பனிக்கால வாடையல்ல; அக்கினிக்கால வெக்கை

முன்னுரையாக ஒரு தன்னிலை விளக்கம்


கூட்டத்தில் ஒருவனாக இருப்பது தவறில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருக்க நினைப்பதும் கூடத் தவறெனச் சொல்லமுடியாது.    இணைந்து கொள்ள முடியாத கூட்டங்களை வேடிக்கை பார்க்க ஆசைப்படலாம். இப்படித்தான் நான் இருந்துள்ளேன். உள்ளூர்த் திருவிழாக்கள் மட்டுமல்ல; உலகத் திருவிழாக்களையும் பார்த்திருக்கிறேன். மதுரையின் சித்திரைத் திருவிழாவில் பல ஆண்டுகள் பங்கேற்றுத் திரிந்தவன். திருவிழாக்களில் மட்டுமல்ல; தேர்தல்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பரிப்புகள், அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பலியிடல்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவிதமான கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன்; பங்கேற்றிருக்கிறேன்.
2017, ஜனவரி 14 முதல் 24 வரையிலுமான பத்துநாட்களும் பார்வையாளராக இருந்திருக்க வேண்டிய நாட்கள் இல்லை. பங்கேற்றிருக்கவேண்டிய நாட்கள். அதன் மூலம் என் காலத்தில் நிகழ்ந்த எழுச்சிமிக்க போராட்டத்தின் நேர்மறைக்கூறுகளையும் எதிர்மறைக்கூறுகளையும் விவாதித்திருக்க வேண்டிய நாட்கள். அது இயலாமல் போய்விட்டது. இந்த வருத்தம் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும். இந்தப் 10 நாட்களில் முன்பாதி சென்னையில் இருந்தேன். பின்பாதியில் நெல்லையில் இருந்தேன். என்றாலும் கூட்டத்தைவிட்டு விலகியிருந்தேன். பார்த்திருக்கவும் பங்கேற்றிருக்கவும் வேண்டிய இந்த 10 நாள் நிகழ்வுகளும் நேர்க்காட்சியிலிருந்து தப்பிவிட்டன. ஆனால் கண்பார்வையிலிருந்து தப்பிவிடவில்லை. நமது காலம் ஊடகங்களின் காலம். நம் வீட்டிற்குள் நுழையும் தொலைக் காட்சி அலைவரிசைகளும் சமூக ஊடகங்களும் நிகழ்கால வாழ்க்கையின் அர்த்தங்களை மாற்றி எழுதிக் கொண்டிருக்கின்றன. ’பார்த்தேன்’ என்பதும் ”பங்கேற்றேன்” என்பதும் புது அர்த்தங்களையும் பரிமாணங்களையும் உள்வாங்கிக்கொண்டு மாறிவிட்டன. களமெதற்கும் போகாமல் காட்சிகளின் வழியாகக் கண்டே இதை எழுதுகிறேன்

உணர்தலும் உணர்தல் நிமித்தங்களும்
உறுதியளித்தபடி ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டு நடப்பது சாத்தியமில்லை என அரசுகள் கைவிரித்ததன் முதல் அடையாளம் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மன்னிப்புக்கேட்டது. அதற்கு முன்பிருந்தே மாநில அரசு பொறுப்பைத் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தது. வழக்கமாகத் தை இரண்டாம் நாள் அலங்காநல்லூரில் நடக்கவேண்டிய நிகழ்ச்சி நடக்காது என்பது உறுதியானது. அந்த நாளில் எனது முகநூல் பக்கத்தில் இப்படி எழுதினேன். அதற்கு வைத்த தலைப்பு:இன்னொரு வாய்ப்பு கூடிவரப்போவதில்லை.
 
உணர்ச்சிகரமான மனவோட்டங்கள் தலைவர்களை உருவாக்கும்.புதிய இயக்கங்களைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டும் மெல்லமெல்லக் கனிந்துவந்த இந்தி எதிர்ப்பு மனநிலைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தமிழ்நாட்டிற்கான அரசியல் இயக்கமாக அடையாளங்காட்டியது. அதன் தலைவர் சி.என். அண்ணாதுரையை ஆட்சிக்குரியவர் என நம்பவைத்தது. நிதானமாக யோசித்துப் பார்த்தால். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரச்சினையில்லை. நடுத்தரவர்க்க மனிதர்களின் பிரச்சினை தான். ஆனால் தாய்மொழியின் வழியாகத் தொடர்புகொள்ளுதல் என்பது தமிழ்நாட்டின் - தமிழர்களின் பிரச்சினை.
 
