உணவும் பண்பாட்டு அடையாளங்களும்.

அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடியிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா/கருத்தரங்கம் திருப்பத்தூரில் [ திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 2007, டிசம்பர் 18,19 தேதிகளில் நடைபெறும் இந்தியப் பழங்குடிப் பண்பாடும் திராவிடப் பண்பாடும்] . 

ஜோலார்ப் பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்ல முக்கால் மணி நேரம் ஆகலாம் என்று அழைத்திருந்த கல்லூரி நிர்வாகம் தகவல் சொல்லியிருந்தது. கல்லூரி வாசலில் நான் நுழைந்த போது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களைக் கொண்டு வர மாணவிகளும் மாணவர்களும் முயன்று கொண்டிருந்தனர். பழங்குடியினரின் கலை, பண்பாடு, வாழ்வு என்பதான அந்த விழாவில் பழங்குடியினரின் பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டுவர மலைப்பிரதேசத்து வேட்டைக் கருவிகளும் கலயங்களும் கிழங்கு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பண்பாட்டு அடையாளங்களைப் பற்றிய விவாதங்களில் இப்போதெல்லாம் உணவுப்பொருட்களும் முக்கிய இடம் பெற்று வருகின்றன. ஒருபுறம் உலகமயமாதலை ஆதரிக்கும் அதே நேரத்தில் சொந்த அடையாளத்தை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற தவிப்பும் இருக்கிறது. இந்தியா- கொரியா நாடுகளுக்கிடையேயான பண்பாட்டு உறவுகள் பற்றிய கருத்தரங்கில் ( தென்னாசியவியல் நிறுவனம், சென்னை, 2006)  கலந்து கொண்டபோது தென் கொரியர்களின் தவிப்பை நேரிடையாக அறிய முடிந்தது. தங்கள் நாட்டு எல்ஜி, சாம்சங் நிறுவனங்களின் பொருட்கள் இந்தியச் சந்தையில் முன்னிலை வகிப்பதில் அவர்களுக்கு இருந்த பெருமையைப் போலவே அவர்கள் ஊர் உணவுப் பண்டமான கிம்சியைப் பற்றிப் பேசுவதிலும் இருந்தது. தென்கொரிய தேசத்து வெகுமக்கள் கலை, நவீன இலக்கியம், ஆடைகள், பௌத்தத் தத்துவம், காலனிய ஆதிக்கத்திற்கெதிரான போராட்டம், கம்யூனிசத்தை ஒதுக்கி விட்டு சுதந்திரப் பொருளாதாரத்திற்கு மாறியது எனக் கதைப்பதற்கூடாக கிம்சியின் புகழையும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கிம்சி நம்ப ஊர் கூட்டு போல இருக்கிறது. ஆனால் கொரியர்கள் நாம் சாம்பாரைப் பயன்படுத்துவது போலக் கிம்சியைப் பயன்படுத்துகிறார்கள். கிம்சி இல்லாமல் கொரியர் ஒருவர் சாப்பிடுவதே இல்லை என்பது மட்டும் புரிந்தது. அது அவர்களின் பொது அடையாளம்.

குழிப்பணியாரங்களும் கொத்துப் பரோட்டாவும்

தமிழ் நாட்டின் பொது அடையாளமாகச் சாம்பாரைச் சொல்லலாம். சோற்றுடன் சேர்த்துக் குழைத்து தமிழ் நாட்டின் எல்லாப் பகுதி மக்களும் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டின் பொது அடையாளத்தை விடவும் சிறப்பு அடையாளங்களின் நினைவுகள் சுவாரசியமானவை. பல ஊர்களுக்குச் சுற்றுலா சார்ந்த தனித்த அடையாளங்கள் இருப்பது போல உணவுப் பண்டங்கள் சார்ந்த அடையாளங்களும் இருக்கின்றன. சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி ரயிலில் ஒரு முறை பயணம் செய்து பாருங்கள் அப்போது இந்த அடையாளங்களை சுலபமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

