கவனிக்கத்தக்க பொறுப்பளிப்பு

 

கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்போது தினசரிகளில் இடம்பெறும் அமைப்பாக -  உச்சரிக்கப்படும் பெயராகத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இருந்து வருகிறது. விருது வழங்கப்படுவதற்கான காரணங்களை முன்வைக்காமலும், குறிப்பிட்ட எண்ணிகையைப் பின்பற்றாமலும் வழங்கப்படும் ஒரு விருதுக்குப் பெரிய கவனிப்பும் மரியாதையும் பொதுச்சமூகத்தில் இருப்பதில்லை. தமிழக அரசின் இயல் இசைநாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருதும் அப்படியானதொரு விருதாகவே இருந்து வருகிறது.

இந்த மதிப்பிழப்பிற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பத்துப்பேருக்குக் கலைமாமணி விருதுகளை வழங்கிய அந்த அமைப்புச் சில ஆண்டுகளில் எவருக்கும் வழங்காமலும் இருந்ததுண்டு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படாமல், அதிகாரத்தில் இருப்பவரின் எண்ணத்திற்கேற்பச் சில ஆண்டுகளில் வழங்குவதும், சில ஆண்டுகளில் மொத்தமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆண்டுக்கும் சேர்த்துக் கூடுதலான எண்ணிக்கையில் வழங்குவதுமான தன்மையைக் கூட அந்த அமைப்பு கடைப்பிடிக்கிறது.  அ. இ. அதிமுக ஆட்சியில் – குறிப்பாகச் செல்வி ஜெ.ஜெயலலிதா முதலமைச்சமராக இருந்தபோது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்துச் சில நூறு பெயர்களைப் பட்டியலிட்டு வழங்கப்பட்டதைப் பத்திரிகைச் செய்தியாக வாசித்திருக்கலாம்.  

சினிமா நடிப்புத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த எம் ஜி ராமச்சந்திரனும், ஜெ.ஜெயலலிதாவும்  இயல் இசை நாடகமன்றத்தின் தலைவரையும் செயலரையும் அதிகமும் திரைப்படத் துறைக்குள்ளிருந்தே தெரிவுசெய்தனர்.  திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் தலைவராகத் திரைப்பட த்துறை சார்ந்தவரை நியமித்தாலும், உறுப்பினர் – செயலர் என்ற பொறுப்பில் வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்களை நியமித்து வருகிறார்கள். 2006 -2011 காலகட்டத்தில்  அப்பொறுப்பில் இருந்தவர் கவியும் பத்திரிகையாளருமான இளையபாரதி.

அந்த விலகலை இந்த ஆட்சியும் பின்பற்றியுள்ளது.  திரைப்படத் துறை சார்ந்தவராகவும் அரசியலாளராகவும் இருக்கும் வாகை சந்திரசேகர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தலைவராக அறிவிக்கப்பட்டார். இப்போது தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ள மு.ராமசுவாமி உறுப்பினர் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் சினிமா அடையாளம் உண்டு என்றாலும் முழுமையான சினிமாக்காரர் அல்ல. பணிசார்ந்து அவர் பல்கலைக்கழகப் பேராசிரியர். கலை ஈடுபாடு சார்ந்து நாடகவியலாளர்.

தமிழில் நவீன நாடகம் என்னும் கலை இலக்கியச் சிந்தனைப்போக்கின் தொடக்கத்தில் மதுரையில் 1978 ஆம் ஆண்டு  நிஜநாடக இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மு.இராமசுவாமி. மதுரைப்பல்கலைக் கழகத்தில் தோல்பாவைக்கூத்து குறித்த முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்த மு.ராமசுவாமி, நடிப்பார்வம் காரணமாக நாடகவியல் ஆய்வை மேற்கொண்டவர். தொடக்கநிலையில் நவீன நாடகப்பட்டறைகளில் பங்கேற்றுப் பயிற்சிகள் பெற்றவர். மொழி இலக்கியத்துறையாக இருந்த மதுரைப்பல்கலைக் கழகத்தமிழ்த் துறை மொழியியல், இதழியல், நாடகம், நாட்டுப்புறவியல், ஒப்பிலக்கியம் எனப் பலதுறைகளின் களமாக விரிவானபோது நாடகவியலின் ஆசிரியர் ஆனார். பல்கலைக் கழகத்தில் அவர் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் முதுகலை மாணவனாக நுழைந்தேன். எனது நண்பர் பரசுராமன் வழியாக அவர் தொடங்கிய நிஜநாடக இயக்க நாடகக் குழுவில் இணைந்து நடிகனாக இயங்கினேன்.

முதுகலைப்பட்டத்திற்குப் பின்பு இலக்கியத்திறனாய்வு சார்ந்த தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தாலும் அரங்கியலின் நுட்பங்களைச் சொல்லும் நூல்களை அவரிடமிருந்து பெற்றுக் கற்றுக்கொண்டேன். அங்கிருந்து மு.ரா., தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இணைப்பேராசிரியராகத் தேர்வாகிப் போனபோது, அவர் நடத்திக் கொண்டிருந்த நாடகவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆய்வாள- ஆசிரியராக வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியில் தான் எனக்குப் புதுவைப் பல்கலைக்கழக நாடகப்பள்ளியில் விரிவுரையாளர் வாய்ப்பும் கிடைத்தது. எனது அறிதலுக்குள் நாடகவியல் கலைப்புலம் நுழைந்ததற்கு முனைவர் மு.ராமசுவாமியே காரணம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றப்பின்னும் தஞ்சையிலிருந்து வாரக் கடைசிகளில் மதுரை வந்து செல்வார். அந்த ஆண்டுகளில் ( 1982-1989) நிஜநாடக இயக்கத்தின் செயலர், தலைவர் போன்ற பொறுப்புகளில் இருந்து கலை விழாக்களையும் பயிற்சி முகாம்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்திய நினைவுகள் இருக்கின்றன. பலூன், துர்க்கிர அவலம், சாபம்!விமோசனம்? பாதுகாவலன் போன்ற செவ்வகமேடை வடிவத்திலும் முக்கியப்பாத்திரங்களேற்று நடித்த நடிகனாகவும் இருந்தேன். அதன் மூலம் தென்மண்டல, தேசிய நாடகக் கலைவிழாக்களில் பங்கேற்ற அனுபவங்களும் உண்டு

