ஆக்கத்திறன் வெளிப்படும் கதை வடிவங்கள்




எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

காமத்தை மோகம் என உருவகித்துக்கொள்ளும் சு.வேணுகோபால் அதனோடு புயல் என்னும் படிமத்தை இணைக்கிறார். காமத்தை மோகமாக நினைக்கையில் அது ஒரு தற்காலிகத் தன்மை கொண்ட உணர்வுக் குவியல் என்ற நிலையை வாசிப்பவர்களுக்குத் தருகிறது கதை. அத்தோடு அதற்கொரு பிடிவாதத்தன்மையும் இருக்கும்; புறச்சூழல் உருவாக்கும் நெருக்கடிகளுக்கு ஒத்துப்போகாது என்பதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம். இதை வெளிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர், மோகத்தால் திசைமாறும் பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களையோ, செயல்பாடுகளையோ விரிவாகத் தராமல், அவர்கள் எடுக்கும் முடிவுகளை மட்டுமே கதைக்கூறாக்கி இறுதி நிகழ்வை ஒரு நல்திற நாடகத்தின் உச்சநிலைக்காட்சிபோல நிகழ்த்திக் காட்டுகிறார். ஆனால் மோகம் என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பாத்திரங்களோடு நேரடித்தொடர்பில்லாத பல காட்சிகளாக அடுக்கிக் கொண்டே போகிறார். அதன் வழியாகக் கதைக்கான புனைவுவெளி - களன் உருவாகிக்கொண்டே போகிறது. அத்தோடு மோகம் உருவாகித் திளைக்கும் காலச்சூழல்களையும் - சிறுபொழுதாகவும் தனிமையாகவும் - எழுதிக்காட்டுகிறார். இந்தத் தன்மை அவரது பெரும்பாலான கதைகளில் உள்ளது. இதனை அவரது தனி அடையாளமாகச் சொல்லலாம். பலவீனமான கதை வடிவம் என்றும் நினைக்கலாம்

சிறுகதையின் வடிவம் இதுதான் எனத் தொடக்க நிலையில் சொல்லப்பட்ட வடிவத்தைப் பின்பற்றாமல் உரிப்பொருளை முன்வைக்க நினைக்கும் நீண்ட அகப்பாடல் (பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு) வடிவத்தைக் கொண்ட சிறுகதையாக அது நீள்கிறது. கி.ராஜநாராயணனின் சிறுகதைகளிலும் இத்தகைய விவரிப்புகள் இருக்கும். கிராமம் சார்ந்த எல்லாத்தரவுகளையும் கதைக்குள் சொல்லிவிட நினைக்கிறார். அவை கதையின் ஓர்மையைக் குலைக்கக் கூடியன என்ற விமரிசனத்தை அவர் சந்தித்திருக்கிறார். தமிழ் இலக்கிய மரபை அறியாதவர்களுக்கு இந்தக் கதைசொல்லும் முறை அலுப்பூட்டலாம். அண்மையில் கூடச் சாருநிவேதிதா சு.வேணுகோபாலின் ஒரு கதையை (உள்ளிருந்து உடற்றும் பசி) அதன் சொல்முறைக்காகப் பகடியாகச் சொல்லியிருந்தார். 

உரிப்பொருள் சார்ந்து கதைகவெளிப்பாடு பாத்திரங்களின் மனவுணர்வுகளின் அலைவுகளாலும் அதனால் உருவாக்கப்படும் நிகழ்வுத் தொடர்ச்சிகளாலும் வெளிப்பட வேண்டும் என நினைப்பவர் சரவணன் சந்திரன். அவரது பெரும்பாலான கதைகளின் வடிவம் அப்படிப்பட்டதே. ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாத்திரத்தின் மன அலைவை - எண்ண ஓட்டத்தின் குவிப்பாக எழுதுகிறார். அந்த உணர்வை அடுத்த நிகழ்வின் பாத்திர மையத்தோடு தொடர்புபடுத்துகிறார். இதன் வழியாக உணர்வுத்தொகுதிகளும் அவற்றின் வழியாக உருவாகும் மனிதர்களும் கதையின் கடைசிவரை அழைத்துவரப்படுகிறார்கள். அங்கே அவர் நினைக்கும் முடிவு கதையின் முடிவாக வைக்கப்படுகிறது. இந்த முடிவுக்கான ஒரு குறிப்பைக் கதையின் தொடக்கத்தில் எங்காவது வைத்துவிடுகிறார். இப்படி எழுதுவது ஒரு சிறுகதையின் தொடக்கமும் முடிவும் பொருந்தி நிற்கும் ஓர்மையான வடிவத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடின் வெளிப்பாடு.

ஒரு சினிமாவில் இடம்பெறும் முதலிரவுக் காட்சியில் இடம் பெறும் ஜிலேபி உண்டாக்குவது கிளர்ச்சி. அந்தக் கிளர்ச்சியைத் தரும் பெண்களைத் தொடர்ச்சியாகத் தேடித்தேடித் தோல்வியடையும் மனம் சந்திக்கும் பெண்கள் வழியாகப் பல நிகழ்வுகள் கதையின் தொடர்நிகழ்வுகளாக நகர்கின்றன. கதையின் முடிவில் ஜிலேபி கிளர்ச்சி தரும் என்பது திரைப்படம் உருவாக்கும் ஒரு புனைவு. காமம் உருவாக்கும் கிளர்ச்சி அது போன்றதல்ல; காட்சிப்படுத்தமுடியாது; உடல் உணரும் தரும் என்பதாக உணர்த்தப்படுகிறது.

கதைகளை வாசிப்பது என்பது அவை முன்வைக்கும் நீதி அல்லது கருத்து அல்லது போதனைக்காக மட்டுமாக இருக்க வேண்டியதில்லை. கதையை உருவாக்கும் எழுத்தாளரின் இலக்கிய ஆக்கமுறைமைக்குமாக இருக்கலாம். அப்படி வாசித்தால் தான் எழுத்தாளரைக் கொண்டாடமுடியும். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளமுடியும்.
{இரண்டு கதைகளுக்குமான இணைப்பு பின்னூட்டங்களில் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்)

https://vallinam.com.my/version2/?p=9085


https://www.yaavarum.com/jilebi/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்