வடக்கே இருந்து தெற்கே போகப் போக ஊருக்கொரு தின்பண்டமாக ரயிலில் ஏறிக் கொண்டே இருக்கும். விழுப்புரத்தில் மூக்கைத் துளைக்கும் பலாப்பழம் விருத்தாசலம் வரை தொடரும். ஆனால் விற்கிறவர்கள் பலாப்பழத்தைப் பண்ருட்டியோடு சேர்த்து ‘பண்ருட்டி’ பலாப்பழம் என்று சேர்த்துத்தான் சொல்வார்கள். திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரை ‘மணப்பாறை’ முறுக்கின் வாசமும் மொறுமொறுப்பும் கேட்டுக் கொண்டே வரும். ஆனால் மதுரையில் திண்பண்டத்தின் வாசத்தை விட மல்லிகைப் பூவாசம் தான் மூக்கைத் துளைக்கும். மதுரை மல்லிகை வாங்காவிட்டால் வறுத்த மல்லாக்கொட்டையை வாங்கிச் சாப்பிடலாம். ஆவி பறக்க அவித்த நிலக் கடலையும் அங்கே கிடைக்கும்.

ரயில் விருதுநகருக்குள் நுழையும்போது இனிப்பும் கூடவே காரமும் கிடைக்கும். ஆனால் அந்த இரண்டுமே விருதுநகருக்குச் சொந்தம் இல்லை. இனிப்புப் பண்டமான பால்கோவா சூடிக் கொடுத்த மங்கை பிறந்த ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சொந்தம்; காரச்சேவு சாத்தூருக்குச் சொந்தம். சாத்தூரைத் தாண்டி அரைமணி நேரப் பயணத்தில் கோயில்பட்டியில் கடலை மிட்டாயும் கடம்பூரில் போளியும் வாங்கிக் கொள்ளலாம். எதுவுமே வாங்கவில்லையென்றாலும் பரவாயில்லை திருநெல்வேலி அல்வாவை மட்டும் வாங்க மறந்து விடாதீர்கள். ஆனால் எல்லா விற்பனையாளர்களும் ‘சாந்தி ஸ்வீட் அல்வா’ என்றே சொல்வார்கள். ஆனால் எந்த ‘சாந்தி’ என்று கேட்டால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சாந்தியைச் சொல்வார்கள். சாந்தி என்ற பெயருக்கு முன்னொட்டும் பின்னொட்டும் விதம்விதமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கும். அதில் ஒரிஜினல் சாந்தி எது என்று கண்டுபிடிக்க முடியாமல் தவிக்க நேரிடும். ஏனென்றால் ஒரிஜினல் சாந்தி என்றே ஒரு போலி சாந்தி கடை இருக்கிறது.

புதிய ஊர்களுக்குப் போகும் போது அந்த ஊரின் சிறப்பு உணவு எது என்று கேட்டுச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருப்பதில்லை. புதிதாக எதையாவது சாப்பிட்டு வயிற்றுக்கோளாறுகள் வந்து அவதிப்படும் நிலை ஏற்படக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வு தான் காரணம். பாதுகாப்பு உணர்வின் உச்சத்தினால் தான் தமிழ் நாடெங்கும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

திருப்பத்தூரில் இரவு உணவுக்குச் சென்ற போது பணியாளர் உணவு விடுதியில் கிடைக்கும் பண்டங்களைப் பட்டியல் இட்டார். பட்டியலில் இருந்தவை பிரியாணிகளின் வகைகளும் பரோட்டாக்களின் வகைகளு மாகத்தான் இருந்தன. வழக்கமாகச் சொல்லப்படும் சிக்கன், மட்டன், பிரியாணிகளோடு மூன்றாவதாகப் பீப் பிரியாணி என ஒன்றையும் சொன்னார். உடன் வந்திருந்த நண்பர் இந்தப் பகுதியில் பீப் பிரியாணி தான் சிறப்பு ; சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொன்னார். வடதமிழ் நாட்டுச் சிறு நகரங்களில் - குறிப்பாக வேலூர், குடியாத்தம், சோளிங்கர், ஆம்பூர், போச்சம்பள்ளி போன்ற சிறு நகரங்களில் பீப் பிரியாணி என்ற பெயர் பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். மட்டன், சிக்கன் பிரியாணிகளின் விலையை விட பீப் பிரியாணியின் விலை குறைவாக இருந்தது. என்றாலும் என் மனம் கொத்துப் பரோட்டாவைத் தான் நாடியது.

