போர்க்காலச் சுமைகள்



பிரான்சிலிருந்து பதிவேற்றப்படும் நடு இணைய இதழின் 40 வது இதழில்( பங்குனி 2021) கறுப்பு சுமதி எழுதிய அந்தக் கதையைப் படித்தவுடன் ஈழவாணி தொகுத்த காப்பு தொகுதியில் இடம்பெற்ற ஒரு கதை நினைவில் வந்தது. இலங்கைப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகள் எனத் துணைத்தலைப்பிட்ட அந்தத் தொகை நூலில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தொடங்கி, ஜெயசுதா பாபியன் வரையிலான 41 தமிழ்ப் பெண் படைப்பாளிகளின் கதைகளும் ஐந்து சிங்களப் பெண் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புக் கதைகளும் உண்டு. தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதற்காக வாசித்தபோது குறிப்பிட்ட அந்தக் கதையின் காட்சிகளும் உரையாடல்களும் இயலாமையின் தவிப்பும் மனதில் நின்றுவிட்டன. இந்தக் காட்சிகளையொத்த நிகழ்வுகளின் விவரிப்பும் உருவாக்கப்பட்ட உணர்வும் கறுப்பு சுமதியின் கதையிலும் இடம் பெற்றிருந்ததால் அந்த நினைவு தோன்றியது என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு புனைவெழுத்தைப் படிக்கும்போது, அதற்கு முன்பு அதே இலக்கியவடிவத்தில் வாசித்த இன்னொன்று நினைவில் வந்தால், இரண்டு புனைவையும் ஒப்பிட்டுப்பார்க்கும்படி மனம் தூண்டும். ஒப்பிட்டுப் பேசுவது இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்திறனாய்வில் முக்கியமான ஒன்று. வெவ்வேறு மொழி இலக்கியங்களைத் தாண்டி, ஒரே மொழி இலக்கியத்திற்குள் முன்னர் தோன்றிய ஒரு இலக்கியப்பனுவலோ, ஆளுமையோ பின்னர் வரும் எழுத்தாளர்களிடம் தாக்கம் உண்டாக்கக் கூடும் என்ற அடிப்படையில் ஒரு மொழி இலக்கியங்களும் ஒப்பிடப்படுகின்றன.ஒப்பிடும்போது ஒன்றுபடும் கூறுகள் முதலில் கவனத்திற்கு வரும். பின்னர் வேறுபாடுகளும் தனித்துவங்களும் முன்னுக்கு வரும். அதன் தொடர்ச்சியாக, அந்த இரண்டில் எது சிறந்த புனைவு? என்ற கேள்விக்கு இட்டுச் சென்று பதில் சொல்லத்தூண்டும். இரண்டும் கடத்த நினைத்த உணர்வுகள் அல்லது கருத்தியல்கள் சார்ந்து, கவனித்துப் பேசவேண்டிய புனைவுகள் என்பதாக மாறிவிடும் எது சிறந்தது என்ற கேள்வி காணாமல் போய்விடும். அப்படி மாறும் பின்னணியில் எழுதுபவர்கள் தெரிவு செய்யும் காலம் மற்றும் இடப்பின்னணிகள் முதன்மையான காரணங்களாக அமைந்துவிடும்.

தான் எழுதும் புனைகதைக்குத் தலைப்பிடும் எழுத்தாளர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என யோசிப்பதும், அதனைக் கதையோடு பொருத்திப் பார்ப்பதும் வாசிப்பைத் தாண்டிய விமரிசன மனநிலைக்குக் கொண்டுபோகும். இந்தக் கட்டுரையில் விவாதிக்கவுள்ள கறுப்பு சுமதி எழுதியுள்ள கதையின் தலைப்பு:அண்ணி. புலம்பெயர் வெளியில் கனடாவை பின்னணியாகக்கொண்ட கதை. இன்னொன்றின் தலைப்பு:நீங்க போங்கோ ராசா. ஈழத்தின் போர்க்களத்தை – போர்க்காலத்தைப் பின்னணியாகக் கொண்ட அக்கதையை எழுதியவர் சர்மிளா வினோதினி. கதையைத் தலைப்போடு பொருந்துவதாகக் காட்ட வேண்டிய பொறுப்பு எழுதியவருக்கு உண்டு. அதே நேரம் கதைக்கு பாத்திரத்தின் பெயரையோ, உறவுப்பெயர்களில் ஒன்றையோ தலைப்பாக வைக்கும்போது சிக்கல் இல்லாத தலைப்பைக் கொண்டதாகக் கதை தோன்றும். ஆனால் இவ்விரு கதையில் இரண்டும் எதிர்மாறான தன்மையைக் கொண்டிருக்கின்றன.

