அழிபடும் அடையாளங்கள்



கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒருவித வெறியுடன் கேட்கிறது அந்தச் சத்தம். தொலைக்காட்சியின் எந்தத் தமிழ்சேனலைத் திருப்பினாலும் அரைமணி நேரத்திற்குள் அந்தச் சத்தம் செவிப்பறையைத் தாக்குகிறது. கட்சிக் கூட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என எங்கும் இந்தச் சத்தம்தான். சட்டசபையின் இரைச்சல்களுக்கு ஊடே இந்த சத்தமும் கேட்டது. ஏன் போடுகிறோம் என்று தெரியாமலேயே தமிழா்கள் “ஒ” போடுகிறார்கள்.

“ஒ போடு” வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ஜெமினி” திரைப்படத்தின் ஒரு பாடலின் முதல் வரி. அடுத்தடுத்து வரும் வரிகள் எல்லாம் அப்பாடலில் முக்கியமல்ல. அந்த வரிகளுக்குப் பின்னணியில் தரப்பட்டுள்ள தாளலயம்தான் முக்கியம். ஒருவிதமான துள்ளலுக்கான தாள லயம். கட்டற்ற நிலையில் உடலைக் குலுக்கி, வளைத்து, நிமிர்த்தி, கால்களை இடம்மாற்றித் தாவும் அசைவுகளுக்கு ஏற்ற தாளலயம். இந்தத் தாளலயம் ஒன்றும் புதிதல்ல. இதே தாளக்கட்டுடன் மூன்று மாதங்களுக்கு முன், ஒரு பாடல் இருந்தது. “மல…. மல…. மருதமலை…“ என்று தொடங்கியது அந்தப்பாடல். அதற்கு முன் வேறு பாடல், அதற்கும் முன் இன்னொரு பாடல், ஒட்டு மொத்தக் கூட்டமும் முணு முணுக்க ஒரு பாடல்….. சூப்பா் ஹிட் பாடல்….. நம்பா் ஒன் பாடல்…. இருந்துதான் வந்துள்ளன. ஆனால் அவை எதுவும் புதியன அல்ல. ஒன்று போல் இன்னொன்று. இன்னொன்றுபோல மற்றொன்று என ஒரு “பொத்தாம் பொதுவான“ ரசனையின் வெளிப்பாடுகள்தான் இந்த சூப்பர் ஹிட் அல்லது நம்பர் ஒன் வகையறாக்கள.

திரைப்படப் பாடல்களின் ரசனையில் வெளிப்படும் இந்தப் பொத்தாம் பொதுவான மனநிலை தமிழ்த் திரையுலகின் ஒட்டுமொத்தமான குணமாக இருக்கிறது என்பதுதான் வருத்தம் தரும் செய்தி. பொத்தாம் பொதுவான ரசனை, சிறப்பான சிலவற்றைக் கண்டுகொள்வதில்லை என்பதோடு நுட்பமான புதிய முயற்சிகளை – ரசனை உருவாக்கச் சிந்தனையாளா்களை அழித்துவிடும் அபாயமும் கொண்டது.

1970 – களின் இறுதி ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அப்படியான சில நம்பிக்கைகள் வெளிப்பட்டன. பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் எனத் தொடங்கிய முயற்சிகளும், மகேந்திரனின் உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும், துரையின் பசி, பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை என வளா்ந்த நிலைகளும் நுட்பமான தனித்த அடையாளங்கள் கொண்டவை. தமிழ்நாட்டின் கிராமங்களில் – நகரத் தெருக்களில் – குடும்பங்களில் நிகழ்க்கூடியன என்ற நம்பகத்தன்மையோடு கூடிய படங்கள் அவை. “இந்தக் கிராமத்தில் இப்படி நடந்தது; இப்படியான நிலைமை களையப்பட வேண்டியது. இப்படியான மனோபாவம் அருவருப்பானது. இப்படியான சூழ்நிலையில் இப்படி நடந்து விடும் வாய்ப்புகள் உள்ளன எனத் தா்க்கபூா்வமான விவாதங்களை முன் வைத்தன அப்படங்கள். தமிழ் சினிமா தனக்கான அடையாளங்களைக் கண்டு கொள்ளத் தொடங்கிவிட்டது என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கிய நிலையில் ஒருபடம் வந்தது. தனித்த அடையாளங்கள் அனைத்தையும் அழித்து வெற்றிக்கான பொது அடையாளங்களை – பொது ரசனையை உருவாக்கித் தந்தது. அந்தப் படம் செலவு குறைந்த தயாரிப்புப் படங்கள் அனைத்தையும் கைவிடும்படி ஆக்கிவிட்டு வேறு விதமான முன்மாதிரியாக (Model) அந்தப் படம் நின்றது. “கட்டை வண்டி… கட்டை வண்டி… காப்பாற்ற வந்த வண்டி என்ற சூப்பர் ஹிட் பாடலுடன் வந்த அப்படம் ஏ. வி. எம் தயாரித்த சகலகலாவல்லவன். அதனைத் தொடா்ந்து அவா்களே இன்னொரு வெற்றி மாதிரியையும் தந்தார்கள். அது ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை. இப்போது வந்துள்ள “ஜெமினி” படமும்கூட ஏ.வி.எம் நிறுவனத் தயாரிப்புதான்.

