தமிழர்களின் வாரக்கடைசிகள்

 



உலகத் தமிழர்களின் பொழுது போக்குகளில் முதலிடத்தில் இருப்பவை தொலைக் காட்சிகள். அவற்றுள் வாரக் கடைசிக்கான நிகழ்ச்சிகளைக் கலவையாகத் தருவதின் மூலம் பார்வையாளத் திரளைத் தன்வசப்படுத்திய அலைவரிசை ஸ்டார் விஜய்.


போட்டிகள், போட்டிகளின் வழியாக ஒருவரைத் தேர்வு செய்தல், அதன் மூலம் கிடைக்கும் பிரபல்யம் என்பது விஜய் அலைவரிசையின் வாரக்கடைசி நிகழ்ச்சிகளின் பொது இயல்பு. “ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு” போன்றன நீண்டகாலத் தொடர் நிகழ்வுகள். ஒவ்வொன்றும் பல ‘சீசன்’களைத் தாண்டி வெற்றி நடைபோடுகின்றன. அந்த வரிசையில் அண்மைய ஆண்டுகளில் இணைந்தவை ‘குக் வித் கோமாளி’ ‘பிக்பாஸ்’ ஆகியன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தை, இந்நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களைக் கலவையாக்கிப் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது அந்த அலைவரிசை. இப்போது பிபி ஜோடிகள் அவ்வகையான நிகழ்ச்சிக்கு உதாரணம்.

எல்லாவற்றையும் பேச்சாக மாற்றிவிடுவதில் விருப்பம் உடையவர்கள் தமிழர்கள். பேச்சுக்கலையின் வழித் தங்களின் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமிழர்களின் பொதுக் குணம் என்று கூடச் சொல்லலாம். அதனாலேயே பேச்சுக்கலையின் பலவடிவங்கள் தமிழர்களிடையே செல்வாக்கோடு இருக்கின்றன. தனிப்பேச்சு, கதாகாலட்சேபம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்றன அவற்றுள் சில. இவற்றின் தொடர்ச்சியாகவே செய்தி அலைவரிசைகளின் விவாத மேடைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். தனிப்பேச்சுகள் என்பனவும் நடுவர் ஒருவரைக் கொண்டு அணி பிரிந்து விவாதிப்பதாகப் பாவனை செய்யும் பட்டிமன்றமும் பார்வையாளனின் சிந்தனைக்கு இடம் தராத நிகழ்ச்சிகள். அரட்டை அரங்கம் பாணியில் நடக்கும் பேச்சுக் கச்சேரிகளும் கூடப் பார்வையாளர்களுக்குச் சிந்தனையைத் தூண்டாமல்-யோசிப்பதற்கான வாய்ப்பைத் தராமல், நிகழ்ச்சியை நடத்தும் பிரபலங்களின் கருத்தை ஏற்கச் செய்யும் நோக்கம் கொண்டவையே. சன் குழுமமும், ஜெயா குழுமமும் இத்தகைய பேச்சுக்கச்சேரிகளிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றன

நீயா நானா? என்னும் கருத்துருவாக்கி

மற்ற அலைவரிசைகளின் பேச்சுக் கச்சேரிகளிலிருந்தும், இடைவெளிவிட்டுப் புதுப்புது சீசன்களாக அறிமுகமாகும் சொந்த அலைவரிசை நிகழ்ச்சிகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது நீயா? நானா? 2006 இல் தொடங்கிக் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகும் பேச்சு நிகழ்ச்சி. அதன் இயக்குநர்கள் கூட மாறியிருக்கிறார்கள். ஆனால் முன்வைப்பாளராக இருக்கும் கோபிநாத் மாறவில்லை. அந்நிகழ்ச்சியொன்றின் வழியாகவே அவரொரு ஆளுமையாக மாறியிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பல தலைப்புகள் திரள் மனிதர்களின் பொதுப்புத்தியில் கேள்வியாக மட்டும் இருப்பவை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களா? இல்லையா? என்ற கேள்வியைக் கேட்ட உடனேயே நமது பதிலைச் சொல்லிப் பார்ப்போம். ஆனால், ஆண்களும், பெண்களுமாக அணி பிரிந்து விவாதித்து முடிக்கும் போது நமது மனத்திற்குள் இருந்த பதில் மாறிப் போகும் வாய்ப்புகள் இந்த விவாத மேடையில் இருக்கிறது.

