உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்னும் கருத்துரு


இலங்கைத்தீவிலும் இந்தியத்துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆரம்பகால நிலப்பகுதி இன்று இரண்டு நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன. தமிழ்நாடு இந்தியாவின் பகுதியாக – ஒரு மாநிலமாக அறியப்படுகிறது. இலங்கையில் ஈழமாக அறியப்படுகிறது. இவ்விரு பகுதியும் இணைந்த நிலப்பரப்பே தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்கச் செவ்வியல் இலக்கியத்தின் பரப்பு.செவ்வியல் இலக்கியங்களில் தொடங்கிப் பின்னிடைக்காலமான சிற்றிலக்கியங்களின் காலம் வரை தமிழ் இலக்கியப்பரப்பு என்பது ஈழத்தமிழ்ப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவே இருந்துள்ளது. ‘ஈழத்து..’ என்னும் முன்னொட்டோடு கூடிய கவிகளின் பெயர்களையும் கவிதைகளையும் தமிழ்க் கவிதைத்தொகுதிகளுக்குள் வாசிக்க முடியும்.

இடவேறுபாடுகளற்று, மொழியால் பிணைக்கப்பட்ட இந்தத் தொடர்பை அறுத்ததில் காலனி ஆதிக்க நாடுகளின் பங்குண்டு. 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பியர்கள் வருகையைச் சந்தித்தன தூர கிழக்கு நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளும். வணிகம், சமயப்பரப்பல் ஆகியவற்றின் தொடர்ச்சியில் ஆட்சி அதிகாரத்திற்குள் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கினார்கள் அவர்கள். ஐரோப்பா தவிர்த்துத் தங்களின் ஆளுகைக்குட்பட்ட காலனித்துவ நாடுகளின் மனிதர்களை அவர்களின் உற்பத்தி மற்றும் வணிகப்பிரிவுப் பணிகளில் கூலிகளாக மாற்றினார்கள். மாற்றப்பட்ட கூலிகள் புலம்பெயர்க்கப்பட்டார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கையின் மலையகம், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குப் பெயர்ந்து அந்நாட்டின் குடிகளாகவே மாறியது முதல் புலப்பெயர்வு காலகட்டம். அக்காலகட்டத்தில் புலம் பெயர்ந்தவர்கள் தங்களுக்குள் பேச்சுமொழியாகத் தமிழைத் தொடர்ந்துகொண்டே, எழுத்து மொழியாகவும் கற்றல் மொழியாகவும் அந்தந்த நாட்டு மொழிகளுக்குள் இயங்கியிருக்கிறார்கள் தமிழர்கள். தாய்லாந்து, மொரீசியஸ் நாட்டுத்தமிழர்களிடம் தமிழ் இப்படித்தான் இருக்கிறது.

தமிழ்மொழி பேசும் மனிதர்களின் வாழ்க்கையில் காலனியம் ஏற்படுத்திய பெருந்தாக்கத்தைப் போலவே இலங்கையின் தனி ஈழப்போராட்டமும் பெருந்தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. போராட்ட காலமும் போருக்குப் பிந்திய காலகட்டமும் அகதிகளாகப் பல நாடுகளுக்குப் பெயர்ந்து வாழச்செய்திருக்கின்றன. தனி ஈழப்போராட்ட கால கட்டத்தில் உலகப் பொருளாதார உறவிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலாளித்துவம் புதுவகைக் காலனிய நடைமுறையொன்று உருவாக்கியது. தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்னும் நடைமுறைகளுக்குள் உலக மனிதர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதன் விளைவாக மொழி, இனம், சமயம் போன்ற அடையாளங்களை மறந்ததோடு நாட்டெல்லைகளையும் கடந்து பயணிக்கத் தயாரானார்கள்.
ஈழப்போர் காரணமான புலப்பெயர்வுக்கு முன்பே தொழில் வாய்ப்பு காரணமாகவும் புலப்பெயர்வுகள் நிகழ்ந்தன. இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கல்வி கற்று, அதன் வழியாக க்கிடைத்த வேலை வாய்ப்பினால் இங்கிலாந்திற்கும், ஆங்கிலேயர்களின் குடியேற்ற நாடான ஆஸ்திரேலியாவிற்கும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த தைப்போலவே இந்தியத் தமிழர்களும் பெயர்ந்தார்கள். அவர்களின் புலப்பெயர்வு ஆஸ்திரேலியாவில் அதிகம் இல்லை. அதற்கு மாறாகச் சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் போன்றவற்றிற்கு அதிகம் இருந்தன. அப்புலப்பெயர்வுகளைத் தாண்டி 1990 களுக்குப் பிறகு உருவான தகவல் தொழில்நுட்ப ப்பெருக்கம் இன்னும் கூடுதலான புலப்பெயர்வுகளைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. இப்புலப்பெயர்வுகள் எல்லாம் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தைப் பன்னாட்டு அடையாளத்திற்குரியதாக ஆக்கியிருக்கின்றன என்பதை நேர்மறைப் பார்வையோடு அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் புலம்பெயர்ந்து, வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழமுடியவில்லையே என்ற எண்ணங்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. புலப்பெயர்வுகள் மட்டுமல்லாமல் ஒரே நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கும் இவ்வகையான இழந்ததின் நினைவுகள் ( NOSTALGIA)  இலக்கிய உரிப்பொருள்களே.

