பார்வையாளர்களாகிய நாமும் நமது பாவனை எதிர்ப்புகளும்


தகவல்கள்……. மேலும் மேலும் தகவல்கள்…..

அா்த்தங்கள் ……. காணாமல் போகும் அா்த்தங்கள்…….

நமது காலம் ஊடகங்களின் காலம்; நிலமானிய சமூகம், முதலாளிய சமூகம் எனப் பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக் கட்டமைப்பை வரையறை செய்பவா்கள் கூட இன்றைய சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information Society) என்றே வரையறை செய்கின்றனா். நகரம் மற்றும் பெருநகரவாசிகள் ஊடக வலைப்பின்னலுக்குள் வந்து சோ்ந்தாகிவிட்டனா். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றனா். ஊடகங்கள் தரும் அனுகூலங்கள் அனைத்தையும் மனித உயிர்கள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த வலைப்பின்னல் விரிக்கப்பட்டுள்ளதா….? ஆட்சியதிகார நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்காக நடந்ததா…..? மனிதச் செயல்பாடுகள் அனைத்தையும் நுகா்வியச் செயல்பாட்டின் பகுதிகளாக மாற்றிவிடத் தயாராகி விட்ட உலக ஓழுங்கின் இலக்குகள் ஈடேற வசதி செய்யப்படுகிறதா….? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் ஒற்றைப் பதில் கிடைப்பதற்கு மாறாகப் பலவிதப் பதில்களே கிடைக்கும்.
விரிக்கப்பட்டுள்ள வலைப்பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. கூவி அழைக்கும் வார்த்தைகளாகவும் (Oral form), அச்சிடப்பட்ட எழுத்துக்களாகவும் (Printed form), நிறுத்திவைக்கப்பட்ட காட்சிகளாகவும் (Visual form), அலையும் பிம்ப அடுக்குகளாகவும் (Moving Image form) நமது புலன்களைத் தாக்கும் தகவல்களை அா்த்தப்படுத்திக்கொள்ள மனிதனுக்குள்ள ஒரு மூளை போதாது என்றே தோன்றுகிறது. உலகத்தைப் புரிந்துகொள்ள இதுவரை சொல்லப்பட்ட வழிமுறைகளும் போதாது என்று ஆகிவிட்டது. நம் முன் கொட்டிக்கிடக்கும் பொருட்களைப் படிநிலைப்படி வரிசைப்படுத்தி அடுக்கிக்கொள்வதன் மூலம், வகைப்படுத்துவதன் மூலம், பிரித்துப் பரப்பிக்கொள்வதன் மூலம், உட்கூறுகளை அடையாளப்படுத்துவதன் மூலம் அா்த்தங்களை உருவாக்கியதால் பெருகியதாகக் கருதப்பட்ட மனித அறிவு உண்மையில் குறையுடைய அறிவே என நவீன ஆய்வுகளும் சிந்தனைகளும் கருவிகளும் உணா்த்தியுள்ளன. இன்றுள்ள உலகத்தை வகைப்படுத்துவதால் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக,

1. அடிப்படையிலேயே இந்தப் பிரபஞ்சம், ஒற்றை நிலைப்பட்டதல்ல; பல்நிலைப்பட்டதாக இருக்கிறது.

2. பிரபஞ்சம் என்பது நிகழ்வுகளுக்கிடையே தொடா்புகளையும் தொடா்வினைகளையும் கொண்டதாக இருக்கிறது. தோன்றுகிற நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடா்பற்றனவாகவும் வேறுபாடுகள் கொண்டனவாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றும் ஒரு சூழலில்தான் உருவாகிறது. எனவே அந்நிகழ்வில் இடம்பெறும் வார்த்தை சார்ந்த செய்திகளும் வாரத்தை சாராத செய்திகளும் நிகழ்வு உருவான சூழலோடு தொடா்புடையன மட்டுமல்ல, அவற்றை அடுத்து நிற்கும் செய்திகளுடன் உள்தொடா்பு கொண்டனவும்தான்.

