பட்டினப்பாலையில் புழங்குபொருட் பண்பாடு


முன்னுரை
ஒரு மனித உயிரி தனது வாழ்தலுக்காக அளிக்கப்பெற்றதாக நம்பும் காலத்தின் ஒரு பகுதியை தன்னை வந்தடையும் ஒரு பிரதியை வாசிப்பதற்காக ஒப்புக் கொடுத்து வாசிக்கும்போது வாசகராக ஆகிறார். பிரதி வாசிக்கப்படும் நோக்கத்திலிருந்து வாசிப்பவர்களின் அடையாளம் உருவாகிறது. நோக்கம் அற்ற வாசிப்பும் கூட வாசிப்பு தான்.

வாசகருக்கும் வாசிக்கப்பட்ட பிரதிக்கும் இடையிலான வினையும் எதிர்வினையும் உடனடி நிகழ்வாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் வாசிக்கப்பெற்ற பிரதி தன்னுணர்வற்ற நிகழ்வாக வாசகனிடத்தில் வினையாற்றுகிறது என்பதே வாசிப்புக் கோட்பாட்டின் முதன்மை நிலைபாடு. இம்முதன்மை நிலைபாட்டின் அடிப்படையிலிருந்து உருவான வாசிப்புகளும் ஆய்வுகளுமே இலக்கியவியல் வாசிப்புகளும் இலக்கியத்திறனாய்வுகளும் ஆகும். மற்றயவை அதனிலிருந்து விலகிய வாசிப்புகளாகவும் அதன் மேல் கட்டி எழுப்பப்படும் ஆய்வுகள் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட துணை ஆய்வுகளுமாகவே அமையும். இவ்வகை வாசிப்புகள் கலை இலக்கியப்பிரதியை ஆசிரியனின் மன வெளிப்பாடாகவும் , அவன் வாழ்ந்த காலத்தின் கூட்டு மனமே அவனது படைப்புருவாக்கக் காரணிகள் என்பதாகவோ நினைப்பதில்லை. அதற்கு மாறாக ஆசிரியன் உருவாக்கிய பிரதியை அவனது காலகட்டத்தின் அல்லது அவனுக்கு முந்திய காலகட்டத்தின் தகவல்களைத் தொகுத்துத் தரும் ஆவணமாகக் கருதுகின்றன. ஆவணத்தொகுப்புகளும் தகவல்களும் ஆசிரியன் வாழ்ந்த அல்லது நூல் எழுதப்பெற்ற காலகட்டத்தின் அரசியல், சமூகப் பொருளாதாரத் தகவல்களாகக் கருதப்பட்டுப் பயன்பாட்டுக்குள்ளாகின்றன.

