வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா

 

குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மையை எதிர்கொள்ளும் கணவன் மனைவி உறவைப் பேசிவதாக வந்துள்ள வெப்பம் குளிர் மழை என்ற சினிமா இந்தக் காரணங்களாலேயே கவனிக்கப்படாத - பேசப்படாத சினிமாவாக ஆகியிருக்கிறது. குழந்தையின்மையைப் பெரியதொரு சிக்கலாகப் பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றும் விதமாக நவீன மருத்துவம் பேச்சைத்தொடங்கிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதற்கெனத் தனியாக இயங்கும் மருத்துவமனைகள் பற்றிய பேச்சுகளை வானொலிகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் தினசரி விளம்பரங்களாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

நடுத்தரமான நகரங்களிலேயே செயற்கைக் கருத்தரிப்பு வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் வந்துவிட்டன. தனியார் பள்ளிகளுக்கு இணையாகச் செயற்கைக் கருத்தரிப்பு விளம்பரங்களே வந்து கொண்டிருக்கின்றன. அரசு மருத்துவமனையிலும் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இப்படியான மாற்றங்கள் வந்துவிட்ட சூழலில் இந்தப் படம் வந்திருப்பதைக் காலப்பிழை என்றே சொல்லலாம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் பொருத்தமான சினிமாவாக ஆகியிருக்கும். அப்போதும் கூட இப்போது எடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துத் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஓடியிருக்காது. ஏனென்றால் ஒரு சினிமாவில் இருக்கவேண்டிய அடிப்படைகள் பலவற்றைத் தவறவிட்ட உருவாக்கமாக வந்துள்ளது இந்தப்படம்.

எந்தவகைக் கலையாக இருந்தாலும் காலம், இடம், பாத்திரங்கள் என்பதான மூவோர்மைகள் சரியாக இருக்கவேண்டும். அதில் பிழைகள் இருக்கும்போது அதன் ரசிகர்கள் அல்லது பார்வையாளர்கள் விலகிப்போய்விடுவது நடக்கும். அதிலும் சினிமா போன்ற கலைகளில் இம்மூவொருமையையும் சரியாகத் தரும் நிகழ்வுகள், அவற்றிற்கான கால அளவு, அதற்குப்பொருத்தமான நடிப்பு, வசனப்பொருத்தம், இசைக்கோர்வை, பின்னணிப்பொருட்களின் இசைவுத் தன்மை என ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகச் செய்யாத சினிமா, மிக முக்கியமான சமூகப்பிரச்சினையையோ, அரசியல் கருத்தையோ, உளவியல் விவாதத்தையோ சொல்ல நினைத்தாலும் பார்வையாளர்களை ஈர்க்காது.

கால ஓர்மையையும் - இடைவெளியையும் காட்டும் விதமாகப் பாத்திரங்களின் வளர்ச்சியில் மாற்றம் இல்லை. தனித்தனியாகச் சில காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. கணவன் -மனைவி ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ள இருவருக்குமே நடிப்பில் ஈடுபாடும் திறமையும் இருக்கிறது. அவர்கள் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார்கள். ஆனால் அத்தகைய காட்சிகளின் அளவைச் சரியாகத் தீர்மானிக்காமல் நீட்டிருப்பதால் அவர்களின் நடிப்பு, பொருத்தமில்லாத நிலையைக் கொண்டதாக ஆகியிருக்கிறது. நடிகர்களின் உரையாடல்கள் வழியாகப் பார்வையாளர்களுக்குப் போய்ச்சேரவேண்டிய செய்திகள் ஒலியமைப்புக்குறைபாடுகளினால் விலகலைத் தருகின்றன. சில காட்சிகளைக் குறியீட்டுத் தன்மையிலும் படிமமாகவும் காட்ட நினைத்ததைச் சரியாகச் செய்யாத நிலையில் பொருத்தமற்றனவாக ஆகியிருக்கின்றன. மாடுகளுக்குச் செயற்கைக் கருத்தரிக்க ஊசி போடும் ஒருவனாகக் காட்டப்படும் கணவனின் கதறலைப் பொருத்தமான இடத்தில் வைத்துக் காட்டவில்லை. படத்தொகுப்பில் வரிசையும் சரியாக இல்லை.

காட்சிகளுக்கான பின்னணிப்பொருட்கள் அல்லது இடங்களில் கவனமின்மை தூக்கலாக இருக்கிறது. உணர்ச்சிகளின் வழியான தொடர்ச்சியும் மெய்ப்பாடுகள் வழியான இணைவும் நடிகர்களின் உடல் மொழியில் தவறிக்கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட குறைபாடுகளோடு வரும் சினிமாவை, அதன் சமூகப்பாத்திரத்திற்காகத் தமிழ்ப்பார்வையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

இப்போது பிரைம் வீடியோவில் பார்க்கக் கிடைப்பதால் குறைவான எண்ணிக்கையில் பார்க்கக்கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

அந்திமழை சிறுகதைப் போட்டி -2024