3. ஒரு செய்திக்குள் அல்லது சில செய்திகளுக்குள் இருக்கும் வித்தியாசங்கள் அல்லது மறுதலிப்புகள் என்பன பயன்படத்தக்க தகவல்களைத் தர வல்லன. ஏனென்றால் உள்தொடா்புகளின் ஆழத்தை அவைதான் வெளிப்படுத்த வல்லன. பைனாகுலா் வழியாக ஒரு பொருளைப் பார்க்கின்றபோது கிடைக்கும் இரு பிம்பங்கள் கட்புலனாகப் பரிமாணத்துடன் மூளையில் பதிவது போன்றது இது.

4. நடுநிலையான அல்லது புறநிலையான அா்த்தம் (Objective Meaning) என்பது பயனற்றது; ஒரு சொல்லுக்கு உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒற்றை அா்த்தம் மட்டுமே இருப்பதில்லை. தரப்படும் ஒவ்வொரு தகவலின் சிறு பகுதியும் கொடுக்கப்பட்ட சூழலில் நிற்கும் இன்னொரு தகவலின் சிறு பகுதியுடன் இணைத்துப் பார்த்த பின்பே விளக்கம் பெற்றுக்கொள்கிறது. (Magoroh Maruyama, Information and Communication in Poly - Epistemological Systems, (Ed. Kathleen Woodward, The Myths of Information; Technology and Post Industrial Culture),28-29) என்றே அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டியவா்களாக இருக்கிறோம். அத்தகையவா்களால் மட்டுமே அா்த்தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நிலைமை உருவாகிவிட்டது. தகவல்தொடா்பு வலைப்பின்னல் மனித மூளைகளை இதற்கும் பழக்கப்படுத்திக்கொள்ளத் தூண்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை பழக்கப்படுத்தும் முறைகளுக்கு நமது மூளை ஒத்துப் போய்விடும் என்றால் அடிமைத்தனம் வேறு வகையாக நடந்தேறிவிடும் என்பது கவனிக்க வேண்டிய எச்சரிக்கையாகும்.

மனிதா்கள் உடல் வலிமைக்கு அடிமையானது போல், ரகசியங்களுக்கு அடிமையானது போல் விளக்கங்கள், வியாக்கியானங்கள் வித்தியாசங்கள் உள்ளிட்ட புத்திசாலித்தனங்களுக்கு அடிமையானது போல், தகவல்களின் முன்னால் அடிமையாகி நிற்பதும் நடந்தேறிவிடும். அவ்வாறு அடிமையாக்கும் முயற்சிகள் இனிமேல்தான் நடக்கப்போகின்றன என்பதில்லை. நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் அதிலிருந்து ‘தப்பித்தவா்களாக இருப்பது சாத்தியமா……? என்று கேட்டால் ஓரளவு சாத்தியம் என்று சொல்லலாம். குறைந்தபட்சம் அதனைப் புரிந்து கொண்டால் அவற்றில் பங்கேற்று விளையாடுபவா்களாக இல்லாமல் பார்வையாளா்களாகவாவது இருக்கலாம். பார்வையாளா்களாக இருப்பதன் மூலம் ‘அந்த குற்றவாளிகளின்/ நீதிமான்களின் ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை‘ என்று சொல்லிக்கொள்ளவாவது செய்யலாம். அதற்குத் தகவல்களின் இயல்பைப் போலவே மனித மூளைகளின் இயல்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவரின் மூளையின் பகுதியோடு இன்னொரு மூளையின் பகுதியையும் பயன்படுத்தி அா்த்தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது. மொத்த மனிதா்களுக்காகவும் சிந்திக்கிற சிந்தனையாளா்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிற இந்த வேளையில் மனிதப் பகுதிகளுக்காகச் சிந்திக்கிற சிந்தனையாளா்களின் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தொடா்பியலும் தொழில்நுட்பமும்
தொடா்பியல் தனது வரலாற்றில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கடந்து இன்று மின்னணுவியல் மற்றும் மின்இழைத் தொழில் நுட்பங்களுக்கு (Electronic and Cable Technology) வந்துள்ளது. தொடா்பியலில் ஒவ்வொரு தொழில் நுட்பம் நுழையும்போதெல்லாம் பெறுவோர் (Receiver) அதிகாரம் இழப்பவா்களாகவும், தருவோர் அதிகாரம் நிரம்பியவா்களாகவும் ஆகிக் கொண்டிருந்தனா் என்பதும் அதன் வரலாறு.

