24 மணிநேரத்துக்குப் பதில் 12 மணிநேரம்


கோடைக்கானலுக்குப் போன பத்துப் பயணங்களில் இந்தப் பயணமே மிகக் குறுகிய நேரப்பயணம். இதற்கு முந்திய குறுகிய பயணமாக இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடித்த அந்தப் பயணம்தான்.
அந்த ஒருநாள் சுற்றுலா மறக்க முடியாத சுற்றுலா. எனக்கு மட்டுமல்ல: அதில் கலந்து கொண்ட 17 மாணவிகளுக்கும் மறக்கமுடியாத பயணம். இப்போதும் அவர்களின் சந்திப்பின்போதும் கடிதங்கள் வழியாகவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 24 மணிநேரப்பயணத்திற்குப் பிறகு இந்த 12 மணிநேரப் பயணமும் நினைவில் நிற்கப்போகிறது.

******

ஊர் சுற்றலை மட்டும் கரோனா கடுமையாகத் தடுத்துவிட்டது. எப்போதும் எனக்குள் அடங்காமல் இருந்த விருப்பங்கள் மூன்று. வாசிப்பு, சினிமா பார்ப்பது; ஊர் சுற்றல். வாசிப்பும் அதன் தொடர்ச்சியான எழுத்தும் கரோனாவினால் பாதிக்கவில்லை. சினிமாவைக்கூடப் புதிதாக வந்து இணையதள வெளிகளில் பார்த்துவிட முடிகிறது. ஆனால் பயணங்கள் மட்டுமே பெருந்தடையாகிக் கொண்டிருக்கிறது. சினிமா அல்லது ஊர்சுற்றல் இவ்விரண்டில் ஒன்று வாரக்கடைசிகள் கட்டாயம் இருக்கும். பலநேரங்களில் தனியனாகவும் அவ்வப்போது குடும்பத்தோடும் ஊர் சுற்றுவதில் சலிப்படைந்ததில்லை.
 
முதல் அலையில் பெரும்பயம். அந்த அடங்கலில் எங்கும் போகவில்லை. முடிவில் புனேவுக்குப் போய் கொஞ்சம் சுற்றிவிட்டுத் திரும்பினோம். இரண்டாவது அலையும் வந்து போய்விட்ட து. இப்போது மூன்றாவது அலைவரலாம் என்னும்; அறிவிப்புகள் வந்து தடைகள் போடப்படலாம் என்ற பதற்றமே எங்கேயாவது கிளம்பிப் போய்வரலாம் என்ற ஆசையைக் கிளப்பிவிடுகிறது. அதே நேரம் கூட்டம் இல்லாத இடமாகத் தெரிவுசெய்து காலையில் கிளம்பி, எங்கும் தங்காமல் மாலையில் திரும்பி விடவேண்டும் என்ற எச்சரிக்கையையும் உண்டாக்குகிறது.

*******

மதுரை திருமங்கலத்திலிருந்து காலையில் கிளம்பி, மாலையில் திரும்பிவிடும் தூரமாக இருக்கும் இடங்கள் குறைவு. அழகர்கோவில் ஓரளவு பக்கம். அதை விட்டால் சிறுமலை, வைகை அணை, கும்பக்கரை போன்றன இருக்கின்றன. காலையில் கிளம்பி மாலையில் திரும்பிவிடலாம். அதைத் தாண்டும் தூரத்தில் கோடைக்கானல்.மேற்கு மலைத் தொடர்ச்சியில் குரங்கணி, போடிமெட்டு, தேக்கடி, குமுளி, மேகமலை, மூணாறு இவையெல்லாம் 150 முதல் 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றன. காரில் சென்றாலே பயணத்திற்கு ஐந்துமணி நேரம் போய்விடும். அங்கிருக்கும் இடங்களைச் சுற்றிவர அதே அளவுநேரம் தான் கிடைக்கிறது. இடையில் சாப்பாடு, கொஞ்சம் ஓய்வு எனத்திட்டமிட வேண்டும்.

