காலத்தை வெல்லுதல்
”என்னை மனிதர்களில் ஒருவராக நினைக்கவில்லை; இந்த உலகத்திற்கு எதையோ செய்வதற்காகப் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் என்பதாக உணர்கிறேன். நான் எல்லாரையும்போல உயிரியல் பிறப்பாக வந்தவனில்லை என்று தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்வது காலத்தை வெல்லும் முயற்சிகளில் ஒன்றுதானோ?
அதிகாரத்தை அடைவதற்கான அனைத்துப் பாதைகளையும் பரிசீலித்து, அவற்றின் வழியாக அதன் உச்சாணிக்கொம்பை அடைந்து அதிகாரத்தை ரசித்தும் ருசித்தும் பார்த்துவிட்ட ஒருவர் இப்படிச் சொல்லும்போது கேட்கும் பெரும்பான்மையோர் அதனை ஏற்க மறுத்து, இதுவும் அதிகாரத்தை நோக்கிய - அடைவதற்கான இன்னொரு முயற்சி எனச்சொல்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை விரும்பாதவர்களும் அதனை ருசித்துப்பார்த்து விலகியவர்களும்கூடத் தங்களின் பிறப்பு, இருப்பு, வாழ்க்கை முறை போன்றன எல்லோரையும் போன்றதல்ல எனக்காட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்கள். செய்துகொண்டே இருக்கிறார்கள்.
துறவிகள், அமைப்புகளுக்குள் சிக்காதவர்கள், தன்னுயிரையும் உடலையும் பொதுநன்மைக்காகத் தரும் விருப்பம் கொண்ட தியாகிகள் எனக் கொண்டாடப்படுபவர்களைச் சாதாரணப் பிறப்புகளாக நினைக்காமல், மகான் எனவும், மகாத்மா, தலைவர் எனவும் கொண்டாடுகிறோம். அந்த நிலையில் அவர்களுக்கு வைக்கப்பட்ட சாதாரணப் பெயர்கள் காணாமல் போய் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்களால் அறியப்படுகிறார்கள். இந்தப் பயணத்திற்கு எளிமையும் அகிம்சையும் நிதானமும் மட்டுமே பயன்படும் என்பதில்லை. வன்முறையும் பயங்கரவாதமும் கூட அதற்கான வழியாக இருக்கமுடியும் என்பதைப் பலரது வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது.
****************
உள்ளங்கால் தொட்டு உச்சந்தலைவரை வருடிச் செல்லும் அதிகாலைப் பனிக்காற்றா? உரலிலிட்டு இடித்துக் காய்ச்சிய கம்மங்கூழுக்குக் கடித்துக் கொண்ட பச்சை மிளகாயின் உறைப்புச் சுவையா? வெண்பஞ்சுக் கூட்டத்தில் பொன் பரப்பாய்ச் சிதறும் அந்தி நேரத்து மலைமுகட்டுச் சித்திரமா? கைவளையோசையாகவும் கால் கொலுசின் சிணுங்கலாகவும் காதில் நுழைந்து கண் பொத்திக் கட்டி அணைத்துப் பின் கழுத்தில் முத்தமிட்டுக் கலவி செய்துக் காணாமல் போன கனவுப் பிம்பமா? கருக்கிருட்டில் காராம்பசுவின் மடிபிதுக்கிக் கறந்த பாலின் இளஞ்சூடா?
மரணங்கள் ஒருவிதத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவும் கூட. வாழும் காலத்தில் அவர் செய்த செயல்களின் பதிவுகளை மரணத்திற்குப் பின்னும் வாசிக்க முடியும் என்றாலும் அந்த மரணம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதும் கூட. வாழ்ந்த காலத்து இருப்பைச் சொல்லும் உடனடி வெளிப்பாடு என்பதை நாம் மறுக்க முடியாது. இருந்த காலத்தின் பதிவுகள் அவருக்கு அழியாத அடையாளங்களைப் பரப்பிக் காட்டுகின்றன. அந்தப் பரப்பு சார்ந்து குடும்ப மனிதனாகச் சுருங்கிச் சொல்லலாம். இங்கே பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அப்படிச் சுருங்கிப் போனவர்கள் தான். ஆனால் எல்லா மனிதர்களும் சுருங்கிப் போவதை விரும்புபவர்களும் அல்ல.