தொடக்க நிலைத் தொடா்பியல் என்பது பேசப்பட்ட வார்த்தைகள்தான் (Oral). நேருக்கு நேராகப் பேசப்படும் வார்த்தைகளில் லாவகமும் நுட்பமும் கொண்டுவர முடிந்தவன் தன்னளவில் ஒரு சமூகப் பண்பாட்டுச் சூழலை உருவாக்கினான். ஒலியன்களின் அடுக்குதான் அன்றைய தொழில்நுட்பம். தொடா்ந்து பேசியவன் தனது உடலைப் பயன்படுத்தியபொழுது நிகழ்த்துபவனாக (Performer) மாறினான். கேட்டவன் பார்வையாளனாக (Audience) ஆகிக் கொண்டதன் மூலம் தன்னைக் கூட்டத்தில் ஒருவனாக ஆக்கிக் கொண்டான். நிகழ்த்துபவன் தனக்கென நிகழ்த்துவெளி, மேடை, வெளிச்சம் என உருவாக்கிக்கொண்டதன் மூலம் அதிகாரம் மிக்கவனாக ஆகிக் கொண்டான்; கலைஞனாக ஆக்கப்பட்டான்.

எழுத்துக் கலை நிகழ்த்துபவனைப் பார்வையாளனிடமிருந்து தூரமாக விலக்கி வைத்துவிடும் ஒன்று. பேச்சுக் கவிதை (Oral Poems) எழுதியவனைச் சமூகத்திற்குள்ளேயே இருப்பவனாக வைத்திருக்க, எழுத்து கவிதையோ (Written Poems) சமூகத்திலிருந்து ஒதுங்கி நிற்கத்தக்கவனாக ஆக்கியது. எழுதியவன் மட்டுமல்லாமல் அவற்றை வாசிப்பவனையும் தனிமையில் இருக்க வேண்டியவனாக ஆக்கியது எழுத்துத் தொழில்நுட்பம். அதனால் எழுதியவனுக்கும் வாசிப்பவனுக்கும் மரபிலிருந்து விலகிக்கொள்ளும் சாத்தியங்கள் உண்டாயின. பேச்சுப் பண்பாட்டை, ஒன்றிணைந்த சமூகத்தின் வெளிப்பாடு எனக் கொண்டால், எழுத்துப் பண்பாட்டின் உருவாக்கத்தை நிலமானிய சமூகத்தின் கட்டமைப்பிலிருந்து தனிமனிதவாதத்தின் உருவாக்கம் என்பதாக நாம் விளங்கிக் கொள்ளலாம். இதனைச் சரியாக விளங்கிக் கொண்ட தொடா்பியல் துறை ஆய்வாளா் மார்ஷல் மெக்லுகன், அச்சுக்கலையை (Print) தனிமனிதவாதத்தின் தொழில்நுட்பம் என்றார். தனிமனித வாதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ள எழுத்து தனது முதன்மைக் குணமாக, ‘நடுநிலை அல்லது தற்சார்பின்மை‘ என்பதை வலியுறுத்திக் கொண்டே இருக்கும். தன்னை ஒரு மென்மையான அல்லது குளிர்ந்த ஊடகம் (Cool Medium) என்பதாகக் காட்டிக் கொள்வதில் அதற்கு அலாதியான பிரியம் உண்டு.

