கையறு நிலையின் கணங்கள்

 இந்த ஆண்டு(2021) இல் வெளிவந்த   கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜாவின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரியின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை  வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.

கவிதை வாசித்தலின் படிகள்

நாடிலி என்னும் ஞானசூரியின் தலைப்பு நேரடியாக நாடற்று இன்னொரு புலத்தில் அகதி வாழ்க்கைக்குள் இருக்கும் ஒருவரின்/ மனிதர்களின் இருப்பும் தவிப்பும் வெளிப்பாடுகளும் என்பதாக அர்த்தம் தரும் தலைப்பு. ஆனால் எழுதிக்கடக்கின்ற தூரம் என்பதைக் கொண்டு இதைத் தான் பேசப்போகிறது என்று நேரடியாகச் சொல்லிவிட முடியாது. மனிதர்கள் அகம் சார்ந்தும், புறம் சார்ந்தும் எழுதிக் கடக்க என்னென்னவோ இருக்கின்றன. அவற்றில் ஒன்றையோ சிலவற்றையோ எழுதிக்கடக்கும் முயற்சியை ரூபன் சிவராஜா முயன்றிருக்கிறார் என்பதைத் தலைப்பு சொல்கிறது.  தலைப்பு தரும் இந்தப் புரிதலோடு, கவிதைகளை எழுதிய கவிகளின் பின்னணிகளைக் குறித்த அறிதல் கவிதைகள் முன்வைக்கும் பாடுகளையும் உணர்வுகளையும் கூடுதலாகப் புரிந்துகொள்ள உதவும்.

ரூபன் சிவராஜா, நார்வே நாட்டு ஆஸ்லோ நகரில் வசிக்கும் கவி. கவி மட்டுமல்ல; கலை இலக்கியம், தாண்டி அரசியல் கட்டுரைகளும் எழுதும் ஆளுமையாக இணையப் பக்கங்களின் வழி அறியமுடிகின்றது.  சுகன்யா ஞானசூரியோ,  இப்போது தமிழ்நாட்டுப் புதுக்கோட்டை மாவட்ட ஈழ அகதிகள் முகாமில் வசிப்பவர்;    யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் பிறந்த அவர், 1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்து, 1996 இல் வன்னியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர் என்கிறது தொகுப்பில் உள்ள அவரைப் பற்றிய குறிப்பு.  இருவரும் ஈழத் தமிழர்கள்; புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்ற அறிதலின் வழி அவர்கள் கவிதைகள் உணர்த்த விரும்பும் சாராம்சமான உணர்வை இழப்பின் நினைவுகள் என்ற பொதுப் பொருண்மைக்குள் அடக்கிவிட முடிகிறது. ஆனால் இழப்பை இருவரும் ஒன்றுபோல் பார்க்கவில்லை என்பதைக் கவிதைகளின் வரிகளும், அதன் வழி உருவாக்கப்படும் உணர்வுகளும், உணர்வுகளை உருவாக்கும் வெளிகளும் முன்வைக்கின்றன.

சொந்த நாட்டைவிட்டு அகதி முகாம் என்ற வெளியில் இருக்கும் தன்னிலையின் உணர்வுகளும் இருப்பும் என்பதை சுகன்யா ஞான சூரியின் கவிதைகள் விரிவாகக் கவனப்படுத்தியுள்ளன.  அகதிகள் முகாமில் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கவிதையை இங்கே வாசிக்கலாம்:

கருக்கலில்

களிப்பிலிருந்த மனம்

சிறு கருமை கண்டு

பதறத் துவங்கியது

தலையைப் பற்றியபடி

கத்திக் கொண்டிருக்கிறேன்


அகதிக் கொட்டில்கள்

உருகி வழிவதாய்

அந்தியில் விளையாட மறந்து

அடிவானம் பார்க்கும்

அகதிச் சிறுமியிடத்தில்

அலைக்கழைப்பின் துயரக்கோடொன்றைக் காணும்

கணமொன்றில்

மூப்பின் பெருவெளியில் கரைகிறாள்


அவலத்தின் பெருங்கதையாடல்களை

மறைத்திடும் முகமாக

வெளிறிய புன்சிரிப்பொன்றை

உதிர்த்துக் கடக்கிறாள்

பருவத்தின் பாசிகளில் வழுவாதிருக்க

கரம் நீட்டுமாறு

வல்லவர்களை வேண்டுகிறேன்

ஊஞ்சலாடும் சிறுவர்களின் மகிழ்வான

பொன்மாலைப்பொழுதுக்காக.


