உயர் கல்வி நிறுவனங்கள்

தரம் உயர்த்திக்கொள்ளல்
-----------------------------------------
நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.


முயற்சி திருவினை ஆக்கும் என்னும் அறவுரை தனிமனிதர்களின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான தூண்டுகோல். கடின உழைப்பு, தோல்வியில் துவளாமை, விடாப்பிடியான பயிற்சிகள் போன்றன தனிமனிதர்களின் வாழ்க்கைக்கான திறன்கள். அவைகளுக்குப் பின்னணியில் முயற்சி இருக்கிறது என்று நம்புவது மனித இயல்பு. இத்தகைய நம்பிக்கையை ஒரு நிறுவனம் கைக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்வதானால், தனிமனிதர்களின் தர உயர்வுக்கும் நிறுவனங்களின் தர உயர்வுக்கும் பின்னணியில் ஒரேவிதமான இயங்கியல் இருப்பதில்லை என்றாலும் இரண்டுக்கும் பின்னணியில் தரமானது எனக் காட்டிக்கொள்ளும் உத்தி இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. எமது பல்கலைக்கழகம் தன்னைத் தரமானது எனக் காட்டிக்கொள்ளக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் உழைப்பைச் செய்தது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்களும், நிர்வாகப்பணியாளர்களும், அவர்களை வழிநடத்திய துணைவேந்தர் அவர்களும் கூட்டாக இணைந்து விடாப்பிடியாக வேலைகளைச் செய்தார்கள்.
பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் அதனதன் அளவில் தன்னைத் தரப்படுத்திக்கொள்வதன் மூலம் பொதுத்தரநிலைக்கு உதவ முடியும் என்பதை உணர்ந்துகொள்ளும்படி பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஓராண்டுக்கு முன்பே தரப்படுத்துதலை அளவிடும் ஏழு வகைப்பாடுகளுக்கேற்ப முன்வைப்புகளும் சான்றுகளும் அனுப்பப்பட்டன. அதனை ஏற்றுக்கொண்டு தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழு வருகையை உறுதிசெய்தது. ஜூலை 18- 21 இல் வந்தது. இடையில் அளிக்கப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யும் விதமாக மாணாக்கர்களிடம் இணையவழிச் சோதனைகளைச் செய்தது அந்தக் குழு.

தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் வருகைக்கு முன்பு இரண்டு மாதிரிக்குழுவின் பார்வைக்கு ஏற்பாடு செய்தார் துணைவேந்தர்.அக்குழுவின் பரிந்துரைப்படி மேலும் செய்யவேண்டிய பணிகள் கவனம் பெற்றன.அதிகம் கவனம் பெறவேண்டிய துறைகள், வேலைகள் கண்டறியப்பெற்றன. சிறப்பான துறைகளை மேலும் சிறப்பாக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. பொதுநிலைப்பணிகளான சாலைகள், வளாகப் பாதுகாப்பு, மாணவர்கள் நலன் சார்ந்த மருத்துவம், விடுதிகள், சுற்றுச்சூழல் கவனம், உதவித்தொகைகள், தகவல் தொடர்பில் தடையின்மை, விழிப்புணர்வூட்டல் போன்றன கூடுதல் கவனம் பெற்றன. இப்போது பல்கலைக்கழக வளாகம் தேர்ந்த கல்வி வளாகமாக - முழுமையை நோக்கி நகர்ந்துவிட்டது.
முதன்முதலில் வந்த குழுவின் அறிக்கை மற்றும் ஆலோசனையில் எங்கள் தமிழியல் துறையின் செயல்பாடுகளும் இருப்பும் அறிக்கை அளிப்பும் சிறந்ததாகக் கொண்டாடப்பட்டது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொள்கிறேன். அதன் தொடர்ச்சியாகத் துணைவேந்தரின் கவனம் தமிழியல் துறையின் பக்கம் திரும்பியது. மேலும் நிதி ஒதுக்கி நாங்கள் ஆவணப்படுத்தியிருந்த பண்பாட்டுக் காட்சியகத்தை விரிவாக்க உதவினார். நவீனக் கருவிகளை வாங்கும்படி வேண்டிக்கொண்டார். உள்ளரங்கக் காட்சியகமாக இருந்த பண்பாட்டு ஆவணக்காப்பகம் திறந்தவெளி காட்சியகமாக விரிக்கப்பட்டது. குழுவினரும் வந்து பார்வையிட்டுப் பாராட்டினர்.