பரோட்டாக்களில் கொத்துப் பரோட்டாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, முட்டை ஆகியவற்றிற்காகப் பிடிக்கும் என்பதை விட, அதைக் கொத்தும் ஒலி தரும் அதிர்வுக்காகவே எனக்குப் பிடிக்கும். பரோட்டா தமிழ்நாட்டு அரிசியைத் தவிர்த்து விட்டு மைதா மாவில் செய்யப்படும் பரோட்டா தமிழர்களின் பாரம்பரிய உணவாக மாறியது எப்படி என்று அசை போடுவதைக் கூட நான் விரும்பியதில்லை. பரோட்டா தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பண்டம் கிடையாது என்பதை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டியதில்லை. வீடுகளில் தயார் செய்யும் உணவுப் பண்டமாக பரோட்டா இன்றும் இடம் பெறவில்லை என்ற ஒரு ஆதாரம் மட்டுமே போதும். மாவைப் பிசைந்து ஊற வைத்துத் தட்டி உருட்டி வைக்க வேண்டும். பிறகு அதை மெல்லிதாக வீச வேண்டும். அதன் பிறகு அதைச் சுருட்டி வைக்க வேண்டும். செய்வதற்காகச் செலவழிக்க நேரம் அதிகம் என்று கருதித்தான் அதில் ஈடுபடுவதில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழ் நாட்டில் எங்கு போனாலும் கிடைக்கும் உணவாக பரோட்டா இருக்கிறது.

விரும்பிய பலகாரங்களை அதற்குப் பேர் போன இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத் தான் செய்கிறது.குற்றாலம் அருவிகளில் குளித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிச் செல்லும் சுற்றுலாப் பயணி களுக்கு அந்த பரோட்டாக் கடையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. பெயரே ’பார்டர் பரோட்டாக் கடை’ என்பதுதான். தென்காசியிலிருந்து செங்கோட்டை வழியாகக் கேரளாவிற்குள் நுழையும் பாதையில் தமிழக எல்லையில் இருக்கிறது என்பதற்காக அந்தப்பெயர். அதில் வரிசையில் நின்று திரை அரங்கின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சினிமா ரசிகர்களைப் போல பரோட்டா விரும்பிகள் வரிசையில் நிற்பார்கள். நானும் சில தடவை நின்று வாங்கியிருக்கிறேன்.

இந்த முறை சென்னைக்குப் போன போது நெரிசல் மிகுந்த தி. நகர் ஓட்டல் ஒன்றில் மாலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட நுழைந்தேன்.பண்டங்களின் பட்டியலில் குழிப் பணியாரம் என்ற பெயரைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் ஊறியது. எனது சின்ன வயது முதல் எனது கிராமத்துக்குப் போனால் விரும்பிச் சாப்பிடுவது பணியாரம். வீட்டில் செய்யவில்லை என்றாலும் பணியாரக்கார வீடு என்று ஒன்று இருக்கிறது. பணியாரம் செய்து விற்பதைப் பரம்பரைத் தொழிலாகவே அவர்கள் செய்து வருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு நாலு பணியாரம் இப்போதும் தருகிறார்கள்.

