தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை


வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும். நாடகக்கலையின் வரலாற்றையும் அதேபோல் எழுதப்பெற்ற பனுவல்களைக் கொண்டு எழுதி விடலாம் என நினைக்கலாம். ஆனால் நாடகக்கலையின் வரலாறு எழுத்துப் பிரதிகளின் வழியாக மட்டுமே அறியப்படும் தரவுகளைக் கொண்டதல்ல. அதன் தளங்களும் செயல்பாடுகளும் எழுத்துப்பனுவல்களைத் தாண்டிய தன்மைகள் கொண்டவை

நாடகக்கலையின் வரலாற்றை எழுத நினைக்கும் எவர் ஒருவரும் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் எழுதப்பட்ட பனுவல்களின் வரலாறாக எழுதி விட முடியாது. நாடகக்கலையின் முதன்மையான அடையாளம் அதன் நிகழ்த்துமுறைகளும் அவற்றுக்கான பயிற்சிகளும் என்பதைக் கவனத்தில் கொண்டு அதற்கான தரவுகளைத் தொகுத்துக்கொண்டு வரலாற்றை எழுத வேண்டும். அதேபோல் நிகழ்த்துவதற்கு உதவிய பனுவல்களும் எழுதியவர்களால் எவ்வாறு எழுதப்பெற்றன; முழுமையாக எழுதப் பெற்றனவா? எழுதியவர்களே நிகழ்த்தும் ஆசிரியர்களாகவும் – நெறியாளர்களாகவும் இருந்ததால் உரையாடல் பகுதிகளை மட்டும் எழுதிவைத்துக் கொண்டு மற்றவற்றை மனப்போக்கின் அடிப்படையில் அவ்வப்போது தோன்றும் கற்பனைக்கேற்ப நிகழ்த்தினார்களா? என்றும் பார்க்க வேண்டும். அவற்றையெல்லாம் தொகுத்து எழுதுவதற்கான நாடகக் கலைச் சான்றுகள் தமிழில் முழுமையாக இல்லை என்பது உணரப்பட்டுள்ளது.

நிகழ்த்துமுறைகளையும் வகைகளையும் ஆடல் பாடல் என்பனவாகவும் எழினிகள், ஆடுகளங்கள் என நிகழ்த்தும் இடங்களின் இயல்புகளையும் விரிவாகப் பேசும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதையை முன்னுதாரணமாகவும் தரவாகவும் கொண்டு தமிழ் அரங்கக்கலை வரலாற்றை எழுதும் ஒருவருக்கு இடைக்காலத்தில் நீண்ட இடைவெளிகள் இருப்பது மலைப்பாக மாறிவிடும். 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கிடைக்கும் பள்ளு, குறவஞ்சி, கீர்த்தனை நாடகங்கள், நொண்டி நாடகங்கள் போன்றனவற்றில் கிடைக்கும் தரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியன. அதன் தொடர்ச்சியாக பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்கி வளர்ந்த நவீன வாழ்க்கை முறையில் நாடகக்கலையின் இடம் எத்தகையது எனத் தேடும்போது ஒற்றைப்போக்குக்குப் பதிலாக சிலவகையான போக்குகள் புலப்படும்.

மரபு வழியாக – குடும்பவழியாக நிகழ்த்தப்பெற்ற நாட்டார் அரங்கக் கலைகளின் வரலாற்றை அவற்றின் இப்போது இருப்பைக் கொண்டும், அதனை நிகழ்த்திய பாரம்பரிய குழுக்களின் உறுப்பினர்களின் வரலாற்றையும் அவர்களின் நேர்காணல்களையும் கொண்டே எழுத முடியும். அப்படியான வரலாறுகளைச் சில கல்விப்புல ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். தமிழகத்தின் வடமாவட்டங்களில் செல்வாக்குச் செலுத்திய தெருக்கூத்து, கட்டைக்கூத்து போன்றவற்றையும், நடுத்தமிழ் நாட்டில் கோயில் சார்ந்து நிகழ்த்தப்பெற்ற பாகவதமேளா, உடுக்கடிப் பாடல்கள், பாராயணக்குழுக்கள், போன்றவற்றையும், தென்மாவட்டக் கலைகளான தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், கரகாட்டம், ராஜாராணி ஆட்டம் போன்றவற்றையும் ஆவணப்படுத்தி வைத்துள்ளன பல்கலைக்கழக ஆய்வுகள். இவையெல்லாம் பெரும்பாலும் கிராமப்புற நிகழ்த்துக் கலைகள் பற்றிய ஆவணங்களே.