தரப்படுத்துதல், தரத்தைத் தேர்வுசெய்தல், தரம் உயர்த்துதல், தரமானவற்றை விரும்புதல் என்ற சொல்லாடல்கள் ஒருவிதத்தில் உள்வாங்கும் சமூகப்போக்குக்கு எதிரானது. தரமானவை X தரமற்றவை என்ற இரட்டை எதிர்வில் தரமற்றவை கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்படும் என்பதும், காலப்போக்கில் காணாமல் போகும் என்பதும் அதன் இயங்கியல். நிகழ்கால அரசியல் பொருளியல் அடிப்படைகள் இதனையே விரும்புகின்றன; ஏற்றுக்கொண்டுவிட்டன. அதனைப் புரிந்து கொள்ளாத பொதுப்புத்தியும் அதனை நம்புகிறது; ஏற்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் ஒவ்வொருவரின் இருப்பும் உறுதியாகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நிலைபெறுகிறது.

தேசிய அளவுப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னேறும்போது அதன் பலனைத் துணைவேந்தரும் நிர்வாகமும் மட்டும் அனுபவிக்கப்போவதில்லை. துணைவேந்தருக்குப் பெருமையும் பாராட்டும் கிடைக்கும் என்பது உண்மைதான். அது அவரது அடுத்த தாவலுக்கு உதவும் என்பதும் உண்மை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல்கலைக் கழகத்தின் இந்தத் தாவல் இங்கே பயின்று பட்டம் பெறுபவர்களுக்கு முதன்மையாகப் பயனளிக்கக் கூடியது. அவர்களது சான்றிதழில் இந்தக் குறியீடு இடம்பெறும். அதனாலேயே அவர்கள் பெறும் பட்டம் மதிப்புப்பெறும். அதன் வழியாக அவர்களின் வேலைவாய்ப்பும் பணி உயர்வும் சாத்தியமாகும். இங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆய்வு வாய்ப்புகள் கிடைக்கும். அனுப்பப்படும் ஆய்வுத்திட்டங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யும், தொடங்கவும் தொடரவும் நிதி ஒதுக்கீடுகள் நடக்கும்.

நாம் இருக்கும் இடத்தின் தரம் நம்மை உயர்த்தவும் உதவும். இது இப்போது நடந்திருக்கிறது. இதற்குக்காரணமான பல்கலைக்கழகத்தின் இப்போதைய துணைவேந்தர் திரு. கிருஷ்ணன் பாஸ்கர் பாராட்டுதலுக்குரியவர்.
.
https://www.msuniv.ac.in/Home/Video-Gallery


மிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:

பல்கலைக்கழகங்களின் தகுதிமதிப்பீட்டைப் பரிசீலனை செய்து தரமதிப்பீட்டை உருவாக்கும்- NAAC- நோக்கத்தோடு தேசியத் தரமதிப்பீட்டுக்குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைதர உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வருவார்கள். அவர்கள் வரும்போது ஒவ்வொரு துறையும் தங்களின் சிறப்புக்கூறுகளையும் செயல்பாடுகளையும் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும். இப்போது வருவது மூன்றாவது வருகை. 2012 முதல் 2017 காலத்தை மதிப்பிடுவார்கள்.. இதற்குமுன் வந்த போதெல்லாம் துறை நடத்திய கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் முன்வைப்போம். எழுத்தாளர்களை வகை பிரித்துப் பட்டியலிடுவோம். இந்தப்பட்டியலில் இருக்கும் எழுத்தாளர்கள் மற்ற பல்கலைக்கழகஙக்ளுக்குப் போயிருக்க வாய்ப்புகள் குறைவு. 20 ஆண்டுகளில் 100 -க்கும் அதிகமான எழுத்தாளர்கள் எனப் பட்டியல் காட்டுகிறது. இவ்வளவு கவிகளும் புனைகதையாளர்களும் செயல்பாட்டாளர்களும் கல்விப்புலப் பேராசிரியர்களும் துறைக்கு வந்து போயிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தோப்பில் முகம்மது மீரான், பூமணி போன்றவர்கள் சாகித்திய அகாடெமி விருதுபெற்றபோது கருத்தரங்குகள் நடத்திக் கொண்டாடியிருக்கிறது. எழுத்தாளர் கி.ரா.வுக்குப் பேரா.சுந்தரனார் விருது அளித்துப் பெருமைப் பட்டுக்கொண்டது. சுந்தரராமசாமியின் எழுத்துகள் குறித்தொரு கருத்தரங்கையும் நடத்தியிருக்கிறது துறை. தொ.மு.சி., தி.க.சி.,போன்ற மூத்த திறனாய்வாளர்களும் ந.முத்துமோகன், தமிழவன், ஞாநி, ரவிக்குமார், ராஜ்கௌதமன்,ப்ரேம், க;பஞ்சாங்கம், அழகரசன், க.பூரணச்சந்திரன், தி.சு.நடராசன், அ.மார்க்ஸ், பொ. வேலுசாமி, ந.முருகேசபாண்டியன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற திறனாய்வாளகளும் ஓரிருமுறை வந்திருக்கிறார்கள், கலாப்ரியா, இமையம், ஜெயமோகன், சோ.தர்மன், பா. செயப்பிரகாசம், தோப்பில் முகம்மது மீரான் முதலானவர்கள் இரண்டு மூன்றுமுறையாவது வந்திருக்கக்கூடும். தமிழ்ச்செல்வன், கோணங்கி, பெருமாள் முருகன், ஜெ.பி.சாணக்கியா, குமாரசெல்வா, முருகவேள், ஏக்நாத், செல்லமுத்து குப்புசாமி, சந்திரா, நாறும்பூநாதன் போன்றவர்களும் வந்தார்கள்.

