காண்மதி நீவிர் ; கண்டா வரச்சொல்லுங்க...



இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையம் (2020 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் சாகித்ய அகாடெமி விருது எழுத்தாளர்) எழுதிய கதையொன்றுடன், நீலம் மாத இதழ் (வெளியீடு: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் அமைப்பு) கைக்கு கிடைத்தது. பொதுவாக, இமையத்தின் சிறுகதைகளைக் கிடைத்தவுடன் வாசித்து விடுவதுண்டு. அவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் ஏற்படுத்திய தாக்கம் அது. கோவேறு கழுதைகளை வாசித்துவிட்டு, புதுவைக்கு வந்த இமையத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த நாளில் தொடங்கிய நட்பு கால்நூற்றாண்டுக் காலமாகத் தொடர்கிறது.

அவரது கதைகளை வாசிப்பது நட்புக்காக அல்ல; அந்தக் கதைகளின் முழுமைக்காக மட்டுமே. கதைகளின் வழி உருவாக்கும் புனைவு வெளிகளும், அவற்றில் உலவும் மனிதர்களும் தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களின் ரத்தமும் சதையுமானவர்கள். இந்தியாவின் நீண்டகாலச் சாதியச்சிக்கல்களுக்கும், சமகால அரசியல் சூழல்களுக்கும் முகங்கொடுத்து அலைக்கழிக்கப்படும் மனிதர்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் இமையம். தமிழ்நாட்டுக் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வாழ்பவர்களின் உலகத்தை அவரளவுக்கு எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் இப்போது இல்லை என்பது எனது வாசிப்பின் வழி உணர்ந்த உண்மை.

அவரது புனைவுவெளியையும் மனிதர்களையும் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக எழுதிக்காட்டும் இமையத்தின் புதிய கதையொன்றை வாசிக்கும் மனநிலையுடன் நீலம் (ஜூலை, 2021) இதழில் வந்த அந்தக் கதையை வாசிக்கத் தொடங்கினேன். கதை இப்படித் தொடங்கியிருந்தது:

பேருந்துநிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சி நாதன். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. நடத்துநரிடம் “கடலூருக்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லி பணத்தைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கிக் கொண்டான். அவன் வருவதற்கும், பேருந்து புறப்படுவதற்கும் தயாராக இருந்த து. ஏறி உட்கார்ந்த சில நிமிஷங்களிலேயே பேருந்து புறப்பட்டதெல்லாம் நல்ல சகுனமாக தெரிந்தது. போகிற காரியம் ஜெயமாகும் என்று நினைத்தான்.

படித்தவுடன் தலைப்போடு தொடர்புடையதாகக் கதையின் ஆரம்பம் இருக்கிறதா? வாசிப்புமனம் கேட்டுக்கொண்டது. ஒரு நல்ல கதையின் தொடக்கம், கதைத் தலைப்போடு இயைபுகொண்டதாகவும், கதையின் மையநிகழ்வை அல்லது விவாதத்தை முன்வைக்கப்போவதாகவும் இருக்கும் என்ற அடிப்படையின் மேல் எழுந்த கேள்வியிது. ‘நல்ல சகுனமாக தெரிந்தது; போகிற காரியம் ஜெயமாகும்’ என்ற குறிப்பு காணாமல் போனவர்கள் என்ற தலைப்போடு தொடர்புடையதாகத் தோன்றியது. ஆனால் அந்தத் தலைப்பு கதையைத் தொடர்ந்து வாசிக்க விடாமல் தடுத்தது.

