பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை : கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி

ஐரோப்பாவில் நடந்த நடந்த அரசியல் மற்றும் தொழில் புரட்சிகளின் பின்னணியில் இருந்த சிந்தனைப் புரட்சிகளை உலகம் அறியும். தனிநபர்களின் சிந்தனை வெளிப்பாடுகளே சமூகத்தில் செயல் வடிவம் பெறுகின்றன. காலனிய காலத்து இந்தியாவில் தோன்றிய ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளின் திரட்சியே இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் தோன்றிய தாய்மொழிப் பற்றின் வெளிப்பாடான தமிழிய இயக்கத்தின் தோற்றக்காரணிகளாக இருந்ததும் சில ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளே. தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது தீவிரமான பற்றையும் ஆன்மீகம் சார்ந்த தேசப்பற்றின் மீது ஈடுபாடும் பொருளியல் வாழ்க்கை சார்ந்து உலகப்பார்வையும் கொண்டவர்களாக இருப்பதின் பின்னணியில் சில குறிப்பிடத் தக்க ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளில் முதன்மையானவர் எம் பல்கலைக்கழகத்தின் பெயராக இருக்கும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள். அவர் எழுதிய ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்துப் பல்கலைக்கழகம் இரண்டு தொகுதிகளாக வெளியிடுகிறது. பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள் என்னும் பெயரில் வெளியாகும் முதல் தொகுதியில் அவர் எழுதிய தமிழ் படைப்புகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.

இந்நூலில் அவரது முதன்மையான படைப்பாகக் கருதப்படும் மனோன்மணீயம் நாடகத்தை எமது பல்கலைக்கழகம் முன்பே பதிப்பித்து வெளியிட்டது. அந்த வெளியீடு பழைய எழுத்து வடிவை அப்படியே படம் எடுத்துப் பதிப்பிக்கப்பெற்ற பதிப்பு. அவ்வெளியீடு இப்போது இருப்பில் இல்லை. இந்நிலையில் மனோண்மணீய நாடகம், சிவகாமி சரிதம், நூற்றொகை விளக்கம் ஆகிய மூன்றையும் கொண்ட பெருந்தொகுதியாக இந்நூல் இப்போது வெளியிடப்பெறுகிறது.

சுந்தரனார் என்னும் தமிழ் ஆளுமை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியைத் தொகுத்த பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளை தாம் எழுதிய தமிழ்தமிழ்ச் சுடர் மணிகள் என்ற நூலில்,“சென்ற நூற்றாண்டு இறுதியிலே பெரும்புகழ் பெற்று விளங்கிய தமிழ்ப் பெரியார்களுள் அறுவர் சிறப்பாக எடுத்துச் சொல்லுவதற்குரியர்.அவர்களாவார்; ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, வி.கனகசபைப் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், இராஜமய்யர் என்று பெயர் வழங்கப்பெற்ற சுப்பிரமணிய அய்யர், பெ.சுந்தரம் பிள்ளை. இவ் அறுவரும் ஆங்கிலம் கற்று மேனாட்டுக் கலைப்பண்புகளில் திளைத்துத் தம் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு ஒவ்வொரு வகையிலே தொண்டுபுரிந்தவர்கள்” என அடையாளம் காட்டுகிறார். அறுவரில் தி.வை. தாமோதரம்பிள்ளை தமிழ் நூல் பதிப்புத்துறையில் வல்லவர். வி.கனகசபைப்பிள்ளை தமிழர்களின் வரலாறு எழுதுவதற்கான ஆதாரங்களைத் திரட்டித்தந்தவர். வேதநாயகம்பிள்ளை இசைத்தமிழுக்குக் கவிதைகள் தந்ததோடு, பிரதாபமுதலியார் சரித்திரம் என்னும் நாவலை எழுதித் தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு வித்திட்டவர். அவரைப் போலவே இராஜமய்யரும் கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியதோடு வேதாந்த வித்தகராக விளங்கியவர். பூண்டி அரங்கநாத முதலியார் மரபு வழுவாப் பிரபந்தங்கள் எழுதியவர். இவர்களைவரையும்விட பெ.சுந்தரம்பிள்ளை தமிழ் நவீனகத்தின் தந்தை எனக் கருதத் தக்க அளவில் சிறந்த பங்களிப்புச் செய்தவர். தமிழிலக்கிய ஆராய்ச்சி, தமிழ் இலக்கிய சரிதம், தமிழ் நாடகம், தத்துவ நூல் புலமை எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

