மேக்பெத்- ஒரு -பார்வையாள அனுபவம்


நேற்று நான் இருக்கும் கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் வில்லியம் சேக்ஸ்பியரின் மேக்பெத் நடந்தது. 50 மாணவர்கள் நடிகர்களாகவும் பின்னரங்கப்பணியாளர்களாகவும் பங்கேற்றனர். இயக்கம் முனைவர் மணீஸ்குமார். புதுவை நாடகப்பள்ளியிலும், தேசியநாடகப் பள்ளியிலும் பயின்றவர். அவருக்கு உதவியாக ஒளி அமைப்புக்கும் இசைக் கோர்வைகளுக்கும் புதுச்சேரி முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். குமரகுரு கல்லூரிகளின் நாடகமன்றத் தயாரிப்பு. என்ன நாடகத்தை எடுத்துக்கொள்ளலாம்; யாரை இயக்குநராக அழைக்கலாம் என்ற ஆலோசனையோடு என்னுடைய வேலை முடிந்தது. பின்னர் அவர்களின் வேலைகளில் யாரும் தலையிடுவதில்லை. முழுவதும் நாடகமன்றப் பொறுப்பாளர்களும் வருகைதரும் இயக்குநரும் மட்டுமே பொறுப்பேற்று மேடையேற்றுகிறார்கள்

**********
நேற்று நிகழ்வுக்கு முன்னால் நடந்த முழு ஒத்திகையைப் பார்த்தேன். பிறகு நிகழ்வைப் பார்த்தேன். மேக்பெத் நாடகத்தை ஆங்கிலத்திலும் போல்ஸ்கியிலும் பார்த்துள்ளேன். இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி நான்கு மொழிகளில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பியர்கள் அப்படியே சேக்ஸ்பியரை மேடையேற்றுகிறார்கள். ஆனால் இந்திய மொழிகளில் மேடையேற்றம் செய்பவர்கள் இந்தியச் சொல்முறையான கதைகூற்றுச் சொல்முறையில் நிகழ்த்துவதை விரும்புகிறார்கள். கட்டியங்காரப்பாத்திரங்களை உருவாக்கி அவற்றின் வழியாகவே மேற்கத்திய நாடகஙகளை நிகழ்த்த முயல்கிறார்கள். அந்த முயற்சி மேற்கத்திய நாடகங்களைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் மேற்கத்திய நாடகங்களில் இருக்கும் ரகசியம்- விடுவிப்பு என்னும் முக்கியமான உத்தியைக் கெடுத்துவிடக்கூடிய ஒன்று மறந்து விடுகிறார்கள். மணீஸ்குமாரின் நாடகத்தை அப்படித்தான் தொடங்கினார். ஆனால் அத்தோடு நிறுத்திக்கொண்டு சேக்ஸ்பியரின் கட்டமைப்பிலேயே நிகழ்த்தினார்.

நீதிபதி மகராஜனின் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்திய ஆற்றுகைப் பிரதியில் சூனியக்காரிகளின் இருப்பும் அவர்களின் ஏவுதல் வழியாக மேக்பெத்தை இருட்டின் பக்கம் நகர்த்தும் காட்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இருள் - ஒளி என்ற இருண்மையும் ஆசையின் ஆதிக்கமும் அச்சமும் வெளிப்படும் பாவனைகளை நடிகர்கள் செம்மையாகவே வெளிப்படுத்தினார்கள். ஆனால் வசனங்களைப் பேசும்போது போதிய உச்சரிப்புப் பயிற்சியும் குரல் பயிற்சியும் இல்லை என்பதால் தொய்வாக இருந்தன. சேக்ஸ்பியர் நாடகங்களில் முதன்மையாக இருக்கும் தனியுரைகள் நடிகர்களின் நடிப்புக்கும் குரல் வெளிப்பாட்டுக்கும் சவால் விடுபவை. அதனைக் கொண்டுவருவதில் நடிகர்களுக்குப் பயிற்சி போதவில்லை. இயக்குநரும் பெரிதாக அக்கறைப்பட்டதாக இல்லை. அதே நேரம் குழ்வுக்களாகவும் இசைக்கேற்ப அசையும் உடல்களாகவும் தோன்றும் காட்சிகள் பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளிக்கொண்டன.

நிகழ்கலைப் பள்ளியில் நாடகம் பயின்று வருபவர்கள் தங்கள் படிப்புக் காலத்தில் நிகழ்த்தப்பெற்ற நாடகங்களின் காட்சிக்கோர்வை, சமநிலையாக்கம், ஒளிக்கலவை என்பதைப் பிரதியெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறார்கள். அதனைச் சுட்டிக்காட்டி விமரிசிக்காத நிலையில் அதனையே தொடர்வார்கள். ஆனால் விமரினங்களுக்குச் செவிசாய்க்கும் மாணவர்கள் நான்கைந்து நாடகங்களுக்குப் பிறகு தங்களின் தனித்தன்மையை நோக்கி நகர்வார்கள். இந்த மேடையேற்றத்தில் தனித்தன்மையான காட்சிகளும் ஆற்றுகையும் குறைவாக இருந்தன.
செவ்வியல் கலைகளின் பார்வையாளர்களாக எப்போதும் தங்களை மாற்றிக்கொள்ளும் குமரகுரு வளாக மாணவர்கள் மாக்பெத்தையும் ரசித்துக் கொண்டாடினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்

இக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்