கவிமனம் உருவாக்குதல்


தனது மனத்திற்குள் உருவாகும் சொற்களும், சொற்களின் வழி உருவாகும் உருவகங்களும் படிமங்களும் எல்லோரும் பேசுவதுபோல இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன என உணரும்போது ஒரு மனித உயிரி இலக்கிய உருவாக்க மனநிலைக்குள் நுழைகிறது. வெளிப்படும் வித்தியாசநிலை நிலையானதாகவும் நீண்டகாலத்திற்கு அந்த மனித உயிரியைத் தக்க வைக்கும் வாய்ப்பிருப்பதாக உணரும் நிலையில் கதைகளையோ, நாடகங்களையோ எழுதும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் சொல்லி முடித்தவுடன் உருவாகும் உணர்ச்சிநிலையை ரசிக்கும் மனித உயிரி கவிதையில் செயல்படும் வாய்ப்பையே விரும்புகிறது.

காதலிலிருந்து காமத்திற்கு


காதல் கவிதைகளைப் பற்றிப் பேசுவதை - எழுதுவதைத் தவிர்த்த காலம் ஒன்று இருந்தது. அந்த நேரத்தில் இந்தத் தொகுப்பை வாசித்துவிட்டு வைத்துவிட்டேன். அப்படி வைத்தபோது இது தவறு என்று மனம் சொன்னதுண்டு. காதலைப் பேசுவதில் என்ன தயக்கம்? என்று கேட்டுச் சண்டித்தனம் பண்ணிய மனம், நீ காதலை விரும்பவில்லை; காமத்தை விரும்புகிறாய் என்று குற்றம் சாட்டிச் சிரித்தது.

காதலைக் காதலாக எழுதுவதை வாசிப்பது எப்போதும் அலுப்பூட்டும். அப்படியான கவிதைகளில் ஒருவிதமான போலித்தனமும் புனைவுகூட்டலும் இருப்பதாகவே படும். அதைத் தாண்டிக் காதல் காமத்தைக் கோருகிறது; கலவியையும் புணர்ச்சியையும் வேண்டிப் பயணிக்கிறது என்பதாக உணரும்போது திரும்பத்திரும்ப வாசிக்க நேர்ந்துவிடும். ஒருவிதத்தில் கற்பனைக் கலவிதான் அத்தகைய கவிதைகள். இத்தகைய கவிதைகளுக்குத் தமிழில் நீண்ட தொடர்ச்சிகள் உண்டு. குறிப்பாகப் பெண்கவிகள் - அள்ளூர் நன்முல்லை தொடங்கி ஆண்டாள் வரையிலான பெண்கள்- இதையே எழுதினார்கள். இப்போது எழுதும் பலரும் அதை எழுதும் பக்குவமில்லாமல் - அனுபவம் போதாமல் தவிக்கிறார்கள். ஆண்களில் பலர் உக்கிரமாக எழுதிக் காமத்தீயைச் சொல்லும் வெயிலின் தகிப்பாக வெளிப்பட்டு நிற்கிறார்கள்.

இதிலிருந்து மாறுபட்டவராக வெளிப்பட்டவர் ர. ராஜலிங்கம். காதலும் காமமும் பற்றிப் பேசவும் நினைக்கவும் தோன்றும்போதெல்லாம் அவரின் முதல் தொகுப்பான- சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவி- யிலிருந்து ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்துவிட்ட்டு வைத்துவிடுவேன். இப்போது இதைச் சொல்லத் தோன்றியது. இதுபோன்ற முதல் தொகுப்புகளை வெளியிட்ட புதுஎழுத்து பதிப்பகம் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டது என்ற வருத்தமும் இந்தக் குறிப்பின் பின்னணியில் இருக்கிறது. அத்தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை வாசித்துப் பாருங்கள்.