இதனையே வேறுவிதமாகச் சொல்லலாம். இலக்கியப்பிரதியை வாசிக்கும் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினால் ஒவ்வொருவரும் தரும் பதில் ஒவ்வொருவிதமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் எந்தப் பிரதியையும் முழுமையை நோக்கிய வாசிப்பாக மட்டுமே செய்ய வேண்டும் எனச் சொல்வேன். குறைந்த பட்சம் அப்படியான வாசிப்பே முதன்மை வாசிப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவேன். அதற்கு மாறாக ஒரு பிரதியில் உள்ள கூறுகளை இலக்கியத்தின் உட்கூறுகளாக வாசிப்பதற்கும் நுழையலாம். அப்போது கிடைக்கும் தகவல்களை இலக்கியவியல் சார்ந்து விளக்குவது; விமரிசிப்பது எனப்பயணம் செய்வது இலக்கியவியல் சார்ந்த பயணமாக அமையும். அவ்வாறு இல்லாமல் இலக்கியப் பிரதிகளுக்குள் கிடைக்கும் தகவல்களைப் பிரித்துத் தனியாகப் பேசும்போது பிறதுறைசார் ஆய்வாக மாறிவிடும். இந்த நிலைபாட்டின் அடிப்படையில் பட்டினப்பாலை என்னும் செவ்வியல் பனுவலில் இடம்பெற்றுள்ள புழங்குபொருட் பெயர்களையும் மலர்களையும் தனித்தனியாகத் தொகுத்துச் சில முடிவுகளை முன்வைக்கிறது இக்கட்டுரை. இந்தக் கட்டுரை இலக்கியவியல் ஆய்வல்ல; இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட பிறதுறைசார் ஆய்வு என்ற புலத்திற்கு உரியது எனத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் தொகுப்புகளாக மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன என்பதை நாம் அறிவோம். எட்டுத்தொகை என்ற தொகுப்பில் குறுங்கவிதைகள் 400, 500 என எண்ணிக்கை அடிப்படையிலான தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. நெடுங்கவிதைகள் தனியாகப் பத்துப்பாட்டு என்ற தொகுப்பாகக் கிடைக்கிறது. அத்தொகுப்பில் ஆற்றுப்படை என்ற துறையின் விரிவாக நெடுங்கவிதைகள் 5 இடம்பெற்றுள்ளன. எனவே அவ்வந்தும் புறத்திணைப்பாடல்கள் எனலாம். பிற ஐந்தும் திணையின் உரிப்பொருள் அடிப்படையிலான நெடும்பாடல்களே. நெடுநல்வாடையைத் தவிரப் பிற நான்கும் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, என்று பெயரிலேயே வெளிப்படையாகக் கூறுகின்றன என்றாலும் அவற்ற்றை அந்தந்த திணைக்குரிய வரையறைக்குள் அடக்கி விட முடியுமா? என்பதை நாம் இன்னும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும். நெடுநல்வாடையை அகமா? புறமா? என விவாதத்துக்குள்ளாக்கும் ஆய்வாளர்கள் அகமெனில் என்ன திணையின் பாற்படும்? புறமெனில் என்ன திணையின் வரையறைக்குள் அடங்கும் என்ற அடுத்த கட்டச் சிந்தனைக்குள் நுழைவதில்லை. இக்கட்டுரை அத்தகைய இலக்கிய ஆய்வு அல்ல. இக்கட்டுரையின் முதன்மை ஆதாரமான பட்டினப்பாலை என்ற பிரதியை அது எழுதப்பெற்ற காலகட்டத்தின் ஆவணத் தொகுப்பாகக் கருதி வாசித்த வாசிப்பின் மீது எழுப்பப்படும் துணைநிலை ஆய்வு என்பதைத் திரும்பவும் கூறி, அதன் வழி அறியலாகும் பண்பாட்டுக் கூறுகளை விளக்க முனைகிறது.


பட்டினப்பாலை சில தகவல்கள்

பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரால் எழுதப்பெற்றது. அதற்கு வஞ்சிநெடும்பாட்டு என்றொரு பெயருமுண்டு. 301 அடிகள் கொண்ட பட்டினப்பாலையில் வஞ்சிப்பா அமைப்பில் அமைந்தன 163 அடிகள் எனவும், ஆசிரியப்பாவின் தன்மையில் அமைந்த அடிகள் 138 எனவும் உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். இப்பிரதியின் வெளியாக இருப்பது சோழநாட்டின் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினம். இப்பிரதியை எழுதிய கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்கு அவன் காலத்தில் சோழநாட்டை ஆண்ட கரிகால் பெருவளத்தான் 16 நூறாயிரம் பொற்காசுகளை அளித்தான் எனப் பின்னர் எழுதப்பெற்ற கலிங்கத்துப்பரணி கூறுகிறது.