சல்லிக்கட்டும் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பிரச்சினை அல்ல அது ஒரு வட்டாரப்பண்பாட்டின் அடையாளம் தான். ஆனால் அது நிகழும் நாள் முக்கியமானது. பொங்கல் கொண்டாட்டத்தோடு இணைந்த ஒன்று சல்லிக்கட்டு. அதனை மையமாக்கி ஒட்டு மொத்தத் தமிழர்களின் மனவோட்டத்தையும் - உணர்வெழுச்சியையும் தூண்டமுடியும். அப்படித்தூண்ட ஏற்கெனவே அறிமுகமான இயக்கமோ தலைமையோ முயற்சி செய்யாதபோது புதிய இயக்கம் அதை முன்னெடுத்திருக்கலாம். புதிய தலைமை ஒன்று உருவாகியிருக்கலாம். இந்த ஆண்டை விடவும் அதற்கான தருணம் இன்னொரு முறை கனிந்துவரும் என்று தோன்றவில்லை. தமிழர்களின் ஒட்டுமொத்த மனவெழுச்சியையும் ஒருமுனைப்படுத்தும் நல்லவொரு தருணத்தைத் தவறவிட்ட அந்தத் தலைமை - அந்த இயக்கம் எதுவென என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் தவறவிட்டு விட்டார்கள். இன்னொரு வாய்ப்புக் கூடிவரும் என நம்பிக்கையில்லை.
 
இப்படியெழுதிய சில மணிநேரத்திற்குள் அலங்காநல்லூரில் ஒரு போராட்டக்குழு உருவாகியது. தடையை மீறிச் சல்லிக்கட்டை நட்ததுவோம் என்றார்கள்.அவர்களுக்கு ஆதரவாக குழுவாக இல்லாமல் சென்னையில் திரண்டது ஒரு கூட்டம். சல்லிக்கட்டை நடத்த ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை அரசுக்கு உருவாக்கினார்கள். ஊடகங்கள் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தத் தொடங்கியபோது நெருக்கடிகள் அதிகமாகின. தமிழக முதல்வர் டெல்லி பயணத்திற்குத் தயாரானார். சந்திப்புக்குச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது, சந்திப்புக்குப் பின்னும் சல்லிக்கட்டு சாத்தியமில்லை என்றானபோது கூட்டங்கள் ஆங்காங்கே பெருங்கூட்டங்களாக மாறின, இந்த மாற்றத்தைப் பலரும் தன்னெழுச்சியான போராட்டம் என வருணித்தார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. நெருக்கடியை உருவாக்குவதில் மாநில அரசும், அதன் ஆதரவுசக்திகளும் இருந்தன என்றே தோன்றியது.
 
கடந்தகால நினைவலைகள்

“தன்னெழுச்சியான போராட்டங்கள்” என வருணிக்கப்படும் போராட்டங்கள் பற்றி முழுமையான உடன்பாடு எனக்கு எப்போதும் இருந்ததில்லை. நகர்த்துதலுக்கான கருவிகள் - நெம்புகோல்கள் இல்லாமல், பொருட்கள் நகரும் என்பது அறிவியல் இல்லை. போராட்டங்களுக்கும் நெம்புகோல்கள், அல்லது கிரியா ஊக்கிகள் தேவை. அவை நேரடியாக மோதும் கருவிகளாக இருக்கலாம் அல்லது அடித்துப் புரட்டும் சூறாவளியாகவோ, அலைப்பரப்பாகவோ இருக்கலாம். அப்படியொரு அலையடிப்பையே நான் சந்தித்த - பங்குகொண்ட போராட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1965 இல் எழும்பிய இந்தியெதிப்புப் போராட்ட்த்தைப் பற்றிய என் நினைவு புகைமூட்டமானது. பள்ளிக்கூட நுழைவுக்கட்டம். ஏன் அல்லது எதற்கு நடந்தது ? என்றெல்லாம் தெரியாது. அதன் விளைவுகளில் ஒன்றாக நினைவில் இருப்பது ஒன்றே ஒன்றுதான். எங்கள் பள்ளியில் இருந்த இந்தி டீச்சர் தையல் டீச்சராக மாற்றப்பட்டார்.
நான் பங்கேற்ற முதல் பெரும்போராட்டம் பொதுமக்களுக்கான போராட்டமல்ல. ஒரு தனிநபருக்கான போராட்டம். அதுவும் ஒரு கட்சிக்குள் நடந்த உள்விவகாரம். அதற்காகப் போராடியிருக்கவேண்டியவர்கள் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டும்தான். ஆனால் நடந்ததோ பெரும்போராட்டம்.

 தி.மு.க.வின் பொருளாளராக இருந்த திரு எம்.ஜி.ராமச்சந்திரனை அந்தக் கட்சி வெளியேற்றது. அந்த வெளியேற்றத்தை மாநிலத்தின் பிரச்சினையாக - மக்களின் பிரச்சினையாக மாற்றி முன்வைத்தபோது ஆளுங்கட்சிக்குள் நடந்த தனிநபர் மோதல், பொதுமக்களின் பிரச்சினையாக ஆக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் முதன்மையான கூட்டம் பள்ளி மாணவர்களே. பள்ளி மாணவர்கள் அதிகமாகவும் கல்லூரி மாணவர்களில் குறைவாகவும் பங்கேற்ற போராட்டத்தால் மூன்று மாதங்களில் 10 தடவைக்கும் அதிகமாகப் பள்ளி விடுதி மூடப்பட்டது.
 
