ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகளில் நடத்தை உளவியல்


முன்னுரை:

ஐரோப்பியர்கள் அனைத்துச் சொல்லாடல்களையும் அறிவியலின் பகுதியாக பேசத் தொடங்கிய காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டு. தொழிற்புரட்சிக்குப் பின்பு மதத்தின் இடத்தைப் பிடித்த அறிவுவாதம், தர்க்கம் என்னும் அளவையியல் வழியாக ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டியது. மனிதனின் மனச் செயல்களை விளக்கமுடியாத ஒன்றாகவும், காரணகாரியங்களுக்கு உட்படாத ஒன்றாகவும் இருந்த போக்குக்கு மாறாக அதனைச் சமூக உளவியலின் ஒரு பகுதியாகப் பேசி விளக்கிக் காட்டியது. உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்விக்குள் ஒன்றான நடத்தை அறிவியல், கி.பி. 1870 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் வுண்டட் என்னும் உளவியலாளர், ஜெர்மனியிலுள்ள லீய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவியபோது கல்வித்துறைக்குள் சமூக அறிவியலின் பகுதியாக மாறியது.

நவீன காலங்களில், உளவியல் என்பது தன்உணர்வு, நடத்தை, சமூக செயல் அதன் எதிர்ச்செயல் ஆகியன ஒருங்கிணைந்த ‘தகவுநோக்காக’ ஆகியுள்ளது. இந்தத் தகவுநோக்கு பொதுப்படையாக உயிரியல் - சமூக நோக்கு எனக் குறிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படைக்கருத்து ஒரு கொடுக்கப் பட்ட நடத்தை அல்லது மனோ செயல்முறை பாதிக்கப் படுகின்றது அல்லது உயிரியல், மனோயியல், மற்றும் சமூக இயல் இவற்றின் இயக்கபூர்வமான உள்தொடர்புடைய நிலையில் பாதிக்கப்படுகின்றது என நம்புவதாகும்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடத்தையியல் துறை அமெரிக்க உளவியலாளர்களான ஜான் பி. வாட்ஸன் , பி.எப்.ஸ்கின்னர் எட்வர்டு , தார்ன்டைக், க்ளார்க் எல். ஹல், எட்வர்டு சி. டோல்மன் போன்றவர்களால் விரிவான கருத்தியலாக உருவாக்கம் பெற்றது. உளவியல். இரட்டை விளக்கம் அதாவது "மனம்” அல்லது “தன்உணர்வறிதல்” என வலியுறுத்துவது என்பது ஒரு காலகட்டத்தின் சிந்தனைப் போக்காக இருந்தது. ஆனால் பின் தற்செயல் நிகழ்ச்சிகள் மனித நடத்தைகளை எவ்வாறு வடிவமைக்கிறது எனப் பார்க்கும் முறையாக மாறியது. இக்கட்டுரைத் தமிழின் செவ்வியல் கவியான ஒக்கூர் மாசாத்தியின் கவிதைக்குள் இருக்கும் நடத்தை உளவியல் கூறுகளைப் பற்றிப் பேசுவதாக அமைகிறது

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகள்

செவ்வியல் கவிதைகள். குறிப்பிட்ட வரையறைக்குள் எழுதப்பெற்ற கவிதைகள். உலகச் செவ்வியல் இலக்கியங்களுக்குப் பொதுவான இக்கூறு தமிழ்ச் செவ்வியலில் அகம், புறம் எனப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் எவ்வாறு எழுதப்பெற வேண்டும் என்ற வரையறைக்குள் இயங்கியுள்ளது. அக்கால கட்டத்தில் தமிழில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் கவிதைகள் எழுதியவர்களாக இருந்துள்ளனர் என்பது சிறப்பான ஒன்று. பெண்கவியான ஒக்கூர் மாசாத்தி எழுதிய கவிதைகளாக நமக்குக் கிடைப்பவை மொத்தம் 8. அகநானூற்றில் இரண்டு (324, 384) குறுந்தொகையில் ஐந்து (126,139,186,220,275) ஆகிய ஏழும் அகம். புறநானூற்றில் இருக்கும் ஒன்று(279) மட்டும் புறம். இவ்வெட்டுக் கவிதைகளிலும் வெளிப்படும் உளவியலை - நடத்தை உளவியலை இருநிலைகளில் நாம் புரிந்து கொள்ள முடியும். அகக்கவிதைகளில் வெளிப்படுபவை பாத்திரத்தின் உளவியலாகவும், புறக்கவிதைகளில் முன் வைக்கப்படும் நடத்தைக் கூறுகளைச் சமூகத்தின் நிலைபாட்டைப் பேசும் கவியின் உளவியலாகவும் கொள்ளலாம்.