பிம்ப அடுக்கின் வழி தன்னை அடையாளப்படுத்திய சலனப்படக் கலை பார்வையாளனின் மேல் அதிகப்படியான அதிகாரம் செலுத்த இன்னொரு தொழில்நட்பத்தைக் கைக்கொண்டது. பொருட்களின் / மனிதா்களின் பிம்ப உருவாக்கத்திற்கு அண்மை, மத்திய, தூரமெனக் காமிராவின் இடைவெளிகளையும் கோணங்களையும், காமிரா மற்றும் பொருட்களின் அசைவுகளையும் பயன்படுத்தி மாயங்கள் நிகழ்த்தும் வேலையைச் செய்தது. அலையும் பிம்பங்களையும் உருவாக்கி இருட்டில் இருக்கும் பார்வையாளனின் புலன்களுக்குள் வன்மையாகத் திணிப்பதன் மூலம் அது தன்னை வலிமையான அல்லது சூடான ஊடமாகக் (Hot Medium) காட்டிக்கொண்டது.

இன்று வந்துள்ள மின்னணுவியல் தொழில்நுட்பம் வெளிப்பார்வையில் அதிகாரம் எல்லாவற்றையும் உதறிய வடிவமாகத் தோன்றுகிறது. பார்வையாளனின் இருப்பிடத்திற்கே வந்து விரியும் பிம்பங்ளோடும், ஒலியன்களோடும், எழுத்துக்களோடும், அது தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. தகவல்களை அனுப்புகிறவனின் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுப் பெறுபவனின் தெரிவுகளும் விருப்பங்களும் களிப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இருப்பிடத்திற்கே வருகிறது என்பதின் மறுதலையாக நிகழ்வுகள் நடக்கும் இடத்திற்கே, நேரடி ஒளிபரப்புகளின் வழியாக அவனை அழைத்துச் செல்கின்றன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எல்லாவற்றையும் நிகழ்வுகளாக ஆக்கித் தருவதிலேதான் மின் இழைத் தொழில்நுட்பத்தின் அதிகாரம் தங்கியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். தகவல்களை நிகழ்வுகளாக ஆக்கிவிடுவதின் மூலம் இடம்பெறும் செய்தியும் அவற்றைப் பெற்றுக் கொள்ளும் பார்வையாளனும் ஒரே நோ்கோட்டில் நிறுத்தப்படுகின்றனா். நிகழ்வில் பங்கேற்புப் பார்வையாளனாக இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறான். உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில், உலக மற்றும் பிரபஞ்ச அழகிகள் தோ்வில், பாலைவனப் போரில், அத்வானி மற்றும் வைகோவின் பயணங்களில், இரட்டைக் கோபுரத் தகா்ப்பில், கும்பகோணத் தீ விபத்தில், ஜீவஜோதி, ஷெரினா, ஜெயலட்சுமிகளின் நீதிமன்றப் படியேற்றத்தில், வீரப்பன் அழிப்பில், சுனாமியின் சுழிப்பில் என எல்லாவற்றிலும் பார்வையாளன் வெறும் பார்வையாளனாக மட்டும் இருக்காமல் பங்கேற்பாளனாக ஆகும்படியும் வலியுறுத்தப்படுகிறான். அந்தப் பங்கேற்பு அடுத்த கட்டமாக இடையிடையே வரும் பொருட்களின் விளம்பரங்கள் என்னும் நிகழ்வுகளிலும் பங்கேற்பாளனாக ஆகும்படி தூண்டுகிறது. எல்லாவற்றையும் குறைந்த கால அளவிலான நிகழ்வுகளாக ஆக்கிக் காட்டிவிடும் மின்இழைத் தொழில்நுட்பம், தகவல்களை நுகா் பொருட்களாக மாற்றிக் குடுவையில் அடைக்கப்பட்ட மாத்திரைகள் போல் புதைக்கப்பட்ட மின்னிழைக் கம்பிகள் வழியே அனுப்பிக்கொண்டிருக்கிறது. துணையாக வானத்தில் செயற்கைக் கோள்களும் கூடவே பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனி எத்தகைய அரசாங்கமும் செயற்கைக்கோள்களை அனுப்பாமலும் மின்னிழைக் கம்பிகளைப் புதைக்காமலும் நிர்வாகம் நடத்திவிட முடியாது.