வாழ்க்கை வரலாறு

பேரா.சுந்தரம்பிள்ளையின் பெற்றோர் பெருமாள் பிள்ளை-மாடத்தி அம்மாள். இன்றைய கேரளத்து ஆலப்புழையில் வணிகம் செய்துவந்த குடும்பம். அவர்களின் முன்னோர்கள் தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிய மதுரை மாநகரிலிருந்து தொழில் காரணமாக அங்கு சென்றவர்கள். அந்த நகரில் 1855 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் பிறந்தார். அவரது தொடக்கநிலைப் பள்ளிப்படிப்பை அங்கிருந்த பள்ளியிலும் அடுத்தநிலைப் பள்ளிக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உயர்தர பள்ளிக்கூடத்திலும் முடித்தார். 1871 இல் மெட்ரிக்குலேசன் தேர்விலும், 1873 இல் எப்.ஏ. படிப்பிலும் 1876 இல் பி.ஏ. பட்டமும் பெற்றார். அடுத்த ஆண்டு சிவகாமி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். 1877 இல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். திருநெல்வேலியில் ஆங்கிலத் தமிழ்க் கல்விக்கு வித்திட்ட இந்துப் பள்ளியில் தொடங்கிய ஆசிரியப்பணி அவரை அப்பள்ளியின் தலைமைப்பொறுப்புக்குரியவராக அடையாளம் காட்டியது. அப்பொறுப்பை ஏற்று அப்பள்ளியை கல்லூரியாக மாற்றினர். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்று அவர் படித்த அரசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி பிரபுவின் தொடர்பு கிடைத்தது. அவரது அறிவைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய திருவிதாங்கூர் சமஸ்தானம் “பிறவகை சிரஸ்தார்” என்னும் பதவியில் அமர்த்தியது. குறைந்த காலமே அப்பணியில் இருந்துவிட்டுத் திரும்பவும் கல்வித்துறைக்கே திரும்பினார். 1885 இல் தத்துவத் துறைப்பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது சுந்தரம்பிள்ளை அந்தப் பதவிக்குப் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுத் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைவராக இருந்து கடைசிவரை திறம்பட வகித்தார். 1897 இல் அவரது 42 வது வயதில் காலமானார்.

படைப்புகளும் வெளிப்பாடும்

பெ.சுந்தரம்பிள்ளையின் முதன்மையான வெளிப்பாடாகக் கருதப்படுவது மனோண்மணீயம் என்னும் நாடகம். அந்நாடகத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும் சிவகாமியின் சரிதையும் அதற்கு எழுதப்பெற்ற உரையின் காரணமாக முதன்மையான படைப்பாகக் கருதப்படுகிறது. இவ்விரண்டையும் தாண்டி அவரது அறிவியல் பார்வையையும் அறிவையும் தத்துவத் தன்மையுடன் வெளிப்படுத்தும் நூலாக வெளிப்பட்டது நூற்றொகை விளக்கம். இம்மூன்றையும் நிதானமாக வாசித்துப் பார்க்கும் ஒருவருக்குச் சுந்தரம்பிள்ளைக்குள்ளிருந்த அறிவுப்பாதை புலப்படும். அவ்வறிவுப்பாதை என்பது இரண்டு வேறு உலகப்பார்வைகளின் சங்கமமாகத் தோன்றும். அவர் தான் கற்ற ஆங்கிலக் கல்வியின் வழியாக ஆங்கிலேய இலக்கியம், ஐரோப்பியக் கலைரசனை, ஐரோப்பிய அறிவியல் பார்வை ஆகியவற்றை உள்வாங்கியவராக இருந்தார். அதே நேரத்தில் இந்தியக் கல்வியும் இந்தியத் தத்துவங்கள் முன்வைத்த உலகப்பார்வையும் அவரிடத்தில் வேலை செய்தது. இதனால் இவ்விரண்டின் இணைந்த வெளிப்பாடாகவே அவர் தனது எழுத்துகளில் வெளிப்பட்டார். ஹார்வி போன்ற ஆங்கிலத் தத்துவப் பேராசிரியரிடம் உரையாடியதோடு இந்தியத் தத்துவத்தை அறிய கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரசுவாமிகளோடு உரையாடினார். அவரைத் தனது குருவாகவே கொண்டிருந்தார்.