அத்தேவதையின் இறுகிய இதழ்
=============================
மெல்லிய ராகத்தில் வழிந்துகொண்டிருக்கிறது இரவு.
அவள் மார்பின் மென்மையை ஞாபகப்படுத்தியது காற்று.
சிதறும் எண்ணங்களை மெல்லிய வலை பூட்டிக்கொண்டது.
தேடலின் முதல் குழந்தை பின்னிரவில்
தன்னந்தனியாய் அலறத்தொடங்கிய அத்தருணம்
களைந்து கிடந்த மணல்களின் மீது
மெல்ல கால் பதித்து, விழுந்துகொண்டிருந்த
எரி நட்சத்திரத்தை உண்ணத் தொடங்கினேன்.
சடசடவென்று பற்றி எரியத் துவங்கியவன்
அடிமுடியெங்கும் பிரகாசிக்க
அக்கரையின் தேவதை ரசிக்கிறாள்
சுடர் குறையா பூக்களை கைகளில் ஏந்தி
அலையின் மீது நடந்து அக்கரை செல்கையில்
யாரும் காணாத புன்னகையை வீசிச் சென்றது
அத்தேவதையின் இறுகிய இதழ். (ப.51)

புதிர் என்னும் பதில்
=================
நாவலில் இருந்து கிழிக்கப்பட்ட
சில பக்கங்களை தின்கிறேன்
கதைகளால் வேயப்பட்ட அது
என் வயிற்றுப்பகுதியை அடைகையில்
அதன் மடிப்புகள் விரியத்தொடங்கின
கதைகளுக்குள் வாழ்ந்திருந்த அவள்
மரித்துப் போயிருந்தாள்
இறந்த உடலில் இருந்துதான்
அந்த துர்நாற்றம் வீசக்கூடும்
அவளில் உடலையொத்த மற்றொருத்தி
வேறொரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள்
கதைக்குள் சுருண்டு கிடக்கும் கேள்விகளின்
ரகசியத்தை உள்வாங்கிக் கொண்டது சிறுகுடல்
ஜீரணமாகாத கேள்விகளுடன்
சிலபல விடைகளும்
வெளியேறிக் கொண்டிருந்தது
பெருங்குடல் வழியாக. (ப.72)

சஹானாவின் கண் அறியாக்காற்று

17 வயதைத் தாண்டியுள்ள ஒரு பெண்ணின் கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை வாசித்தபோது கவிதை உருவாக்கச் செயல்பாட்டைப் பேசியாகவேண்டிய நெருக்கடி உருவாகிறது. தன்னைச் சுற்றியுள்ள வெளிகளை மனிதர்கள் பார்க்கிறார்கள்; கடக்கிறார்கள். இந்தப் பெண் கடந்துபோகாமல் தனது மொழியடுக்குக்குள் நிறுத்தித் தந்துள்ளார். தனது மொழியும் சொல்முறையும் வெளிப்பாடும் வேறானது என நம்பும் ஒரு மனித உயிரி பார்த்த தையும்/ வர்களையும் கேட்ட தையும்/வர்களையும் வித்யாசமானது என நம்பும்நிலையில் இது நடக்கவே செய்யும்.

வெளிகளும் வெளிகளில் உலவும்/ சந்திக்கும் மனிதர்களும் உருவாக்கிய மாற்றுத் தன்மைகளை/ படிமங்களைக் கொண்ட இந்தக் கவிதைத்தொகுப்பை வாசிக்கும்போது கவியின் வயதினை மனதில் நிறுத்திக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பது முன்நிபந்தனை. அப்படித்தான் நான் வாசித்தேன். சில கவிதைகள் இங்கே:
============
1. இருத்தல்
--------------------
கிரிக்கெட் முடிந்தது.
எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.
மைதானம் மட்டும்
மைதானத்தில் இருந்து
மைதானத்தை வெறித்தபடி.
2. வீடு
--------
கண்ணீருக்குள் புதைந்துபோன
நிலத்தைத் தாங்கி நிற்கிறது
ஆச்சியின் புதுவீடு
3.வகுப்பறைக்கு வெளியே
===========================
ஜன்னலுக்கு வெளியே
நீண்டு படர்ந்திருக்கும் மரக்கிளையிலிருந்து
பறந்து செல்லும் ஒரு பறவையாய்
கானகத்தை வட்டமடித்து
மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துத் தின்று
ஒளிச்சுடர் விடும் உடம்போடு பறந்ததும்
வெள்ளை சாக்பீஸ் துண்டு ஒன்று
என் மீது வந்துவிழ திடுக்கிட்டேன்
‘ என்னடி எங்க இருக்கிற’
ஜெபா சிஸ்டரின் குரலும் விழுந்தது
‘கிளாசுக்கு வெளியே போயி நில்லுடி’ என்றாள்
ஏதோ நான் கிளாசுக்கு உள்ளே இருப்பதுபோல.

