சமகாலத்தின் அகங்கள் : அரவிந்தனின் இரண்டு கதைகள்


தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன. உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக் காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்க வேண்டியுள்ளது.  அரவிந்தனின்  இரண்டு கதைகளில் நம் காலத்து அகம்    எழுதப்பட்டுள்ள விதத்தைக் காணலாம்.

2024 ஜூன் மாதக் காலச்சுவடுவில் வந்துள்ள‘சத்திய சோதனை ’(அரவிந்தன்) கதையின் பாத்திரங்களும், அப்பாத்திரங்கள் உலவும் புனைவு வெளிகளும் கதையை வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நேரடியாகப் பழக்கமானவை அல்ல என்றாலும் அலுவலகம், வீடு என்பன நடைமுறையில் பொதுவான வெளிகளே. அதனால் வாசிக்க நுழைபவர்களுக்கு வெளிசார்ந்த தடைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அதேபோல் அலுவலகங்களில் இருக்கும் அதிகாரப்படி நிலைகளும் உறவுமுறைகளும் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. அரசுத்துறை அலுவலகங்கள், தனியார் துறை அலுவலகங்கள், புதிதாகத் தோன்றியுள்ள வணிகத்தொடர் அலுவலகங்கள் என அவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடுகளுக்கேற்ப படிநிலை உறவுகள் வேறுபடும் என்றாலும், படிநிலைகளே இல்லாத அமைப்புகள் என எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் பாத்திரங்கள் சார்ந்த சிக்கல்களைப் புரிந்துகொள்வதும் இயல்பானதாகவே இருக்கும்.

அரவிந்தனின் கதைக்குள் உருவாக்கப்பட்டுள்ள முதன்மைப் பாத்திரங்களுள் ஒன்றான சாம்பவனுக்கு ‘ உண்மையை மட்டுமே பேசவேண்டும்’ என்ற நிலையை உருவாக்குவது அலுவலகம் என்னும் வெளிதான். தனது அதிகாரியான ராமமூர்த்தியிடம் உண்மையைச் சொல்லாமல் பொய்யொன்றைச் சொல்லிச் சமாளித்ததின் தொடர்ச்சியில் உருவாகும் குற்றவுணர்வும் தவிப்புமே கதையின் விவாதம். அந்த விவாதம், அலுவலக நடைமுறைகளின்போது பணிப்பண்பாட்டில் தவறுகளைச் செய்யாமல் நேர்மையாக இருப்பது முக்கியமா? எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவது முக்கியமா? என்பதாக மாறுவதோடு, உண்மையை மட்டுமே பேசும் நிலையில் கணவன் – மனைவி சார்ந்த அந்தரங்க வெளியில் என்ன நடக்கும் என்பதாகவும் விரிந்திருக்கிறது.

அரவிந்தனின் இந்தக் கதையை வாசித்ததின் தொடர்ச்சியில் எழுத்து – வாசிப்பு தொடர்பான விவாதம் ஒன்றை முன்வைக்கத் தோன்றுகிறது. இலக்கியப் பனுவலாக்கத்தில் ’அனுபவங்களின் சாராம்சத்தை எழுதுதல்’ என்ற ஒரு போக்கும், ’அறிந்த கருத்துகளின் மாதிரிகளை எழுதுதல்’ என்ற ஒரு போக்கும் இருக்கிறது. இவ்விரண்டில் எது சரியானது என்ற கேள்விக்கு விடை தேடுவதற்கு முயலப்போவதில்லை. அது வீணான வேலை என்று தெரியும். ஆனால் இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்பது புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்பதைச் சொல்ல விரும்புகின்றேன். அதே நேரம் இவ்வேறுபாடுகளை முரண்பாடுகளாகக் கருத வேண்டியதில்லை என்பதாகவும் நினைக்கிறேன். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