அந்த ஓட்டல் பணியாளரிடம் குழிப்பணியாரம் கேட்ட போது ஒரு தட்டில் நான்கு பணியாரங்கள் கொண்டு வந்து வைத்தார். இரண்டு பணியாரம் இனிப்பாக இருந்தன . மற்ற இரண்டும் காரப் பணியாரங்கள். எங்கள் கிராமத்தில் ஒரு ரூபாய்க்கு நான்கு பணியாரம்; இங்கே நான்கு பணியாரம் பன்னிரண்டு ரூபாய். அவ்வளவு தான் வித்தியாசம். பணியாரம் எனது அடையாளம்; எங்களூர்ப் பாரம்பரிய உணவு. அடையாளம் தக்க வைக்கப் பட்டுள்ளதில் ஒரு புறம் மகிழ்ச்சி தான். ஆனால் அதிக விலைக்கான பண்டமாகி விட்டதில் வருத்தப்படாமலும் இருக்க முடியவில்லை.

பார்டர் பரோட்டாவும் ஆனந்தபவன் நெய்ரோஸ்டும்

உணவுத்தேர்வு மனிதர்களின் தனிப்பட்ட விருப்பம் என நினைப்பது நவீன மனநிலையின் அடையாளம். ஆனால் சாதி, மதம் போன்ற கூட்டம் சேர்க்கும் அமைப்புகள் உணவைக் கூட்டத்தோடு அடையாளப்படுத்திக் காட்டுவதின் மூலம் தனிமனிதர்களைக் கட்டுப்படுத்த நினைக்கின்றன.

இடைக்காலத்தில் பயணிகளுக்காக இருந்த சத்திரங்களும் மடங்களும் தனித்தனிச் சாதிகளுக்குரியனவாக இருந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. அவற்றில் வழங்கப்பட்ட உணவுப்பண்டங்கள் விலைக்குரியன அல்ல; விற்பனைப் பண்டங்கள் அல்ல. அரச மானியங்கள் வழியாகவும், சமூகநிதிகளின் வழியாகவும் நடத்தப்பட்டன. கோயில் சார்ந்த சுற்றுலாக்கள் மட்டுமே இருந்த காலத்தில் நிலவுடைமைச் சாதிகள் பெருங்கோயில்கள் நிறுவப்பட்ட நகரங்களில் தங்கள் சாதியினருக்குரிய வீதிகளில் சத்திரங்களையும் மடங்களையும் நிறுவியிருந்தார்கள் என்பதை நான் வாழ்ந்த மதுரை, புதுவை, திருநெல்வேலி போன்ற நகரங்களில் பார்த்திருக்கிறேன். இப்போதும் அவை பொதுச்சொத்துக்களாகவே இருக்கின்றன.

உணவை விற்பனைக்குரிய ஒன்றாக நினைக்கும் மனநிலையின் பின்னணியில் மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தரவர்க்கத்தின் தோற்றம் நிகழ்ந்தது. இந்திய நடுத்தரவர்க்கத்தின் தோற்றம் பிராமணர்களிடமிருந்தே தொடங்கியது என்பதைப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அக்கிரகாரங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்த பிராமணர்களே உணவு விடுதிகளை நாடிய முதல் கூட்டமாக இருந்திருக்க அதிக வாய்ப்புண்டு. பிராமணாள் கபே என்ற அடையாளத்தோடு தொடங்கிய உணவு விடுதிகள், சுத்த சைவச் சாப்பாட்டுக் கடைகளாக மாறியதின் பின்னணியில் பிராமணர்களைத் தாண்டி மற்றவர்களும் நகரங்களை நோக்கி வந்து போகும் வாய்ப்புகள் உருவானதின் காரணங்கள் இருந்திருக்கும். அந்தக் காரணங்கள், உணவு விடுதியை லாபம் தரும் தொழிலாக மாற்றுவதை விரைவுபடுத்தின. சிறுவணிகம், பெருவணிகமாக மாறும்போது விலக்கி வைப்பதைக் கைவிட்டுவிட்டு, உள்வாங்குதலைச் செய்யும். ஆனால் தமிழ்நாட்டு உணவகங்கள், புலால் உணவை வழங்காத வணிகத்தில் சுத்தம் என்பதாக அடையாளப்படுத்தி சாதிய அடையாளத்தைப் பேணுவதை நாசுக்காகக் கடைப்பிடிக்கவே செய்கின்றன. பவன் என்ற பின்னொட்டோடு -ஆர்யபவன், அசோக்பவன், ஆனந்தபவன் என உணவுக்கடைகளை ஆரம்பிப்பதில் அந்த மனநிலையே செயல்படுகின்றது.

