அரங்கியல்: அடையாளங்களும் ஆளுமைகளும்



நாடகக் கலை இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம், இசை போன்ற நிகழ்த்துக்கலைகளும், ஓவியம்,சிற்பம் போன்ற நுண்கலைகளும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், காணொளித்தொகுப்புகளாகச் சமூக ஊடகங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் இருநிலை ஊடகக்கலைகளும் கூடக் கல்வித்துறைப் பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளன. இவற்றைக் கற்பித்துத் தேர்வுகள் நடத்தி, இலங்கை/ இந்தியப் பல்கலைக் கழகங்கள் பட்டங்கள் வழங்குகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் அழகியல் கற்கை நிறுவகங்கள் பட்டப்படிப்பு நிலையிலேயே இருப்பதால், பட்டமேற்படிப்புக்கும் ஆய்வுப்படிப்புக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களை நாடிவரும் மாணாக்கர்களை நான் அறிவேன். புதுவைப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த காலத்தில் நேரடி மாணவராக இருந்தனர். அங்கிருந்து நான் வெளியேறியபின் ஆலோசனைகள் வழங்கும் ஆசிரியனாக அவர்கள் என்னை நாடியிருக்கிறார்கள்.


கல்வி நிலையங்களில் இப்போது கற்றுத் தரப்படுகின்றன என்று சொல்லுவதால் அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்று பொருள்கொள்ளவேண்டியதில்லை. இவ்விரு நாடுகளிலும் காலனிய ஆதிக்கம் நிலவிய காலத்திலும் இக்கலைகளைக் கற்றுத்தருபவர்களும் கற்றுக் கொள்பவர்களும் இருந்தார்கள். கல்வி நிறுவனங்களும் இருந்தன ; ஆனால் வேறுவிதமாக இருந்தன. குரு-சிஷ்யப்பாரம்பரியத்தில் ஒருசில குழுக்களுக்குள்ளேயே / சாதிகளுக்குள்ளேயே கற்றுக்கொள்ளப்பட்டன. இன்றைய தேர்வு முறைகளுக்குப் பதிலாக நிகழ்த்திப்பார்த்து மதிப்பீடு செய்யும் முறைகள் இருந்தன. பொது அரங்கேற்றங்கள் கூட ஒருவகைத் தேர்வுமுறைதான்.

அடையாளங்கள் உருவாக்கப்படுதலும் தேடுதலும்

காலனியத்திற்குப் பின்பு – விடுதலை அடைந்த நாடுகளாக அறிவிக்கப்பட்ட பின்பு - பட்டங்கள் தரும் கல்வித்துறைசார் படிப்பாக ஆனதற்குத் தெளிவான நோக்கங்களும் இலக்குகளும் உண்டு. எதிர்கால இந்தியாவைப் பற்றித் தனக்கெனத் தனித்துவமான பார்வைகளையும் இலக்குகளையும் கொண்டிருந்த பண்டித ஜவகர்லால் நேருவின் பண்பாட்டுக் கொள்கை அதன் பின்னணியில் இருந்தது. எல்லாவகையான படிப்புகளும் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற வகையில், அவர்காலத்தில் கலைகளைப் பற்றிய படிப்புக்குள்ளும் மேற்கத்தியக் கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்வழிப் பட்டம் பெற்ற பலரும் அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் தங்கள் கலைசார்ந்த பணிகளை விருப்பத்தோடும் விருப்பமின்றியும் செய்து வருகின்றனர்.சிலர் தனித்துவமான கலைஞர்களாக உலா வருகின்றனர். இன்னும் சிலர் வெகுமக்கள் ஊடகங்களின் தேவைக்கான சரக்குகளை உற்பத்தி செய்யும் பணியாளர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் வெளிப்பட்டுள்ளனர். கலைகளைப் பல்கலைக் கழகப்பட்டங்களாக ஆக்குவதில் இவ்வாறு பல்வேறு நன்மைகளும் உண்டு;தீமைகளும் உண்டு.