இவற்றிலிருந்து சிறுநகரம், நகரம், பெருநகரம் சார்ந்து நாடகவியல் வளர்ந்த வரலாற்றை எழுத நினைப்பவர்கள் செய்யவேண்டிய களப்பணிகள் வேறுவிதமானவை. ஆங்கிலக் கல்வியின் வருகைக்குப் பின்பு அறிமுகமான படச்சட்டக மேடையும் (புரோசீனியம் தியேட்டர்) அவற்றில் நிகழ்த்துவதற்கான பிரதிகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் பலராலும் எழுதப் பெற்றன. அவற்றுக்கும் முன்பு புராண, இதிகாசக் கதைகளை மேடையேற்றிய இசையும் வசனமும் கலந்த ஸ்பெசல் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. தவத்திரு தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகளை முன்னோடியாகக் கொண்ட இவ்வகை நாடகங்களை மேடையேற்றும் குழுக்கள் மதுரை, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவில்பட்டி, நாகர்கோவில் போன்ற தென் தமிழக நகரங்களில் செயல்பட்டன. சிறுவர்களாக இருக்கும்போதே நாடகக்குழுக்களில் சேர்க்கப்பட்டு இசைப்பயிற்சி, யோகா, ஆட்ட அசைவுகள், சிலம்பம் போன்ற உடல் பயிற்சிகள், வசனம் பேசுதலுக்கான குரல் பயிற்சிகள் போன்றன வழங்கப்பட்ட குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் செயல்பட்ட ஸ்பெஷல் நாடகக் குழுக்களின் வரலாறுகள் எழுதப்படும்போது தமிழின் நாடகக்கலையின் அண்மைக்கால வரலாற்றை நாம் அறிய முடியும்.

படச்சட்டக மேடை வடிவம் ஐரோப்பிய நாடகப்பனுவல்களை மாதிரிகளாகக் கொண்டு மேடையேற்றங்கள் செய்தவை என்றாலும் இந்திய நாடகப் பனுவல்களையும் உள்வாங்கிய இசைப்பாடல்களையும் இணைத்துக்கொண்ட சபா நாடகங்களின் வரலாறும் தமிழ்நாடகக் கலையின் வரலாற்றில் எழுதப்படவேண்டிய வரலாறு. சென்னையில் அதிகமாகவும் மதுரை, நாகர்கோவில் போன்ற நகரங்களில் சிறு அளவிலும் செயல்பட்ட சபா நாடகங்களின் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். அப்படித் தொகுக்கப்பட ஓர் அடிப்படைப் பனுவல் ஒன்று தேவை. அப்படியான அடிப்படைப் பனுவல்களில் முதன்மையான பனுவல் அவ்வை தி.க.சண்முகம் அவர்களின் எனது நாடக வாழ்க்கை என உறுதியாகச் சொல்லலாம்.

தனியாள் ஒருவரின் தன்வரலாறு போல எழுதப்பெற்றுள்ள இந்நூல் அவரது பிறப்பு முதல் மறைவு வரையிலான வாழ்க்கைக் கதையைச் சொல்லும் நோக்கம் கொண்டதல்ல. அதற்கு மாறாக தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முழு ஈடுபாட்டோடு இணைந்து செயல்பட்ட கலைவாழ்க்கையின் காலகட்டங்களை -1918முதல்1972 வரையிலான நிகழ்வுகளை அவற்றின் துல்லியத்தோடு பதிவு செய்துள்ள நூல். இந்நூலை வாசிக்கும் ஒருவர் அக்கால கட்டத்தில் தமிழ் நாடகக்கலைக்குள் செயல்பட்ட ஆளுமைகள், அவர்களின் தனித்தன்மைகள், வாழ்வியல் பார்வைகள் ஆகியவற்றை முதன்மையாக அறியமுடியும். அத்தோடு நாடகக்கலையின் இயக்கத்தின் பின்னணியில் இருக்கும் உழைப்பு, பொருளாதாரத்தேவைகள், பயிற்சி முறைகள், பார்வையாளர்களின் பங்கேற்புகள், நாடகக் கலைக்குக் கிடைத்த புரவலர் ஆதரவுகள், மக்கள் ஆதரவுகள் என்பனவற்றை விரிவாக அறிய முடியும். அஃதல்லாமல் அக்கால கட்டத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செய்யக்கூடிய பயணங்களிலும் தங்கல்களிலும் உணவுப்பழக்கங்களும், அவை சார்ந்து தமிழர்களின் சுவையான உரையாடல்களையும் ஏற்புநிலைகளையும் அறியமுடிகின்றன.

நாடகக்கலையை முன்வைத்து பல தளங்களை விவரிக்கும் எனது நாடக வாழ்க்கை நூலை மறுபதிப்பாக – அரசின் பதிப்பாகக் கொண்டுவரும் இம்முயற்சி நாடகக்கலைக்கு மட்டுமல்லாது தமிழ்ச் சமூக வரலாற்றின் ஒரு பகுதிக்குச் செய்யும் சிறப்பாகும். முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்