விக்கிரமாதித்தியன் தொடங்கி யவனிகா ஸ்ரீராம், பழமலய், ஹெச். ஜி. ரசூல், சுகுமாரன், யுவன் சந்திரசேகர்,அறிவுமதி, இன்குலாப், பாலா, கனல் மைந்தன், சிபிச்செல்வன், சல்மா, சுகிர்தராணி, தமிழச்சி, சக்திஜோதி, உமா மகேஸ்வரி, என்.டி.ராஜ்குமார், யாழன் ஆதி, போகன் சங்கர், சமயவேல் எனக் கவிகள் பலரும் வந்தார்கள்; சென்றார்கள். , தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்சு எனப் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். வில்வரத்தினம், சேரன், மௌனகுரு, சோபா ஷக்தி, பால. சுகுமார் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.




புதிய நோக்கில் எழுதக்கூடிய பேரா.அ. அ. மணவாளன், பேரா. மருதநாயகம், பேரா.துரை சீனிச்சாமி, பேரா. பக்தவச்சல பாரதி, பேரா. ஆ. செல்லப்பெருமாள், பேரா. செ.சாரதாம்பாள், பேரா. ஆ. ஆலிஸ், பேரா. ஆ. திருநாக லிங்கம், பேரா. ஆனந்த குமார், பேரா. நடராசன், பேரா.இரா.ஜெயராமன், பேரா. வீ. அரசு போன்றவர்களுடன் புதிய தலைமை முறைக்கல்வியாளர்களான பாண்டிச்சேரி ரவிக்குமார்,பழனிவேலு, சம்பத், ய.மணிகண்டன் போன்றவர்களும் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசித்திருக்கிறார்கள். நாடகத்துறையில் அறியப்பட்ட பேரா.சே.ராமானுஜம், பேரா.மு.ராமசுவாமி, செ.ரவீந்திரன், பார்த்திபராஜா, ம.ஜீவா, சிபு எஸ்.கொட்டாரம் போன்றோர் பங்கெடுத்திருக்கிறார்கள்.மொழி, கணினிப் பயன்பாடு குறித்துப் பேசும் பத்ரி சேஷாத்ரி, ஆழி. செந்தில்நாதன் போன்றோரோடு மொழியில் புலத்திலிருந்து முனைவர் எல். ராமமூர்த்தி, இளங்கோவன் போன்றோரும் வந்ததுண்டு. ஓவியா, அருள்மொழி, கமலி, இரா.பிரேமா, அரங்கமல்லிகா போன்ற பெண்ணியச் சொல்லாடல்காரர்களும் அழைக்கப்பட்டதுண்டு.

