உலகின் தலைசிறந்த தேநீர்

தேநீர் குடிக்கத் தொடங்கிய காலத்திலேயே தேயிலைக் காடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது எங்களூரின் மலைக்காரர் குடும்பம். ஒரு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி மூணாறு மலைத் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனவரின் அடுத்த தலைமுறையினர் திரும்பவும் ஊரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது நேரடித் தேயிலையை ஊருக்கு அறிமுகம் செய்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு மூணாறுக்கும் மேல் விரியும் தேயிலைக் காடுகளில் ஒருவாரம் தங்கியிருந்த நாட்கள் தேயிலைச் செடிகளைப் பார்க்கும் ஆர்வத்தை எப்போதும் தூண்டக்கூடியன. திருநெல்வேலியில் இருந்த காலத்தில் ஊத்துக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்று திரும்பி விடலாம். அதைவிட்டால் செங்கோட்டை வழியாகக் கேரளத்திற்குள் நுழையும் பாதையில் தேயிலைக் காடுகளைப் பார்க்கலாம்.


இப்போதிருக்கும் திருமங்கலத்திலிருந்து ஒரு தேயிலைக் காட்டுக்குள் போக வேண்டுமென்றால் ஓரளவு பக்கத்தில் இருப்பது மேகமலை அல்லது கோடைக்கானல் மலைதான். கோடைக்கானலுக்குப் பல தடவை போய் வந்ததுண்டு. ஆனால் மேகமலை இரண்டு மூன்று தடவை போக நினைத்துப் போவது தள்ளிப்போன இடம். ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், எனத் தரைச் சாலைகளைத் தாண்டிக் கால் மணி நேரத்தில் மலைப்பாதை தொடங்கி விடுகிறது. தரைத் தளத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தேயிலைக்காடுகள் தொடங்கும் இடம் வரும்போது குளிர்மையின் அரவணைப்பு உடலைக் காவிக்கொள்கிறது. காலையில் சாரல் வீசிய அறிகுறிகள் சாலையிலும் பாறைகளிலும் ஈரமாக ஓடின. 16 டிகிரி குறைந்து 19 டிகிரிதான். ஆனாலும் குளிராக இல்லை. சாலைகள் புதிதாகப் போடப்பட்டுள்ளன.


************
தேநீர் குடிப்பதை ரசித்துக் குடிப்பதும் தினசரித்தாள்களை வாசிப்பதும் என்ற பழக்கம் பள்ளிக்காலப் பழக்கம். திண்டுக்கல் விடுதி வாழ்க்கையில் பெரியார் சிலைக்குப் பக்கத்தில் இருந்த தேநீர்க்கடை ஒன்றில் தேயிலை வாசமே இல்லாத தேநீரைக் குடிக்கப்போவதுண்டு. அங்கு வாசிக்கக் கிடைத்த தினசரித்தாளில் ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு தொடராக வந்து கொண்டிருந்தது.

ஒருநாள் வகுப்பில் தமிழில் இடைச்சொற்கள், அவற்றின் பயன்பாடு குறித்த செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அன்றைய வகுப்பில் மரிஸ்யாவும் காஸ்யாவும் இருந்தார்கள். ”இந்தியத் தேயிலைகளில் டார்ஜிலிங் தேயிலையே சிறந்தது” என்றொரு சொற்றொடரை வைத்து அந்த வகுப்பை நடத்தி முடித்தேன். மூணாறு தேயிலையைவிட ஊட்டி தேயிலை சுவையானது; ஊட்டி தேயிலையைக் காட்டிலும் மாஞ்சோலைத் தேயிலை நன்று என்ற தொடர்களைச் சொல்லி - விட, காட்டிலும், ஏ - போன்றன இடைச்சொற்களாக வருகின்றன. தனியாக இவற்றிற்குப் பொருள் இல்லை; ஒரு பெயர்ச்சொல்லோடு சேரும்போது பொருள் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்ற விளக்கங்களுக்குப் பின் வகுப்பு தேநீர், தேயிலை பற்றியனவாக நீண்டது.