பொருட்களின் பெயர்களும் வருகையும்


பட்டினப்பாலை என்னும் பிரதிக்குள் கிடைக்கும் பொருள்களின் பெயர்களைத் தேடி வாசிக்கும் ஒரு வாசிப்பில் எனக்குக் கிடைத்த பெயர்ச் சொற்கள் பின்வருவன: வெள்ளை உப்பு, நெல், கதவு, கல்லெறியும் கவண், துகிர்(ஆடை), தாது (தேன்), கரும்பு,அரிசி, நெய், மணி, பொன், ஆரம், அகில், முத்து, புரவி, சிறுதேர், தளி உணவு, தெங்கு, வாழைக்குலை, கமுகு, மஞ்சள், மா, சேம்பு, இஞ்சி, கனங்குழை, அட்டில், கஞ்சி,கிடுகு, எஃகு, நடுகல், பண்டசாலை,முழவு, நந்தா விளக்கு எனப் பொதுநிலைப் படுத்திக் கூறலாம். இப்பொருட்களின் பெயர்களையும் அவை பட்டினப்பாலையின் அடிகளின் இடம் பெறும் விதத்தையும் பயன்பாட்டு நிலையையும் பின்வரும் அட்டவணையில் காணலாம்.


 

அடி

பொருள்

பிரதியில்  வருகை

பிரதியில்  வருகை

3

தளி உணவின்

தற் பாடிய தளி உணவின்

உணவு

16-19

தெங்கு (தென்னை), வாழை,கமுகு, மா. மஞ்சள், பெண்ணை,

சேம்பு, இஞ்சி

கோள் தெங்கின், குலை வாழை,

காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,

இன மாவின், இணர்ப் பெண்ணை,

முதல் சேம்பின், முளை இஞ்சி

உணவுப்பொருட்கள்

23-25

கனங் குழை,

புரவி

சிறு தேர்

கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,

முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்

கருவிகள் அல்லது அழகியல் வெளிப்பாட்டுப் பொருட்கள்

29

வெள்ளை உப்பு

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றின்

உணவுப் பொருள்

30

நெல்

நெல்லோடு வந்த வல்வாய்ப் பஃறி

உணவுப் பொருள்

40

கதவு

புலிப்பொறிப் போர்க் கதவின்

உறையுள்

43-44

அட்டில்

கஞ்சி

அறம் நிலைஇய அகன் அட்டில்

சோறு வாக்கிய கொழுங் கஞ்சி

உணவுப் பொருள்

73

கவண்

கல்லெறியும் கவண் வெரீஇப்

தொழில் சார் கருவி

78-79

கிடுகு, எஃகு

 நடு கல்,அரண்

கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,

நடு கல்லின் அரண் போல,

உறையுள்

147-155

பாசிழை,

உடை,

துகிர்

 

தாது

காந்தள்

 தொடி

 

பாசிழை, பகட்டு அல்குல்,

தூசு உடை, துகிர் மேனி,

மயில் இயல், மான் நோக்கின்,

கிளி மழலை, மென் சாயலோர்

வளி நுழையும் வாய் பொருந்தி,

ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்

காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன,

செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள்

வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய்,

உணவு, உடை, உறையுள் சார்ந்த அழகியல் வெளிப்பாட்டுப் பொருட்கள்

156-158

குழல்,யாழ்,

முழவு, முரசு,

 

குழல் அகவ, யாழ் முரல,

முழவு அதிர, முரசு இயம்ப,

விழவு அறா வியல் ஆவணத்து

கலையியல் அல்லது அழகியல் வெளிப்பாட்டுக் கருவிகள்

160

கொடி

மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்;

உறையுளும் அவை சார்ந்த அழகியல்

162

கரும்பு

உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல,

உணவுப் பொருள்

167-169

மெழுகு, கிடுகு

துகில்கொடி

 

பாகு உகுத்த, பசு மெழுக்கின்,

காழ் ஊன்றிய கவி கிடுகின்

மேல் ஊன்றிய துகில் கொடியும்;

உறையுளும் அவை சார்ந்த அழகியல் பொருட்களும்

172-174

களிறு

நாவாய்,

 

