வீரத்திலிருந்து காமம் நோக்கி : புலம்பெயர்ப்புனைவுகளின் நகர்வுகள்

இலக்கியப்பரப்பில் புலப்பெயர்வு (daispora) இலக்கியங்கள் என்ற அடையாளம் பழையது. ஆனால் தமிழ் இலக்கியப் பரப்பில் அதன் வருகை – அடையாளப்படுத்துதல் தனி ஈழத்துக்கான போருக்குப் பின்னான புலப்பெயர்வின் வழியாகவே நிகழ்ந்தது. அதற்கும் முன்பே காலனிய காலத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தமிழர்கள் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கக் கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் புலம் பெயர்க்கப்பட்டார்கள் என்பது வரலாறு.இலங்கையின் மலையகத்துத் தேயிலைக் காடுகளுக்கும் மலேசியாவின் ரப்பர் தோட்டங்களுக்கும் தென் ஆப்பிரிக்கச் சுரங்கத் தொழில்களுக்கும் நகர மேம்பாட்டு வேலைகளுக்கும் இந்தியர்கள்/ தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்பெயர்வுகளைப் புலப்பெயர்வாக அடையாளப் படுத்தத் தவறிய தமிழ்ச் சொல்லாடல் உலகம் அதனை இடப்பெயர்வாகக் கவனப்படுத்தியது. ஒரே நாட்டிற்குள் - ஒரு மொழி பேசும் எல்லைப்பரப்புக்குள் நிகழும் நிகழ்வுகளுக்கும் மொழி தெரியாத வேறு தேசங்களுக்குள் நுழையும் நிகழ்வுகளுக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் இடப்பெயர்வைவிடப் புலப்பெயர்வின் வழிமுறைகளும் உணரும் வலியும் அதிகம். அதன் காரணமாகவே ஈழப்போருக்குப் பிந்திய புலப்பெயர்வை மையமிட்ட இலக்கியப்பனுவல்களையே புலப்பெயர்வு இலக்கியங்கள் என வகை பிரித்துப்பேசுகின்றது இலக்கியத் திறனாய்வு.

தனிநாட்டுக்கான போர்களின் பின்னணியில் நடந்த புலப்பெயர்வின் தொடக்கம் எப்போது? எந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் அகதி வாழ்க்கையைத் தொடங்கினார்கள்? நாடு துறந்த குடும்பங்கள் இப்போதைய நிலை என்ன? குடியுரிமை தந்த நாடுகள் எவை? போன்ற தகவல்கள் வரலாற்றாய்வாளர்களின் கவனத்துக்குரியவை. அதேபோல் இலக்கிய வரலாற்று ஆய்வும் புலப்பெயர்வின் காரணமாக எழுதப்பெற்ற பனுவல்களின் தொடக்கம் எவை? எதனை முன்வைத்து புலப்பெயர்வு இலக்கியம் வெளிப்பட்டது? யாரால் அந்தத் தொடக்கம் நிகழ்ந்தது? போன்ற தகவல்கள் சேகரிப்பில் கவனம் கொள்ளும். இத்தகைய கவனக்குவிப்புகள் தேவையானவையே; ஆனால் இலக்கியத்திறனாய்வு இதனைச்செய்வதில்லை. அவற்றையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, புலப்பெயர்வு இலக்கியங்கள் எவ்வகையான மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என்பதில் கவனப்படுத்தும்.

தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன. எழுதியவர்களின் உடல்கள் புலம்பெயர் நாடுகளில் - ஐரோப்பிய/ஆஸ்திரேலிய/ கனடிய நாடுகள் - எதாவதொன்றில் இருந்தபோதிலும் மனம் முழுவதும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பரப்பிலேயே இருந்தன. இனவாதம், ஒதுக்கப்படுதல், போராட்டக் காரணங்கள், போர்க்களங்கள், உள் முரண்பாடுகள், வெளி முரண்பாடுகள் என நகர்ந்து  கொண்டிருந்தன. அவற்றின் வாசக இலக்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களும் புலம்பெயராத ஈழத்துத்தமிழர்களும், ஈழப்போராட்டத்தின் ஆதரவு சக்திகளாகக் கருதப்பெற்ற இந்தியத் தமிழர்களுமாக இருந்தார்கள்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து அச்சிடப்பெற்ற சிற்றிதழ்களிலும், அந்தந்த நாடுகளில் தொடங்கப்பட்ட அமைப்புகளின் தொகைநூல்களிலும் வந்த கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன. இந்தப்போக்கில் பெரும் திருப்பத்தை உண்டாக்கிய நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பேரழிவு இருந்தது. தனிநாடு என்னும் இலக்கும், அதனைப் பெற்றுத்தரும் என்ற பெருநம்பிக்கையாகவும் இருந்த விடுதலைப்புலிகளின் சரணடைவும் ஈழத்தமிழர்களின் மனநிலையில் மட்டுமல்லாமல் எழுத்தாளர்களின் மனநிலைகளிலும் பெரும் மாற்றங்களை உண்டாக்கின. அதற்குப் பின்பான கவிதைகளிலும் புனைகதைகளிலும் தன்னிரக்க வெளிப்பாடுகளும், கடந்த காலத்தின் மீதான விமரிசனங்களும் பேசுபொருட்களாயின. வெளிப்பாட்டு நிலையில் இழந்ததை நினைந்திரங்கும் தொனிகள் தூக்கலாக மாறின.

