எழுதத்தூண்டும் கதைகள் –1


வாசித்து முடித்தவுடன், இதுபோன்றதொரு பனுவலை இதே வகைப்பாட்டில் வாசித்திருக்கிறோம் என்று தோன்றினால் அதைக் குறித்துக்கூட வைத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பனுவலின் ஏதோவொரு புனைவாக்கக் கூறு புதியதாகத் தோன்றும்போது, அது என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித் திரும்பவும் பனுவலுக்குள் பயணம் செய்யும்போது, பனுவலுக்குள்ளிருக்கும் அந்தப் புத்தாக்கக் கூறும், அதன் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பனுவலை விவாதிக்க வேண்டிய பனுவலாக மாற்றிவிடுகின்றன. அனுபவங்கள் என்பன விவரிக்கப்பட்ட நிகழ்வுகளோடு, புற வாழ்க்கையின் காட்சிகளும், தொடர்புகளும் ஒத்துப்போகும் தன்மையாக இருக்கலாம். முரண்படும் நிலைகளாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் அப்பால், பனுவலில் பயன்படுத்தும் மொழியும், மொழியைக்கொண்டு உருவாக்கப்படும் சொல்முறைகளாகக்கூட இருக்கலாம். இந்த மூன்று கதைகளில் வாசித்தவுடன் எழுதத்தூண்டிய கதை இளங்கோவன் முத்தையாவின்  முன்னை இட்ட தீ. ஹேமாவின் இறுதியாத்திரையும் தீபுஹரியின் தேன்கூடும் உடனடியாக எழுதத் தூண்டியன அல்ல.

ஹேமா: இறுதியாத்திரை

இதுபோன்றதொரு கதையை வாசித்ததில்லை என்று தோன்றிவிட்டால் கதையின் வெளி, காலம், பாத்திரங்கள் என்ற மூன்று அடிப்படைக் கூறுகளையும், சொல்லப்பட்ட முறையைக் குறித்து வைத்துக்கொள்வது நீண்ட வழக்கமாகிவிட்டது. இந்தப் பழக்கம் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவையான பழக்கம் என்பதில் தொடங்கி, இலக்கியத்திறனாய்வு செய்யும் நோக்கமிருந்ததால் அதற்கும் தேவைப்படும் என்ற நினைப்பும் சேர்ந்து பனுவல்கள் குறித்த குறிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. கதை என்றில்லை, நாடகம், கவிதை, சினிமா என நான் இயங்கும் கலைத் தளங்கள் ஒவ்வொன்றையும் பல நேரங்களில் மனப்பதிவிலும் , புறச்சூழலில் தவறிவிடும் வாய்ப்பிருக்கிறது என்று தோன்றினால் எழுத்துப்பதிவிலும் குறித்து வைத்துக் கொள்கிறேன்.

ஹேமாவின் ‘இறுதியாத்திரை’ கதையை வாசித்தவுடன் அதில் குறித்து வைத்துக்கொள்ள எதுவுமில்லை என்று தோன்றியது. அந்தக் கதையில் வரும் ருக்குமணி, எத்திராஜ் என்ற பாத்திரங்களை மட்டுமே குறித்து வைக்கலாம். ஆனால் அந்தப்பெயர்கள் அவ்வளவு முக்கியமில்லை. முதிய வயதில், வாழ்வின் அந்திமக்காலத்தை நினைத்துப்பார்க்கும் ஏராளமான முதியவர்களில் பல எத்திராஜ்களும் ருக்குமணிகளும் இருக்கவே செய்வர். இந்தப் பெயரில் இல்லாமல் அவரவர் பெயரில் அவரவர் முதுமையைக் கடத்துவது குறித்தும் வரப்போகும் மரணத்திற்காகக் காத்திருப்பது குறித்தும் நினைத்துக்கொள்ளும் மனிதர்கள் உலகம் முழுவதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். “நாம் இல்லாமல் போவது எப்படியும் நடக்கத்தான் போகிறது; அதைப்பற்றி எதற்கு இப்போது நினைத்துக் கொண்டிருக்கவேண்டும்; சாவு வரத்தான் போகிறது; வரும்போது வரட்டும் ” என வாழுங்காலத்தைக் கொண்டாடிக்கொண்டும் வாழ்ந்துகொண்டும் கடந்து போகின்றவர்களே அதிகம். ஆனால் சமய நம்பிக்கைகளும், நடைமுறை வாழ்க்கையும் சூழலும் மரணத்தை நினைக்கசொல்லி வலியுறுத்தவும் செய்கின்றன. ஹேமாவின் இறுதியாத்திரை கதையில் வரும் எத்திராஜும் ருக்குமணியும் அப்படிக் கடந்து போகும் மனநிலையில் இருப்பவர்கள் அல்ல. தங்கள் மரணத்தை -இறுதியைத் திட்டமிட நினைத்தவர்கள்.

