பின்காலனிய மனநிலையும் பெரியாரின் பெண்கள் குறித்த சிந்தனைகளும்

 


இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருககிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஐரோப்பிய மனநிலையை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ தனக்குள் உள்வாங்கியதாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி இருக்கிறது. இது நிகழ்கால இருப்பு

பிரிட்டானியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் , அதன் ஆளுகைப்பரப்பாக இருந்த பிரதேசங்களிலும் கூட பிரிட்டானிய இந்தியர்கள் என்ற தன்னிலை முழுமையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த கால கட்டத்திலேயே கூட அதன் ஈர்ப்பு எல்லைக்குள் வராதவர்களாகப் பல கோடிப் பேர் இருக்கத்தான் செய்திருப்பார்கள். அவர்களின்  உருவாக்கம்  காலனி ஆட்சியாளர்களின் திட்டமான பிடிமானத்தால் உருவாகாமல், அதன் நேர்மறைத் தன்மையிலிருந்தும் எதிர்மறைத் தன்மையிலிருந்தும் உருவாகியிருக்கக் கூடும். அப்படியான உருவாக்கம் ஒருவிதத்தில் விலகிய நிலையின் வெளிப்பாடு.இது கடந்த கால வரலாறு.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டானியர்கள் வெளியேறியிருக்கலாம்; ஆட்சியதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தியாவில் இருந்தபோது  இந்திய சமூகத்தை என்னவாக மாற்ற நினைத்தார்களோ அதன் சாயல் எல்லா தளங்களிலும் படிந்து கிடக்கிறது. காரணம் ஐரோப்பியர்களின் மொழி இங்கு கல்விப்புல மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியர்களின் பண்பாடு விரும்பத் தக்க பண்பாடு என்று கருதப் படுகிறது. ஐரோப்பியர்கள் வெளியேறிய பின்னும் ஐரோப்பிய அறிவு இங்கு தங்கியிருந்தது; தங்கியிருக்கிறது. அதனை முற்றிலும் விலக்கி அனுப்பி விட வேண்டும் என்ற வேட்கை பலரால் முன் வைக்கப்பட்டதும் உண்டு. அதற்கான இயக்கங்களை இன்றளவும்  நடத்திக் கொண்டிருப்பவர்களும் உண்டு. என்றாலும் இந்திய வெகுமக்களிடம் அவை முழுமையான செல்வாக்கைப் பெற்றுவிட வில்லை என்பதும் உண்மை. அதற்கு மாறாக ஐரோப்பிய அறிவு முற்றிலும்  புறமொதுக்கி அனுப்பப் பட வேண்டிய ஒன்றுதானா..? என்ற கேள்விகள் இருக்கின்றன, ஐரோப்பிய மனநிலை நீங்கி விட்டால் உண்டாக்கப்படும் இந்திய மனநிலையில் இருக்கும் ஆபத்துக்கள் தான் அந்தக் கேள்விகளைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

1900-க்குப் பிந்திய இந்திய/ தமிழ் அறிவு என்பதற்கும் 2000- க்குப் பிந்திய இந்திய/தமிழ் அறிவு என்பதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. அதிலும் கல்வி அறிவு பெற்ற  தமிழ் உயிரி ஒன்றின் அறிவுப் பரப்பு என்பது இந்த மாற்றத்தை நிச்சயம் உணர்த்திருக்கும். பின் காலனிய மனோபாவம் என்ற சொல்லால் சுட்டப்படும் அந்த மனநிலையைக் கட்டமைத்த போது ஐரோப்பிய X இந்திய அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டிய தேவைகளை வலியுறுத்திய சிந்தனையாளர்கள் பலருண்டு. அரசியல் தளத்தில் குறிப்பிடப் படவேண்டிய பெயர்கள் மூன்று.  டாக்டர் அம்பேத்கர், ஈ.வெ.ராமசாமி, பண்டித ஜவஹர்லால் நேரு , என்ற மூன்று பெயர்கள் தான் அவை.

பொதுப்புத்தி சார்ந்த சொல்லாடல்களின் போது ஒரு நாத்திகவாதியாகவும், மூர்க்கத் தனமான பார்ப்பண எதிர்ப்பாளராகவும் அறியப்படும் ஈ.வெ.ராமசாமியை ஒரு தத்துவத்தை வடிவமைத்தவர் என்று வரையறை செய்வதில் சிக்கல்கள் பல உண்டு. ஆனால் பின் காலனியத் தமிழர்களின் அறிவுப் பரப்பை விசாலமாக்கி , சிந்தனை வேறுபாட்டைத் தந்தவர்களின் பெயர்கள்  பட்டியலிடப்படும் போது அதில் முதல் இடத்தில் இருப்பவர் ஈ.வெ.ராமசாமி. என்று சொல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. அந்தக் காரணத்தால் தான் அவரது பெயருக்கு முன்னால் ‘ தந்தை’ என்ற அடைமொழியும், சொந்தப் பெயருக்குப் பதிலாகப் ‘பெரியார்’ என்ற தனிமொழியும்  சொல்லப்படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

பெரியாரின் சிந்தனைகளா..? தத்துவமா.?