வகுப்பு முடிந்தபின் மரிஸ்யா கிளம்பிவிட்டார்; காஸ்யா தயக்கத்தோடு ‘ராம்சாமி.. ஒரு தேநீர் குடிக்கலாமா?” என்றாள். 
“ ஓ தேநீர் சாப்டலாம்” என்றேன். சொல்லிவிட்டு ‘ குடிக்கலாம்’ என்று மாற்றிச் சொன்னேன்.

பேச்சுத்தமிழில் குடிப்பதைக் கூடச் ‘சாப்பிடுவதாக’ப் பயன்படுத்துவதுண்டு என்று சொல்லவும், ஆமாம், எழுத்துத்தமிழைவிடப் பேச்சுத்தமிழ் கஷ்டம் தான் என்றாள். நான் வார்சாவிற்குப் போவதற்கு முன்பே ஒருவருடம் தமிழ் படித்திருந்தவர்கள் மரிஸ்யாவும் காஸ்யாவும்.

இந்தியத் தேநீர்களில் டார்ஜிலிங் தேநீர் சிறந்ததாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளில் தேநீரில் எந்த நாட்டுத் தேநீர் சிறந்தது என்று காட்டுகிறேன் என்று சொல்லி அந்த இடத்திற்கு அழைத்துப்போனாள். பல்கலைக் கழகத்திற்குப் பக்கத்தில் தான் போலந்தின் ஜனாதிபதியின் மாளிகை இருக்கிறது. அதனை அடுத்துத் திரும்பும் ஒரு சாலையில் வலதுபுறம் திரும்பி உள்ளே நுழைந்தோம். தரைத்தளம் மதுபானச்சாலை. தரைத்தளத்திலிருந்து கீழிறங்கிச் செல்லும் குறுகலான படிக்கட்டுகள் வழியே முதல் தளத்தில் பூச்செடிகள் விற்கும் தளம் இருந்தது. அதற்கும் கீழே போனால் விசாலமான தளம். மதுபானத் தளத்தைவிட அழகாக இருந்தது. மேசைகள் ஒவ்வொன்றின் பக்கத்திலும் தேயிலைக் காடுகளின் படங்கள். உலகநாடுகளில் எங்கெல்லாம் தேயிலை விளைகின்றன என்ற விவரங்கள். பச்சையமும் மஞ்சளுமாக மேசை விரிப்புகள். நீரைச் சூடாக்கும் கெட்டில்கள். அதிலிருந்து மின் இணைப்புக்கான வயர்கள்.

ஒவ்வொரு தேநீரின் விலைப்பட்டியல் அச்சிடப்பட்ட புத்தகம் மேசையில் கிடந்தது. நாட்டின் பெயர்களோடு எந்தத் தேயிலைக்காட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தேயிலைத் துகள்கள் என்றவிவரமும் அவற்றிற்கான விலையும் போல்ஸ்காவின் சுலாட்டியில் இருந்தது. இந்தியத் தேயிலைகளில் ஊட்டித் தேயிலையும் டார்ஜிலிங் தேயிலையும் இருந்தன. இன்னும் சில நாடுகளின் தேயிலைக் காடுகளின் பெயர்கள் இருந்தன. எல்லாத் தேயிலைகளிலும் விலைகூடிய தேயிலையாக இலங்கையின் நுவரெலியாவின் தேயிலை குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகின் சிறந்த தேநீரைப் பருகலாம் என்றேன். காஸ்யா, “ நீங்கள் குடிங்க; என்னிடம் அவ்வளவு பணம் இல்லெ “ என்றாள். “நான் தருகிறேன்” என்றபோது ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டு, அவரவர்க்கு அவரவர் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டாள். எனக்கு நுவரெலியா தேநீரும் அவளுக்கு இந்தியத்தேநீரும் சொன்னாள். இரண்டு குடுவைகளில் தேயிலை,பொடியாக இல்லாமல் ஒடிக்கப்பட்ட இலைகளாகக் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இனிப்புக்காகச் சீனிக்கட்டிகளும் பால் பொடிகளும் வைக்கப்பட்டன.