தங்கள் வெளியைக் கிழித்து வெளியேறும்போது தான் தத்துவ, அரசியல், சமூக, கலை, அறிவியல்.பண்பாட்டு மனித அடையாளங்கள் உருவாகின்றன. அந்த உருவாக்கத்திற்கு முயலாத மனிதர்கள் இல்லை என்றாலும், எல்லாருக்கும் அந்த அடையாளம் கிடைத்து விடுவதும் இல்லை. வந்த சுவடு தெரியாமல் போவதைப் பற்றிச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. வந்தது போலவே சென்று விட வேண்டும் என நினைப்பதும் கூட ஒருவிதத்தில் ஆசை தான். வந்த சுவடு தெரியாது; ஆனால் இருக்கும் போது நான் உண்டாக்கிய சுவடுகள் ஏராளம்; நான் போனாலும் நான் உண்டாக்கிய சுவடுகளை அழிக்கக் கூடாது என நினைப்பது பேராசை. ஆசைகள் விரும்பத்தக்கவை. பேராசைகள் ஆபத்தானவை.
கண் முன்னே விரியும் இந்த உலகம் எனக்கானது; இதனை அனுபவிக்கவும் அடக்கிக் காட்டவும் பிறந்தவன் என நம்பும் ஒருவனிடம் மரணத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்கு உண்டாகக் கூடியது கோபம். நான் வாழப்பிறந்தவன்; ஆளப்பிறந்தவன். என்னிடம் ஏன் மரணத்தைப் பற்றிக் கேட்கிறாய்? எனக்கெப்படித் தெரியும்? செத்தவனைத் தான் கேட்க வேண்டும். என வீறாப்பாகச் சொல்லி விட்டுப் போன ஒருவனின் மரணச் செய்தியை தந்தி சுமந்து வந்த போது அதிர்ந்து போன கணங்களை நீங்கள் சந்தித்திருக்கக் கூடும்.
மரணத்தை எதிர்கொள்ளுதலில் மனிதமனங்களுக்கு ஒரே மனநிலை தான் இருக்கிறது எனவும் சொல்ல முடியாது.மரணம் குறித்து வரும் அந்த உத்தரவை மீற முடியாது என்று தெரிந்த போதும், அதைத் தள்ளிப் போட முடியும் என நம்பாதவர்கள் ஒருவரும் இல்லை. மரணம் எப்படிப் பட்டது எனக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம் என முயன்றால் அதை அனுபவித்துப் பார்த்துச் சொல்ல ஒருவரும் இங்கே இல்லை. வாழ்ந்து கொண்டே மரணத்தைப் பற்றிச் சொல்பவர்களின் கூற்று அனுபவக் கூற்று அல்லவே. மரணத்தின் வண்ணங்களை, ஒலிநயத்தை, சுவைப் பெருக்கத்தை, உரசுதலை, நாற்றக் கடப்பை விளக்கிச் சொல்லுதல் யாருக்கு முடியும்.? மரணம் விநோதமானது; வேடிக்கையானது எனச் சிலர் சொல்லக் கூடும். எது வேடிக்கை? எது விநோதம்? என விளக்க முடியாதவன் தான் மரணத்தையும் விநோதமானது! வேடிக்கையானது எனச் சொல்லி ஒதுங்கிக் கொள்கிறான்.
சாத்தியமே இல்லை என்ற போதும் கடவுளை விளக்கி விட முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் மனிதர்கள் தானே மரணத்தையும் விளக்கிக் காட்ட முயல்கிறார்கள். விளக்கிச் சொல்ல முடியாத ஒன்றைத் திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டிருப்பதில் மனிதர்களுக்கு அலுப்பே தோன்றுவதில்லை போலும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கொள்ளும் உறவைச் சொல்ல நட்பு, பாசம், அன்பு, நேயம், பகை, வன்மம் எனப் பல சொற்களைப் பயன் படுத்தி விளக்கி விட முடியும் என நம்பும் நமது மனம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உறவை விளக்கப் பயன்படுத்தும் உச்சபட்ச வார்த்தை காதல்.
காதல் என்ற வார்த்தையின் எதிர்ப்பதமாகச் சொல்ல தமிழில் ஒரு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது. காதல் என்னும் சொல்லுக்கு எந்த மொழியும் எதிர்ப்பதம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள விரும்பாது என்றே தோன்றுகிறது. காதல், அனுபவித்துப் பார்த்து விளக்கிக் காட்ட முயலும் ஒரு வினை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தோன்றும் வினை. எத்தனை மனிதர்கள் தோன்றினார்களோ, எத்தனை பேர் காதலிப்பதாக நினைத்தார்களோ அத்தனை பேருக்கும் அது ஒரு புதுவித அனுபவம் தான்.