தத்துவவியலாளர்களாக அறியப்படும் பலரின் சிந்தனைப் பரப்பும் இயங்குவெளியும் சிறிய பரப்பிலிருந்து தொடங்கி, தேச எல்லைகளைக் கடப்பதும், பின்னர் எல்லா வேறுபாடுகளையும் தாண்டி, உலக மனிதனுக்காகப் பேசுவதும் என்பதாக நகர்ந்திருக்கிறது. ஆனால் ஈ.வெ.ராமசாமியின் இயக்கம் இதற்கு எதிர்நிலையில் இருந்திருக்கிறது. தேச எல்லைக்குள் இருந்த இயக்கத்தை மாநில எல்லைக்குள் சுருக்கிக் கொண்டது அவரது சிந்தனைப்பரப்பு. அதே போல் ஒட்டுமொத்த மக்கள் திரளின் விடுதலையைப் பற்றிய சிந்தனைக்கு மாறாக, ஒரு மாநில எல்லைக்குள் வாழும் மனிதக்கூட்டத்தை மேம்படுத்துவது பற்றிய பார்வைகளைக் கொண்டது.மாநில எல்லைக்குள்ளும்  சிலவகைப்பட்ட மனிதர்களின் விடுதலையை முன்னிறுத்திப் பேசியும் இயங்கியும் தனது நீண்ட வாழ்க்கையைக் கழித்தவர் ஈ.வெ.ரா.

ஈ.வெ.ராமசாமியின் சிந்தனைகள் என்ற தொகுப்பை முழுவதும் வாசிக்கிற போது அவரது கருத்துக்களின் பரப்பு விசாலமாக இருந்த அளவுக்கு அவரது இலக்கு மனிதர்கள் எண்ணிக்கைப் பரப்பு விசாலமாக இல்லை என்பது புலனாகும். தமிழகப் பரப்பில் வாழும் அனைத்து மனிதர்களின், ஒட்டுமொத்த மாற்றத்தை முன்மொழியும் சிந்தனைகள் அவரால் முன்மொழியப் படவில்லை. ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தை- பிராமணர்களை- அழித்தொழிக்க வேண்டிய கூட்டமாகச் சித்திரித்தும், தாழ்த்தப்பட்ட மனிதர்களை மாற்றத்துக்குத் தயாரில்லாத மனிதர்களாகப் பேசியும், இசுலாமிய, கிறித்தவ மதத்தவர்களை மற்றவர்களாகக் [others] கருதியும் தனது சொல்லாடல்களை முன்வைத்தவர். இந்தப் பின்னணியில் தான் ஈ.வெ.ராமசாமியின் இலக்கும் மைய நோக்கமும் பிற்பட்டோரின் நலன் மட்டுமே என்ற விமரிசனங்கள் முன் வைக்கப் படுகின்றன. அந்த விமரிசனங்கள் ஒதுக்கத் தக்க விமரிசனங்கள் என்று தள்ளக்கூடியன அல்ல.  இதன் காரணமாகவே அவரை ஒரு தத்துவ வாதியாகக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுகின்றன.

பெண்ணியம் குறித்த விவாதங்களின் போது பெண்ணியம் என்பது இந்தியச் சூழலுக்குப் பொருத்தமற்ற ஒன்று;  மேற்கத்திய மரபிலான சிந்தனை மற்றும் சமுக், அதனால் பொருட் படுத்திப் பேசப்பட வேண்டியதே இல்லை என்பதாகவும் வாதங்கள் முன் மொழியப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்; நீங்களும் கேட்டிருக்கலாம். இத்தகைய கூற்றுகள் ‘உண்மையான நிலையைக் கண்டு கொள்ளாமல்,  ஒதுக்கி விடுவதால் அந்தப் பொருளை ஒழித்து விட முடியும’ என்ற நம்பிக்கை உடையவர்களின் கூற்றுகள். காலனிய ஆட்சிக்காலத்தில் பரவி, பின்காலனிய இந்திய சமூக வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சொல்லாடல்களுள் பெண்ணியம் முதன்மையானது என்று கூடச் சொல்லலாம். சமூக விடுதலை பேச வந்த இந்தியச் சிந்தனையாளர்கள் பலரும் பெண் விடுதலையை முன்மொழிய வேண்டியவர்களாக இருப்பது கண்கூடு.தமிழின் புனைகதை இலக்கியத்தின் தொடக்கம் - நாவல் வடிவமாக இருந்தாலும் சரி, சிறுகதை வடிவமாக இருந்தாலும் சரி அவை பெண்ணியத்தின் அடிப்படைகளில் ஒன்றைப் மையப்பொருளாக்கியே தொடங்கியுள்ளன. பெரியாரும் கூடச் சமூக விடுதலையை முன்னெடுக்கும் விதமாகவே பெண்ணியத்திற்குள் நுழைந்துள்ளார் 