ஆளும் அரசாங்கம் ஊழல் செய்வதாகவும், விவசாயத்திற்கு உதவும் கூட்டுறவு சங்கங்கள், அதன் துணை நிறுவனமான கிட்டங்கிகள் தொடங்கி, பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் கட்சிக்காரர்களின் அதிகாரம் அதிகரித்துவருகிறது என்ற கோபமும் எரிச்சலும் மக்களின் மனவோட்டத்தில் தங்கியிருந்த நேரத்தில் எம். ஜி. ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அந்நீக்கக் காரணத்தைப் பொதுமக்களின் பிரச்சினையைப் பேசவிடாத ஒன்றாக மாற்றிய நிகழ்வில் பொதுமனம் உடன்பட்டது. பொதுமனம் அல்லது வெகுமக்களின் மன எழுச்சி என்பது எப்போதும் அப்படித்தான் தன்னால் இயலாத ஒன்றை இன்னொருவர் செய்யும்போது இணைகிறது.

பொதுமனத்திலும் இளையோர் உளவியல் என்பது விநோதமானது. சாகசம், வீரம், கோபம், என எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு தன்னை இன்னொரு பிம்பத்தோடு இணைத்துக்கொள்ளும். திரைப்பட நாயகனின் காதலிலும் வில்லனின் கூட்டத்தை அடித்துத் தூளாக்கும் நாயகனின் சண்டைக் காட்சியிலும் தன்னை இணைக்கும் அதே மனோபாவம் அது. பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் இளையோர் உளவியலின் விளைவே எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் திரைப்பட பிம்பம் அரசியல் பிம்பமாக மாறியதன் பின்னால் இருந்த உளவியல். 10 ஆம் வகுப்பு மாணவனாக இருந்த நான் சளைக்காமல் அந்தப் போராட்டங்களில் ஈடுப்பட்டேன்; சுவர் தாண்டிக் கல்லெறியும் கூட்டத்தில் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
 
எம் ஜி ஆருக்காகக் கல்லெறிந்து போராடிக் கருணாநிதியை எதிர்த்த தமிழக மாணவர்கள் கூட்டம், இரண்டு ஆண்டுகள் கழித்து திரு. மு.கருணாநிதியின் தலைமையில் இந்திரா காந்தியின் அவசரநிலையை எதிர்த்தது என்பதும் தமிழகப் போராட்ட வரலாறுதான். ஆனால் அதில் கலந்துகொண்ட கூட்டத்தைத் தன்னெழுச்சியான கூட்டம் எனச் சொல்லவில்லை வரலாறு. குறிப்பான அரசியல் காரணங்களுக்காக நடந்த போராட்டம் அது. அப்போராட்ட்த்தில் கலந்துகொண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொண்டு பங்கேற்றவர்களைத் தன்னெழுச்சியானவர்கள் எனச் சொல்வதில்லை அரசியல் அகராதிகள். தமிழகப் பொதுமனோபாவம் என்பது எப்போதும் இந்தியப் பொதுமனோபாவத்திலிருந்து விலகியே பயணம் செய்யும் தன்மைகொண்டது. அதனைத் தக்கவைப்பதில் தமிழகப் பெருங்கட்சிகளும் அறிவுலகமும் பெரும்பாலும் ஒன்றிணையக் கூடியன. அவசரநிலையைப் பற்றிய இந்தியப் பொது நீரோட்டத்திற்கு மாறாகக் கல்லூரி மாணவர்களும், இளையோர்களும் குறிப்பான அரசியலால் வழிநடத்தப்பட்டனர் இலக்குகளோடு இயங்கும் அரசியல் தலைமையின்கீழ் அதன் நெறியாள்கையில் - வழிகாட்டுதலில் நடந்த போராட்டம்.

இந்தியாவிலேயே ஆட்சியில் இருந்த முதல்வர்களில் அவசர நிலையை எதிர்த்தற்காக ஆட்சியதிகாரத்தைப் பின்னர் இழந்த திரு மு.கருணாநிதிதான் வழிகாட்டினார். நெறிப்படுத்தினார். அது அதில் கிடைத்த விழுப்புண்களும் தியாகமும் தொடர்ந்து நினைக்கத்தக்கன; கொண்டாடப்படுபவன.
இலங்கைப் பிரச்சினைக்காக எண்பதுகளில் நடந்த போராட்டங்களில் தன்னெழுச்சியான ஈர்ப்பும் ஈடுபாடும் மாணவர்களிடம் இருந்தன. ஆனால் தொண்ணூறுகளில் அதே ஈடுபாடும் ஈர்ப்பும் இருந்தன எனச் சொல்வதற்கில்லை. இந்தியாவின் பிரதமராக இருந்த திரு. ராஜீவ் காந்தியின் கொலை நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தபின்பு பொதுமனத்தின் ஈடுபாடும் விருப்பங்களும் இரட்டைநிலைக்குள்ளேயே இருந்தது. தமிழின விடுதலையை ஆதரிக்கும் மனம் ஒருபக்கமும், இந்திய இறையாண்மையைக் கவனிக்கவேண்டுமென நினைக்கும் இன்னொரு மனமுமாகவே போராட்டங்கள் பார்க்கப்பட்டன. அதன் இரட்டைத்தன்மையைக் குறைத்து ஈழ ஆதரவு மனநிலையைத் திரும்பக் கொண்டுவந்த இன்னொரு பெருநிகழ்வாக இருந்ததில் 2009 , முள்ளிவாய்க்கால் பேரழிவும், பாலகன் பாலச்சந்திரனின் படுகொலையும் இருந்தது. கடந்தகாலம் கடந்தனவாக இருக்கட்டும்.

