தாத்தாவுக்கு 100 ஆடுகள் இருந்தன

104 பக்கங்களில் திருத்தமான அச்சில் நல்ல இடைவெளியோடு கூடிய வரிகள் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ள கிடை -காலாண்டு இதழை இப்போதுதான் வாசிக்கிறேன். இது கிடையின் 5 வது ஈத்து. முந்திய 4 ஈத்துகளையும் வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது இந்த ஈத்து. பொருளடக்கப்பகுதியைக் குளம்படி, சூல், தொரட்டி, தொழுவம் எனக் கால்நடைகளோடு தொடர்புடைய சொற்களால் பிரித்துக் குறிப்புகள், புனைவுகள் அல்லது படைப்பாக்கங்கள், கட்டுரைகள், தகவல்கள் எனத் தந்திருக்கிறார்கள் கிடையின் ஆசிரியர்கள்.

******

வாசித்து முடித்தவுடன் 55 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டேன். எங்கள் ஊரைச் சுற்றி இருந்த கொடாப்புகளும் குவியல் குவியல்களாகத் திரண்டு கிடைக்கும் ஆட்டு மந்தைகளும் நினைவுக்கு வந்துவிட்டன. அத்தோடு பள்ளிக்குப் போய்த் திரும்பும்போது ஊர்காலி மாடுகளை ஓட்டிக்கொண்டு வரும் கிழவனின் அதட்டலுக்குச் செவிசாய்த்து நடக்கும் மாட்டுக் கூட்டமும் படமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஊரைச்சுற்றி ஆட்டுத்தொழுவங்கள் போட்டு ஆடு வளர்த்த ஊரின் காட்சிகள் காணாமல் போனபோது கமலைக் கிணறுகள் ஒவ்வொன்றிலும் மின்சார மோட்டார்கள் நீரை அள்ளி எரிந்து கொண்டிருந்தன. நிலத்தடி நீரை உறிஞ்சிய எந்திரங்களின் வருகையோடு யூரியாவும் காம்பளக்ஸும் வாங்கி வீசிய தோட்டங்களுக்கு ஆட்டுப் புழுக்கைகளும் மாட்டுச்சாணங்களும் தேவையில்லாமல் போனது.

பசுமைப்புரட்சி என்ற பெயரில் நவீன விவசாயத்திற்கு மாறியபோது ஏக்கருக்கு 30 மூடை அடித்த விவசாயிகள் இரட்டிப்புக் கணக்கில் நெல் மூட்டைகளைக் களத்திலிருந்து ஏற்றி அனுப்பினார்கள். அனுப்பிய மூட்டைகளுக்கான பணத்தில் பாதி உரக்கடையில் வாங்கிய முன்கடனுக்குப் போனது. அந்த நகர்வுக்காலத்தில் தான் நான் விடுதியில் தங்கிப் படிக்க ஊரைவிட்டுக் கிளம்பி திண்டுக்கல் நகரத்திற்கு வந்தேன். வந்தவன் அப்படியே நகரவாசியாகி- மதுரை, புதுவை, நெல்லை, கோவை என அலைந்துவிட்டு இப்போது திருமங்கலம் என்னும் அரைக்கிராமமும் அரைநகரமுமான வெளியில் ஓய்வில் இருக்கிறேன். என்றாலும் அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய் வந்திருக்கிறேன். இப்போதும் போய் வருகிறேன்.

****

கிடையை வெளியிடுவது கால்நடை வளர்ப்போர் நல நடுவம் என்னும் அமைப்பு. இவர்களால் நட த்தப்படும் இந்த இதழின் வழியாக அவர்களின் இலக்குகள் தெரிகின்றன. இந்திய விவசாயம் என்பதைப் பயிர்கள், வெள்ளாமை, விளைச்சல் என்பதாக மட்டும் புரிந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, நிலத்தை ஆதாரமாக க்கொண்டு வாழும் கால் நடைகளின் இருப்பும் பங்களிப்பும் வேளாண்மையின் சரிபாதித்தேவை என்பதைக் கிடையின் உள்ளடக்கம் வலியுறுத்துகிறது. கட்டுரைகள் தரும் தரவுகளும் சான்றுகளும் மரபான வேளாண்மையில் கால்நடைகளின் இடம் பற்றிப் பேசுதோடு, அவற்றை வளர்த்து வேளாண்மையின் பங்காளிகளாக இருந்த கால் நடை வளர்ப்போரின் வாழ்வியலையும் விரிவாகத் தருகின்றன. இந்த நிலைபாட்டை முன் வைக்கும் புனைவொன்றைக் கதையாக்கியிருக்கிறார் அலையாத்தி செந்தில்.