மகளிரியலும் பெண்ணியமும்

இன்று கல்விப்புலங்களில் பேசப்படும் பெண்ணியம் பற்றிய சொல்லாடலில் இரண்டு கட்டங்கள் உண்டு. முதல் கட்டத்தை மகளிர் இயல் [Women studies] என்ற கலைச்சொல்லால் குறிக்கலாம் .மகளிரியலைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குள் நுழைவதே பெண்ணியம். சிந்தனையைத் தீர்மானிப்பதில் வரலாற்று வாதத்திற்கு முக்கியப்பங்குண்டு என்பதை ஒத்துக் கொள்பவர்கள் பெண்ணின் இருப்பைப் பேசுவது வரையிலான சொல்லாடல்களை மகளிரியல் என வரையறை செய்கின்றனர். இப்போதுள்ள இருப்பிலிருந்து மாற்றம் வேண்டும் என்பதற்கான சொல்லாடலை முன்னெடுப்பதை பெண்ணியம் என்று வரையறுக்கின்றனர்.

ஒரு பெண் உயிரியாக இருக்கிறாள், பொறுப்போடு பணிகளைச் செய்கிறாள் ; வலியும் துயரம் கலந்ததாக இருக்கிறது அவளது வாழ்க்கை; அதற்கான அடிப்படை வசதிகளும் அங்கீகாரமும் இல்லை என்ற எல்லைக்குள் நின்று பேசுவதெல்லாம் மகளிரியல் சார்ந்த சொல்லாடல்கள். அதிலிருந்து மாறுபட்டதாக - அடுத்த கட்டத்திற்கு நகர்வதாகப் பெண்ணியம் இருக்கிறது. பெண் என்னும் உயிரியைத் தனித் தன்னிலையாக அங்கீகரிக்க மறுக்கும் போக்கு, அவளது தன்னிலையில் பெரும்பாதியைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அவளை அடக்குதல், அவளுக்கெனத் தனியான மனம், உடல் என உண்டு என்பதை ஏற்காமல், தனது உடலின் இன்பமே அவளின் உடலின்பம் , தனது விருப்ப நாட்டமே அவளின் விருப்ப நாட்டம் என்பதாகக்  கருதும் மேலாண்மை போன்றவற்றில் ஆண்களின் அதிகாரம் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில் பெண்ணியம் தனியாகப் பரிமாணம் கொள்கிறது. அதனால், ஆணின் அதிகாரத்திற்கெதிராகப் போராட வேண்டியதை அது வலியுறுத்துகிறது. ஆணின் அதிகாரத்தை உறுதி செய்த மரபுகளையும், கருத்துக்களையும், அவற்றை உருவாக்கிய சமய, சமூக நிறுவனங்களை மறு விசாரணை செய்கிறது. இலக்கியங்கள் கூட அத்தகைய புனைவுகளைச் செய்து தன்னை அடிமைப்படுத்த உதவியதாகக் கருதும் நிலையில், அதன் இயல்புகளையும், வெளிப்பாட்டு முறைகளையும் கட்டுடைத்து அவற்றின் ஆண் சார்புத் தன்மையை வெளிச்சம் போடுகிறது. அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டிய நிலையில் ஆண் துணையின்றித்  தனியாகப் பெண்ணால்  வாழ்வதும் சாத்தியம் என நிருபிக்கும் முயற்சிகளையும் மேற்கொள்கிறது பெண்ணியம். தாராளவாதப் பெண்ணியம், பொருளாதார வாதப் பெண்ணியம், சமத்துவப் பெண்ணியம், தீவிரநிலைப் பெண்ணியம்  என்பனவற்றை வகைகளாகப் பார்க்காமல், பெண் தன்னிலை உணர்தல், சமத்துவத்தைக் கோரல், உரிமைகளை வேண்டல், தனித்திருத்தலைப் பேசுதல் எனத் வளர்ச்சியின் பரிணாமங்களாகப் பார்த்தால் சுலபமாகப் புரியக் கூடிய ஒன்று தான்.