ஒரு கருத்துநிலையை முன்வைத்து, ஜூனியர் X சீனியர் என்ற எதிர்வை முன்நிறுத்தி விவாதிக்கும் போது நமது தன்னிலை ஏதாவது ஒரு பக்கம் சேர்வதற்குப் பதிலாக இருபக்க நியாயங்களையும் அசைபோடும் தன்னிலையாக ஆக்கப்படும் வாய்ப்புகளே அதிகம். படிக்காதவர்கள் X படித்தவர்கள்; ஒல்லியானவர்கள் X குண்டானவர்கள்; மாமியார்கள் X மருமகள்கள் ; தனியார் X அரசு ; ஆண் X பெண்; இளையோர் X முதியோர் என ஒரு இரட்டை எதிர்வை முன் வைத்து உருவாக்கப்படும் இந்த விவாத மேடை அடிப்படையில் இத்தகைய இரட்டை எதிர்வுகளின் அபத்தத்தைக் கலைத்துப் போடும் வேலையைச் செய்கிறது. எதையும் கறுப்பு வெள்ளையாகக் கணித்து விடும் மனிதர்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள். ஆனால், அந்தரங்க வெளியிலும், பிறரோடு சேர்ந்து இயங்க வேண்டிய சமூக வெளியிலும் எல்லாவற்றையும் கறுப்பு X வெள்ளை எனப் பகுத்துப் புரிந்துகொள்வது போலத் தோன்றினாலும், நிதானமான முடிவுகளில் மனிதர்கள் அப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதவுபவை விவாதமேடை என்னும் கருத்துருவாக்க வடிவம்.

நீயா நானா நிகழ்ச்சிக்குக் கருத்துருவாக்கமே முதன்மையான நோக்கம். ஒருபுறம் பேசுபவர்களின் ரசிகர்களாக இருக்கும் தமிழர்கள், இன்னொருபுறம் கட்டுப்பெட்டியான அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தாத பேசா மடந்தைகளாகவும் இருக்கிறார்கள். இவ்வியல்புகளைக் கொண்ட தமிழர்களைப் பேசுபவர்களாகவும், பேசுபவர்களோடு சேர்ந்து சிந்திப்பவர்களாகவும் ஆக்குவதை நீயா? நானா? நிகழ்ச்சி விரிந்த நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்த நோக்கம் நமது மரபான நம்பிக்கைகள் மீதும், பண்பாடு எனக் கருதிய ஒழுக்க விதிகள் மீதும் கூட மூர்க்கமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இம்முதன்மை நோக்கத்தைத் தாண்டி இன்னொரு நோக்கமும் அதற்கு உண்டு. அந்நோக்கம் வெளிப்படையானதல்ல; மறைமுகமானவை.

கிராமிய வாழ்க்கையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கையை நோக்கி நகரும் மாதச் சம்பளக்காரர்களை நுகர்வோராக மாற்றுவது. நடுத்தர மற்றும் உயர்நடுத்த வர்க்க வாழ்க்கைக்குள் நுழையும் புதிய மனிதர்களே முதலாளியச்சந்தைப் பொருளாதாரத்திற்குத் தேவையானவர்கள். அவர்களை இலக்கு பார்வையாளர்களாக வைத்துத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளே தொலைக் காட்சிகளின் வாரக்கடைசி நிகழ்ச்சிகள். தமிழில் முன்னணி அலைவரிசைகளாக இருக்கும் சன் குழும அலைவரிசைகள், கலைஞர் குழும அலைவரிசைகள், ஜெயா குழும அலைவரிசைகள், புதிய தலைமுறைக் குழும அலைவரிசைகள் என ஒவ்வொன்றும் இப்போட்டியில் இருக்கின்றன என்றாலும் நீண்ட அனுபவத்தோடு வாரக்கடைசிகளைத் தனதாக்கிக் கொண்ட அலைவரிசை ஸ்டார் விஜய் அலைவரிசையே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

அலைவரிசையின் ஒரு நிகழ்ச்சி என்பது 30, 60, 90 நிமிடங்களாகப் பிரிக்கப்பட்டு வியாபாரக்குழுமங்களின் நிதியுதவியோடு பார்வையாளர்களுக்கு வந்து சேருகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முதன்நிலை நிதிநல்கையாளரும்(Sonsor), துணைநிலை நல்கையாளர்களும் இருப்பார்கள். அவர்களின் தயாரிப்புப்பொருட்களும் விற்பனைப் பொருட்களும் விளம்பரங்களாகவும் நிகழ்ச்சிகளோடு இணைந்தே பார்வையாளர்களுக்குப் பார்க்கக் கிடைக்கின்றன. விடுமுறை நாட்களில் நிகழ்ச்சிகளை இலவசமாகப் பார்க்கும் பார்வையாளத்திரள், நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் விளம்பரிக்கப்பட்ட - சந்தையில் வந்து குவியும் புதியபுதிய நுகர்பொருட்களை வாங்கி அடுக்கும் மனநிலைக்கு தாவச்செய்யும் நோக்கமும் அதற்கு இருக்கிறது.