காணாமல் போனவர்கள் என்னும் தலைப்பு, ஒரு கருத்துருவாக மாறி, ஈழத்தமிழ் வாழ்வின் சமகால இலக்கிய உரிப்பொருள்களில் ஒன்று என்பது மேலெழும்பி மிதக்கத் தொடங்கியது. தொடர்ந்து இவ்வுரிப்பொருள் உலக மொழிகள் பலவற்றிலும் எழுதப்பெற்ற போரிலக்கியங்களின் முதன்மையான உள்ளடக்கம் என்பதும் முன் நின்றது. எல்லாவகைப் பேரிலக்கியங்களும் அதனையொத்த பனுவல்களை நினைவூட்டுவதன் வழியாகவே பேரிலக்கியங்களாக மாறுகின்றன. தனியீழத்துக்கான ஈழத்தமிழர்களின் போர்க்கால இலக்கியத்திலும் போருக்குப் பிந்திய காலத்து இலக்கியப் பனுவல்களிலும் வாசித்திருந்த ‘காணாமல் போனவர்கள்’ பற்றிய சித்திரிப்புகளும்,‘காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடியலைந்தவர்களி’ன் பரிதவிப்புகளும், காணாமல் ஆக்கியவர்கள் மீது கொண்ட கோபத்தின் வெக்கையும் எனப் பலவும் மனதில் நிழலாடின. அந்த நிழலாட்டங்கள், இமையத்தின் கதையைப் பின்னர் வாசிக்கலாம் எனத் தள்ளிவைத்துவிட்டுக் கைவசமிருக்கும் பனுவல்கள் சிலவற்றில் அந்த உணர்வுகளைத் திரும்பவும் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.

1990-கள் தொடங்கி ஈழத்தமிழ் இலக்கியத்தைக் குறிப்பாகப் போர்க்கள இலக்கியங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றுள் காணாமல் போனவர்களைப் பற்றிய பதிவுகள் வரத் தொடங்கிய காலமாக முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான ஆண்டுகளையே சொல்ல வேண்டும். போரில் சரணடைந்தவர்களாகவும் சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவும் பல ஆயிரங்களில் எண்ணிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் மனிதர்களில் பலரை நேர்காணல் செய்து பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. நீண்ட உரையாடல்களாகத் தொகுக்குப்பட்டு நூல்களாகவும் வந்துள்ளன. நேர்காணல் பதிவுகளைத் தாண்டிக் கவிதைகளிலும் கதைகளிலும் நாவல்களின் பகுதிகளிலும் கூடக் காணாமல் போனவர்களின் பிம்பங்களும் அவர்களைத் தேடுபவர்களின் குரல்களும் அலைந்து கொண்டிருப்பதைப் பலரும் வாசித்திருக்கக்கூடும்.


சரணடைந்தவர்களைக் கொன்றொழித்த நிகழ்வுகளையும், காணாமல் ஆக்கப்பட்ட செய்திகளையும் அவ்வப்போது உணர்ச்சிகரமான கவிதைகளில் எழுதிக் காட்டியவர் இளம்கவி தீபச்செல்வன். குறிப்பான நிகழ்ச்சிகளையும் பொதுவான தவிப்புகளையும் எழுதிய அவர் ஒரு கவிதையில், காணாமல் போன பூனையை முன்வைத்து நிலைமையை உணர்த்துவதோடு, சொந்த நாட்டு மக்களையே வேற்று மனிதர்களாகப் பாவிக்கும் அரசின் குரூரமான நீதிபரிபாலனத்தையும் ஆற்றாமையோடு முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. .

குழந்தைகள்தான் உன்னை

கடத்தியிருக்க வேண்டும்


அவர்கள் மீண்டும் துவக்குகளை

நீட்டத் தொடங்கியுள்ளனர்

பீரங்கிகளை திருப்பி விட்டனர்

சோதனைச்சாவடிகளை திறந்து கொண்டனர்


இதற்குள் நீ எங்கு சென்றாய்?


யாருமற்ற எனது நண்பனுடன்

சுயமி எடுத்து,

பூச்சி பூரான்களை துரத்தி

ஒன்றாய் உணவருந்தி

காவல் செய்து

ஒரு குழந்தையைப் போல

மடியுறங்கி விட்டு எங்கு சென்றாயோ?


எதற்காகவோ தொடங்கிய யுத்தம்

மீண்டும் நமது கழுத்தை நெரிக்கிறது

பொழுது சாயுமுன்னே

கதவுகளை மூடும் உத்தரவில்

உனை எங்கு தேடுவேன்?


புகைப்படங்களை துரத்திப் பிடித்து

பாடல்களை கைது செய்து

கண்ணீரை சிறையிலடைந்து

நினைவுகளை விசாரணை செய்கிற நாட்டில்

வீட்டை விட்டு ஏன் வெளியேறினாய்?


வீட்டுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட தேசத்தில்

வளர்ப்புப் பிராணிகளும் தொலையுமா?