கரோனாவின் நெருக்கடியிலும் ஒருமுறை வைகை அணைக்கும் அதனருகில் இருக்கும் மாவூற்று வேலப்பர் கோவிலுக்கும் போய்வந்தோம். பிறகு ஒருநாள் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி மணற்பரப்பு; மற்றொருநாள் மேகமலை தேயிலைத் தோட்டங்கள். இவற்றுக்கெல்லாம் ஒருநாள் போதுமானதாக இருந்தது. பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் போன கோடைக்கானல் சுற்றுலாவில் பார்த்த இடங்கள் பட்டியலிடப்படும் இடங்கள்தான். கூட்டமாகக் கொண்டுபோய் இறக்கி விடுவார்கள். ஆசிரியர்களின் பார்வையில் சுற்றிவரவேண்டும். இவற்றைத் தாண்டி உள்பிரதேசங்களைப் பார்க்க வேண்டுமென்றால் தனியாகப் போகவேண்டும். தனியாக வாகன வசதிகள் வேண்டும். வாகனங்கள்இருந்தாலும் பார்க்க அனுமதி இல்லாத இடங்களும் அங்கு உண்டு. பல தடவை போன இடமென்றாலும் சலிப்பேற்படாத இடம் கோடைக்கானல். அங்கு இதுவரை போகாத கிராமங்களுக்கும் பார்க்காத இடங்களுக்கும் போகலாம் என்பதாக திட்டம் மாறியது.

கோடைக்கானல் நகரத்தைத் தாண்டி பூம்பாறைக்கும் மன்னவனூருக்கும் சென்று திரும்பினால் போதும் என்ற திட்டத்துடன் காலை ஆறரைக் கெல்லாம் கிளம்பி விட்டோம். நேரமிருந்தால் படகு குழாமில் ஒரு சுற்று என்பதைக் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டோம். பூம்பாறையில் இருக்கும் சிறிய வேலப்பர் சிலையைப் பார்க்க அனுமதி கிடைக்காது என்பதைச் சொல்லி விட்டார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களில் கூடும் கூட்டத்தை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. என்றாலும் அந்தப் பகுதித் தோட்டங்களில் விளையும் முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, பீட்ரூட், கிரினி, சப்போட்டா, பூண்டு போன்றவற்றைப் பார்க்கவும் பசுந்தழைகளுடன் அவற்றை வாங்கிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கும் என்பதால் நேரடியாக அங்கேயே போய்விட்டோம்.

பள்ளத்தாக்குகளுக்குள்ளிருந்து மேலே கிளம்பி வானத்தைத் தொடப்போவதுபோல் உயரும் பைன் மரக்காடுகளுக்குள் செய்யும் பயணமே கிளர்ச்சியூட்டுவதாக இருந்த து. அதனைத் தாண்டி, ஒற்றைச் சாலையில் மன்னவனூர் போகவேண்டும். அங்கு கூட்டம் அதிகம் இல்லை. 20 ரூபாய் நுழைவுச்சீட்டு மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது வனக்கட்டுப்பாட்டு அமைப்பு. அதனாலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நிலவெளியாக இருக்கிறது மன்னவனூர் பள்ளத்தாக்கு. இறங்கிச் செல்லும் நிலச்சரிவின் முடிவில் ஒரு நீர்த்தேக்கமும் அதனைச் சுற்றிய காட்டுப் பகுதியும் கண்கொள்ளாக்காட்சிகள். காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே வெள்ளை நிறச் செம்மறியாட்டுக் கூட்டங்களும் அரசின் கட்டடங்களும் தெரிகின்றன. முயல் பண்ணை, சினிமாப் படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட வெளிகள் என ஒவ்வொன்றும் பிளாஸ்டிக் இல்லாத வெளிகளாக இருக்கின்றன. அங்கிருந்த இரண்டு மணிநேரமும் இதுவரையிலான கோடைக்கானல் சுற்றுலாவைவிடக் கூடுதல் மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டது. மலையேறும்போது மழைக்கான அறிகுறியே இல்லை. மன்னவனூர்க் காடுகளுக்குள்ளிருந்து மேகங்கள் முன்னே வந்து கவிய, பின்னாலேயே சாரலும் தூறலுமாக வந்து நனைத்துவிட்டன.

