ஐபிஎல் -இரண்டு பதிவுகள்

கோடிக்கால் பூதம்
மார்ச் 31 இல் தொடங்கி மே 28 இல் முடியவுள்ள ஐபிஎல் 2023 போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பெரும்பணத்தைப் பெறப்போகும் கடைசி அணி என்னும் தகுதிக்குரிய அணிகளாக நான்கு அணிகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட ஆண்டிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி இந்த ஆண்டும் அதைத்தக்க வைக்கும் விதமாகப் புள்ளிப்பட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அணியான லக்னோ அணியும் நான்கு அணிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில். இரண்டாவது, நான்காவது இடங்களில் நீண்டகால அணிகளான சென்னையும் மும்பையும். புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆளும் வலுவான மாநிலங்கள் என்பது தற்செயல் என நம்ப வேண்டும்.
பெருவணிகத்திற்குப் புள்ளிவிவரங்களும் முன்னோக்கிய நகர்வுகளும் முக்கியம். நுகர்வின் ருசியும் விழித்திரை ஈர்ப்புக்கான வண்ணக் கோலங்களும் அதிமுக்கியம். அதையெல்லாம் தாண்டி அதற்கொரு கலைவடிவத்தின் அழகியல் அடிப்படைகளையும் உருவாக்கிவிட்டால் கொண்டாட்டத்தின் உச்சத்தை அடைந்துவிடும். மரபான பெருந்திருவிழாக்களில் காசுகட்டி விளையாண்ட 3 சீட்டு, சக்கரம் சுற்றல், பலூன் சுடுதல், கோழிக்குண்டு உருட்டல் போன்றனவற்றைக் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவற்றையொத்த போட்டிகளைத் தொலைக்காட்சித்திரைகளும் அலைபேசியின் விளம்பரங்களும் காட்டிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருந்தன என்பதை அவற்றோடு இணைத்துப் புரிந்துகொள்ளுங்கள்.

பார்வையாளர்கள் பார்ப்பது கிரிக்கெட் மட்டுமல்ல. கிரிக்கெட் போட்டியை நேரடியாகப் பார்த்துக்கொண்டே கண்ணுக்குத் தெரியாத பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது ஐபிஎல். இணையவழி விற்பனைச் சாதனங்களை வடிவமைத்து அவற்றில் ஈடுபடுபவர்களுக்குப் போட்டியைக் காணச் சலுகையாக நுழைவுச்சீட்டுகளை வழங்குகின்றன; அணி 11 என ஒரு போட்டியில் பங்கேற்று முன்வரிசையில் அமர்ந்து விளையாட்டைப் பார்க்கிறார்கள். சொல்லியடித்துப் பரிசுபெற்றுக் குதூகலிக்கிறார்கள் சிலர். திறமைக்கு வாய்ப்பளிப்பதாகப் பாவனை செய்யும் போட்டிகள் பலவும் மறைமுகமான சூதாட்டப்போட்டிகளே.
 
