தேய்புரிப் பழங்கயிறென நெளியும் நவீனக் கவிதைகள்- லறீனாவின் ஷேக்ஸ்பியரின் காதலி


எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக் 
கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும் . 

எதை முன்வைப்பது என்ற கேள்விக்குத் தன்னை முன்வைப்பது என்ற பதிலைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது கவிதை இலக்கியம். தன்னை முன்வைப்பது என்று முடிவாகிவிட்டால் ‘தன்னின் இருப்பை எவ்வாறெல்லாம் முன்வைப்பது? எல்லாவற்றையும் முன்வைத்தே ஆகவேண்டுமா?’ என்பதான கேள்விகள் எழக்கூடும். இதன் தொடர்ச்சியாகவே, ‘எப்படி முன்வைப்பது?’ என்ற பல குழப்பங்களும் சில தெளிவுகளும் தோன்றக்கூடும். முன்வைப்பதைக் கேட்கப் போகின்றவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த நிலையில் கவிதை மொழியின் அடுக்குகள் ஒருவிதமாகப் படிந்துபடிந்து உருக்கொள்கின்றன. தன்னையும் தன் சொற்களைக் கேட்பவர்களையும் சமநிலையில் உருவாக்கிப் பேசும் உரையாடல் அக இலக்கியங்களின் முதன்மையான வடிவங்களாகத் தமிழில் வெளிப்பட்டுள்ளன. பக்தி இலக்கியங்களிலும் கூட ஆண்டாள் போன்ற பெண்கவிகளிடம் மட்டுமே வெளிப்படும் கவிதை மொழியும் அப்படியானவையே. 

தெரிந்தவர்களிடம் முன்வைக்கப் போகிறோம் என்ற நிலையில் பேசும் விதமும், முன்பின் தெரியாதவர்களிடம் பேசவேண்டிய நெருக்கடியில் பேசும் விதமும் ஒன்றாக இருக்கப்போவதில்லை. கேட்க ஒருவர் இருக்கிறார்; அவர் நம்பகமானவர் என்ற நிலையில் சொல்லிப் பார்க்கும் தொனிகளும், ஒருவருமே இல்லை; காதுள்ளவர்கள் கேட்கட்டும் என உரத்துப் பேசும் தொனியும் வேறுவேறாகவே இருக்கும். புறக் கவிதைகளும் அறவியல் கவிதைகளும் அப்படித்தான் வெளிப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் தாண்டிவரும்போது எவற்றை முன்வைக்கலாம் என்பதை நோக்கி நகர்கிறது கவிதை. ஒவ்வொரு காலகட்டத்துக் கவியும் அவரது காலத்துப் பெரும்போக்கில் ஒருவராகவும், தனக்கேயான தன்னடையாளத்தை வெளிப்படுத்தும் இன்னொருவராகவும் வெளிப்படுதல் தவிர்க்க முடியாதது. பிறரினின்றும் நான் தனியானவள்/வன் என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கும் நம் காலத்துக் கவிகள் இந்தச் சட்டகத்திற்குள் இயங்குவதையே பிடிவாதமாகக் கொண்டிருக்கின்றனர். 

நவீன வாழ்க்கையை எழுதும் நவீனத்துவக் கவிதைக்கு – தன்னிலையை முன்வைக்கும் நவீனத்துவக் கவிகளுக்குப் பாவனைகள் முக்கியம். பாவனைகளின் இயங்கியலை அறியாத ஒருவரால் நவீனத்துவக் கவிதைப் பரப்பில் தன்னைப் பொதுநிலையாகவும் முன்வைக்க முடியாது; தனி அடையாளத்தோடும் முன்வைத்துவிட முடியாது. லறீனாவின் கவிதைகள் பலவற்றை அவ்வப்போது வாசித்த நான், இந்த தொகுப்பிலுள்ள கவிதைகளைத் திரும்பத்திரும்ப வாசித்துவிட்டு முன்னுரையை எழுதாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். 