வெற்றி மாதிரிகளை உருவாக்குவதில் ஏ.வி.எம் நிறுவனம் கை தேர்ந்த நிறுவனமும்கூட “போடும் முதலுக்குப் பல மடங்கு லாபம்” என்கிற ஒற்றை நோக்கம் மட்டும் கொண்ட நிலையில், அதற்குப் பலவித உத்திகளைப் பயன்படுத்துவதும் உண்டு. முக்கியமான உத்தி வலிமையான – திடமான குதிரைகளை அடையாளங் கண்டு பணம் கட்டுவது. சகலகலாவல்லவன் தயாரித்தபோது திறனுள்ள நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டவா் கமல்ஹாசன்; முரட்டுக் காளை ரஜினிகாந்த். இன்ற அடையாளம் காணப்பட்டுள்ளவா் விக்ரம்.

வெற்றி மாதிரிகளை – சூப்பர் ஹிட்டுகளை – உருவாக்க நினைப்பவா்கள் புதியன படைத்தல் பற்றி யோசிப்பது இல்லை. ஏற்கனவே வெற்றிபெற்ற மாதிரியைத் திருப்பிய போடுவதே போதுமானது. சகலகாலவல்லவன்கூட அப்படித் திருப்பிப் போட்ட ஒன்றுதான். எம். ஜி. ஆர் – சரோஜாதேவி நடித்த “பெரிய இடத்துப் பெண்”ணையும், சிவாஜி – ஜெயலலிதா நடித்த “பட்டிக்காடா பட்டணமா“ வையும் கலக்கி எடுத்த கலவை கசலகலாவல்லவனும் முரட்டுக்காளையையும். கிராமிய பின்னணிகள் கொண்டன என்று தோன்றினாலும், பெரிய இடத்துப் பெண்ணிலும், பட்டிக்காடா பட்டணமா” விலும் இருந்த குறிப்பான இடப் பின்னணிகளும், சாதி, பொருளாதாரப் பின்னணிகளும் கவனிக்க வேண்டியவை. பொத்தாம் பொதுவான ரசனை உருவாக்கத்திற்கு அடையாளங்கள் அற்ற கதாபாத்திரங்களே போதுமானவை. குறிப்பான நோக்கங்களும் எண்ணங்களும், சமூகப் பின்புலங்களும் கொண்ட கதாபாத்திரங்கள் பொதுவான ரசனைக்கெதிரானவை என்பது திட்டமிடும் வியாபாரிகளுக்கு அத்துப்படியான ஒன்று.

இப்போது வந்துள்ள ஜெமினியும் கூட அப்படியான ரசனைக்குரியதுதான். “முரட்டு உடம்பையும் நாகரிகமான மனத்தையும் விரும்பும் நாயகிக்காக மனம் மாறும் ரௌடிக் கதாநாயகன்” சூத்திரம் பல படங்களின் கதைப்பின்னல்தான். வெற்றிபெறும் உத்தரவாதம்கூட அதற்கு உண்டு. ஜெமினியும் வெற்றிபெறும். வெற்றிபெறாமல் போய்விடுமோ, என்ற கணிப்பில்தான் “ஓ போடு…….” பாடலைத் திரும்பத் திரும்ப இடம் பெறச் செய்துள்ளனர். “மும்தாஜ்” சாயலைக் கொண்ட நாயகியைத் தேடியுள்ளனா். சமீபத்திய போக்கோடு உடன்பட்டு வெளிநாடுகளில் படம் பிடித்துள்ளனர். ஜெமினியின் வெற்றி ஏ.வி. எம். மின் கணக்கில் மேலும் சில கோடிகளைச் சோ்த்துவிடும் என்பது மட்டுமல்ல, வரப்போகும் பல படங்களின் மாதிரியாகவும் ஆகக்கூடும்.