மற்ற பல்கலைக் கழகங்களின் துறைகள் இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. எம் துறையின் பாடத்திட்டக்குழுவில் பிரபஞ்சன், கார்மெல், காலச்சுவடு கண்ணன், தோப்பில் முகம்மது மீரான் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். பின்னை நவீனத்துவம், பெண்ணியம், அமைப்பியல், தலித்தியம், பண்பாட்டு ஆய்வுகள், திறனாய்வுப் போக்குகள், புனைகதைப் போக்குகள், கோட்பாடுகளும் இலக்கியமும், கவிதையின் செல்நெறிகள்,புலம் பெயர் இலக்கியம், புனைகதைப் பார்வைகள், ஆராய்ச்சி நெறிமுறைகள், அணுகுமுறைகள் என ஒவ்வொரு வகையிலும் எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ச்சியாகப் பங்கேற்றுள்ளனர். இதனைத் துறை தொடங்கிய 1997 முதல் தொடர்ச்சியாகச் செய்து நவீனத்தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய துறை என அடையாளப் படுத்தியிருக்கிறோம். இந்த அடையாளம் உருவாக எனது இருப்பு ஒரு காரணம்.
இந்த அடையாளத்திற்கு இணையாகப் பண்பாட்டுப் பொருட்கள் சேகரிப்பையும் நடத்தி வந்தோம். பொருட்களை நிரல்படுத்தத் தனியிடம் தேவை என்ற காரணத்தால் கூடுதலாகக் காட்சிப்படுத்தல் இயலாமல் இருந்தது. இந்த முறை இதனோடு புதிதாகச் சேகரித்துள்ள ஆவணக்காப்பகப் பொருள்களை முன்வைக்கப் போகிறோம்.எம் துறையில் பண்பாட்டாய்வுகளை நெறிப்படுத்தும் பேரா.ஸ்டீபன் இதற்கு முதன்மையான காரணம்.
கருத்துகளுக்கும் கருத்தியல்களுக்கும் கிடைக்கும் மதிப்புகளை விடப் பழம்பொருட்களுக்கு மதிப்பு கூடுதல் உண்டு என்பது நடப்பியல் உண்மை.வரப்போகும் தேசியத் தரமதிப்பீட்டுக்குழு -NAAC- தரப்போகும் புள்ளிகள் துறையின் வளர்ச்சிக்கு உதவலாம்.

உலகத்தமிழிலக்கிய வரைபடம்.




‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகம் ’ என்றொரு மரபுத்தொடரைத் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனன் சொல்கிறார். ஆனால் அவர் காலத்திலேயே தமிழ் மொழியின் இருப்பும், தமிழ்மொழியைப் பேசிய மனிதர்களின் போக்குவரத்தும் இவ்வெல்லைகளைத் தாண்டியனவாக இருந்தன என்பதற்கான குறிப்புகளை அந்தத் தொல்காப்பியச் சூத்திரங்களே சொல்கின்றன. வடசொல், திசைச் சொல் பற்றிய குறிப்புகளும் மட்டுமல்லாமல், கடல்கடந்து செல்லும் வழக்கம் – முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை போன்ற குறிப்புகளுமாகப் புலம்பெயர்தல், இடம்பெயர்தல் பற்றியக்குறிப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியத்தின் இருப்பும் உருவாக்கமும் வெளிப்பாடுகளும் தமிழக எல்லையைத் தாண்டியவை என்பதற்கான சான்றுகள் இப்போது செவ்வியல் இலக்கியங்களாகப் பட்டியலிடப்படும் பலநூல்களில் கிடைக்கின்றன.
இலங்கைத்தீவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் வருகையால் உருவான காலனிய இடப்பெயர்ச்சியால் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கையின் மலையகம், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குப் பெயர்ந்து அந்நாட்டின் குடிகளாகவே ஆகியிருக்கின்றனர். அங்கும் தமிழ்மொழி பேச்சாகவும் எழுத்தாகவும் இருக்கிறது. தனி ஈழப்போராட்டமும், உலக முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உலகமயப் பொருளாதார உறவுகளும் தமிழர்களை புலப்பெயர்வு அகதிகளாகவும் இடப்பெயர்வுக் கூலிகளாகவும் நகர்த்தியிருக்கிறது. இவையெல்லாமும் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தைப் பன்னாட்டு அடையாளத்திற்குரியதாக ஆக்கியிருக்கிறது.