கவிதைகளுக்குள் நானறிந்த குறைவாக நானறிந்த லறீனாவைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று முதலில் நான் நம்பினேன். இலங்கையில் வாழும் அவரது சொந்த வாழ்க்கையின் அல்லாடல்கள் எனக்கு அறிமுகம் இல்லாதவை என்ற போதிலும் பொதுவான நெருக்கடிகளை – குடும்ப உறவுகள் தரும் நெருக்கடி, பணியாற்றும் கல்விப்புல வளாகம் தரும் வலிகள், நியாயமாகக் கிடைக்கவேண்டிய மரியாதைகளும் ஏற்புகளும் தள்ளிப்போதல் அல்லது விலகிப் போதல் போன்ற அன்றாடங்களை அவர் எங்கேனும் எழுதியிருக்கிறாரா என்று தேடித்தேடிப் பார்த்தேன். தன்னைச் சுற்றியுள்ள சமூக மனிதர்களுக்கும் தனக்குமான உறவுகள், தன்னைப் பாதிக்கவில்லை என்ற போதிலும் மற்றவர்களுக்குள்ளேயே நிகழ்ந்துவிடும் குரூரங்கள் அல்லது குதூகலங்கள் போன்றவற்றை எழுத நினைக்கும் எத்தனிப்புகள் வெளிப்பட்டுள்ளனவா என்றும் எனது தேடல்கள் இருந்தன. எனது தேடல் தோல்வியையே கண்டது. இப்படித் தேடும் ஒருவரைத் தோற்கச் செய்வது நவீனத்துவக் கவியின் முதல் வெற்றி. அவற்றையெல்லாம் எழுதுவது நவீனத்துவம் ஆகாது என்பதில்லை. இவற்றிற்கு முக்கியத்துவம் தந்து எழுதும் கவிகள், கவிதையின் அழகியலைத் தொலைத்துவிட்டு நிகழ்வுகளைத் தகவல்களாக்கி முன்வைத்துவிடும் விபரீதங்களைச் சந்திக்கின்றனர். அதைச் செய்யும் முயற்சியில் லறீனா இறங்கவே இல்லை. தொடர்ச்சியாகத் தன்னின் வெளிப்படையான இருப்பைத் தள்ளிவைத்துவிட்டு நவீனத்துவம் உருவாக்கும் சிக்கல்களைப் பாவனைகளாக்கி எழுதுவதுதான் கவிதை வெளிப்பாடு என முடிவுசெய்து தேர்ந்துகொண்டுள்ளார்; அதை வெளிப்படுத்தியுள்ளார். 
நான் கிளியாக மாறியபோது
அவள் பொந்தாகி அடைக்கலமளித்தாள்
என்ற கவிதையை எழுதிவிட்டு நிமிர்ந்தபோது 
வீடு ஒரு மலர்வனமாகிற்று. 
என்ற வரிகளை - பலவரிகளைக் கொண்ட ஒரு கவிதைக்குள் இருக்கும் சில வரிகளாக வாசித்தபோது கவிதைக்குத் தேவையான பாவனையின் உச்சம் ஒன்றைத் தொட்ட ஒருவரின் கவிதைச் செயலாகப்பட்டது. கிளியாக மாறுதல், அடைக்கலம் தேடுதல், மலர்வனமாக மாறுதல் என்பதான செயல்கள் பாவனைகளின் அடுக்குகளைக் குவித்து ஒரு கூட்டமாக மாறிக் கிளர்ச்சியைத் தந்துவிட்டன. 

கவிதை இலக்கியம் செவிக்குரியதான சொற்களின் வழி, கண்ணில் காட்சிகளை உருவாக்குகிறது. காட்சிகள் எப்போதும் திசைதிரும்ப விடாமல் கட்டிவைக்கும் வல்லமை கொண்டவை. காட்சிகளை உருவாக்காத கவிதைச் சொற்கள் பாறைகளின் மீது விழுந்த விதைகள். கட்டிப் போட்ட கண்களின் உள்ளே நிகழும் நேர்க்காட்சிகளின் மறு ஆக்கமும், நினைவடுக்குகளின் படிமக்காட்சிகளும் மனத்தை அசைத்துப் பார்க்கின்றன. வீடு ஒரு மலர் வனமாகிறது, என்ற வரியை வாசித்துக் கொண்டிருந்தபோது தமிழ்ச் செவ்வியல் தொகைக்குள்ளிருந்து அந்தச் சொற்றொடர் மேலெழும்பி வந்தது. அந்தச் சொற்றொடரின் உரிமையாளர் யார் என்பது கூட இல்லை. 
‘ஒளிறேந்து மருப்பின் களிருமாறு பற்றிய 
தேய்புரிப் பழங்கயிறு போல 
வீவதுகொல் என் வருந்திய உடம்பே’ (நற்றிணை/284) 
கவிதைக்குள் இருக்கும் தேய்புரிப் பழங்கயிறென்னும் சொல்லாட்சியே எழுதியவருக்கான பெயராக மாறியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். 
இரண்டு யானைகளால் இழுக்கப்படும் கயிறு பழையது; தேய்ந்து புரிகள் பிரியத் தொடங்கிவிட்ட கயிறு. என்றாலும், ஒருபக்கம் அறிவென்னும் யானையும் இன்னொரு பக்கம் மனம் என்னும் யானையும் விடாப்பிடியாக இழுக்கின்றன. விளைவு என்னாகும்? கயிறு அறுந்துதான் போகும். ஆனால், இழுக்கப்படுவது கயிறல்ல; மனித உடல். அந்த உடலுக்குள் மனித மனமும் இருக்கிறது; அறிவும் இருக்கிறது. நம் உடம்புக்குள் மனமும் அறிவும் இருக்குமிடம் எவையென யாருக்கேனும் தெரியுமா? மனதையும் அறிவையும் பிரித்துவிட முடியாது என்ற நிலையில் யானைகள் இரண்டும் ஒன்றையொன்று இழுப்பது போலப் பாவனை செய்கின்றன. பாவனை என்பது விட்டுக்கொடுப்பதும் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதுமான விளையாட்டாக இருக்கிறது, கவிதைக்குள். லறீனாவின் கவிதைக்குள் வகைவகையான விளையாட்டுச் செயல்கள் நகர்கின்றன. மனிதர்களின் விளையாட்டாக மட்டுமில்லாமல் மனிதர்களின் சாயலை உள்வாங்கிய விலங்குகளும் பறவைகளும் கூட அந்த நகர்வில் பங்கெடுத்துள்ளன. 