அவர்களின் திட்டமிடலில் சமய நம்பிக்கை சார்ந்த முடிவுகள் இருந்தன எனச் சொல்லமுடியாது. அப்படியிருந்தால், ‘இந்தப் பிறவியில் இப்படி இருப்பதும், இப்படி வாழ்வதும் போன பிறவியின் பலன் அல்லது நீட்சி என்ற நினைப்பும், அடுத்த பிறவி இல்லாத நிலையைப் பற்றியும் நினைத்திருக்கக்கூடும். அந்த நினைப்பு ஆறுதலின் மொழியாகவோ, அச்சத்தின் நடுக்கமாகவோ வெளிப்பட்டிருக்கும். இதற்கு மாறாக அவர்கள் மரணத்தை எதிர்கொள்ள நினைத்ததும், திட்டமிட்டதும், நடைமுறை சார்ந்த திட்டமிடலும் மரணத்தை எதிர்கொள்ளலும் எனச் சொல்லலாம்.

கீழ்த்திசை நாடுகளின் வாழ்வியல் குடும்ப உறவுகளால் - கணவன், மனைவி, குழந்தைகள் என்ற உறவுகளால் அர்த்தம் பெறுவதாக- முழுமையடைவதாக நம்பப்படுகிறது. ஒருவரால் குடும்ப அமைப்பை உருவாக்க முடியாமல் போவது ஒரு குறை. அதனை கடைசிக்காலம் வரை சிதையாமல் கட்டிக்காக்கத் தவறுவது இன்னொரு குறை. கட்டிக்காப்பதின் மூலம் அடுத்த தலைமுறையை உருவாக்கமுடியாமல் போவது அவர்களின் கையை மீறிய பெருங்குறை. பெற்றோரின் விருப்பத்தை ஏற்றோ, தன் விருப்பமாக உருவாகும் கணவன் -மனைவி உறவின் முழுமை என்பது மக்கட்பேற்றின் வழியாகவே ஏற்படுவதாக நம்பப்படுகிறது. நிலைத்த வருமானம், நல்ல உணவு, இருக்க இடம், வசதியான வாழ்க்கை என வாழ்ந்தபோதும் மக்கட்செல்வத்தை – குழந்தைகளைப் பெற முடியாமல் போகும்போது தங்களின் வாழ்க்கை முழுமையடையவில்லை எனக் கலங்கிப்போகின்றனர்.முதிய வயதில் தங்களைக் கவனித்துக் கொள்ளவும் இறுதியாத்திரையை முடித்துவைத்துக் கடனாற்றவும் ஒரு பிள்ளையில்லை என்பதை அர்த்தமற்ற வாழ்வாக நினைக்கின்றனர்.

அர்த்தமற்ற வாழ்க்கையை இனியும் தொடரவேண்டியதில்லை என நினைக்கும் மனக்குரல் ஒரு கட்ட த்தில் மரணத்தைத் திட்டமிட த்தூண்டுகிறது. அதன் வெளிப்பாடே முதுமைத் தற்கொலைகள். இந்தக் கதையில் வரும் எத்திராஜின் நிதானமான முடிவுகளும் திட்டமிடல்களும் அப்படியொரு மனவோட்டத்தின் வெளிப்பாடுகளே. விரக்தியும் எரிச்சலும் கூடிய மனநிலையில் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியன; ஆனால் எதிர்மனநிலையை உண்டாக்கக்கூடியன. அதனை உணர்ந்து மாடியிலிருந்து குதித்துச் சிதறிய உடலாக இறுதியாத்திரையை அமைத்துக்கொள்ளாமல், ஆரவாரமற்ற – அமைதியானவொரு இறுதியாத்திரையைத் திட்டமிடும் தம்பதியினராக எழுதப்பட்டுள்ளனர். இந்த முடிவால் அவர்களின் குற்றவுணர்வும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் மீதொரு கழிவிரக்கமும் தோன்றும் என்றாலும் இந்த வாழ்க்கையைத் தொடர்வதில் அர்த்தங்கள் எதுவுமில்லை என்ற நிலையில் கதையில் அவர்கள் தெரிவுசெய்யும் முடிவு ஏற்கத்தக்க ஒன்றே.