விலக்குதலையும் ஒதுக்குதலையும் கைவிட்டதின் வெளிப்பாடுகள் பிரியாணிக் கடைகளும் பரோட்டாக்கடைகளும் எனலாம். அவற்றிற்கு பின்னால் இசுலாமிய அடையாளங்கள் வெளிப்பட்டன. ஆனால் விலக்கி வைக்கும் நோக்கம் இருக்கவில்லை.பிரியாணி,பரோட்டா என பண்டத்தின் அடையாளத்தோடு வந்தன. சுத்தத்தையும், நாசூக்குத்தனத்தைக் கைவிட்டனவாக இப்போதும் பரோட்டாக்கடைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொத்துப்பரோட்டா போடும் தாளலயங்கள் சிறுநகரங்களின் தூரத்து முழக்கங்கள். அதே நேரம் அனைத்து வகையான மனிதர்களையும் உள்வாங்கும் பெருவியாபாரமாக மாற நினைக்கும்போது அடையாளமற்ற பெயர்களை இசுலாமிய வணிகர்களும் நாடவே செய்கிறார்கள். திருநெல்வேலியின் புகழ்பெற்ற அரசன் பேக்கரியும் வைரமாளிகையும் அப்படியான அடையாளம் மறைத்த வணிக அடையாளங்கள் என அறிந்துள்ளேன்.

உணவு வழியாகச் சாதி அடையாளத்தைப் பேணுவதை இந்து சமயம் கைவிடாமல் நீட்டிப்பதைப் போல, இசுலாமிய சமயம் உடைகளின் வழியாகத் தனி அடையாளத்தைக் காட்டிக்கொண்டே இருக்கின்றது. பொட்டு வைத்தல், பூச்சூடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வைப்பதின் வழியாகக் கிறித்தவ அடையாளம் பேணப்படுகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பதில் கும்பல் மனப்பாங்கை அழித்துத் தனிமனிதர்களுக்கான விருப்பத்தை - தன்னிலையை உருவாக்க நினைக்கிறது நவீனத்துவம். அது காதல், குடும்பம், தனிமனிதர்களின் பெயரிடல், கல்வி எனப் பலவற்றிலும் மரபின் நீட்சியைக் கைவிடத் தூண்டிச் சமய அடையாளங்களிலிருந்தும், சாதி அடையாளத்திலிருந்தும் விலகிவரும்படி தூண்டுகின்றது. ஆனால் நவீனத்துவத்தை மறுக்கும் சநாதனவாதிகள் - மத அடிப்படைவாதிகள் -அவற்றைத் தக்க வைக்கும் முயற்சியில் கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறார்கள். நவீனத்துவ எதிர்ப்புப்போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

நாம் வாழும் காலம் நவீனத்துவர்களின் காலம் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் ருசியான தோசைகள் கிடைக்கும் அடையார் ஆனந்தபவன்களைத் தாண்டிப் போகமாட்டார்கள். நாட்டுக்கோழிச் சால்னாவை ருசித்தவர்கள் வைரமாளிகையைத் தேடிப்போவார்கள். குற்றாலம் போனால் ‘பார்டர்’ பரோட்டாக்கடைக்குப் போகாமல் வரமாட்டார்கள். நெய்விட்டுப் பரப்பும் பருப்பும் சாதம் தரும் ருசிக்கு அன்னபூர்ணா உறுதி என்பது தெரிந்திருந்தால் போதும். அமெரிக்காவிற்கு வருபவர்கள் தேடித்தின்பார்கள் என்று நம்பியே திண்டுக்கல் தலைப்பாகட்டு கடல் கடந்து பிரியாணிக்கடை போட்டுள்ளது.


  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்