விலக்கப்படும் நந்திகள்


தேர்தல் வழியாகத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் குறுகிய காலத்தில் அதன் செயல்பாடுகள் சில, தமிழகத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்புடையனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்த இலவசங்கள், கரோனாப் பெருந்தொற்றைச் சமாளித்தல் போன்றனவற்றிற்காகக் கிடைக்கும் பாராட்டுகளும் ஏற்புகளும் பொதுப்புத்தி சார்ந்தவை. அவற்றைத் தாண்டித் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த முன்னெடுப்புகளும் கவனிக்கப்படுகின்றன; பாராட்டப்படுகின்றன என்பதே இப்போதைய விவாத மையம்.

திராவிட முன்னேற்றக்கழகம் கடவுள் மறுப்பைப் பேசும் நாத்திகக் கட்சி என்ற கருத்துருவாக்கத்தை மாற்ற நினைத்துப் பண்பாட்டு நடவடிக்கைகளில் சீர்திருத்தங்களை முன்னெடுக்கிறது. அச்சீர்திருத்தங்களைக் காலத்திற்கேற்ற மாற்றங்கள் கொண்டதாகவும் நடைமுறையில் இருக்கும் மக்களாட்சியின் பொதுப்போக்கோடு இயைபுகொண்டதாகவும் மாற்ற நினைக்கிறது. இதன் வெளிப்பாடுகளாக இரண்டு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளது. இதுவரை கோயில்களின் வழிபாட்டு மொழியாக இருக்கும் சம்ஸ்க்ருதத்தின் இடத்தில் தமிழ் இருக்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்துள்ளது. இரண்டும் வேறுவேறானதாகத் தோன்றினாலும், ஒன்றோடொன்று தொடர்புடையன. இதனை நடைமுறைப் படுத்துவதற்கு அவசரப்படாமல், நிதானமான ஏற்பாடுகளுடன் அரசு செயல்பட்டது. இதனை எதிர்ப்பவர்கள் எவ்வகையான சட்டப் போராட்டங்களை மேற்கொள்வார்கள்; எப்படி அதனை எதிர்கொள்ளலாம் எனத் திட்டமிட்டுக்கொண்டு முன்னெடுத்தது. எதிர்ப்பவர்களைக் கருத்தில் கொண்டதைப்போலவே அதனை ஏற்புடையதாகக் கருதும் சமயத் தலைவர்களை உள்வாங்கிக் கொண்டது என்பதுவே கவனிக்கத்தக்க ஒன்றாகியுள்ளது. அதன் மூலம் இந்தக் கட்சி, நாத்திக இயக்கமல்ல; சமயப் பண்பாட்டுச் சீர்திருத்த இயக்கம் என்பதை நிலைநாட்ட நினைத்து, மேடை அமைப்பு தொடங்கி, அனைவரையும் மேடையில் அமர்த்தியதுவரை கவனமாக மேற்கொள்ளப்பட்டன. அந்தப்புரிதலோடு பயிற்சி பெற்ற ஓதுவார்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் அரசின் பணி ஆனையைக் கையளித்தார் தமிழ்நாட்டரசின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்தச் செயல்பாடும் நடைமுறைகளும் பொதுக்கருத்தை உள்வாங்கிச் செயல்படும் அரசு என்ற கருத்தாக்கத்தை இயல்பாகவே ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

******
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் லட்சியங்களை நினைத்துப் பார்த்து சில முன்மொழிதல்களைச் செய்வதுண்டு. 2011 இல் செம்மொழியாகத் தமிழ்மொழியை அறிவிக்கச் செய்தது அப்படிப்பட்ட ஒன்று. இன்னொன்று 2008 இல் சென்னை சங்கமம் என்னும் பெருந்திருவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபோது செய்த அறிவிப்பு இன்னொன்று. மனிதர்கள் கூட்டமாகப் புத்தாண்டின் பிறப்பை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வுகள் உலகெங்கும் உள்ள பல்வேறு சமூகங்களில் பல்வேறு விதமாக நிகழ்கின்றன. அந்நிகழ்வுகளில் எல்லாம் ஒருவித ஒற்றுமை காணப்படுவதாக சமூக மானிடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வாழிடம் உருவாக்கும் வாழ்க்கை முறையின் மகிழ்ச்சியான கால கட்டத்தைக் கொண்டாட்ட காலமாகக் கொள்வது பழஞ்சமூகங்களின் பொது இயல்பு. கொண்டாட்டக் காலத்தின் தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வதும் அப்பொது இயல்பினுள் அடங்கும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனர் தமிழர்களின் வாழிட எல்லைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். வாழிட எல்லையான தமிழ் நிலப்பரப்பிற்குள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலப்பகுதிகள் இருந்தன எனச் சொல்லும் தொல்காப்பியம் ,அப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலையை முன்பனி, பின்பனி, கார், கூதிர், இளவேனில், முதுவேனில் எனப்பிரித்தும் காட்டியுள்ளது. இந்நிலப் பகுதிகளில் நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப முக்கிய பயிர்களாக இருந்தவை நெல்லும் திணையும். குறிஞ்சியிலும் முல்லையிலும் திணை பயிரிட, மருதநில வேளாண் மக்கள் நெல்லைப் பயிரிட்டு வளமாக வாழ்ந்த காட்சிகளைச் செவ்வியல் இலக்கியங்களான அகப்பாடல்களிலும், புறப்பாடல்களிலும் காண்கிறோம். மருதநில அரிசிக்காக நெய்தல் நில உமணர்கள் உப்பையும் மீனையும் பண்ட மாற்றுச் செய்த காட்சிகளை அவ்விலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