*******

சொந்த வாழ்வின் வழியாக அல்லது தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அன்றாட நிகழ்வுகளின் வழியாகப் புரிந்துகொண்ட ஒன்றை வாசகர்களுக்குக் கடத்துபவர்கள் அனுபவங்களை எழுதுவதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் மேல் நடக்கும் புனைவாக்கத்தில் உருவாக்கப்படும் கதைக்களங்களும் பாத்திரங்களும் கூடுதல் நம்பகத்தன்மை கொண்டனவாக இருக்கும் என்பது கூடுதல் நம்பிக்கை. ’கண்டதைச் சொல்கிறேன்’ என்பதான கூற்றுமுறை அந்த நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும்.இவ்வகை எழுத்துகளையே நடப்பியல் எழுத்தாகவும், அதற்கு முந்திய இயற்பண்பியல் எழுத்தாகவும் வகைப்படுத்துகிறார்கள். குறிப்பான வெளியைச் சுட்டிக் காட்டும் விதமான விவரிப்புகள் கொண்ட பெரும்பாலான கதைகள் அத்தகையன. தமிழின் வட்டாரப் புனைகதைகள் பெரும்பாலும் இத்தன்மையில் இருப்பதை வாசித்திருக்கக்கூடும்.

இத்தன்மையிலிருந்து நடப்பியல் அல்லாத எழுத்துமுறை விலகுகின்றன. விலகும் தன்மைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டலாம். குறிப்பான வெளி என்பதற்குப் பதிலாகப் பொதுவான வெளியைக் கதை நிகழ்வுகளுக்கான வெளிகளாகக் கட்டமைக்கிறது நடப்பியல் அல்லாத எழுத்துமுறை. அப்படிக் கட்டமைக்கும் போது நிகழ்வுகளை அடுக்கும் முறையும் நேர்கோட்டுத் தன்மையிலிருந்து விலகி, முன்னும் பின்னுமாகவோ, காலம், இடம் சார்ந்த தொடர்ச்சிகளைத் தவிர்ப்பனவாகவோ மாறிவிடுவதும் நடக்கிறது. அதனால் கதையின் பகுதிகள் நிகழ்வுகளால் ஆக்கப்படும் தொடர்ச்சி என்பதற்குப் பதிலாக உரையாடல்களாலும், மனவோட்டங்களாலும் ஆன தொடர்ச்சி என்னும் வடிவத்தை எடுத்துக் கொள்கின்றன. இட ஓர்மைக்கும்,கால ஓர்மைக்கும் முக்கியத்துவம் தராமல், பாத்திரங்களின் மன அமைப்புக்கும், அதனால் ஏற்படும் உள்முரண்பாடுகளுக்கும், அவற்றை வெளிப்படுத்தும் உரையாடல்களுக்கும் முதன்மைத்துவம் தந்திருக்கும். அரவிந்தனின் இந்தக் கதையின் இவ்வகைப் புனைவுகளின் நிகழ்வுகள் அனைத்தும் இயல்பாக நடப்பனபோலத் தோன்றாமல், எழுத்தாளரால் கட்டமைக்கப்பட்ட நிகழ்வுகளால் ஆனதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

இந்த வேறுபாடுகளே, அனுபவத்தை எழுதும் நடப்பியல் பாணிக்கதைகளை வாசித்துப் பழக்கப்பட்ட வாசகர்களை அவ்வகைக்கதைகளை நெருக்கமாக உணராமல், விலகலோடு வாசிக்கச் செய்கின்றன. அதனால், ‘கதை அந்நியமாக இருக்கின்றது’ எனச் சொல்லி அவர்களின் வாசிப்பு எல்லைக்கு வெளியே வைக்கின்றனர். அதற்குப் பதிலாக இவ்வகைப் புனைவுகள் அனுபவாதத்திற்குப் பதிலாகக் கருத்துநிலை விவாதத்தை முன்னெடுக்க நினைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அந்தக் கதையை நெருங்கி வாசிக்க முடியும்; எழுப்ப நினைக்கும் விவாதத்தின் மீது உடன்பாட்டு நிலையையோ, எதிர்ப்பு நிலையையோ காட்ட முடியும்.

******

மகாத்மா காந்தியின் தன்வரலாற்று நூலான ‘சத்திய சோதனை’ என்பதைத் தலைப்பாக்கி எழுதப்பட்டுள்ள இந்தக்கதையில், ’உண்மையைப் பேசுதல்’ என்பதற்கும் ‘நேர்மையாக இருத்தல் என்பதற்கும்’ இடையே உள்ள வேறுபாட்டை விவாதிப்பதற்குத் தேவையான கதை நிகழ்வுகளை உருவாக்கிக் கோர்த்துத் தந்துள்ளார் அரவிந்தன். பணிப்பண்பாட்டில் எப்போதும் உண்மையாக இருப்பதாக நம்புபவர் சாம்பசிவன். அதில் ஏற்படும் பிசகொன்றுக்குக் காரணமான ஒரு நிகழ்வை மறைப்பதற்காகச் சொன்ன பொய் ஏற்படுத்தும் மன உளைச்சல்களும், அதன் தொடர்ச்சியில் எல்லா நேரத்திலும் உண்மையை மட்டுமே பேசுவது என்பதில் உண்டாகும் நெருக்கடிகளும் கதையின் அடுக்குகளாக விரிந்துள்ளன.