வைக்கப்பட்டு அரைமணி நேரம் ஆகியிருக்கும் தேயிலை குறித்த பாடம் உரையாடலாக மாறியது. அவள் ஆசிரியராக மாறினாள். அவள் சொல்லச் சொல்ல நான் கேட்டுக்கொண்டேன். சில நேரங்களில் தமிழ் வழக்காறு குறித்து மட்டும் நான் சொன்னேன். உலகத்தின் தலைசிறந்த தேயிலையை உற்பத்திசெய்த தேயிலைக் காட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற எட்டாண்டுகள் காத்திருந்து 2019 டிசம்பரில் பார்த்தேன். மூன்று நாட்கள் முழுவதும் அந்த மலையகக் காடுகளின் சாலைகளிலும் வீடுகளிலும் நகரத்தின் தெருக்களிலும் திரிந்தேன்.


எனது இரண்டாவது இலங்கைப் பயணத்தில் மலையக இளைஞர்களுக்கு ஒரு நாடகப் பட்டறையை நடத்த வேண்டும் என்பது மலையகப்பள்ளியொன்றில் கலை ஆசிரியராகப் பணியாற்றும் வி.சுதர்சனின் நீண்ட நாள் விருப்பம். தொலைபேசி வழியாகப் பல தடவை சொல்லியிருக்கிறார். அவர் எனது முந்தைய பயணத்தின்போது மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தின் மாணவராக இருந்தார். அவரது அழைப்பின் பேரில் தான் அந்த மலையகப்பயணம். பேராதனை பல்கலைக்கழக நிகழ்வுக்குப் பின் வந்து அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். அழைக்க வந்த ரஜீவும் சுதர்சனோடு மட்டக்களப்பில் பயின்ற மாணவரே. கண்டியிலிருந்து மலையேறிய சிற்றுந்துப் பயணத்திலேயே தேயிலைக்காடுகளின் பரப்பு விரிந்து கொண்டிருந்தது. இரவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியே தேயிலைக் காட்டுக்குள் தான் இருந்தது.
காலையில் வந்து தேயிலைக்காட்டிற்குள்ளிருந்த ஒரு தேநீர்க்கடையில் குடித்த தேநீருக்குப் பின் நாடகப் பட்டறைக்குத் தயாரானேன். 19 பெண்களும் 17 ஆண்களும் என மொத்தம் 36 பேர் திரட்டப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அடிப்படையான பயிற்சிகளில் தொடங்கி நாடகம் ஒன்றை உருவாக்கும் நகர்வுத் திட்டத்தைக் காட்டும்விதமாக ஒருநாள் பயிலரங்கை வடிவமைத்துக் கொண்டு 21 -12-2019 காலை 9 மணிக்குத் தொடங்கியது பயிலரங்கு. அவரவர் உடலை அறிவதிலிருந்து ஆரம்பித்துக் குரலைப் பெருக்குவதும் கட்டுப்படுத்துவதும் மனத்தின் கட்டுப்பாட்டுக்கள் உடலையும் குரலையும் இணைத்துக்கொள்வதுமான பயிற்சிகள். பின்னர் நிலைக்காட்சி, அசைவுகள், குழு இணைவுகள், பேச்சிணைவுகள் என்ற உருவாக்கம். அடுத்ததாகத் தரப்பட்ட வசனமொழ்ன்றைக் கொண்டு குறுநாடகங்களை உருவாக்குதல் எனப் பட்டறை நகர்ந்தது. ஆரம்பத் தயக்கங்கள் தாண்டிக் குழுவாக இயங்கும் போக்கிற்குள் நுழைந்தவுடன் ஒவ்வொருவரும் தங்களை மறந்து செயல்பாடுகளுக்குள் இணைத்துக்கொண்டனர்.