வத்தலக்குண்டைத் தாண்டி அழகிய கண்மாய்க்கரையில் இருக்கும் உணவகத்தில் காலைச் சிற்றுண்டியின்போது வெயில் 31டிகிரி செல்சியஸ். தாண்டிக்குடி விலக்கில் 26, கோடைக்கானல் பேருந்து நிலையத்தில் 21. பூம்பாறை வேலப்பர் கோவில் முன்பு பூண்டு வாங்கும்போது 19; மன்னவனூர் முயல் வளர்ப்புக் கூட த்தில் 17 டிகிரி செல்சியஸ். இந்தத் தட்பவெப்பநிலையை உணர்வதும் அனுபவிப்பதும் தான் கோடைக்கானல் போன்ற மலைப்பிரதேசப் பயணங்களின் முதல் பலன்.
 
*******
நெல்லையில் இருந்தபோது இப்படியான ஒருநாள் பயணங்களையே அதிகம் திட்டமிடுவோம். பிள்ளைகள் வேலைக்காகவும் திருமணத்திற்குப் பின்னும் வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஒவ்வொருநாளும் இரவுத்தூக்கத்திற்கு வீட்டிற்கு வந்துவிட்டு ஒருநாள் ஓய்வு; அடுத்த நாள் பயணம் எனச் சுற்றிய நாட்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன. நெல்லையைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களுக்குப் பயண நேரம் அதிகம் போனால் ஒன்றரை மணிநேரமே பிடிக்கும். குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு, தூத்துக்குடி, உவரி, எட்டயபுரம், பாஞ்சாலக்குறிச்சி, திருமலைக்கோவில், அடவி நயினார் அணை, குண்டாறு அணை என ஒவ்வொன்றுக்கும் ஒருமணிநேரத்தில் போய்விடலாம். கன்யாகுமரிக்குப் போக ஒன்றரை மணிநேரம் ஆகும். அந்த மாவட்டத்தின் மேற்குக்கடற்கரைச் சுற்றுலா இடங்களான குழித்துறை, முட்டம், குளச்சல், பூவாறு போன்றவற்றுக்கோ மலைக்காடுகளுக்குள் இருக்கும் திற்பரப்பு அருவிக்கோ, தக்கலைக்கு முன்னால் இருக்கும் குமாரகோவிலுக்கோ, பத்மநாமபுரம் அரண்மனைக்கோ போகவேண்டும் என்றாலும் அதே நேரம் தான் ஆகும். கேரள எல்லையில் இருக்கும் நெய்யாற்றங்கரை, தேன்மலை, கோவளமெல்லாம் போக வேண்டுமென்றால் கூடுதலாக அரைமணிநேரம்; போக இரண்டுமணி நேரம்; வர இரண்டுமணி நேரம் ஆகும்.

*******



ஒருநாள் பயணங்களுக்குத் திட்டமிட்டு பல்கலைக்கழக மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லலாமென ஒருதடவை வகுப்பில் பேச்சைத்தொடங்கினேன். 2002-2003 ஆம் கல்வியாண்டு என்று நினைவு. இரண்டாம் ஆண்டு மட்டும் என்பது முடிவானது. வகுப்பிலிருந்த 19 பேரில் 17 பேர் பெண்கள், ஆண்கள் இருவரும் நெல்லையைத் தாண்டி மதுரைக்கும் திருவனந்தபுரத்துக்கும் போயிருந்தார்கள். அதுவும்கூட ஏதோ தேர்வு எழுதுவதற்காகவோ, காவல்துறைத் தெரிவுக்காகவோ தான். அவர்களோடும் வீட்டிலிருந்து ஒருவர் உடன் போயிருக்கிறார். அப்படியொரு துணையோடு கூடப் பெண்கள் நெல்லையைத் தாண்டியதில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