ஈ,வெ.ராமசாமியின் காலத்திற்கு முன்னும் பின்னும் இந்தியப்  பெண்களைப் பற்றிப் பேசிய ராஜாராம் மோகன் ராய்,  மோகன் தாஸ் காந்தி, விவேகானந்தர், போன்றவர்கள் மகளிரியல் என்ற வரையறைக்குள் நிற்கத் தக்க கருத்துக்களைச் சொன்னவர்கள். தமிழில் பாரதியார் கூட மகளிரியலின் கடைசி அத்தியாயமான மகளிர் மேம்பாடு என்ற சொல்லாடலை உரைநடைகளில் அதிகம் பேசியுள்ளார், ஆனால் அவரது கவிதைகளில் வெளிப்படும் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. பெண்ணின் சுதந்திர மனநிலையையும், கல்வியால் அவள் வாழ்க்கை அடையக் கூடிய மாற்றம் பற்றியும் பேசி,  ஆண்- பெண் சமத்துவத்தை நோக்கி நகரும் பெண்ணியத்தின் முதல் அத்தியாயத்தைத் தெளிவாகத் தொடங்கி வைத்தவர் கவி பாரதி.. ஆனால், ஈ.வெ.ராமசாமி அவர்களோ, பெண்ணியத்தின் கடைசி அத்தியாயம் வரை சென்று, ஆண் துணையற்ற வாழ்க்கை பற்றியும், குடும்ப அமைப்பைக் குலைப்பது பற்றியும் பேசியிருக்கிறார் என்பது  கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. அவர் பேசிய அனைத்தும் சாத்தியங்களா? என்ற விவாதங்களுக்குள் நுழைவதற்கு முன் அவர் பேசியிருக்கிறார் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பியப் பெண்ணியலாளர்கள் சொன்ன அதே கருத்தை, தமிழக மேடைகளில் பேசும் புரிதலும், அதற்கு வரும் எதிர்வினைகளுக்குப் பதில் சொல்லும் ஆற்றலும் தைரியமும் அவருக்கு அப்போதே இருந்திருக்கிறது; தான் பேசுவதற்கு மாறான வாழ்க்கையை மேற்கொள்ளாமல், எழுத்தையும், பேச்சையும் ,வாழ்க்கையையும் ஒன்றாகப் பாவிக்கும் மனோபாவமும் அவரிடம் வெளிப்பட்டிருந்தது  என்பது வியக்கத்தக்க ஒன்று.  ஆனால் அவரால் வழி நடத்தப் பட்ட திராவிட இயக்கங்களின் தலைவர்களும் தொண்டர்களும் அத்தகைய பார்வையுடையவர்களாக வளரவில்லை என்பதும் உண்மை. அவரிடமிருந்து பிரிந்து சென்றவர்களின் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்பது ஓரளவு உண்மையாக இருந்த போதிலும்,அவர்களை அப்படி வளர்த்தெடுப்பதில் பெரியாரியம்  பங்காற்றவில்லை என்பதும் ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்று தான். அவரிடமிருந்து விலகியவர்கள், எல்லாவற்றிற்கும் அவரையே துணைக்கழைக்கிற போது நிகழ்காலத்தின் மீது வைக்கும் விமரிசனத்தை  அவரிடமிருந்தே தொடங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

பெரியாரியப் பெண்ணியம்

சமூகநீதியை முன்வைத்தே ஈ.வெ.ராமசாமி பெண்ணியத்துக்குள் நுழைந்தார் என்பதை அவரது பேச்சிலிருந்தே நாம் காட்ட முடியும். இந்தியாவில் நடக்க வேண்டிய மாற்றங்களுக்கான முன்நிபந்தனைகளாகப் பேசும் போது இப்படிச் சொல்கிறார்; அவரது வாசகங்களை ஒரு முறை வாசிக்கலாம்;

அந்நிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் வேண்டுமானால், முக்கியமாகவும் ,அவசரமாகவும் ஒழிக்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள்இரண்டுண்டு :அவைகளில் முதலாவதாக எதுவென்றால் , இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும்.

இரண்டாவது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தை, அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும். ஆகவே மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரைகணம் கூட இருக்கவிடாமல் ஒழித்தாக வேண்டியவைகளாகும்.[பெண் ஏன் அடிமையானாள்- சொத்துரிமை, 51]

இன்றுள்ள அறிவாளிகளால் தலித்தியம் , பெண்ணியம் எனப் பெயரிட்டு விவாதிக்கும் சொல்லாடல்களைச் சரியாகவே அடையாளப்படுத்திய முன்னோடியாக பெரியாரை அடையாளப்படுத்தும் பகுதி இது. பாரதியின் கவிதைகளிலும் இவ்விரு விடுதலையின் கீற்றுக்கள் உண்டு என்றாலும் சரியான புரிதலோடும், தர்க்கங்களோடும் விவாதித்தலில் பெரியார் முன்னிலை பெறுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்

பெண்கள் பற்றிய  பெரியாரின் சொல்லாடலில் மூன்று நிலைகள் உண்டு.