மனிதர்களே கூட்டம் கூட்டமாய்

இல்லாமல் ஆக்கப்படுவதே யுத்தமும் அறமுமாயிருக்க

எந்தக் காவல் நிலையத்தில் புகாரளிக்க?

எந்த நீதிமன்றில் வழக்குரைக்க?


உன் குழந்தைமை விழிகள்

குறும்புச்செயல்களால்

ஈர்க்கப்பட்ட யாரோவொரு குழந்தையால்

நீ தூக்கிச் செல்லப்பட்டிருக்கலாம் என்றே

எனை ஆற்றிக்கொள்கிறேன்

எல்லாவற்றையும் ஆற்றியதுபோல்.


காணாமல் போன பூனைக்குட்டி என்று தலைப்பிட்டுக் குறியீடாய்க் காணாமல் போனவர்களின் நிலையைச் சொன்ன தீபச்செல்வன், இன்னொரு கவிதையில் நேரடியாக கேட்கிறார். அதையும் வாசித்துப் பார்க்கலாம்:

வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்.
இந்த வானொலி* வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஓலிபரப்பிக்கொண்டிருக்கிறது.
கைகளுக்குளிலிருந்து எப்படி நழுவி விழுந்திர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா** உன்னை*** தேடிக்கொண்டிருக்கிறாள்.
உன் ஞாபகமாய் என்னிடமிருக்கிற ஒரு சேட்டை
எப்படி பத்திரிகையில் விளம்பரமாக பிரசுரிக்க முடியும்?
புகைப்படங்கள் தொலைந்த வழியில்
வழி தவறியவர்களின்
குருதியுறைந்த உடல்கள் பற்றிய கதைகளை
வேறொரு பத்திரிகையின்**** மற்றொரு
பக்கம் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

தொலைந்தவர்களைகடிதங்களால் விசாரித்துக்கொண்டேயிருக்கிறது
இன்னொரு பத்திரிகை. *****
தேடிக்கொண்டிருப்பவர்களின்
துயரம் மிகுந்த சொற்களை நிரப்பிய கடிதங்களை
கொண்டு வந்தபடி
ஒவ்வொரு வாரமும் வந்துகொண்டிருக்கிறது.

எல்லோரும் திரும்பிவிடுவார்கள் என்ற
நம்பிக்கையை மட்டுமே இந்தக் கடிதங்கள் வாசிக்கின்றன.
தவறி விழுந்த குழந்தையின்
அழுகை எப்படி அடங்கிப்போயிருக்கும்?
கை நழுவி மறைந்த சிறுமியின்
இரவு எப்படியிருக்கும்?
தனித்து தொலைந்த சிறுவனின் வழி எப்படியிருக்கும்?
குழந்தைகளை இழந்த தாயின் வலி எப்படியிருக்கும்?
மனைவியை பிரிந்த கணவனின் திசை எப்படியிருக்கும்?
சகோதரர்களை பிரிந்தவர்களது துயர் எப்படியிருக்கும்?
எல்லோரையும் பிரிந்தவர்களது துயரால் மிகுந்திருக்கிற
கடிதங்கள் அதிகரித்தபடி பிரிவை அளந்துகொண்டிருக்கின்றன.
பதில் வார்த்தைளற்றுக் கிடக்கிற கேள்விகளால்
இந்த இரவு குலைந்து கிடக்கிறது.

காத்திருப்பும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
அவர்கள் தவறிய வழிகள் மூடுண்டபடி
பிரிவை உயர்த்துகிற கடிதங்கள் மிக ஆழமாக தாழ்க்கப்பட்டு
மண் கொட்டிப் பரவியிருக்கிறது.
யாரும் திரும்பியதாக இல்லை என்பதை
மிகச் சோகமாக சொல்ல முடியாமல்
கரைந்து போகிறது அந்த வானொலியின் இரவு நிகழ்ச்சி.
மகிழ்ச்சி தரும் சொற்களான

தவறிய யாரேனும் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றுக்காக
உன் அம்மா காத்துக்கொண்டிருக்கிறாள்.
(இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்)

 

