ஒரு அரங்கப்பட்டறை நினைவுகள் - பிரபாகர் வேதமாணிக்கம்


 1993ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் முதன் முறையாக ஒரு நாடகப் பயிலரங்கைத் திட்டமிட்டோம். நண்பர்கள் அ.ராமசாமியும் சுந்தர்காளியும் அந்த பயிலரங்கை வடிவமைத்தார்கள். நான் உடனிருந்தேன். நான் அப்போதுதான் ஒரு பயிலரங்கை அருகிருந்து பார்க்கிறேன். 50 மாணவர்களுக்கு மேல் விண்ணப்பித்திருந்தார்கள். அதில்30 மாணவர்களை தெரிவுசெய்து 3 நாட்கள் உண்டு உறைவிட பயிலரங்காய் நடந்தது. அப்போதைய தமிழகத்தின் முக்கிய நாடக ஆளுமைகள் மு.ராமசாமி, ராசு, காந்திகிராமம் ஶ்ரீனிவாசன், ராமானுஜம் ஆகியோர் பயிற்றுநர்களாக இருந்தனர். அந்தப் பயிலரங்கிற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவானதாக நினைவு. அந்தத் தொகையை வழங்கி ஊக்குவித்தவர் அப்போதைய முதல்வர் முனைவர் பீட்டர் ஜெயபாண்டியன்.

பயிலரங்கில் கலந்து கொண்ட 30 மாணவர்களில் ஒருவர் பின்னாளில் நாடகத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு தில்லி தேசிய நாடகப் பள்ளிக்குத் தேர்வானார். மூன்றாண்டுகள் படித்து முடித்து நிறைய கனவுகளோடும் திட்டங்களோடும் மதுரைக்கு மீண்ட அந்த மாணவர் சண்முகராஜன். கல்லூரிக்குள் நாடகச் செயல்பாடுகள் தீவிரப் பட்ட காலம். Winter Theatre Festival எனும் பெயரில் ஆண்டுதோறும் நாடகவிழாக்களை நடத்தினோம். தமிழகத்தின் முக்கிய நாடகக் குழுக்களான கூத்துப்பட்டறை, சென்னைக் கலைக்குழு ஆகியோரெல்லாம் கலந்துகொண்ட ஒரு வார விழாக்களாக அவைகள் இருந்தன. ஆண்டு தோறும் முழுநீள தமிழ்நாடகங்களை அரங்கேற்றினோம். பேராசிரியர் இளங்கோ ஆங்கில நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தார். அப்போதைய முதல்வர் முனைவர் சுதானந்தா பெரும் ஆதரவளித்தார். வளாகத்தில் நடந்த தொடர் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் சண்முகராஜாவின் துணையோடு தேசிய நாடகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர்.

10 ஆண்டுகளில் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து 5 மாணவர்கள் தில்லி தேசிய நாடகப் பள்ளியிலும் ஒருவர் தேசிய நாடகப்பள்ளியின் பெங்களூர் மையத்திலும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கும் தேசிய நாடகப் பள்ளியின் 60ஆண்டு கால வரலாற்றில் ஒரு கல்லூரியிலிருந்து 6 மாணவர்கள் படிக்கும் வாய்ப்புப் பெற்றதை ஒரு சாதனை என்றே கருதலாம். இந்த மாணவர்கள் அனைவருமே மிக எளிமையான குடும்பப் பின்னனி கொண்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். வகுப்பறைப் பாடங்கள் செய்யாத மாயத்தை நாடகச் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்ட மாணவர்களிடம் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நிகழ் எனும் நாடகக் குழுவை நடத்திவரும் சண்முகராஜா திரைப்பட நடிகராக வளர்ந்துள்ளார். ராஜேஷ் பாலச்சந்திரன் நடிகராகவும் முக்கிய இயக்குநர்களின் படங்களின் நடிகர்களை பயிற்றுவிப்பவராக இருக்கிறார். பாரதி நாடகம் தொடர்பான மேற் படிப்பை சுவிஸ்சர்லாந்தில் படிக்கும் வாய்ப்புப் பெற்று தற்போது சுவிஸில் நாடகச் செயல் பாடுகளை முன்னெடுத்து வருகிறார். திருநாவுக்கரசு இயக்கிய நாடகமான கிரிஸ் கர்நாடின் ‘ஹயவதனா’ இன்று கோவையில் முதல் மேடையேற்றத்தைக் காண்கிறது. பூமிநாதன் தன் முனைவர் படிப்போடு நாடக்குழு ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் இருக்கிறார். ஆனந்த் சென்னையில் முக்கிய நடிப்புப் பள்ளிகளில் பயிற்றுநராக இருக்கிறார்.

பாண்டிச்சேரி நாடகத்துறையில் பயின்ற அனிஷ் அப்பாஸ் தமிழகத்தின் புழல் சிறையில் சிறை வாசிகளுக்கான prison theatre அமைப்பை செயல்படுத்தியதோடு, திரைப்பட இயக்குநராக ‘மேக்பத்தை’ தழுவிய திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்டப் பணியிலிருக்கிறார். பாண்டிச்சேரி நாடகத்துறையில் பயின்ற இன்னொரு மாணவரான வடிவேல் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கான நாடகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

30 ஆயிரம் ரூபாயில் நடத்தப்பட்ட ஒரு பயிலரங்கு 10 ஆண்டுகளுக்குமேல் நீளக்கூடிய தொடர் விளைவுகளை உருவாக்கமுடியுமென்பதைக் கூறவே இந்தப் பதிவு. கல்லூரி வளாகங்களில் வளாக நாடகச் (campus theatre) செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்களின் உண்மையான வளர்ச்சி என்பதைப் பற்றிய புரிதல் உள்ள நிர்வாகங்களும், முதல்வர்களும், ஆசிரியர்களும் வேண்டும். இதய பூர்வமாகச் செய்யும் சிறு நகர்வும் பெரும் பாய்ச்சலாக மாறும் என்பதை இந்த உலக நாடக தினத்தில் பதிவு செய்கிறேன்.
என் நாடக வகுப்புகளில் அமர்ந்திருந்த மாணவர்கள் இப்போது என்னைவிட கூடுதலாய் நாடகத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பெற்ற அனுபவத்தில் தேர்வுகள் இல்லாத நாடகப் பாடத்தை வடிவமைத்திருக்கிறேன். அரங்கக் கலையும் ஆளுமை வளர்ச்சியும் (Development through Theatre) என்பது அந்தப்பாடம். ஒரு பயிலரங்கில் கலந்துகொள்வதை கட்டாயமாக்கியிருக்கிறேன். 15 ஆண்டுகளாக வகுப்பறைகளில் நாளொன்றுக்கு 5 மணி நேரம் அமர்ந்தவாறிருந்து இறுகிப்போன அவர்களின் புலன்களை நெகிழ்த்த முயற்சிக்கிறேன். புத்தகங்களும் நோட்டுக்களும் பேனாக்களும் இல்லாத இந்த வகுப்புகளில் சாத்தியமாகும் கற்றல் கற்பித்தல் அனுபவத்திலிருந்து புதிய பாடங்களைக் கற்றுக் கொள்கிறேன்.
மூன்றாமாண்டு மாணவர்களை அழைத்துக்கொண்டு என் பழைய மாணவர்களோடு மீண்டும் ஒரு பயிலரங்கிற்காக நாளை கோடைக்கானலுக்கு மலையேறுகிறோம்.
அனைவருக்கும் இனிய உலக நாடகதின
வாழ்த்துகள்
!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்