மொழி: வல்லாண்கை ஆயுதம்



பேச்சு இயல்பான நிலையில் தகவல் பரிமாற்றமாக இருக்கிறது. தகவல் சொல்லும் மொழி, அடை, உரி, போன்ற முன்னொட்டுகளைக் குறைவாகவே பயன்படுத்தும். அடைமொழிகள் இல்லாத, உரிச்சொற்கள் பயன்படுத்தாத மொழியின் வழியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள், அதிலிருந்து தங்களுக்குப் பயன்படுவனவற்றை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மற்றவைகளை விட்டுவிட்டு விலகிப்போவார்கள்.


பேச்சு, கலையாக மாறும்போது மொழி பலவிதமான அணிகலன்களை அணிந்துகொள்ளும். அணிகளைப் பூட்டிக் கொண்டுப் பகட்டுக்காட்டும். அந்தப் பகட்டு நேரடிப்பகட்டாகவும் மறைமுகப் பகட்டாகவும் அமைவதுண்டு. பேச்சிலும் எழுத்திலும் இவ்விருவகைப் பகட்டையும் உருவாக்கலாம். சொல்லணிகளைக் கையாளும் பேச்சாளர்கள் ஒருவகைப் பகட்டை உருவாக்குவார்கள். எழுத்தில்  கவிதை வடிவம் அதிகம் மறைமுகப் பகட்டைப் பயன்படுத்தும் வடிவம். ஏதென்ஸ் நகரத்து நாற்சந்திகளிலும் முச்சந்திகளிலும் சாக்ரடீஸ் ஆற்றிய சொற்பொழிவுகளும் இயேசுவின் மலைப்பிரசங்கங்களும் சொற்களின் வலிமையைக் காட்டிய எடுத்துக்காட்டுகள்.

 பகட்டை உருவாக்க நினைக்கும் நபர்கள்  தனது உடலுக்குள் பகட்டின் கருவிகளை நிரப்பிக்கொள்ளும் போது பலவிதமான உணர்வுகளை உருவாக்கும் திறனைப் பெற்றவர்களாக மாறுவார்கள். அவைகளே மெய்ப்பாடுகள். மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் நபர்களின்  முன்னால் இருக்கும் நபர்களின் பாடு பலநேரங்களில் திண்டாட்டம்தான். எழுப்பப்படும் இசையோடு சேரும் மந்திரமொழிகள் கேட்கும் தனிநபரின் தன்னிலையைக் கரைத்துச் சொல்பவரிடம் மண்டியிடச் செய்துவிடும். சொல்பவர் ஆணாக இருக்கும்போது கேட்கும் பெண் அந்த ஆணின் இச்சைக்குப் பணிந்துவிடும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்ணின் சொற்களாக வரும் மந்திரச்சொற்களுக்கு ஆண்கள் அடிபணிவதும் நடக்கும். சாமியார்கள்/ சாமியாரிணிகளிடம் ஏமாறும் கதைகளில் மொழியின் பங்கை ஆய்வுசெய்து விளக்கவேண்டும். சாமியார்கள் பெண்களிடம் வேண்டுவது அவர்களது உடலாக இருக்கிறது. சாமியாரிணிகள் ஆணின் உடலை வேண்டுவதைவிடப் பொருளை- பணத்தை- வேண்டுகிறார்கள்.

பேச்சை, கலையாக ஆக்கும் வல்லமை உள்ளவர் அரசியல்வாதியாக ஆகும்போது மொழியைக் கொலை மற்றும் தற்கொலையின் கருவியாக ஆக்க முடியும். உணர்ச்சிகளைத் திரட்டி மெய்ப்பாடுகளாக்கித் தனது உடலில் நிரப்பி அதன் கணத்தைத் தன்முன்னே இருக்கும் மனிதர்களிடத்தில் கடத்தும் கலையைப் பற்றி விரிவாக நடிப்புக்கலைக் கோட்பாடுகள் பேசுகின்றன. பரதரின் நாட்ய சாஸ்திரத்தில் சஹிருதயர் என்றொரு சொல் உண்டு. நடிப்பவர்களின் இதயமும் பார்க்கிறவர்களின் இதயமும் ஒன்றாவதைப் பற்றிய புரிதலை உண்டாக்கும் சொல் அது. இதயம் ஒன்றாதல் வழி உடலும் ஒன்றாகும். செயலும் ஒன்றாகும். கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை அது.

