சொல்வது நட்புக்காக மட்டுமல்ல


நான் இதையே சமகால வரலாறு,இலக்கியம் என்பேன்.தொடர்ந்து பேரா.அ.ராமசாமி எல்லா துறை சார்ந்த விசயங்களிலும் ஆர்வமும்,அறிவும் ஊட்டும் வகையில் எழுதி வருகிறார்.விமர்சகர் என்பதை தாண்டி அவரின் சமூக அரசியல், கல்வி, பாடதிட்டம், தேர்வுகள்,சினிமா,நாடகம்,கலைகள், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் வகுப்பறைக்கு வெளியே உள்ள சமூக பேராசிரியர்கள்,அறிஞர்கள் பட்டியலில் பேரா.அ.ராமசாமிக்கும் முக்கிய பங்குண்டு.
உயர்கல்விக்கு உரிய உருத்தான பேரறிஞர்கள் குழுவோ,வாரியமோ இருந்தால் இவர் அங்கு அங்கீகரிக்கபட வேண்டும்.
வயது வரம்புக்குட்பட்டவராக இருந்தால் துணைவேந்தராக நியமிக்கலாம்.
விமர்சகர், சமகால பதிவர் ,திறனாய்வு என்ற வகையில் கண்டிப்பாக சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகள் வழங்க வேண்டும்
கார்த்திக், சீடு, மதுரை

நான் கடந்த 16 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். (இது ஒரு புலம்பல் பதிவு அல்ல.) என்னைப் பற்றி அலசுகிற அல்லது விமர்சிக்கிற அல்லது அறிமுகப்படுத்துகிற சிறுகுறிப்புகளை கூட என் சீனியர்கள் எழுதியதில்லை. என்னைப் பற்றி எழுதியவை 99% வாசகர்களாலும் சக-எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டவையே. அ. ராமசாமி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவர் மூன்று குறிப்புகள் என்னைப் பற்றி இதுவரை எழுதி இருக்கிறார். இது எனக்கு நேரும் அவலம் மட்டுமல்ல, தமிழில் உள்ள கணிசமான இளம் படைப்பாளிகளின் நிலை இதுதான். முன்பு நிலை இதைவிட மோசமாக இருந்தது. இறந்தால் இரங்கல் குறிப்பு கூட வராது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புகழின், செல்வாக்கின், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே புகழுரைகள் வெளியாகும். மற்றவர்கள் மறக்கடிக்கப்படுவார்கள். எனக்கு இது ஏன் என நன்றாகவே தெரியும். இதன் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு நடைமுறை பிரச்சினை தான்.

நான் எனக்குப் பிடித்த படைப்புகள், படைப்பாளிகளைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். என்னைப் போல செய்து வருகிற சகபடைப்பாளிகள் வேறு சிலரும் உண்டு. நாங்கள் எங்களை விமர்சகர்களாகவும் படைப்பாளிகளாகவும் நினைக்கிறவர்கள். ஆனால் தமிழில் நாங்கள் அரிதானவர்கள். இங்கு கணிசமானவர்கள் முழுமுதல் படைப்பாளிகளே. அவர்களுடைய விமர்சனத்திலும் ஒரு தொடர்ச்சி, கடப்பாடு இருக்காது. பேருந்திலும் மெட்ரோவிலும் அருகில் அமர்வோரை நோக்கி "ஏங்க அண்ணாச்சி, என்ன இந்த பக்கம்?" "என்ன அக்கா, மீன் வாண்டியிட்டு போறியளா?" சொல்வோமே அப்படியான விமர்சனத்தை தான் எழுதுவார்கள். நிறுத்தம் வந்ததும் இறங்கிப் போய் விடுவார்கள். ஏங்க அதற்கு மேல் எழுதல என்று கேட்டால் அது எங்க வேலை அல்ல, நாங்க கவிதை, கதை எழுதணும் என்று சொல்வார்கள்.