அலங்காநல்லூரென்னும் தலையாலங்கானம்

நிகழ்காலத்திற்கு வரலாம். சல்லிக்கட்டை முன்வைத்து நடந்த 10 நாள் நிகழ்வுகளுக்குத் திரும்பலாம். 2008 இல் சல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற ஐயத்தோடு நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடியது முதல் சல்லிக்கட்டைப் பற்றி எழுதிவருகிறேன். அப்போதும் இப்போதும் எனது கருத்து சல்லிக்கட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாளம் அல்ல என்பதே. அது ஒரு வட்டாரப்பண்பாட்டின் அடையாளம். அதில் நிகழ்கால ஜனநாயகத்தின் படியான பங்கேற்புக்குத் தேவையான நெகிழ்ச்சியும் ஏற்பும் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கும் அரசதிகாரத்தின் வலுவிற்கேற்ப வளைந்துகொடுக்கும் தன்மை இருக்கிறது. அதன் காரணமாகவே தமிழ்ச் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பங்கேற்கும் வாய்ப்பை மறுக்கும் தன்மையோடு இருக்கிறது என்றே எழுதிவந்துள்ளேன். ஆனால் இந்த ஆண்டு அதன் தன்மையில் பெரும் மாற்றம் நிகழ்ந்ததாகவே உணர்ந்தேன்.
 
அலங்காநல்லூர் என்ற ஊரின் பெயர் திரும்பத் திரும்ப ஊடகங்களில் ஒலித்தபோது,, “தலையாலங்கானம்” என்ற சங்ககால இடம்பெயர் இதுதானோ என்று மனம் நினைக்கத்தொடங்கியது. தனது இளம் வயதில் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிரிகளை வென்ற வரலாற்றை விரிவாகப் பாடிய புலவர்களின், பாடல்களில் இருந்த “ஆரியப்படை கடந்தவன்” என்ற முன்னொட்டும் என் நினைவுக்கு வந்தது. அதனால் தமிழர்களின் கூட்டு மனோபாவத்திற்குள் இருக்கும் வடவர் எதிர்ப்பு, ஆரியச் சதிமுறியடிப்பு என்பன சல்லிக்கட்டு எனும் வட்டார அடையாளத்தின் வழியாக நினைவுகூரப்பட்டதாகவே எண்ணினேன். நான் மட்டுமல்ல பலரும் அப்படியே நினைத்தார்கள்; நகர்ந்தார்கள். அண்மைக்காலத் தமிழக அரசியலில் இருக்கும் நிச்சயமின்மையைப் பயன்படுத்தி மைய அரசாங்கத்தின் ஆளுங்கட்சி, தமிழர்களுக்கு எதிரான போக்கை மறைமுகமாகச் செயல்படுத்துகிறது என்ற எண்ணவோட்டத்தின் வெளிப்பாடு அது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தள்ளிப்போட்டது; முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் விலகி நிற்பது; காவிரிப்படுகை விவசாயிகளின் தற்கொலை, அவர்களின் நிலத்தின் வளமிழக்கச் செய்யும் எண்ணெய்க் குழுமத்திற்கு ஆதரவு, தமிழக அளவிலான பொது நுழைவுத்தேர்வுக்கு மாற்றாகத் தேசிய நுழைவுத்தேர்வை நுழைத்தல், சம்ஸ்க்ருத மொழிக்கு முக்கியத்துவம் அளித்தல் என நகர்ந்த மைய அரசின் போக்கை எதிர்க்க நினைத்த பொதுமனம் அல்லது வெகுமனம் தேடிய ஒரு கருவியாக- விளக்காக -சல்லிக்கட்டு வந்து நின்றது. அந்த விளக்கின் திரிக்குத் தேவையான எண்ணையை ஊற்றுவதுபோலப் பொங்கலுக்குப் பொதுவிடுமுறை இல்லையென்ற அறிவிப்பும் பின்வாங்கலும் அமைந்தன. இவையெல்லாம் சேர்ந்து சல்லிக்கட்டின் வாடிவாசலிலிருந்து கிளம்பும் அடக்கமுடியாக் காளையைப் போலப் போராட்டத்தீயை மூட்டிவிட்டது.

