ஹாட் ஸ்பாட் : விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள்


தனித்தனியாகவே அதனதன் அளவில் முழுமையான நான்கு குறும்படங்களின் தொகுப்பு. நான்கும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் என்ற அளவில் – விவாதத்திற்கான வெப்பப்புள்ளிகள் – HOTSPOT – எனத் தலைப்பொன்றோடு வந்துள்ளது. நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியே பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. முதல் பகுதிக்கான தலைப்பு- ஹேப்பி மேரீட் லைப். அடுத்து வருவன முறையே -கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம்.

இந்த நான்கு சொற்றொடர்களுமே ஒற்றைப் பொருண்மையில் உச்சரிக்கப்படாமல், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு பொருள் தரும் விதமாகப் பயன்பாட்டில் இருக்கும் சொற்கள். அதிலும் குறிப்பாக ஈராயிரத்துக்குப் பிந்திப் பிறந்தவர்கள் இச்சொற்களைப் பயன்படுத்தும்போது சில நேரங்களில் தீவிரத் தன்மையோடும் பல நேரங்களில் நகைச்சுவைத் தன்மையோடும் உலா வரும் சொற்கள். அந்தச்சொற்களைத் தலைப்பாக்கி நிகழ்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்தை விவாதப்படுத்தியுள்ள து ஹாட் ஸ்பாட். அந்த வகையில் இந்தப் படம் கவனிக்க வேண்டிய படம்.

விவாதப்புள்ளிகளாக முன்வைக்கப்பட்ட நான்கும் மாறிவரும் குடும்ப அமைப்போடு தொடர்புடையன. முதல் மூன்றும் கணவன் - மனைவி உறவுகளையும், நான்காவது பெற்றோர்கள் -குழந்தைகள் உறவையும் விவாதப்படுத்தும் கருத்துகள் -கதைகள். இந்நான்கையும் பெண் மைய விவாதங்களைக் கவனப்படுத்திய பெண்ணியச் சாயல் கொண்ட கதைகள் என்றும் வகைப்படுத்தலாம்,

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான சமூக நிகழ்வாக இருக்கும் திருமணம் என்னும் சமூக நிகழ்வோடு தொடர்புடைய அனைத்தும் ஆண்களின் நோக்கில் வடிவமைக்கப்பட்டு, பெண்களின் துயர வாழ்க்கைக்கான ஆரம்பமாக உள்ளது என்ற விமரிசனத்தை முன்வைக்கும் முதல் கதை திருமண நிகழ்வுகளைப் பகடியாகக் காட்டிவிட்டு, நடப்பாகவும் விரித்துள்ளது. குடும்ப வாழ்க்கையில் இணையும் கணவன் -மனைவிக்கிடையே ஏற்படும் பிளவுகளுக்குப் பெரும்பாலும் அவர்கள் காரணமாக இல்லை. அவர்களின் பெற்றோரும் சமூக நடைமுறைகளுக்குத் தரும் முக்கியத்துவமுமே காரணங்களாக இருக்கின்றன என்பதை முன்வைக்கும் முதல் குறும்படம், தோசையைத் திருப்பிப்போடுவதுபோல திருமண நிகழ்ச்சிகளைத் திருப்பிப்போட்டுக் காட்டுகிறது. பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி ஒவ்வொன்றிலும் பெண் மையத்தை வைத்து நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது, மாப்பிள்ளை பார்க்கும் படலம், மாப்பிள்ளைக்குத் தரும் சீர்வரிசை, மாப்பிள்ளைக்குத் தாலி கட்டுவது எனத் தொடங்கிச் சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, உரிமைகள் மறுக்கப்பட்டுப் பிறந்த வீட்டுக்குப் போவதற்குக் கூட அனுமதிக்காத கட்டுப்பாடுகளைப் போடும் மாமனார் கொடுமையெனக் காட்டி, இப்போதைய குடும்ப அமைப்பில் ‘பெண்கள் - மருமகள்கள் படும் பாட்டை’ நேரடியாகச் சொல்லாமல் சொல்கிறது. அந்த விவரிப்பில் வெளிப்படும் அங்கதத்தொனி பார்வையாளர்களைத் தன் வசப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் முடியும் வரை பார்வையாளர்களைத் தக்கவைக்கிறது. இந்த விவரிப்பும் காட்சிப்படுத்தலும் கவனிக்கத்தக்கனவாக இருந்த போதிலும் அதனை மாற்றுவதற்காக முன்வைக்கும் நடைமுறைகள் பொருத்தமாக இல்லை. ஆறுமாதம் கணவன் வீட்டில் இருப்பது; ஆறுமாதம் மனைவி வீட்டில் இருப்பது போன்ற கருத்துகள் இப்போதுள்ள கூட்டுக்குடும்ப அமைப்புக்குள் தீர்வு காணும் முயற்சியே. தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் சிந்தனை இளையோர்களுக்கு இல்லை; அவர்களுக்குப் பெற்றோர்களின் ஆலோசனைகள் தேவை என்ற அடிப்படையில் சிந்தித்துச் சொல்லப்பட்ட தீர்வு. இதே மாதிரியான தீர்வுகளே ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்பட்டுள்ளன.

