவ்வகை உளச்சிக்கல்கள் உருவாவதாகக் கணித்து அதற்குரிய மருத்துவ முறைகளைப் பரிந்துரைக்கின்றது.
குறிப்பிட்ட பகுதியில் நீண்ட காலமாக நடக்கும் யுத்தங்களும் கலவரங்களும் இடப்பெயர்வுகளும் உருவாக்கும் காட்சிகளை மறக்க முடியாமல் தவிக்கும் அகதி வாழ்க்கையைத் தொடர்ந்து தனது கதைகளில் எழுதும் ப.தெய்வீகன், ஈழ அகதிகளின் நிலையோடு வெவ்வேறு யுத்தங்களால் புலம்பெயர்ந்தவர்களையும் பாத்திரங்களாக்கியிருக்கிறார். அந்நகர்வின் தொடர்ச்சியில் இப்போது வனம் இதழில் வந்துள்ள “ரம்போ” கதையையும் இணைத்து வாசிக்கத் தூண்டியுள்ளார்.
ஈராக் யுத்தத்தில் நேச நாட்டுப் படைகளுக்காகப் போரில் ஈடுபட்டு நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இயங்கும் ஒருவனின் (பேர்கஸன்) நட்பை விவரிக்கும் ஈழத்தமிழ் அகதியின் கூற்றில் நகரும் கதைக்குள் ’ரம்போ’ என்ற துப்பறியும் நாயின் வரவு புதிய தளங்களை அறிமுகம் செய்கிறது. போர்க் காட்சிகளும் உயிரிழப்புகளும் மனிதர்களை மட்டுமே பாதிப்பதில்லை, நுண்ணுணர்வு கொண்ட விலங்குகளையும் கூடப் பாதித்து மனச்சிதைவுக்குள்ளாக்குகிறது என்பதை விவரிக்கும் ரம்போ கதையில் ஈராக் யுத்தத்தில் பங்கெடுத்து உடல் இயக்கத்தைத் தொலைத்த மனிதனின் -பேர்கஸனின் மனநிலையோடு இணையும் ஈழ அகதி மனநிலையும் என இணைநிலைகள் விரிக்கப்பட்டுள்ளன. உலகின் சில பகுதிகளை நீண்டகாலப் போர் நிலங்களாக வைத்திருக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகப் போர் மறுப்புப் பேசும் தொனியில் அமைந்துள்ள கதைக்காக தெய்வீகன் பாராட்டப்பட வேண்டியவர்.
கதை வனம் இணைய இதழில் இடம்பெற்றுள்ளது.
https://vanemmagazine.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%aa-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/
கருத்துகள்