ஆதரவும் எதிர்ப்பும்

திரள்வதற்குப் பல காரணங்கள் தேவை இல்லை. ஒன்றேயொன்று போதும். அந்த ஒன்று அரசியல் கொள்கையென்றால், அதை ஏற்காத கட்சிகள் பங்கேற்காது. பொருளாதாரக் காரணமென்றால், அதனால் பலன் கிடைக்காது என நினைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நழுவிவிடுவார்க்ள். சமுதாயப்பிளவுகளில் ஒன்று காரணமாக இருந்தால்,அதற்கு வெளியிலிருக்கும் கூட்டம் விரோதமாகச் செயல்படும்.
பண்பாட்டு அடையாளம் என்றால் அதன் இயங்குநிலையே வேறு.ஒவ்வொருவரின் மூளைக்குள் -மனதிற்குள் - நினைவுக்குள் அலைந்துகொண்டிருக்கும். நிகழ்கால வாழ்வில் அந்த அடையாளத்திலிருந்து வெளியேறியவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பார்க்கும் -பங்கேற்கும் - கொண்டாடும் விருப்பம் இருக்கவே செய்யும்.
ஏறுதழுவலாக - மஞ்சிவிரட்டாக -சல்லிக்கட்டாக அலைந்துகொண்டிருப்பது தமிழ் அடையாளமாக - பண்பாட்டுக் கூறாக அலையத்தொடங்கிவிட்டது.

அதன் எதிர்நிலையில் - விலங்குகளை அறவுணர்வுடன் கையாளும் மனிதர்களுக்கான அமைப்பு[People for the Ethical Treatment of Animals (PETA)] இருப்பதால் அந்நியக் கரங்களின் நுழைவை எதிர்க்கும் வடிவமாக இருக்கிறது. இந்த அமைப்பின் புரிதலற்ற வாதத்தை ஏற்றுத் தடைவழங்கிய நீதிமன்றமும், அதில் தலையிடாமல் தவிர்க்கும் மத்திய, மாநில அரசுகளும் எதிர்மைகளாகவே ஆகிவிட்டன. நட்புசக்திகளை வைத்துமட்டுமே போராட்டத்தை மதிப்பிட வேண்டும் ; ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. எதிர்க்கப்பட வேண்டிய தொகுப்பொன்றின் ஒரு கூறை எதிர்க்கிறார்கள் என்பதே போதும். ஆதரிக்கலாம். இந்தப் போராட்டம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று என்றே நான் நினைத்தேன். எனது நினைப்பு தனிமனித மனத்தின் நினைப்பல்ல; தமிழ் வெகுமக்கள் மனநிலையின் ஒரு கூறு. அந்தப் பொதுமனம் எப்போதும் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதில்லை. கடந்த காலத்திற்குள்ளும் பயணம் செய்யும் வல்லமைகொண்டது. அதன் சாரம் இந்தியாவின் சமயவரலாற்றில் இருக்கிறது. அறுசமயங்களையும் ஒரு சமயமாகக் காட்டிய வரலாறு அது.

சமய வரலாறென்னும் பின்புலம்
ஆதிக்கச் சிறுபான்மையினரின் ஆதிக்கக் கருத்தியலையும் மறுத்து - வெளிப்படையாகச் சொல்வதென்றால் பிராமணியக் கருத்தியலைக் காப்பதற்கான அமைப்பாக இருக்கும் வைதீக சமயத்தை எதிர்த்து உருவான சமயங்களையெல்லாம் தனது உட்பிரிவுகளில் ஒன்று எனக்காட்டும் பெருமத ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அந்தக் கடந்தகாலம். சமணத்தையும் பௌத்தத்தையும் புறச்சமயங்களாகச் சொன்ன வரலாற்றில் இருக்கிறது. எல்லாவற்றையும் கர்மம், மறுபிறப்பு, விதி எனக் கைகாட்டிய தத்துவப்பார்வையில் இருக்கிறது. ஆனால் தமிழ்ச் சிந்தனை மரபு என்பது நிலப்பிரிவுகளால் ஆனது. நிலங்களின் உரிப்பொருள் கருத்துக்களாலும், அவற்றை வெளிப்படுத்தும் கருப்பொருட்களாலும் ஆனது. அவற்றிற்குப் பின்புலமாக இருக்கும் காலம், வெளி என்னும் முதல்பொருட்களால் ஆனது. அதன் நோக்கு ஒற்றைத் தள நோக்கல்ல. பன்மைத்தள நோக்கு. தமிழ் மரபைப்போல இன்னும் பலப்பலச் சிந்தனை மரபுகளைக் கொண்ட நிலப்பரப்பே இன்று இந்தியப் பரப்பாக ஆகியிருக்கிறது. தமிழக நிலப்பரப்பு இந்தப் பன்மைத் தன்மையை உள்வாங்கிக் கொண்ட இசுலாத்தையும் கிறித்துவத்தையும் கூடப் புறச்சமயங்களாகப் பார்க்காமல் மொழிவழி இயைபைப் பேணவிரும்புவதில் இருக்கிறது தமிழ் மரபின் நேர்மறைத்தன்மை.