எல்லாவற்றிலும் உண்மையாக இருக்க முடிகின்ற ஒருவருக்கு எதிர்ப்பால் உடல் மீது ஏற்படும் ஈர்ப்பின் -காமத்தின் அளவை வெளிப்படையாகச் சொல்வது இயலாத ஒன்றாக இருக்கிறது. இந்த இயலாமையின் அளவில் மேற்கத்தியப் பண்பாட்டிற்கும் இந்தியப்பண்பாட்டிற்கும் அளவு மாற்றம் உண்டு. மேற்கத்திய மனிதர்கள், பெருமளவு தடையை விலக்கி விவரிக்கிறார்கள்; விவாதிக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் அதில் பெருமளவு மனத்தடைகளைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணவன் – மனைவி என்ற பாத்திரங்களுக்க்கிடையே நிகழும் ஈர்ப்பைக்கூட விவரிப்பதையும் காட்சிப்படுத்துவதையும் தடுக்கப்பட்ட ஒன்றாகப் பார்ப்பது இந்திய மனநிலை. இந்தியக் கலை இலக்கியங்களும் மேற்கத்தியக் கலை இலக்கியங்களும் ஆண் -பெண் உடலை விவரிப்பதிலும் காட்சிப்படுத்துவதிலும் பின்பற்றும் தன்மைகளைக் கவனித்தால் இந்த வேறுபாடு இன்னும் கூடுதலாக விளங்கலாம்.

அரவிந்தனின் கதையில் வரும் சாம்பசிவனின் தன்னிலை இந்தியத் தன்னிலையால் ஆனது. குறிப்பிட்ட அந்த நாளில், மனைவி சகுந்தலாவின் உடல் உண்டாக்கிய கிளர்ச்சியையையும், அதனால் தான் பணி நேர்மை தவறியதையும் மறைக்கச் சொல்லப்பட்ட பொய்யே குற்றவுணர்வுக்குக் காரணமான பொய். காமத்தால் உந்தப்பட்டு தன்னிலை மறந்து போனதையும், பாலியல் ஈர்ப்பு உருவாக்கிய கிளர்ச்சியையும் அனுபவத்தையும் விவரிக்கும் பண்பாடு கிடையாது. அதேபோல் தனது உடலின் கிளர்ச்சியைத் தனது மனைவிக்குக் கடத்தியபோது அவளின் உடல் அடைந்த கிளர்ச்சியையும் விவரிப்பதில் மனத்தடைகள் உள்ளன. இத்தடைகள் இந்திய உடல்களுக்கே உரிய தடைகள். அதன் முழுமையால் ஆனது சாம்பசிவனின் இருப்பு. அதுவே அவனைப் பொய் சொல்லத்தூண்டுகிறது.

அதே நேரம் காமம் சார்ந்து தனது நேர்மையைச் சோதித்து நிரூபித்துக் கொள்ளவும் விரும்பும் தன்னிலையும் அவனுக்குள் இருக்கிறது. மனைவியைத் தவிர மற்ற பெண்களைக் காம நோக்கத்தில் பார்ப்பதை அவனது மனம் நினைத்ததில்லை என்பதைக் காட்டிக்கொள்ள உருவாக்கப்பட்ட பாத்திரமாக வரலெட்சுமி இடம்பெற்றிருக்கிறாள். வரலெட்சுமியைத் தனது காரில் அழைத்துச் செல்ல நேர்ந்த தற்செயல் நிகழ்வொன்று, தொடர் நிகழ்வாக ஆனதில் சாம்பசிவனுக்குச் சஞ்சலங்கள் இல்லை. அதையொரு உதவும் காரியாமாக வருணிக்கிறான். ஆனால் அவனது மனைவி சகுந்தலா அதை விரும்பவில்லை;ஏற்கவில்லை.