1] பெண்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கருத்தியல் மற்றும் புனைவுகளைத் தகர்த்து அவர்களின் தன்னிலையை உண்ரும்படி செய்தல்

2] பெண்கள் ஆணின் துணையின்றி தனித்து இயங்கக் கூடியவர்களாக  ஆக வேண்டும் என்றால் சொத்துரிமையைக் கோர வேண்டும் என்று வலியுறுத்துதல்

3] முழு உரிமையை நோக்கி நகரும் பயணத்தை அடையாளப்படுத்தல்

என்பதாக அம்மூன்றையும் வரையறை செய்யலாம்.

முதல் சொல்லாடலில் அவர் கற்பு , காதல், விபச்சாரம், விதவை என்ற பெண்கள் சார்ந்த சொற்களின் பின் மறைந்திருக்கும் ஆணின் சுயநலத்தையும், பெண்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கமும் இருப்பதை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார். பெண் விடுதலைக்கு முன்பாக சமத்துவக் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பெரியார் , அதற்குத் தடைகளாக இருக்கும் கருத்தியல்களைக் கைவிட வேண்டும் என விரிவாக விளக்குகிறார். கற்பு, காதல் இரண்டின் மீது பெரியார் வைத்துள்ள விமரிசனங்கள், இன்றளவும் மறுக்கப்படாத விமரிசனங்கள் எனலாம். புனிதம் என்ற சொல்லோடு சேர்த்து வைத்துப் பேசப்படும் கற்பும், காதலும் ஆண்களால் புனையப்பட்ட சுயநலச் சொல்லாடல்கள் என்பதை விளக்கும் பெரியார், இப்படி எழுதுகிறார்;

அதுபோல பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப் பற்றிய நூல்கள் என்பதும் பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது வியாக்கியானம் செய்யப்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு  ‘‘ பதிவிரதம்’’ என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.                                     [பெண் ஏன் அடிமையானாள், கற்பு, ப.8]

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை.அதாவது தனதிஷ்டத்தை- திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.    [ பெண் ஏன் அடிமையானாள், - காதல,20]

பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து, நினைத்து, ஆசைப்படுவதும், ஒன்றிடம் - பலவற்றினிடம் அன்பு வைப்பதும், நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே, மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்துவிடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டுவிடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ள முயல்வதும் இயற்கையல்லவா..?[ பெண் ஏன் அடிமையானாள், காதல -23]

பெரியாரின் எழுத்து வெறும் விளக்கமாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே போகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். விபச்சாரி என்ற சொல்லாடல், பெண்ணுக்கு மட்டுமே இருப்பது பற்றிப் பேசும் போது,

மனித சமூகத்திற்கென்று பொதுவாகச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அடியோடு ஆட்சேபிக்க வரவில்லை. ஆனால், அவை தனிப்பட்டவர்கள், அதாவது, ஆண்டான் - அடிமை முறை, எஜமான் - கூலி, முதலாளி- காரியஸ்தர் முறை, சிநேகிதர்கள் முறை போன்ற தன்மைகள் கொண்ட அதாவது தனிப்பட்ட சம்பந்தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகிய ஒழுங்கு, கட்டுப்பாடுகள் போல பொது வாழ்விற்குப் பொதுக் கொள்கைகளாயிருக்கக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்திற்கும் பாதகம் ஏற்படாததாகவும் , அதுவும் பிரயோகத்தில் சிறிதும் ‘பாரபட்சம், உயர்வு, தாழ்வு ‘ ஆகிய பேதத் தத்துவம் கொண்டதல்லாததாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் கூட மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாததாகவுமிருக்க வேண்டும்.நியாயமான என்றதானாலேயே எது நியாயம் என்பதற்கு ‘ தர்மசாஸ்திரங்களை’த் தேட வேண்டு மென்பது கருத்தல்ல.

   - என்று விளக்கியுள்ளார். தொடர்ந்து விதனை மணத்தையும் விவாகரத்தின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசும் பெரியார்[ ப.40] விதவைகளின் மணம் தவிர்க்கக் கூடாத ஒன்று என்பதையும் சொல்கிறார்;

 ‘ அமைதியுடன் தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால், தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் விவாகம் செய்து கொள்ளட்டும். விதவைகளின் போஷகர்கள் இதைச் சரிவரக் கவனியாவிடின், பின்னால் பச்சாதாபப் படுவார்கள். [விதவைகளின் நிலை - 48-49]

போலியாகக் கட்டப்படும் புனிதக் கருத்தியல்களிலிருந்து விடுபடுதலோடு தங்களை நிலை நிறுத்தக் கொள்ள பெண்கள் சொத்துரிமையைக் கோரவேண்டும் என்கிறார் பெரியார். சொத்துரிமையே பெண்களைத் தனித்தியங்கும் ஆற்றல் உள்ளவர்களாக ஆக்கும் என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார். பெண் விடுதலையோடு ஆண்களின் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் கல்யாண விடுதலையை- விவாகரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் பெரியார் சொன்ன முக்கியமான கருத்தாகும்.