குழந்தை இன்மை, நோயின் தாக்கம், தொடரமுடியாத முதுமை வாழ்க்கை என்பதைக் காரணங்களாக்கித் தற்கொலையைத் திட்டமிடும் தம்பதியின் கதையைச் சொல்ல நினைத்த ஹேமாவின் சொல்முறையும் கதையின் கட்டமைப்பும் கச்சிதமாக இருக்கிறது. வாசித்து முடித்துப் பல நாட்கள் ஆனாலும் அதனைக் குறித்து எழுதித்தான் கடக்கமுடியும் என்று தூண்டிக்கொண்டே இருந்தது. வாசித்த கதை உருவாக்கிய துயரத்தின் பாரத்தை யாரிடமாவது சொல்லித்தீர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தூண்டும் ஒரு கதை, ஆழமாகத் தங்கிவிடும். வல்லினம் இணைய இதழில் ஹேமா எழுதியுள்ள ‘இறுதியாத்திரை’ கதை அப்படித்தங்கியிருக்கப் போகின்ற கதை.


2] தீபுஹரி: தேன்கூடு


இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது வாசிப்பவர்களின் அனுபவங்களில் ஏதாவதொன்று நினைவுக்கு வந்துவிடும். அப்போது அந்தக் கதை வாசிப்பவர்களின் கதையாக ஆகிவிடும். கதைசொல்லியோடு சேர்ந்து, அவரின் நியாயங்கள் எல்லாவற்றையும் வாசிப்பவர்களின் நியாயங்களாக ஆக்கி, இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் நமக்கு மட்டும் எதிராக இருக்கின்றன என்று நினைக்கத் தோன்றிவிடும். நான், எனது, எனது மனநிலை, எனது இருப்பு என்ற எல்லைக்குள் யாரும், எதுவும் நுழைந்துவிடக் கூடாது; அனுமதிக்க முடியாது என்று பிடிவாதமான மனிதர்களின் பாடுகளாக விரிந்துவிடும். பூச்சிகள், விலங்குகள், தூசிகள் போன்றவற்றின் மீது உண்டாகும் அசூயையும் வெறுப்பும், அந்நியர்கள் மீதும் திரும்பிவிடக்கூடும். அப்படித் திரும்பும்போது கதை, தனிமனித வாதத்தின் உச்சமான வெளிப்பாட்டுக் கதையாக முடிந்துவிடும்.

“என்ன ரஞ்சனி இது அபசகுணம், சுபசகுணம்னு பேசிகிட்டு. எங்க வீடு கட்டினாலும் ஏதோ ஒரு பிரச்சினை வந்துட்டுத்தான் இருக்கும். நீ எல்லாத்தையும் அதிகமா யோசிச்சு, யோசிச்சு சிக்கலாக்கிக்கறே. நான், பாப்பா எல்லோரும் இதே வீட்ல உன் கூடவேதான் இருக்கோம். நாங்க இப்பவும் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்க்கலையா? எங்களுக்கு மட்டும் பயமோ, கவலையோ இல்லையா? அதுங்க எந்த வழிலேயும் வீட்டுக்குள்ள வராதபடி நல்லா அடைச்சாச்சு. ”

என ஆறுதல் சொல்ல ஆட்கள் இருந்தபோதும், வீட்டுப் பால்கனியில் தேனீக்கள் கட்டிய தேன்கூட்டைப் பார்த்து அச்சமும் பதற்றமும் அடைந்த ரஞ்சனியைக் கதைசொல்லியாக்கி, தேன்கூடு கதையை எழுதியுள்ள தீபுஹரி, மனித மையவாதத்தை முன்வைக்கும் கதையை எழுதுபவர் என்ற விமரிசனம் வரும் என்ற ஆபத்தை உணர்ந்து, அதனை விவாதப்பொருளாக்கவும் செய்கிறார். இந்த இயற்கையும் அதன் உருவாக்கங்களும் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மற்ற உயிரினங்களுக்கும் - விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்துக்கும் உரியன என்ற பார்வையும் வாதங்களும் இருக்கின்றன என்பதை அறிந்த/உணர்ந்து, கதை சொல்லியின் நிலைபாடு இது என்பதாகக் கதைக்குள்ளேயே விவாதிக்கிறார். கதைக்குள் இடம்பெற்றுள்ள பின்வரும் உரையாடல் அதனை முன்வைக்கிறது.