இந்த நேரத்தில் உலகப்பல்கலைக்கழகங்களில் முதன்மையானவை என்று பட்டியலிடப்பட்டுள்ள பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனித்ததொரு தமிழ் இருக்கை உருவாக்கப்பட உள்ளது என்பதை நினைவில் கொள்கிறேன். அதற்காக முன்முயற்சிகள் செய்த தனிநபர்கள் மரு.ஜானகிராமன், மரு.ஞானசம்பந்தன், ஹெர்பர்ட் வைதேஹி, அ,முத்துலிங்கம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அதற்குத் தேவையான பணத்தில் நான்கில் ஒரு பங்கைத் தந்து உதவியிருக்கிறது தமிழக அரசு. அது பாராட்டுதலுக்குரியது. அதேபோல் வார்ஷ்வா, பாரிஸ், கொலான், மாஸ்கோ, பிராக், லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பென்சில்வேனியா, கலிபோர்னியா, விஸ்கான்சின் முதலான அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் தென்கிழக்காசிய, தென்னாசியவில் துறைகளில் ஒன்றாகவும், இந்தியவியல் துறைகளில் பகுதியாகவும் தமிழ் இருக்கைகள் உள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களில் அலிகார், சாந்திநிகேதன், கல்கத்தா, ஹைடிராபாத், கோழிக்கோடு, மும்பை, போன்ற நகரங்களில் இருக்கும் அரசு பல்கலைக்கழகங்களில் இந்தியமொழிகள் புலத்தின் பகுதியாகத் தமிழ் இருக்கைகள் இருந்தன; இருக்கின்றன. அவைகள் தொடர்ந்து இயங்கவும் ஆய்வுகள் செய்யவும் பண உதவி செய்யவேண்டும்; இதையும் தமிழக அரசும் இந்திய அரசும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழர்களும் தமிழ் மாணவர்களும் தூண்டுகோலாக இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழமுடியவில்லையே என்ற எண்ணம் உருவாக்குவது துயரங்களே. இடப்பெயர்வுகள் உருவாக்கும் துயரங்களுக்கு முதன்மையாக இருப்பன பொருளாதாரக் காரணங்களே. வேலைதேடியும் தொழில் செய்வதற்காகவும் அலையும் அல்லது இடம்பெயரும் மனிதர்களின் துயரங்களை உணர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றின் இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. மற்ற இந்திய மொழிகள் அதிகம் பதிவுசெய்ய வாய்ப்பில்லாத பெரும்நிகழ்வு புலம்பெயர்வு.இந்த அனுபவம் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பிற தேசிய இனங்களுக்குக் கிடைக்காத அனுபவம். தமிழ்மொழி பேசும் ஒரு தேசிய இனம் அவற்றைத் தனது மொழியின் வழியாக வாசிக்கவும் எழுதவும் செய்கிறது என்பது நேர்மறைப் பலனாக நான் நினைக்கிறேன்.

ஈழநாட்டுக்கோரிக்கையின் விளைவாக நடந்த போர்கள் தமிழ்பேசும் மனிதர்களை உலகின் பலநாடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அகதிகளாகப் போனவர்கள், அந்தந்த நாட்டுக் குடியேற்றச் சட்டங்களுக்கேற்ப இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் குடிமக்களாக ஆகியிருக்கின்றனர். அங்கு வாழநேர்ந்தபோது குடியேற்றப் பிரச்சினைகளோடு தனிமனித, குடும்பச் சிக்கல்களும் பண்பாட்டு நெருக்கடிகளும் ஏற்படுவது தவிர்க்கமுடியாதவை. அவற்றைப் பதிவுசெய்து எழுதப்பெற்ற தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தந்திருக்கிறது.

