தலைமைச் செயலகம் -சாயல்களும் பாவனைகளும்
அரசியல் சினிமாவின் முதன்மையான அடையாளமாக இருப்பது கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் காட்சிகளைப் படத்தில் புனைவாக உருவாக்கிக் காட்டுவதாகும். அப்புனைவில் இடம் பெறும் பாத்திரங்களுக்கு அரசியல் பிரபலங்களில் பெயர்களின் சாயலில் பெயரிடுவதன் மூலம் கூடுதலாக அரசியல் படம் எனக் காட்ட முடியும் என்ற நம்பிக்கைத் தமிழ்ப்பட இயக்குநர்களுக்கு உண்டு.
தொடர்ச்சியாகத் திராவிட இயக்க அரசியல் மீதும், தலைவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை மீதும் விமரிசனங்களை உருவாக்கும் படங்களை எடுத்து வரும் மணிரத்னம் இவ்விரு உத்திகளையும் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். அவரது இருவர், அக்னி நட்சத்திரம், ஆயுத எழுத்து, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களைப் பார்த்தவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள்.
மணிரத்னத்தின் இந்தப் போக்கை உள்வாங்கிய வெளிப்பாடாகவே வசந்தபாலனின் ‘தலைமைச்செயலம்’ என்னும் வலைத்தள வரிசைத்தொடர் ( WEB SERIES) உருவாக்கம் பெற்றுள்ளது. மணிரத்னத்தின் பாணியை முழுமையும் பின்பற்றாமல் குறிப்பான சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் வசந்தபாலன். பாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் அதே பாணியைத் தொடர்ந்துள்ளார். ஆனால் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவதில் எதனையும் நினைவூட்டாமல் முழுமையும் புனைவுத்தன்மையைப் பின்பற்றியுள்ளார்.
தலைமைச்செயலகம் என்ற பெயர் தமிழ்நாட்டரசின் - முதல் அமைச்சர் அதிகாரம் செலுத்தும் சென்னைக் கோட்டையை உருவகப்படுத்திக் கொண்டு இந்திய அளவு அரசியல் போக்கொன்றை இணைத்து, தனது தொடருக்குத் தேசியச் சந்தையை உறுதிசெய்துள்ளார். மார்க்சிய லெனினியக் கட்சிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அதன் விளைவுகளை எதிர்கொண்ட வங்காளத்து அறிவுஜீவிகளின் இளம்பருவத்துச் சாகசங்களை நினைவுபடுத்தும் ஒரு கதைக் கீற்றின் போக்கை, திராவிடக் கட்சிகளின் ஊழல் அரசியல் பின்னணியில் நிறுத்திக் கதை முடிச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முடிச்சின் அடிப்படையில் கொற்றவை பாத்திரமே ஒட்டுமொத்தத் தொடருக்கும் மையம். எட்டுப் பகுதிகள் கொண்ட தலைமைச்செயலகம் தொடரின் பெரும்பகுதியும் கொற்றவையின் அரசியல் அறிவு, தனிநபராக அவளது தொடர்புகள், கட்சிக்காரர்களைக் கையாளும் நேர்த்தி, முதல் அமைச்சரோடு அவளுக்கு உள்ள உறவு, அதற்குள் இழையோடும் ரகசியத்தன்மை எனப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி பெறும் புத்திசாலிப் பெண் என்ற நினைவூட்டலின் வழியாகக் கொற்றவையை ஜெயலலிதாவின் சாயலில் உருவாக்கியுள்ள வசந்தபாலன், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் பாத்திரங்களின் வழியாக இப்போதைய முதல்வர் முத்துவேல் ஸ்டாலினையும் அவரது தந்தை முத்துவேல் கருணாநிதியையும் நினைவூட்ட முயன்றுள்ளார். முதல்வருக்குப் பின் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற நடக்கும் குடும்ப உறவுகளுக்கிடையேயான மறைமுகச் செயல்பாடுகள், அவரது பதவியைப் பயன்படுத்திச் சம்பாதிக்கும் பெரும்பணம், என விரியும் காட்சிகளில் இப்போதைய முதல்வரின் குடும்ப உறவுகள் பற்றிப் புலனாய்வுப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் நினைவூட்டப்படுகின்றன.