தொடக்கத்தில் மேற்கத்தியக் கல்வி, மேற்கத்திய அறிதல்முறை, மேற்கத்திய வாழ்க்கை முறை ஆகியவற்றின் மீதிருந்த பற்றும் விருப்பங்களும் மெல்லமெல்லக் கரைந்து சுதேசி எண்ணங்களும், என்னுடைய நாடு, என்னுடைய கலைவடிவம், என்னுடைய வாழ்க்கை முறை என்ற பற்றுகள் நினைக்கப்பட்ட நிலையில் கலை, இலக்கியங்கள் குறித்த பார்வைகளும் மறுபரிசீலனைக்குள்ளாகின. அதன் தொடர்ச்சியாக இந்தியக் கலை, இந்திய இலக்கியம் எனப் பொதுநிலையில் சிந்திக்கத் தொடங்கி, இந்தியநாடகம், இந்தியக்கவிதை, இந்திய ஓவியம், இந்தியச் சிற்பம், இந்திய மனோபாவம், இந்திய வாழ்வியல், இந்தியத் தத்துவப் பார்வை என இந்தியாவுக்கான ஒற்றைப்பார்வைகள் முன்வைக்கப்பட்டன.

காலனியத்திலிருந்து விடுபட்டுத்தன்னடையாளத்தைத் தேடும் தேசங்களின் அரசுகள் ஒவ்வொன்றும் இத்தகைய முன்வைப்புகளைச் செய்யவே தொடங்குவார்கள். இந்தியாவைப் போலவே இலங்கைக்கான பொது அரங்கியல், இலங்கைக்கான கலைவடிவங்கள், இலங்கை இலக்கியம் என்ற நோக்கமும் பேசப்பட்ட காலங்கள் 1970களில் இருந்துவந்ததை அறிய முடிகிறது. ஆனால் மொழி, சமயம் என்ற பெரும் வேறுபாடுகள் கொண்ட மனிதர்கள் வாழும் நாடுகளில் நாடுதழுவிய ஒற்றை அடையாளங்கள் கொண்ட கலைவடிவங்களையோ, இலக்கியப்பனுவல்களையோ உருவாக்கி விடமுடியாது. இந்த விவாதங்களும் அப்போதே நடக்கத்தொடங்கின. கலை, இலக்கியங்களின் வெளிப்பாட்டுக்கருவியான மொழியின் இயக்கம் தனித்துவமானது. அதன் வழியாக உருவாகும் கலை, இலக்கியங்களையும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் பிறமொழிப் பண்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் வெளிப்பாட்டு முறைகளிலிருந்தும் தடுத்துப் பாதுகாப்பதற்கும் முயன்றுகொண்டே இருக்கின்றன. அதையும் தாண்டிப் பிறமொழிச் சொற்களும் கருத்தியல்களும் வாழ்க்கை முறையும் நுழைந்துவிடவே செய்கின்றன. இந்த நுழைவில் ஆதிக்கமும் அதிகாரமும் செயல்படுகின்றன என உணரும் மனிதர்கள் தனித்தியங்குவதை முன்வைப்பதும் போராடுவதும் நடந்துவிடுகின்றன.

அரசியல் களத்தில் தனித்தியங்கும் போராட்டங்கள் நடக்கத்தொடங்கும் அதே காலகட்டத்தில் கலை, இலக்கிய உருவாக்கங்களில் இணைந்து செயல்படமுடியும் என்ற நம்பிக்கையை விதைப்பவர்களும் இருக்கவே செய்வார்கள். தங்களின் மொழிசார்ந்த பண்பாடு, வாழ்வியல், சடங்குகள் அடையாளங்களைத் தொலைத்துவிடாமல் அருகிலிருக்கும் இன்னொரு பண்பாட்டோடும் வாழ்வியலோடும் சடங்குகளோடும் உறவுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை முன்வைப்பார்கள். தங்களின் முன்வைப்பைச் செயல்படுத்தியும் காட்டுவார்கள்.