மரணமும் காதலைப் போன்றது தான் என்றாலும் நேர் எதிரானது. மரணம் விளக்கிச் சொல்லும் தர்க்கம் அல்ல என்பதை விட அனுபவித்துப் பார்த்துச் சொல்லும் கரணமும் அல்ல என்பதுதான் அதன் சிறப்பு. காதலின் அனுபவித்தைச் சொல்ல ஏராளமானவர்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். காதலில் வென்றவர்களும், தோற்றவர்களும் எழுதி வைத்த கவிதைகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம். ஆனால் மரண அனுபவித்தைச் சொல்ல ஒருவரும் இல்லை என்றாலும் அதனை எதிர் கொள்ளத் தயாரானவர்கள் இருக்கக் கூடும். தென்றலில் மிதந்து வந்து வருடிச் செல்லும் மெல்லிய மயிலிறகைப் போல என்னைப் பிரியட்டும் அந்த உயிர் எனக் காத்திருப்பவர்கள் மரணத்தை ரசிப்பதற்குரியதாகக் கருதக் கூடும். பிரியமானவர்கள் தரும் முத்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஆதர்சத்துடன் உள் வாங்கிக் கொள்ளக் கூடும். ஆனால் விபத்தும் நிகழ்வும் ஏற்படுத்தும் மரணத்தை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் மனித சமூகத்தின் தவிப்பாக இருக்கிறது.
2008, நவம்பர் 26 இல் மும்பையில் வெடிகுண்டுகளை வெடித்துக் காட்ட அரபிக் கடலில் பயணம் செய்த படகின் பயணத்தைப் போலவே வங்கக் கடலிலிருந்து ஒரு பெரும்பயணம் தொடங்கியது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகத் தொடங்கிப் புயலாக மாறி வந்த அந்தப் பயணம் கரையைக் கடந்த போது வலுவிழந்து போனதென்னவோ உண்மை தான். ஆனாலும் இரண்டு புயலுக்கும் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு நூறைத்தாண்டி விட்டது.
இயற்கையின் சீற்றம் எனப் பதிவாகி விட்ட கரை கடந்த அந்தப் புயல், தமிழகம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இழக்கக் காரணமாகி விட்டது. வீடுகளை, சாலைகளை, பயிர்களைப் பறி கொடுத்து நிற்கிற அந்தக் காட்சிகளையும் குரல்களையும் தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் விலகிச் செல்லும் நமது மனம் சில நாட்களில் அவற்றை மறந்து போகக் கூடும். நேரடியாக அதனை அனுபவிக்காதவர்கள் புயலின் சீற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் சுனாமி எனப் பெயர் தாங்கி இதே வங்கக் கடல் கரையைக் கடந்ததை இன்னும் நாம் மறந்து விட வில்லை. காரணம் அது தாக்குதல். இயற்கையின் தாக்குதல். இயற்கையின் தாக்குதலைத் தாங்காது அரற்றும் நாம் செயற்கையாக மனிதர்கள் தொடுக்கும் தாக்குதலை எப்படித் தாங்க முடியும்?
வங்கக் கடல் தோன்றி கரையை நோக்கி வந்த புயல் பற்றிய எச்சரிக்கைக் குறிப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்த தொலைக்காட்சித் திரையில் மின்னலாய் வந்து மறைந்தது இன்னொரு புயல் செய்தி. இந்தப் புயல் அரபிக் கடலின் அலைகளைக் கிழித்துக் கொண்டுப் படகேறி வந்த புயல். கிழக்குக் கரையைக் கடந்த அந்த புயல் மறந்து விடக் கூடியது என ஒதுக்கித் தள்ளும் நமது மனம் மேற்குக் கரையில், கரை கடந்த புயலை அப்படி ஒதுக்கி விடாது. நவம்பர் 26 மும்பை நகரில் நள்ளிரவில் தொடங்கிய மரணத்தின் ஓலம், அது விபத்தல்ல; நிகழ்வு. மரணத்தின் இன்னொரு பரிமாணம். புயல் காரணமாகக் கொட்டிய மழையைப் போல அல்லாமல், மனிதர்களின் நினைவுச் சாத்தியத்தைத் தகர்த்து விட்டு ரூபமற்ற ரூபத்தில் வந்த மரணங்கள் அவை. நினைத்துப் பார்க்காத ரூபத்தில் வந்து, எதிரே நின்று வாங்கிக் கொள் என்று சொல்லித் தந்த அந்த நிகழ்வை விளக்க உலகம் உண்டாக்கி வைத்துள்ள வார்த்தை பயங்கரவாதம். வார்த்தையை கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எல்லா மொழியும் மொழியைப் பேசும் மொழிக்கூட்டங்களும் தனது மொழிக் கிடங்கிலிருந்து கிடைக்கும் அனுபவத்திலிருந்து விளங்கிக் கொள்ளவும் விலக்கி வைக்கவும் முயன்று தோற்றுக் கொண்டிருக்கின்றன.
