ஆப்த வாக்கியங்கள்-


”கறுத்த இருட்டான ஆர்வமொன்று அவனது சிந்தனைக்குள் அப்போது நுழைந்து அமர்ந்தே விட்டது”

 கவித்துவம் கூடிய இந்த வரி ‘அதிசய நீரூற்று’ என்ற கதையின் இடையில் வாசிக்கக் கிடைக்கிறது.

கதையை வாசித்து முடித்தபின் அந்தக் கதையின் மொத்த நிகழ்வுகளும் கதை எழுப்பியுள்ள விவாதத்தின் முடிச்சும், அந்த முடிச்சு எப்படி அவிழப்போகிறது என்ற தீர்மானமும் இந்தக் கவித்துவச் சொற்றொடரில் தங்கியிருப்பதாகத் தோன்றியது. காதலின் தோல்வி எப்படி வரும் என்ற தீர்மானம் இல்லாதவனின் நிலையைச் சொல்வதற்குக் ‘ கறுத்த இருட்டு’ என்ற படிமத்தை உருவாக்கிக் கதையின் ஆப்த வாக்கியமாக மாற்றி வைத்துள்ள வா.மு.கோமுவின் கதையை உயிர்மையில் (2023,அக்டோபர்) வாசித்தபின் மற்ற கதைகளின் ஆப்த வாக்கியத்தை அதன் ஆசிரியர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தேடும் வாசிப்பாக மாற்றிக்கொண்டேன் எனது வாசிப்பை.

‘அப்பா செய்த நாற்காலி’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள தனது கதையின் ஆப்த வாக்கியத்தை வண்ணதாசன் ஒரே இடத்தில் வைக்காமல் இரண்டு இடங்களில் பிரித்துப் போட்டிருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டேன்.

 “ இருட்டுக்கான காரணம் சொன்ன பிறகும் இருட்டு இருட்டாகவே இருந்தது

 என எழுதியிருந்த பத்தியைத் தொடரமுடியாமல் நிறுத்தி நிதானமாக மூச்சுவிட்டுக் கொண்டு வாசிப்பதைத் தொடர்ந்தபோது “ இந்த மெழுகுதிரி வெளிச்சம் இல்லாவிட்டாலும்கூட, இந்த அறை, இச்சமயம் ஒளிமயமாக இருக்கும் என்று சிதம்பரம் நினைத்தான்” என்ற அந்த வாக்கியத்தின் இன்னொரு பகுதியைக் கண்டுபிடித்து உற்சாகமானது மனசு. வண்ணதாசனின் எழுத்துகள் பெரும்பாலும் இருட்டுகளை இருட்டுகளாகவே விட்டுவிடுவதைத் தவிர்ப்பவை. வாசக மனத்தை வெளிச்சத்தின் பரவலால் நிரப்பி அனுப்புவதில் திருப்தி அடைவது அவரது இயல்பு. இந்தக் கதையின் நுணுக்கமான விவரிப்புகளும் அவ்வப்போது பேசிக்கொள்ளும் உரையாடல்களும் சேர்ந்து மறக்க முடியாத நட்பின் ஆழத்தைப் புதைத்துவைத்திருக்கும் கணத்தைக் காட்டித்தருகின்றன.

வா.மு.கோமுவின் கதைக்குள்ளும் வண்ணதாசனின் எழுத்துக்குள்ளும் பளிச்சென்று வெளிப்பட்ட ஆப்த வாக்கியம் போன்றதொரு வாக்கியத்தைச் சரவணன் சந்திரனின் கதையில் கண்டு சொல்ல முடியவில்லை. தன்வசப்படுத்திக் கொள்ளும் அதீதக் காதலின் முடிச்சுகள் அவிழ்வதும் சிக்கலாவதும் எப்படி நிகழ்கிறது என்பதை மாற்றிமாற்றிக் காட்சிப்படுத்தும் கதைக்குள் அப்படியொரு வாக்கியத்தைப் பாத்திரங்களின் உரையாடலில் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால், “ மேற்பூச்சில் இதுமாதிரியான நெருடல்கள் இருந்தாலும் முட்களுக்கு இடையில் பதுங்கியிருக்கும் இலந்தைப்பழம் போலக் கொஞ்சம் இனிப்பும் அவர்கள் மனவடுக்குகளில் கலந்தே இருந்தது. இருவருமே திரும்பி அவரவர் வீட்டிற்குச் செல்லமுடியாது என்பதையும் அறிந்தே இருந்தனர்” என்ற குறிப்பைக் கதையின் விவாதப் பொருளைத் தரும் வாக்கியம் என்று சொல்வதில் சிக்கலில்லை. இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் பொம்மையாகப் புருசனை நினைக்கும் ஒரு பெண்ணிடம் கணவன் தவிக்கும் தவிப்புகளை விவாதிக்கும் அந்தக் கதையின் தலைப்பு: ‘பொம்மை’ .

*******
மலையாளத்தில் ஆப்த வாக்கியம் என்றொரு சொற்றொடர் சொல்லப்படுவதுண்டு. அரசியல் பேச்சில் ஆப்த வாக்கியம் என்பது துல்லியமான கோஷத்தைக் குறிக்கும். அதுவே ஒரு படைப்பில் - தீவிர இலக்கியப் பனுவலில் - அந்த எழுத்தின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் சொற்றொடர் எனக் கொள்ளலாம். தேர்ந்த வாசிப்பு என்பது ஆப்த வாக்கியத்தைத் தேடிக் கண்டறிவதை நோக்கமாகக் கொள்ளும். சொற்றொடரைக் கண்டுபிடித்தபின், அந்த வாக்கியத்தை- சொற்றொடரைக் கொண்டு விளக்குவது விமரிசனக்கலையாக வளர்ந்துவிடும்.
,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்