இடப்பெயர்வுகள் உருவாக்கும் துயரங்களுக்கு முதன்மையாக இருப்பன பொருளாதாரக் காரணங்களே. வேலைதேடியும் தொழில் செய்வதற்காகவும் அலையும் அல்லது இடம்பெயரும் மனிதர்களின் துயரங்களை உணர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றின் இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன. இந்திய மொழிகளில் இங்கிலாந்திற்கும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் தனியார் நிறுவனக் கூலிகளாகவும் சிறுகுறு வியாபாரிகளாகவும், தொழில் ஆர்வலர்களாகவும் புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியங்கள் அதிகம் கிடைக்கின்றன. குறிப்பாகக் குஜராத்திகளும் ராஜஸ்தானிகளும் அதிகமாக மேற்கு நாடுகளில் சிறுவியாபாரிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இடம்பெயர்ந்த நிலையில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பண்பாட்டு நெருக்கடிகளைப் புனைவுகளாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டுத் தமிழர்களில் உயர் மத்தியதர வர்க்கம் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் சம்பளக்காரர்களாகப் பெயர்ந்து அங்கேயே நிலைபெற்றுவிட்ட வாழ்க்கையில் சந்தித்த பண்பாட்டுச் சிக்கல்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. அதன் மறுதலையாக வளைகுடா நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றவர்களின் பாடுகளைத் தமிழின் புனைவுகளும் மலையாளப்புனைவுகளும் எழுதிக்காட்டுகின்றன.


இந்திய மொழிகளில் இடம்பெற்றுள்ள புலம்பெயர் எழுத்துகளுக்கு மாறாகத் தமிழின் -குறிப்பாக ஈழத்தமிழின் புலப்பெயர்வு அமைந்துள்ளது. உற்றாரையும் ஊரையும் நாட்டையும் இழந்து ஏதுமில்லாத – ஏதிலிகளாகப் பல நாடுகளுக்கும் செல்ல நேர்ந்த து பெரும் துயரமென்றாலும், இந்த அனுபவம் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பிற தேசிய இனங்களுக்குக் கிடைக்காத அனுபவம். தமிழ்மொழி பேசும் ஒரு தேசிய இனம் அவற்றைத் தனது மொழியின் வளமான இலக்கியமாக மாற்றிக்கொண்ட தின் மூலம் செல்வமாக மாற்றியிருக்கிறது. இதனைத் துயரத்தின் பகுதியாகப் பார்க்காமல், நேர்மறைப் பலனாகப் பார்க்கவும் முடியும்.

ஈழநாட்டுக்கோரிக்கையின் விளைவாக நடந்த போர்கள் தமிழ்பேசும் மனிதர்களை உலகின் பலநாடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அகதிகளாகப் போனவர்கள், அந்தந்த நாட்டுக் குடியேற்றச் சட்டங்களுக்கேற்ப இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் குடிமக்களாக ஆகியிருக்கின்றனர். அங்கு வாழநேர்ந்தபோது குடியேற்றப் பிரச்சினைகளோடு தனிமனித, குடும்பச் சிக்கல்களும் பண்பாட்டு நெருக்கடிகளும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதவை. அவற்றைப் பதிவுசெய்து எழுதப் பெற்ற தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கல்வியுலகத்திற்கு உருவாக்கியிருக்கிறது.

காலனிய அதிகாரத்தை உருவாக்கித் தந்த ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டு மனிதர்களை அதிகாரிகளாகவும் அலுவலர்களாகவும் அனுப்பிவைத்ததையே கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதிவைத்த இலக்கியங்களைக் கொண்டு உலக இலக்கிய வரைபடங்களை உருவாக்கியிருக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் பேசப்படும் மொழியாகவும் அதிகாரத்துவ மொழியாகவும் இருக்கும் ஆங்கிலத்தின் உலக இலக்கிய வரைபடத்திற்குள் அமெரிக்க ஆங்கில இலக்கியம் தனித்துவத்தோடு இருக்கிறது. அதற்கிணையாக ஆப்பிரிக்க ஆங்கில இலக்கியம், ஆஸ்திரேலிய ஆங்கில இலக்கியம் போன்றனவும் இருக்கின்றன. இந்தியப் பல்கலைக்கழகங்களில் கூட இந்திய ஆங்கில இலக்கியம் தனித்ததொரு துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கிணையாக உலக வரைபடத்தைக்கொண்ட இன்னொரு மொழியாக பிரெஞ்சு மொழி இருக்கிறது. லத்தீன் அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆப்பிரிக்காவிலும் பிரெஞ்சு இலக்கியம் தனி அடையாளத்தைக் கொண்டு வளர்ந்துள்ளன. அவ்விரண்டிற்கும் அடுத்ததாக ஸ்பானிய மொழியின் இலக்கியங்கள் தென்னமெரிக்கப் பரப்பிலிருந்தும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் கிடைக்கின்றன. உடைபடாத சோவியத் யூனியன் இருந்த காலத்து ருஷ்ய இலக்கியம் அதன் நட்பு நாடுகளான போலந்து, செக், ஹங்கேரி போன்ற நாட்டுப்பரப்பிலிருந்தும் கிடைத்தன.