திணை அரிசியையும் வரகரிசியையும் நெல்லரிசியையும் அடிப்படை உணவாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் அதனை உற்பத்தி செய்ய உதவிய வான்மழையை வணங்கிப்போற்றிய சமூகம். நீரின்றி அமையாது உலகு என உணர்ந்த தமிழர்களின் குரல் மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!! எனக் கொண்டாட்ட காலத்தில் வெளிப்பட்டதைச் சிலப்பதிகார வரிகளால் உணர்கிறோம். மழைநீரின் உதவியால் உற்பத்தி செய்த அரிசி வகைகளை உற்பத்தி செய்த தமிழர்கள் அதற்குக் காரணமான நிலத்தையும் நீரையும், ஆட்டையும் மாட்டையும், கன்றுகாலிகளையும் வணங்குவதற்கான கொண்டாட்ட நாளாகக் கொண்டிருப்பது பொங்கல் பண்டிகை. ஒட்டு மொத்தத் தமிழ் பரப்பிலும் கொண்டாட்டப்படும் பொங்கலில் படைக்கப்படும் படையல் பொருட்கள் அவர்களின் வேளாண்மை உற்பத்திப் பொருட்களே.

தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமான சித்திரை மாதம் தமிழ் வாழ்வோடு இத்தகைய நெருக்கம் கொண்டதல்ல என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி சார்ந்து வாழும் தமிழர்கள், அந்த மாதத்தில் மணவிழாக்களை நடத்துவதை அதிகம் விரும்புகிறார்கள். அதிக பட்ச வெப்பத்தை உமிழும் கோடை காலமான சித்திரை மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளைத் தமிழர்கள் நடத்துவதில்லை. இந்தப்புரிதலோடுதான் தை முதல் தேதியைப் புத்தாண்டுத் தொடக்கமாக அறிவித்தார் கலைஞர் மு.கருணாநிதி.

அரசு ஆணை என்ற போதிலும், கலைஞர் அரசு பிறப்பித்த ஆணையைத் தமிழ்த்திரள் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. ஏறத்தாழ 500 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்த 60 ஆண்டுச் சுழற்சி என்னும் காலக்கணக்கைக் கைவிடும் மனம் தமிழர்களுக்கு வரவில்லை. அப்படி வராமல் இருந்ததின் பின்னணியில் தமிழர்கள் மொழிசார்ந்த இனமாக அடையாளப்படுவதைவிட, ‘இந்துசமயம்’ என்ற சமய அடையாளத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தார்கள் என்பதே கவனிக்கவேண்டியது. இந்துசமயம், தனக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறைத்துக்கொண்டு, திருவிழாக்களோடு கூடிய நாட்காட்டிகளையும் காலக்கணக்கையும் முன்வைத்திருப்பதை மாற்றும் தேவைக்கான பருண்மையான காரணங்களை அரசால் முன்வைக்க முடியவில்லை.