கவிதைசொல்லிகள் தரும் நெருக்கடி

புனைகதைகளைவிடவும் கவிதைகள் எப்போதும் எழுதியவர்களின் குரலாக வாசிக்கக்கோரும் தொடர்பாடல் கொண்டவை. சொல்பவர் ஒருவர் என்பதோடு கேட்பவரும் ஒருவராக அமையும் நிலையில் சொல்பவரின் இடத்தில் கவியைப் பொருத்திப்பார்ப்பதிலிருந்து தப்பிப்பது வாசகர்களுக்குச் சிரமமான ஒன்று.

பெண்ணியமென்னும் கருத்தியல் உருவாகித் தனது வெளிப்பாட்டிற்கான கருவியாகக் கவிதையை அதிகம் பயன்படுத்தும் நிலையில் பெண்கள் எழுதியதாக வரும் கவிதைத் தொகுப்புகள் அவர்களின் கூற்றாக - பெண்களின் கூற்றாகவே வாசிக்கக்கோருகின்றன. ஈழவாணியின் மூக்குத்திப் பூ தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகளை அப்படியே நான் வாசித்தேன். அதனால் அக்கவிதைகளுக்குள் இருக்கும் பெண்குரலைத் தாண்டி, அதில் வெளிப்படும் அனுபவங்களைக் கவியின் அனுபவமாகக் கொள்ளவேண்டியதில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அத்தொகுப்பில் 100 பக்க அளவில் கவிதைகள் அச்சிடப்பட்டுள்ளன. அவைகளில் 15 கவிதைகளுக்கும் குறையாமல் வெவ்வேறு அனுபவங்களைச் சொல்கின்றன. அத்தகைய கவிதைகளில் இதுவும் ஒன்று .

ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்திரியும்
=========================== =================
இந்த ஒரு மழைநாளும்
நிசிதாண்டிய ராத்திரியும்
மனித சஞ்சாரங்களற்ற
பிரம்மையோடான தனிமையை
விஞ்ஞாபமனமற்றுக் கொண்டாட
மழையின் ரகசிய நீளத்தில்
தூதனுப்பும் காமம்
தனிமையின் கூறுகளோடிருக்க
நீண்டுகொண்டே.. நீண்டுகொண்டே..
முடிந்த இந்த அறை
துயரத்தை மாற்றிப் பிரிவை யோசிக்கிறது
பிரிவுமுனைகள் விரிசலை
விஸ்தரித்துச் செல்ல..
வேகம் குறைந்த மழை
சாரலோடு மட்டும் நிற்க
ராத்திரியும் ஒருபகலும் மாறிப்
பெருகும் தனிமையோடு..

உமாமோகனின் எரவாணத்துக்கனவுகள்

மொத்தத் தொகுப்புக்கும் பொருந்தும்விதமாகத் தலைப்பிட வேண்டுமென இப்போதெல்லாம் எந்தக் கவியும் நினைப்பதில்லை. தொகுப்பிலுள்ள கவிதைகளில் வித்தியாசமான படிமம் அல்லது உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட கவிதைத் தலைப்பைத் தொகுதியின் தலைப்பாக வைத்து விடுகிறார்கள். அந்த அளவில் மட்டுமே தொகுதியின் தலைப்புக்கான முக்கியத்துவம் இருக்கின்றது. தொடர்ச்சியாக ஒருவித மனநிலையில் கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கும் பெருங்கவிகளின் தொகுதிகள் இந்தப் போக்கிலிருந்து விலகி நிற்கின்றன. அந்தக் கவிதைகளை எழுதிய மனநிலையின் பொதுக்குறியீடாக ஒரு சொல்லையோ -சொற்றொடரையோ தொகுப்பின் தலைப்பாக வைப்பதைப் பார்க்கலாம். தொடர்ச்சியாகக் கவிதைமனத்தைத் தக்கவைக்கும் உமாமோகனின் இந்தத் தொகுப்பு அதிலிருந்து விலகியிருக்கிறது.

உமா மோகனின் கனவு செருகிய எரவாணம் என்று தொகுப்பாக நிற்கும் தலைப்பில் ஒரு கவிதை இருக்கிறது.அந்தக் கவிதை நேரடியாக எரவானம் என்னும் இருப்பையும் இருப்பாக்க முடியாத கனவையும் பிணைத்துக் காட்டி ஒருவிதத் தொனியை உருவாக்கியிருக்கிறது.