பாலியல் ஈர்ப்பு சார்ந்து குற்றவுணர்வுக்குள் தள்ளப்படும் இந்திய மனிதர்கள் இயல்பு தொலைக்கும் மனிதர்களாக மாறுகிறார்கள் என்பது பலரும் பல தளங்களில் எழுதப்பெற்ற உரிப்பொருள். சாம்பசிவன் தனது இயல்பைத் தொலைத்து விட்டதாகக் கதையில் இடம்பெற்றுள்ள அவனது அதிகாரி / நண்பர் ராமமூர்த்தி குறிப்பிடுகிறான். அவனது இயல்பு தொலைந்துவிட்டதாக உணர்ந்த நிலையில் வீட்டிற்கே வந்து உரையாடும்போது நடக்கிறது இந்த உரையாடல்:

சாம்பசிவன் உடல்நிலை பற்றிச் சொன்னான். தற்போது பரவாயில்லை என்றான். இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் காப்பி குடித்தார்கள். ராமமூர்த்தி மெதுவாக ஆரம்பித்தான்.


“கொஞ்ச நாளாவே நீ சரியா இல்லையே சாம்பு...” என்றான்.


“ரெண்டு நாளா உடம்பு சரியில்ல. அதுக்கு முன்னால ஒண்ணுமில்லையே.”


“உடம்பைச் சொல்லல. நீ ஆளே ஏதோ சரியில்லாதது மாதிரி இருக்கு.”
ராமமூர்த்தி சொன்ன சொற்களின் அர்த்தத்திலும் தொனியிலும் சாம்பசிவனின் மனைவி சகுந்தலாவும் சொல்கிறாள். அதுவே கதையின் முடிப்பாக இருக்கிறது:


“அது சரி, நான் உங்கள ஒரு விஷயம் கேக்கணும்.”

அவள் குரல் மாறியதைக் கண்டு சாம்பசிவன் குழப்பத்துடன் அவள் முகத்தைப் பார்த்தான். குழந்தைகளும் அந்த வித்தியாசத்தை உணர்ந்து அம்மாவின் முகத்தைப் பார்த்தன. சகுந்தலா எதுவும் பேசாமல் சாம்பசிவனின் கண்களைக் கூர்மையாகப் பார்த்தாள். அவள் இப்படிப் பார்ப்பது அவனுக்குப் புதிதாக இருந்தது. ஏனோ வயிற்றைக் கலக்கியது.

“என்ன விஷயம்? ஏன் அப்படி பாக்கற?”

“கொஞ்ச நாளா நீங்க சரியாவே இல்லையே...” என்றாள் அமைதியாக.

“உடம்பு சரியில்லாததையா சொல்ற?”

“ப்ச... அது இல்ல. எதோ பிரச்னைல மாட்டிண்ட்ருக்கீங்கன்னு தோணுது. ஆஃபீஸ்ல எதாவது பிரச்னயா, அல்லது... வேற எதாவதா...” என்று வித்தியாசமான தொனியில் கேட்டுவிட்டு நிறுத்தினாள்.
*****

அரவிந்தனின் கதையை வாசிக்கத்தொடங்கியபோது நடப்பியல் கதையொன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே தோன்றியது. ஆனால் கதை சொல்லப்பட்ட முறையும், விவாதத்தன்மை கொண்ட உரையாடல்களும், கதையின் தலைப்பும் சேர்ந்து, நடப்பியல் அல்லாத கதை ஒன்றை வாசித்து முடித்ததாகவும் தோன்றியது. எப்படித் தொடங்கி, எப்படி முடித்தாலும், அரவிந்தனின் கதை சமகாலத் தன்மையோடு இருக்கிறது என்ற எண்ணம் -திருப்தி தோன்றியது என்பது மறுக்கமுடியாத ஒன்று. அத்தோடு பாலியல் சார்ந்த இந்திய மனநிலை ஒன்றை விவாதப்படுத்தும் நோக்கத்தோடு கதை எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லத்தோன்றியது.

