இது தேசிய ஜனநாயகக்கூட்டணி அமைச்சரவை

மூன்றாவது முறையாக இந்தியாவின் முதன்மை அமைச்சர் ஆகியிருக்கிறார் திருவாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. முந்திய இரண்டு முறையும் இருந்த குதூகலமும் உற்சாகமும் இந்தப் பதவியேற்பில் இல்லை. தனியொரு கட்சியின் - பா;ஜ;க;வின் - நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகப் பதவியேற்ற நிலைக்கு மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தலுக்கு முன்னால் சொல்லப்பட்ட ‘ மோடி சர்க்கார்’ என்ற சொல்லாட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘என்.டி. ஏ சர்க்கார்’ என்ற சொல்லாட்சியைத் தொலைக் காட்சிகள் உச்சரிக்கின்றன.

இந்தப் பின்னடைவு நிதானத்தையும் மறுபரிசீலனையும் உண்டாக்கும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் முன் வைத்த கால்களைப் பின்வாங்கிச் சிந்திக்க மறுக்கும் தனிநபர்களும் குழுக்களும் அப்படியான மறுபரிசீலனைகளைச் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. தனிநபராக அவர் எடுத்த முடிவுகளும், அவருக்கு ஆலோசனை சொல்பவர்கள் வழியாகச் செயல்படுத்த நினைத்த திட்டங்களும் இந்தியா என்ற ஒரு நாட்டைப் பல நிலைகளில் நிலைகுலையச் செய்திருக்கிறது. மொழிகள், சமயங்கள், சாதிய அடுக்குகள் அவற்றின் வழியாக உருவாகும் பண்பாட்டு விழுமியங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபாடுகளும் பகைமை உணர்வும் கொண்ட ஒரு நாட்டின் தலைவராக இருப்பவரின் செயல்பாடுகளும் நம்பிக்கை அளிப்பும் இதுவரை வெளிப்பட்டதில்லை.
எதிர்க்கட்சி இல்லாத இந்தியா என நாடளவில் பேசியதுபோலத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுங்கட்சிகளின் கருத்தியலைக் குறிப்பிட்டு ‘திராவிடம் இல்லாத மாநிலம்’ என்றெல்லாம் பேசியதைக் கேட்டுக் கடந்திருக்கிறோம். உறவாடிக்கெடுத்தல் என்ற மன்னர் கால நடைமுறைகளைப் பின்பற்றிக் கூட்டணி சேர்ந்து கட்சிகளை உடைத்தல், பிரித்தல், இல்லாமல் ஆக்குதல் என்பதைச் செய்திருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டிய உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுக்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் ஆளுநர்கள் வழியாகச் செய்யப்பட்ட தடைகளும் குழப்பங்களும் வெளிப்படையாக இருந்தன. கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி யூனியன் பிரதேசம் போன்றனவற்றில் நடந்த நிகழ்வுகள் அதற்குச் சான்றுகள்.
முழுமையும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொருளாதார உற்பத்திகளும் பங்கீடும் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த - மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்குப் பொருந்திப் போகலாம். ஆனால் ஆகக்கூடிய பொருளாதார வேறுபாடுகள் கொண்ட மனிதர்கள் வாழும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பெரிய அளவு வர்க்கப் பிளவை உண்டாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. இயல்பான போக்கில் சமநிலை நோக்கி நகர்த்த வேண்டிய கல்வி அறிவுப் பரவல், மொழி வளர்ச்சி, பண்பாட்டு அமைப்புகளின் செயல்பாடு போன்றனவற்றில் நெகிழ்ச்சித் தன்மைக்குப் பதிலாகப் பிடிவாதமாக ஒற்றைத் தன்மையை வலியுறுத்தும் போக்கே மேலோங்கி இருந்தது.
அறிவியல் பார்வையை முன்னெடுக்க வேண்டிய பல தளங்களில் நம்பிக்கையின் பாற்பட்ட சமயக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு மக்களைப் பின்னிழுக்கும் போக்கு நடந்தது. அதனால் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றும் மக்களிடையே அச்சமும் பகைமையுணர்வும் தூண்டப்பட்டது. பலதளங்களில் உள்வாங்கும் தன்மையோடு செயல்படுவதற்குப் பதிலாகப் பிளவுகளும் விலகல்களும் வளர்த்தெடுக்கப்பட்டன.
இந்தப் போக்கும் மனப்பாங்கும் மாற்றத்திற்குள்ளாக வேண்டும் என எதிர்பார்க்கும் பொதுமனத்தோடு இதை எழுதுகிறேன். பா.ஜ.க.வின் சார்பில் அமைச்சர்களாகும் முகங்களில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. கூட்டணி கட்சியிலிருந்து பங்கேற்பவர்களும் அதனதன் நலனில் அக்கறையோடு தான் இருப்பார்கள். அதனையும் தாண்டி இந்த அரசுக்கு வழிகாட்டும் பொறுப்பு கூட்டணிக் கட்சிகளுக்கு உண்டு. அவற்றுக்கு இணையாகப் பொறுப்போடு செயல்பட வேண்டிய இடத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இதற்கு முன்பிருந்த நிலைக்கு மாறாகக் கடிவாளம் போட்டு நிறுத்தும் வலிமையோடு எண்ணிக்கை கூடியுள்ளது. இந்த ஐந்தாண்டு இந்தியாவின் வளமான காலமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்புடன் புதிய அரசை வரவேற்கலாம்.
முதல் முறை ஆட்சிப்பொறுப்பேற்ற போது உருவான புதிய கல்விக்கொள்கை வரைவுத்திட்ட உருவாக்கத்தில் மொழி ஆசிரியராகப் பங்கேற்றேன். அதன் பின்பு எழுதிய கட்டுரை ஒன்று பின்னூட்டத்தில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆசிரியரும் மாணவர்களும்

• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்