பயங்கரவாதத்தை விளங்கிக் கொள்ள முயன்றது வன்முறையை விளங்கிக் கொள்ள முயன்றதின் தொடர்ச்சி தான். அதிகாரத்தைக் கைப்பற்ற வன்முறையைப் பயன்படுத்தலாம் என்பது கேள்விக்கப்பாற்பட்ட உரிமையாக உலகத்தில் நம்பப்படுகிறது என்றாலும் வன்முறை எப்போதும் விருப்பத்திற்குரியதாக இல்லை என்பதும் சுவாரசியமான முரண்பாடு. வன்முறைக்கு முன் எல்லா உயிர்களும் நடுங்குகின்றன்; எல்லா உயிர்களும் இறப்புக்குப் பயப்படுகின்றன; எல்லா உயிர்களும் வாழ்வை நேசிக்கின்றன என்ற தம்மபதத்தின் கூற்றை நிராகரிக்க ஒருவரும் இல்லை.
தான் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் தொடங்கும் ஒருவனின் மனநிலையை நீ மட்டும் அல்ல; நீ சார்ந்த குழுவே அங்கீகரிக்கப்படவில்லை என விரிப்பதின் மூலம் அவனது அறிவைத் தூர விலக்கி வைக்க முடியும் என நம்புகிறது வன்முறை சார் நம்பிக்கை. அங்கீகரிக்கப்படாத வெளியில் உனது அடையாளத்தை உருவாக்கிக் காட்டும் பணியைத் தொடங்கும் மனநிலை, அப்பணியை அநீதிக்கெதிரான போராட்டமாக மாற்றுவதும், அப்போராட்டத்தின் வெற்றிக்கு வன்முறையைக் கையில் எடுத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாதது என்று அந்த நம்பி விடும் நிலையில் பயங்கரவாதக் கருத்தியல் உருவாகி விடுகிறது.
பயங்கரவாதம் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று எனச் சொல்லப்பட்டாலும், அதன் மறுபக்கத்தில் லட்சியவாதமும் புனிதப்போர்களும் இருந்தன ; இருக்கின்றன என்பதும் உண்மை தான். உருவாக்கப்படும் அரசுகள் தொடர்ந்து வன்முறை வடிவத்தைப் பயன்படுத்திக் கொண்டே பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் கூட்டமும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கைவிட்டு விடும் என நினைப்பதும் கூட அபத்தம் தான். முள்ளால் முள்ளால் எடுக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழிகள் மாற்று முறைகளை மறைக்கப் பார்க்கும் எண்ணங்களின் வெளிப்பாடு.
காதலை அனுபவித்துப் பார்த்துச் சொன்னவர்களைப் போலப் பயங்கரவாதத்தை அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம். காதலின் இன்பமோ துயரமோ அது தனிமனிதர்கள் சார்ந்த ஒரு விளைவு. ஆனால் பயங்கரவாதம் தனிமனிதர்களை அல்ல; மனித சமுதாயத்தை அலைக்கழிக்கும் ஆபத்து. விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை; ஆபத்துக்கள் தவிர்க்க வேண்டியவை.
பயங்கரவாதம் பற்றித் தமிழில் வந்துள்ள அந்த நூலை [ பயங்கரவாதம்: ஓர் உளவியல் பார்வை, க.செல்லப்பாண்டியன், கார்முகில் பதிப்பகம்,129-ஏ, பாலம் ஸ்டேசன் ரோடு, மதுரை -625002] , வாசித்து முடித்த ஒரு வாரத்திற்குள் அதற்கான விளக்கக் காட்சிகளாக விரிந்தன மும்பை நிகழ்வுகள்.
கருத்துகள்