வேறுபட்ட பண்பாட்டிலிருந்து பொது அடையாளம் கொண்ட தேசிய அரங்கை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைகொண்ட இருபெரும் அரங்கியல் துறைப் பேராசிரியர்களை இங்கே சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. ஒருவர் இப்போதும் இலங்கைத்தமிழ் நாடகத்துறையின் அழகியலையும் நடிக உடல்மொழியையும் வளப்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் பேரா.மௌனகுரு. இன்னொருவர் பேரா.சே.ராமானுஜன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையில் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார். ஆனாலும் அவரது முறையியலும் சீடர்களும் இன்றும் தமிழ்நாட்டு அரங்கியலில் அலைவுகளாக இருக்கின்றன

பேரா.சே. ராமானுஜன்  

பேரா.சே.ராமானுஜன், பேரா. சி.மௌனகுரு - இந்த இரண்டு பெயர்களும் தமிழில் நாடகக்கலை சார்ந்த செயல்பாட்டாளர்களின் மனதில் தங்கிவிட்ட பெயர்கள். கல்விப் புலங்களுள் ஒன்றாக நாடகக்கலை ஆனபின்பு, தன்விருப்பத்தோடு இப்புலத்திற்குள் நுழைந்த தமிழ் நாடகக் கலை மாணவன் இவ்விரு பெயர்களையும் பலமுறை உச்சரிக்காமல் வெளியேறமுடியாது. இவ்விருவருக்கும் பொதுத் தன்மைகள் பல உண்டு. ஒரு நாடகக் கலையின் மாணவனோ, மாணவியோ அதில் பெறும் செய்முறைப் பயிற்சி சார்ந்த கல்வியின் மூலமே வல்லுநர்களாக ஆக முடியும் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் தொடர்ச்சியான செய்ம்முறைப் பயிற்சிகளை வலியுறுத்துவதோடு, புதியபுதிய பயிற்சிப்பட்டறைகளை நடத்தி மாணாக்கர்களின் உடல்மொழியையும் குரல்வளத்தையும் நுட்பமாக்கியதை நானறிவேன். தொடர்ந்த பயிற்சிகள் என்பதும், பயிற்சிகளைப் பயன்படுத்தி நாடகத் தயாரிப்புப் பணிகளைச் செய்வது என்பதும்தான் நாடகக்கலையின் கற்றல் முறையும்கூட.


டெல்லி, தேசிய நாடகப்பள்ளியின் தலைசிறந்த இயக்குநரும் நாடகத் துறையில் சர்வதேச அளவில் அறியப் பட்டவருமான இப்ராகீம் அல்ஹாசியின் மாணவர் சே.ராமானுஜன். அவரது படிப்பையும் பயிற்சியையும் தொடக்கத்தில் தமிழகம் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அங்குக் கற்றுத் திரும்பியவுடனே அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்படியான கல்விச்சூழல் தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்தது. கேரளாவின் திருச்சூர் நாடகப்பள்ளியில் பயிற்றுநராக பணியைத் தொடங்கிய ராமானுஜன், தமிழ்ப் நாடகத் துறையின் தலைவரான பின்பே தமிழ்நாடு முழுமையாக அவரைப் பயன்படுத்தியது. கல்வி நிறுவனங்களுக்கும் தனியே இயங்கும் நாடக க்குழுக்களுக்கும் அவர் அளித்த பயிற்சிப்பட்டறைகள், நாடகத் தயாரிப்புகள் முதன்மையான பங்களிப்புகள். அவற்றிலிருந்து உருவான நாடக நடிகர்களும் நாடகக்கலைசார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களும் பலருண்டு. அப்பட்டறைகளில் அவர் பயிற்றுவித்த முறைகள் அனைத்தும் எழுத்துப் பதிவுகளாகவும் ஒளிநாடாக்களாகவும் ஆக்கப்பட்டு ஆவணப்படுத்தியிருக்க வேண்டியவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரம் பேராசிரியர் ராமானுஜத்தின் எழுத்துசார்ந்த பங்களிப்பைத்தொகுத்து தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை நாடகக்காரரும் பத்திரிகையாளருமான சி.அண்ணாமலை செம்மையாகவே செய்துள்ளார்.

பேரா.சி.மௌனகுரு

பேரா.ராமானுஜத்தின் பயிற்சி முறைகளையும் கற்பித்தல் முறைகளையும் தொகுக்காமல் விட்டதைப் போல் பேராசிரியர் மௌனகுருவின் பயிற்சி முறைகளையும் விட்டுவிடக்கூடாது என அவரிடமும், அவர் மீது பற்றும் அன்பும் கொண்ட மாணாக்கர்களிடமும் எனது இலங்கைச் செலவுகளின் போது வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். சிலர், சிலவகையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு அவரே அவரது செயல்பாடுகளையும் பயிற்சி முறைகளையும் எழுதும் திறன்கொண்டவராக இருக்கிறார். தொடர்ச்சியாக இப்போதும் எழுதிக்கொண்டே இருப்பவர்.