சகோதரன் -சகோதரி உறவுடையவர்கள் திருமண வாழ்க்கையில் இணையக்கூடாது என்ற விதியை பின்பற்றும் அகமண முறையின் மீது விமரிசனத்தை வீசியுள்ள தங்க விதிகள் ஒரு குறும்படமாகத் திடீர் திருப்பங்களோடு படம் பார்க்கிறவர்களிடம் ஆர்வத்தை உண்டாக்குகிறது. தனது காதலை நிறைவேற்றிக் கொள்ளத் தானொரு தன் பால் ஈர்ப்பாளர் எனச் சொல்லும் பெண்ணின் காதலன், தனக்குச் சகோதரன் முறை என அறியவரும்போது சந்திக்கும் சமூகத்தடையை முன்வைக்கிறது கோல்டன் ரூல்ஸ். அந்தத்தடையை எப்படிச் சந்திப்பது; விவாதித்துக் கடப்பது என்பதில் இயக்குநருக்குத் தீர்மானமான முடிவு இல்லை.

ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் உண்டாகும் ஈர்ப்பு காதலா? காமமா? என்ற விவாதம் ஒரு தொல்படிவம். உடல் மீதான இச்சையும் ஆசைகளும் யார் மேலும் வரும்; காதல் உணர்வு ஒருவரிட த்தில் மட்டுமே வரும் என்ற அரதப்பழசான கருத்தை விவாதிக்கும் மூன்றாவது கதை தக்காளி -சட்னி. தனக்கு வந்தா ரத்தம்; அடுத்தவனுக்கு வந்த தக்காளிச் சட்னி என்ற மனநிலையை விவாதப்படுத்தும் இந்தக் கதையில் பெண்களில் பாலியல் சேவையாளர்கள் – பரத்தமை இருப்பதுபோல ஆண்களில் பாலியல் தொழிலாளர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்ற நிலையை விவாதப்பொருளாக்கியிருக்கிறார் இயக்குநர். முடிவாகக்காதலோ? காமமோ? இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று முடிவு சொல்கிறது. இந்தக் குறும்படத்திலும் அதிர்ச்சி தரும் திருப்புக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. பாலியல் சேவையில் ஈடுபடும் மகன், அவனது அம்மாவையே விடுதியில் சந்திக்க நேரும் காட்சி எல்லாம் பார்வையாளர்களை ஈர்க்கும் காட்சிகள் தான்.

இம்மூன்று குறும்படங்களைப் போல இல்லாமல் நான்காவதாக வரும் ஃபேம் கேம் கதையிலும் நிறைய திருப்பங்கள் உண்டு. தொலைக்காட்சிகளின் நேரலைக்காட்சிகளையும் அவற்றின் கருத்தாக்கங்களை (CONCEPTS)யும் விவாதப்படுத்தியுள்ள இந்தப் பகுதி நமது சமகாலத்தில் குழந்தைகள் மீது பெற்றோர்கள் செலுத்தும் வன்முறைகளைச் சரியாகவே காட்டியுள்ளார். ஊடகப்பெருக்கத்தினால் பிரபலமாகும் வாய்ப்புகள் கூடியுள்ள நிலையில், அவரவர்களின் வயது, சமூக அடையாளம் , பொருளாதார நிலை ஆகியவற்றை மீறிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். அந்நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்படும் நிகழ்வுகளில் எல்லாவற்றையும் பேசுகிறார்கள்; காட்சிப்படுத்துகிறார்கள் அவையெல்லாம் அந்த நிகழ்வோடு முடிந்துபோகும் எனத் தங்கள் அளவில் சமாதானம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்சிப்படுத்தியதில் முதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார். அந்த விவாதத்தில் தொடர்ச்சியில் ‘பாலியல் கல்வி’யைப் போகின்ற போக்கில் பரிந்துரையும் செய்திருக்கிறார்.