கவிதையை வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டு மனோன்மணீயம் நாடகம், நூற்றொகை விளக்கம், சிவகாமியின் சரிதை என்ற மூன்று படைப்புகளைத் தந்த சுந்தரம்பிள்ளைக் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவராய்ச்சி என்றொரு நீண்ட கட்டுரையையும் பத்துப்பாட்டு குறித்துத் திறனாய்வையும் ஆங்கிலத்தில் எழுதித்தந்துள்ளார். விவேகசிந்தாமணி என்ற இதழோடு அவருக்குத் தொடர்பு இருந்துள்ளது. கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே சமயத்தொண்டும் ஆற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டு தமிழ், சரித்திரம், தத்துவ சாத்திரம் முதலான பாடங்களை மதிப்பிடும் வல்லுநராக விளங்கினார். தென்னிந்திய வரலாறு தொடர்பான ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியதற்காகவே அவருக்கு ராவ் பகதூர் என்னும் பட்டம் தரப்பட்டது.

பேரா.சுந்தரம்பிள்ளையவர்கள் தம் காலத்தில் வாழ்ந்த அறிஞர் குழாத்தோடு அறிவுத்தொடர்பில் இருந்தார். 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிவை வளப்படுத்திய இயற்றமித் தமிழாசிரியர் நாராயணசாமிப்பிள்ளை, திருமயிலை மகாவித்துவான் சண்முகம்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், மறைமலையடிகள் என்றழைக்கப்பெற்ற வேதாசலம், பதிப்புத்துறையில் ஈடுபட்ட ராவ்பகதூர் சி.வை. தாமோதரம், முகவை இராமானுஜக் கவிராயர், சரவணப்பெருமாளையர் போன்றோர் இவரது அறிவுலக நண்பர்கள். இவர்கள் அல்லது சமயத்துறவியான விவேகானந்தரோடு இந்தியச்சமயங்களும் ஐரோப்பியச் சமயங்களும் கொள்ளும் உறவும் முரணும் குறித்து உரையாடியுள்ளார். தமிழ்மொழி மற்றும் தமிழ்ச் சமய வாழ்க்கையின் தனித்தன்மைகள் குறித்தும் அவரோடு விவாதித்துள்ளார். பலதுறை அறிவைத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருந்த சென்னைக் கிறித்தவக்கல்லூரியோடு உறவுகொண்டிருந்த பிள்ளையவர்கள் அக்கல்லூரியின் ஆண்டுமலர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மனோண்மணீய நாடகம்

மனோன்மணீய நாடகம் ஒருவிதத்தில் தமிழில் தோன்றிய புதுவகை நாடகத்தின் தொடக்கம் எனலாம். அதுவரை தமிழ்நாட்டு மேடைகளில் நிகழ்த்தப்பெற்ற நாடகங்கள் பெரும்பாலும் எடுத்துரைப்புப்பாணி நாடகங்களே. நிகழ்த்தவிருக்கும் கதையையும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டுப் பின்னர் ஏதாவதொரு கதாப்பாத்திரமாக மாறிக்கொள்ளும் கட்டியங்காரன் அல்லது விதூஷகம் பாத்திரம் வழியாகவே நாடக அரங்கேற்றங்கள் நிகழ்ந்தன. இந்நிகழ்த்துமுறை சம்ஸ்க்ருதச் செவ்வியல் நாடகாசிரியர்களான காளிதாஸன், பாஸன் போன்றவர்களின் பிரதிகளிலும் உண்டு. நாட்டார் நிகழ்த்துக்கலைகளான தெருக்கூத்து, யட்சகானம்,கதகளி போன்றவற்றிலும் உண்டு. இம்முறையிலிருந்து முற்றிலும் விலகியது ஐரோப்பிய நாடகக்கட்டமைப்பு. பாத்திரங்களின் வருகை, நேரடியாக இன்னொரு பாத்திரத்தோடு உரையாடுதல் வழித் தங்களை வளர்த்தெடுத்தல் என்னும் கட்டமைப்பு கொண்ட வடிவம் அது. இவ்வடிவத்தின் மூலத்தை கிரேக்க, லத்தீன் மொழிச் செவ்வியல் வடிவங்களுக்கு இலக்கணம் எழுதிய அரிஸ்டாடில் உருவாக்கித் தந்துள்ளார். அவ்வடிவம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிரை முன்வைத்துக் காட்சிகளால் நகர்த்திச் செல்லும் தன்மை கொண்டது. இவ்வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார் என்றே சொல்லலாம்.