தீபச்செல்வனின் ஆற்றாமைக் குமுறலோடு இணைகின்ற இன்னொரு குரலாக இருப்பவர் ஈழத்தின் மூத்தகவி கருணாகரன். அவரது தொகுப்புகளுக்குள்ளும் சில பத்துக்கவிதைகளாவது இந்தப் பொருண்மையில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு கவிதைகளை வாசிக்கலாம். முதல் கவிதையின் தலைப்பு நெருப்பு:

இன்னும் பொழுதடங்கவில்லை

மாடுகள் பட்டியில் சேரவில்லை

கோழிகள் கூடடையவில்லை

மல்லிகை மலர்ந்து கொண்டிருக்கிறது

நீ இன்னும் வரவில்லை


ஊற்றி வைத்த தேனீர் ஆறுகிறது

உடலும் மனமும் கொதிக்கிறது (நெருப்பு)



இன்னொரு கவிதைக்கு காணாமற் போனவனின் மனைவியின் சொல் எனத்தலைப்பிடப்பட்டிருக்கிறது:


என்னுடைய தூங்காத இரவுகள்

என்று முடிவுறும்?

போரின் இறுதிக் கணத்தில்

தோற்று நீ சரணடைந்த போதிருந்து

இக்கணம் வரை நான் தூங்கவில்லை.



தோல்வி ஒரு நிரந்தரத் துக்கமாகி

என் தூக்கத்தை உன்னுடன் எடுத்துச் சென்றது

உன்னைப் பற்றிய சேதியேதுமின்றி

ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன

இன்னுமுன் பிள்ளைகளின் கேள்விக்கு

என்னிடமில்லைப் பதிலேதும்

யாரிடமுமில்லை.



நீ எங்கேயென்று

நானும்தான் கேட்கிறேன்

சரணடையும் போது உன்னை ஏற்ற

படையினரும் கேட்கிறார்கள்

நீ எங்கே என்று.

அவர்களுடைய அரசும் கேட்கிறது

நீ எங்கே என்று.

இந்த உலகமும்தான் கேட்கிறது

நீ எங்கே என்று.


உன்னைத் தேடும் இந்தக் கேள்வியின்

வலி எனக்கன்றி வேறெவருக்குண்டு?

தூங்காத இரவுகளும் பிரிவும்

எனக்கன்றி வேறெவருக்குமில்லை.


புள்ளிவிபரக் குறிப்புகளில் மட்டும்

உறைய விடப்பட்டிருக்கும் உன்னைப் பற்றி

தூங்க முடியாத கேள்விகளோடு தவிக்கும்

குழந்தைகளுக்குப் பதிலளிக்க முடியாத

இந்த வலியிலிருந்து

என்று நான் வெளிச் செல்வேன்?

எப்படிச் செல்வேன்?


கவிகளின் குரல்கள் நேரடியாகப் பேசாமல் குறியீடுகளால் விவரிக்கின்றன என்றால், புனைகதைகள் வெவ்வேறு விதமான உத்திகளில் அதையே முன்வைத்துள்ளன. தேர்ந்த கதை சொல்லியான ஷோபா சக்தியின் மிக உள் அக விசாரணை அப்படிப்பட்ட ஒருகதை. அரசியல் நிகழ்வுகளை விவரிக்கும்போது அங்கதமும் எள்ளலும் கொண்ட மொழியை உருவாக்கிக் கொள்ளும் ஷோபாசக்தி, ஒரு சிறிய கிராமத்தில் 86 பேரை வரிசையாக நிற்கவைத்து சவக்குழிகளில் புதைக்கப்பட்ட நிகழ்வை இருநபர் நீதிபதிகள் விசாரித்த முறையைப் பகடிமொழியால் விவரிக்கிறார். போர்க்காலத்திலும் போருக்குப்பின்னாலும் காணாமல் போனவர்களைப் பற்றிய விசாரணைகள் இலங்கையில் எப்படி நடந்தன என்பதை முன்வைப்பதே அந்தக் கதையின் மைய விவாதம். போர்க்காலத்தில் காணாமல் போய் ஆச்சரியமாகப் பல ஆண்டுகள் ஒரு கிணற்றுக்குள் உயிர் பிழைத்திருந்த தன் பெயர் மறந்த ஒருவரின் சாட்சியாக விரியும் கதை அது.

“நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்தச் சமாதானத்தை நாங்கள் எதற்காகவும் இழக்கத் தயாரில்லை. நீர் சமூக அக்கறை கொண்டவரென்றும் ஜனங்களிற்குச் சேவை செய்வதில் ஆர்வமுமுடையவர் என்றும் சொன்னீர். ஆகவே இந்த நாட்டின் பொறுப்புணர்வு மிக்க நற்பிரஜை நீர் என்றே கருதுகின்றோம். சமாதானத்தைக் காப்பாற்றுவது உம்முடைய கடைமை!”

நீதிபதிகள் விசாரணை முடிந்ததன் அடையாளமாக எழுந்து நின்றார்கள். பக்குவமாக வெளியே தூக்கி எடுக்கப்பட்டது போலவே, அந்த மனிதன் பக்குவமாக மீண்டும் கிணற்றிற்குள் இறக்கப்பட்டு கிணறு மறுபடியும் மூடப்பட்டது

எல்லா விசாரணைகளும் ஊத்திமூடும் விசாரணைகளாகவே நடக்கின்றன என்பதே கதையில் ஷோபாசக்தி வைத்த குற்றச்சாட்டு. அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டிய புனைவுகளைப் போலவே போராளிக்குழுக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கதைகளையும் புலம்பெயர் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். போராளிக்குழுக்களின் விசாரணைகளும் கூட நியாயத்தின் பக்கம் இருந்ததில்லை என்றும், உடன்பாடாக நடக்காதவர்களைப் போராளிக் குழுக்களும் காணாமல் ஆக்கியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் எழுத்துக்களும் கிடைக்கின்றன. அப்படியான ஒரு கதையாகப் பொ. கருணாமூர்த்தியின் கதையொன்று இமையம் எழுதிய தலைப்பிலேயே வந்துள்ளது (காணாமல் போனவர்கள் நடு இதழ் 14, தை,2019)

துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் மாத்திரமல்ல அவர்களுக்கு நிழல்கொடுத்தவர்களும் அல்லக்கைகளுங் கூட யாரும் எதிர்த்துக் கதைக்கமுடியாதபடி சண்டியர்களாக ஊரில் மாறிவிட்டிருந்தனர். போராளிகளின் உளவுப்பகுதியால்  குற்றங்காணப்பட்டுக் கைப்பற்றப்பட்ட எவரும் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை, அதிலும் ஈழமோகனதும் அவனுடைய சகாக்களாலும் கைப்பற்றப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டுவருதல் சாத்தியமில்லையென்பதை நவத்தாரும் அறிந்திருந்தார்.


இவையல்லாமல், இயக்கத்தில் சேர விரும்பாதவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று இயக்கவாதிகளாக்கியதைப் பலரும் எழுதியிருக்கிறார்கள்.

புனைகதைகளைப் போலல்லாமல் நேர்காணல்கள் முகத்திலறைந்தார்ப்போல நடந்ததைப் பதிவு செய்யக்கூடியன. ‘புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ( தொ-ர். கருணாகரன்) என்ற நூலில் இடம்பெற்றுள்ள நேர்காணல்களில் மூன்று பெண்களின் குரல்கள் அழுத்தமாக ஒலிக்கின்றன. ஆவேசமாகப் பேசும் சங்கரன் கவியும் (நாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோமா? தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமா?) நிதானமாகக் கேள்வி எழுப்பும் தமிழ் விழியும் (விடுதலைக்காகப் போராடியவர்கள்; எதிரிகளிடம் சரணடைந்தோம்) புலம்பலாக மொழியும் கலைமகளும் (இராஜேஸ்வரி- கண்ணீருடன் வாழும் வாழ்க்கை) கணவன்மார்களைச் சரணடைய அனுப்பிவிட்டுத் திரும்பவும் வந்துவிடுவார்களென்று காத்திருந்த பெண்கள்.

