திலகா அழகு: ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலுமான பெண்ணுடல்கள்


நான் எழுதும் ஒரு நூலுக்கான முன்னுரையில் அவர்  புதியவராக இருக்கும் நிலையில் அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கின்றேன். ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டுகின்றேன். மௌனம் தின்னும் என்னும் தொகுப்போடு வந்திருக்கும் திலகா அழகு புதியவர். அவரது வருகையைக் கவிதைப்பரப்பிற்குள் அறிமுகம் செய்வதே இங்கு நோக்கம்

கவிதையின் வெளிப்பாட்டிற்கு ஒற்றைத்தன்மை இருப்பதாக நம்புவது இலக்கியவியலை அதுவும் கவிதையின் மரபை அறியாதவர்களின் வாதம். ஒருவரின் கவிதைகளோகூட வெவ்வேறு வெளிப்பாட்டு நோக்கங்களைக் கொண்டனவாக இருக்கின்றன. தன்னைச் சமூகத்தின் பகுதியாக நினைக்கும் ஒரு கவியால் ஒற்றைத் தன்மையில் மட்டுமே வெளிப்பட முடியாது. தன்னைப் பற்றிச் சமூகத்தின் முன்னால் வைப்பதும், சமூகத்தின் இறுக்கத்தால் அல்லது அக்கறை இன்மையால் தனது இருப்புநிலையைப் பேசுவதும் அவர்களின் நிலைபாடாக ஆவதால் பலவிதச் சூழல்களை உருவாக்கி, பலவிதமான பாத்திரங்களாக மாறி, பலப்பல கேள்விகளோடு கவிச்சொற்களைத் தொடுத்து அனுப்புவார்கள். 

தன்னைச் சமூகப்பரப்பிலிருந்து விலக்கிக்கொண்டு அல்லது சமூகம் தன்னைக் கவனிக்கவில்லை என்று முடிவுசெய்துகொண்டு, தனது அகத்தோடு மட்டுமே உரையாடல் செய்யும் கவிகள் எப்போது ஒற்றைத் தன்மையிலேயே வெளிப்படுகின்றனர். அவ்வெளிப்பாடுகளில், உள்முகப்புலம்பல்களில் கிடைக்கும். இயலாமையின் பீறிடலும், தன்னையே வருத்திக்கொள்ளும் துயரத்தின் வெடிப்புகளும் அவ்வகைக் கவிதைகளில் தூக்கலாக இருக்கும். அப்படி வெளிப்படுவதற்கான சூழல்களை உருவாக்கி அதற்குள் நின்று நாலாபக்கமும் புலம்பல் வார்த்தைகளை வீசிக்கொண்டே இருப்பார்கள். அவ்வார்த்தைகள் அவர்களே உருவாக்கும் கற்பனைச் சுவர்களில் மோதித் திரும்பும் எதிரொலிகளாக மாறும். அவ்வெதிரொலிகளின் அசைவுகளில் ஒரு கற்பனைச் சுகம் கிடைக்கும். அச்சுகம் கவிச்சுகமாகவும் தன் மெய்யைத் தீண்டும் இன்னொரு மெய்யின் சுகமாகவும் கூடக் களிப்பை உண்டாக்கும். 

கவியின் சொற்கள், கவியின் மெய்க்கே தீண்டல் சுகத்தைத் தருவதுபோல, கற்பனைச் சுவர்களை உடைத்துக் கொண்டு காற்றில் அலைந்து கொண்டே இருக்கும்படி விசிறிவிடுவது ஒருசில கவிகளுக்குச் சாத்தியமாவதும் உண்டு. விசிறியடிக்கப்படும் அச்சொற்கள், அலையும் இன்னொரு புலம்பலையோ மௌனத்தையோ கண்டுபிடித்து நேசம் கொண்டுவிடுகின்றன. அப்படியான நேசத்தை நினைத்து, நேசத்திற்கேங்கி, நேசத்தைத் தேடி, நேசமாய் விசிறும் கவிதைகள் பலவற்றைத் திலகா அழகுவின் இந்தத் தொகுதிக்குள் வாசிக்க முடிகிறது. 