மனோன்மணீயம் நாடகம் வடிவரீதியாக மட்டுமல்லாமல் உள்ளடக்க நிலையிலும் ஐரோப்பியத் தாக்கம் கொண்ட நாடகம். சேக்ஸ்பியரின் நாடகக் கட்டமைப்புகளையும் மொழிப்பயன்பாட்டையும் உள்வாங்கிக் கொண்டு அவைபோன்றதொரு நாடகத்தை எழுதவேண்டுமென நினைத்த பிள்ளையவர்கள் லார்டன் லிட்டன் என்பவர் எழுதிய ‘மறைவழி’ (The Secret Way) என்னும் படைப்பை மூலநூலாகக் கொண்டு மனோன்மணீயம் என்னும் சார்புநூலை உருவாக்கினார். மறைவழி என்னும் நூலுக்கு பாம்ப்பி நகரத்தின் இறுதிக்காலம் (The Last Days of Pompelii) என்றொரு பெயரும் உண்டு. 4506 பாடல்களில் வரலாற்றையும் புனைவையும் கலந்து எழுதப்பெற்ற மனோன்மணீயம் முன்வைத்த தத்துவப்பார்வை மற்றும் வரலாற்றுப் புனைவால் பின்னர் தோன்றிய நூற்றுக்கணக்கான கவிதை நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. மனோன்மணீயம் 1891 -இல் வெளியிடப்பெற்றது. இந்நாடகத்தின் உரையாடல்கள் கவிதையை வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டவை. அதனால் அவற்றை நாடக உரையாடல் என்ற நிலையிலும் ரசிக்கமுடியும். கவிதை நுட்பங்கள் கொண்டும் ரசிக்கமுடியும். தமிழின் கவிதைக் கலைச்சொற்களான உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றோடு உருவகத்தை அதிகமாகப் பயன்படுத்திய கவிதை உரையாடல்கள் கொண்டது மனோன்மணீயம். ஆங்கிலத்தில் அல்லிகரி (Allegory) என்னும் கலைச்சொல்லுக்கிணையான சொல்லே உருவகம். மனோன்மணீயம் நாடகத்தில் இடம்பெற்றுள்ள உருவகங்களைத் தொகுத்து உருவகமாலையே உருவாக்கலாம் எனத் திறனாய்வாளர்கள் பாராட்டியுள்ளனர்.