பெரியார் சொன்ன கருத்துக்களில் அவர் பெண்களின் கர்ப்பப் பையை நீக்குதல் பற்றிச் சொன்னது அதிர்ச்சியூட்டும் ஒன்று என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மையமாகக் கொண்டு சிந்திக்கும் ஒருத்தி, தனது சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்பதையே புரட்சிகரப் பெண்ணியலாளர்கள் முன் வைக்கின்றனர். உலகத்தின் விருத்திக்காக பெண்கள் மட்டும் ஏன் வருத்தப்பட்டுப் பாரம் சுமக்க வேண்டும் என்கிற கேள்வி, தான் ஆண் என்கிற ஆதிக்க உணர்வோடு நடந்து கொள்ளும் ஆண்களை நோக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வெடிகுண்டு என்றே சொல்லலாம். பெண்களின் விடுதலை ஆண்களின் ஆண்மை அழிதலில் தான் சாத்தியம் என்பதை விளக்கும்விதமாக அவர் சொன்ன வார்த்தைகள் வருமாறு;

தவிர, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் , உலகம் விருத்தியாகாது, மானிட வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்யாகாவிட்டால், பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்தத் தர்ம நியாயம் ( அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால்) பேசுபவர்களுக்குத் தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிடவர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குத் தெரியவில்லை. 

பெண்களின் அடிமைத்தன்மை, பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணர்வதில்லை. ஆனால் நாம் இச்சமயத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை.பெண்களைப் பற்றிக் கவலை கொண்டே சொல்கிறோம்.

பெண்கள் விடுதலைக்கு ‘‘ ஆண்மை’’அழிய வேண்டும் - ப.63-64

பெண் விடுதலை பெண்களால் மட்டுமே

பெண்கள் தங்கள் நி¬லையை உணர்தல் வேண்டும் என்பதில் தொடங்கி, புனிதங்களை கைவிட்டு, சொத்துரிமைக்காகப் போராடி, அடையும் விடுதலையை பெண்கள் முன்னின்று நடத்தும் இயக்கத்தால் தான் சாதிக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. 

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு போலிப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும்- எவ்வழியிலும்- பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் , மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத் தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆண்கள் வழியாக விடுதலை வரும் என எதிர்பார்க்கக் கூடாது; எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகத்தான் சொன்னார் பெரியார். அந்த எச்சரிக்கை அப்படியே பலித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

இந்திய நவீனத்துவத்தின் முன்னோடிகளான அம்பேத்கர், நேரு, பெரியார் ஆகியோரைப் பின்பற்றும் கட்சிகளே இன்று ஆட்சியில் உள்ளன. அவர்கள் சமத்துவ இடத்தை உறுதி செய்வதற்குப் பதிலாக 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்குக் கூட வகை செய்ய முடியாமல்- முயலாமல் இருப்பதில் அவர்களின் விருப்பமும் அடிமை கொள்வதில் தான் இருக்கிறது என்ற முடிவுக்குத் தானே இட்டுச் செல்கிறது.                            ===========================================================                                         சான்றுகள்

-------------------------------------------------------------------------------------                                

ஈ.வெ.ரா.சிந்தனைகள்

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு போலிப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும்- எவ்வழியிலும்- பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் , மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத் தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம்.                                                                                                                     -ப.459                                                                                                                    

நமது எதிரிகளான பார்ப்பணர்கள் தேசத்தின் பெயரையும், காங்கிரசின் பெயரையும் சுயராஜ்ஜியம், உரிமை என்கிற பெயர்களையும் வைத்துக் கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி, உத்தியோகமும் பதவியும் பெற்று, தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்கிறார்களே அது போலவும், நம்மில் பல கூலிகள் பார்ப்பணருக்கு ஒத்துப் பாடி, அவர்களும் தேசம், சுயராஜ்ஜியம், தேசியம் என்பவைகளைச் சொல்லி உயிர் வாழ்கிறார்களே அது போலவும், நாமும் செய்தால் பார்ப்பணரல்லாத மக்கள் முன்னேறி விடுவார்களா! இவற்றை மாநாட்டிற்கு வரும் பொதுஜனங்கள் நன்றாய் யோசிக்க விரும்புகிறோம்.     - ப.460