பன்மை அடையாளங்களும் பல்நிலை நிலப்பரப்புகளும் பலவிதமான மொழிகளும் வழக்கிலிருக்கும் ஒரு துணைக்கண்டத்தை ஒற்றை நாடாக ஆக்குவதில் பண்பாடு முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கை இருப்பதில் தவறில்லை. ஆனால் உலகவரலாற்றில் பண்பாடும் மொழியும் நாடுகளை உருவாக்கி நிலைநிறுத்திவிடவில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது. இன்றைய சல்லிக்கட்டு நிகழ்கால அதிகார அரசியல் போல சாதிகளால் கட்டுப்படுத்துவனவாக இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் அப்படி இருந்ததில்லை. இந்திய கிராமசமுதாயத்தின் அனைத்துக்கூறுகளும் அதனதன் இருப்புக்கேற்ப அதில் பங்கேற்றன. அதில் மேல் - கீழ்ப் படிநிலைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனைச் சரிசெய்யமுடியும். அதற்குப் பன்மைத்துவத்தை ஏற்கும் ஜனநாயகம் வேண்டும்.

வரலாறு முழுவதும் உடல் உழைப்பில் ஈடுபடாமல், மூளையை மட்டும் நம்பி ஆதிக்கம் செலுத்தும் கூட்டம் ஒற்றை பண்பாட்டால் திரும்பவும் ஆதிக்கம் செலுத்தவிரும்புகிறது என்ற அச்சத்தை இந்தப் போராட்டம் மறைமுகமாக முன்வைக்கிறது. அந்த அச்சம் முழுமையும் தவறானதல்ல. ஏனென்றால் ஆதிக்கக் கருத்தியலும், அதன் ஆதரவாளர்களும் எந்த விசயத்திலும் முழுமையான நம்பிக்கையை எதிர்பார்க்கிறார்கள். பொங்கல் திருவிழாவும் அதன் ஒருபகுதியான சல்லிக்கட்டும் அவர்கள் முன்வைக்கும் ஒற்றைப்பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும் துணைப்பண்பாடாக மாற்றிக்கொள்ளத் தயாராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. அது உருவாகும்வரை எல்லாவற்றையும் தந்திரங்களால் கையாளும் திறமையுடையவர்கள் அவர்கள். அவர்களின் தந்திரங்களைச் செயல்படுத்தும் விளையாட்டுக் களங்களாகவே சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் போன்றனவற்றைப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள் என்பதையும் கடந்த காலம் நிரூபித்திருக்கிறது.

ஊடகங்களைக் கையாளுதல்

நிகழ்காலத்தில் பெருந்திரளைக் கையாளும் ஊடகங்கள் முழுமையும் தந்திரமான விளையாட்டுக்களங்களாக இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. வெகுமக்கள் ஊடகங்களாக நிலைநிற்கவேண்டுமென்றால் பெருந்திரளின் நம்பிக்கைக்குரியனவாக அவை திகழவேண்டும். அதைப் புரிந்து கொண்டனவாக 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிகள் பணியாற்றின. திரண்ட இளையோர்கள் வெகுமக்கள் ஊடகங்களைக் கையாண்டதோடு அவர்கள் கைவசமிருந்த சமூக வலைத்தளங்களையும் சரியாகவே கையாண்டார்கள். அதன் வழியாகவே அலங்காநல்லூர் என்னும் மருதநிலக் கிராமத்து நிகழ்வொன்றை நெய்தல் நிலக்கடல் பரப்பான மெரினாவிற்கு நகர்த்தினார்கள்.
 
அந்த நகர்வு போராட்டத்தின் பரிமாணங்களை வெகுவாக விரிவடையச் செய்தன. அரசும்கூட அந்த விரிவடைதலை வரவேற்றதுபோலவே தெரிந்தது.கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் பொங்கலுக்குப் பின்னான விடுமுறைகள் நீட்டிக்கப்பட்டபோது மாணவர்கள் போராட்டத்திலிருந்து விலக்கப்படும் நிலைமைக்கு மாறாக உள்வாங்கப்படுகிறார்கள் என்ற உண்மை புரியவே தொடங்கியது. மாணவர்கள் மற்றும் இளையோர் போராட்டங்களை எப்போதும் எதிர்மறை மனநிலையோடு கவனித்து அடக்கிவிட நினைத்துக் கலைக்கப்பார்க்கும் காவல்துறை நட்புக்கரம் நீட்டியது பலவித சந்தேகங்களை எழுப்பவே செய்தன. போராட்டக்களங்களான மெரினா கடற்கரை, தமுக்கம் மைதானம், வ.உ.சி.பூங்காக்கள் போன்றன திருவிழா நிகழ்வுக்களன்களாக மாறின; மாற்றப்பட்டன; புனிதமாக்கப்பட்டன. அதன் பின்னணியில் தமிழக நலன்கள் இருக்கின்றன என்று பெருங்கூட்டம் நம்பிக்கொண்டிருந்தது, அந்த நம்பிக்கை தமிழக முதல்வர் திரு. பன்னீர்ச்செல்வமும் இந்தியாவின் தலைமையமைச்சர் திரு. நரேந்திரமோடியும் சந்தித்ததை ஆவலோடு காத்திருக்க வைத்தது. காத்திருப்பு பொய்யானபின்பு போராட்டம் திசைமாறும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. போராட்டக்களன்கள் விரிவடைந்தன; எதிர்ப்பு மைய அரசை நோக்கியதாகத் திரும்பியது. ஆனால் தந்திரமாகப் பந்து தமிழக அரசின் எல்லைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டது.
 