வெளில் இளக்கும் களிறு போல,

தீம் புகார்த் திரை முன்துறை,

தூங்கு நாவாய், துவன்று இருக்கை,

 தொழில் சார் கருவிகள்

186-190

கருங் கறி மூடை,

மணி, பொன்,

ஆரம், அகில்,

முத்து, துகிர்,

 

காலின் வந்த கருங் கறி மூடையும்,

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரியும், காவிரிப் பயனும்,

உடை சார்ந்த அழகியல் வெளிப்பாட்டுப் பொருட்கள்

197

மீன்

வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,

உணவுப் பொருள்

232

புரவி

வடிமணிப் புரவியொடு வயவர் வீழ

கருவிகள்

257

நந்தா விளக்கு

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,

 

உறையுள்



பண்பாடும் அதன் நிலைப்பாடும்


இன்றைய சமூகத்தை நுகர்பொருள் பண்பாட்டில் திளைக்கும் சமூகம் எனப் பலரும் விமரிசனம் செய்கின்றனர். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பல பொருட்களையும் நாம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறோம். தேவையின் அடிப்படையில் வாங்கும் பொருட்கள் எவை? தேவையில்லை என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளும் பொருட்கள் எவை? எனக் கேட்டால் நமது மனதே ஒரு பொருளை ஒரு நேரத்தில் அடிப்படைப் பொருள் எனக் கருதும்; இன்னொரு நேரத்தில் ஆடம்பரப் பொருள் எனக் கருதும். இது எல்லாக் காலத்திற்கும் பொருந்திய நிலைப்பாடு தான்.


பயன்படுத்தும் பொருட்களை மூன்று அடிப்படையில் வகைப்படுத்துக் கூறுவர் சமூகப் பண்பாட்டுக் கல்வியாளர்கள். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றிலும் அடிப்படைத் தேவை; ஆடம்பரத் தேவை என்ற வகைப்பாடும் உண்டு. ஆடம்பரத் தேவையாகக் கருதப்படும் பொருட்கள் பல நேரங்களில் அழகியல் வெளிப்பாட்டு உணர்வாகவும், நாகரிக வளர்ச்சியின் போக்கில் இணைந்து கொள்ளும் நிலையாகவும் கருதப்படும் வாய்ப்புகளும் உள்ளன. ஆடைகளில் எப்பொருளால் ஆன ஆடைகள் அடிப்படைத் தேவைகளுள் அடங்கும் எனக் கேட்டால் அதற்கான விடை சூழல் சார்ந்த ஒன்றாகவே இருக்க முடியும். வெப்பநிலமான நமது பகுதியில் பருத்தியால் ஆன ஆடைகள் பொருத்தமான ஆடையாகக் கருதப்படலாம். ஆனால் உறைபனி நிரம்பும் ஐரோப்பிய நாட்டில் பருத்தி ஆடைகள் பொருத்தமற்ற ஆடைகளாகக் கருதப்படும். இதே நிலைதான் உணவு தவிர, நிலையான விடை என ஒன்றும் இருக்க முடியாது.