ஒக்கூர் மாசாத்தியின் ஏழு அகக்கவிதைகளில் ஆறு கவிதைகள் முல்லை என்னும் வரையறையைப் பின்பற்றியுள்ளது. முல்லை என்பது ஆணும் பெண்ணும் பிரிந்திருக்கும் சூழலையும், அந்தப் பிரிவின் போது செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகளைச் செய்துவிட்டு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையை முதன்மையாகப் பேசும் நிலை. சில நேரங்களில் அன்றாடக் கடமைகளைச் செய்ய முடியாமல் தவிக்கும் தவிப்பை - ஆற்றாதிருத்தலையும் பேசும் வாய்ப்பும் உண்டு. முல்லை இருத்தலாவது ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும் என்பர் உரையாசிரியர். ஆற்றியிருக்க வேண்டியது சமூகம் தரும் நெருக்கடி. ஆற்றாதிருப்பது தனிமனித மனம் உருவாக்கும் நெருக்கடி.

அகநானூற்றில் உள்ள இரண்டு பாடல்களுமே ஆற்றியிருக்கும் தலைவியின் நிலையைப் பார்த்து உழையர் சொல்லும் கூற்றாக இருக்கின்றன. தலைவியின் நடத்தை உளவியல், காதலின் /காமத்தின் கணங்களை அடக்கிய நிலை. அந்நிலைக்காக அவளுக்கு வெளிப்படையான ஈடு ஒன்று கிடைக்கும் என்பதாகப் பேசுகின்றன. ” விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை” ( அக.324) என வரும் வரியிலும் ”தன் வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே“ ( அக.384) என வரும் வரியிலும், இழப்புக்கு ஈடாகப் பெறப்போகும் நல்கை பற்றிக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இதிலிருந்து விலகிய நிலைபாட்டைக் குறுந்தொகையின் முல்லைப்பாடல்கள் காட்டுகின்றன. ஐந்தில் நான்கு முல்லைப்பாடல்களே. அவற்றில் வெளிப்படும் நடத்தையும் தலைவியின் நடத்தையே. ஆனால் தலைவன் இன்னும் வரவில்லையே என்னும் தவிப்பில் இருக்கும் நிலையைக் கண்டு அவளை ஆற்றுவிக்க முயலும் தோழிகளின் கூற்றாக அவை இருக்கின்றன. ஆற்றுவிக்க முயலும் தோழிகள், வருவதற்கான வாய்ப்புகளையும், அதனைத் தூண்டும் இயற்கைக்குறிகளையும் எடுத்துக் காட்டிப் பேசுகின்றனர். கார்காலம் தவிப்பை உண்டாக்கும் காலம் என்பது நமக்குத் தெரிந்ததுபோலவே தலைவனுக்கும் தெரியும், அதனை உணர்ந்தவன் விரைவில் வந்துவிடுவான் என்பது அவர்களின் நம்பிக்கையூட்டும் கூற்றுகளாக இருக்கின்றன. நம்பிக்கையூட்டும் கூற்றுகளே நடத்தை உளவியலின் சாராம்சம். முல்லைக் கொடி, கார்காலம், மழைமேகம் போன்றன மனத்தைத் திருப்பும் சில அறிகுறிகள். மனமே நடத்தையைத் தீர்மானிக்கும் என்பது உளவியலாளரின் கூற்று. ” பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் தொகு முகை இலங்கு எயிறு ஆக நகுமே-தோழி!-நறுந் தண் காரே.” எனவும், (குறுந்.126) ” ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி எயிறு என முகையும் நாடற்குத் துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே. ” (குறுந்.186) எனவும், குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் ,கேட்கும் தலைவிக்குத் தோழி கூறும் வண்டு சூழ் மாலையும், வாரார்; (குறுந்.220) எனவும் கேட்கும் தலைவிக்குத்” செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு வல் வில் இளையர் பக்கம் போற்ற, ஈர் மணற் காட்டாறு வரூஉம் தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. (குறுந்.275,) எனத் தோழி கூறும் பதில் நம்பிக்கை ஊட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நம்பிக்கையின்மையையும், நம்பிக்கையூட்டலையும் பேசும் சொல்லாடல்களே நடத்தை உளவியலின் முதன்மையான சொல்லாடல்கள் என்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல.

பாத்திரத்தின் உளவியல் தவிப்பை முல்லைப் பாடல்களில் எழுதும் ஒக்கூர் மாசாத்தி துணைப் பாத்திரம் ஒன்றின் துணிவை - தோழியின் துணிச்சலான வெளிப்பாட்டை மருதத் திணைப்பாடலாக முன் வைக்கிறார்.

வேலி வெருகினம் மாலை உற்றென,

புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇ

பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தா அங்கு

இன்னாது இசைக்கும் அம்பலொடு

வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.