“இடர்ப்பெருஞ்சாலை ஊர்ந்த 
சர்ப்பங்கள் நசித்திறுக்கும் 
கழுத்திடை மிச்ச மூச்சை 
பொத்திவைத்திடும் ரகஸ்யம் அறிந்திருந்தாய், 
எப்போதுன் காதலின் உயிர்ப்பாய் ஆனேன்? 
என்ற கேள்வியின் போதும், 
பாவம்! 
காதலின் நிமித்தமோ 
காதலின்மையின் நிமித்தமோ 
அதைச் செய்து முடித்தற்கு உன் 
ஒற்றைச் சொல் மட்டுமே போதுமாயிருப்பதை 
ஒருபோதுமே அறிந்தாயில்லை, நீ.’ 


என்பதான பதிலின்போதும் தெளிவும் தெளிவின்மையுமான இருண்மைக்குள் கவிதை நகர்வதை வாசிக்கலாம். 
நவீன மனிதர்களை எழுதும் நவீனத்துவத் தமிழ்க் கவிதை, மனம்-உடல், என்ற இரண்டின் இருப்பாகவும் இருப்பின்மையாகவும் நகர்கின்றது. லறீனா, 
‘தப்பிச் செல்லுகை எப்போதுமே தற்காலிகம்
நிரந்தரம் என்பது நின்று சந்தித்தலாகும்
அலைகள் கற்பாறையில் மோதியதில் எழுந்த
எதிரொலி உரத்துச் சொன்னது 


இப்போது உடலும் மனமும்
ஒரு புழுவாய்ச் சுருண்டன
கவசங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே
அடைக்கலம் அளிக்கும் என்றில்லை’ 
என்று இருத்தலையும் தப்பித்தலையும் பேசும் இதுபோன்ற கவிதைகளின் வழியாகச் சமகால நவீனத்துவக் குளறுபடிகளைச் சந்திக்கிறார். ஒரு பெண்ணாக, காதலும் அன்பும் ஆசையும் கொண்ட தன்னடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பும் உயிரியாகக் கவிதைக்குள் அலையும் லறீனாவின் கவிதைகளைக் குறிப்பதற்குத் தேய்புரிப் பழங்கயிறு என்னும் படிமம் ஆகப்பொருத்தமானதாகப்படுகிறது. மொத்தமாக வாசிக்கும்போது கவிதைக்குள் அலையும் ஒருவரின் விருப்பங்களையும் ரகசியங்களையும் நினைவுகளையும் கிளர்ச்சிகளையும் களிப்புநிலையையும் வலிகளையும் உங்களால் வாசிக்க முடியும். கவிதைச் சொற்கள் உருவாக்கும் நிகழ்தகவுகளில் தனிமனிதர்களின் மெய்ப்பாடுகளை அதன் அடுக்குகளால் நிரப்பப்பட்ட குடுவைகளாகப் பார்த்து ரசிக்க முடியும். குடுவைகளில் நிரப்பப்பட்ட பானங்களை வாசிப்பவர்களின் விருப்பத்திற்கேற்ற பானமாக மாற்றிப் பருகலாம். லறீனா எழுதியுள்ள, 
‘மரணம் ஓர் ஓநாய் 
உறுமலின் சீற்றம் மூச்சிரைத்து முன்னேவர 
வாகாக நீளுமதன் நாவு’ 
என்ற வரிகளால், நிரப்பப்பட்ட குடுவைக்குப் பக்கத்தில் மருட்கையின் அடுக்குகளும் அச்சத்தின் விரிவும் நின்றாடுவதை வாசித்தபோது நல்லதொரு கவிதை வாசிப்பின் முழுமையை என்னால் உணரமுடிந்தது. 