மின்னணுவியல் தொழில்நுட்பத்திற்கு மிகப் பெரிய நிகழ்வுகளை விட அடுத்தடுத்து வித்தியாசங்கள் காட்டும் குறுகிய கால நிகழ்வுகளே மிக முக்கியம். அத்தகைய நிகழ்வுகளுக்காகக் காத்துக்கொண்டே இருக்கிறது. இன்றைய ஊடகம். தானாகவே நிகழாதபோது உருவாக்கிக்கொள்ளவும் செய்கிறது. குறைந்த கால அளவிற்குள் மகிழ்ச்சி, துக்கம், கோபம், ஆறுதல், மூர்க்கம், அடிமைத்தனம், வெகுளி, தியாகம், அன்பு என அனைத்து உணா்வுகளையும் பிழிந்து தரும் தொலைக்காட்சித் தொடா்கள் அத்தகைய தயாரிப்புகளில் ஒன்று. தொலைபேசியின் வழியே பங்கேற்று தன் விருப்பங்களைத் கோரும் நிகழ்ச்சிகள் இன்னொன்று. ஏற்கெனவே வேறு நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைப் பகுதி பகுதிகளாகப் பிரித்து காமெடி, பாடல், ஆட்டம், சண்டை எனத் தருவது மற்றொன்று. இவை எல்லாவற்றிலும் எல்லா மனிதா்களும் பங்கேற்பாளா்களாகவும், பங்கேற்கத்தக்க பார்வையாளா்களாகவும் ஆக்கப்படுகிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. நமது கால மின்னணுவியல் ஊடகங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் பற்றி விளக்க முற்பட்ட பின் நவீனத்துவச் சிந்தனையாளா் ழான் போத்ரியாவின் எடுத்துக் காட்டோடு இந்த முன்னுரையை முடித்துக்கொள்ளலாம். பயங்கரவாதத்தின் இருப்பையும் இயங்குநிலையையும் பற்றி விளக்க வந்த போத்ரியா, உலக வர்த்தக மையக் கோபுரங்கள் தகா்க்கப்பட்ட 2001, செப்டம்பா் 11 ஆம் நாளினை எடுத்துக்காட்டி இப்படி எழுதியுள்ளார்.

பிம்பங்கள் ஒரே நேரத்தில், இரு நிலைகளில், இரு வழிகளில் செயல்படுகின்றன. பிம்பங்கள் நிகழ்வைக் கொண்டாடுகின்றன. அதே நேரத்தில் நிகழ்வை முழுமையாகத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்கின்றன. பிம்பங்கள் நிகழ்வைப் பெருக்குகின்றன. அதே சமயம் நிகழ்வின் திசையை மாற்றி அது நீா்த்துப்போகவும் வழிவகுக்கின்றன. பிம்பம் நிகழ்வை உள்வாங்கி, ஒரு நுகா்பொருளாக அதை மாற்றி உங்கள் கண் முன் வைக்கிறது. இம்முறையில் வெளிப்படும் நிகழ்வு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான்.