30 -க்கும் மேற்பட்ட வீதி நாடகங்களையும் 10 -க்கும் மேற்பட்ட செவ்வகமேடை நாடகங்களையும் இயக்கியவர் மு.இராமசுவாமி. தனியாகவும் அவரது மனைவி செண்பகம் ராமசுவாமியோடு இணைந்தும் நாடகப்பிரதிகளை எழுதியும் தழுவலாக்கம் செய்தும் பங்களிப்பு செய்தவர். தெருக்கூத்தின் நடிப்புக் கோட்பாடு, பிரெக்ட், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி போன்ற மேற்கத்திய அரங்கியல் பார்வைகள் குறித்த நூல்களை எழுதியவர். தமிழ்ச் சினிமாவில் சின்னச் சின்னக் காட்சிகளில் இடம் பெறுவதில் தொடங்கிச் சினிமாவில் நடித்தவர்.    நாசரின் தேவதையில் நடிக்கத் தொடங்கியவர்   கேடி என்ற கருப்புதுரையில் முழுமையான பாத்திரமொன்றில் நடித்துத் தன்னைச் சினிமா நடிகராக நிறுவியுள்ளார்.  இந்த அனுபவங்களின் பின்னணியில் அவருக்குத் தமிழ்நாட்டில் கலை இலக்கியச் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் உயரிய பொறுப்பை வழங்கியிருக்கிறது திராவிட முன்னேற்றக்கழக அரசு. அரசின் இந்த அளிப்பு வரவேற்கத்தக்கது. அவரோடு சேர்ந்த பயணித்தவன் எனற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

*****

இயல் இசை நாடக மன்றத்தின் பணிகள் குறித்துப் பேரா. மு.ராமசுவாமிக்கு இன்னொருவர் சொல்லவேண்டியதில்லை.   என்றாலும் இவற்றைப் பொதுவெளியில் சொல்லியாக வேண்டும். கலை இலக்கியச் செயல்பாடுகளைத் தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணிகளைக் கவனிக்கப் பல்வேறு அகாதெமிகள் பண்டித நேரு காலத்தில் உருவாக்கப்பட்டன. எழுத்துக்கலைகளுக்கென இயங்கும் சாகித்திய அகாதெமி, இசை, நடனம் & நாடகம் போன்ற நிகழ்த்துகலைகளுக்கென இயங்கும் சங்கீத்நாடக அகாதெமி, ஓவியம் & சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கென இயங்கும் லலித்கலா அகாதெமி போன்றனவற்றின் பணிகள் பலவிதமானவை. கருத்தரங்குகள், விழாக்கள், கலைஞர்களின் கூடுகைகள் போன்றநிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், ஆய்வாளர்களையும் அறிவுப் புலத்தினரையும் கொண்டு தரவுகளைத் தொகுத்தல், படைப்பாக்கச் செயல்பாடுகளுக்காக நிதிநல்கைகளை வழங்குதல், இக்கலைகளில் மதிக்கப்பட வேண்டிய கலைஞர்களைத் தெரிவுசெய்து விருதுகளை வழங்குதல் போன்றவற்றை இந்த அகாதெமிகள் செய்துவருகின்றன.

ஒன்றிய அரசின் அகாதெமிகளோடு ஒருங்கிணைந்தும், மாநிலத்திற்கான தனித்துவத்துடனும் செயல்பட மாநில அகாதெமிகளை அந்தந்த மாநில அரசுகளும் உருவாக்கியுள்ளன. பெயரிடுதலில் சம்ஸ்க்ருத வேர்ச்சொற்களைத் தவிர்க்க நினைக்கும் திராவிட/ தமிழ்ச் சிந்தனைகொண்ட தமிழக அரசு அந்த வேலைகளைச் செய்ய உருவாக்கிய அமைப்பே இயல், இசை, நாடகமன்றம். அதற்குத் தலைவராக ஒருவர் இருப்பார். அவரைவிடச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்யும் பொறுப்பில் இருப்பவர் உறுப்பினர் - செயலர் என்னும் பதவியில் இருப்பவரே.

தமிழ்நாடு சங்கீதநாடகச் சங்கம் எனச் சங்கங்கள் சட்டப்படி தொடங்கப்பட்ட(1956) அமைப்பு தமிழ்நாடு இயல் இசைநாடக மன்றம் (1973) என மாற்றப்பட்டது. அதன் செயல்பாடுகள் இப்போது இருப்பதுபோலக் குறுகிய எல்லைகளைக் கொண்டதல்ல. விரிந்த தளத்தில் இயங்கும் வாய்ப்புகளை உருவாக்கிச் செயல்படமுடியும். அதனைச் செய்வார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துத் திரும்பவும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்