என்பது அக்கவிதை (குறுந்.139) தலைவனைத் தலைவியைக் காண அனுமதிக்க முடியாது எனப் பேசும் இந்த உளவியலைத் தனிமனித நடத்தை சார்ந்த உளவியல் எனக் கணிக்கும் அதே நேரத்தில் சமூகம் உருவாக்கிய ஒழுக்க உருவாக்கமாகவும் நாம் கணிக்க முடியும்.

சமூக உளவியலை முழுமையாகப் பேசும் கவிதையாக இருப்பது புறக்கவிதை (புறம். 279 ). வாகைத் திணையின் மூதின் முல்லைத் துறையில் அமைந்துள்ள அக்கவிதைப் பெண்ணின் தன்னிலையை முன் வைக்கும் முக்கியமான கவிதை எனலாம்.

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே.

மாசாத்தியின் இந்தக் கவிதையில் காட்டப்படும் ஒரு பெண் வயதில் நடுத்தர வயதைத் தாண்டியவள். மூத்தவள் என்னும் பட்டத்தைப் பெறத்தகுதியானவள் எனக் கவி கூறுகிறார். ஆனால் அந்தப் பட்டத்தால் என்ன கிடைத்துவிடும் எனக் கேட்கும் தொனியில், “ கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே” எனக் கேட்கவும் செய்கிறார். புறநானூற்றுக் காலத்தில் அனைவரும் போரைக்கொண்டாடினர் என்ற நம்பிக்கைக்கு - சமூக உளவியலுக்கு மாறாகப் போரைக் கொண்டாடாத பெண்ணாக மட்டுமல்லாமல், போர் பற்றிய உள்ளம் இருந்தால் அதை விட்டொழுக்க வேண்டும் எனக் கேட்கும் பெண்ணாகவும் இருக்கிறாள் அவள். ஏனென்றால் அப்பட்டத்தைப் பெறுவதற்காகத் தன் குடும்பத்து ஆண்களை எல்லாம் போருக்கு அனுப்ப வேண்டுமா என்று அவள் யோசிக்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்புவதன் மூலம் போர்களுக்கெதிரான நிலைபாடு கொண்ட கவியாகத் திகழ்கிறார் ஒக்கூர் மாசாத்தி.

முடிவுரை

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகள் வழி தனிமனிதர்களின் - குறிப்பாகப் பெண்களின் ஆற்றும் பண்பும், ஆற்றாமையின் தவிப்புமான மனநிலைகளை வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில் சமூக உருவாக்கத்தில் சில கடுமையான நிலைப்பாடுகள் கொண்ட பெண்களும் இருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது பரத்தமையை ஒதுக்கும் பெண்களும், போர்க்களத்தை நிராகரிக்கும் மனநிலை கொண்ட பெண்களுமாக ஒக்கூர் மாசாத்தியின் கவிதை உலகம் உள்ளது.



===========
எண்

நூலும் எண்ணும்

திணை/ துறை



பாடப்

பெற்றவன்/ கூற்று

பாடல்


1.

அகம் 324,



முல்லை

வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார்



விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்

5


பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்,
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த

10


வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!

15





2.

384

முல்லை

வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார்

இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? 10
உரைமதி வாழியோ, வலவ! என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.




3.

குறுந்.:

126,



முல்லை

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது



"இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்

இவணும் வாரார்; எவணரோ?" என,

பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்

தொகு முகை இலங்கு எயிறு ஆக

நகுமே-தோழி!-நறுந் தண் காரே.




4.

139,

மருதம்





வாயில் வேண்டி புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது



மனை உறை கோழிக் குறுங் கால் பேடை,

வேலி வெருகினம் மாலை உற்றென,

புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇ

பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தா அங்கு

இன்னாது இசைக்கும் அம்பலொடு

வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.




5.

186,

முல்லை





பருவ வரவின் கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது





ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த

கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி

எயிறு என முகையும் நாடற்குத்

துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே.




6.

220,

முல்லை

பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது



பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்

இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை

இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,

வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்

குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்

வண்டு சூழ் மாலையும், வாரார்;

கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.




7.

275,

முல்லை

பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது



முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்

கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-

எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்

புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?

செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு

வல் வில் இளையர் பக்கம் போற்ற,

ஈர் மணற் காட்டாறு வரூஉம்

தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.




8.

புறம். 279



திணை: வாகை துறை: மூதின் முல்லை






கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே


================================================================

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி, தமிழ்த்துறையில் முனைவர் சங்கர வீரபத்திரன் ஒருங்கிணைப்பில் செம்மொழி நிறுவன நிதியில் 2014, பிப்ரவரி, 4 - 14 தேதிகளில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியத்தில் நடத்தை உளவியல் என்னும் பொருளில் ஆன 10 நாள் பயிலரங்கில் 04-02-2014 இல் முன் வைக்கப் பெற்ற குறிப்புகளும் கட்டுரையும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்