தமிழில் விமர்சகராக இருப்பது ஒரு சாபக்கேடு. யாரும் படிக்கவோ பொருட்படுத்தி விருதளிக்கவோ பிரசுரிக்கவோ மாட்டார்கள். ஆனால் தொழில்முறை விமர்சகனாக தன்னைக் கருதுகிற ஒருவர் மட்டுமே தன் காலத்தில் வெளிவரும் படைப்புகளைப் பற்றி சிரத்தையாகப் படித்து விமர்சித்து அறிமுகப்படுத்தி வருவார்கள். அவர்களுக்கு எல்லா படைப்பாளிகளும் முக்கியம். எந்த புதிய போக்கையும் பதிவு செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.
 
தமிழில் அ. ராமசாமி அப்படியானவர். நான் அவரிடம் நட்பு பாராட்ட எந்த பிரத்யேக முயற்சியும் எடுத்ததில்லை. (எனக்கு சமூகமாக்கல் திறன் குறைவு என்பதால்) அவருடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்படி முன்பு கேட்ட போது என்னுடைய நெருக்கடி காரணமாக அவ்வாய்ப்பை தவற விட்டேன். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் முன்பு ஒரு நிகழ்ச்சி சம்மந்தமாக சிறுபஞ்சாயத்து கூட ஏற்பட்டது. ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அவர் அண்மையில் கூட நான் எப்.எம்மில் பேசியதை ஒட்டி ஒரு முக்கியமான குறிப்பை எழுதி இருக்கிறார். இமையம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், நாடகவியல், நடிப்புக்கலை பற்றி விவாதங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் தமிழில் வெளியாகும் சிறுகதைகளை கூட படித்து தனியாக கட்டுரைகளை எழுதுவார். அந்த கடப்பாடு மிக முக்கியமானது.

 தன்னை விமர்சகனாக ஒருவர் அடையாளப்படுத்தும் போதே அது சாத்தியமாகும். ஏன் என்னையும் பிற சக படைப்பாளிகளையும் பற்றி போதுமான அளவுக்கு அறிமுக, விமர்சன குறிப்புகள் வருவதில்லை என்றால் அ. ராமசாமியைப் போன்றோர் போதுமான எண்ணிக்கையில் இங்கு இல்லை என்பதே. இங்கு படைப்பாளிகள் அளவுக்கு அதிகமாக கொண்டாடப் படுகிறார்கள். அளவுக்கு அதிகமாக அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. அபுனைவில் விமர்சனம், தத்துவம், கோட்பாடுகள் மிக மிக குறைவாகவே எழுதப்படுகின்றன, படிக்கப்படுகின்றன, இது ஆரோக்கிய கேடான ஒரு போக்கு. இப்படியே தொடர்ந்தால் நம் மொழியும் இலக்கியமும் அழிந்து விடும் எனத் தோன்றுகிறது.
 
எதிர்காலத்தில் என்னவாகும் என நினைக்கவே பயமாக இருக்கிறது. எழுத்தாளர்கள் தம்மைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு, வாசகர்களின் உதிரிக் கருத்துக்களை மட்டும் கவனித்தபடி செயல்படுவது நம்மை ஒரு மனநல விடுதியைப் போல் ஆக்கிவிடும். இச்சூழல் மாற வேண்டும். திட்டவோ பாராட்டவோ அல்ல, ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாக இங்கு நடப்பனவற்றை புறவயமாக கவனித்து பதிவு செய்து அலசி ஆராய நமக்கு மேலும் பல விமர்சகர்கள் வேண்டும். அவர்களுக்கு என்று தனியான விருதுகள், நல்கைகளை உருவாக்க வேண்டும். முக்கியமாக இது சாகித்ய் அகாடெமியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்து தமிழக அரசும் தனியார் அமைப்புகளும் செய்ய வேண்டும். இவர்கள் விமர்சகர்களுக்கு என்று ஒரு விருதை ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து விமர்சகர்களைக் கொண்டாடி இம்மரபை நீட்டிக்க வேண்டும்.

அபிலாஷ் சந்திரன்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்