தள்ளப்பட்ட பந்தைக் கச்சிதமாகப் பிடித்தபின் நடந்த நிகழ்வுகள் நல்லபடியாகவே இருந்தன, அவசரச்சட்டமென்ற ஒரு நம்பிக்கைக்கீற்று வெளிப்பட்டது, அதன் வெளிச்சத்தில் சல்லிக்கட்டை நிதானமாக நடத்தியிருக்கமுடியும். அதைச் செய்யவிடாமல் தடுத்தது எது? என்பது பெருங்கேள்விக்குறி. அதற்கான பதிலாக எனக்குத் தெரிந்த ஒன்று ஆளுங்கட்சியின் மக்கள் விரோத மனோபாவம் என்றே சொல்வேன். அந்தக் கட்சி பெரும்பாலும் தேர்தல் காலங்களில் வாக்களிக்கும்வரை மக்களிடம் இருக்கும்; வாக்களித்து ஆட்சியைக் கைப்பற்றியபின் மக்களின் மனநிலையைக் கண்டுகொள்ளாது, மக்கள் என்பவர்கள் எப்போதும் அதிகாரத்திற்குச் செவிசாய்க்கவேண்டியவர்கள்; கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்கள் என்றே நினைக்கும். அதன் தலைவர்களின் தனிப்பெரும் ஆளுமையைத் திரள் மக்கள் கேள்விகளற்று ஏற்றுக்கொண்டதால் உண்டான போக்கு அது. ஆகவே அப்போக்கிற்கான காரணிகள் திரள்மக்கள்தான்.

வசந்தமல்ல; கோடை

உலகப்போராட்டங்களை அறிந்தவர்கள் “வசந்தங்கள்” என வருணித்ததுபோல இது ஒரு மெரினாவின் பின்பனிக்கால வாடையாக முடிந்துபோயிருக்க வேண்டிய நிகழ்வு. ஆனால் கோடைகாலத்து வெக்கையாக முடிந்துவிட்டது. சல்லிக்கட்டுக்காக மட்டுமே கூடிய கூட்டம் என நினைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்களுக்கு அரசியலின் அடிப்படைகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பண்டமாக்கி விற்க முடியுமென நினைத்த வியாபாரக் குழுமங்கள் தவிப்பில் இருக்கின்றன. அவர்களின் பிம்பங்களை ஊதிப்பெருக்கிப் பெரிசாக்கி அரசியல் லாபம் அடையாளம் என்றுகூட அரசியல் கட்சிகள் நினைத்திருக்கலாம். நல்லவேளை அவர்களாக வெளியேறி எல்லாக்கனவுகளையும் கலைத்துவிட்டார்கள். சல்லிக்கட்டு என்பது வட்டார அடையாளத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகப் பத்துநாட்களில் மாறிய பரிமாணத்தைப் புரிந்துகொள்ளத் தெரியாததால் அவர்கள் பின்வாங்கினார்கள். அவர்களையே அரசியல் தலைமையாகக்காட்டி அரசதிகாரம் போராட்டத்தைத் தவறாக எடைபோட்டிருக்கிறது. உண்மையில் ஆட்சியதிகாரம் என்பது தமிழகத்தின் நலனில் அக்கறைகொண்டதாகப் பாவனையாவது செய்யவேண்டுமென்பதை முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தெளிவாக புரிந்துவைத்திருந்தார். அவர் வழியில் செல்வதாக நம்பும் அவரது கட்சி ஏன் தடுமாறுகிறது என்று தெரியவில்லை.

எண்ணிப் பார்த்தால் 10 நாட்கள் கூட இல்லை. இந்தப் பத்துநாட்களாகப் பெருந்திரளாகக் கூடிய கூட்டம், சல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மையத்தில் அதிகாரத்தில் இருந்த/ இருக்கும் அரசுகளின் - தவறான திட்டமிடலின் விளைவுகளும் மக்களின் கூட்டு நனவிலிக்குள் இருக்கின்றன. வண்ணங்களோடு புரட்சியைச் சேர்க்கச் சொல்லி பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற சொல்லாடல்களை உருவாக்கித் தந்தவர்கள் விஞ்ஞானிகள். அவர்கள் சொன்ன வார்த்தையை மேடையில் முழங்கியவர்கள் காங்கிரஸ் பேரியக்க அரசியல்வாதிகள். புரட்சி என்ற சொல்லைக் கொச்சைப்படுத்தியவர்கள் நடிகர்களும் நடிகைகளும் மட்டுமல்ல; விஞ்ஞானிகளுக்கும் அரசியலாளர்களுக்கும் கொச்சைப்படுத்தியதில் பங்கிருக்கிறது.
 