நேற்றைய நாடகப் பயிலரங்கிற்குப் பின்னணியில் இருந்து ஊக்கமும் உதவியும் செய்த கலை இலக்கியப்பேரவையின் நூரலைக் கிளை இன்று (22-12-19) ராகலையில் கலந்துரையாடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. மலையின் சரிவுகள், மேடு- பள்ளங்களைச் சீரான சாலைகளால் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நுவரெலியாவிலிருந்து 21 கி.மீ தூரத்திலிருக்கும் ராகலை நகரில் 1500 -க்கும் அதிகமான மாணாக்கர்கள் பயிலும் பள்ளியில் அந்த நிகழ்வு நடந்தது. அந்தப் பள்ளி வளாகமும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட வெளியைப் பயன்படுத்தி வகுப்பறைகளைக் கொண்டதாக இருந்த சூழல் ரசிக்கத்தக்க வளாகமாக இருந்தது

மரபுக்கலைகளும் நவீன நாடகங்களும் என்னும் பொருண்மையில் நடைபெற்ற அந்த உரை & மற்றும் உரையாடல் அரங்கில் முதன்மைப் பேச்சாளராக இருந்து இந்திய மாநிலங்கள் பலவற்றின் மரபுக் கலைகளைக் குறித்த ஓர் அறிமுகத்தையும் பொதுக்கூறு களையும் தந்துவிட்டு, அவற்றை உள்வாங்கி நவீன நாடகங்கள் செய்ய முயன்ற போக்குகளையும் விரிவாகப் பேசினேன். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகப் பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கினை விளக்கிக்காட்டிவிட்டு, இந்திய அரசின் வேர்களைத் தேடிய இயக்குநர்கள் திட்டத்தையும் விரிவாக முன்வைத்தேன். இந்திய மாநிலங்களில் மரபுக்கலை வடிவங்களை உள்வாங்கி இந்திய அரங்கை உருவாக்க முயன்ற அத்திட்டத்தின்படி உருவான நாடகங்களின் உள்ளடக்க வடிவ மாற்றங்களை அறிமுகப்படுத்தினேன்.

விழிப்புணர்வு, சமூக மாற்றம் என்பதனை நோக்கிச் செல்லும் கலைஞர்களுக்கு மரபு தரும் நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டி, அதனைத் தாண்டிச் செல்லும் முறைமைகளைச் சிந்திக்க வேண்டியதின் தேவையையும் வலியுறுத்திப் பேசினேன். என் உரையையொட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நாடகத்துறை ஆசிரியர் ம.கேதீஸ்வரனும் அங்கேயே நாடக ஆசிரியராகவும் செயற்பாட்டாளராகவும் இருக்கும் வி.சுதர்சனும் இலங்கையில் நடந்த நிகழ்வுகளையும் மலையகத்தில் செய்யவேண்டிய பணிகளையும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

தேசியக் கலை இலக்கியப் பொறுப்பாளர்கள் தலைமையேற்றும், நன்றியுரை கூறியும் பேசினார்கள். விவாதங்களிலும் பங்கேற்றார்கள். சிங்கள - தமிழ் வாய்மொழிப் பாடல்களைக் குறிப்பாக ஒப்பாரியையும் தாலாட்டையும் ஆய்வு செய்யும் சிங்கள ஆய்வு மாணவி சில பாடல்களைப் பாடி ஒப்பிட்டுப் பேசினார். 10.45 -க்குத் தொடங்கிய கூட்டம் 2.15 வரை நீண்டது. வெளியே மழை இசைக்கான தாள லயத்தோடு பெய்துகொண்டிருந்தது.

கூட்டத்திற்குப் பிறகு தேயிலைக்காட்டிற்குள் இருந்த வீடு ஒன்றில் உணவும் ஓய்வும். மாலையில் சபரமுவகப் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்