“வெறுமையின் வெளியை வர்ணங்களால் நிரப்பினேன்
பழுப்பு நிறத்தில் ஒரு கண்ணாடி தோன்றியது
நான் அதில் நுழைகின்றேன் 
சிதைவுற்ற பாழ்நகரங்களின் வரலாறுகளை சொல்லித்தந்தபடி அது அழைத்துச் சென்றது
வெளிகள் கடந்த இருட்பிரவாகம் உட்கொள்கிறது 
அந்தகாரத்தின் நிறம் இத்தனை அழகானதாய் இருந்ததை
இதற்கு முன்னொருபோதும் பார்த்த ஞாபகமில்லை
என்றெனக்கே சொல்லிக் கொண்ட தருணத்தில்
மென்மழை சுமந்தொரு காற்று வீசியது 
மழையில் கரைந்து உயிர் உருகியோடுகையில்
கடைசித் துளியினை உன் கையில் ஏந்துகின்றாய்
மிருதுவான முத்தத்தினால் துளிகளாய் வளர்க்கின்றாய் 
உன்னிலிருந்து புதிதாய் வெளிப்பட்ட என்னை
அழகி என்கிறாய், நீ
அன்பு என்கிறேன், நான்.’ (உயிர்ப்பின் சூட்சுமம்) 
போன்ற முழுக்கவிதைகளாகவும், 


‘கோடுகள் குறுக்கும் மறுக்குமாய் நெளிந்து பாம்புகளாகி 
மனசெல்லாம் ஊர்ந்துபோகத் தொடங்கிவிட்டன.பிடித்துப் பெட்டிக்குள் போடப்போட 
அவை நைல் நதியாய் நீண்டு பெருகலாயின.’ 
******** 
‘வாழ்தல் பெருஞ்சுமை 
திரும்பப் பெறு அல்லது சுமந்து திரி 


அரூபம் நிலைகொள்கிறது 
மௌனம் மெல்லக் கரைந்து புகையாகிறது 


தகித்து எரிகிறது திரி 
அவ்விதம் ஒளிர்வதே விதி.’ 

போன்று கவிதைகளின் பகுதிகளாகவும் தெறிப்புகள் பலவற்றைக் கொண்டுள்ளன. மொத்தத் தொகுப்புக்குள்ளும் தனித்ததொரு கவிதையாக இருக்கிறது தொகுப்பின் தலைப்புக் கவிதையாக இருக்கும் ஷேக்ஸ்பியரின் காதலி. ரூபம் - அரூபம் என்னும் நவீனத்துவ இரட்டையைத் தாண்டியொரு பின்நவீனத்துவ வெளியில் அலையும் பிம்பங்களின் நினைவுகளையும் செயல்பாடுகளையும் மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது. கணினித்திரை, கடிகார முள்ளென்னும் கடவுச்சொல், உடல்களின் தினவுகளைப் பிம்பங்களின் மூச்சிரைப்பில் தொலைத்துப் பிடித்துக் கொள்ளுதல், இடையீடு செய்யும் பழுப்புநிறக் கண்ணோடு கூடிய சாம்பல்நிறப் பூனையின் இடையீடு என அடுக்கப்படும்போது நவீனம் கடந்ததொரு கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கிறது. 


சொல்முறைகளாலும் மொழிக்கூட்டம் உருவாக்கும் புதுவகை வெளிகளாலும் அவற்றில் அலையும் பிம்பங்களாலும், பிம்பங்களுக்கிடையேயான பிணக்குகளாலும், கிடைக்காத விடைகளாலும், எழுப்பும் கேள்விகளாலும் கவிதை வாசிப்பவர்களைத் திரும்பவும் வாசிக்கத்தூண்டுகின்றன, பல கவிதைகள். கவிதை வாசிப்பாளர்களுக்குப் பல காலத்திற்கு வாசிப்பின்பத்தை அளிக்கக் கூடிய தொகுப்பாக இருக்கிறது. 


டிசம்பர்,2019 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்