வாழ்தலின் மீதான விருப்பமும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் கொண்ட பல பெண்களை அடையாளம் காட்டாது, ஒரே பெண்ணின் பல மாதிரிகளை இக்கவிதைகள் முன் நிறுத்துகின்றன. வாசிப்பவர்கள் அம்மாதிரிப் பெண்களைச் சந்தித்திருக்க வாய்ப்புண்டு. அல்லது இனிமேல் சந்திக்கக் கூடும். சந்திக்கும் அந்தப் பெண் எதிர்ப்படுபவர்களிடம் பேசிவிட்டுக் காணாமல் போய்விடும் ஒருத்தியாகவே இருக்கிறாள்; மின்னலில் தெரியும் மரக்கிளையின் அசைவுபோல. ஆனால் பலரது விருப்பமோ நின்று கைகுலுக்கிப் பார்க்கும் நட்பை. நம்மிடம் எதையாவது தந்துவிடும் விருப்பம் கொண்ட பெண் மனதை. ஆனால் இக்கவிதைக்குள் வெளிப்படும் பெண்ணின் மாதிரிகள் நட்புக்கொண்டு உரையாடலை மேற்கொள்ளும் அனுபவங்களோடு கூடிய மனப்பக்குவம் கொண்டவளாக இல்லை. வெவ்வேறு அனுபவங்களை உருவாக்கித் தரும் புதிய வெளிகள் அதிகமாகக் கவிதைக்குள் உருவாக்கப்படவில்லை. 

தனியொருவரின் மனவெளிக்குள்ளிருந்து கிளம்பும் உணர்வெழுச்சிக் கவிதைகளுக்கான உரிப்பொருள்களாகப் பெரும்பாலும் காதலும் காமமும், அவற்றின் நிமித்தங்களுமாக இருக்கின்றன. செவ்வியல் கவிதைகளில் முல்லையின் உரிப்பொருளாகச் சொல்லப்படுவது இருத்தல். இருத்தலுக்கு இருநிலைகள் உண்டு. ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலுமான இருநிலைகள் அவை. சென்றவன் வருவான் என்ற எதிர்பார்ப்பில் ஆற்றியிருத்தலில் வெளிப்படுவது நம்பிக்கை. வராமல் போய்விட்டால்? என்ற ஐயத்தின் விளைவு ஆற்றாதிருத்தல். இத்தொகுப்புக் கவிதைகள் பெரும்பாலும் இருத்தலின் இரு பிரிவுக்குள்ளேயே நிலைகொண்டுள்ளன. அதிலும் ஆற்றாதிருத்தலே அதிகம். 
தமிழ்ச் சமூகத்தின் இருப்பில் காதலும் காமமும் உருவாக்கும் கொந்தளிப்புகள் ரகசியமான கொண்டாட்டங்களாக ஆண்களுக்கு இருப்பதாகப் பெண்கள் நினைக்கிறார்கள்.. அப்படியான கொந்தளிப்பு மனநிலையைப் பெண்கள் அடையவே முடியாதா? என்ற கேள்விகளும் அவர்களுக்குள் இருக்கின்றன. அந்தக்கேள்விகள் காதலையும் காமத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி இரைஞ்சும் சொற்கூட்டங்களாக மாறுகின்றன. அச்சொற்கூட்டங்களுக்குள் தன்னிலையையும், தன்னையொத்த பெண்களின் கூட்டுநிலையையும் உள்பொதிந்து வைக்கும் ஆற்றல் வாய்க்கப்பெற்ற பெண், பெண்ணுணர்வு வெளிப்பாட்டுக்கவியாக மாறிவிடுகிறாள். இந்த நினைப்புதான் தமிழ்க் கவிதையின் பெருமரபு. திலகா அழகும் அப்படியான மரபில் வரும் கவியாகப் பல கவிதைகளில் வெளிப்பட்டுள்ளார்.
 
தொகுப்பிற்குள்ளிருந்து இரண்டு கவிதைகளை இங்கே வாசிக்கத் தருகிறேன். இரண்டும் இருத்தலின் நிலைப்பாடுகளை விரிக்கும் கவிதைகளே. முதல் கவிதையின் தலைப்பு: தாகம். 
இப்போது என் மண்டையுள் 
துளைகள் இடுகிறாய். 
அதன் துகள்கள் 
இடுப்பு வரை இறங்கி 
வயிற்றின் அந்தத்துள் அசைகிறது 
பாம்புகள் பின்னிப் பிணைந்து 
உருண்டே உறவு கொள்ளுதல்போல் 
அந்தம் அசைத்து 
அடிவயிற்றை முறுக்கிறது 
இரகசிய இடத்தில் 
தாகம் கூடி 
தேனாய்க்கசிகிறது 
தொண்டைக்கும் மார்புக்குமிடையில் 
ஒரு வலி 
கைகளை இறுக்கிப்பிணைத்து 
தலைமேல் உயர்த்தி 
உடலை நிமித்த 
உஸ்ணக்கற்றின் வீச்சு 
உதட்டை உரசி உலர்விக்கிறது 
விரலுரசும் தூரத்தில் 
தொடமுடியா தாகத்தில் நான் 
*********** 
இரண்டாவது கவிதையின் தலைப்பு ஒளவையிடமிருந்து கடன்வாங்கிய நள்ளென் யாமம்: 
பிணைந்துகிடக்கும் சாரைகளுக்கு 
நள்ளிரவும் நண்பகலும் 
மூச்சிரைக்கும் மூர்க்கம் 


காடுகடந்து போய்த்திரும்பும் 
தெக்கத்திக் காத்துக்குச் 
சொல்லச் செய்திகளுண்டு 


மூக்குரசும் மைனாக்கள் 
வால்கவ்வும் ஆநிரைகள் 
காதுகவ்வும் கல்சிலை 


சிவப்புக் கூடிய குண்டுமணிக்கு 
கறுப்பு மீதானது காமம் 
வெடிப்பு மீதானது வெளிச்சம். 