நீயா? நானா?வின் வடிவத்திலேயே நிகழ்காலத் தன்மையை உள்ளடக்கியது. விவாதங்களை முன்வைக்கும் (கோபிநாத்) நடுவில் நிற்க, ஏற்புநிலைப் பங்கேற்பாளர்கள் ஒருபுறம், மறுத்துரைக்கும் கூட்டம் இன்னொருபுறம் என்பது அதன் மாறாவடிவம். அவ்வடிவத்திற்குள் ஒருவிதத்தொடக்கம், சிக்கலை முன்வைத்தல், அதன் தளங்களை விளக்குதலும் விவரித்தலும் என்பதான எளிய – ஓரங்க நாடகத்தன்மை உண்டு. ஓரங்க நாடகத்தின் வளர்நிலைக்குத் தனியே ஒரு உச்சநிலை அமைவதில்லை. ஆனால் நிகழ்காலப்பொருத்தம் காட்டும் உத்தி அமைந்திருக்கும். நீயா நானாவில் அப்படியொரு பொருத்தம் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே கோபிநாத்தின் திறமையாக இருக்கிறது. அவரது வெளிப்பாட்டிற்கு உதவும் விதமாக நிகழ்ச்சியின் இயக்குநர்கள் பின்னாலிருந்து செயல்படுவார்கள்.

கருத்துநிலையாக்கம்

கருத்துருவாக்கம் என்னும் பொதுப்போக்கிலிருந்து அவ்வப்போது சில நிகழ்ச்சிகள் விலகுவதும் உண்டு. விலகும் நிகழ்ச்சிகள், கருத்துநிலையை நிறுவும் நோக்கம் கொண்டனவாகப் பெரும்பாலும் அமைவதும் உண்டு. அண்மையில் அப்படியொரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கடந்த ஆகஸ்டு 15 (இந்திய விடுதலைநாள் சிறப்புநிகழ்ச்சி) அன்று ஒளிபரப்பான நீயா? நானா? அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு. சமகாலத்தை விவாதிக்கும் அதன் வழக்கமான முறைமைக்கு மாறாகப் பார்வையாளர்களைக் கடந்த காலத்திற்குள் அழைத்துப் போவதாக இருந்தது. “கிடைத்தபொருளை/ நகைகளைத் திருப்பிக் கொடுத்தவர்கள் x பொதுமக்கள்” என்று முரண்நிலைத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், முரண்நிலை விவாதம் முன்னெடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முழுமையும் ஒருபக்க உரைகளாகவே அமைந்திருந்தன.

பொது இடங்களிலோ, தங்களின் பணியிடங்களிலோ யாரோ தவறவிட்ட பொருட்களை எடுத்துத் தாங்களே வைத்துக்கொள்ளாமல், தொலைத்தவர்களிடம் ஒப்படைத்தவர்களின் நேர்மையும், பிறர் பொருளைத் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக நினைக்காத மனநிலையையும் அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்குக் கடத்தியது. அதன் மூலம் அறம் சார்ந்த சொந்த வாழ்க்கையை வாழும் எளிய மனிதர்களைப் பார்வையாளர்களின் முன்னால் நேர்நிலையாக நிறுத்தியது. நேர்நிலை முன்வைப்பாக மனிதர்களின் நிலைப்பாட்டை முன்வைப்பதின் மூலம், அறம்பிறழும் மனிதர்களுக்கு குற்றவுணர்வு உருவாக்கமுடியும் என்னும் கலையியல் பார்வையில் நம்பிக்கைகொண்டு நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருந்தது.