கலைஞர் மு.கருணாநிதியால் முன்வைக்கப்பட்ட கருத்தியல் செயல்பாடுகள் தோல்வியைத் தழுவியதைப்போல இப்போதைய முன்னெடுப்புகள் தோல்வியைச் சந்திக்கப்போவதில்லை. ஏனென்றால் இச்செயல்பாடுகள் அரசியலை ஆணையில் வைத்து எடுக்கப்படும் முடிவுகளாக உள்ளன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் அரசியலை ஆணையில் வைத்தல்; அதிகாரத்தை ஆணையில் வைத்தல் என்ற இரண்டு நிலைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் மையம்; அதிகாரமையம் என்ற சொல்லாடல்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்பன போர்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளோடு தொடர்புடையன. போர்களுக்குப் பாதி வெற்றி; பாதித்தோல்வி என்பதில்லை. அடைந்தால் வெற்றி. இல்லையென்றால் அழிவு. இதற்கு மாறானவை போராட்டங்கள். அதிலும் மக்கள் திரளின் ஆதரவோடு முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் வெற்றியும் உண்டு; தோல்வியுமுண்டு. இரண்டின் கலவையும் உண்டு.

மக்களாட்சியில் நம்பிக்கைகொண்டு அரசியலை ஆணையில் வைத்துச் செயல்படும் கட்சிகள் தேர்தல் அரசியலில் வெற்றியில்லை என்பதற்காகத் துவண்டு விடுவதில்லை. தோல்வியிலிருந்து பாடங்கற்றுக்கொண்டு எழுந்து நிற்கும். அடுத்ததொரு போராட்டக்களத்தை உருவாக்கிக் கொண்டு வரப் போகும் தேர்தலில் வெற்றிக்காகக் காத்திருக்கும். தேர்தல் வெற்றி என்பது மக்கள் திரளின் நம்பிக்கையால் கிடைப்பது.

போர்களை வழிமுறையாகக் கொள்ளும் இயக்கங்களுக்கும் போராட்டங்களை நடைமுறைத் தந்திரங்களாக முன்னெடுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்குப் பிந்திய வெற்றியிலும் விடுதலையிலும் ஆணையிடும் இடத்தில் எதனை வைப்பது என்பதிலும் அவை வேறுபடுகின்றன. போரை நம்பும் இயக்கங்கள் ‘அதிகாரத்தை’ ஆணையில் வைக்கநினைக்கின்றன. போராட்ட வழிமுறைக் கட்சிகளோ’ அரசியலை’ ஆணையில் வைக்கின்றன. தேர்தல் அரசியலில் இருந்தாலும் தனிநபர் தலைமை, ஒற்றையாட்சி போன்றவற்றை நம்பும் இயக்கங்களும் கூடப் போர்களை நம்பும் இயக்கங்களைப் போன்றவைகளே. ஏனென்றால் அவையும் வெற்றிக்குப் பின் அரசியலை ஆணையில் வைப்பதில்லை. அதிகாரத்தை மட்டுமே ஆணையில் வைக்கின்றன.

வாக்களிப்பின் வழியாக ஆட்சி மாற்றங்களை உருவாக்கிப் பொதுத்தள விவாதங்கள் வழியாக நீண்ட கால இலக்குகளை அடைய நினைக்கும் ஒரு அரசியல் கட்சி, அதிகாரத்தை ஆணையில் வைக்காமல், அரசியலை ஆணையில் வைக்கிறது. அதற்குத் தமிழ்நாட்டுக் கட்சிகளில் எடுத்துக்காட்டாக இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம். வாக்கரசியலின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் வழியாகவே லட்சியங்களை -நீண்ட காலக் கருத்தியல்களை மக்களிடம் கொண்டுசெல்வதைத் திராவிட முன்னேற்றக்கழகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னெடுக்கிறது. அம்முன்னெடுப்பில் அக்கட்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது; தோல்வியையும் சந்தித்திருக்கிறது.

பொங்கலை ஒட்டிய தமிழ்ப்புத்தாண்டு என்ற ஆணையைப் போலல்லாமல், கோயிலின் கருவறைக்குள் தமிழ் என்பதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் என்பதும் புதிய திறப்புகளாகத் தோன்றுகின்றன. மக்களின் நம்பிக்கையைப்பெற்ற அரசின் முன்னால் தடையை ஏற்படுத்த முடியாமல் மறைத்து நிற்கும் எதிர்க்கருத்தியல் என்னும் நந்திகள் விலகத் தொடங்கியுள்ளன. இந்தச் சீர்திருத்தம் தமிழ்ச் சமயவாழ்வியலில் எடுக்கப்பட்டுள்ள புதிய வெளிச்சமாக இருக்கப்போகிறது. இந்தியத் தமிழ்ப்பரப்பில் தெரியும் இந்த வெளிச்சம், இலங்கையிலும் பரவும். தமிழர்கள் வாழும் எல்லாப்புலங்களுக்கும் விரியும்.விரியவேண்டும் என்பது காலத்தின் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்