பெரும்பாலும் நகரப்பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்யும் மாணவிகள் அவர்கள். நீண்டு வளைந்து கூவெனக் கூவிக்கொண்டு போகும் ரயிலைத் திருநெல்வேலியின் நிலையத்தில் பார்த்திருக்கிறார்களே தவிர, அதன் கதவுகளைத் தொட்டுப் பார்த்ததில்லை; படிக்கட்டுகளில் ஏறியதில்லை; பெட்டிக்குள் இருக்கைகள் எப்படி இருக்கும் என்பதைச் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பதாகச் சொன்னார்கள். 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலியில் பட்டமேற்படிப்பு படித்த மாணவிகளின் நிலையிது. இந்த மாணவிகளுக்கு ஒரு பயண அனுபவத்தைத் தரவேண்டும் என்பதில் உறுதியான முடிவு எடுத்தேன். வெறும் பேருந்துப் பயணம் என்பதாக இல்லாமல் வேறுவேறு வாகனங்களில் ஏற்றி இறக்க வேண்டும் என்பது திட்டம்.

மாணவிகள் ஒவ்வொருவருக்கும் சுற்றுலாச் செல்லவும் ரயிலேறவும் ஆசைதான். ஆனால் இரவில் தங்குவதென்றால் வீட்டில் அனுமதி கிடைக்காது என்பதை உறுதியாகச் சொன்னார்கள். அதனை உள்வாங்கி 24 மணி நேரத் பயணத்திட்டம் உருவானது. “ஒரே நாள் பயணம் தான்; இரவு தங்கல் இல்லை” என்பதை உறுதி செய்தேன். மாணவிகளின் பெற்றோருக்குப் பொறுப்பேற்றுக் கடிதங்கள் எழுதினேன். வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்திற்குப் பெற்றோருடன்/ குடும்ப உறுப்பினர் ஒருவருடன் வந்துவிடவேண்டும். நான் உள்ளே மூன்றாவது நடைமேடையில் இருப்பேன். என்னிடம் ஒப்படைத்துவிட்டுக் குடும்ப உறுப்பினர் கிளம்பிவிடலாம். அடுத்த நாள் நள்ளிரவு ஒருமணிக்குத் திரும்பவும் வந்து அழைத்துச்செல்லலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுக் கொடுத்தேன்.

கொல்லம் – மதுரை பாசஞ்சர் ரயில் நெல்லைக்கு இரவு பன்னிரண்டிற்கும் ஒன்றிற்கும் இடையில் வந்துசேரும். கொல்லத்திலிருந்து வரும் ரயில் 12 மணிக்கு வந்து நெல்லையிலிருந்து மதுரைக்கும் 12.10 க்குக் கிளம்பும். அதேபோல் மதுரையிலிருந்து வரும் ரயில் 12.50 -க்கு வந்து ஒருமணிக்குக் கிளம்பிவிடும். அது தினசரி ரயில். அதனை முதன்மையான வாகனமாக ஆக்கிக் கொண்டு மற்ற திட்டங்கள் உருவானது.

மதுரைக்கு 5 மணிக்குச் சென்று சேரும் ரயிலிலிருந்து இறங்கிக் காலைக்கடனை ரயில் நிலையத்தில் முடித்துக் கொண்டு பேருந்துப் பயணமாகக் கொடைக்கானல் சென்று விடலாம். சுற்றுலாப்பயணிகளுக்கு அறைகள் வாடகைக்கு விடும் வீடொன்றில் ஓர் அறையை 12 மணிநேர வாடகைக்குச் சொல்லி வைத்திருந்தோம். பொருட்களை வைத்துக்கொள்ளலாம்; மூன்று நேரமும் உணவும் அவர்கள் தருவார்கள். ஒரு அறைக்கான வாடகை மட்டும் கொடுத்தால் போதும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. அதேபோல் நான்கு மணி நேர வாடகையில் ஒரு சிற்றுந்து ஏற்பாடு. ஒன்பது மணி முதல் ஒரு மணி வரை. வண்டியில் ஏறிக் கோடைக்கானலில் கல்விச் சுற்றுலாவினர் சென்று பார்க்கும் – குறிஞ்சி ஆண்டவர் கோவில், பில்லர் ராக், சூசைட் பாயிண்ட், குணா குகைப் பகுதி என ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு மதிய உணவு அதே வீட்டில்.