சமகாலத்தில் விவாதிக்கப்பட வேண்டியனவற்றை அடையாளப்படுத்திய இயக்குநர், மொத்தமாக நான்கையும் இணைத்து ஒற்றைப் படமாக்க உருவாக்கிய வடிவம் அவர் எதிர்பார்த்த விளைவை உருவாக்குமா? என்பது கேள்விக்குறி. தீவிர விமரிசனங்களுக்குத் தீவிர விவாதத்தையும் சிந்திக்கத் தூண்டும் முடிவுகளையும் தரவேண்டும். அப்படித் தரும்போதே அது உருவாக்கும் தாக்கமும் விளைவுகளும் சரியாக இருக்கும். அதற்கு மாறாக மொத்தத்தையும் நகைச்சுவையாக்கி விட்டால் எதிர்விளைவுகளையே உண்டாக்கும். ஒரு சினிமாவில், நாடகத்தில், எழுத்தில் ஒரு பகுதியாக நகைச்சுவையின் மெய்ப்பாடுகளான எள்ளல் இருக்கலாம். அதன் முடிவில் நகைச்சுவையாகவே கரைந்துபோய்விடும்.

விவாதிக்கத்தக்க வெப்பப்புள்ளிகளையும் நான்கு கதைகளையும் இணைக்கும் முடிச்சாக இருப்பது கதையைச் சொல்பவருக்கும் அதைக் கேட்பவருக்கும் தரப்பட்டுள்ள அடையாளம் தான். ஒரு சினிமாத் தயாரிப்பாளரின் மகளைக் காதலிக்கும் உதவி இயக்குநர், தனது காதலியைக் கரம்பிடித்துக் கல்யாணம் செய்துகொள்ளப்போடும் திட்டத்தின் பாதைகளே இந்த நான்கு குறும்படங்களும் என்ற முடிச்சு கடைசியில் அவிழ்க்கப்படுகிறது. அந்த அவிழ்ப்பின் போது தயாரிப்பாளர் மற்றும் உதவி இயக்குநரின் உரையாடல் மொழியும் உடல்மொழியும் நகைச்சுவைக்குரியனவாகவே வெளிப்பட்டுள்ளன. அதனால் மொத்தமும் நகைச்சுவையாக மாறி மறைந்து போகின்றன.

ஒற்றைக்கதையைத் திரைக்கதையாக்கும்போது குறைவான பாத்திரங்களே போதுமானது. அதனால் தேர்ந்த நடிகர்களைப் பாத்திரங்களில் நடிக்க வைக்கமுடியும். ஆனால் தனித்தனியான கதைகளைத் திரைக்கதையாக்கும் போது ஒவ்வொன்றிலும் தனித்தனிக் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படும். அதனால் கூடுதலான நடிப்புக்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்பைப் புது நடிப்புக்கலைஞர்களுக்கு வழங்க முடியும். இந்தப்பட த்தில் பல புது நடிப்புக்கலைஞர்கள் வாய்ப்புப்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அந்தந்தப் பாத்திரங்களுக்குத் தரவேண்டிய நடிப்பைத் தந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே நன்கு அறிமுகமான கலையரசன், ஜனனி அய்யர் போன்றவர்களின் பங்களிப்பு சரியாகவே இருக்கிறது. கடைசிப் பகுதியின் திரைக்கதை வடிவமும் குழந்தைகள், ஊடக நிலையக் காட்சிகள், அதில் பங்கேற்றுள்ள நடிகர்கள் சிறப்பாக உள்ளன; சிறப்பாகச் செய்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்