மற்றபடி, ‘ஒத்துழையாமையோ, ஒத்துழைப்போ; பரஸ்பர ஒத்துழைப்போ, முட்டுக்கட்டையோ; சட்டவரம்புக்குட்பட்ட கிளர்ச்சியோ, வெளிப்பட்ட கிளர்ச்சியோ; பிரிட்டிஷ் குடைக்குள் சுயராஜ்ஜியமோ, குடைக்கு வெளியில் சுயராஜ்ஜியமோ; இரட்டை ஆட்சியோ,ஒற்றை ஆட்சியோ; சாதாரண சுயராஜ்ஜியமோ, பூரண சுயராஜ்ஜியமோ; - அவரவர்கள் கொள்கை அவரவர்களுடனேயே இருக்கட்டும். இது சமயம் இவைகள் எல்லாம் அடியோடு புரட்டு என்றும்- பார்ப்பணர்களும், ஆங்கிலம் படித்தவர்களும், பாமர ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி வயிறு வளர்க்கச் செய்யும் தந்திரங்கள் என்றும் நாம் உறுதியாய் நம்புவதால் தான், அதைப்பற்றி யாருக்காவது கெடுதியோ நன்மையோ ஒன்றும் ஏற்படப் போவதில்லை. ஆதலால், அவைகள் ஒவ்வொரு மனிதனின் தனித்தனி அபிப்பிராயமாய் இருந்து கொள்ளலாமே தவிர, சங்கத்தின் கொள்கைகளில் கலக்க வேண்டியதில்லை. சுயமரியாதையும் சுதந்திரமும் பெறுவது என்பதை இலட்சியமாக வைத்துக் கொண்டாலே போதுமென்று நினைக்கிறோம்.                                                                                                                                                                                                                                         - ப.460.

   பெண் ஏன் அடிமையானாள்,

சிந்தனைப் பதிப்பகம் வெளியீடு, திண்டுக்கல் -624001

1.கற்பு,[6-9] 

2 .வள்ளுவரும் கற்பும்[10-17]

3. காதல்[17-24] 4.கல்யாணவிடுதலை [25-28]

5.மறுமணம் தவறல்ல [25-36] 6.விபச்சாரம் [ 36-43]

7.விதவைகளின் நிலை [43-51]8.சொத்துரிமை [51-56]

9.கர்ப்பத்தடை [57-60]  10 பெண்கள் விடுதலைக்கு ‘‘ ஆண்மை’’அழிய வேண்டும் [60-64]

தவிர, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் , உலகம் விருத்தியாகாது, மானிட வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்யாகாவிட்டால், பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்தத் தர்ம நியாயம் ( அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால்) பேசுபவர்களுக்குத் தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிடவர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குத் தெரியவில்லை. 

பெண்களின் அடிமைத்தன்மை, பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணர்வதில்லை. ஆனால் நாம் இச்சமயத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை.பெண்களைப் பற்றிக் கவலை கொண்டே சொல்கிறோம்.

பெண்கள் விடுதலைக்கு ‘‘ ஆண்மை’’அழிய வேண்டும் -ப.63-64

மதுவிலக்குப் பிரசாரத்தைவிட, தொத்துவியாதிகளை ஒழிக்கும் பிரசாரத்தைவிட, இந்தக் கர்ப்பத் தடைப் பிரசாரம் மிக முக்கியமானதென்பதே நமது அபிப்பிராயமாகும். கர்ப்பத்தடை - 59

அந்நிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் வேண்டுமானால், முக்கியமாகவும், அவசரமாகவும் ஒழிக்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டுண்டு ;

அவைகளில் முதலாவதாக எதுவென்றால் , இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும்.

இரண்டாவது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தை, அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும். ஆகவே மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரைகணம் கூட இருக்கவிடாமல் ஒழித்தாக வேண்டியவைகளாகும். - சொத்துரிமை, 51

உலகில் , மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத் தன்மை ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழிய வேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம் , - சுதந்திரம் என்னும் மூளை முளைக்கும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும்.

தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும் பழமைப் பற்றும் மிக்குடைய தோழர் காந்தியும், இந்து விதவைகளைப் பற்றி அநேக இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் 1925 ஆம் வருடத்தின் ‘‘ நவஜீவன்’’ பத்திரிகைகளைப் படித்தால் உண்மை புலனாகும். அக்கட்டுரையின் சில பாகமாவது;

‘ பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பது போன்ற இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றுமில்லை….