திராவிட இயக்க அரசுகள் ஊழல் செய்கின்றன; அதிலிருந்து தப்பிப்பதற்காக அதிகாரத்தின் கண்ணிகளைப் பயன்படுத்துகின்றன. அதன் மூலம் ஒன்றிய அரசோடு இணைந்துபோகின்றன; இயலாத நிலையில் அரசியல் தரகர்களையும் திருமண உறவுகளையும் குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துகின்றன; நீதிமன்றத்தைப் பணம் கொடுத்து வாங்கும் முயற்சியையும் செய்கின்றன. தேவைப்பட்டால் கொலைகளையும் செய்கின்றன என விமரிசனத்தை வைக்கும் இந்தத்தொடரில் நேரடியாக ஒரு கட்சியைக் குற்றம் சாட்டாமல் பொதுவாகத் திராவிட அரசியல் என்பதாகக்காட்சிப்படுத்துகின்றார். அதனைச் செய்வதற்காகத் தமிழ்நாட்டு அரசியலின் இருபெரும் அரசியல் ஆளுமைகளைக் குறியீட்டுச் சாயலில் உருவாக்கியுள்ளார் இயக்குநர், முதல் அமைச்சர் அருணாசலத்தையும் கொற்றவையையும் எதிரெதிர் நிலையில் நிறுத்தாமல் காட்டுவதின் மூலம் தனது திரைக்கதை அமைப்பில் சாதுர்யத்தைக் கொண்டுவந்துள்ளார். கொற்றவையின் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக்கொண்ட முதல்வர் எனக்காட்டும்போது அந்த முதல்வர் அருணாசலம், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என்ற சாயலைத் தொலைத்துவிட்டு, எம்.ஜி.ராமச்சந்திரனின் சாயலைப் பெற்றுவிடுகின்றார்.
அரசியல் ஆளுமைகளின் பாத்திரங்களைச் சாராம்ச ஆளுமைகளாக வடிவமைத்துக் கொண்டதின் வழியாக வசந்தபாலன் மணிரத்னத்தின் பாணியிலிருந்து விலகிப் புதுத்தட த்தை உருவாக்கியிருக்கிறார். அத்தோடு பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு அவர் தெரிவுசெய்த நடிகர்கள் பலரும் கச்சிதமாக நடித்துள்ளனர். கொற்றவையாக நடித்துள்ள ஸ்ரேயா ரெட்டியும் அவரது மகளாக நடித்துள்ள சாரா பிளாக்கும் செல்வ புவியரசனாக நடித்துள்ள சந்தான பாரதியும் பாத்திரங்களாக மாறியிருக்கிறார்கள். சிறப்பாகச் சொல்லப்பட்ட இவர்களைத் தாண்டி துர்காவாக நடித்துள்ளவரும், அமுதவல்லியாக வரும் ரம்யா நம்பீசனும் கூடப்பொருத்தமாகவே பாத்திரத்தை ஏற்றுள்ளனர். எப்போதும் சிறப்பாகப் பாத்திரங்களைக் கொண்டுவரும், கிஷோர் தனது உடல் மொழியில் வயது குறித்த தன்னுணர்வைப் பல இடங்களில் தவற விட்டுள்ளார். பெரிய அளவுக்குக் குறைசொல்லும் விதமாக ஒருவரது நடிப்பும் இல்லை என்பது இயக்குநரின் சிறப்பு.
ஒரு வலைத்தொடர் என்ற வகையில் தமிழில் இதுவரை வந்த தொடர்கள் படப்பிடிப்புக்குச் செய்த செலவுகள் போதுமானவையாக இருந்ததில்லை. இந்தத்தொடரில் அப்படியொரு குறை இருக்கக்கூடாது என்பதை ரேடான் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் ராதிகாவும் சரத்குமாரும் உறுதி செய்து இயக்குநருக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அதனைப் பெற்ற வசந்தபாலன் தனது சிறப்பான முத்திரையைப் பதித்துள்ளார்..
கருத்துகள்