இரக்கவுணர்வும் குற்றவுணர்வும்

ஈழத்தனி நாட்டுப் போர்க்காலத்தில் புலத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள் பெரும்பாலும் போர்க்களக்காட்சிகளையும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சிதைவுகளையும் உயிரிழப்புகளையும், இடப் பெயர்வுகளையும் விரிவாக எழுதுவதற்கான உரிப்பொருளாகத் தெரிவு செய்கின்றனர். இதன் வழியாக உருவாவது துயரக்காட்சிகளின் சித்திரிப்புகள். உருவாக்கப்படும் உணர்வு பாத்திரங்கள் மீதான இரக்கம். வாசிப்பவர்களுக்கு கட த்தப்படுவது இயலாமை. இந்தத்தொடர்ச்சியைத் தரும் கதையாகவே சர்மிளா வினோதினியின் கதை விரிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும் தங்கள் வாழிடத்தின் மீது ஆயுதங்களின் சிதறல்கள் விழக்கூடும். அதனால் உடல் குறைகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படக்கூடும் என்ற நிலையில் குறைவான பொருட்களுடன் இடம் பெயரும் ஒரு தாத்தாவும் இரண்டு பேரன்களும் தான் கதையின் பாத்திரங்கள். அவர்கள் செல்லமாய் வளர்த்த நாயும் அவர்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து செல்கிறது. போகும் வழியில் பங்கருக்குள் குதிக்க முடியாத தாத்தாவுக்கு ஏற்பட்ட காயம், அதன் தொடர்ச்சியாக மரணம். அவரைப்போல மரணித்துக் கிடக்கும் உடல்களை நாய்களும் நரிகளும் தின்னும் அவலம். அவரது உயிரைக் காப்பாற்ற முடியாத பேரனின் பாசத்தின் வெளிப்பாடாக அவரது உடலைப் புதைத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வதில் கதை தொடர்கிறது.

திசை தெரியாப் பயணத்தில் பேரன்களின் வேகத்தோடு இணையமுடியாத தாத்தா பேரன்களைக் காப்பாற்றிவிட நினைக்கிறார். நான் பின்னால் வருகிறேன் போய்க்கொண்டே இருங்கள் என்று சொல்லியும் பார்க்கிறார். ஆனால் அவரை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. தாத்தாவின் மரணத்திற்குப் பின் குழிதோண்டிப் புதைத்துவிட்டுக் கிளம்பும் பேரன்களை வழியனுப்புவதுப்போலக் குழிக்குள்ளிருந்து ஒற்றைக்கை மட்டும் உயர்ந்து “நீங்க போங்க ராசா” என்று சொல்வதுபோலத் தோன்றுகிறது என்று கதை முடிகிறது.

இந்தக் கதை உண்டாக்கும் இரக்க உணர்வை அதிகமாக்குவது தாத்தாவின் மரணம் மட்டுமல்ல. அவரது இயலாமையைப் பேசும்போது நினைவூட்டப்படும் இன்னொரு மரணமே. கூட்டத்தோடு கூட்டமாகத் தன் மகளோடும் மூத்த பேரனோடும் ஒரு பாலத்தைக் கடக்கும்போது பிறந்தவனே சின்னவன். சின்னவனைப் பெற்றுக் கொடுத்துவிட்டுத் தன் மகள் இறந்த பின் இரண்டு பேரன்களையும் காப்பாற்றப் போராடும் தாத்தா மீது கொண்ட பேரன்களின் பாசப்பிணைப்புக்காட்சி அது. போர்க்காலத்தில் கூட்டங்கூட்டமாக இடம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் வகைமாதிரியொன்றைத் தெரிவுசெய்து போர்க்களம் உறவுகளை எப்படிப் பிரித்துப்போட்டது என்று பதிவுசெய்து வைத்துள்ளார் கதாசிரியர். இறக்கிவைக்க முடியாமல் இறக்கிவிட்டுப் போன தாத்தாவின் உடல் என்ற பெரும்பாரத்தைக் கதையாக்கியதின் மூலம் நடந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பைப் புனைவாக்கும்போது உருவாகும் உச்சநிலைத் துயரக்காட்சியாக கதை எப்போதும் வாசிக்கப்படும்.

புலம்பெயர் தேசத்தில் – கனடாவில் நடப்பதாக எழுதப்பெற்றுள்ள சுமதியின் அண்ணி கதையின் சொல்முறையும் பாத்திரங்களும் வேறானவை. ஆனால் இக்கதையோடு ஒன்றுபடும் இடமாக இருப்பது கைவிடப்படும் உறவுகள் என்ற கூறு மட்டுமே. புலப்பெயர்வில் தன் கணவனை இழந்தபின் அவனது தங்கை அனுவின் ஆதரவில் இருப்பவள் அண்ணி கவிதா. நாட்டைவிட்டுக் கிளம்புவது என்ற முடிவின்போது அவள் எடுத்த முடிவும், அதற்குத் தூண்டிய மனநிலையும், அவளை ஒரு கொலையைச் செய்துவிடும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. அதனைக் கொலை என்று சொல்வதைவிடக் கருணையினால் செய்த செயல் என்றே சொல்லவேண்டும்.