அகதி முகாமின் துயரச்சித்திரத்தின் பல நிலைகளையும் வடிவங்களையும் சொல்லும் விதமாகத்   தலைப்பிலேயே முன்வைக்கின்றன பல கவிதைகள். அவல முகாம், அகதிகள் வீடடைதல், அகதி வாழ்வு, ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?  நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம், அகதி முகாமில் தீபாவளி, அகதிப்பிணம், அகதிகள் முகாமில், கடல்வழி வந்த அகதி நதி பார்த்தல், அகதி வாழ்வு, குடிகார அகதியின் சலம்பல் என விதம் விதமாக முன்வைக்கின்றன.  அஞ்சலி பற்றிய அகதியின் பாடல் என்ற கவிதை அகதி முகாம் வாழ்வின் வேறொரு சித்திரத்தை அதே துயரத்தின் – இழப்பின் விளைவாக விவரிக்கின்றது:  

            நினைவு தப்பும் தந்தையின் வார்த்தைகளில் 

            அலைந்துழலும்

           விரக்தியின் வெம்மை

கையறு நிலையில் 

கரையொதுக்கப்பட்டு

காலத்திற்கும் மாறா வடுவொன்றை

சுமந்தலைபவர்கள்

நாம்.

 

இரசாயனத்தில் தேக்க விதிகளில்

புதிய சேர்மானமாய்

வகைதொகையற்று

அழிக்கப்பட்டவர்களது

குருதியும் கண்ணீரும்

மூலக்கூற்றின் அலகில்

உப்பு மிகுந்திருக்கிறது

எம் உடலங்கள்

கடலின் கரையில் கூராய்வு செய்யப்பட்டு

ஆகிறது ஒரு தசாப்தம்

கரையொதுங்கும் அலையின்மீது

மஞ்சள் மலர்களைத் தூவி

அஞ்சலி செய்தோம்

அடக்கமாகினோம்

தாயக முகாமிற்குள்

இதுவரையிலான எனது வாசிப்பில் இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் பாடுகளைக் கட்டுரைகளாகவே வாசித்திருக்கிறேன். தொ.பத்திநாதன் போன்றவர்களின் அனுபவப்பகிர்வுகளும் வேறு சிலரின் சிறுகதைப் புனைகதைகளும் வாசிக்கக்கிடைத்துள்ளன. ஆனால் உணர்வுகளின் திரட்சியான கவிதை வடிவில் – அகதி முகாம்களில் படும் வேதனைகளை ஞானசூரியின் அளவுக்கு முன்வைத்த கவிதைகளை வாசித்ததில்லை. இந்தப்பாடுகளுக்கான காரணங்களையோ, கோரிக்கைகளை முன்வைத்து விடுதலையையோ கோராமல், இருப்பை மட்டுமே தீவிரமாக முன்வைக்கிறார். அதன் மூலம் ஒட்டுமொத்தமான அகதி வாழ்வின் பாடுகளாக மாற்ற முனைந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியதாக இருக்கிறது.   