தொடர்ந்து கட்டித்திரட்டி உருட்டி உண்டாக்கப்பட்டுள்ள ஐபிஎல், விளையாட்டின் கொண்டாட்ட வடிவமாக ஆகிவிட்டது. அதன் கொண்டாட்டத்தன்மையையும் விளையாட்டுத்தன்மையையும் சரிசமமாக நீட்டிக்கும்போதுதான் விளையாடும் உடல்களைப் போலவே பார்வையாள உடல்களும் திருப்தி அடையும். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கலவையைக் கவனமாக வளர்த்தெடுக்கின்றன ஐபிஎல்லின் பின்னிருக்கும் தந்திரங்களின் நகர்வுகள். இந்த ஆண்டு விளையாட்டு வடிவத்தில் களத்தடுப்புக்காக நுழையும் மாற்று வீரர்களைத் தாக்கம் ஏற்படுத்தும் வீரர்கள் -இம்பாக்ட் ப்ளேயர்- என நுழைத்து கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.
மூலதனமதிப்புடையது மூளை என்ற நம்பிக்கையைத் தகர்த்ததில் நவீன விளையாட்டுகள் முதலிடம் வகிக்கின்றன. ஆண் உடலாகவும் பெண் உடலாகவும் பெருமதிப்புடைய உடல்களாக இன்றும் டென்னிஸ் வீராங்கனைகளின் வீரர்களின் உடல்களே முதலிடத்தில் இருக்கின்றன. அதற்கடுத்த இடத்தில் இருப்பன கால்பந்து வீரர்களின் உடலா? கிரிக்கெட் வீரர்களின் உடலா? எனக் கேட்டால் ஐரோப்பியச் சந்தையில் கால்பந்தாட்டக்காரர்களின் உடல்கள் விலைமதிப்புடையவை. ஆசியச் சந்தையில் கிரிக்கெட் வீரர்களுடையன விலைமதிப்பில் கூடியுள்ளன.
இருதரப்புப் போட்டிகள், முத்தரப்புபோட்டிகள், ஆசியக் கோப்பைகள், உலகக்கோப்பைகள் என வளர்ந்தவரை கிரிக்கெட் விளையாட்டாகவும் வணிகமாகவும் இணைநிலை நகர்வில் நகர்ந்தது. இப்போது ஐபிஎல் போன்ற வடிவில் முழுமையான வணிகமாகியிருக்கிறது கிரிக்கெட். பெரும் வணிக நிறுவனங்களில் ஏலப்பொருளாக மாறுவதற்குத்தயாரான கிரிக்கெட் உடல்கள் காட்சிப் பண்டங்களுக்குரிய அணிகலன்களை அணிந்து கொண்டாக வேண்டிய கட்டாயம்., பார்வையாள உடல்களைய உள்ளிழுக்கும் வடிவத்தையும் வெளிப்பாட்.டையும் தனதாக்கிக் கொண்ட அந்த விளையாட்டை நற்றிற நாடகத்தின் அடிப்படைக்கூறான முரண்களால் மோதவிடுகின்றனர். பின்னர் அந்த மரபை உடைத்த அபத்த நாடகத்திறன்களின் வழியாகவும் குரூரவியல் அரங்கின் மென்வடிவங்களாலும் நகர்த்துகின்றனர். சடங்கிலிருந்து தோன்றிய அரங்கியல் கூறுகளும் விளையாட்டிலிருந்து தோன்றிய பிரதி வடிவாக்கங்களும் இணைந்து மாபெரும் திருவிழாவாக மாற்றம் பெறுகிறது. மாபெரும் விழாநிகழ்வுகளுக்குப் பின்னே மாபெரும் அரசியல் திசை திருப்பல்கள் இருக்கும் என்பதும் வரலாறு. ஐபிஎல் நிகழ்கால இந்தியாவில் ஆகப்பெரும் கொண்டாட்டம்; ஆகப்பெரும் திசைதிருப்பல் .அதன் நிழலில் ஊடகங்களும் அரசியல் கணக்குகளும் மௌனமாய் நகர்கின்றன.

உணர்ச்சிக்குவியல் கொண்ட மெலோடிராமா

கிரிக்கெட் விளையாட்டின் நீண்டகாலப் பார்வையாளன் நான். பள்ளிக்காலத்தில் கிரிக்கெட் ஆடியவனாகப் பார்க்கத் தொடங்கிய ஆர்வம் இப்போது அதன் விமரிசகனாகப் பார்க்கும்படி மாற்றியிருக்கிறது. நோக்கம் எதுவாக இருந்தாலும் பார்வையாளர்களைத் திளைக்கச் செய்யும் களியாட்டக்கூறுகள் கொண்டதாகக் கிரிக்கெட் மாற்றம் பெற்றுள்ளது என்பதை மறுக்கமுடியாது. அதிலும் ஐபிஎல் தொடர் மெலோடிராமாவின் கச்சிதம் கொண்ட வடிவம். சென்ற ஆண்டு வரை இந்தத் தொடரைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவது முடியாமல் இருந்ததற்கு மாறாக இன்னும் இன்னும் என இந்தக் கிரிக்கெட் தொடரைப் பார்க்க நேரம் இருக்கிறது. நீண்ட நேரத்தைத் தின்கிறது என்ற குற்றவுணர்வோடு பார்த்த காலத்தைத் தள்ளிவைக்கச் சொல்லிவிட்டது கரோனா என்னும் பெருந்தொற்று. உலகத்தின் மனித உயிரி ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பயத்தை உண்டாக்கி விட்ட கரோனாவின் அச்சமூட்டும் நெருக்கடியில் உற்சாகமூட்டும் பானம்போல இன்று ஐபிஎல் தொடங்குகிறது.
 