‘வதைகளின் மூலம் காளைகளைக் காட்சிப்படுத்துதல் நடக்கிறது’ எனக் காணொளிகளைக் காட்டி நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ள விஅபம அமைப்பு. (People for the Ethical Treatment of Animals -விலங்குகளுக்கு அறவழிப் பணியளிக்கைக்கான மனிதர்களின் அமைப்பு) பண்பாட்டின் ஒரு கூறை நினைவிலிருந்து அழித்துவிடப் பார்க்கிறது . அதற்கு பன்னாட்டுப் பின்புலமும் நிதிநல்கைகளும் இருக்கின்றன எனத் திரண்ட தமிழர்கள் மட்டுமல்ல; உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் நம்புகிறார்கள் இது இந்தியக் காளைகளையும் ஆவினங்களையும் இல்லாமல் ஆக்கும் திட்டத்தின் ஒரு பகுதியென நினைப்பதில் உண்மையில்லாமல் இல்லை.
 
இந்த நேரத்தில் இன்னொன்றை நினைவுபடுத்தலாம் என்று தோன்றுகிறது. பசுமைப் புரட்சிக்கு முந்திய தைப்பொங்கலன்று கோமியம் தெளித்து நினைவுபடுத்தப் பட்ட நெற்களின் பெயர்கள் ஐம்பதுக்கும் குறையாது. சம்பாக்களும், வாரிகளும் கொண்டான்களும் மாரிகளும் எனக் குளுக்கைகளில் பாதுகாக்கப்பட்ட விதைநெல்கள் இப்போது இல்லை; குளுக்கைகளும் காணாமல் போய்விட்டன. போகவைத்தவர்கள் யார்? ஆடுதுறையில் அம்பாசமுத்திரத்தில் விதைப்பண்ணைகளை உருவாக்கி ஒவ்வொரு தடவையும் விதைநெல்லுக்காக வியாபாரிகளை நாட வைத்தவர்கள் யார்? ஐ.ஆர். 8, ஐ.ஆர். 20, ஐ.ஆர். 50, கோ.18, ஆடுதுறை 24 என எண்களோடு அறிமுகமான நெல்விதைகளை அறிமுகப்படுத்தி, குறைந்த நாளில் அதிக மகசூல் எனக் கோஷமிட்ட பசுமைப்புரட்சிக் காவலர்கள் தானே.பசுமைப்புரட்சியின் காரணகர்த்தாவும் நம்மூர் வேளாண்மை விஞ்ஞானி ஸ்ரீமான் சுவாமிநாதன் என்னும் பெயர் தான். அவரை விமரிசித்தவர்களைப் பார்த்தும் அவதூறுப்பேச்சு எனவும் சதிக்கோட்பாட்டு நம்பிக்கையாளர்கள் வேலை என்றும் தான் சொன்னார்கள்.

நெல், சோளம், கம்பு, கேப்பை, வரகு, திணை, சாமை, குதிரைவாலி எனத் தானியங்களையும் துவரை, மொச்சை, காராமணி, கருங்கானம் போன்ற உள்ளூர்ப் பயறுகளையும் நாட்டுப் பயிறுகளெனச் சொல்லித்தரம் தாழ்த்திப் பார்க்கவைத்துவிட்டு, அவற்றிற்கெதிராகச் சீமைப் பயறுகளைக்கொண்டுவந்தது பசுமைப்புரட்சியும் வெண்மைப்புரட்சியும். இவ்விரு புரட்சிக்கும்ப் பின்னால் இருந்தது உண்மை விஞ்ஞானமல்ல; தரகு விஞ்ஞானம் .
 
தமிழ்நாட்டுத் தானியங்கள் காணாமல் போனதுபோல் காளைகளும் பசுக்களும் இல்லாமல் போகாது என எப்படி நம்ப முடியும்?
நடப்பது சல்லிக்கட்டு என்னும் சடங்கை நடத்திவிடவேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக அல்ல. தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக.


இந்த அரசியல் தெரியாதவர்கள் தான் நடந்தது சல்லிக்கட்டுக்கான போராட்டம் என நினைப்பார்கள் இதைப் புரிந்துகொண்ட கூட்டம்தான் கடந்த 10 நாட்களாகச் சல்லிக்கட்டின் பெயரால் கூடிய கூட்டம். அதைக்கேட்க நினைத்தபோது அரசதிகாரங்கள், அவர்களின் போராட்ட்த்தை - புனிதப்போராட்டமென வருணனை செய்த போராட்ட்த்தை - வன்முறைப்போராட்டம் என வரையறை செய்திருக்கின்றன. இப்போதில்லையென்றாலும் இனிவரும் காலங்களில் அவர்கள் கேட்கவே செய்வார்கள் .
============================================== உயிர்மை, பிப்ரவரி,2017கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்

பண்பாட்டுக் கல்வி