ரொக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அச்சிறுகதை, சிறுகதைக்குச் சொல்லப்பட்ட வடிவத்தைச் சரியாகக் கையாண்டுள்ள இயற்பண்பியல் சிறுகதை என்பதைக் கதைக்கான மொழிநடையும் சொல்முறையும் காட்டுகின்றன. கதைக்கான நேரடிக்காலம் ஒரே நாள் தான் என்றாலும் மாடுகளைத் திரட்டிக் கிடைபோடும் ராமையாக்கோணாருக்கும், நிலவுடைமையாளர் ரெத்தினத்தேவருக்கும் இடையிலான உறவும், இரு குடும்பங்களின் கடந்த கால வாழ்வும் முழுமையாகத் திருப்புக்காட்சிளில் விரிக்கப்பட்டுள்ளன. அக்குடும்பங்களுக்கிடையேயான உறவு பணம் சார்ந்த உறவாக இல்லாமல், ஒருவரையொருவர் சார்ந்து வாழும் உறவாக இருப்பதைக் கதையின் போக்கில் விவரிக்கிறார். இந்தப் போக்கின் மீது எனக்கொரு விவாதமும் ஏற்பின்மையும் உண்டு. ஒருவிதத்தில் இத்தகைய புனைவுகள் கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துகின்றன என்று முன்பு எழுதியிருக்கிறேன். அதே விமரிசனத்தை இந்தக் கதைக்கும் சொல்லத்தோன்றுகிறது.

தான் ஏமாற்றப்படுகிறேன் என்பதை உணர்ந்து கோபத்தின் ரெத்தினத் தேவரிடம் மோதிப் பார்க்கும் விதமாகப் பேசிய ராமையாக்கோணாரின் ஆத்திரம், சரியானதல்ல; அவசரப்பட்ட ஆத்திரம் என்பதாகக் கதை முடிக்கப்பட்டிருக்கிறது. கதையின் வடிவத்திற்கு இந்த முடிவு அழகியலைத் தரலாம். ஆனால் நடப்பு அப்படியாக இல்லை. திரும்பத் திரும்பத் தனக்கு வரவேண்டிய கிடைக்கான பணத்தைப் பெறுவதற்காக வந்து போகும் ராமையாக்கோணாருக்கு ஒவ்வொரு தடவையும் எந்தவிதப் பதிலும் தராமல் அனுப்பும் ரெத்தினத்தேவரின் போக்கு அன்பால் ஆனதல்ல. தான் உடைமையாளர் என்ற தன்னிலையால் ஆனது.

இந்திய கிராம வாழ்க்கையைப் புனைவுக்களமாக் கொண்டு கதைகள் எழுதிய பலரும் – குறிப்பாக வட்டார வாழ்க்கைக்குள் நவீனத்துவம் நுழைவதை மறுக்கும் நோக்கத்தில் கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் கிராமத்தின் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்திக் காட்டாமல், அன்பும் பரிவும் கொண்ட மனிதர்களால் நிரம்பியன தமிழ்நாட்டுக்கிராமங்கள் எனக் காட்டியுள்ளனர். தொடக்க நிலையில் -1970 களில் எழுதியவர்கள் எழுதிக்காட்டிய கிராமங்கள் அப்படிப்பட்டனவாக இருந்தன. வேளாண்குழுக்களும் கால்நடை வளர்ப்புக் குழுக்களும் கைவினைப்பொருட்களைத் தயாரிக்கும் தச்சர், கொல்லர், தட்டார் போன்றோர்களும், தனித்து ஒதுக்கப்பட்ட சேரிகளில் வாழ்ந்தவர்களிடம் கூட அன்பு காட்டிய நிலவுடமையாளர்களைக் கதைகளில் காட்டினார்கள். நிலவுடமையாளர்களாக விளங்கிய இடைநிலைச்சாதிக் குழுக்களிலிருந்து வந்து வட்டார இலக்கியம் செய்தவர்களின் பார்வைக் கோணத்தில் எழுதப்பட்ட புனைகதைகளின் இயல்பும் வெளிப்பாடும் அப்படி இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தப்போக்கை 1990 களில் அலையாக எழுந்த தலித் இலக்கியப்புனைவுகளும் விமரிசனங்களும் கேள்விக்குள்ளாக்கின என்பது தமிழின் அண்மைக்கால இலக்கிய வரலாறு.