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியப்பனுவல்கள் இந்தியா, இலங்கை என இருநிலப்பரப்பிலிருந்து மட்டுமே கிடைத்து வந்தன. ஆனால் இன்று தமிழ் இலக்கியப்பனுவல்கள் அனைத்துக்கண்டங்களிலிருந்தும் கிடைக்கின்றன. பூர்வீகத் தமிழ் நிலங்களைத் தாண்டி 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மலேசியத் தமிழர்களும் அவர்களைத் தொடர்ந்து சிங்கப்பூர்த் தமிழர்களும் தங்களின் இருப்பை இலக்கியப்பனுவல்களில் பதிவுசெய்யத்தொடங்கினர். இவ்விரு நிலைப்பரப்பிலிருந்து கிடைக்கும் தமிழ்ப்பனுவல்களில் தமிழ்நாட்டிலிருந்து புலப்பெயர்ந்த மன அலைவுகளும், புலம் பெயர்ந்த இடங்களில் இருப்புக்கொள்ள முடியாமல் தவித்த தவிப்புகளும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் தலைமுறை மூன்றாம் தலைமுறைத் தமிழர்களின் இலக்கியப்பனுவல்களில் அந்த மனம் காணாமல் போக, இப்போதுள்ள நாட்டின் பண்பாட்டு நடவடிக்கைகளில் தங்களின் இட த்தை உறுதிசெய்யும் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த முனைப்பை மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களின் புதிய தலைமுறை எழுத்துகளில் அதிகம் காணமுடிகிறது.

2000 -க்குப் பின்னான ஈழத்தமிழர்களின் புலம்பெயர் தமிழ் இலக்கியம். இலக்கிய உருவாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் பாதிக்கப்பட்ட -விளிம்புநிலை நிலை மக்களின் தொகுதியின் குரலாக வெளிப்படுகின்றது. அவர்களின் வெளிப்பாடுகள் பெரும் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. லண்டன், பாரிஸ், கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற இடங்களிலிருந்து இயங்கும் ஈழத்தமிழ் குழுக்களின் தொகுப்புகள் பற்றிய அறிமுகங்களும் விவாதங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அ.முத்துலிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சேரன், ஷோபாசக்தி, குணா கவியழகன், நோயல் நடேசன் போன்ற தனித்த ஆளுமைகளின் எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைக்கின்றன. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இணைய இதழ்களின் தொகுப்புகளும் தொடர்ந்து இணையத்தில் கிடைக்கின்றன.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடம்பெயர்ந்த சூழல்களும் பாடுகளும் எழுதப்பட்டுள்ளன. மொரீசீயஸ், அரபுநாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றிற்குப் போய் அடையாளமிழக்கும் மனிதர்களாகவும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவற்றை இலக்கியம் பதிவுசெய்யவில்லை. ஆனால் வாய்மொழி இலக்கியப்பதிவுகளாகப் பதிவுசெய்யமுடியும். மலேசியாவின் ஆரம்பக்கட்ட த்தமிழ்ப் பதிவுகள் கூட வாய்மொழித்தன்மைகள் தான்.  அவையெல்லாமும் தொகுக்கப்படவேண்டும். அவற்றிலிருந்து உலகத் தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்க முடியும். இந்த வரைபடத்தில் தமிழ் நாட்டுத் தமிழ் இலக்கியத்தின் பங்கையும் இடத்தையும் மதிப்பிட வேண்டும்.

இப்படியான பெருந்திட்டத்தைத் தனிநபர்களால் நிறைவேற்றிட இயலாது. பல்கலைக்கழக ஆய்வுகளின் வழியாகவே இந்த இலக்கை அடையமுடியும். அதுவும் கூட ஒரேயொரு பல்கலைக்கழகத்தின் ஒரு துறை வழியாக நிறைவேற்றுதல் சாத்தியமில்லை. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்போடு ஐரோப்பியாவிலும் கனடாவிலும் இயங்கும் தமிழ் இருக்கைகளும் இணைந்தால் இந்த த்திட்டம் முழுமையாக நிறைவேறும். அதன் முடிவில் உலகத்தமிழ் இலக்கிய வரைபடமும் அதன் பெருந்தொகைகளும் தமிழ்மொழியின் வளமாக எதிர்காலத்திற்குக் கையளிக்கப்படும்.

****



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்