ஆனால் பிம்பங்களின் அடிப்படையில் ஏற்படும் பாதிப்பு இது. இவ்வகையில் உங்கள் முன் இருப்பது ஒரு பிம்ப நிகழ்வு. யதார்த்தம் பிம்பங்களால், புனைவுகளால், நிலையற்ற காட்சிகளால், அனைத்துத் திசைகளிலிருந்து ஊடுருவப்படும் போதும் நிகழ்வு என்பது எங்கிருக்கிறது? பாவனை மயமான ஒரு நிலையற்ற உலகில் இறுதியாக, யதார்த்தத்தின் உயிர்ப்பை, யதார்த்தத்தின் வன்முறையை நேரில் காண்பதற்கான ஒரு வாய்ப்பை உணா்வை தந்ததாக நாம் கருதினோம் (ஒரு விடுபடும் உணா்வை அதில் நாம் அடைந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.)
(ழான் போத்ரியா, பயங்கரவாதம் : அகமும் புறமும் (மொழிபெயர்ப்பு: கண்ணன். எம்.) பக். 27, 28, விடியல் வெளியீடு, கோயம்புத்தூா். 2003).

அண்மைக் கால நிகழ்வுகள், அவற்றை ஊடகங்கள் கையாண்ட முறைகள், அதன் மேலான விமா்சனங்கள் ஒவ்வொன்றையும் விரிவாகப் பேசவேண்டும். இன்று நடப்பன பழையன போல் தோன்றலாம். ஆனால் அவற்றையொத்த நிகழ்வுகள் இனி நிகழாது என்றோ, நடந்த அந்த நிகழ்வுகளை நாம் சரியாகவே விளங்கிக் கொண்டோம் என்றோ அா்த்தம் இல்லை. தொடா்ந்து நிகழப்போகும் பெரும் நிகழ்வுகளிலும் குறுநிகழ்வுகளிலும் நாம் வெற்றுப் பார்வையாளா்களாக இருப்பதும், பங்கேற்புப் பார்வையாளா்களாக ஆவதும், இவ்விரண்டிலும் இல்லாமல் காணாமல் போனவா்கள் பட்டியலில் இடம்பெறுவதும் நிகழத்தான் போகிறது

பாவனை எதிர்ப்புகள்

வெகுமக்கள் அரசியலில் - வாக்கு அரசியலில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் சூத்திரங்களில் ஒன்று அதிகாரத்துவமைய எதிர்ப்பு மனநிலை ( Anti Establish mindset) ஊராட்சித்தேர்தல் முதல் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுக்க நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த மனநிலையின் வீச்சும் சாத்தியங்களும் அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அசைக்கவே முடியாத பஞ்சாயத்துத் தலைவர்களான நிலக்கிழார்களையும் பண்ணையார்களையும் 1960 களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் துண்டை உருவிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பினார்கள் வாக்காளர்கள். அப்போது வெற்றிபெற்று வந்தவர்கள் அந்தப் பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்களின் தேவைகளை - நடைமுறைகள் என்னவென்றே அறியாத புதுமுகங்கள்தான். அவர்களின் அரசியலறிவு தேர்வில் வெற்றிபெறத் தேவையான 35 சதவீத மதிப்பெண்களைக் கூடத் தாண்டாது என்பது அவர்களுக்கும் தெரியும்; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தெரியும். அவர்களுக்குத் திரட்சியாகக் கிடைத்த வாக்குகள் எதிர்ப்புமனநிலை வாக்குகள்தான்.

1970களில் திரு. எம்.ஜி.ராமச்சந்திரனுக்குத் திரண்ட வாக்குகளும் எதிர்ப்பு மனநிலைத் திரட்சிதான். அவரது அரசியல் அறிவுக்காகவும் நிர்வாகத் திறமையைச் சோதித்து அறிந்துகொண்டதால் போடப்பட்ட வாக்குகளல்ல. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிகாரமாகத் திரளும் திமுக எதிர்ப்பை, குடும்ப ஆட்சியென்னும் அதிகாரமையத்தை உருவாக்கிக் கட்டமைத்துப் பேசும் வாய்ப்பு செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. கெட்டியாகப்பிடித்துக்கொண்டு கடைசிவரை அந்த எதிர்ப்பையே வெற்றிக்கான கருவியாகக் கையாண்டார்.