பொருளைத் தொலைத்துத் திரும்பக் கிடைத்தவர்களும் பொதுமக்களும் அமர்ந்திருந்த பக்கமிருந்து அதிகமாகப் பேசவில்லை. அந்தப் பக்கத்து முகங்களைக் காட்டியபோது எதிர்வரிசைப் பேச்சுகளை ஆச்சரியம் கலந்த உணர்வுகளுடன் கவனித்த நிலையையே பார்க்கமுடிந்தது. ஒரேயொருவர் மட்டும் தனக்குக் கிடைத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்துக்கொண்டதை விவரித்தார். அதன் மூலம் தனது குற்றமனத்தைத் திறந்துகாட்டித் தன்னை நிறுவிக்கொண்டார். பொருள்களைத் திருப்பிக் கொடுத்தவர்கள் ஒவ்வொருவரின் விவரிப்பும் அதன் வழியாக அவர்கள் செய்த செயலும் ஆச்சரியமான நேர்மையைக் காட்டின. அவர்களின் சொந்த வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார நிலையில் இருப்பவர்கள் என்று அவர்களைச் சொல்ல முடியாது. அன்றாட வாழ்க்கையைத் தள்ளுவதற்குத் தேவையான வேலைகள் இருந்தாலும் குறைந்த வருவாய் கிடைக்கும் தொழில்கள் தான் அவர்களுடையவை. சலவைத் தொழிலாளிகள், துப்புரவுப் பணியில் இருப்பவர்கள், வீட்டுவேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களென இருப்பவர்கள். அவர்களுக்குக் கிடைத்த பணத்தை, நகைகளை, செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களைத் தாங்களே உரியவர்களிடம் ஒப்படைத்ததையும், காவல் துறை மூலமாகத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்ததையும் சொன்னார்கள். ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களிடம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத அறம் சார்ந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை முன்வைத்தது. இத்தகைய நிகழ்வுகளில் விவாதம் காணாமல் போய்விடும். ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்தின் அசைவுகளும் கூடக் கட்டுப்படுத்தப்பட்டு சில இடங்களில் அமர்ந்து கேட்பவராக மாறிவிடுவார்.

இந்நிகழ்ச்சி முன்வைத்ததுபோல எளிய மனிதர்கள் மட்டுமே நேர்மையானவர்களாகவும் அறம்சார்ந்த வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையல்ல. அதொரு நம்பிக்கை; பொதுப்புத்தி. இப்பொதுப்புத்திக்கு மாறாக தனிநபர் ஒழுக்கத்தையும் நேர்மையையும் கடைப்பிடிக்கும் பணக்காரர்களையும் அதிகாரிகளையும் சந்தித்த அனுபவங்கள் பலருக்கும் இருக்கும்; எனக்கும் உண்டு. 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளின் திருமணத்தையொட்டி, சென்னை, தி.நகர் நகைக்கடையொன்றில் நகைகள் வாங்கினோம். நகைப்பெட்டிகளை வைத்த பையோடு நடுத்தரமான உணவு விடுதியொன்றில் சாப்பிட்டோம். மனைவியின் கால்பக்கத்தில் அந்தப் பையை வைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். கைகழுவப் போகும்போது பையை எடுக்கவில்லை. கைகழுவித் திரும்பும்போது தரப்பட்ட காகிதத்தைக் கொண்டு கையைத் துடைத்துவிட்டுப் பார்த்தபோது, நாங்கள் சாப்பிட்ட மேஜையின் அருகில் அடுத்து உட்கார ஆட்கள் காத்திருந்தார்கள். அங்கே செல்லாமல் – பையை எடுக்காமல் வந்துவிட்டோம். மறந்து கிளம்பி வந்தவர்கள் ஓரிடத்தில் நினைவுவரத் திரும்பிச் சென்றோம். செல்லும்போது வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிட்ட து. இந்த நகைகளை வாங்கும்பொருட்டுப் பணம் சேர்த்த காட்சிகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.

நகைகள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பதற்றத்தோடு நுழைந்தவர்களை ஆசுவாசப்படுத்தினார். சாப்பிட வருபவர்கள் விட்டுச் செல்லும் எந்தப் பொருளையும் கல்லாப் பெட்டியில் இருப்பவரிடம் தரவேண்டும் என்பதைப் பணியாளர்களுக்குக் கற்பித்து நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் சொன்னார் விடுதியின் உரிமையாளர். நகைகள் இருந்த பையை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு , பை இருந்த இட த்தைக் காட்டினார். சாமி படங்களோடு எம்.ஜி. ஆரின் படமும் இருந்தது. ‘அடுத்தவர் பொருள்களுக்கு ஆசைப்படாத புரட்சித்தலைவரின் தொண்டன் நான்’ என்று சொல்லி விட்டுச் சிரித்தார் அவர். அவரது நேர்மைக்கு எம்ஜிஆர் தான் காரணம் என்ற நம்பிக்கை அவருக்கு. அது பிடித்திருந்தது. ஆனால் அவர் நம்பிக்கையின் மீது சிரிப்பும் வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்