தங்கியிருந்த வீட்டிற்கு வந்த  பிறகு வாகனம் தேவையில்லை. அந்த வீடு ஏரிச்சாலைக்கருகில் தான். நடந்தே வந்து முதலில் படகுப்பயணம். அதற்குப் பிறகு அவரவர் விருப்பப்படி மிதிவண்டி, குதிரை, துப்பாக்கிச்சூடு. முடிந்தபின் கோக்கர்ஸ் வாக்கில் நடை. நடையின் முடிவில் ப்ரையண்ட் பூங்கா. ஆறுமணிக்குள் எல்லாம் பார்த்தாகிவிட்டது. மூன்றாவது சாப்பாட்டைக் கையில் வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறிவிட்டால் 9 மணிக்கு முன்னால் மதுரை ரயில் நிலையம் போய்விடலாம். அவரவர் சாப்பாடு அவரவர் கையில். பசித்தால் பேருந்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். இல்லையென்றால் மதுரை ரயில் நிலையத்தில் சாப்பிடலாம்.இல்லையென்றால் ரயிலில்கூடச் சாப்பிடலாம். இதுதான் திட்டம்.

கோடைக்க்கானல் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு குரல். திரும்பிப்பார்த்தால் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்த நண்பர் அங்கே இருந்தார். விசாரித்தபோது பேரிஜம் ஏரிப்பக்கம் ஒரு சூட்டிங் நடப்பதாகவும் சென்னைக்குப் போகும் வாகனங்களை அனுப்ப வந்ததாகவும் சொன்னார். நான்கு கார்களிலும் யாரையாவது ஏற்றிச் செல்லலாம் என இங்கே நிறுத்தியிருக்கிறோம் என்றார். திண்டுக்கல் வழியாகச் செல்லும் பயணிகள் யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நாங்கள் 19 பேர் இருக்கிறோம்; எங்களை மதுரையில் இறக்கிவிடச் சொல்லலாமா? என்று கேட்டேன். முதலில் தயங்கினார். கொடைரோட்டில் இறக்கிவிடலாம் என்றார். அங்கிருந்து நகர்ப்பேருந்தில் போய் விடலாம் என்றார். காரில் போவதால் ஒன்றரை மணி நேரத்தில் கொடை ரோடு போய்விடும் என்ற உத்தரவாதம் தந்தார்.

நான்கு கார்களிலும் ஏறிக்கொள்ள கார்கள் விரைந்தன. கொடைரோட்டில் இறங்கி, மதுரைக்கு நகர்ப்பேருந்து பிடித்து ரயில் நிலையத்தை அடைந்தபோது மதுரை– கொல்லம் ரயில் நடைபாதைக்கே வந்திருக்கவில்லை. அது வரும் நடைபாதையில் அமர்ந்து இரவு உணவை உண்டார்கள் மாணவிகள். ரயில் வந்தபோது ஏறியபின் ஒரு மாணவியும் கொஞ்சமும் கண்ணயரவில்லை. ஒவ்வொன்றையும் பேசிப்பேசிக் களித்தார்கள். தூரத்தில் தெரிந்த குகையைக் காட்டி ‘குணா குகை என்று சொன்னீங்க? ஏன் அந்தப் பெயர்?’ என்று மாணவி ஒருத்தி கேட்டாள்.  அந்தப் பயணத்தில் இருந்த 21 பேரில் என்னைத் தவிர ஒருவரும் கமலின் குணா படத்தைப் பார்த்திருக்கவில்லை. ஆனால் அந்தப் பாடலைக் கேட்டும் பாடியும் இருந்தார்கள்.  பாடும் இசைக்கு இடையே வரும் உரையாடல் காரணமாக அனைவருக்கும் அந்தப் பாட்டு அறிமுகம். ‘மனிதர் உணர்ந்துகொள்ள அது மனிதக்காதல் அல்ல’ என்ற சொற்கள் குகையின் பாறைகளில் மோதிமோதித் திரும்பும் காட்சிகளை எல்லோரும் பார்த்திருந்தார்கள்.  அந்தப் பாடல் காட்சிகளை விவரித்துச் சொல்லித்தான் குணா குகையை அறிமுகம் செய்தேன். அங்கிருந்து கிளம்பும்போது தொலைக்காட்சியில் குணா படம் போட்டால் பார்ப்பேன் என்று மாணவிகள் சொல்லிக்கொண்டார்கள்.