இந்தியாவில் நவீன வேளாண்மையை மறுத்து மரபான வேளாண்மையை ஆதரிப்பவர்களும், அதனோடு சேர்ந்து கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் அக்கறை காட்டுபவர்களும் வெளிப்படுத்தும் அக்கறைகள் தவறானவை என்று சொல்ல முடியாது. அதே நேரம் நவீன வேளாண்மையே இந்தியப் பெரும் கூட்டத்திற்குப் பசி தீர்க்கும் அளவுக்கு விவசாய உற்பத்தியைப் பெருக்கிக்

காட்டியது என்ற உணையையும் மறுக்க முடியாது. சிறு- குறுநிலங்களைக் கொண்ட வேளாண்மைக்குப்பதிலாகப் பண்ணை வேளாண்மையை முன்னெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இவற்றையெல்லாம் உள்வாங்கிய மறுபரிசீலனைகள் இப்போது தேவைப்படுகின்றன. அத்தோடு இந்திய சமூகத்தின் -சாதியப்பிளவுகளின் கூர்மையைப் பேசாமல் தொழில்சார் அக்கறைகளை மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டாடும் மனநிலையையும் மறுபரிசீலனைக்குள்ளாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. அதையெல்லாம் விவாதிக்கத்தூண்டியதாக அலையாத்தி செந்திலின் கதை எழுதப்பட்டிருக்கிறது .

******

இந்த இட த்தில் இதனோடு தொடர்புடைய சமுதாய வரலாற்றுக் குறிப்பொன்றைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. இந்தியக் கிராமங்களின் தன்மையைப் பற்றிய எழுதும் கார்ல் மார்க்ஸ், ‘இந்தியக்கிராமங்கள் அவற்றின் தேவையை அவற்றின் எல்லைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளும் தன்னிறைவுத்தன்மை’ கொண்ட கிராமங்கள் என்று குறிப்பிடுவார். ஆசியத்தன்மையிலான உற்பத்திமுறையை விவரிக்கும் அவரது எழுத்துகளில் ஒரு கிராம ம் என்பதற்குள் நிலத்தை உரிமையாகப் பெற்ற விவசாயிகள், அந்நிலத்தில் உழுது பயிரிட்டு உற்பத்தியில் பங்கெடுக்கும் கூலிகள், வேளாண்மைக்குத் தேவையான கருவிகளைச் செய்து கொடுக்கும் கைவினைத்தொழிலாளர்கள் போன்றவர்களின் பங்களிப்போடு கால்நடை வளர்ப்போர்களின் இருப்பும் பேசப்பட்டுள்ளது. நிலத்தின் உற்பத்தியே முதன்மையான உற்பத்தி; அவற்றில் பங்குபெற ஒவ்வொரு குழுவுக்கும் உரிமையுண்டு என விவரிக்கும் சமூக வரலாற்றாசிரியர்கள் அவர்களின் தேவைக்கேற்பவோ, சமநிலை நோக்கிலோ உற்பத்தி பகிர்ந்தளிக்கப்படவில்லை; அதற்குள் கண்ணுக்குப்புலப்படாத சுரண்டலின் வடிவம் ஒன்று இருந்தது என்றும் விளக்குகிறார்கள்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்

அந்திமழை சிறுகதைப் போட்டி -2024