கவிதை, சிறுகதைகளின் நிலையிலிருந்து விரிவான களங்களைக் கொண்ட நாவல்கள் காலம், வெளி என்ற அடிப்படை இலக்கியக் கூறுகளிலும் பல தளங்களைக் கொண்டனவாக வெளிப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் எழுதப் பெற்ற நாவல்களின் புனைவுக்காலம் போர்க்காலத்தில் தொடங்கிப் போருக்குப் பிந்திய காலத்தில் முடிந்ததைப் பொதுத்தன்மையாக வாசிக்க முடிகிறது. அதேபோல புனைவு வெளியிலும் ஈழத்தமிழ்ப் பரப்பும் புலம்பெயர் பரப்பும் சம அளவில் இடம் பெறுவதையும் காண முடிகிறது. அதே நேரம் புனைவுகளில் உருவாக்கப்பட்ட கதை மாந்தர்கள் பெருமளவு புலம்பெயர்ந்த இலங்கையர்களாகவே இருந்தனர்.


**********
இப்போது கனடாவில் வாழும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளே புலப்பெயர்வு எழுத்துகளில் காலத்தால் முந்தியவை. ஆனால் அவரது எழுத்துக்களை ஈழப் போர் காரணமாகப் புலம்பெயர்ந்தவரின் எழுத்து என்ற வகைப்பாட்டிற்குள் வைக்க முடியாது. தனது வேலை காரணமாகப் பல நாடுகளில் வாழ்ந்த அனுபவம் பெற்றவர். 1990 களின் தொடக்க ஆண்டுகளில் அவரது கையெழுத்துப் பிரதியொன்றை எனக்கு வாசிக்கக் கொடுத்தார் கி.ராஜநாராயணன். வாசித்துவிட்டு, இலங்கையல்லாத நாடுகளில் வேலை நிமித்தம் சென்றபோது கிடைத்த அனுபவங்களின் பின்னணியில் தனது எழுத்தை ஒரு பயணியின் பார்வையில் முன் வைக்கிறார். இதனை நவீனச் சிறுகதைகளாகவோ, நாவலாகவோ வகைப்படுத்தி விவாதிக்க இயலாது என்று சொன்னேன். அந்தக் கூற்றுக்குப் பொருத்தமாகவே இப்போதும் அவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. அதே நேரம் அவரது இலக்கியத்தின் பொதுக் கூறுகளுடனும், பொது நோக்கங்களுடன் விவாதிக்கப்படத்தக்க பனுவல்களாக இருக்கின்றன.

அவரளவுக்குப் பல்வேறு நாட்டு மனிதர்களை எழுதிய எழுத்தாளர்கள் குறைவே. இலங்கைத் தமிழரல்லாத பல நாட்டு மனிதர்களை எழுதுவது என்பதற்குள், அம்மனிதர்களின் வாழ்வியல் வழமைகளும் அந்தந்த நாட்டுச் சட்டங்களும், அதனைப் பின்பற்றுவதில் காட்டும் நீக்குப்போக்குகளும் மட்டுமல்லாமல், ஒரு இலங்கையர் எதிர் கொள்ளும் சிக்கல்களும் எனப் பலவிதமாக அ.முத்துலிங்கத்தின் பனுவல்களில் வாசிக்கக் கிடைக்கின்றன. பல கதைகளில் அவரே கதைசொல்லியாக இருக்கிறார். அதன் காரணமாக சொல்லத்தொடங்கும்போது ஒருவித அங்கத நடையை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அந்த அங்கத விவரிப்பு பெரும்பாலும் கதைக்குள் இடம் பெறும் இலங்கைத் தமிழரல்லாத மனிதர்களின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் போன்றவற்றின் மீது எள்ளலையும் உருவாக்கிக்காட்டுகின்றன.