எதை நோக்கிதான் இத்தனை நடப்பது
சிறு அரளிக்கிளையை ஊன்றிக்கொண்டு
நடைக்குக் கூட கசப்பேறிய பின்னும்
****
கனவுகளைச் செருகிவைத்த எரவாணம்
யானை விரட்டலில் பிய்ந்துபோனது
குப்பை வாருவதில் நிற்கிறது கைவண்ணம்


திரளும் கண்ணீரைத்
தொட்டு தொட்டு ஒற்றிப்பிழிந்து
நீர் வார்த்த முல்லையின் நிறம்

அப்படித்தான் இருக்கும்.

பழமுதிரிலோ உழவர் சந்தையிலோ
பேரம் பேசியோ பேசாமலோ
நீங்கள் வாங்கும் சுரை எல்லாம்
முற்றித்தான் இருக்கிறது
இற்றுப்போன பால்யத்தின்
கூரையில் எக்கி எக்கி
இழுத்துப் பிய்த்த சுரைப்பிச்சின்
மென்மையை நினைவில் கிடத்தியிருக்கும்வரை


அந்தப் புறங்கையில் பாருங்கள்
அதே பனித்துளி


இந்தக் கவிதை உருவாக்கும் தொனியையும் காட்சிப்படிமங்களையும் கொண்ட சிறுகவிதைகள் சிலவற்றையும் இந்தத் தொகுப்பில் வாசிக்க முடிகிறது. கனவு காணவிரும்பும் நினைவுகளைக் கவிதையாக்கித் தனது எரவானத்தில் சொருகி வைத்திருக்கிறார். கொண்டையில் நிரப்பிக் கொள்ளும் மல்லிகைச் சரத்தைத் தூக்கிப் போட மனம் இல்லாமல் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுக் காலையிலோ மாலையிலோ இன்னொருவரைக் கொண்டு தூக்கிக் கூடையில் போடும் ஒரு பெண்ணின் மனநிலைபோல எரவானமும் நினைவுகளும் பல கவிதைகளில் அந்தச் சொற்களாக இல்லாமல் அதே படிமங்களை உருவாக்குகின்றன. அப்படியான கவிதையாக இந்தச் சிறிய கவிதைகளையும் வாசிக்கலாம்.

1. நுனிக்காலில் நின்றாடும் பாப்புக்குட்டி
================================
புதிய பொம்மைக் காட்டும்
அப்பாவின் உயரத்தை அண்ணாந்து
வியக்கும் குதூகலமும் பொலிய
நுனிக்காலில் நின்றாடுவாள்
பாப்புக்குட்டி
நானோ ஒருநாள் போல
பால் பாக்கெட்டோடு உள்ளே திரும்புகிறேன்
கதிர்பார்த்து
---------------------------------
2. திடீரென வந்த மழை
திடீரென வந்துவிட்டதாகவே நம்புவோம்
இல்லையெனில்
பொட்டலத்துக்குள்ளிருந்து
வெளியே குதித்துவிடும்
மனசைக் கட்டிவைக்க
கையாலாகா துக்கம் வேறு சேர்ந்துகொள்ளும்
-தலைப்பில்லாதவொரு கவிதை


3.ரோஸ் கவுன்
================
ஒருநாளும் வாய்க்கவில்லை
அவள்போல ரோஸ் கவுனில் சுழன்றாட
பார்த்துவிட்டு வந்தவுடன்
குழம்பு சுடவைத்து
தோசை வார்த்த மும்முரத்தில் மறந்தாலும்
கனவில் நினைவு வரும்
ஒரு காலத்தில்
அதே ரோஸ் இல்லையென்றாலும்
அதன் சாயலில் ஒரு ரவிக்கைத் துணி
எடுத்தபோது ஏனோ நினைவிலேயே
நினைவு வந்தது.


எரவானம்- கனவு -நினைவுகளின் விவரிப்பு என்னும் மனநிலையை எழுதிக்காட்டும் நீள் கவிதைகள் பலவும் இத்தொகுப்பில் உள்ளன. விடைபெறுவதும் புதுப்பிறப்பும்,நதியில் தேயும் கூழாங்கல்,நேற்று என்றொரு நாள்,நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி முதலான கவிதைகள் எரவானப் படிமத்தைப் புதுப்பிக்கின்றன. இந்தத் தொனியல்லாமல் சமூக நடப்புகளையும் சில நிகழ்காலக் கேள்விகளையும் எழுப்பும் கவிதைகளையும் தொகுப்பில் வாசிக்க விரும்புபவர்களையும் ஏமாற்றவில்லை உமா மோகன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்