காலனிய அதிகாரத்தை உருவாக்கித் தந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மனிதர்களை அதிகாரிகளாகவும் அலுவலர்களாகவும் அனுப்பிவைத்ததையே கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதிவைத்த இலக்கியங்களைக் கொண்டு உலக இலக்கிய வரைபடங்களை அந்தந்த மொழிகளில் உருவாக்கியிருக்கின்றன. அவற்றைவிடவும் கூடுதலான அனுபவப்பகிர்வுகள் கொண்டவையாக இருக்கின்றன 2000 -க்குப் பின்னான தமிழ் இலக்கியம். இலக்கிய உருவாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களாக -விளிம்புநிலை வாழ்க்கைக்குரியவர்களாகத் தமிழர்கள் உலகெங்கு இருக்கிறார்கள். அவர்களின் வெளிப்பாடுகள் பெரும் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. லண்டன், பாரிஸ், கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற இடங்களிலிருந்து இயங்கும் ஈழத்தமிழ் குழுக்களின் தொகுப்புகள் பற்றிய அறிமுகங்களும் விவாதங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அ.முத்துலிங்கம், சேரன், ஷோபாசக்தி போன்ற தனித்த ஆளுமைகளின் எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைக்கின்றன. மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடம்பெயர்ந்த சூழல்களும் பாடுகளும் எழுதப்பட்டுள்ளன. மொரீசீயஸ், அரபுநாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றிற்குப் போய் அடையாளமிழக்கும் மனிதர்களாகவும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அவையெல்லாம் தொகுக்கப்பட வேண்டும். அவற்றிலிருந்து உலகத் தமிழ் இலக்கிய வரைபடத்தை உருவாக்க முடியும். இந்த வரைபடத்தில் தமிழ் நாட்டுத் தமிழ் இலக்கியத்தின் இடத்தையும் மதிப்பிட வேண்டும்
.
தமிழ் இலக்கியத்தின் எல்லைகள் விரிவாகியிருப்பதுபோலவே பரப்பும் அளவும் அதிகமாகியிருக்கிறது.அதனைப் புள்ளிவிவரங்களாகச் சேகரிக்க வேண்டியது முதல் தேவை. தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் அது நடந்துகொண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் மொழியின் ஊடாகத் தங்களை ஒரே இனமாக அடையாளப்படுத்தும் மனிதர்கள் எழுதிய/ எழுதும் மனிதர்களின் இலக்கியப்பிரதிகளுக்குள் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் நிலவுகின்றனவா எனப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு நிலவியல், வாழ்வியல் சூழல்கள் காரணமாக வேறுபாடுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது. அந்த வேறுபாடுகளுக்கான காரணிகளை ஆய்வு செய்து போக்குகளையும் சிறப்புகளையும் கண்டுணர்ந்து பேசவேண்டும். அப்படிப்பேச முனையும்போது தமிழ்மொழியில் எழுதப்பெற்ற இலக்கியங்கள் இந்திய இலக்கியம், இலங்கை இலக்கியம், மலேசிய இலக்கியம், சிங்கை இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், கனடிய இலக்கியம் எனத் தமிழர்கள் வாழுமிட இலக்கியங்களோடு கொள்ளும் உறவையும் முரண்பாடுகளையும்கூடப் பேச முடியும். அந்தப்பேச்சுகளின் தொடர்ச்சி, உலக இலக்கியங்கள் என்னும் வரைபடத்திற்குள் தமிழின் இடத்தைக் கண்டடைவதாக அமையும். இந்தப் பேறு இந்திய நாட்டின் பிறமொழிகளுக்குக் குறைவு. செம்மொழி என்னும் பழைமை காரணமாகவும் இடப்பெயர்வு, குடியேற்றம், புலம்பெயர்வு என்ற தேடலும் வலியும் இணைந்த நிகழ்வுகளாலும் சாத்தியமாகியிருக்கின்றன.

தமிழுக்கு இதுவரையிலான உலக அங்கீகாரம் அல்லது கவனம் என்பது செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட- பழைய இலக்கண, இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்ட மொழி என்பதனாலேயே கிடைத்துள்ளது. பழைய பெருமைகளைப் பேசியே நீண்ட காலத்தைத் தாண்டியிருக்கிறோம். இனியும் அதையே செய்துகொண்டிருக்க முடியாது. இப்போது தமிழில் எழுதப்படும் கவிதைகளும் கவிதைகளையும் பார்க்கச் சிறுகதைகளும் உலக இலக்கியத்தின் பகுதிகளாக இருக்கத்தக்கன என்பதை உலக இலக்கியத்தோடு வாசிப்புத் தொடர்புகொண்ட யாரும் ஒப்புக்கொள்வர். அத்தோடு தமிழில் எழுதப்படும் நாவல்கள் வடிவ நிலையிலும் பேசுபொருள் நிலையிலும் உலக நாவல்களுக்கு இணையாக இருக்கின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மைகள். ஆகவே இப்போதைய தேவை தமிழ்மொழியைச் செவ்வியல் தளத்திலிருந்து நவீன மொழியாக ஆக்குவதே. இந்தப் புரிதலோடுதான் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்த அளவு விவாதிக்கத்தக்க கட்டுரைகள் வராத நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாகச் சிலரை அழைத்துக் கருத்துருவாக - விவாதப்புள்ளிகளைத் தொகுக்கலாம் என்று திட்டமிட்டு இரண்டுநாள் நிகழ்வை இப்போது நடத்துகிறோம்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், இமையம், கவி.கலாப்ரியா, மொழிபெயர்ப்பாளர்கள் சா.தேவதாஸ், பா.ஆனந்தகுமார், திறனாய்வாளர்கள், தி.சு.நடராசன், க.பூரணச்சந்திரன், நா.முத்துமோகன், ஆகியோர் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகப் பேரா. மகேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து கவிதா நவகுலன் வந்துள்ளார்கள். அங்கிருந்து கட்டுரைகள் வந்துள்ளன. இந்திய அளவில் தில்லி, திருவாரூர், சென்னை, காந்திகிராமப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள். கட்டுரைகளும் வந்துள்ளன. உங்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் தமிழியல் துறையின் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் சார்பிலும் வருகவருகவென வரவேற்கிறேன்.