பட்டினப்பாலை என்னும் செவ்வியல் கால இலக்கியப் பிரதியை வாசித்தபோது கிடைத்துள்ள பொருட்களின் பெயர்களையும் அவற்றின் வருகையையும் தொகுத்துப் பார்க்கும் நிலையில் அப்பொருட்களின் பயன்பாட்டு நிலைகளைக் கவனிக்க வேண்டியது அவசியம். அதன் வழியாக அப்பொருட்களின் இருப்பும், ஒரு சமூகத்தில் அவற்றின் தேவைகளையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும் தேவையும், அதன் வழி உருவாகும் அக்காலகட்டத்து மனிதர்களின் மன வெளிப்பாடும் அறியத்தக்கதாக அமையும். தொகுத்துக் கொண்ட பொருட்களில் அதிகமாக இடம்பெறுவன உணவுப் பொருட்கள் சார்ந்தனவே அதிகம் உள்ளன. அவை தங்கள் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்படாத நிலையில் பிற பரப்புகளிலிருந்து - நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. உடை மற்றும் உறையுளில் அடிப்படைத் தேவையோடு அழகூட்டும் தேவைக்காகவும் பொருட்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தொழில்சார் கருவிகளும் அவற்றில் உள்ளன. அழகியல் வெளிப்பாட்டின் பகுதியான இசைக்கருவிகளும் அணிகலன்களும் பட்டினப்பாலையில் இடம் பெற்றுள்ளன. கிடைக்கின்ற பொருட்களின் பெயர்களைக் கொண்டு அப்பிரதியில் இடம் பெற்றுள்ள காவிரிப்பூம்பட்டினம் என்னும் வெளி ஒரு தேவைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் வெளியாலும், பிற இடங்களிலிருந்து பெற்று நிறைவு செய்து கொள்ளும் வெளியாகவும், தன் தேவைக்கதிகமான பொருட்களை மற்ற வெளிக்கு அனுப்பித் தரும் இடமாகவும் இருந்துள்ளது எனக் கூறலாம்.


மலர்க்களின் பெயர்களும் வருகையும்


பட்டினப்பாலை என்னும் பிரதிக்குள் மலர்களின் பெயர்களைத் தேடி வாசிக்கும் ஒரு வாசிப்பில் நெய்தல் பூ , முருகு அமர் பூ, அடும்பின் மலர், ஆம்பல் பூ , தாழை, காந்தள், உழிஞை, வெண் பூக் கரும்பு, மா இதழ், குவளை, நெய்தல், சிறு பூ நெருஞ்சி என்ற சொற்றொடர்கள் கிடைக்கின்றன. இவற்றோடு சேர்ந்து இன்னும் சில தாவரங்களின் பெயர்களும் கிடைக்கின்றன. பிரதியின் தொடக்கத்தில் வரி 8 லிருந்து 20வரையிலான


====================================================


விளைவு அறா வியன் கழனி, /கார்க் கரும்பின் கமழ் ஆலைத்


தீத் தெறுவின், கவின் வாடி,/ நீர்ச் செறுவின் நீள் நெய்தல்


பூச் சாம்பும் புலத்து ஆங்கண், /காய்ச் செந்நெல் கதிர் அருந்து


மோட்டு எருமை முழுக் குழவி,/ கூட்டு நிழல், துயில் வதியும்


கோள் தெங்கின், குலை வாழை, /காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,


இன மாவின், இணர்ப் பெண்ணை/ முதல் சேம்பின், முளை இஞ்சி/


அகல் நகர் வியல் முற்றத்து,


பகுதியில் காவிரிப்பூம்பட்டினம் வளமான நகரம் என்ற சித்திரம் தரப்படுகிறது. அவ்வளத்திற்குக் காரணம் காவிரியின் நதியின் ஓட்டம் என்பதும் கிடைக்கிறது. அத்தோடு காவிரிப்பூம்பட்டினம் என்னும் கடற்கரை நகரின் கடலோரத்தில் வாழும் பரதவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைத் தரும் வரிகள் பிரதிக்குள் விரிவாகக் கிடைக்கின்றன. அடும்பு மலர், ஆம்பல், தாழை (64-66) ஆகிய மலர்கள் பற்றிய குறிப்புகளைத் தரும் பிரதி, பகலுக்கான மலர்கள், இரவுக்கான மலர்கள் இருந்தன என்றும், ஆண்களுக்கான மலர்கள், பெண்களுக்கான மலர்கள் எனத் தனித்தனியே இருந்தன என்றும் இரவில் இருபாலினரும் மாற்றிச் சூடிக் கொண்டார்கள் என்று கலவியின்பத்தை விரித்துப் பேசுகின்றது.

பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,/மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,/மகளிர் கோதை மைந்தர் மலையவும், (107-110)

என்பன அந்த வரிகள்

கடலோரக் காட்சியைப் போலவே நகரத்தின் உள்புறத்தெருவொன்றின் விழாக் காட்சியைத் தரும் விதமாகப் பெண்கள் சூடிய மலர்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறது. காந்தள், உழிஞை, பணம்பூ, கரும்பின் பூ, நெல்லின் கதிராகிய பூ, குவளை, நெய்தல் ஆகியவைக் கொண்டாட்டகாலக் கொடிகளாகக் கட்டப்பட்டிருப்பதைத் தருகிறது அப்பிரதியின் வரிகள்.


==============================================================


காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன,செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள்

வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய், (153-155)

மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்; 160

வேறு பல் பூளையொடு உழிஞை சூடி, 235

தண்பணை எடுப்பி,வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி, 240

மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,கராஅம் கலித்த கண் அகன் பொய்கை,

கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி, மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ, (245-248) அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில் (252)

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி, (256)

பட்டினப்பாலை என்னும் செவ்வியல் கால இலக்கியப் பிரதியை வாசித்தபோது கிடைத்துள்ள மலர்களின் பெயர்களையும் அவற்றின் வருகையையும் தொகுத்துப் பார்க்கும்போது அவற்றைத் தனித்துப் பார்க்காமல் அதற்குள் இடம்பெற்றுள்ள பிற கருப்பொருட்களையும் இணைத்தே பார்க்க வேண்டும். அப்படிப்பார்ப்பதே ஒரு கவிதையை முழுமையை நோக்கி வாசிக்கும் வாசிப்பாக அமையும். பட்டினப்பாலையில் மலர்களோடு சேர்ந்து வெள்ளை உப்பு, நெல், கதவு, கல்லெறியும் கவண், துகிர்(ஆடை), தாது (தேன்), கரும்பு,அரிசி, நெய், மணி, பொன், ஆரம், அகில், முத்து, புரவி, சிறுதேர், தளி உணவு, தெங்கு, வாழைக்குலை, கமுகு, மஞ்சள், மா, சேம்பு, இஞ்சி, கனங்குழை, அட்டில், கஞ்சி,கிடுகு, எஃகு, நடுகல், பண்டசாலை,முழவு, நந்தா விளக்கு எனப் பலவிதமான பொருட்களின் பெயர்களும், அவற்றைப் புழங்கு பொருட்களாகவும் வணிகப்பொருட்களாகவும் பயன்படுத்திய மனிதர்களாக அந்நகரத்தில் வாழும் மக்களும், அந்நகரின் கடலோரத்தில் வாழும் பரதவர்களும் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இவர்களோடு வணிகப்பொருட்களைக் கொண்டுவந்த இடம்பெயர் புலம்பெயர் மக்களும் அவர்களின் மொழிச்சத்தமும் கேட்டதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. (211-218)


============================================================


பல் பண்டம் பகர்ந்து வீசும்,

தொல் கொண்டி, துவன்று இருக்கை

பல் ஆயமொடு பதி பழகி,

வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்

சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு,

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,

கவிதையும் உரிப்பொருளும் கருப்பொருள் பின்னணியும்

பட்டினப்பாலை என்னும் பிரதிக்குள் கிடைக்கும் மலர்கள் மற்றும் பொருட்களைத் தொகுத்துக் கொள்ளாமல் தலைப்பு மற்றும் சொல்முறையையும் மட்டும் கொண்டு வாசிக்கும்போது இப்பிரதி அகக்கவிதை எனவும், பிரிவும் பிரிவின் நிமித்தமும் பற்றிப் பேசும் பாலைக்கவிதை எனவும் கூறத்தோன்றுகிறது. ஒரு தலைவன் தன் தலைவியிடம் போருக்குச் செல்ல மாட்டேன்; உன்னோடு நான் தங்கிவிடுவேன் என உறுதி கூறும்விதமாகவே அப்பிரதி வடிவம் கொண்டுள்ளது. திருமாவளவனின் முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும் அதற்குக் காரணமான பிரிவை - போரை நாடிச் செல்ல மாட்டேன் என்கிறான். அப்படிப் போனால் அவனக்கின்பத்தைத் தரும், தடமென் தோளைப் பிரிந்து பகைவரை வெல்லும் வேலோடு வெய்ய கானத்தைக் கடந்து செல்ல வேண்டியதாகிவிடும் என்றுசொல்லிச் செலவழுங்குகிறான்.

முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்

வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,

வாரேன்; வாழிய, நெஞ்சே! (217-219)

என்பன தலைவனின் கூற்றாக வரும் வரிகள். இவ்வரிகளோடு, பிரதியின் கடைசியில் இடம்பெற்றுள்ள,

முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,

செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண்

அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்

திருமாவளவன்

தெவ்வர்க்கு ஓக்கிய

வேலினும் வெய்ய, கானம்; அவன்

கோலினும் தண்ணிய, தட மென் தோளே!

என்பதான 7 வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படியான அகக்கூறினைப் பட்டினப்பாலையின் 301 வரிகளில் பத்து வரிகளில் தான் ஒரு வாசகனுக்கு வாசிக்கத் தருகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். சொல்முறை, கவிதையமைப்பு சார்ந்து அவரது முதன்மை நோக்கம் செலவழுங்கும் உரிப்பொருளைச் சொல்வதே ஆயினும், கரிகால் பெருவளவன் என்னும் திருமாவளவனின் காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பைச் சொல்வதும் அதற்கீடான நோக்கம் என்பதையும் மறுக்க முடியாது. அரசனின் போர்த்திறம், ஆட்சிச்சிறப்பு, நகர்வளம் என விரிவாகப் பேசுவது பாடாண் திணையின் பாற்பட்டதாகவும், அதனுள்ளும் இயன்மொழித்துறையாகவும் கொள்ள அதிக வாய்ப்பு கொண்ட பிரதியாகவே கட்டமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது.


முடிவுரை

பட்டினப்பாலையை மட்டும் தனியாக வாசித்த இந்த ஆய்வு அதன் கட்டமைப்புக்குள் மலர்களில் தொடங்கி மற்ற கருப்பொருள்கள் விரிவாக இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் குறுகிய வடிவங்களாக இருக்கும் அகப்பாடல்களும் புறப்பாடல்களும் அளவில் பெரியதாக மாறும் வளர்ச்சிப்போக்கில், அவற்றிற்கேயுரிய திணைப்பொருளை மட்டும் பேசாமல், கருப்பொருளை விவரிக்கும் திசையில் கவிதை புதிய வடிவத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இதே வகையில் ஆற்றுப்படை நூல்களைத் தனித்தனியாக வாசிக்கும் நிலையில் காமமும் காதலும் தூக்கலாக இருக்கும் கட்டமைப்புப் பிரதிகளாக அவற்றைச் சொல்ல முடியும் என இன்னொரு நகர்வையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த நகர்வில் அகம் புறமாகவும் , புறம் அகமாகவும் தோற்றம் தரும் நிலை உருவாகும் என்னும் கருத்தை முன் வைக்கிறது. அதன் வழியாகக் கருப்பொருளை - நிலவியல் பண்பாட்டை எழுதும் நிலையைக் கவிதை தனது வடிவமாக்க முனைந்துள்ளது என்று சொல்வதன் மூலம் அண்மையில் வந்துள்ள திறனாய்வுக் கோட்பாடான பண்பாட்டு நிலவியலே படைப்பின் தூண்டுகோல் என்பதை நிறுவ முடியும் என்பதைத் தொடர் ஆய்வுக்கான குறிப்பாக முன் வைக்கிறது.


------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்