ஜெமினியின் வெற்றிக்கு, நல்ல சினிமாவை விரும்புபவா்கள் வருத்தப்பட வேண்டியதில்லைதான். ஆனால், அப்படம் தனித்த நம்பிக்கைகளைத் தந்த சில முயற்சிகளை அழித்துவிடும் என்பதனால் வருத்தப்படாமலும் இருக்கமுடியாது. ஜெமினி படம் வருவதற்கு முன் அப்படியான ஒரு நம்பிக்கையைத் தந்த படம் தங்கா்பச்சானின் அழகி. குறிப்பான வெளிக்குள் உலவும் நுட்பமான மன உணா்வுகள் கொண்ட, கதாபாத்திரங்களை முன்வைத்த அழகி, தமிழா்களால் வெகுமாக ரசிக்கப்பட்டது. தமிழ்நாட்டு முகங்களும், கிராமத்துக் காடுகளும் என அச்சு அசலாகப் படம்பிடித்துக் கொண்டு வந்து காட்டிய தங்கா், தன் கதை மீது அபார நம்பிக்கையுடையவராய் இருந்தார் என்பதைவிட , அந்தக் கதை எழுப்ப விரும்பிய மனஉணா்வுகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பது அப்படத்தில் வெளிப்பட்டிருந்தது. யதார்த்தம் அப்படியே வழிவது எனக் கங்கணம் கட்டிக் கொள்ளாமல், அதேநேரத்தில் பொதுவான சூத்திரத்துக்குள் புகுந்துவிடுவதிலிருந்து தப்பித்துவிடவும் வேண்டும் எனச் செயல்பட்ட அதன் திரைக்கதை, ஒரு முன்மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியது.

அதேபோல் மணிரத்னத்தின் சமீபத்திய படமான “கன்னத்தில் முத்தமிட்டால்” கூட நுட்பமான மன உணா்வுகளைப் பேசிய படம்தான். குழந்தையைத் தத்தெடுப்பது,உண்மையைச் சொல்லி வளா்ப்பது என்ற ஒரு தனிமனிதனின் குடும்பப் பிரச்சினையை. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் நிறுத்திய இப்படம், மணிரத்னத்தின் வழக்கமான சூத்திரம்தான் என்றாலும், பொது ரசனையின் கூறுகளை கைவிட்ட படம் என்பது உறுதி. திரை முழுக்கப் பலவண்ண உடைகளில் பெண்களும் ஆண்களும் குதிரையாட்டம் போட, நாயகன், நாயகியின் தொப்புனை நுகரும் காட்சிகள் இல்லை. குழந்தையின் பார்வையில் ஈழப் போராட்டத்தைப் பார்ப்பதில் உள்ள கோளாறுகள் உண்டு என்றாலும், அது ஒரு படைப்பாளியின் உரிமை என்ற அளவில் ஏற்றுக்காள்ளக்கூடியது.

தமிழ்நாட்டின் பெருநகரங்கள், நகரங்கள் என எல்லாவற்றிலும் நூறு நாட்களைத் தாண்டி ஓடிய “அழகி“ யின் வெற்றியோ, பல்வேறு பத்திரிகைகளின் விமர்சனத்தைத் தனதாக்கிய “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தின் விசாரணையோ தமிழ்ப்பட இயக்குநா்களுக்கும் தயாரிப்பாளா்களுக்கும் முன்மாதிரிகளாக ஆகாமல் போய்விடும் என்பது ஆச்சரியமான ஒன்றல்ல; அவா்களுக்குப் புதிய மாதிரிகள் தேவையில்லை; “ஜெமினி” தான் அவர்களின் மாதிரி. காணாமலேயே காதலித்துக் “காதல் கோட்டை” கட்டிய அகத்தியனின் படத்தை வெறும் “காதல்” என்று பெயரளவில் உள்வாங்கி இருபது “காதல் படங்கள் எடுத்த திரையலகம் அல்லவா நமது திரைப்பட உலகம்!

மந்தையாக அலைவதில் பாதுகாப்பு உண்டுதான். அடையாளம். இருக்காது அந்த வகையில் அழகி, மந்தையிலிருந்து தப்பிய ஆடு. ஜெமினி, மந்தைகளாக மாற்றும் மேய்ப்பன். திட்டமிடும் மேய்ப்பா்கள் மந்தைகளை உருவாக்குவார்கள். ஏ.வி. எம்.-மின் திட்டமிடலில், நுட்பமான ரசனை உருவாக்கம் மட்டும் அழிக்கப்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது. “சேது” வாக வந்த விக்ரமும், “காசி”யாக நடித்த விக்ரமும் காணாமல் போகும் ஆபத்து உண்டு. முள்ளும் மலரும் படத்தில் நடித்த ரஜினிகாந்த் காணாமல் போக, சூப்பர் ஸ்டார் “ரஜினி“ மட்டுமே நின்று போனதுபோல். “பரட்டை கமல்ஹாசன் காணாமல் போய் திரும்பவும் குணசேகரனாக (குணா) உலா வர எவ்வளவு காலம் ஆனது. “பொது வெளி“ தரும் புகழும் பணமும் மட்டுமே போதுமென்றால். சூப்பர் நடிகர்“ களாக மட்டுமே இருக்க வேண்டியதுதான். காலம் தரும் அடையாளங்கள் அதைவிட முக்கியமானவை. அடையாளங்கள் அழிக்கப்படுவதின் ஆபத்துகளை அனைவரும் உணா்ந்தே ஆகவேண்டும்.

குமுதம் தீராநதி, ஜீன், 2002.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்