நாட்டைவிட்டுக் கிளம்புவது என முடிவெடுத்துத் தயாராகும் தனது கணவனே, ‘மனநிலை பிசகிய’ தம்பியை தனியே விட்டுவிட்டுக் கிளம்பலாம் என்று சொன்னபோது அதிர்ச்சியாகிறாள். படகுக்காரன் தெரிந்தவன் தான்; தம்பியை கொண்டுபோக ஏலாது என்று சொல்லிவிட்டான். அதனால், தன்னோடு மனைவி, தங்கை, அம்மா ஆகியோரோடு இந்தியாவுக்குப் படகில் கிளம்ப முடிவெடுத்துள்ளேன் என்று சொன்னபோது அதிர்ச்சியின் உச்சத்தில் அவனை இல்லாமல் ஆக்கிவிடும் முடிவை எடுக்கிறாள். ‘அந்தத்தம்பியை - கொழிந்தனை அனாதையாக விடுவதைவிடத் தெய்வத்திடம் - நாகபூசனி அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பும் முடிவெடுத்துப் பித்தமும் பக்தியுமான மனநிலையில் கோயிலில் வைத்துக் கொலைசெய்து விடுகிறாள். ஆனால் அதனைக் கொலையெனச் சொல்லாமல் அம்மனோடு போய்விட்டான் என்று மனதைத் தேற்றிக் கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் அந்தச் செயல் பல காலம் அவளைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

நாகபூசனை அம்மாவிடம் சேர்த்த கொழுந்தனைப் போல ஒரு சிறுவனை – மனநிலை பிசகிய ஜோஷ்வாவை – கனடாவில் எதிர்வீட்டில் பார்க்கும்போது அவளும் அதே மனநிலைக்குள் நுழைந்துகொள்கிறாள். இப்போது அவளது இருப்பும் குடும்ப உறுப்பினர்களால் சகிக்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. கணவனின் தங்கை அனுவால் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள முடிகிறது என்றாலும், அவரது பிள்ளைகளிடமும் கணவனிடம் அதனை எதிர்பார்க்க முடியவில்லை. கவிதா அண்ணியைக் குடும்பத்தவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை; அதனால் நீண்ட காலத்திற்கு அவளை ஏதாவதொரு காப்பகத்தில் சேர்த்துவிடலாம் என்று பேசுவதில் தொடங்கும் கதை, அவளது கடந்தகால வாழ்க்கையைத் திருப்புக்காட்சிகளாக முன்வைக்கிறது. எதிர்வீட்டு ஜோஷ்வாவை அவனது தாய் கைவிடப்போகிறாள் என்பது போல நினைத்துக்கொள்ளும் கவிதா, அவனது மரணத்தை ‘ தான் செய்த கொலையாக’ சொல்லிக்கொள்கிறாள். கணவனின் தம்பி ஆதவனைக் கொலைசெய்த நினைவின் நீட்சியும் குழப்ப மனமும், சிறுவன் ஜோஷ்வாவும் தன்னால் தான் கொலைசெய்யப்பட்டதாக நம்புகிறது. கவிதாவின் மௌனம், பித்தநிலை, தொடரும் குற்றமனம் எல்லாவற்றின் பின்னணியிலும் இருப்பது போர்க்கால வாழ்க்கை தான்.

போர்க்கால இடப்பெயர்ச்சியில் இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களைக் கூடச்செய்ய முடியவில்லை என்று காட்டுவதைப் போலப் புலப்பெயர்வில் இயலாதவர்களை – நடப்பது என்னவென்று அறியாத மனநிலையில் இருக்கும் உறவுகளை அறிந்தே கைவிட வேண்டிய சூழல் இருந்தது என்பதைக் கறுப்பு சுமதியின் கதை முன்வைக்கிறது. அப்படிக் கைவிட்டுவிட்டுச் செல்வதைவிட அவர்களின் வாழ்க்கையை முடித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்ற முடிவைத் தெளிவான மனநிலை எடுக்கிறது. ஆனால் அதனைச் செயல்படுத்தும் போது தெளிவான மனநிலையை மறைத்து பக்தி அல்லது பைத்திய நிலையில் செய்துவிடுவதாகக் காட்டிக்கொள்கிறது. மனம் எடுத்த முடிவைச் செயல்படுத்த மனநிலை மாற்றத்தை உருவாக்கிக் கொண்டாலும் நடந்த குற்றச்செயல் பின் தொடரும் பாவச் செயல்களின் நீட்சியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் காட்டுகிறார்.

நடந்த நிகழ்வுகளை எழுதும் எழுத்துகள் – புனைகதைகள் - நேரடிப்பிரதிபலிப்பாக எழுதினாலும், மனவோட்டப்பதிவுகளின் தொகுப்பாக எழுதினாலும் தெரிவுசெய்யும் பின்னணிகள் காரணமாக முக்கியமான கதைகளாக மாறிவிடுகின்றன. இரண்டு கதைகளும் போர்க்காலத்தையும் போர்க்களத்தையும் பின்னணியாக்கிய நிலையில் இறக்கி வைக்கமுடியாத பெருஞ்சுமைகளைத் தாங்கி நிற்கும் சுமைதாங்கிக் கற்களாக மாறியுள்ளன.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்