சொந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் இருக்கும் தனது வாழ்க்கையை எழுதிக் கடக்கக்கூடிய வாழ்க்கையாக முன்வைக்கும் ரூபன் சிவராஜாவின் கவிதைகள் அகதி வாழ்விலிருந்து வேறுபட்டது. குறிப்பாகப் புலப்பெயர்வில் உழைக்கத் தயாராக இருக்கும் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாகப்   பொருளாதாரத் தேவைகள் நிறைவேறுகின்றன. அத்தோடு சமூக இருப்பில் அதிகமும் வேறுபாடுகள் காட்டாத சட்டங்களும், வாழிடங்களையும் உரிமைகளையும் தரும் அரசுகளும் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்தலில் பலநேரங்களில் தானொரு நாடிலி என்ற நினைவு தொலைந்துவிட வாய்ப்புண்டு. ‘சொந்த நாட்டைவிட்டு வந்துவிட்டோம்’ என்ற மனவோட்டம் ஆழ்மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒன்றாக மட்டுமே இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அதன் காரணமாகவே புலம்பெயர் வாழ்க்கையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் உண்டாகாமல் போய்விடும் சாத்தியங்கள் அதிகமாகின்றன. அதே நேரம் சொந்த நாட்டில் தனது மொழியைப் பேசிய – பண்பாட்டு நடவடிக்கைகளில் தங்களோடு உறவுகொண்ட மனிதர்கள் இந்த வசதிகளையெல்லாம் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்ற உறுத்தல்களும் எழும்பிக் கொண்டே இருக்கும். அப்படி எழும்பும்போது நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் எழும். அந்த எண்ணங்கள் இழந்ததைத் திருப்பிக் கொண்டுவரும் அலைந்துழல்வு வாழ்வாக மாறிக் குற்றவுணர்வுக்குள் தள்ளும். அந்தக் குற்றவுணர்வை எப்படிக் கடப்பது என்ற நிலை சாதாரண மனிதர்களுக்கு உளச்சிக்கலை உருவாக்கலாம். ஆனால் எழுதுவதைக் கருவியாகக் கொண்ட எழுத்தாளர்கள், எழுத்தைப் பற்றிக்கொண்டு கடந்துவிட முயல்வார்கள். அதிலும் உணர்ச்சியைத் திரட்டிக் கொட்டிவிடும் வாய்ப்பளிக்கும் கவிதை வடிவம் எழுதிக் கடக்க ஏற்ற ஒரு வடிவம். அதனை உணர்ந்தவராக ரூபன் சிவராஜா மொத்தத் தொகுதியிலும் வெளிப்பட்டுள்ளார்.

இந்த வெளிப்பாடுகளைச் சொல்லும் பல கவிதைகள் தொகுப்பில் உள்ளன. நேரடியாக இல்லாமல் நிசப்தம், மௌனம், கவிதை, சொற்கள்,  ஒளி, இருள், போன்ற படிமங்கள் பல கவிதைகளுக்குள் அலைகின்றன.   தெருக்களும்… இடங்களும்…. பொருட்களும்.. எனத்தலைப்பிட்டு எழுதப் பெற்ற கவிதை உருவாக்கும் மனவோட்டம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் மனவோட்டம். அந்தக் கவிதையின் வரிகளை வாசிக்கலாம்:

நடந்து திரிந்த தெருக்களிலும்

காத்திருந்த இடங்களிலும்

பொருட்களின் இருப்பிலும்

 நிரந்தரமாய் தங்கியிருப்பவை

நினைவுகள் மட்டுமே

காற்றோடு போனவையென்றிருந்த 

சொற்களைக் கண்டெடுத்து

உயிர்ப்பித்துத்தரும் 

 வல்லமையோடிருக்கின்றன

தெருக்களும்

இடங்களும் 

பொருட்களும்

 அவை  

காலத்தை மீட்டெடுத்துக்

கைகளில் சொருகியும் விடுகின்றன

தொடரும் இந்த மனவோட்டச் சிக்கலைக் கடக்கப்பயன்படக் கூடியன சொற்களே. சொற்களின் சாத்தியங்கள் குறித்து ரூபன் சிவராஜா  உருவாக்கியுள்ள குறியீடுகளும் நினைவுகளும் நிதானமாக வாசிக்க வேண்டியன. சொற்களின் வேண்டுதல் என்ற இந்தக் கவிதையை மட்டும் வாசிக்கலாம்:

பெருங்கனவின் மீதியைச் 

சுமந்து திரிகிறது

பறவை

கனவின் மீதியையேனும்

கனிவின் மிகுதியால்

ஏந்திக்கொள்

எனத் தவம் இயற்றியபடி

பேரன்பை அடைகாக்கும்

பறவை

வேண்டுதல் செய்கின்றது

உன்னிடம். 

பறவையாகித்திரியும் மனநிலையைச் சொல்லும் இந்தக் கவிதையின் மேற்பரப்புக்கும் ஆழத்திற்குமான தவிப்பைக் கவிதைக்குள் இடம்பெறும் தவம், கனவு போன்ற சொற்கள் இன்னும் கூர்மையாக்குகின்றன. புலம்பெயர் வாழ்வில் அலையலையாக வந்துபோகும் போர்க்கால நினைவுகளையும் அவர் எழுதவே செய்துள்ளார்.