இந்த வித்தையைக் கற்ற இரு ஜெர்மானியர்கள் தங்கள் மொழியைக் கொலைக்கருவிகளாக ஆக்கிவிட்டார்கள் என்றார் இன்னொரு ஜெர்மானியர். தத்துவத்தையும் இறையியலையும் முன்னெடுக்கப் பயன்பட்ட ஜெர்மானிய மொழி கோயபல்ஸிடமும் ஹிட்லரிடமும் கொலைக்கருவியாகவும் தற்கொலையின் ஆயுதமாகவும் ஆனதைக் கண்ட பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் என்னும் அரங்கக் கலையியல் வல்லுநர் அப்படியான மொழியையும் நடிப்புக் கோட்பாட்டையும் நிராகரிக்க வேண்டும் என்றார். தன்னுடைய அரங்கியல் கோட்பாட்டை தூரப்படுத்து நிலைக் கோட்பாடு என்றார் ப்ரெக்ட். வெர்ப்ரம்டங்க்எபக்ட் (Verfremdungseffekt) என்ற உச்சரிப்புக்கொண்ட ஜெர்மானியச் சொல்லுக்கு அந்நியமாக்கல் விளைவு என மொழிபெயர்ப்பு தரலாம். ஆங்கிலத்தில் அதன் மொழிபெயர்ப்புச் சொல் -

ஜெர்மானிய மொழிக்குச் சற்றும் குறைந்ததல்ல சம்ஸ்க்ருதமும் தமிழும். தமிழக வரலாற்றில் பக்திமார்க்கம் பரவிய பிற்காலச் சோழர்கள் காலத்திலும் பிற்காலப் பாண்டியர்கள் காலத்திலும் தமிழும் சம்ஸ்க்ருதமும் இணைந்து நடத்திய கூட்டுக் கொலைகளும் கூட்டக் கொலைகளும் ஏராளம். அவை குறித்த தகவல்களை நாயன்மார்களின் தேவாரப்பண்களாகவும்  ஆழ்வார்களின் பாசுரங்களாகவும் தசாவதாரக் கதைகளாகவும், திருவிளையாடல் புராணங்களாகவும் தொகுத்து வைத்திருக்கிறது தமிழ் இலக்கியவரலாறு. கோயில்களின் கல்வெட்டுகளும் பதிவுசெய்து வைத்திருக்கின்றன. மெய்க்கீர்த்திகள் பொய்சொல்லவில்லை.

நிகழ்கால அரசியல்வாதிகளில் உணர்ச்சி மயமான பேச்சாளர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளின் தொண்டர்களே மாற்றுக் கருத்துகளை ஏற்காதவர்களாகவும் மாற்றுக் கருத்தாளர்கள் மீது வன்முறையைச் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். திடீர்த்தாக்குதல்கள் நடத்தும் துணைக் குழுக்களை நேரடியாக வழிநடத்தாமல், உணர்ச்சிமிக்கப் பேச்சாளர்களின் வசம் ஒப்படைத்து விடுகின்றன. அழுகை, அச்சம், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளின் கலவையாகத் தங்கள் உடலையும் உடலின் மொழியையும் மாற்றிக்கொண்டு அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகள் கடத்துவன சொற்களின் அர்த்தங்களை அல்ல; உணர்ச்சிகளின் திரட்சியை.

தேசிய அளவில் சமயநம்பிக்கைகளைப் புனிதமாக்கி உணர்ச்சி வசப்படுத்துதல் நடக்கிறது என்றால், மாநில அளவில் இனம் மற்றும் மொழியின் மீதான புனிதம் அதே வேலையைச் செய்கின்றன. புனிதங்களுக்குத் துணையாக மொழி பயன்படும்போது அதன் முதன்மை வினையான தகவல் தொடர்பென்னும் அடிப்படையை இழக்கிறது. வல்லான் கை ஆயுதமாக மாறிக் கொலைகளைச் செய்கிறது; தற்கொலைகளைத் தூண்டுகிறது. சொற்களின் ஆட்டத்தைச் சொல்லித்தீர்க்க முடியாது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்