அபிலாஷ்: குடும்ப அமைப்பின் மீதான விமரிசனம்


இன்று காலை ஒரு பயணத்தின்போது ஹலோ எப்.எம்மில் (106.4) பாடல்களுக்கிடையே நண்பர் அபிலாஷ் சந்திரனோடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடத்திய உரையாடல்களையும் கேட்டுக்கொண்டே பயணம் செய்தேன். அவர் முகநூலில் எழுதும் ஆண் X பெண் முரண்களை மையமிட்ட உரையாடல்கள். அவரது முகநூல் விவாதங்களை வாசித்தபோது தோன்றிய கருத்துகள், இன்று வானொலி உரையாடலைக் கேட்டபின் கூடுதல் அழுத்தம் பெற்றதால் இப்போது சொல்லத்தோன்றுகிறது.
அபிலாஷ் எழுப்பும் விவாதங்கள் பெரும்பாலும் தனிக்குடும்பங்களின் சிதைவுக்காலத்தைக் குறித்த சொல்லாடல்களாக இருக்கின்றன. முழுமையாகத் தங்களைக் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து துண்டித்துக்கொள்ளாத பெண்களின் அச்சமும் விடுதலை உணர்வும் கலந்த கலவையை விமரிசனத்திற்குள்ளாக்குகிறார். அந்த விமர்சனம் தேவையான ஒன்று என்றே தோன்றுகிறது.

இந்திய சமூகத்தில் நவீனக் குடும்ப அமைப்பு உருவாவதைக் குறித்த விவாதத்தை அபிலாஷ் முன்னெடுக்கிறார். பெற்றோர்களிடமிருந்து ஆண்களை / கணவர்களைப் பிரித்துத் தனது உடைமைக்குள் கொண்டுவர நினைக்கும் பெண்கள், தங்களைத் தங்களின் பெற்றோரிடமிருந்து பிரித்து முழுமையாகத் தனிக்குடித்தனத்தில் - தனிக்குடும்ப அமைப்பிற்குள் நுழைத்துக்கொள்வதில்லை. அவர்கள் கணவனிடம் கிடைக்காத ஒன்றிக்கு பெற்றோரிடம் அடைக்கலமாகும் நிலையில் இருக்கிறார்கள் என்பது அபிலாஷின் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதற்குப் பதிலாக அவர்கள் தனித்து நின்று தன்னிலை உணர்ந்து போராடத்தயாராக வேண்டும் எனக் கோருகிறார்.
திருமணத்திற்குப் பின் பெற்றோர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தனிக்குடும்ப அமைப்பிற்குள் நுழையப்போகும் நவீனகாலத்து ஆணும் பெண்ணும்கூட திருமணம் என்னும் நிகழ்வையும் அதன் வழியாக உருவாகும் குடும்ப அமைப்பையும் உருவாக்கும் பொறுப்பைப் பெற்றோரிடமே விடுவதால் இந்தச் சிக்கல் தொடர்கிறது.
 
இந்த விவாதத்தை ஆண் - பெண் என்ற எதிரிணையாக வைத்துப் பேசாமல் இந்தியக் குடும்பங்களின் மீதான விமரிசனமாக முன்வைக்கும் முறையியலை அவர் கைக்கொண்டால் இன்னும் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. மரபான கூட்டுக்குடும்ப மதிப்பீடுகளைத் தனிக்குடும்பங்களிலும் தொடரும் ஆண்களும் விமரிசன எல்லைக்கு வரவேண்டியவர்களே. நகரவாழ்க்கை, பொதுப்போக்குவரத்துப் பயணங்கள், சொந்த வாகனப்பயணங்கள், அலுவலகங்களில் கிடைக்கும் உரையாடல் வாய்ப்புகள், ஊடகங்கள் வழியாக வந்து சேரும் கொண்டாட்டங்களில் தன்னிறைவு அல்லது போதாமை, பல்லடுக்குக் குடியிருப்பு வீடுகள் தரும் தனிமை அல்லது சுதந்திரம் என்பனவும் இவற்றோடு இணைத்து விவாதிக்கப்படவேண்டியவை. 

குடும்பத்தை நடத்துவதற்குத் தேவையான பொருளியல் தேவையைச் சமமாக்கும் வாய்ப்பில்லாத நிலையில் எவ்வாறு பங்கீடுகள் அமையும் என்பது முதன்மையாக விவாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அத்தோடு ஒரு நாளைப் பங்கிடுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதனை மாற்றுவது குறித்தும் இருவரும் நினைப்பதில்லை. அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் - வளர்த்தெடுப்பதில் இருவரும் சமநிலையில் செயல்பட என்ன செய்ய வேண்டும்? எதுவரை அவர்களுக்குப் பங்கிருக்கிறது? எந்த வயதில் பிள்ளைகளைத் தனித்து இயங்குபவர்களாக மாற்றுவது என்பதெல்லாம் இங்கு இன்னும் விவாதப்படுத்தப் படாதவைகளாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் விவாதிக்கத்தூண்டும் வகையில் அபிலாஷின் விமரிசனங்கள் இருக்கின்றன என்றே தோன்றுகிறது.
பொதுவாகப் பலரும் எழுதும்போது நிதானமாக வெளிப்படுவார்கள்; பேசும்போது திட்டமிடாமல் எதையாவது சொல்லிவிடுவார்கள். ஆனால் அபிலாஷ் இதில் மாறானவராக இருக்கிறார். வானொலி உரையாடலில் எழுத்தில் இல்லாத நிதானத்தைக் கொண்டுவந்திருந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்