அ.முத்துலிங்கத்தின் கதைகளில் போர்க்காலமும் போர்க்களங்களும் குறைவாகவே இடம்பெற்றுள்ளன என்றாலும் புலம்பெயர்ந்த அகதிகள் அதிகமாகவே இடம் பெறுகின்றனர் என்பதை மறுக்கமுடியாது. நாடிலியாக மட்டுமல்லாமல், கல்வி மற்றும் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழில்களுக்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியவர்களை – அகதிநிலை மனிதர்களை - எழுதும்போது அவரது விசாரணைகள் பெரும்பாலும் ஆண் – பெண் உறவுசார்ந்த சிக்கல்களையே தூக்கலாக விவாதித்துள்ளன. பணிசார் உறவு நிலை, நட்பு, காதல், காமம் என்ற எல்லைகளைக் கிழக்கத்திய மனநிலையில் நின்று விளங்கிக் கொண்ட ஒருவரின் நுட்பமான நோக்குநிலையை அவற்றில் வாசிக்கலாம். கிழக்கும் மேற்கும் சந்தித்துக்கொள்ளும் போது எழும் நெருடல்கள் கொண்ட பாத்திரங்களாக அவை வெளிப்பட்டுள்ளன. இந்த நோக்குநிலையைப் பல கதைகளில் காணமுடியும் என்றாலும் தூக்கலாக வெளிப்பட்ட இரண்டு கதைகளின் பெயர்களை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது. அமெரிக்காக்காரி கதையில் இடம்பெறும் மையக் கதாபாத்திரம் கல்விக்காக அமெரிக்கா போன ஒரு அகதிப் பெண். அவள் சந்திக்கும் ஆண்கள் வெவ்வேறு தேசத்து ஆண்கள். இன்னொரு கதை மட்டுப்படுத்தப்பெற்ற வினைச் சொற்கள். அக்கதையில் இடம்பெறும் பரிசாரகி கறுப்பினப் பெண். அவள் சந்திக்கும் – மனதில் அலையடிக்க வைக்கும் ஆண் போலந்துக்காரன். அ.முத்துலிங்கம் ஒருவிதத்தில் அச்செழுத்துக்காரர். அவரது கதைகள் அச்சுப்பனுவல்களாகவே வாசிக்கக் கிடைத்தன.

அச்செழுத்திலிருந்த இலக்கியம் இணையதள வெளிக்கு நகர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட து. அதில் முன்னோடியாக நான் வாசித்த இதழ் பௌசர் தொடங்கிய எதுவரை. அவ்விதழ் தொடர்ச்சியாக வராத நிலையில் பிரான்சிலிருந்து நடுவும், லண்டனிலிருந்து அகழ் இதழும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் எனப் புலப்பெயர் எழுத்துகளோடு வருகின்றன. இவ்விணையதள இதழ்களிலும் தனியாள் வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களான முகநூல் போன்றவற்றிலும் எழுதும் புலம்பெயர் எழுத்தாளர்களின் வெளிப்பாடுகள் - எழுத்தாக்கங்கள் இன்னொரு திசைமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

கணினி உருவாக்கித் தந்துள்ள வெளியை ஆறாம் திணை என்றார் கவி சேரன். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்துக்கும் திணை அடையாளங்களான முதல்பொருளும் கருப்பொருளும் சுட்ட முடிந்ததுப்போல் கணினி உருவாக்கித்தரும் இணையவெளிக்குச் சுட்ட முடியாது. நிலமும் பொழுதும் திணையின் புலப்படு அடையாளங்கள். இணையவெளி புலப்படா அடையாளங்கள் கொண்ட வெளியல்லாத வெளி. அரூபவெளியான இணையவெளியின் வருகைக்குப் பின்னான தமிழ்ப் புனைவுலகம் பலவிதமான மாற்றங்களை நோக்கி நகர்ந்துள்ளது. அம்மாற்றங்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் நடக்காத ஒன்று. அதற்குக்காரணமாக இருப்பவர்கள் இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் அல்ல. அவர்கள் இப்போதும் பழைய சிறுபத்திரிகைகளின் இலக்கிய உரிப்பொருள்களான குற்றமனம், பாவம், ஆன்மத் தேடல், தன்னை முன்னிறுத்திய தானழிவு போன்றவற்றை எழுதுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். ஈழத்தமிழ்ப் புலம்பெயர் எழுத்தாளர்கள் சமகால இருப்பில் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எதிர்ப்பாலினம் மீதான ஈர்ப்பைக் குறித்து விசாரிக்கும் கதைகளை எழுதத் தொடங்கியுள்ளனர்.

