தமிழியல் ஆய்வு:தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன. அந்த விரிவைத் தரம்/ தரமின்மை என்ற அளவுகோலைக் கொண்டு ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் விரிவும் பரப்பும் என்ற நிலையில் தமிழ்த்துறைகளைப் போல வரலாற்றுத்துறையோ, சமூகவியல் துறையோ, நிலவியல் துறையோ, பொருளியல் துறையோ விரிவுகளைக் கண்டதில்லை.

காலனிய காலத்துத் தமிழ்த்துறைகள் இலக்கியம், இலக்கணம் என்ற இருவேறு பிரிவுகளும் வேறுவேறு சட்டகங்கள் கொண்டவை என்பதைக் கூட வேறுபடுத்திப் பார்க்கும் வகையறியாது ஒரே துறையாக - தமிழ்த்துறையாக இருந்தன. ஆனால் பின் காலனியத்தின் தொடக்கநிலையிலேயே தமிழியல் துறைகள் - தமிழியல் புலங்களாக மாறி பலதளங்களில் பயணித்து மொழியியல், நாட்டாரியல், மானிடவியல், நிலவியல், தொல்லியல், மருந்தியல், இனவரைவியல், தொடர்பியல், காட்சி ஊடகவியல் எனப் பலவற்றோடு உறவும் முரணும் கொண்டவைகளாக மாறியிருக்கின்றன. இன்று இந்தத் துறைகளெல்லாம் தனித்த துறைகளாக அறியப்பட்டாலும் அத்துறைகளின் தொடக்க ஆய்வுகளைச் செய்தவர்கள் தமிழ் படித்துவிட்டு தமிழியல் துறையில் ஆய்வுகளைச் செய்தவர்களே என்பதை மறுக்க முடியாது. 
இலக்கியவகைப்பாட்டிற்குள்ளேயே கவிதையியல், கதையியல்.நாடகவியல், திறனாய்வியல் எனப் பிரிந்து பலநிலை வளர்ச்சியை அடைந்ததோடு இலக்கணவியல் மொழியியலின் அறிவியல் பார்வையை உள்வாங்கிய துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.இவ்விரு பிரிவும் மக்களின் அதன் இயல்பிலேயே மக்கள் திரளோடும் , அதன் வாழ்நிலையோடும் உறவும் முரணும் கொண்டு நகர்பவை என்பதால் அதனோடு தொடர்புடைய துறைகளான பண்பாட்டியல், நாட்டாரியல்,மக்கள் தொடர்பியல் ஆகியனவற்றை நாடிச்சென்று தமிழியல் புலத்தை விரிவாக்கிக் கொண்டன. அந்த விரிவாக்கம் ஒவ்வொன்றின் உட்கூறுகளையும் தேடிச்சென்று ஒருங்கிணைந்த கல்விப்புலமாகவும் தனித்துவமான புலங்களாகவும் கருதி வளர்ந்துள்ளன.தகவல் தொடர்பியல் வளர்ச்சியடைந்துள்ள இக்காலகட்டத்தில் ஒவ்வொரு கலைகளும் வெகுமக்கள் மற்றும் திரள் மக்கள் நோக்கில் ஆய்வு செய்யவேண்டிய நெருக்கடியைச் சந்திக்கின்றன. 
அந்த நெருக்கடி ஒவ்வொரு ஆய்வையும் தனித்த ஆய்வாகச் செய்யாமல் இலக்கியவியலின் அடிப்படைகளை உள்வாங்கிய பிறதுறை அறிவுத் தளங்களை இணைத்த முறையியலைக் கோருகின்றன.அம்முறையியல் பல முறையியலைக் கைவிடாது புதிய முறையியலைக் கைக்கொள்ளும் நெளிவுசுழிவுகளைக் கொண்டவை. அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் இரா.பிரபாகர் செய்துள்ள “தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்” என்னும் தலைப்பில் செய்துள்ள ஆய்வை வாசிக்கும்போது இதனை உணரலாம். 
முனைவர் பட்ட ஆய்வேட்டின் இயல்புக்கேற்ப,
1.வெகுசனப்பண்பாடும் வெகுசன இசையும்
2.வெகுசன இசையும் தொழில் நுட்பமும்
3.தமிழ் வெகுசன இசையும் கேட்போரின் பண்பாட்டு எதிர்வினையும்
4.இளையராஜா: காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய கலைஞன்
5.உலகமயமாதலும் தமிழ் வெகுசன இசையும்: ஏ.ஆர்.ரஹ்மானை முன்வைத்து 
எனத் தலைப்புகளில் எழுதப்பெற்றுள்ள இயல்களுக்குள் தமிழ்நாட்டு மக்கள் திரளுக்குள் சினிமா இசையின் கூறுகளான சொற்களும் ஒலிக்கலவைகளும் ஒலியின்மையான அமைதியும் இணைந்து உருவாக்கப்படும் வினைகள் பற்றிய பேச்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வினைகளின்போது கிடைக்கும் அர்த்தமற்ற மனக்கோடுகளும் அர்த்தங்களாக உள்வாங்கப்படும் 
காட்சிப்படிமங்களும் தனிமனிதத் தன்னிலைகளைக் குழுவின் பகுதியாகவும் இணைப்பாகவும் ஆக்கும் வேதிவினையைக் குறித்த சொல்லாடல்களை முன்வைத்து ள்ளது.நிதானமாக வாசிப்பதோடு தமிழ்ச் சமூகத்தில் அவை உருவாக்கும்/ உருவாக்கிய சம்பவங்களோடு அசைபோடும்போது உங்களின் புரிதலின் தளங்கள் விரிவாகும். 

இப்படியொரு ஆய்வைத் தமிழியல் புலத்திற்குள் சாத்தியமாக்கியுள்ள பேரா. பிரபாகர் தனது மாணவப்பருவத்திலிருந்தே ஒரு பாடகராக- இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞராக - ஒலிக்கோர்வைகளை உருவாக்கிய இசையமைப்பாளராகச் செயல்பட்டவர் என்பதை நான் அறிவேன். இப்படித்தான் தமிழ் ஆய்வு, தமிழியல் ஆய்வாகப் பரப்பை விரித்தது. அவரது ஆய்வேடு வாசிக்கும் மொழிநடையில் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்