”அன்னிக்கு கேரளாவில ஒரு ஆள் வயத்தில குட்டியோட இருந்த யானையை சுட்டுக் கொன்னப்போ நான் இதைத்தான சொன்னேன். ஒருவேளை சுட்டவனுக்கு அதோட வயித்தில் குட்டி இருந்தது தெரியாம இருந்திருக்கலாம். இல்லேன்னா அவன் வாழ்வாதரமான பயிர்களை அழிச்சிடுச்சேன்னு ஒரு ஆவேசத்துல யோசிக்காம சுட்டு இருக்கலாம். அப்போ எப்படி என்கிட்ட சண்டை போட்ட நீ!”

“டேய் அதுவும் இதுவும் ஒன்னா? இப்போ எதுக்குடா நீ எனக்கு கால் பண்ணினே? நான் என்னென்ன தப்பு எப்பெப்போ செஞ்சேன்னு சொல்லிக்காட்டவா? நா கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன் விடு. என் நிம்மதி எனக்கு முக்கியம். போயும் போயும் உன்கிட்டே சொன்னேன் பாரு. I’m tired both mentally and physically. நா இன்னொரு சமயம் பேசறேன். பை”

தேன்கூட்டை அப்புறப்படுத்தாமல் வீட்டில் தங்கமுடியாது என்று பிடிவாதம் பிடிக்கும் ரஞ்சனியின் நியாயங்களை முன்வைக்கு கட்டுக்கோப்பான கதையை வாசித்துப் பாருங்கள். இணைப்பு முதல் பின்னூட்டத்தில்.

இந்தக் கதையை வாசித்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி காலச்சுவடு இதழில் எழுதிய ‘ குளவி’ கதை நினைவுக்கு வந்தது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இளங்கோவன் முத்தையா: முன்னை இட்ட தீ

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கனவுகள் துண்டுதுண்டாக வந்துபோய்விடும்போது சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றுவதில்லை. ஆனால் ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் போலக் கனவுகள் நீள்கின்ற நிலையில் அவற்றை ஒதுக்கிவிட முடியாது. அப்படியான கனவுகளின் அசைவை -அவற்றின் பின்னணியை - நடப்பு வாழ்க்கையின் நீட்சியாக நினைக்கத்தோன்றிவிடும்.

ஆண் - பெண் உறவு சார்ந்த பின் வாங்கல்கள் அல்லது மறைக்கப்பட்ட ரகசியங்கள் தொடர்ச்சியான கனவுகளை உருவாக்கித் துயரத்தின் அடுக்குகளாக மாறுவதுண்டு எனக் கனவுகளைப் பற்றிய விளக்கவுரைகள் சொல்கின்றன. அவற்றைப் புனைவு எழுத்துகளாக மாற்றுவது சிக்கலான வெளிப்பாடு. ஒருவிதத்தில் பைத்திய மனநிலையை எழுதுவது போன்றது அது. ஒரு பைத்திய மனநிலையை உடனிருப்பவர்கள் முன்னிலையாகப் பதிவுசெய்வது எளிமையான சொல்முறை. அதற்கு மாறாகப் பைத்திய மனநிலையைத் தன்னிலையாக முன்வைக்கும் கதையின் முடிவுத் தீர்த்துக்கொள்ள முடியாத குற்றவுணர்வின் அடுக்குகளாக விரியும். அப்படி விரியும் ஒருகதையை இளங்கோவன் முத்தையா எழுதிக்காட்டியுள்ளார். முன்னை இட்ட தீ எனத் தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள அக்கதை யாவரும் இணைய இதழில் வந்துள்ளது.

நடப்பில் மனிதர்களின் நினைவுகள் கனவுகளாக மாறுகின்றன. இந்தக் கதையில் கனவுகளின் அடுக்குகள் நடப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. இவ்வகை எழுத்துகளை வாசிக்கும்போது அதீதப் புனைவொன்றை வாசிக்கும் மனநிலை உருவாவதைத் தடுக்க முடியாது. ஒரு பயணத்தின் போக்கை இடமாற்றங்களின் வழியாக விவரிக்கத் தொடங்கும் கதை ஆள்மாற்றம், ஆடைமாற்றம் என நகர்ந்து தோன்றுவதையும் தோன்றாமையையும் கனவாகவும் நடப்பாகவும் ஆக்கித் தருகிறது. கரிந்த மரப்பின்னணியில் கசப்பை உருட்டும் நாவின் ருசியைத் திகட்டும்விதமாகத் திணிக்கிறது.வாசித்து ருசிக்க வேண்டிய கதை.

கதைகளை வாசிக்க
---------------------------------
https://vallinam.com.my/version2/?p=7743

https://akazhonline.com/?p=3427


http://www.yaavarum.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%80/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்