இந்நகர்வினால், மறக்க முடியாத துயரமாகவும் மனவோட்டங்களில் படிந்த நிழல்களாகவும் இருந்துவந்த சொந்த ஊர் நினைவுகள் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. வீரம் செறிந்த தனிநாட்டுக்கான போர்க்காலம் நினைவுகளிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது . இப்போது வாழும் புலம்பெயர் தேசத்து வெளிகளும், நேரக் குறிப்புகளும் இடம்பெற்றுப் புலம்பெயர் தேசத்துப் பனுவல்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றத்தில், உருவாக்கப்படும் பாத்திரங்களிலும் வேகமாக மாற்றம் நிகழ்கின்றன. புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சந்திக்கும் பெண்களும், பெண்கள் சந்திக்கும் ஆண்களும் புனைவுகளில் உலவத் தொடங்கியிருக்கின்றனர். அதன் மூலம் சொந்த ஊர்சார்ந்த நிலவெளிகள் மெல்ல மெல்ல அழியத்தொடங்கியிருக்கின்றன. அதனிடத்தில் புலம்பெயர் தேசத்து பனிக்காட்சிகளும், ஐரோப்பிய பெருநகரச் சதுக்கங்களும் பூங்காக்களும் பணியிடங்களும், வசதியற்ற வாடகைக்குடியிருப்புகளும் பதிவாகி வருகின்றன.

இலக்கியத்திற்கான முதல், கருப்பொருள் மாற்றத்தோடு உரிப்பொருள் மாற்றத்தையும் முன்னெடுக்கின்றனர் இப்போதைய புலம்பெயர் எழுத்தாளர்கள். வீரத்தைப் பேசிய போர்க்காலம் முற்றிலுமாக மறக்க வேண்டிய நிலையில் கதைக்குள் புகைமூட்டமாக மட்டுமே இடம்பெறுகிறது. அதற்குப் பதிலாக மனித உடலின் இன்னொரு தீராத தேவையான காமத்தின் அலைவுகள் தூக்கலாக எழுதப்படுகின்றன. இந்நகர்வில் இப்போது தொடர்ச்சியாக எழுதிவருபவர் அனோஜன் பாலகிருஷ்ணன். அவருக்கும் முன்பே இவ்வுரிப்பொருளில் நீண்ட காலமாகப் புனைகதைகள் எழுதி வருபவர் கலாமோகன். அனோஜனை ஆசிரியராகக் கொண்டு இணைய இதழாக வரும் அகழ் இதழின் கதைகளில் தொடர்ந்து இவ்வுரிப்பொருள் எழுதும் பொருளாக்கப்பட்டுள்ளதை வாசிக்கமுடிகிறது.

ஆண் – பெண் சார்ந்த உறவை தற்காலிகம் x நிரந்தரம் என்ற அணுகல் முறையோடு இணைத்துப் பார்க்கும் பேச்சைப் புனைவின் உரிப்பொருளாக்கும் – விவாதப் பொருளாக்கும் கதைகளை இப்போது எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அகழ் இதழில் நெற்கொழுதாசன் எழுதிய புத்தரின் மௌனம் (ஜூலை- ஆகஸ்டு 2021), நோயல் நடேசன் கர்ப்பம், அகரன் எழுதியுள்ள சின்னப்பன்றி, கலாமோகன் இரண்டு பெண்கள் (செப்டம்பர் -அக்டோபர் 2021) போன்றன இப்போது வாசித்த அவ்வகைக் கதைகள்.

பொதுவாக ஐரோப்பிய மனம் ஆண் -பெண் அருகிருப்பையும் உடல் தேவையையும் ஒருவிதத் தற்காலிகத்தன்மையோடு அணுகக்கூடியது. அதனால் தான் அங்கே விவாகரத்துச் சட்டங்களும் பிற நடைமுறைகளைப் போலவே பார்க்கப்படுகின்றன. ஆண் -பெண் உறவில் காதல் அல்லாத காமத்தை முதன்மைப்படுத்தாத உறவுகள் இருக்கமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இதற்குப் பழக்கப்படாத இந்திய/ இலங்கை மனமோ ஆண் – பெண் உறவுகளை நிரந்தரத்தன்மை கொண்ட காதலாகவும், காமமாகவும் அதன் தொடர்ச்சியாக உடல் உறவால் பிணைக்கப்படும் குடும்ப அமைப்பாகவும் பார்க்கிறது. இந்த விலகலை உள்வாங்கியும் அதிர்ச்சியாகவும் விவாதிக்கும் கதைகளை நோக்கிப் புலம்பெயர்ப் புனைவுலகம் நகர்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்