               போதாமைகளின்/பாரத்தில்

               தாழ்ந்து கிடக்கிறது

                ஜனநாயகப்படகு

பொய்த்துவிட்ட பருவமழை

போலல்லாமல்

காலம் தப்பாது

வந்துபோகின்றன

தேர்தல் திருவிழாக்கள்

வாக்குறுதி

காற்றில் பறக்க

வார்த்தை ஜாலங்களால்

வனையப்பட்ட கோசங்களும்

முழக்கப்பாடல்களும் 

கோலோச்ச

வீராவேசம் கொண்டுவிடுகின்றன

பிரசார மேடைகள்!


நிராகரிக்கப்பட்ட கனவுகளால் 

நிரப்பப்பட்ட

காலமற்ற பொழுதுகளில்

உத்தரித்துக் கிடக்கிறது 

போர்தின்ற வாழ்வின் மீதி!

பொதுவாகப் புலம்பெயர்ந்தோரின் எழுத்துகள் அதிகமு நினைவின் ஏக்கங்களாக வெளிப்பட்டு வாசிப்பவர்களின் கவனத்தைக் கோரக்கூடியன. ஆனால் இவரது நினைவுகள் இழப்பின் ஏக்கங்களாக இல்லாமல், நடப்புகளின் மீதான விமரிசனங்களாக இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த விமர்சனம் பெரும்பான்மையான புலம்பெயர்க் கவிதைகளின் போக்கிலிருந்து விலகியது. விமரிசனப் பார்வையிலிருந்து தெளிவை நோக்கி நகரும் வாய்ப்புகளைக் கொண்ட து. அப்படியான பார்வையை  முன்வைப்பதின் மூலம் சிவராஜாவின் இந்தத்தொகுப்பு புலம்பெயர் கவிதைத் தொகுப்புகளில் கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பாக மாறியிருக்கிறது.

இவ்விரு தொகுப்பையும் வாசித்த நிலையில் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளான சங்கப்பாடல்களில் இருக்கும் ஆகச்சிறந்த கையறுக் கவிதைகள் நினைவில் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. முதலில் நினைவுக்கு வரும் ஆகச்சிறந்த கையறு நிலைப்பாடல் பாரிமகளிரின் 

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!    

முழுமையும் இழப்பின் துயரத்தைச் சொல்லும் இக்கையறு நிலைப்பாடலுக்கிணையானதாகச் சொல்லத்தக்கது  அதியமான் நெடுமானஞ்சியை ஔவை பாடிய பாடல். ஆனால் அதில் இழைப்பையும் தாண்டிய கணங்களும் புரிதலும் வெளிப்படும் இடங்களும் உள்ளன.  

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

எனத்தொடங்கி, அதியனின் இன்மையைச் சொல்லும்,

ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை

என வேதனையை வெளிப்படுத்துவார். தமிழ்ச் செவ்வியல் கவிதைகளின் கையறுநிலைப் பாடல்கள் தனிநபர்களின் இன்மையால் ஏற்பட்ட இழைப்பைப் பேசுகின்றன.ஆனால் ஈழத்தமிழர்களின் துயரத்தைச் சொல்லும் கையறு நிலைப்பாடல்கள், தனிநபர்களின் துயரத்தைத் தாண்டிச் சமூகத்தின் – இனத்தின் பெருந்துயரத்தையும் வலியையும் பேசுகின்றன. அப்பொதுப்பரப்பில் ரூபன் சிவராஜா புலம்பெயர் வாழ்வை எழுதிக் கடக்கப் பார்க்கிறார்; சுகன்யா ஞானசூரி கடக்கமுடியாத அவலத்தை முன்வைக்கிறார்.

 ---------------------------------------------------------------- 

சுகன்யா ஞானசூரி, நாடிலி,  கடற்காகம் வெளியீடு.மதுரை,2021

ரூபன் சிவராஜா, எழுதிக்கடக்கின்ற தூரம், டிஸ்கவரி புக்பேலஸ்,சென்னை, 2021

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்