24 மணி நேரத்தில் ரயில் பயணம், பேருந்துப் பயணம், சிற்றுந்துப்பயணம், படகுப்பயணம், குதிரையேற்றம், மிதிவண்டியோட்டம், கடைசியாகச் சொகுசுக்கார்ப் பயணமென நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் ஓடிப்போன அந்த நாளை எப்படி வருணிப்பது எனத் தெரியாமல் கண்களை விரித்துப் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

மதுரை – கொல்லம் ரயில் நெல்லை ரயில் நிலையத்தில் நின்றபோது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த குடும்பத்தாரிடம் ஒப்படைத்தபோது பெரிய பாரத்தை இறக்கியபோல் இருந்தது எனக்கு. ஒவ்வொரு மாணவியும் விடைபெற்றுக்கொண்டு போனபின்பு எனது இருசக்கர வாகனத்தில் வீடுபோய்ச் சேரவேண்டும். முதல் நாள் ஒன்பது மணிக்கு நிறுத்திய வாகனக் காப்பகத்திலிருந்து வண்டியை எடுக்கவேண்டும். இப்போது நேரம் பின்னிரவு இரண்டுமணி. 24 மணி நேரத்தைத் தாண்டினால் இன்னொரு நாள் கட்டணம் வசூலிப்பார்கள்.
 
எல்லாரும் கிளம்பிய பின்பு மாணவி ஒருத்தியும் ஒருமாணவரும் மட்டும் கிளம்பவில்லை. அந்த மாணவியோடு முந்தினநாள் இரவு ஒருவரும் வந்திருக்கவில்லை என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். நான் ரயில் நிலையத்திற்குப் போவதற்கு முன்பே அவர்கள் இருவரும் இருந்தார்கள். மாணவியிடம்’ உன்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லையா?’ என்று கேட்டேன். யாரும் வரமாட்டார்கள்; வந்தாலும் இந்த நேரத்தில் போக முடியாது. காலையில் தான் பேருந்து இருக்கிறது என்றாள்

நாங்கள் இருவரும் ஒரே பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும். நேற்று இருவரும் ஒரே பேருந்தில் தான் வந்தோம். பல்கலைக்கழகத்திற்கு இருவரும் ஒன்றாகத்தான் வருவோம்; ஒன்றாகவோ போவோம் என்றாள். மாணவர் ஒன்றும் பேசவில்லை. திரும்பவும் மாணவியே தொடர்ந்தாள். “எங்கள் ஊருக்கு அடுத்த ஊர் இவனோட ஊர். அவன் வருகிறானா? என்று பார்த்துவிட்டுத்தான் அந்தப் பேருந்தில் ஏறுவேன். எங்கள் ஊருக்குப் போகும் பேருந்து நாளைக் காலை 5.30 -க்குப் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் . அதில் நாங்கள் போய்க்கொள்வோம். அதுவரை இங்கே ரயில் நிலையத்தில் இருந்து விட்டுக் காலையில் போகிறோம் என்றாள். அவர்கள் பேச்சில் குழப்பமோ, தயக்கமோ இல்லை. என்றாலும் அவர்களை அங்கே விட்டுவிட்டுப் போக மனம் தயாராக இல்லை. ‘சரி, நானும் இங்கேயே இருக்கிறேன். காலையில் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்க்கொள்கிறேன்’ என்றேன். ரயில் நிலையப் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எல்லா நடைமேடையிலும் எல்லா வயதினரும் உட்கார்ந்தும் படுத்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நெல்லையின் கொசுக்கள் தீவிரமாகப் பணியைச் செய்துகொண்டிருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்