அரங்கியலில் கலையியல் சார்ந்த பார்வைகளையும் நடிப்புக்கோட்பாடுகள் பற்றிய கோட்பாட்டுப் பார்வைகளையும் செய்ம்முறைப் பயிற்சிகளையும் அறிந்த – கற்பிக்கக் கூடிய பேராசிரியர்கள் ஒரு கைவிரல் எண்ணிக்கை அளவுகூட இருக்கவில்லை. இப்போதிருக்கும் ஒரேயொருவர் மௌனகுரு மட்டுமே. பேராசிரியர் மௌனகுருவின் கட்டுரைகள் அரங்கியல் என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் அவரது மணிவிழா மலராக-அவரது எழுத்துக்களும் அவரைப் பற்றிய எழுத்துக்களுமாக- ஒரு நூலும் வெளி வந்துள்ளது. மணிவிழா மலரில் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் தமிழகக் கல்வியாளர்களுக்கு புலம்சார்ந்த கட்டுரைகளின் நுண்மான் நுழைபுலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டக்கூடியன. அத்துடன் பேராசிரியர் மௌனகுருவின் கல்விப் பணிகளையும் அரங்கியல் பணிகளையும் விரிவாகக் கூறுகின்றன.

தமிழ் அரங்கியல் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறவர்களுக்கும் அவற்றைப் பயிற்சி செய்து பார்க்கத் துடிக்கும் இளம் மாணவர்களுக்கும் பேரா.மௌன குருவின் அரங்கியல் என்னும் நூல் மிகமிக உதவிகரமாக விளங்கக் கூடியது. மூன்று பகுதிகளையுடைய அந்நூலில் முதல் இரண்டு பகுதிகள் தமிழக அரங்கியல் மாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய பகுதிகள்.சர்வதேச அளவில் அரங்கவியலில் காணப்படும் சொல்லாடல்களை மிகத்தெளிவாகவும் சுருக்க மாகவும் விளக்கும் கட்டுரைகள் முதல் பகுதியில் இடம் பெற்றுள்ளன. நாடகக் கலையின் பயன்கள், நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக்கருக்கள், முழுமை அரங்கு, ஐரோப்பிய நவீன நாடக அரங்கும் ஆசிய நாடக அரங்கும், சிறுவர்களுக்கான நாடகங்களும் ஆசிரியர்களும் என்ற ஐந்து கட்டுரைகளும் அரங்கியல் அடிப்படைகளைத் தமிழில் சொல்லும் கட்டுரைகள். இத்தகைய கட்டுரைகள் தமிழில் இதுவரை எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பகுதியில் தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளைப் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பும் பின் நவீனத்துவப் பின்னணியில் தமிழ்ப் பாரம்பரியக் கூத்தைப் புரிந்து கொள்ளவேண்டிய முறையியலும் பேசப்படுகின்றன. இக்கட்டுரைகளில் காணப்படும் முறையியலும் தெளிவும் தமிழக அரங்கியலாளர்களிடம் காணப்படாத ஒன்று.

பேரா.ராமானுஜமும் பேரா.மௌனகுருவும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நாடகக்காரர்கள். ஏனென்றால் தமிழர்கள் அனைவரும் நாடகக் கலையின் பார்வையாளர்களாக ஆக்கப்படவேண்டும் என்பது அல்ல அவர்கள் விருப்பம். நாடகக் கலையின் மூலம் தமிழர்கள் இந்த உலகத்தினை- சமகால வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் இருவரது விருப்பங்கள். அதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நாடகக்கலையைக் கற்பிக்கும் விருப்பம் கொண்ட பேராசிரியர்கள். அதிலும் மேற்கையும் கிழக்கையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள். தங்கள் கற்பித்தல் முறையில் இந்திய /கீழ்த்திசைப் பாரம்பரியத்தின் எல்லைகளை எங்கே நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கும் மேற்கின் விமரிசன அறிவை எங்கெல்லாம் நமதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கும் அவர்களிடம் தெளிவான பார்வைகள் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்