தமிழியல் துறைத் தனித்தனியாகச் சொற்பொழிவுகளை நடத்தும் முறைக்கு மாறாக ஒரு பெரும் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தும் யோசனையை முன்வைத்தவர் நமது துணைவேந்தர். தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் காட்டிவரும் அவரோடு உரையாடும்போது அவர் வாசித்த இலக்கியவாதிகளைக் குறிப்பிட்டுப் பேசுவதைக் கவனித்திருக்கிறேன். இந்த நிகழ்வுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வருகிறார் என்று சொன்னபோது, அவரது எழுத்துமுறையை நினைவுபடுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்தார். துறையின் செயல்பாடுகளுக்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருக்கும் அவர்களைத் துறையின் சார்பில், திரளாக வந்துள்ள மாணாக்கர்கள் சார்பிலும் வருகவருகவென வரவேற்கிறேன்

நிகழ்வுகள் செயல்பாடுகள் மாற்றங்கள்


விருதுகள்- உரையாடல்கள்- விவாதங்கள்
=======================================
பெறுமதி மிக்க விருதுகள் பெற்றவர்களைச் சமூகம் மதிப்பதின் அடையாளமே பாராட்டு விழாக்கள். அதே நேரத்தில் இலக்கியம் கற்பிக்கும் .பல்கலைக் கழகத்துறைகள் பாராட்டுவதோடு நின்று விடக்கூடாது. மாணாக்கர்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களது வெளிப்பாட்டு அடையாளங்கள் எவையெவை? அவற்றில் உலாவும் பாத்திரங்கள் எப்படியானவர்கள்? அவர்களது அகவெளி உணர்வுகளும் புறநிலை உணர்வுகளும் எழுத்துகளில் ஓர்மைகளோடு இணைகின்றனவா? எழுதப்படும் கருத்துகளும் கருத்தியல்களும் நிகழ்காலத்தை எவ்வாறு கணிக்கின்றன? கடந்த காலங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றன என்பது பற்றிய விமரிசனக் கண்ணோட்டங்களோடு விவாதிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவேண்டும். அத்தோடு விருதுபெற்ற எழுத்துகளைத் தந்தவர்கள் வாசிப்பவர்கள் மீது தாக்கம் செலுத்தும் வல்லமை கொண்ட எழுத்தாளர்கள் தானா? அதற்கான பதில் ஆம்...அல்லது.இல்லை.. என்றால் காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்...என்பனவற்றைச் சுட்டிக்காட்டவும் வேண்டும்.

மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற விவாதங்களை நடத்தியதின் தொடர்ச்சியாகவே காத்திறமான - விருதுக்குரிய எழுத்தாளர்கள் கண்டறியப்படுகிறார்கள். அத்தகைய நெருக்கடிகளை இந்தியப் பல்கலைக்கழகங்களின் இலக்கியத் துறைகள் ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கில் இலக்கியத்தைப் பற்றிய சொல்லாடல்களை முன்வைக்கின்றன. ஓர்மைகூடி வராத நிலையில் அவற்றின் தாக்கமும் சொல்லிக்கொள்ளும்படியாக இருப்பதில்லை. இதிலிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடர்ந்து விலகலான பயணத்தைச் செய்தது. அங்கும் இனி வாய்ப்புகள் குறைவுதான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்