ஆங்கிலேயர்களோடு இந்தியாவிற்குள் நுழைந்த கிரிக்கெட்டை இந்தியாவில் ஒற்றை மனோபாவத்தை உருவாக்கும் நிகழ்வாக மாற்றம் பெற்று அதொரு பேரரசியலின் பகுதியாக மாறியது . அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையையும் இந்த ஐபிஎல் வடிவம் மாற்றிவிட்டது
 
எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்ல வைத்தார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்த்தார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம்.
 
தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகி விட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்தக்கும்பல் மனோபாவத்திற்கு ஐபிஎல் வட்டாரத் தன்மையைக் கொண்டுவந்திருக்கிறது. அந்த வட்டாரத் தன்மையும் முழுமையானதல்ல. ஜார்க்கண்ட் மாநிலத்து தோனியைத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி பெங்களூரின் புதல்வராகிறார். தமிழ்நாட்டு வீரர்கள் குஜராத் அணியிலும் கொல்கத்தா அணியிலும் கோலோச்சுகிறார்கள். எல்லா அணிகளிலும் மேற்கிந்திய அணியின் திறமையான ஆட்டக்காரர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாற்றம் கிரிக்கெட்டில் நடந்துள்ள மிகப்பெரிய வரவேற்கத்தக்க மாற்றம்.
 
என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். வகையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால்தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும்

நல்லதொரு மெலோடிராமாவிற்கு ஒற்றை இயக்குநர் இருப்பதற்குப் பதிலாகப் பல இயக்குநர்கள் இருப்பார்கள். அவர்கள் கலந்துபேசி எடுக்கும் முடிவின்படியே காட்சிகள் அமைக்கப்படும். நடிகர்கள் நடிப்பார்கள். பாடல்கள் எழுதி வாங்குவார்கள். பயமுறுத்தும் ஒளி - ஒலியமைப்புகள் இடம்பெறும். மெலோடிராமாத் தனமான சினிமாக்கள் எப்போதும் தோற்பதில்லை என்பதை இந்திய சினிமாவின் இயக்குநர்களும் பார்வையாளர்களும் அறிவார்கள். ஐபிஎல் கொண்டாட்டங்கள் அதே வகைமையில் - மெலோடிராமா என்னும் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. பார்வையாளத்திரள் என்னும் பெருங்கூட்டம் இல்லாத அரங்க நிகழ்வாகச் சில ஆண்டுகள் - கடைசி ஒத்திகை (Grand Rehearsal) போல நடந்தது.  கோவிட் காலத்தின் துயரங்கள்.

அரங்க நிகழ்வின் அகப்புறக்கூறுகளை தனதாக்கிக் கொண்ட ஐபிஎல்லின் பார்வையாளத் திரளை நுகர்வோராக நினைக்கும் பெரும் முதலாளிகள் வணிகப்பண்டமாக நினைக்கிறார்கள். அதனால் அது ஒரு வர்த்தகமாகவும் மாறிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் நடத்தியே ஆக வேண்டிய விற்பனைக் கண்காட்சியாகி விட்ட ஐபிஎல் அடுத்த ஆண்டும் நடக்கும். எந்தவிதக் குற்றவுணர்வுமில்லாமல் அதன் பார்வையாளனாகத் தொலைக்காட்சியின் முன் அமரத்தான் போகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்