சிலவேளை எல்லாத்தையும் நினைத்தால் தலை சுற்றும்.இவ்வளவு பொய்யர்களும் எங்கே இருந்தார்கள். ஏமாற்றும் நடிப்பும் பொய்யும் எண்டுதான் நிலைமை இருக்கு. (இராஜேஸ்வரி)

என்று கேட்பார்

இப்ப என்னுடைய கேள்வி என்னவென்றால், இப்பிடிச் சரணடைந்த ஆட்களை எப்படி நாங்கள் மீட்கிறது? அவையளைப் பற்றிய சேதிகளை தகவல்களைப் பெறுகிறது? சரணடையும்போது கூடப்போன பெண்களையும் அந்தச் சின்ன ஞ்சிறு குழந்தைகளையும் என்ன செய்திருக்கிறார்கள்? அதுகளுக்கு நடந்தது என்ன? அதுகள் இப்படி ஒரு தகவலுமே தெரியாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி இந்த உலகம் என்ன சொல்லுது? (சங்கரன் கவி)

என்று கேட்டவருக்கும்,

“நான் அதுக்குப் பிறகு இரண்டு வருசமாகக் கணவரைத் தேடாத இடமேயில்லை. ஐ.ஸி.ஆர்.ஸி, பாதுகாப்பு அமைச்சு, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, மனித உரிமைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு என்று எல்லா இடங்களுக்கும் கடிதங்களும் கொடுத்திருக்கிறேன். என்னைப் போல பலபேர் இப்படி ஒரு முடிவும் தெரியாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள்” (தமிழ் விழி: விடுதலைக்காகப் போராடியவர்கள்; எதிரிகளிடம் சரணடைந்தோம்)

என்று நம்பிக்கையிழந்தவருக்கும் பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. பதில் சொல்ல வேண்டியது போரை நடத்திய சிங்களப்பேரினவாத அரசு மட்டுமல்ல. அப்போரை வேடிக்கை பார்த்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐ.நா. போன்ற உலக அமைப்புகளும் தான்.

போரின் பின்னணியில் காணாமல் போனவர்களை முன்வைத்த ஈழத்தமிழ் இலக்கியப் பனுவல்களை வாசித்தபின் இமையத்தின் காணாமல் போனவர்கள் கதையை முழுமையாக வாசித்து முடித்தேன். வாசித்தபின் ஒரே உரிப்பொருள் வெவ்வேறு பின்னணியில் விவாதிக்கப்படும் முறையை முன்வைக்கத்தோன்றியது.

இமையத்தின் கதையில் காணாமல் போனவர் கதைசொல்லியாக வரும் கொளஞ்சிநாதனின் தந்தை கலியமூர்த்தி. மனைவியை இழந்த கலிய மூர்த்திக்கு வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணம் எதுவும் இல்லை என்பது மகனின் நம்பிக்கை. ஆனால் காணாமல் போய்விட்டார். தேடிக்கண்டு பிடித்துத் தரும்படி புகார் பெறப்பட்ட காவல்துறையிடமிருந்து வரும் அழைப்பில் தொடங்கும் கதை, முன்னும் பின்னுமாக கொளஞ்சிநாதனின் எண்ணவோட்டங்களால் பின்னப்பட்டுள்ளது. அவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையை விடவும், ஒரு மனிதன் காணாமல் போவதுபோல் சிலகோடி மனிதர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஆயிரம்பேர் காணாமல் போயிருக்கிறார்கள்; அவர்களை உறவினரும் காவல் துறையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பெரும் உண்மையை வாசிப்பவர்களின் முகத்தில் அறைந்து சொல்கிறது இமையத்தின் கதை.

பிச்சைக்காரர்களாகவும், அனாதைகளாகவும், பைத்தியங்களாகவும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களின் அவல நிலைக்குப் பின்னால் இருக்கும் துயரத்தைச் சொல்லும் கதை, இந்திய மனிதர்கள் இறந்தவர்களுக்குச் செய்து முடிக்கவேண்டிய சடங்குசார்ந்த கடமைகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் வாழ்வியல் நிலைபாட்டையும் தீவிரமாக முன்வைக்கிறது. உறவினர்களில் ஒருவர் காணாமல் போகும் நிலையில் அந்தக் குடும்பம் அடையும் குற்றவுணர்வும் அவமான நிலையும் எனப் பலவிதமான உணர்வுகளைக் கலந்து தரும் இமையத்தின் காணாமல் போனவர்கள் கதை அண்மையில் நான் வாசித்த சிறந்த கதைகளில் ஒன்று.
 கண்டா வரச்சொல்லுங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்