தமிழகம் எல்லா நேரமும் எதிர்ப்பு மனநிலையின் அடிப்படையிலேயே தலைவர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையிலேயே திரைப்பட நடிகர்கள் அதிகாரத்துவ மையத்தை எதிர்ப்பவர்களாகப் பாவனை செய்துகொண்டு அரசியல் வசனங்களைச் சினிமாவிலும் ஊடகங்களிடமும் மேடைகளிலும் பேசுகிறார்கள். எது எதிர்க்கவேண்டிய அதிகாரமையம் என்பது திரு. ரஜினிகாந்துக்கு - திரு.விஜயகாந்த் கண்டடைந்த அளவுக்குக்கூடத் தெரியவில்லை. திரு.கமல்ஹாசன் இப்போதுள்ள எடப்பாடி அரசுதான் எதிர்க்கவேண்டிய அதிகாரத்துவ மையம் எனக்கருதி மாநில அரசையே குறிவைக்கிறார். அது காற்றடைத்த பலூன். அப்பலூனை ஊதுபவர்கள் பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுக் கிளையும் அதன் சிந்தாந்திகளும் என்பதை அவர் அறிந்திருப்பார் என்றே நினைக்கலாம். அந்த வகையில் அவரது எதிர்ப்பு பலூன் விற்பனையாளர்களை எதிர்க்கும் வேடிக்கையான எதிர்ப்பே.

இதிலிருந்து முற்றிலுமாகத் திசைதிரும்பி நகர்ந்துள்ள விஜய் ஆதரவு முழுமையான அதிகாரத்துவ மனநிலையினை எதிர்க்கத் தயாராகும் கும்பல் மனநிலை. அதிகாரத்துவ எதிர்நிலையின் விளைவு.

தமிழ்நாட்டில் இப்போது திரண்டு உருவாகும் அதிகாரம் பா.ஜ.க. உருவாக்கும் அரசியல், பண்பாட்டு, ஊடகத்தள அதிகாரம்தான். நேரடியாகக் கைப்பற்றாமல் பின்வாசல் வழியாக ஊடகங்களை, பண்பாட்டு அமைப்புகளை, அரசியல் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பா.ஜ.க.வை - அதிகார மையத்தை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் ஒருவருக்கு நிச்சயம் ஆதரவு திரளும். மெர்சலின் வசனங்களை முன்வைத்து நடிகர் விஜய்க்குத் திரண்டெழுந்துவரும் ஆதரவு அப்படியொரு திரட்சியே.

அந்தத் திரட்சியை அரசியல் இயக்கமாக - வாக்குக்கூட்டமாக மாற்றும் சிந்தனை அவரது தந்தை திரு சந்திரசேகருக்கு உண்டு. அந்த யோசனையைப் பல நேரங்களில் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார். இப்போது கூடுதலாக முன்வந்து சொல்கிறார். பாவனை எதிர்ப்பாளர்களை அடையாளம் காட்டி அரசியல் மயப்படுத்த வேண்டியது அரசியல் இயக்கங்களின் - கட்சிகளின் வேலை. அதைக்கைவிட்டு ஒற்றை அதிகாரத்தை எதிர்க்கும் கருவியாகத் திரு.விஜயைக்கருதி ஆதரித்தால், மோசமான ஒன்றுக்குப் பதிலாக அதைவிட மோசமான அதிகாரத்துவ மையத்தையே தெரிவுசெய்ய உதவியாதாக ஆகிவிடும்.

பா.ஜ.க. எதிர்ப்புக்காக நடிகர் விஜயை அரசியல்வாதி விஜய்யாகக் கட்டமைப்பது கண்ணைக்கட்டிக்கொண்டு பாழுங்கிணற்றில் குதிப்பதுபோன்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்