 முகங்கள்
சத்திய சோதனையை எழுதிய அரவிந்தன் அம்ருதா இதழில் எழுதிய முகங்கள் கதையிலும் சமகால உளவியல் ஒன்றை எழுதியிருந்தார். அதனையும் இங்கே விவாதிக்கலாம். அக்கதையின் விவாதத்தை அவரவர் நியாயங்கள் என வகைப்படுத்தி விவாதிக்கத் தோன்றுகிறது

ஒவ்வொரு அமைப்பின் கண்ணிகளும் நடைமுறைகளையும் விதிகளையும் கொண்டனவாக இருக்கின்றன. சுமுகமான நடைமுறைகள் பிசகிவிடும்போது விதிகள் முன்வந்து நிற்கும். விதிகளைக் கூறி விவாதிக்கத் தொடங்கும்போது அதிகாரப்படி நிலைகள் முகங்களாகிவிடுகின்றன.
அதிகாரப்படிநிலைகள் இல்லாத அமைப்புகள் ஏதாவது இருக்கின்றனவா? என்று தேடலில் தோல்விகளே கிடைக்கின்றன. தனிமனிதர்களின் அந்தரங்க வெளிகளென நினைக்கும் குடும்பத்திற்குள் செயல்படும் அதிகாரப்படிநிலை, 'இட்லிக்குப் பதில் சப்பாத்தி' வேண்டுமெனப் பிடிவாதம் காட்டுவதாக வெளிப்படுகின்றது. பணியிட அதிகார முகங்களை வெளிக்காட்ட, திட்டமிட்ட பதவி அடுக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் சுரண்டும் அமைப்பின் மீது பணியாளர்கள் காட்டும் எரிச்சலும் வன்மமும் தவறுகளை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளுகின்றன. மேலிருந்து வரும் அழுத்தங்கள், தனக்குக் கீழிருக்கும் பணியாளரைக் குதறிப்பார்ப்பதைச் சரியானது எனச் சொல்லும்.

அதிகாரத்தை விதிகளாக மாற்றி வாழிடங்களில் உருவாகும் நெருக்கடிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத அதிகாரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. செயல்படும் அதிகாரம் ஒரு போதை என்றால், அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் தப்பிப்பதற்கான போதைகளை நாடுகிறார்கள். அந்தப் போதைகள் குற்றச்செயல்களாகக் கருதப்படும் வாய்ப்புகள் இருந்தபோதும் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஈடுபடவே செய்கிறார்கள். பாலியல் மீறல்கள் நியாயமாகும்.

மது, அபின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் ஒருவரது உடலின் இருப்பை இல்லாமலாக்கித் தற்காலிகமான தளர்வுகளை உருவாக்குகின்றன. அத்தகைய போதைப்பொருட்களின் பட்டியலில் சமூகம் அனுமதிக்காத பாலியல் உறவுகளும் இருக்கின்றன. ஆனால் அதனைக் குற்றச்செயலாகவோ, போதைப்பொருளாகவோ நினைக்காமல் வேறு வகையான பெயர்களில் அழைத்துக் கொண்டிருந்தது பழைய சமூகம். அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதனை மாற்றுவதில் நவீனத் தொழில் நுட்பம் பங்காற்றுகிறது; விரைவு படுத்துகிறது. குற்றம் பற்றிய விதிகளும் நடைமுறைகளும் அதற்கேற்ப மாற்றம் அடைகின்றன.

இப்படியான எண்ணவோட்டங்களை முன்வைக்கும் கதையொன்றை -பதற்றமான முகங்களுக்குப் பின்னால் அலையும் மனங்களைத் திறந்து காட்டும் கதையொன்றை இம்மாத அம்ருதாவில் (அக்டோபர், 2023) எழுதியுள்ளார் அரவிந்தன். பாத்திரங்களின் வழியான இணைப்பைத் தவிர்த்துவிட்டு, மனித மன வெளிப்பாடுகளைக் கொண்ட வெவ்வேறு நிகழ்வுகளின் வழியாகத் தொடர்ச்சியை உண்டாக்கும் கதை சொல்லும் முறையில் அக்கதை எழுதப்பட்டுள்ளது. தொடர்பற்ற கதை சொல்லலைப் பின்பற்றுவதில் விருப்பம் கொண்ட அரவிந்தனின் இந்தக் கதை , நமது காலத்தின் வெளிப்பாடு. - பின் நவீனத்துவ மனிதர்களின் அலையும் மனநிலைகளின் தொகுப்பைக் கதையாக்கித் தருவதில் அரவிந்தனுக்கு விருப்பம் உண்டு. அந்த விருப்பம் இந்தக் கதையில் வெளிப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: முகங்கள். ஆனால் கதைக்குள் வெளிப்படுவன மனங்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

அந்திமழை சிறுகதைப் போட்டி -2024