நாடகம் மற்றும் காப்பியம் என்னும் இருவகைகளையும் இணைத்த தன்மையை மனோன்மணீயத்தில் காணலாம். ஐரோப்பிய நாடகக் கட்டமைப்புத் தன்மைகளான உரையாடல், காட்சி, அங்கம் என்ற கூறுகளையும் உருவமாகக் கொண்டுள்ளது. ஐந்தங்கங்களைக் கொண்ட முழுமையான நாடகம் மனோன்மணீயம். ஒவ்வொரு அங்கத்தின் இறுதியிலும் கட்டளைக் கலித்துறைச் செய்யுளைக் கொண்டுள்ளது. அச்செய்யுள் அந்தந்த அங்கத்தின் நிகழ்ச்சியையும், அந்நிகழ்ச்சி என்ன என்ற தத்துவ விளக்கத்தையும் முன்வைக்கிறது. அந்தக் கட்டளைக் கலித்துறைச் செய்யுளை அந்தாதித் தொடையில் அமைத்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒருபொருள் மேல் ஐந்தடுக்கி வந்ததையும் வாசிப்போர் உணரமுடியும். அந்நாடகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் தலைமைப் பாத்திரத்தைவிடவும் துணைமைப்பாத்திரமான குடிலனே கவனம் பாத்திரமாக அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம். எந்தவொரு நாடகத்திலும் நாடகத்தன்மையை உருவாக்குவது முரண்கூறுகளே. முரண்கூறு என்பது பொதுவாகப் பாத்திரமுரண்களாக அமையும். ஆனால் இங்கே பாத்திரமுரணுக்குப் பதிலாக கருத்து முரணை முன்வைக்கிறார் பிள்ளையவர்கள். ‘உத்தியே சகல சக்தியும்’ என்ற எண்ணத்தில் தோய்ந்த குடிலன் ஒருபக்கம் என்றால், “அருளே ஆட்டுவிக்கும் சக்தி” என்பதில் நம்பிக்கை கொண்ட சுந்தரமுனிவர் மறுபக்கம் நிற்கிறார். இவ்வாறாகச் சிந்தனை மோதலே நாடக முரணை உருவாக்கியுள்ளது. இந்நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரமும் இன்னது நடக்கவேண்டுமெனத் திட்டமிட்டுச் செயல்படுவதைக் காணமுடியும். ஆனால் எவரது திட்டமும் நிறைவேறாமல் வேறொரு முடிவு வந்து சேரும். அதனை அப்பாத்திரங்கள் ஏற்றுக்கொண்டு அடுத்த நிலை நோக்கி நகர்வர். வாழ்க்கை பற்றிய இப்பார்வை ஐரோப்பியச் சிந்தனைகளை உள்வாங்கிய பார்வையாகும்.

சிவகாமியின் சரிதை

மனோன்மணீயம் நாடகத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ள சிவகாமியின் சரிதை முன்வைக்கும் தத்துவ விசாரணைக்காகத் தனியாக உரையெழுதிப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. 50 குறள் வெண்செந்துறைப் பாக்களில் பேசப்படும் தத்துவ விளக்கங்கள் தமிழ்மொழிக்குத் தத்துவ அடையாளம் உண்டாக்கும் நோக்கம் கொண்டவை. இச்சிறுநூல் முதலில் தனியாக எழுதப்பெற்றதாகவும் பின்னர் மனோன்மணியம் நாடகத்தின் பகுதியாக இணைக்கப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

நூற்றொகை விளக்கம்

பேரா.ஹார்வி போன்றவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் மேற்கத்திய விஞ்ஞான அறிவும், நமது நாட்டுத் தத்துவ ஞானத்தில் நல்ல பயிற்சியும் வேண்டுமென்பதை உணர்ந்தவர் பெ.சுந்தரம் பிள்ளை. அறிவு வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் திருவிதாங்கூர் அரசாங்கத்தினரைப் பொதுப்பிரசங்க ஸ்தாபனம் ஒன்றை நிறுவச் செய்து அதில் தாமே அடிக்கடி சாஸ்திரப்பொருள்கள் பற்றி உரைகள் நிகழ்த்தினார். தத்துவ சாஸ்திரத்தில் விஞ்ஞான சாஸ்திரப்பாகுபாடு (Classification of Sciences)என்ற பொருள்பற்றி அரிய நூலொன்றை அதன் மூலம் உருவாக்கினார். அந்நூலே நூற்றொகை விளக்கம் என்னும் சிறிய நூலாக வெளிவந்தது.

********

இப்போது பல்கலைக்கழக வெளியீடாக வரும் பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள் என்னும் இந்நூல் இம்மூன்றையும் உள்ளடக்கிய பெருந்தொகுப்பு. இம்மூன்றும் உரைகளோடு தொகுக்கப்பெற்றுள்ளன. இவையல்லாமல் சில கட்டுரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. அவர் ஆங்கிலத்தில் எழுதியவை இன்னொரு தொகுப்பாக வெளிவரும். எம் பல்கலைக்கழகத்தின் பெயராக நிற்கும் பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடும் பணியை எம்துறையிடம் ஒப்படைத்து முடித்துச் சாதிக்கக் காரணமாக இருந்தவர் எமது துணைவேந்தர் முனைவர் கி.பாஸ்கரன் அவர்கள். அவர் அளித்த ஊக்கத்திற்கும் தூண்டுகோலுக்கும் துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்