மஞ்சள் கருவிற்குள் மிதக்கும் 
வெள்ளைக்கருவிற்கு காவலாய் 
ஓடே திரட்டித்தரும் 

காதலையும் காமத்தையும் தயக்கமின்றிப்பேசும் திலகா அழகுவின் கவிதைக்குள் இரவுகளும் சாரைப்பாம்புகளும் மௌனத்தின் இரைச்சல்களும் அசைகின்றன. அலைகின்றன. மூச்சிரைத்துத் திரிகின்றன. இவற்றை வாசிக்கும்போது திலகா அழகுவிடம் சொற்கள் லாவகமாக வந்து வரிசைகட்டுவதையும் நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். 

இருத்தல் நிலையை இரங்கல் பொருளாகப் பெண்களின் கவிதைகள் மாற்றும் ஒரு வேதிவினையைச் செய்கின்றன. அதற்காகப் பெண்கள் அடையமுடியாத கொண்டாட்டங்களைத் திருடிச் செல்லும் இடத்தில் பல ஆண்களோ? ஒற்றை ஆணோ இருப்பதாகப் பெண்களின் இருப்பு உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அந்த உறுதிப்பாட்டின் மேல், ஆண்களை அல்லது ஆணைப் பழிவாங்கிவிடும் தீர்மானங்களை எடுக்கத் தயங்குவதில்லை. பழிவாங்கமுடியாமல் போகும் நிலையில் தன்னை மாய்த்துக்கொள்ளும் நிலையையும் சில நேரங்களில் தேர்வு செய்வதுண்டு. இருநிலைகளிலும் ஒரு தெய்வமேற்றுதல் தமிழ்ச் சமூகத்தில் நிகழும் என்பதால் இந்த முடிவு. ஆனால் திலகா அழகுவின் கவிதைகளுக்குள் இருக்கும் பெண், வேறு திசைகளை நாடுகிறாள். பல நேரங்களில் வன்மமும் பழிவாங்கும் உக்கிரமும் வெளிப்பட்டாலும் தெய்வமாகிவிடும் எண்ணம் அவளுக்குள் இல்லை. இவ்வுலகத்தில் இருக்கவேண்டும்; நிலைக்கவேண்டும்; திறந்துகிடக்கும் வெளிகளுக்குள் பயணிக்க வேண்டும் என்ற ஆவலும் கொண்ட பெண்களையும் எழுதிக்காட்டுகிறார். 

வாழ்தலின் மீதான விருப்பமும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் கொண்ட பல பெண்களை அடையாளம் காட்டாது, ஒரே பெண்ணின் பல மாதிரிகளை இக்கவிதைகளை வாசிப்பவர்கள் சந்திக்கக் கூடும். சந்திக்கும் அந்தப் பெண் எதிர்ப்படுபவர்களிடம் பேசிவிட்டுக் காணாமல் போய்விடும் ஒருத்தியாகவே இருக்கிறாள். நின்று கைகுலுக்கி நட்புக்கொண்டு உரையாடலை மேற்கொள்ளும் அனுபவங்களோடு கூடிய மனப்பக்குவம் கொண்டவளாக இல்லை. 

எண்ணிக்கையில் பெரும் அளவினதாக இருக்கும் இவ்விருத்தல் கவிதைகளைத் தாண்டி வேறு பொருண்மைகளைப் பேசும் கவிதைகளும் இருக்கின்றன. குடும்ப உறவுகளின் பாசம் அல்லது இன்மை, சூழலில் இருக்கும் மனிதர்கள் மீதான அன்பு அல்லது கோபம் போன்றனவற்றையும் கவிதை வடிவம் சாத்தியப்பட்ட நிலையில் எழுதிப்பார்த்திருக்கிறார். எதையும் நான் – நீ என்னும் எளிய கவிதை வடிவத்தில் எழுதிக்காட்டும் திலகா அழகுவின் முதல் தொகுப்பு இது. அடுத்தடுத்தத் தொகுப்புகளில் புதுப்புது கவிதை வடிவங்களையும் பொருண்மைகளையும் எழுதிக்காட்டும் தெறிப்புகள் இருக்கின்றன. 


------------------------------------------- மார்ச்,2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்