எழுத்துகள் - எழுத்தாளர்கள்


அபிலாஷின் பத்தி எழுத்துகள்

உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.
கல்விப்புலப்பார்வையையும் விமரிசன நோக்கையும் சம அளவில் கலந்து எழுதும் அவரது கவனம்பட்டு எழுத்துகளாக மாறியதில் குறிப்பிட வேண்டியனவாக இருப்பனவற்றை உயிர்மை பதிப்பகம் நூல்களாக மாற்றித் தந்துள்ளது. அவை எழுதப்பட்டபோது வாசித்தவைதான் என்றாலும் பின்வரும் நூல்களைப் புத்தகச் சந்தையில் வாங்கி மொத்தமாக வாங்கிப்படித்தேன்.

1.பெண்கள் இப்படித்தான் யோசிக்கிறார்களா?
2.கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்
3. ME TOO - சில விமர்சனங்கள்
4..BIG BOSS - துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்

நடுத்தரவர்க்கம் சார்ந்த வெகுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கிரிக்கெட், சினிமா, தொலைக்காட்சிச் சிறப்பு நிகழ்ச்சிகள், தன்னெழுச்சியாக எழும்பிவரும் சமூக நிகழ்வுகள் போன்றவற்றைக் குறித்துக் கடந்த 10 ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் அவரது புனைவல்லா எழுத்துகளின் ஓர் சிறப்பு அடையாளம் உருவாகியிருப்பதை அறியலாம். தமிழின் பொது உளவியலுக்குள் செயல்படும் தனிமனிதக் கூறுகளைப் பேசியவர் என்பது அவரது அடையாளமாக ஆகும் என நினைக்கிறேன்.
உயிர்மை அச்சிதழில் தொடங்கி, மின்னம்பலம். காம்., இந்துதமிழ், குமுதம், விகடன்.காம். உயிர்மை.காம் என அவர் எழுதிய பெரும்பாலான தொடர்களை வாசித்திருக்கிறேன். இவையெல்லாமல் அவரது வலைப்பக்கமான திருட்டுச்சாவி.காமிலும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருப்பார். தொடர்ச்சியாக எழுதுவதும் வாசிப்பதும் சிலபேருக்கு ஒரு நோய்போன்றது. அபிலாஷுக்கு அந்நோய் விடாது கறுப்பாகத் தொடரும் நோய்.

உளவியல் சார்ந்த கேள்விகளை எழுப்புவதால் அவரது மொழிநடைப் பெரும்பான்மையோரை நோக்கிப் பேசும் தன்மையைத் தவறவிடுகிறது. அதைக் கைப்பற்றுவதற்காகச் சில கதைகள், சில மேற்கோள்கள், சில விவரிப்புமுறை போன்றவற்றைச் செய்தாரென்றால் தமிழின் முக்கியமான - வெகுமக்கள் தளத்தில் எழுதும் பத்தி எழுத்தாளராக மாறிவிடுவார். வாழ்த்துகள் அபிலாஷ்
ஜெயமோகனின் கட்டண உரை

திருநெல்வேலியில் கட்டண உரைக்கூட்ட அறிவிப்பு வெளியான நாளிலேயே முடிவுசெய்திருந்தேன். ஜெயமோகனின் உரையைக் கேட்க வேண்டும் அதற்காக அந்த நாளில் நெல்லையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன்.அது நடந்தது.

எனது அழைப்பின்பேரில் பல்கலைக் கழகத்திற்கு ஐந்து தடவை வந்திருக்கிறார். அழைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பொறுப்பான தயாரிப்புடன் வந்து கச்சிதமான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அந்த பொறுப்பும் கச்சிதத்தனமும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் இருக்கவேண்டிய ஒன்று. இதே அளவு பொறுப்புடனும் தயாரிப்புடனும் இப்போதும் வருபவர் நண்பர் ரவிக்குமார். அவரது அரசியல் நுழைவுக்குப் பின் சிலநேரங்களில் வர இயலாமல் போனதுண்டு என்றாலும் தயாரிப்பில்லாமல் மேடையில் நிற்பதில்லை.

முதல் நாள் வரை கேரளப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிந்தனையின் உள்ளோட்டமாக தொல்காப்பியம் தொடங்கி வைத்த மரபு இருக்கிறது என்பதை விவாதித்துவிட்ட வந்த எனக்கு, ஜெயமோகனின் உரை அதற்கு மாற்றாக - எதிர்நிலையில் இருக்கும் என்பது தெரியும். அவரது எழுத்துகளில் வெளிப்படும் இந்தியத்தனத்தைப் பேச்சுகளிலும் விவாதங்களிலும் முன்வைப்பார் என்பதைக் கடந்த 25 ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். அவரது முதல் நாவலான ரப்பரை எழுத்துப் பிரதியாக வாசித்திருக்கிறேன். பின்னர் வந்த புனைகதைகளில் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கிறேன். சிலவற்றை வாசித்ததில்லை. இப்போதும் அவரது இணையதளத்தின் தொடர்வாசகன் நான்.

இந்த உரையிலும் இந்துமதம் சார்ந்த மன அமைப்பு, நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள் ஆகிய மரபான நீண்டகாலமே இந்தியர்களின் சிந்தனையைத் தீர்மானிப்பதாக முன்வைத்தார். அதே நேரத்தில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் நடந்த மாற்றங்கள் ஒருவிதத் தாராளவாதத்தையும் இடதுசாரிகளின் குறுக்கீடுகளால் கறாரான முரண்பாடுகளையும் முன்னிறுத்தி விவாதிக்கும் - சிந்திக்கும் முறைமைகளையும் கொண்டுவந்திருக்கிறது. இவ்விரண்டும் பன்மைத்துவ இந்தியர்களிடையே இருக்கும் நுட்பமான உணர்வுகளையும் ஈடுபாடுகளையும் அழகியலையும் நீக்கிவிடும் என்றார். அதற்கான எடுத்துக்காட்டுகளை உருவகமாகவும் படிமங்களாகவும் தர்க்கங்களாகவும் எடுத்து வைத்தார். உரை என்ற அளவில் இதுபோன்ற உரைகளை மதுரையில் எனது மாணவப் பருவத்தில் கேட்டிருக்கிறேன். ஜெயகாந்தன், எஸ்.ஆர்.கே. என அழைக்கப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன், தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் என்னைக் கவர்ந்த உரையாளர்கள். 
உரையெல்லாம் முடிந்த பின் விவாதிக்கும் வாய்ப்பு அளிக்கப் பட்டிருந்தால்“இப்படி மட்டும்தான் தமிழர்கள் சிந்திக்கிறார்களா? ஜெயமோகன் “ என்றொரு கேள்வியைக் கேட்டு மாற்றுச் சிந்தனை மரபுகள் பற்பலவாய் இருப்பதையும் விடுதலை இந்தியாவில் பெருந்தாக்கம் ஏற்படுத்திய டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் முன்வைப்புகளுக்கு இடமில்லையா என்றும் கேட்டிருப்பேன். அப்படிக் கேட்பேன் என்பது அவருக்கும் தெரியும். வேறுபாடுகளோடு கூடிய நட்பின் நீட்சிகள் தொடரவேண்டுமென நினைப்பவன் நான். இப்படிக் கேட்பதற்கும் விவாதிப்பதற்கும் வாய்ப்பாக வேணும் எதிர்தரப்பையும் ஒவ்வொருவரும் கேட்டுத்தான் ஆகவேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்