‘ அமைதியுடன் தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால், தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் விவாகம் செய்து கொள்ளட்டும். விதவைகளின் போஷகர்கள் இதைச் சரிவரக் கவனியாவிடின், பின்னால் பச்சாதாபப் படுவார்கள். விதவைகளின் நிலை - 48-49

மனித சமூகத்திற்கென்று பொதுவாகச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அடியோடு ஆட்சேபிக்க வரவில்லை. ஆனால், அவை தனிப்பட்டவர்கள், அதாவது, ஆண்டான் - அடிமை முறை, எஜமான் - கூலி, முதலாளி- காரியஸ்தர் முறை, சிநேகிதர்கள் முறை போன்ற தன்மைகள் கொண்ட அதாவது தனிப்பட்ட சம்பந்தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகிய ஒழுங்கு, கட்டுப்பாடுகள் போல பொது வாழ்விற்குப் பொதுக் கொள்கைகளாயிருக்கக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்திற்கும் பாதகம் ஏற்படாததாகவும் , அதுவும் பிரயோகத்தில் சிறிதும் ‘பாரபட்சம், உயர்வு, தாழ்வு ‘ ஆகிய பேதத் தத்துவம் கொண்டதல்லாததாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் கூட மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாததாகவுமிருக்க வேண்டும்.நியாயமான என்றதானாலேயே எது நியாயம் என்பதற்கு ‘ தர்மசாஸ்திரங்களை’த் தேட வேண்டு மென்பது கருத்தல்ல.    -   விபச்சாரம்  ப.40

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு,அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவசுபாவமானது அதை ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒருவகையான அடிமைத்தனமேயாகும். அன்பு, ஆசை ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றாலும், அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டும் என்றும், அதை ஒரு இடத்திலாவது , ஒரு அளவிலாவது கட்டுப்படுத்தப்படுவது என்பது ஜீவசுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக்கொள்கின்ற மக்கள், அன்பு, ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முன்வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம்.  மறுமணம் தவறல்ல - 35

கல்யாணம் என்பது மனிதன் இன்பத்துக்கும், திருப்திக்குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு- இஷ்டமில்லாத, ஒற்றுமைக்கு இசையாத கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்தக் காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண் ஜாதியாக நேர்ந்துவிட்டால், அப்போது புருஷனுடைய கடமை என்ன? என்று கேட்கிறோம். அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் கதை என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்விதக் குறைகளும் குற்றங்களும் ஏற்பட முடியுமா? என்பதை யோசித்தாலே, தெய்வீகம் என்பது முழுப்புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமற் போகாது. --கல்யாணவிடுதலை -27

பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து, நினைத்து, ஆசைப்படுவதும், ஒன்றிடம் - பலவற்றினிடம் அன்பு வைப்பதும், நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே, மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்துவிடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டுவிடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ள முயல்வதும் இயற்கையல்லவா..?-  காதல -23

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை.அதாவது தனதிஷ்டத்தை- திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.      - காதல,20

அதுபோலவே தொழுதெழுவதையும் ஆணுக்குக் குறிப்பிட நியதி இல்லையென்பதும் பொருத்தமற்றதே ஆகும். பெண்ணைக் கொள்ள ஆணுக்கு உரிமையிருந்தால், ஆணைக் கொள்ளப் பெண்ணுக்கு உரிமை வேண்டும், ஆணைத் தொழுதெழ வேண்டுமென்று பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணையும் ஆண் தொழுதெழ வேண்டும். இதுதான் ஆண்-பெண் சரிசம உரிமை என்பது.

இஃதில்லாதது எதுவானாலும் சுயநன்மையும் மூர்க்கமுமேயல்லாமல், அன்பு அல்லவென்றே சொல்லி விடுவோம்.         -வள்ளுவரும் கற்பும   -15,16

உண்மையான சமத்துவத்திற்கு மதிப்புக் கொடுப்போமானால், உண்மையான அன்பு இருக்குமேயானால், பிள்ளையைச் சுமந்துபெறும் வேலையை ஒன்று தவிர, மற்றக் காரியங்கள் இருபாலாருக்கும் ஒன்று போலவே இருக்கும் என்பது உறுதி.  - வள்ளுவரும் கற்பும ப.15 

இந்த விஷயத்தில் உலகத்தில் ரஷ்யா தவிர, வேறுநாடோ, வேறு மதமோ, வேறு சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. - மேலது .

அநேக வருடப் பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலகவும் முந்துகின்றார்களோ, அதுபோலவே பெண் மக்களும் தாங்கள் ஆண்மக்களின் சொத்துக்களென்றும் , ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கிறார்கள்.      - மேலது, கற்பு,9

அதுபோல பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப் பற்றிய நூல்கள் என்பதும் பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது வியாக்கியானம் செய்யப்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு  ‘‘ பதிவிரதம்’’ என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.                                       பெண் ஏன் அடிமையானாள், கற்பு, ப.8

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்